இந்திய அறிவியல் ஆய்விதழ்கள் 5:-
சென்னையில் நடந்த சமூக நோய் எதிர்ப்பு இயக்கம் – ஆன்டிசெப்டிக்!
– ஆயிஷா இரா.நடராசன்
ஐரோப்பியர்கள் குறிப்பாக ஆங்கிலேயர்கள் மட்டுமே கட்டி ஆண்ட ஒரு காலகட்டத்தில்.. மருத்துவத் துறையில் இந்தியாவிலிருந்து முதல் விரிவான ஆய்வுக் கட்டுரையை எழுதியவர் அதாவது முதல் இந்திய ஆய்வாளர் யார்.. உலகின் சிந்தனைப் போக்கையே மாற்றி அமைத்ததாகப் போற்றப்படும் அந்த ஆய்வுக் கட்டுரை எந்த இதழில் வெளிவந்தது.. உங்களுக்கு தெரியுமா? விடையை சிந்தித்துக் கொண்டிருங்கள்.. அதற்குள் நாம் கட்டுரைக்குள் செல்வோம்.
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் மருத்துவத்தை அறிமுகம் செய்தது மதராஸ் என்று அழைக்கப்பட்ட நம் சென்னையில்தான்.. அவர்களுடைய ராணுவத்தில் நம் நாட்டின் போர்களின் பொழுது காயமடைந்த தங்கள் ஆங்கிலேய ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காகத்தான்.. மருத்துவ சேவை என்கிற ஒன்றே தற்போதைய அர்த்தத்தில் இங்கு தொடங்கப்பட்டது. இந்தியாவில் வரி வசூல் செய்து கட்டாயப்படுத்தி மன்னர்கள் இடமிருந்தும் பெரிய மனிதர்களிடத்தும் துப்பாக்கி பீரங்கி காட்டி மிரட்டி வசூலிக்கப்பட்ட பணத்தில் மருத்துவமனைகள் கட்டப்பட்டன.. முதலில் இந்த மருத்துவமனைகளுக்குள் இந்தியர்களுக்கு சிகிச்சை கிடையாது.. அப்படி இருக்கும்பொழுது ஒரு இந்தியர் மருத்துவர் ஆகும் கனவு என்பது கானல் நீர்தான்.

ஆம் இப்போது நாம் கையில் எடுத்துக் கொண்டிருக்கும் இந்தியாவின் போராட்ட மருத்துவ ஆய்விதழ் என்பதெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒரு காலகட்டத்தைப் பற்றிதான் பேசி இந்த கட்டுரையை நாம் தொடங்க முடியும். ஆனால் இந்திய அறிவியலின் போராட்டம் என்பது எந்த துறையையும் மிச்சம் வைக்கவில்லை என்பதுதான் உண்மை. மிகப்பெரிய அளவில் போராடி இந்தியர்கள் ஆங்கிலேயர்களின் மருத்துவக் கல்வி நிலையங்களுக்குள் நுழைகிறார்கள்.
மதராஸ் என்பது தற்போது நாம் நினைப்பது போன்ற நம் தமிழகத் தலைநகரம் அல்ல.. மதராஸ் என்பது ஒரு மாகாணம் கேரளத்திலிருந்தும் ஆந்திராவிலிருந்தும் கர்நாடகாவில் இருந்தும் பல பகுதிகள் இணைக்கப்பட்ட பெரிய மாகாணமாக மதராஸ் இருந்தது. போகப் போக எந்த ஊர்களையெல்லாம் தங்களுடைய ஆட்சிக்கு கீழே கொம்பேனி அரசு எடுத்துக் கொண்டதோ அந்த இடங்களெல்லாம் மதராஸ் மாகாணம் என்று அழைக்கப்பட்டன.. என்பதை நாம் அறிவோம்.
முதன் முதலில் எடுக்கப்பட்ட ஆய்விதழ்கள் குறித்தும் முயற்சிகள் எல்லாம் ஆங்கிலேயர்களால் முடக்கப்பட்டன. என்பது தனிக்கதை. வங்காளத்தில் இருந்து கல்கத்தா மருத்துவக் கல்லூரியின் ஆங்கிலேயப் பேராசிரியர்களும் மாணவர்களும் இணைந்து ஒரு மருத்துவ ஆய்விதழை 1827 ஆம் ஆண்டு தொடங்குவதற்கு முயற்சி செய்கிறார்கள் ஆனால் இந்த முயற்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை. உண்மை என்னவென்றால் இந்தியாவில் அறிவியல் ஆய்வகங்கள் உருவாகும் முன்பே அறிவியல் உரையாடலுக்கான மேடைகள் உருவாக்கப்பட்டுவிட்டன.. அதற்கு ஒரு உதாரணம் தான் மகேந்திரலால் சர்கார் ஏற்படுத்திய இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம்.. மகேந்திரலால் சர்கார் இந்தியாவின் தலைசிறந்த மருத்துவர்களில் ஒருவர். அவர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் மருத்துவத்திற்கென்று ஒரு ஆய்விதழைத் தொடங்க அரசு அனுமதிக்கவே இல்லை.
உள்ளூர் மருத்துவம் காட்டுமிராண்டிகளின் மருத்துவம் என்று பகிரங்கமாக அறிவித்த வெள்ளையர்கள் பிற்காலத்தில் அனைத்து வகை மக்களையும் தொட்டு மருத்துவம் பார்த்தார்கள் என்பதற்காக சாதியம் மீறிய பற்று அவர்கள்மீது ஏற்பட்ட ஆண்டுகளையும் நாம் பார்க்கிறோம். ஆனால் அறிவு எப்போதும் ஆங்கிலேயர்கள் உடையது என்று நினைத்து இந்தியர்களை மருத்துவத் துறைக்குள் உள்ளே விடுவதில் அவர்களுக்கு ஏராளமான தயக்கங்கள் இருந்தன. பெரும்பாலும் ஆங்கிலேயர்களின் மருத்துவம் கிருத்துவ மதத்தை இங்கு பரப்புவதற்கு தான் ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டது என்கின்றனர் என்கிற துயரத்தையும் இங்கே நாம் பரிசீலிக்க வேண்டும்.

இந்தியாவின் முதல் மருத்துவ ஆய்விதழை கொல்கத்தாவின் ஆங்கிலேய மருத்துவர்கள் த டிரான்ஸாக்ஷன்ஸ் ஆப்ஸ் மெடிக்கல் அண்ட் பிஸிக்கல் சொசைட்டி ஆஃப் கொல்கத்தா என்கிற தலைப்பிலே 1825 வெளியிட தொடங்கினாலும்.. அது இந்திய முயற்சி என்று பாராட்ட முடியாது ஏனென்றால் அதிலே ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடுகின்ற உரிமை ஆங்கிலேயர்களுக்கு மட்டுமே இருந்தது. இந்தியர்களை ஆய்வுக்கூட பன்றிகளைப் போல நடத்தி தங்கள் மருந்துகளை பரிசோதித்த அந்த ஆண்டுகளில் அப்படி செய்யப்பட்ட ஆய்வுகளை தங்கள் பிரித்தானிய தோழர்களுக்கு அறிவிப்பதற்காக இந்த இதழ் நடத்தப்பட்டது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.ஆனால் இந்த முயற்சி கூட பொறுத்துக்கொள்ள முடியாத பிரித்தானிய அரசு மூன்றே ஆண்டுகளில் இந்த இதழுக்குத் தடை விதித்தது. இப்படியான முயற்சிகள் இந்தியர்களுக்குத் தெரிய வேண்டாம் வேண்டுமானால் லண்டனில் இருந்து வரும் இதழிலேயே எழுதிக்கொள்ளுங்கள். என்பது அவர்களுடைய அணுகுமுறை.
