நூல் அறிமுகம்: ‘அஞ்சுவண்ணம் தெரு’ – இஸ்லாமிய வாழ்வியலைத் தமிழ்ச் சமூகத்திற்கு எடுத்தியம்பிடும் நாவல்! – பெ.விஜயகுமார்

நூல் அறிமுகம்: ‘அஞ்சுவண்ணம் தெரு’ – இஸ்லாமிய வாழ்வியலைத் தமிழ்ச் சமூகத்திற்கு எடுத்தியம்பிடும் நாவல்! – பெ.விஜயகுமார்

தோப்பில் முகம்மது மீரான் (1944-2019) கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணத்தில் பிறந்தவர். ‘துறைமுகம்’, ‘சாய்வு நாற்காலி’, ‘அஞ்சுவண்ணம் தெரு’, ‘ஒரு கடலோரக் கிராமத்தின் கதை’, ‘குடியேற்றம்’, ‘கூனன் தோப்பு’, ஆகிய ஆறு நாவல்களையும், ஏராளமான சிறுகதைகளையும் எழுதியுள்ளார். மலையாளத்திலிருந்து தமிழுக்கு நிறைய மொழிபெயர்ப்புகளையும் செய்துள்ளார். மலையாள எழுத்தாளர் பஷீர் படைப்புகளில் ஆழ்ந்த ஈர்ப்புடையவர். தமிழ்ப் புனைகதைகளில் இஸ்லாமிய கலாச்சாரம் குறித்த பதிவுகள் மிகவும் குறைவு. இஸ்லாம் குறித்து தமிழில் எழுதுவதில் இருந்த தயக்கத்தை உடைத்தெறிந்தவர் முகம்மது மீரான். இவர் வகுத்த பாதையில் இன்று சல்மா, கீரனூர் ஜாகிர் ராஜா, கரீம் போன்ற படைப்பாளிகள் பீடு நடை போடுகின்றனர்.

என் எழுத்துக்கு முன்னோடி இல்லை ...

அஞ்சுவண்ணம் தெரு நாவலை, தோப்பில் முகம்மது மீரான் காலக் கிரமமாக இல்லாமல் முன்னும் பின்னுமாகச் சொல்லிச் செல்கிறார். வரலாற்றின் பக்கங்களிலிருந்து சில தகவல்களை எடுத்து கற்பனையுடன் பிணைந்து இந்த நாவலைப் படைத்துள்ளார். இதனால் எது புனைவு, எது வரலாறு என்றறிய முடியாமல் வாசகர்களை அவரால்  திண்டாடச் செய்ய முடிகிறது. இரு நூறாண்டுகளுக்கு முன்னான நிகழ்வுடன் நாவல் தொடங்குகிறது. சோழ நாட்டிலிருந்து ஐந்து நெசவுக் குடும்பங்களைக் கொண்டு வந்து மலையாள மன்னர் நாஞ்சில் நிலத்தில் குடியமர்த்துகிறார். இக்குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் நிலவொளியினும் அழகானவர்கள். அஞ்சுவண்ணம் தெருவிலிருக்கும் அழகியான ஹாஜராவின் அழகைக் கண்டதும், காமுறுகிறான் மலையாள மகாராஜா. அவளை இழுத்து வரச் சொல்லி சேனையை அனுப்புகிறான். சேதி தெரிந்ததும் பெண்ணின் வாப்பா தன் எட்டு மகன்களையும் இரவோடு இரவாக தப்பி ஓடச் சொல்கிறார். மகள் ஹாஜராவிடம் “ஒரு காபிருக்கு மனைவியாக இருக்க விரும்புறியா? ஈமானுள்ள (இறை நம்பிக்கையுள்ள) முஸ்லிமாக இறக்க விரும்புறியா? என்று கேட்கிறார். “ஒரு ஈமானுள்ள முஸ்லிமாக இறக்க விரும்புகிறேன்”, என்கிறாள். அப்படியானால் இந்த குழிக்குள் இறங்கி சமாதியாகி விடு என்கிறார். மறுப்பின்றி ஏற்றுக்கொள்கிறாள். அவளை உயிருடன் புதைத்துவிட்டு அவரும் கண் காணாத தூரம் சென்று மறைந்துவிடுகிறார். அன்று உயிரோடு சமாதியான ஹாஜரா இன்று அஞ்சுவண்ணம் தெருவின் காவல்தெய்வம். தைக்கா பள்ளிவாசலின் மேற்குப்புறம் இருக்கும் அவளின் சமாதிக்கு தினமும் சந்தனத்திரி வைத்து வழிபடுகிறார்கள். அவர்களை நோய்களிலிருந்தும்,  வறுமையிலிருந்தும் காப்பாற்றும் வல்லமை படைத்த அம்மாவாக நினைத்து வணங்குகிறார்கள். இதில் என்ன ஆச்சரியம்! நாடு முழுவதும் இந்து மன்னர்களின் காமத்திற்கு இரையாகாமல் உயிர்நீத்த முஸ்லிம் பெண்கள், அல்லது முஸ்லிம் மன்னர்களின் இச்சைக்கு அடிபணியாமல் இறந்துபட்ட இந்துப் பெண்கள் இவர்களின் கதைகளாலும், கல்லறைகளாலும் தானே நிரம்பியுள்ளன.

