நூல் : சீமையிலே இல்லாத புத்தகம்
ஆசிரியர் : தேனி சுந்தர்
விலை : ரூ.₹100/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

ஒரு வழியா “சீமையிலே இல்லாத புத்தகம்” வந்து சேர்ந்து விட்டது. கையில் கிடைத்ததும் வாசிக்க தொடங்கி விட்டேன். அட்டை படமே அட்டகாசமா இருக்கு. திருப்பி பார்த்தால் ஆசிரியர் குறிப்பு அதைவிட பிரமாதம். ஆஹா…..

நிச்சயமா இது “சீமையில இல்லாத புத்தகம்” தான்.. இப்படி ஒரு ஆசிரியர் குறிப்பு இதுவரை நான் பார்த்ததில்லை. என்னமோ தெரியாது… சிலரிடம் காரணமே இல்லாமல் ஒருவித உணர்வு நெருக்கம் ஏற்படும். உடனே ‘முறை’ சொல்லி கூப்பிட தோணும்.

ச. தமிழ்ச்செல்வன் அண்ணனை பார்க்கும் போதெல்லாம் அப்படி ஒரு உணர்வு தோன்றும். அப்பா வயதுகாரர் என்றாலும் அண்ணன் என்று கூப்பிட கூப்பிட இனிப்பா இருக்கும். அது போன்றதொரு நெருக்கம் எனக்கு புகழ்மதியோடு ஏற்பட்டுள்ளது. “மருமகளே” என்று தாடையை பிடித்து கொஞ்ச தோன்றும் நெருக்கம்.

நான் அவளை நேரில் பார்த்ததே இல்லை. எனக்கும் அவளுக்குமான உரையாடல்கள் அத்தனையும் டுஜக் டுஜக் புத்தகமும் அதனை தொடர்ந்து வரும் வாட்ஸ் அப் செய்திகளும் மட்டுமே. இரண்டு மூன்று நாள் தகவல் இல்லை என்றால் கூட எங்கே போய்ட்டீங்க என்று கேட்க தோணும்.

நேற்று புத்தகம் கையில் கிடைத்ததும் அவளையே நேரில் பார்த்த மகிழ்ச்சி. ஒவ்வொரு பக்கம் படித்து முடித்து பொறட்டும் போதும் வாயெல்லாம் சிரிப்பு. முகமெல்லாம் மலர்ச்சி..!

சீமையில் இல்லாத புத்தகம் வாசித்த பிறகு ஏன் புகழ்மதி வயசு பிள்ளைங்க புகழ்மதி போல இல்லை. கீர்த்தி, புகழ்மதி கிட்ட இருக்கும் குழந்தமை ஏன் பெரும்பான்மையான குழந்தைகளிடம் இல்லை என்ற கேள்வி எழுந்து கொண்டே இருக்கிறது.

குழந்தை பிறந்த முதல் நாள் தொடங்கி அடுத்து வரும் ஒவ்வொரு நாளும் அவர்கள் வாழ்க்கையை அவர்களுக்காக பெற்றோர்களே வாழ்கின்றோம்.. ஒருவேளை குழந்தையின் அந்தந்த வயதுக்குரிய இயல்பை இப்போது பரவலாக பார்க்க முடியாமல் போனதற்கு அதுவும் ஒரு காரணமா இருக்குமோ…

எல்லா பிள்ளைகளும் அறிவு ஜீவிகள் போல வயதிற்கு மீறி பேசுகின்றனர். சமீபத்தில் எழுத்தாளர் ஆதி வள்ளியப்பனின் இந்து நாளிதழில் வந்த கட்டுரையும் இவை குறித்தே பேசியது.

இவை அனைத்திலிருந்தும் விலகி நின்று குழந்தைகளின் உலகம் அவர்களுக்கான சுதந்திரத்தோடு நிர்மாணிக்கப்பட்டால் எப்படி இருக்கும் என்பதற்கு நல்ல உதாரணத்தை தோழர் தேனி சுந்தரின் வீடு நமக்கு காட்டுகிறது.

குழந்தைகள் அவர்கள் இயல்பு நிலை மாறாமல் எட்டும் அறிவு நிலையே ஆரோக்கியமானது என்பதை அறிவுரையாக தராமல் வாழ்ந்து காட்டி பெரிய உதாரணத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.

ஒவ்வொரு உரையாடலிலும் குழந்தைகள் புகழ்மதி, டார்வின், கீர்த்தி தெறிக்க விட்டுள்ளார்கள்.

“மூன்றாம் பிறை படத்திலிருந்து
பாட்டு ஓடுச்சு
அதை பார்த்துக்கிட்டே
பாப்பா சொன்னாங்க..
அங்கே பாருப்பா
அந்த நாய்க்குட்டி
அவங்க அம்மா கிட்ட ஓடுது
அங்க பாருப்பா
அவங்க அப்பா கிட்ட ஓடுது..
நல்லவேளை
இந்த விஷயம் கமலஹாசனுக்கு தெரியாது.!!”

இதை முதன் முதலில் வாசித்த போது விழுந்து புரண்டு சிரிச்ச சிரிச்சு சிரிச்சு இருமலே வந்து விட்டது.

“ஹலோ யார் பேசுறது..?

மேக்கப் கடைல இருந்து பேசுகிறோம்..

உங்க வீட்டுக்கு நாங்க வாரோம்..

நாங்க கூப்பிடவே இல்லையே..
எதுக்கு வரீங்க..?!

நாங்க அப்படித்தான் வருவோம்..

ஹலோ மேடம்
நாங்க நல்லா தான் இருக்கோம்..
மேக்கப் எல்லாம் வேண்டாம்..

மேக்கப்போடலைன்னா
கேவலமா இருப்பீங்க
வீட்ல இருங்க வந்துக்கிருக்கோம்…..!””

இப்படி நிறைய….

ரசித்து ரசித்து படிக்க நிரம்பி கிடக்குது புத்தகம் முழுவதும்.

“”என்னடி சொல்லிக்கிருக்க..

அங்கிட்டும் இங்குட்டுமா
ஓடி வெளாட
அது என்ன உன் பேத்தியா..??””

இப்படி சரவெடியா பக்கத்துக்கு பக்கம் வெடிச்சு சிதறுது பிள்ளைகளின் உரையாடல். மனச ரிலாக்ஸ் பண்ணனும்னா சீமையிலே இல்லாத புத்தகம் வாங்கி படிங்க. எப்படி புள்ள வளர்க்கணும் என்று ஃப்ரீயா கத்துக்கலாம்.

– அமுதா செல்வி,
மதுரை

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *