நூல் அறிமுகம்: அ.முத்துகிருஷ்ணனின் “தூங்காநகர நினைவுகள்..” – இரா.இயேசுதாஸ்
“தூங்கா நகர நினைவுகள்..”
மதுரையின் முழுமையான வரலாறு.(நூல்)

ஆசிரியர்: அ முத்துகிருஷ்ணன் (பசுமைநடை எனும் தொல்லியல் விழிப்புணர்வு இயக்க நிறுவனர்.. தொடர் பயணங்கள்- ஆய்வுகள் மூலம் எழுதும் எழுத்தாளர்.)

மூன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மூதூர். பழமையான கோவில்கள், கட்டடங்கள், கோட்டைகள் என பழம் பெருமைகள் நிறைந்த ஊர். பண்பாடு கலாச்சாரத்தை பேணும் ஊர். பாண்டியர் முதல் நாயக்கர் வரை பலரது ஆளுகையில் இருந்த மாநகர். ஒவ்வொரு வீதிக்கும் ஒரு வரலாறு உண்டு. தொழிலாளர்களுக்கு என தனியே ரயிலை இயக்கிய மதுரா கோட்ஸ் ஆலை, முதல் ரயிலைக் கண்ட மதுரை மக்களின் மனநிலை, மருதநாயகம் கான்சாகிப் ஆன பிறகு மதுரை கவர்னராக மக்களுக்கு செய்த அரும்பணிகள், வெளிநாட்டினர் மதுரையை நேசித்து வருவது… என பல செய்திகள் இடம் பெற்றுள்ளன. திருவிழா நகரம் … பரபரப்பான நகரம்… 3000 ஆண்டுகள் தொடர்ந்து உலகத்தவர் இங்கே வந்து சென்று கொண்டே இருக்கின்றனர். மதுரையில் கிடைக்கும் கற்கருவிகள், பாறை ஓவியங்கள், கல்வெட்டுகள், ரத்தின பாஸ்கரின் புகைப்படங்கள்… இவையெல்லாம் வரலாற்று ஆவணங்களாகி உள்ளன. வரலாற்று ஆவணங்கள் மதுரை எங்கும் சிதறி கிடக்கின்றன… பாறை ஓவியங்கள், கல்வெட்டுகள், கற்கருவிகள், ஆகியவற்றை வரலாற்று உணர்வே இல்லாமல்… செம்மொழிக்கு சான்றாக உள்ளவையும் பாதுகாப்பற்று கிடப்பதை பல இடங்களில் ஆசிரியர் முத்துகிருஷ்ணன் ஆதாரங்களுடன், ஆதங்கத்துடன் குறிப்பிடுகிறார். ஆம் …நாடு முழுவதுமே இதுதான் நிலை. வீட்டு மனை போட்டு இடங்களை விற்கும் ரியல் எஸ்டேட் அதிபர்கள் இவற்றை எல்லாம் சிதைத்து பூமியிலே புதைத்து விடுவதை நாம் பார்க்கிறோம். பழம் ஓவியங்கள் மீது ஹார்ட் ஆரோ போடும் வாலிபர்களையும் நாம் பார்க்கிறோம்!

மீன் கொடியின் வரலாறு.. திரைகடல் ஓடிய தமிழர் வணிகம் …வெளிநாடுகளில் இருந்து வந்து குவிந்த பொன்.. தாது வருட பஞ்சத்தின் வரலாறு …தபால் தொடர்பின் ஆதி அந்த வரலாறு… பல்வேறு மதங்களின் வளர்ச்சி.. விடுதலை வேள்வியில் மதுரை.. இறுதியாக கீழடி என எல்லாவற்றிலும் முக்கியமான செய்திகளின் தொகுப்பாக இந்நூல் வந்துள்ளது.. இதை ஒரு விரிவான வரலாற்று பதிவாக கொள்ள முடியாது; குறைவான இடத்தில் நிறைவான செய்திகள் எனலாம்.