அதன் பிறகு மதராஸ் என்கிற நம் சென்னையிலிருந்து ஒரு குரல் அதுதான் மதராஸ் குவாட்டர்லி மெடிக்கல் ஜர்னல். 1839 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்த இதழில் அப்போது மருத்துவர்களாக இருந்தவர்கள் ஆங்கிலேயர்கள் ஆனால் அவர்களுக்கு உதவிகரமாக கட்டு போடுபவர்-ட்ரெஸ்ஸர், மற்றும் தாதிகள் என்கிற பெயரில் இருந்த ஆண்கள். இவர்களும் எழுத வேண்டும் என்று போராடி இந்த இதழை தொடங்கினார்கள் இவர்கள் எல்லோருமே ஆங்கிலேயர்கள் தான். என்பது குறிப்பிடத்தக்கது.
இது மருத்துவத்தினுடைய அடித்தள வேலையாட்கள் எழுதுவதா என்று கேட்டு இதழை இரண்டே ஆண்டுகளில் முடக்கியது கும்பேணி அரசு. ஆனால் இணையத்தில் கிடைக்கும் இந்த மதராஸ் குவாட்டர்லி மெடிக்கல் ஜர்னலின் மூன்று இதழ்கள் இந்தியாவை மையமிட்ட ஆனால் ராணுவ விவரங்கள் நிறைய அடுக்கப்பட்ட அரசாங்கத்தினுடைய அறிக்கைகளை கொண்டதாக இருக்கிறது அடிப்படை இந்தியர்களுக்கு எத்தனை பற்கள் உள்ளன அவர்களுக்கு இடையே உள்ள பெண்களுக்கு தலைமுடிய தனி நீளம் உள்ளது இந்தியாவில் எந்தெந்த வயதில் எந்த வகை சாதியை சேர்ந்தவர்கள் இறந்து போகிறார்கள் அடிப்படை நோய்கள் என்னென்ன. எந்தெந்த ஊர்களுக்கு வெள்ளையர்கள் போகலாம் போகக்கூடாது என்பன போன்ற வெள்ளைகளுக்கு தேவையான தொற்று நோய் விபரங்களோடு கட்டுரைகள் உள்ளன.
இந்த சூழ்நிலையில் பலவகை தடைகளை உடைத்துக்கொண்டு இந்தியர்கள் மருத்துவக் கல்விக்குள்ளே நுழைகிறார்கள். யார் இந்தியாவில் முதல் டாக்டர் பட்டம் பெற்றவர் எந்தப் பெண்மணி இந்தியாவில் முதல் மருத்துவர் ஆனார் போன்ற விவரங்களெல்லாம் நம்முடைய கட்டுரைக்கு தேவையற்றவை. அதன் பிறகான ஒரு முயற்சி மதராஸ் ஜர்னல் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ். அதுவும் ஆங்கிலேய மருத்துவர்களால் தொடங்கப்பட்டது தான். 1850 முதல் மூன்றாண்டுகளுக்கு வெளிவந்து முடக்கப்பட்டது. அதற்கு ஒரு காரணம் இருந்தது. இந்தியாவிலிருந்து மருத்துவப் பட்டம் பெற்றவர்கள் இணைந்து ஒரு போராட்டத்தை 1854 ஆண்டு நடத்தினார்கள்.
ஆங்கிலேயர்கள் நடத்திய மருத்துவக் கல்லூரியில் ஆங்கிலேயர் இளைஞர்களும் நம்முடைய இளைஞர்களும் ஒன்றாகவே படித்து ஒன்றாகவே தேர்வு எழுதி ஒன்றாகவே தேர்ச்சி பெற்று ஒன்றாகவே மருத்துவர்கள் ஆனாலும். ஆங்கிலேயர்களுக்கு என்றால் உயர் பதவிகளும் அவர்களுக்கு உதவியாளர்களாக இருப்பதற்கான பதவிகளில் மட்டுமே இந்திய மருத்துவர்களும் நியமிக்கப்பட்டது ஒருபுறம் என்றால் இந்திய மருத்துவர்களுக்கு மூன்று மாதத்திற்கு ஒருமுறை சம்பளம் என்கிற பெயரில் ஏதோ ஒரு உதவித் தொகை வழங்கப்படும் ஆனால் ஆங்கிலேய மருத்துவர்கள் தரமான சம்பளம் வாங்கி கொடுத்து கொண்டிருந்தார்கள் என்பன போன்ற காரணங்களை முன்வைத்து சம அளவு வேலை சம அளவு ஊதியம் என்கிற போராட்டத்தை தொடங்கிய காரணத்தால் இந்த இதழும் முடக்கப்பட்டது.
இத்தனை ஆய்விதழ்கள் மறைந்து போனது ஏன். இரண்டு முக்கிய விஷயங்கள் இந்தியாவில் இந்த ஆய்வு இதழ்களை வாசிப்பதற்கான தரமான வாசகர்கள் கிடைக்கவில்லை காரணம் மருத்துவம் என்பது ஒரு சிலருக்கே கிடைத்த வரமாக இருந்தது. இரண்டாவது விஷயம் சவாலோடு இதை ஏற்று வெளியிடுகின்ற அளவிற்கு நிதி வசதி கிடையாது. மூன்றாவது மருத்துவர் ஆகி சாதாரண மக்களுக்கு சேவை செய்வதே சவாலாக இருக்கும் பொழுது மருத்துவ துறை குறித்து எழுத ஆள் இல்லை. ஆங்கிலேயர்கள் தான் அதிகம் எழுதிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடமிருந்து ஆய்வுக் கட்டுரைகள் வாங்கி வெளியிடும் நிலை மிக மோசமானது. இதன் வரலாறாக தமிழகத்திலிருந்து இடம்பெற்று இருந்தவர் பி எஸ் முத்துசாமி முதலியார் என்கிற ஒரு மருத்துவர். ஆனால் இளம் வயதிலேயே பணி கொடுத்த அழுத்தம் காரணமாக அவர் இறந்து போனார்.
இந்திய மருத்துவர்களிடம் நவீன ஆய்வகங்கள் இல்லை அவர்களிடம் பெரும் ஆராய்ச்சி நிதி இல்லை. அவர்களிடம் மிகப்பெரிய அளவில் அறிவியல் நிறுவனங்களும் இல்லை. ஆனால் நம்பிக்கை மட்டுமே இருந்தது. இந்தியாவில் இந்தியர்களே செய்யும் மருத்துவ அவதானிப்புகளுக்கு அறிவாக ஒரு பதிவாவது இருக்க வேண்டும் என்கிற சூழலில் தொடங்கப்பட்டது தான் மதராஸ் என்கிற அதே மாகாணத்திலிருந்து வெளிவந்த ஆன்டிசெப்டிக் என்கிற ஆய்வு இதழ். அதன் வரலாறு தனித்துவமானது. அதன் போராட்டம் அற்புதமானது. தங்களுக்கு முன்னோடிகளாக இந்த மதராஸ் மருத்துவர்கள் எடுத்துக் கொண்டது பிரம்மாண்ட வங்காள போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர் ஆத்மா ராம் பாண்டுரங், டாக்டர் சுகாராம் அர்ஜுன் போன்ற போராளிகளை. இதழ்களை நடத்தினார்கள் அனுமதியின்றி ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டார்கள் என்று சிறைப்படுத்தப்பட்ட மாமனிதர்கள் இவர்கள்.