தறிகளின் சத்தமும், தைக்கா பள்ளிவாசலின் பாங்கு ஓசையும் அஞ்சுவண்ணத்தில் கேட்டவண்ணமே இருக்கின்றன. தைக்கா பள்ளிவாசல் அருகில் இருக்கும் ’நபீசா மன்ஸில்’ மதார் சாகீபுக்குச் சொந்தம். பள்ளிவாசலைவிட உயரமானதாகக் கட்டப்பட்ட அந்த இரண்டு மாடி வீடு ராசியானதல்ல என்பது ஊர் மக்களின் நம்பிக்கை. வீட்டின் உயரத்தைக் குறைக்க வேண்டும் அல்லது தைக்கா பள்ளிவாசலின் மினாரை உயரமாகக் கட்டிக்கொடுக்க வேண்டும் என்று இரண்டில் ஒரு மாற்றத்தைச் செய்யச் சொல்கிறார்கள். மதார் சாகீப் இரண்டுக்கும் தயாரில்லை. ஊர் மக்கள் நினைத்ததைப் போலவே, நொடித்துப் போய் வீட்டை விற்றுவிட்டு வெளியூர் செல்கிறார்.

நபீசா மன்ஸில் வீட்டை வாங்கி ’தாருல் ஸஹினா’ என்று பெயரிட்டு புதியவர்கள் குடிவருகிறார்கள். வீட்டை வாங்கும் பெரியவரை வாப்பா என்றே ஊர் மக்கள் அனைவரும் அழைக்கின்றனர். புதிய வீட்டில் வாப்பாவுடன் அவரின் மகளும், மருமகனும் தங்கள் பிள்ளைகளுடன் குடியேறுகிறார்கள்.  வாப்பா வாங்கிய ராசி இல்லாத வீட்டில் அவரின் மகளும், மருமகனும் நிம்மதியின்றி வாழ்கிறார்கள். ஊர் மக்கள் வாப்பாவை ஒரு வஹாபி என்றே நினைக்கின்றனர். வாப்பா தன்னை வஹாபி என்றெல்லாம் கருதவில்லை. ஆனால் உண்மையான இறை நம்பிக்கை கொண்டவர்களுக்கு இப்படியான மூடநம்பிக்கைகள் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