அரிய ஓவியங்கள், புகைப்படங்கள் அற்புதம்.. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் ஆலய பிரவேசம் நடத்தியதை பதிவிடும் அதே நேரத்தில் அதற்கு எதிராக நடத்தப்பட்ட தீவிரமான இயக்கங்களையும் இந்நூல் பதிவு செய்கிறது. மதுரைக்கு வந்த காந்தி அரையாடைக்கு மாறிய நிகழ்வை பதிகிறது. அதிக அளவு தொழிலாளர்களுடன் இயங்கிய மதுரா கோட்ஸ் மில், திருப்பரங்குன்றம் கோயிலுக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் முறையே கோயில் மணி, வெளிச்சம் தர ஜெனரேட்டர் வசதி செய்து தந்த கிறிஸ்தவர்களின் சேவையை குறிப்பிடுகிறது. அதேபோல இஸ்லாமியர்களின் சந்தனக்கூடு திருவிழா, அவர்களின் மத நல்லிணக்க சேவைகளும் இந்நூலில் குறிப்பிடப்படுகிறது.

வணிக மையமாக ..தமிழ் வளர்க்கும் மையமாக.. பழம் பெறும் நகர நாகரிகத்தின் மையமாக மதுரை விளங்கியதை நூல் நெடுக காணலாம். அழகர் மலை, திருப்பரங்குன்றம், தமிழி கல்வெட்டுகள், முதுமக்கள் தாழிகள், மதச் சடங்குகள் ஏதுமின்றி இருந்த ஆதி வரலாற்றில் எப்போது கோயில்கள் தோன்றின? வரலாற்றுச் சான்றுகளாக விளங்கும் சங்க இலக்கிய பாடல்கள், மதுரையில் கண்ணகி ,கடல்வழி வணிகம், காற்றின் திசையின் பருவம் அறிந்து கப்பலோட்டிய வணிகர்கள், ரோம- எகிப்திய -சீன- மலேசிய- சாவக… என பல நாடுகளுடன் வணிகத்தொடர்பு, வெளிநாட்டு பயணிகளின் குறிப்புகள், நாணயங்கள் ,திருமலை நாயக்கர் மஹால் ,கிழக்கு இந்திய கம்பெனி வருகைக்குப் பின் நிகழ்ந்தவை ,தாது பஞ்சத்தின் போது கஞ்சி ஊற்றி பஞ்சம் போக்கிய தாசி குலப் பெண்மணி குஞ்சரத்தம்மாள், நீர்ப்பாசன வசதிக்காக பெரியாறு அணை கட்டிய பென்னிகுவிக்கின் வரலாறு இடம் பெற்றுள்ளது.

இடிக்கப்பட்ட மதில் கோட்டைகள், வரலாற்று புகழ்மிக்க தபால் ஆபீஸ்.. அதில் ரன்னர்கள் பற்றிய குறிப்பு ..மதுரை பற்றி பழம் ஓவியங்கள்- புகைப்படங்கள், கல்விச்சாலைகள் ,அமெரிக்கன் கல்லூரி ,தாகூர் -அம்பேத்கர் வருகை, வீரமாமுனிவர், சர்ச்சுகள் ,ஆங்கிலோ- இந்தியர், ஹாஜா மூசா எனும் துணி வியாபாரிகள் பற்றியும் நூலில் குறிப்புகள் உள்ளன.

இந்த ஊரின் புகழ்பெற்ற நடிகர்கள், எழுத்தாளர்கள், பாடகர்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள், அரசியல் தலைவர்கள் ,சினிமா தியேட்டர்கள், மார்வாடிகள் -சௌராஷ்டிரர்கள் பஞ்சாபிகள் போல பலபேருடைய பங்களிப்புகளும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நிலவும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற பண்பாடு இங்கும் நிலவுவதை நூல் நிறுவுகிறது.

பல பெரும் அரசியல் தலைவர்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள் பற்றி சில வரிகளிலேயே குறிப்பிட்டு விட்டு கடந்து செல்கிறது இந்த நூல்.

கீழடி பற்றிய அத்தியாயத்துடன் இந்நூல் நிறைவு பெறுகிறது.

ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல முக்கியமான தகவல்களின் தொகுப்பாக இந்த நூல் உள்ளது. முழுமையான வரலாறோ, விரிவான வரலாறோ அல்ல…

நூல் : அ.முத்துகிருஷ்ணனின்
ஆசிரியர் : தூங்காநகர நினைவுகள்
விலை : ரூ.₹500
பக்கங்கள் : 271
வெளியீடு : விகடன் பிரசுரம்
அத்தியாயங்கள் : 29
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924

– இரா.இயேசுதாஸ்-மன்னார்குடி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.