1904 ஆம் ஆண்டு எழுச்சி மிக்க ஒரு இதழ் ஆன்டிசெப்டிக். தமிழகத்தை சேர்ந்த மதராஸ் மருத்துவ சங்கம் என்கிற இந்தியர்களே முன்னின்று மருத்துவ அறிவியல் இதழை உருவாக்கிய வரலாற்றின் முதல் படிக்கல்லை நட்டது. நம்முடைய நாட்டின் சென்டர் ஆஃப் ரிசர்ச் லைப்ரரீஸ் என்கிற அமைப்பு இந்த இதழை தான் இந்தியாவின் முதல் மருத்துவ ஆய்வுகள் என்று வர்ணிக்கிறது. இரண்டு மாமனிதர்கள் இந்த இதழைத் தொடங்கியவர்கள். ஒருவர் டாக்டர் யு ராமராவ்.. மற்றொருவர் டாக்டர் டி எம் நாயர். இவர்கள் இணைந்து இந்திய மருத்துவ சங்கம் என்கிற ஒன்றைத் தொடங்கினார்கள் மதராஸ் மாநகராட்சியில் கவுன்சிலராக பணியாற்றியவர் ராமராவ்.

ஆன்டிசெப்டிக் இதழின் ஆசிரியராக பொறுப்பேற்றவர் டி எம் நாயர். அற்புதமான மருத்துவர். 1868 பாலக்காட்டில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். வசதியான குடும்பமல்ல ஆனால் கல்வி திறமைக்காக இவர் அறியப்பட்டார் மேலும் அவர் தனது மெட்ரிகுலேஷன் தேர்வை ஓராண்டுக்கு முன்பே முடித்து தேர்ச்சி பெற்றவர். தென்னை மாநிலக் கல்லூரியில் இளம் அறிவியல் பட்டம் பெற்று மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் நுழைவுத் தேர்வின் மூலம் இணைந்தவர். தனது மருத்துவப் படிப்பை முடிக்காமல் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் தன் படிப்பைத் தொடர்ந்தவர். அந்த பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கு இணையான மருத்துவத்தை முடித்து. இந்தியா திரும்பிய பொழுது அவருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. சமஸ்கிருதத்தில் நடத்தப்படும் ஒரு தேர்வை எழுதினால் மட்டுமே இங்கு மருத்துவராக இருக்க முடியும் என்பதை அறிந்து வெறுத்துப் போனார் நாயர்.
ஆங்கிலேய அரசு படிநிலை வடிகட்டல் முறை என்கிற ஒரு புதிய அரசியல் உத்தியைப் பயன்படுத்தி பிராமணர்களை மட்டும் உயர்த்தி வைக்கிற சட்டங்களை கொண்டு வந்த ஒரு காலகட்டம்.. இது ஒரு பிரிட்டாலும் சூழ்ச்சி என்பதை பிராமணர்கள் உணரவில்லை. எனவே வெறுத்துப் போய் நாயர் பாரிஸ் நகருக்குச் சென்றார். காது மூக்கு தொண்டை நோய்கள் குறித்த ஆய்வுகள் செய்து முனைவர் பட்டம் பெற்று..1897 ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். ஐக்கிய இராச்சியத்தில் அதாவது இங்கிலாந்தில் தங்கியிருந்த காலத்தில் அவர் எடின்பரோ மாணவர் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினராகவும் எடின்பர்க் இந்திய சங்கத்தின் செயலராகவும் தலைவராகவும் இருந்ததால் அவருக்கு அரசியல் செல்வாக்கு இருந்தது.
ஏற்கனவே தி ஸ்டூடண்ட் என்கிற ஒரு இதழை ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடத்தியவர் அவர். இரண்டு வகையான வேலைகளில் ஈடுபட்டார் டி எம் நாயர். ஒன்று டாக்டர் ராமாராவ் அவர்களோடு இணைந்து ஆன்டிசெப்டிக் என்கிற இந்திய மருத்துவ ஆய்வு இதழைத் தொடங்கி நடத்தியது. பிராமணர்களே அதிகம் ஆதிக்கம் செலுத்திய மருத்துவ துறையை ஆங்கிலேயர்களிடமிருந்தும் அதேசமயத்தில் பிராமணர்கள் இடமிருந்தும் மீட்க வேண்டிய போராட்டத்திற்கு அவர் தலைமை வகித்தார். தென்னிந்தியா லிபரல் கூட்டமைப்பு என்கிற ஒன்றை உருவாக்கினார். பிற்காலத்தில் சர் தியாகராய செட்டி உடன் இணைந்து நீதிக்கட்சியை தொடங்கக்கூடிய முதல் படியை எடுத்து வைத்தவர் டி எம் நாயர்.