நாவலின் முக்கியமான கதாபாத்திரமாக மம்மதும்மா வலம் வருகிறாள். சில கதாபாத்திரங்கள் படைப்பாளிகளின் கற்பனைகள், திறமைகளை எல்லாம் தாண்டி பிரம்மாண்ட வடிவம் எடுப்பதுண்டு. அப்படிப்பட்ட ஒரு பிரமிப்பூட்டும் படைப்புதான் மம்மதும்மா. தமிழ் புனைவிலக்கியம் உருவாக்கியுள்ள பல அரிய பெண் கதாபாத்திரங்களில் மம்மதும்மாவும் ஒருவர் என்பதில் ஐயமில்லை.  மம்மதும்மா குடியிருக்க வீடின்றி அஞ்சுவண்ணம் தெரு வீட்டுத் திண்ணைகளில் குடியிருந்து வாழ்நாட்களைக் கழிக்கிறாள்.  தைக்கா பள்ளிவாசலில் அருகில் இருக்கும் குழாயடிதான் அவள் இருப்பு. வீடுகளுக்கு தண்ணீர் எடுத்துக் கொடுத்து பிழைப்பை ஓட்டுகிறாள். அவளின் ஆயுதம் சுட்டெரிக்கும் வார்த்தைகள்தான். ஊர்ப் பெண்கள் அனைவரின் பலவீனங்களையும், ரகசியங்களையும் அறிந்தவள். இதனால் எல்லோரும் அவளிடம் பயத்துடனேயே பழகுகிறார்கள்.

ஒரு முறை மேலத்தெருவில் பக்கீர்சா பாட்டு கச்சேரி நடக்கிறது. கச்சேரி கேட்கும் ஆர்வத்துடன் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு ருகியா வீட்டு திண்ணையில் மம்மதும்மா உட்காருகிறாள். ”எங்க தெருக்காரங்க உட்காரத்தான் திண்ணையைக் கழுவி சுத்தமா வச்சிருக்கேன். அடுத்த ஊட்டு திண்ணையில் போயி உக்காரு” என்று ருகியா சொன்னதும், மம்மதும்மா “ஆமா; நான் உக்காந்திருந்தா கடைத்தெரு நொண்டி அலாவுதீன் வருவதற்கு எடஞ்சலா இருக்குமே” என்று சொல்லி ரோசத்துடன் எழுந்து, பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு அஞ்சுவண்ணம் தெருவுக்கே போய்விடுகிறாள். அடுத்த நாள் இரும்புக் கடைக்காரர் வீட்டுக்கு மம்மதும்மா தண்ணீர் எடுத்துச் செல்லும் போது எதிரில் ருகியா தலைப்படவும், “வாரா! பத்தினிச்சி! எங்கே மேஞ்சிட்டு வாராளோ? என்றதும். ’மம்மதும்மாக்கா’ என்று மெல்லிய குரலில் ருகியா அழைக்கிறாள்.  ’என்னா’ என்று இவள் காட்டமாகக் கேட்கவும். “நேத்து தெரியாம சொல்லிப்போட்டேன்; மன்னிச்சிப்புடுங்க அக்கா” என்று சொல்லி கையிலிருந்த காகிதப் பொட்டலத்தை ருகியா நீட்டுகிறாள். ‘என்னது?’ என்றதும், ”சிங்கப்பூர் சாரியும், மண்டையடி தைலமும் இருக்குக்கா”, என்று சொல்லிக் கொடுக்கிறாள். இப்படிப் பல பெண்களும் மம்மதும்மாவிடம் அடிக்கடி சரணடைவதுண்டு. இதுபோன்ற மெல்லிய நகைச்சுவை நாவலில் ஆங்காங்கே மிளிர்கின்றன.

