“ஞாபகங்கள் நிச்சயம் தீ மூட்டும்!”
நூல்: ஞாபகங்கள் தீ மூட்டும்
ஆசிரியர்: அ.பாக்கியம்
வெளியீடு: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
விலை: ரூ.100/-
பக்கம்: 136
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
bharathiputhakalayam@gmail.com
தோழர் ஏ.பாக்கியம் எழுதிய “ஞாபகங்கள் தீ மூட்டும்” (DYFI போராட்டங்கள் சில துளிகள்) நூல் நேற்றுதான் 28.09.2022 கள்ளக்குறிச்சி மாநாட்டில் பிரதிநியாக கலந்து கொண்ட ஒரு தோழரிடம் வாங்கினேன்.
இன்று முழுமையாக ஒரே மூச்சில் வாசித்தேன். 136 பக்கங்களும் போனதே தெரியவில்லை. அதைவிட முக்கியம் 1978 முதல் 1996 வரை SYF மற்றும் DYFI களில் ஏறக்குறைய 18 ஆண்டுகள் ஓடிய ஓட்டங்களை அப்படியே புரட்டி போட்டுவிட்டது என்றால் மிகையல்ல.
அன்றைய போராட்டங்களில் ஆட்சியாளர்களின் தலையீடு இருந்ததை, போராட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப் பட்டத்தை, போராட்டங்களின் உக்கிரங்களை போகிற போக்கில் பதிந்திடாமல், படம்போட்டு பதிந்துள்ளார் தோழர் ஏ.பாக்கியம்.
ஆம், வேலை அல்லது நிவாரணம் வேலை உரிமை தடைச் சட்டம், பஸ் கட்டணம் உயர்வு, குடிநீர் தேவை, ரேசன் அட்டை, லஞ்சம் ஊழல் எதிர்ப்பு, மருத்துவ மனைகளில் மருத்துவ வசதி, குடிமனைகள் அமைத்தல் என எடுத்த கோரிக்கைகள் யாவும் அரசுடன் மோதி, அதிலே வெல்லாமல் விட்டதில்லை.
அல்லது வேறு வார்த்தையில் சொன்னால், அரசும் அதில் கவனமிட்டு தீர்வு காண்பதில் முனைப்பு காட்டின. இதுதான் அந்த போராட்ட உந்துதலுக்கு பிரதான காரணியாக இருந்தது. அதை மிக நுட்பமாக புள்ளி விபரங்களோடு இந்நூல் பதிந்திருக்கிறது.
பேருந்து கட்டண உயர்வுக்கான எதிர்ப்பு போராட்டத்தில் இந்தியாவிலேயே முன்கைது தமிழகத்தில்தான் நடந்திருக்கும். அந்தளவிற்கு அக்காலங்களில் DYFI ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என்றால் மிகையல்ல.
அன்றைய கோரிக்கைகளை பார்த்தால், இதற்கெல்லாமா போராட்டம் நடத்தப்பட்டது என தோன்றும். உதாரணமாக சென்னை உள்ளிட்ட மாநிலமெங்கும் குடிநீர் போராட்டம்; மாநிலம் முழுவதும் ரேசன் அட்டைக்கு போராட்டம் இப்படி நிறைய குறிப்பிடலாம்.
ஆம், அந்த மாதிரியான கோரிக்கைகளுக்கு தற்போது அவசியம் இல்லையென்றாலும், இன்றைய இளைஞர் சமுதாயத்தின், ஏழை எளிய மக்களின் கோரிக்கைகளைக் கண்டறிந்து கையில் எடுத்து போராடினால், அன்றைய அரசுகளைப்போல், அரசு அதிகாரிகளைப் போல் செவி சாய்க்கும் நிலை இல்லாமல் இருப்பது ஒரு கசப்பான பேருண்மை.