டி எம் நாயர் மருத்துவர், மருத்துவ எழுத்தாளர் பொது சுகாதார ஆர்வலர் சமூக சீர்திருத்த சிந்தனையாளர் என்றெல்லாம் இன்றைக்கு போற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நம்முடைய பாடப்புத்தகங்கள் அவரைப் பற்றி மெளனம் சாதிக்கின்றன. 1904 அம் ஆண்டு மதராஸ் மருத்துவ உலகில் யு ராமராவ் ஒரு புதிய மருத்துவ இதழை தொடங்கினார் அதன் முதல் இதழை டி எம் நாயர் ஆசிரியராக இருந்து வெளியிட்டார் என்கிற ஒரு வரி கூட நம்முடைய மருத்துவக் கல்வியில் இல்லை. முதல் இதழே ஒரு சமூக அறிக்கையாக வெளிவந்ததுதான் எனக்கு மிக முக்கியமானதாகத் தோன்றுகிறது.
ஆண்டிசெப்டிக் என்கிற பெயரே புரட்சிகரமானது. அவர்கள் ஜர்னல் என்றெல்லாம் அலட்டிக் கொள்ளவில்லை. இந்த சாதிய மற்றும் காலனிய சீக்கு பிடித்த சமூகத்திற்கு தேவைப்படுகின்ற ஆன்டிசெப்டிக் மருந்து இந்த இதழ் என்று பகிரங்கமாக அறிவித்தார்கள். ஆனால் அந்த இதழ் வெறும் அரசியல் அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கவில்லை. மாறாக இந்திய மருத்துவத்தின் ஒவ்வொரு முன்னேற்றத்தையும் அறிவித்தார்கள். மருத்துவ அதிகாரிகள் என்பவர்கள் யார் அவர்களுக்கு என்ன அதிகாரம் என்பது குறித்து எழுதினார்கள். பொது சுகாதாரம் குறித்த ஆய்வு கட்டுரைகள் வெளியிடப்பட்டன. துணை மருத்துவ பணியாளர்களுக்கும் எழுதுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. குறிப்பாக எம்சி நஞ்சுண்டராவ் போன்றவர்கள் எழுதிய அற்புதமான மருத்துவ துறையின் தரமான
கட்டுரைகள் ஆன்டிசெப்டிக் இதழில் தொடர்ந்து வெளியிடப்பட்டன. இப்போது டிசன்ட்ரி என்று நாம் அழைக்கின்ற வயிற்றுப் போக்கு குறித்து வெளிவந்த ஆறு ஆய்வுக்கட்டுரைகள் இங்கிலாந்திலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் இருந்த மருத்துவ கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டன என்கிற அளவிற்கு தரமான ஆய்வு கட்டுரைகளை ஆன்டிசெப்டிக் வெளியிட்டு கொண்டிருந்தது என்பது வரலாறு.. ஊட்டச்சத்து, தூய்மையான குடிநீர், உறக்கம், உடற்பயிற்சி சுகாதாரம், பொது சுகாதார விழிப்புணர்வு, பெண்களுக்கான நோய்கள் குறித்த ஆய்வுக் கட்டுரைகள் என்று தரமான ஒரு மருத்துவ அறிவியல் ஆய்விதழாக ஆன்டிசெப்டிக் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தது.
