இந்திய அறிவியல் ஆய்விதழ்கள் (அறிவியல்-போராட்டம்-வரலாறு) 5 :-
போராடி வென்ற இந்திய அறிவியலின் திருப்புமுனை ஆய்விதழ்
– ஆயிஷா இரா.நடராசன்
மரபணுவின் கட்டமைப்பை 1953 ஆம் ஆண்டு ஜேம்ஸ் வாட்சன் மற்றும் பிரான்சிஸ் கிரிக் ஆகியோர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கண்டுபிடித்து அறிவித்ததை நாம் அறிவோம்.. ரோசலின் ஃபிராங்க்ளின் அம்மையார் எக்ஸ் கதிர் புகைப்பட உருவாக்கம் என்கிற ஆபத்தான சோதனையில் ஏறக்குறைய புகைப்படமாக அதை பதிவு செய்து அந்த புகைப்படம் திருட்டுத்தனமாக வாட்சனிடம் வந்துசேர்ந்தது தனிவரலாறு.. ஆனால் இந்தியாவில் வெளிவந்த ஒரு முக்கிய ஆய்வுக்கட்டுரை ரோசலின் அம்மையாரின் கண்டுபிடிப்புக்கு வழிவகுத்தது என்பது உங்களுக்கு தெரியுமா.. அந்த ஆய்வுக் கட்டுரை எதில் வெளிவந்தது அதை எழுதி இந்தியர் யார்.. சிந்தித்துக்கொண்டு இருங்கள் நாம் அதற்குள் கட்டுரைக்குள் நுழைவோம்.
நாம் இப்போது 1876 என்கிற ஆண்டுக்கு செல்ல வேண்டும்.. இந்தியாவை ஆண்டு வந்த ஆங்கிலேயர்கள்.. ஏற்கனவே நடந்து முடிந்து பயன்பாட்டில் இருக்கும் அறிவியல் பற்றி இந்தியர்கள் தங்கள் கல்வியில் அறிந்து கொள்ளலாம் ஆனால் ஒருபோதும் அவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள கூடாது என்கிற விஷயத்தில் பிடிவாதமாக இருந்தனர்.. ஆனால் இந்தியாவில் அவர்கள் பல ஆய்வுகூடங்களை நடத்திக் கொண்டிருந்தார்கள் ஆங்கிலேயர்கள் மட்டுமே இந்த ஆய்வுக் கூடங்களில் பணியாற்ற முடியும் சில இந்தியர்களுக்கு அங்க இருக்க கூடிய வேதி உபகரணங்கள் இயற்பியல் கருவிகளை துடைத்து வைக்கும் எடுபிடி வேலை வழங்கப்பட்டது..

மகேந்திரலால் சர்க்கார் என்று கொல்கத்தாவில் மருத்துவம் பயின்ற ஒரு இளைஞர் இருந்தார்.. அவர் கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் எம்டி என்று அழைக்கப்பட்ட மருத்துவ முதுகலை படிப்புக்கு விண்ணப்பம் செய்தார். அவருக்கு இந்தியர் என்பதால் இடம் தர அந்த கல்வி நிறுவனம் மறுத்துவிட்டது.. ஆறு ஆண்டுகள் கடுமையாக போராடி வெற்றி பெற்று அப்போது நடந்த நுழைவுத் தேர்வுகளில் எல்லாம் முதல் இடம் பிடித்து ஒருவழியாக முதுகலை மருத்துவத்தை முடித்த முதல் இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றார் மகேந்திரலால் சர்க்கார்.. இந்த ஆண்டுகளில் அவருக்கு மூன்று வகையான அனுபவங்கள் ஏற்பட்டு இருந்தன..
ஒன்று உலகெங்கிலும் வெளிவருகின்ற ஆய்வு இதழ்களை வாசிப்பதற்குகூட படித்த இந்திய இளைஞர்கள் அனுமதிக்கப்படவில்லை.. இரண்டாவது நீங்கள் எத்தனை முயற்சி செய்தாலும் ஆங்கிலேயர் மேற்கொள்ளும் ஆய்வுகளில் உதவியாளராக மட்டுமே நீங்கள் பணியாற்ற முடியும்.. அப்படி இந்தியர்கள் உயிரை கொடுத்து பணியாற்றிய பல கண்டுபிடிப்புகளை ஆங்கிலேயர்கள் தங்கள் பெயரில் வெளியிட்டுக்கொண்டார்கள்.. மூன்றாவது மிக மிக கொடூரமான அனுபவம்.. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் நடத்தி வந்த ஆய்வுக் கூடங்கள் அவற்றை சுற்றி பார்க்க விரும்பினார் மகேந்திரலால் சர்க்கார்.. அரசாங்க அனுமதியும் வைத்திருந்தார் ஆனால் மும்பையில் அவர்கள் நடத்திவந்த இயற்பியல் ஆய்வுக் கூடத்தின் வாயிலில் நாய்களுக்கும் இந்தியர்களுக்கும் அனுமதி இல்லை என்கிற ஒரு பலகை வைக்கப்பட்டிருந்தது.. அதுதான் அவரை மிகவும் பாதித்தது.
கடுமையான ஆத்திரத்தோடு கொல்கத்தா திரும்பிய மகேந்திரலால் சர்க்கார்..1876 மே மாதத்தில் அவர் தன்னுடைய அறிவியல் துறை நண்பர்களான அருள் தந்தை லபோண்ட்.. ஜெகதீஷ் சந்திரபோஸ் அசுதோஷ் முகர்ஜி, சுனில் போஸ், பிரமாதநாத் போஸ், பண்டிட் ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் மற்றும் கேசப் சந்திர சென் ஆகியோர்களை அழைத்து ஒரு சிறு கூட்டத்தை நடத்தினார்.. அதன் மூலம் உருவானதுதான் இந்திய அறிவியல் ஆராய்ச்சி கழகம்..INDIAN ASSOSIATION FOR CULTIVATION OF SCIENCE.. மகேந்திரலால் சர்க்கார் அப்போது 210 போப ஜார் வீதி என்கிற விலாசத்தில் ஒரு இடம் வைத்திருந்தார் அங்கே ஆய்வுக்கூடத்தோடு கூடிய நிறுவனம் உருவாக்கப்பட்டது..

முழுக்க முழுக்க உள்ளூர் அறிவியலை ஆதரிக்கும் ஒரு அமைப்பாக அது செயல்பட தொடங்கியது வாராந்திர மாதாந்திர அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கின்ற கூட்டங்கள் நடத்தப்பட்டன.. பிரிட்டிஷ் அரசாங்கம் இந்த அமைப்பை தடை செய்யவும் எப்படியாவது செயல்படாமல் முடங்கி போக வைப்பதற்கும் பல வகையான முயற்சிகளை மேற்கொண்டது.. அந்த போராட்டங்களுக்கு இடையே மகேந்திரலால் சர்க்கார் காலமானார்.. அம்ரிதாலால் சர்க்கார் என்ற பெயர் கொண்ட அறிஞரான மகேந்திரலால் சர்க்காரின் மகன் அமைப்புக்கு எழுச்சிமிக்க தலைமை தாங்கினார்.. பூட்டப்பட்ட ஆய்வுகூடத்தை 1907 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து கொல்கத்தாவின் கணக்காளர் ஜெனரல் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட சி வீ ராமன் என்கிற இளைஞர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பூட்டை உடைத்து இந்திய அறிவியலுக்கு திருப்புமுனையை ஏற் படுத்தியது வரலாறு.
உலகிலேயே ஒரு இதழ் ₹2 என்று சாலைகளில் விற்கப்பட்ட ஒரு அறிவியல் ஆய்விதழ் தொடங்கிய பெருமை இந்த இந்திய அறிவியல் ஆராய்ச்சி கழகத்தைச் சேரும்.. தொடங்கப்பட்ட ஆண்டு 1896. மாத இதழாக வெளிவந்து கொண்டிருந்த அற்புதமான 18 இதழ்களை பிரிட்டிஷ் அரசாங்கம் மொத்தமாக கைப்பற்றியதோடு அதை வெளியிடவிடாமலும் தடுத்தது.. அதற்கு அவர்கள் கூறிய காரணம் வேடிக்கையானது.. ராயல் கழகம் போன்ற அறிவியல் கழகங்களின் அனுமதி பெறாத ஆதரவு பெறாத போலி அறிவியல் கட்டுரைகள் என்று அவர்கள் ஒரு பிம்பத்தை கட்டமைத்தார்கள்

1914 ஆம் ஆண்டு சி வீ ராமன் என்கிற அந்தப் போராளியின் தலைமையில்.. இதழ் மீண்டும் வெளிவரத் தொடங்கியது. டாக்டர் நீலரத்தன் சர்க்கார், ஞான சந்திர கோஷ்.. போன்றவர்கள் ஆய்வு இதழின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள் இதன் புறவளர்களாக குருதாஸ் பானர்ஜி, ராஜேந்திரலால் மித்ரா மற்றும் சுரேந்திரநாத் பானர்ஜி ஆகியோர் இருந்தனர்.. இந்திய அறிவியல் ஆய்வுகளை எப்படியாவது முன்னெடுத்துச் செல்லுகின்ற பிடிவாதம் அவர்களிடம் இருந்தது.. அது ஒன்று மட்டுமே மூலதனம்.