ஆம், போராட்டங்களை நீர்த்து போகச் செய்யும் கலையை இன்றைய ஆட்சியாளர்கள் கற்று இருக்கிறார்கள். அவர்களின் பாணியில் நாமும் திருப்பியடிக்கும் கலையை கண்டறிந்தாக வேண்டியிருக்கிறது. இது அனைத்து அமைப்புகளின் போராட்டங்களுக்கும் பொருந்தும்.
இந்த நூலை என்னிடம் தந்த அந்த இளம் தோழர் சொன்னார்… _”அரைஞான் கயிறு, பூணூல் கயிறுகளில் சிறையில் கொடியேற்றப்பட்டதா? அடே சாமி”_ என்கிறார். ஆம், இதுதான் இந்த நூலின் வெற்றி. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
தோழர் அகத்தியலிங்கம் கூறியதைப்போல்… அக்காலத்தின் கோரிக்கை போராட்டங்களை அந்த 4 (உறுதிமிக்க போராட்டங்கள்; பன்முக செயல்பாடுகள்; சித்தாந்த பயிற்சி; வலுவான அமைப்பு) கட்டத்திற்குள் அடக்கிவிடலாம்.
அது, அன்று மட்டுமல்ல என்றும் எடுத்து செல்ல வேண்டிய ஒன்று. அதற்கு இந்த நூல் அடித்தளம் அமைத்து தந்திருக்கிறது. அதற்கான உழைப்பை தோழர் ஏ.பாக்கியம் செலுத்தி இருப்பது சிறப்பு. மிகுந்த பாராட்டுக்குரியது.
தோழர் பாலா வரலாற்று ஆசிரியர்களை மேற்கோள் காட்டியிருப்பதைப் போல், “எந்த ஒரு வரலாற்றையும், முழுமையாக எழுத முடியாது” என்பது சத்திய வார்த்தைகள். அதைத்தான் தோழர் பாக்கியமும் இது ஒரு புள்ளி மட்டுமே என்கிறார் மிகுந்த தன்னடக்கத்துடன்.
ஆனால், என்னை பொருத்தவரை எடுத்த 15 பணிகளில் புள்ளி வைத்து கோலமிட்டு நிறைவாக செய்திருக்கிறார் இந்த நூலில். இதுபோல் பலநூறு போராட்டங்கள் கிளை, வட்ட, மாவட்ட அளவில் இன்னும்கூட இருக்கக்கூடும். அவற்றை எல்லாம் தொகுத்தளிப்பது அடுத்தடுத்து வரும் தலைமுறையினருக்கு அதொரு கையேடாக நிச்சயம் இருக்கும். அதற்கான துவக்கப்புள்ளி இந்த நூல் என்று வேண்டுமானால் கூறிடலாம்.
ஆம், இதெல்லாம் இரண்டாயிரத்திற்கும் முந்தியவைகள். அதற்கு பிந்திய களம் பல பதித்த போர் பரணிகள் ஏராளம். அவற்றையும் பதிவிடல் வேண்டும்.
தமிழகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் துவக்க காலத்தில் முத்திரை பதித்த முத்தான 15 களப்பணிகளை அதே உத்வேகத்தில் பதிந்துள்ள தோழர் எ.பாக்கியம் பதிவும், அதை 15 அத்தியாயங்களாக வடிவமைப்பும் அருமை. மேலும் அவற்றை நூலாக்கி மாநில மாநாட்டில் வெளியிட்ட DYFI மாநிலக்குழுவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இன்றைய சூழலை புரிந்து, அதற்கேற்ற முறையில் மிக நுணுக்கமாக போராட்டங்களை வடிப்பதில் இந்நூல் நிச்சயம் வழிகோலும். அந்த வகையில் இன்றைய இளைஞர்கள் கையில் தவழ்ந்தால், “ஞாபகங்கள் நிச்சயம் தீ மூட்டும்” என்றால், அது மிகையல்ல.
– தாரைப்பிதா…
முகநூல் பதிவிலிருந்து
29.09.2022
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