ராமாராவ் ஆங்கிலம் மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கிலும் சுகாதார குறிப்புகளை வெளியிடுவதற்கு தனித்தனியே இதழ்கள் வேண்டும் என்று முடிவு செய்தார். தமிழகத்தில் அறிவியல் எழுத்தின் பரிணாமம் என்கிற தனியான ஒரு கட்டுரை நாம் எழுத வேண்டிய அளவிற்கு இவர்களுடைய பங்களிப்பு இருந்தது. 1852 மதராஸ் மருத்துவப் பணியாளர்கள் அறிவியலின் பக்கங்களில் தங்களுக்கான இடத்தைத் தேடிப் போராடினர். ஆனால் யூ ராமாராவ் மற்றும் டி எம் நாயர் போன்ற இந்திய மருத்துவர்கள் இந்த இடத்தை தாங்களே உருவாக்க திட்டமிட்டு போராடி வென்ற வரலாறுதான் ஆன்டிசெப்டிக் இதழின் வரலாறு.
இந்த இதழையை முடக்குவதற்கு ஆங்கிலேயர்கள் பல வகையில் முயற்சி செய்தார்கள். இதழுக்கு சர்வதேச ஆய்விதழ் எண் இல்லை இது அனுமதி பெறவில்லை என்று வழக்கு தொடர்ந்தார்கள். தமிழகத்தின் தலைசிறந்த வழக்குரைஞர்கள் போராடி இந்த வழக்கை தோற்கடித்தார்கள். ஏனென்றால் தொடர்ந்து ஆய்விதழ் அனுமதி எண் தராமல் முடக்கியது வெள்ளையர்கள் தான் என்று அவர்கள் வழக்கு மன்றத்திலே நிரூபித்தார்கள். ISSN0003-5998 என்கிற சர்வதேச ஆய்விதழுக்கான அனுமதி எண்ணை போராடி பெற்றுக் கொடுத்தார்கள். அது மேலும் எழுதத்தக்க இன்னொரு வரலாறு 120 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றைக்கும் வெளிவந்து கொண்டிருக்கும் ஒரு ஆய்வு இதழாக ஆன்டிசெப்டிக் ஜொலித்து கொண்டிருக்கிறது.
இந்த இதழில் எழுதிய மூன்று ஜாம்பவான்களை நாம் அறிய வேண்டும் அவர்களுடைய ஆய்வுக் கட்டுரைகள் உலகையே இந்தியாவின் மருத்துவ உலகை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தது வரலாறு.
1. டாக்டர் எம் ஆர் குருசாமி முதலியார்: 1920 இல் மதராஸ் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை முறை பேராசிரியராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் இவர். மருத்துவ நோயறிதலுக்காக புகழ் பெற்றவர். அறுபத்தி ஏழு நோய்களின் அறிகுறிகளை குறித்து இவர் எழுதிய நான்கு ஆய்வுக்கட்டுரைகள் இன்றைக்கும் உலகப் பிரசித்தி பெற்றவை. இந்தியாவில் சுஸ்ருதா என்கிற ஒருவர் இருந்தார். அவர் தான் முதன் முதலில் அறுவை சிகிச்சை கருவிகளை உருவாக்கிக் கொடுத்தார் என்கிற முதல் கட்டுரையை எழுதியவர் எம் ஆர் குருசாமி முதலியார் என்பதை நாம் இங்கே பதிவு செய்ய வேண்டும். வெளிவந்த இதழ் ஆன்டிசெப்டிக்.
2. டாக்டர் சருக்கை ரங்காச்சாரி: 1904 ஆம் ஆண்டில் மருத்துவப் பட்டம் பெற்றவர் பெண் மருத்துவர் எழும்பூர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் முதல் இந்தியத் துணை கண்காணிப்பாளராகவும். தனியார் மருத்துவ பயிற்சியில் ஒரு புகழ்பெற்ற மருத்துவ நிபுணராகவும் இருந்தவர். பெண்கள் குழந்தைகள் நோய்கள் குறித்த இவருடைய ஆய்வுகளும் ஆய்வுக் கட்டுரைகளும் உலகத்தின் கவனத்தைப் பெற்றவை அவை அனைத்தையுமே ஆன்டிசெப்டிக் இதழ்தான் வெளியிட்டது.