விரைவில் ராமன் விளைவு வெளிவந்ததும் அது நோபல் பரிசு பெற்றதும் அதற்கான ஆய்வுகள் நடந்தது இந்த ஆய்வுக் கூடத்தில் தான் என்பது உலகெங்கும் பரவிய பொழுது இதழ் புகழின் உச்சிக்கு சென்றது.
1919 ஆம் ஆண்டு இன்னொரு கேலிக்கூத்து நடந்தது அது ஒரு திருப்பு முனையாகும்.. எட்வின் பார்டன் என்கிற ஒரு ஆங்கிலேயர் தொகுத்த முதல் 18 இதழ்களின் தொகுப்பு ஒன்றை பிரிட்டிஷ் அரசாங்கமே வெளியிட்டது இது அவர்கள் வேறு வழியில்லாமல் இந்திய ஆய்வுகளை ஏற்றுக்கொண்டதன் அடையாளம் ஆகும்.

ஒவ்வொரு இதழிலும் மறைந்த மகேந்திரலால் சர்க்கார் அவர்களின் எழுச்சியூட்டும் அறிவியல் உரைகளை குறிப்பாக மருத்துவத்துறை முன்னேற்றங்கள் குறித்தும் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான அசாதாரண கருத்துகளையும் உள்வாங்கிக்கொண்டு இதழ் வெளிவந்தது.
மகேந்திரலால் சர்க்கார் முன்னெடுத்து சென்ற அறிவியல் கூட்டங்களில் கலந்து கொண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர் சரளாதேவி சந்திராணி எனும் பெண் அறிஞர். இவர் பாரதி என்று பெண்களுக்கான முதல் இதழைத் தொடங்கியவர் இந்தியாவில் முதலில் இளம்கலை பட்டம் பெற்ற பெண்களில் ஒருவர்.. ஆய்வு இதழில் 1881 ஆம் ஆண்டு இவருடைய ஆய்வுக் கட்டுரை ஒன்றை மகேந்திரலால் சர்க்கார் வெளியிட்டார் இதன்மூலம் இந்தியாவில் ஆய்வுக் கட்டுரை வெளியிட்ட முதல் பெண் என்கிற பெயரை சரளாதேவி சந்திராணிக்கு நான் வழங்க முடியும். இந்த ஆய்வுக் கட்டுரை வெளியிட்டதன் மூலம் அவருக்கு இயற்பியலில் உயர்கல்வி கற்கும் வாய்ப்பை கல்கத்தா பல்கலைக்கழகம் வழங்கியது வரலாறு
இந்த ஆய்வு இதழ்களில் எழுதிய இன்னொரு பெண் அறிஞர் அபாலா போஸ். இவர் ஜெகதீஷ் சந்திரபோஸ் அவர்களின் இணையர் கொல்கத்தா மட்டுமல்ல மேற்கு வங்கத்தின் 14 கிராமங்களில் ஏறக்குறைய 1000 பள்ளிகளை தோற்றுவித்த பெண் கல்வியின் போராளி. இவர் கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிப்பதற்காக தொடர்ந்து விண்ணப்பித்து கொண்டிருந்தார்.. எவ்வளவோ முயற்சி செய்தும் பெண்களுக்கு இடமில்லை என்று அவர்கள் மறுத்தார்கள்.. THE PROCEEDINGS OF THE INDIAN ASSOSIATION FOR THE CULTIVATION OF SCIENCE .. என்கிற நம்முடைய இந்த அறிவியல் ஆய்வுக் கழகத்தின் ஆய்வு இதழில் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் ₹2 க்கு விற்கப்பட்ட ஒரு இதழில் அப்பாலா போஸ் அம்மையாரின் முக்கியமான ஆய்வு கட்டுரை வெளியிடப்பட்டது.. இந்த ஆய்வுக் கட்டுரையின் காரணமாக சென்னை மருத்துவக் கல்லூரி அவரை அழைத்து அங்கே மருத்துவம் படிப்பதற்கு இடம் கொடுத்தது இன்னொரு திருப்புமுனை வரலாறாகும்.