3. அனைவரும் அறிந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி: மதராஸ் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்ற முதல் முன்னோடி பெண் மாணவி என்று அழைக்கப்படுபவர். ஹவுஸ் சர்ஜன் மற்றும் தீவிர சமூக மருத்துவ சீர்திருத்தவாதி. நோய்கள் என்பவை கடவுள் கொடுக்கும் தண்டனை என்றும். சாதி அடிப்படையில் சிகிச்சை என்பதையும் உடைத்து எறிந்த சமூகப் போராளி. மனிதர்களுக்கு இயல்பாக ஏற்படுகின்ற மார்பு புற்றுநோய். குடல் புற்று நோய் குடல் இறக்க நோய் போன்றவை குறித்த முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் ஆய்வுக் கட்டுரைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டவை. அவை அனைத்துமே ஆன்டிசெப்டிக் இதழில் தான் வெளியிடப்பட்டன.

இணையம் இல்லாத ஒரு காலத்தில் உங்களுக்கு தரவுகள் கிடைக்காத ஒரு நிலையில் தட்டச்சு செய்வது என்பது அபூர்வம் என்கிற நிலையில் இருந்த ஒரு காலத்தில் தான். ஆங்கிலேயர்களின் கடுமையான அச்சுறுத்தல்கள் ஒருபுறமும் பிராமணர்களின் கேலி மறுபுறமும். என்கிற நிலையில் தொடங்கப்பட்டாலும் பிற்காலத்தில் ஆன்டிசெப்டிக் இதழில் ஒரு கட்டுரையை வெளியிடுவது என்பது தாங்கள் பார்க்கும் மருத்துவ துறைக்கு ஒரு கௌரவம் என்று கருதி சில ஆங்கிலேயர்களும் பிராமணர்களுமே கட்டுரைகள் எழுதிய காலகட்டத்தை நோக்கி விரைந்து வெற்றி கண்டது ஆன்டிசெப்டிக்.
இப்போது நாம் தொடங்கிய கேள்விக்கு வருவோம். இந்தியாவிலிருந்து முதன்முதலில் மருத்துவ ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதி அதை இதழில் வெளியிட வைத்த சாதனையைப் படைத்தவர் யார். அவர் பெயர் டாக்டர் சுர்ஜோ குமார் குடாவே சக்ரவர்த்தி. வங்காளத்தில் பிறந்து1845 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு பயணம் செய்து லண்டன் யூனிவர்சிட்டி கல்லூரியிலே ஒரு மருத்துவ மாணவராக இணைந்து ஐ எம் எஸ் எனும் மருத்துவ சான்றிதழை 1855 பெற்றவர். முதன் முதலில் அவர் எழுதிய மருத்துவ உபகரணங்கள் குறித்த ஒரு ஆய்வுக் கட்டுரை 1857 அம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஆய்விதழில் வெளிவந்தது.

அன்று முதல் இன்றுவரை மருத்துவ உலகின் நம்பிக்கை நட்சத்திரங்களாக ஜொலித்து கொண்டிருப்பவர்கள் தான் இந்திய மருத்துவர்கள் என்பதை உலகிற்கு காட்டிய பிரம்மாண்ட போராட்டமான ஆன்டிசெப்டிக் இதழை அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்வோம். இந்திய அறிவியலைப் போற்றுவோம்.
📚 எழுதியவர் :

✍🏻 – ஆயிஷா இரா.நடராசன்
நன்றி :அறிவியல் பலகை
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


அற்புதமான புது விஷயங்கள்
சிறப்பான பதிவு
பாராட்டுகள்.