இந்த ஆய்வு இதழின் மூலம் பிற்காலத்தில் இதன் ஆசிரியர்களாக இருந்த மேக்நாத் சாஹா, கே பிரசாத், எஸ்கே மித்ரா, பிரியன் கோஷ் போன்றவர்களின் அயராத உழைப்பால் உலகெங்கும் அறியப்பட்ட ஒரு இதழாக இது மிளிர்ந்தது. 1940 வரையில் 53 அற்புத கண்டுபிடிப்புகளை வெளியிட்ட இதழ் என்கிற புகழ் இந்த இதழுக்கு கிடைத்தது.. வேளாண்மை துறையின் அறிவியல் அறிஞராக இருந்த எல்டி மகாஜன் இந்த இதழில்தான் மண்ணின் ஈரப்பதம் எப்படி பேணப்பட வேண்டும் என்பது குறித்த உலக அளவிலான கண்டுபிடிப்புகளை வெளியிட்டார் எஸ்எம்எஸ் பானர்ஜி, ஏ எஸ் ராவ் இணைந்து வழங்கிய அல்ட்ரா ஹை ஃப்ரீகுவன்ஸி குறித்த வானொலி அலைகள் எப்படி மின் அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன என்கிற துல்லிய கட்டுரையின் மூலம் வானொலி நிலையங்களை எப்படி அமைப்பது என்பதை உலகம் கற்றுக்கொண்டது.. இப்படி நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்
ராமன் விளைவுடன் தொடர்பு படுத்த தக்க கே எஸ் கிருஷ்ணன் நவீன காந்தவியல் மற்றும் கட்டமைப்பு இயற்பியலின் அடிப்படை ஆய்வுக் கட்டுரைகளை இந்த இதழில் தான் வெளியிட்டு புகழ் அடைந்தார்.. அந்த நூற்றாண்டின் ஆரம்ப பத்தாண்டுகள் வரை இந்தியாவில் இயற்பியல் அறிவியலின் உயர் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளக்கூடிய ஒரே இடமாக இந்த ஆய்வுக் கழகம் வழங்கியது இதன் விளைவாக இந்தியா முழுவதும் இருந்து மாணவர்கள் ஆய்வுக் கூடத்தில் படைப்பாற்றல் மிக்க சூழலில் பணியாற்றுவதற்காக கொல்கத்தாவில் ஒன்று கூட தொடங்கினர்.. அவர்களின் அயராத உழைப்பால் பல அற்புத ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடும் இதழாக மாறியது இது.. ஆங்கிலேயர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் ராமனின் நோபல் பரிசுக்குப் பிறகு இந்த இதழை ஒன்றும் செய்ய முடியவில்லை.
நவீன இந்தியாவின் பல புகழ்பெற்ற விஞ்ஞானிகள் இங்கு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இருந்தனர்.. சூரி பகவந்தம், எல் ஸ்ரீவத்சவா, என் கே சேத்தி, சி பிரசாத், மேக்நாத் சாகா.. என்று சொல்லிக்கொண்டே போகலாம்.. அவர்களது பெரும்பாலான கண்டுபிடிப்புகள் நிறைந்த ஆய்வு கட்டுரைகள் இந்த இதழில் தான் வெளிவந்தன.
இந்தியாவின் அற்புதமான அறிவியல் ஆராய்ச்சி கலாச்சாரத்தை நிறுவியவர்கள் இவர்கள் தான்.. அதை முன்னின்று இந்தியாவிலும் அறிவியல் சாதனைகள் படைக்க முடியும் என்பதை செய்து காட்டியது இந்த இதழ்தான்.. இந்திய அறிவியல் மேம்பாட்டு கழகத்தின் செயல் முறைகள் என்கிற தலைப்பில் வெளிவந்த இந்த இதழ் இன்றைக்கு அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது ஒரு புத்தக வெளியீட்டுக்காக சாந்திநிகேதன் பல்கலைக்கழகத்துக்கு அழைக்கப்பட்டு இருந்த பொழுது நேரில் கொல்கத்தா அருங்காட்சியகத்தில் சில இதழ்களை என் கையால் எடுத்து தொட்டு புரட்டிய அனுபவத்தை என் வாழ்நாள் முழுவதும் என்னால் மறக்க முடியாது.
இந்த இதழின் சில வரலாற்று சாதனைகளை வாசிக்கவேண்டுமென்றால் HATHITRUST இணையதளத்தில் நீங்கள் பதிவிறக்கம் செய்து வாசிக்கலாம்.. அனைத்தும் அங்கே பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.. இருந்தும் ஆரம்ப 18 இதழ்கள் ஆங்கிலேயர்களால் முற்றிலும் சிதைக்கப்பட்ட பொழுதும் அவர்களே வெளியிட்ட தொகுப்பில் தவிர்க்க முடியாத சில கட்டுரைகள் உள்ளன.
ஆய்விதழ் என்பது மக்களுக்கு அறிவியலை.. அறிவியலில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள வைக்கின்ற முயற்சி. உலகஅளவில் அறிவியலாளர்களுக்கு எங்கலாம் எந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது என்கின்ற என்கிற விஷயத்தை அறிய உதவும் பொது புதையல் ஆகும்.. அந்தவரிசையில் ₹2 க்கு தெருவில் போட்டு விற்கப்பட்ட உலகின் முதல் அறிவியல் ஆய்விதழ் போராட்டங்களுக்கு மத்தியில் வெற்றி பெற்ற வீர வரலாற்றை நாம் நம்முடைய மாணவர்களுக்கு சொல்ல வேண்டும்..
இப்போது நாம் தொடங்கிய கேள்விக்கு வருவோம்.. மரபணு கட்டமைப்பை வெளிக்கொண்டு வந்து தெளிவான ஆய்வு கட்டுரையை நேச்சர் இதழில் வெளியிட்டதற்காக.. மூன்று பேருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது ஏற்கனவே இரண்டு பேரின் பெயர்களை நான் குறிப்பிட்டு விட்டேன் அந்த மூன்றாவது நபர் மாரிஸ் வில்கின்ஸ்.. இந்த மாரிஸ் வில்கின்ஸ் தான் எக்ஸ் கதிர் விளிம்பு சிதறல் படங்களை ரோசலின் ஃபிராங்க்ளின் அம்மையாரிடம் இருந்து எப்படியோ களவாடி வந்து வாட்சனிடம் கொடுத்தவர்.. அவர்களுடைய ஆய்வுக் கட்டுரை சொல்கிறது ரோசலின் அம்மையாரின் இருட்டடிப்பு செய்யப்பட்ட பங்களிப்பின் பின்னணியில்..1924 ஆம் ஆண்டு நான் மேலே குறிப்பிட்ட இந்திய அறிவியல் ஆய்வுக் கழகத்தின் இதழில் வெளிவந்த ஏஐ நாராயணன் மற்றும் சி கே அனந்தசுப்ரமணியன் ஆகியோர் இணைந்து எழுதிய A PRECISIAN – DIRECT READING X RAY SPECTROGRAPHY என்கிற ஆய்வு கட்டுரை மிக முக்கிய காரணி ஆக பயன்படுத்தி உள்ளது.. நேச்சர் இதழில் வெளிவந்த இந்த மூவரின் ஆய்வுக் கட்டுரையின் இறுதியில் மேற்கண்ட இந்திய ஆய்வுக் கட்டுரை மேற்கோள் காட்டப்பட்டுள்ளது என்பது எவ்வளவு எழுச்சியான செய்தி.. இந்திய அறிவியலில் இருட்டடிப்பு செய்யப்பட்ட இத்தகைய எத்தனையோ அத்தியாயங்கள் இருக்கின்றன..
ஆய்வு இதழ் என்பது வெற்று காகிதமல்ல. அது வரலாற்றின் சாட்சியம்.. அறிவியல் எழுச்சியின் அடித்தளம் என்பது புரிகிறதா.
📚 எழுதியவர் :

✍🏻 – ஆயிஷா இரா.நடராசன்
நன்றி :அறிவியல் பலகை
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


தெரியாத பல உண்மைகளை தெளிவாக்கிய அருமையான கட்டுரை.