மம்மதும்மாவின் கதை தைக்கா பள்ளிவாசலின் எதிர் வீட்டில் இருக்கும் பக்கீர்பாவா சாகிப் ஒருவருக்கு மட்டுமே தெரியும்.   போர்ச்சுக்கீசியர்கள் காயல்பட்டணம் வந்து இந்தியாவின் கிழக்குக் கரையையும் கைப்பற்ற நினைக்கிறார்கள். அப்துல் மரைக்காயர்  படையைத் திரட்டி அவர்களை விரட்டி அடிக்கிறார். இந்த நாஞ்சில்நாட்டு இளைஞர்கள் சிலர் வெள்ளைக்காரர்களை எதிர்த்துப் போரிடக் கேரளக் கடற்கரைக்கும் செல்கிறார்கள். மாப்ளா படையில் சேர்ந்து வெள்ளையர்களை வெட்டி வீழ்த்தி தானும் வீர மரணம் அடைந்த விடுதலைப் போராளி அயம் மாதாஜியின் மகள்தான் மம்மதும்மா என்ற வரலாற்று உண்மை பக்கீர்பாவாவுக்கு மட்டுமே தெரியும். விடுதலைப் போராட்டத்தின் மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட பகுதிகளையும் தேடி எடுத்து தன்னுடைய புனைகதையில்  சேர்த்திருப்பது மீரானின் வரலாற்று மீதான அக்கறையன்றி வேறென்ன. தன்னுடைய வெறுமையிலும், வறுமையிலும் யாருக்கும் பயப்படாமல் வாழும் மம்மதும்மா தன் வீர பாரம்பரியத்தின் எச்சமாகவே வாழ்கிறாள்.

அஞ்சுவண்ணம் தெரு மக்கள் ஐதீகத்தைக் கடைப்பிடிப்பதில் கவனமாக இருக்கிறார்கள். திருநபியின் விண்ணுலகப் பயணத்தைப் பற்றிய காப்பியமான ‘மெஹராஜ் மாலை’ இயற்றிய ஆலிப் புலவருடைய வாரிசு குவாஜா அப்துல் லத்தீப் ஹஜ்ரத் அவர்களோடுதான் வாழ்கிறார். மறைந்த இறை நேசர்களின் அரிய செயல்களையும், ’மெஹராஜ் மாலை’யின் மகத்துவத்தையும் மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருப்பது தனது கடமை என்று நினைக்கிறார் ஹஜரத். தைக்கா பள்ளிவாசலில் தொழுகை நடத்தும் மைதீன் பிச்சை மோதீனின் மரணம் அஞ்சுவண்ணம் தெரு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது. தொழுகையை முடித்துவிட்டு பள்ளிவாசல் படிக்கட்டில் இறங்கும்போது பாம்பு கடித்து அதே இடத்தில் சாய்கிறார். வாழ் நாளெல்லாம் பள்ளிவாசல் இருளில் மூழ்கிவிடாமல் தினமும் விளக்குப் பற்றவைத்து ஒளியூட்டிய மைதீன் பிச்சை மோதினுடைய ரூஹை (உயிரை) அல்லாஹ் பள்ளிவாசல் படிக்கட்டிலேயே வைத்து எடுத்தது எல்லோருக்கும் அதிர்ச்சியைக் கொடுக்கிறது. அல்லாஹ் அவனுடைய ஆயுள் புத்தகத்தில் ஒவ்வொருவருக்கும் எத்தனை ஆண்டு, எத்தனை மாதம், எத்தனை நாள், எத்தனை நிமிடம் என்று எழுதி வைத்திருக்கிறான். அந்த நேரம் வந்ததும் ரூஹை எடுத்து விடுவான். ஆயுளை நீட்டித் தா என்று இரவு பகலாக விழுந்தடித்து தொழுது துஆ கேட்டாலும் அல்லாஹ் நீட்டித்தரவே மாட்டான். ஆயுளை நீட்டிக் கேட்பது அறியாமை; வீணான துஆ ஆகும் என்றெண்ணி ஆறுதல் அடைகிறார்கள் அஞ்சுவண்ணம் தெரு மக்கள்.

Image

நாவலில் சமகால வரலாற்றையும் மீரான் சொல்லத் தவறவில்லை.  1992இல் நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது பாபர் மசூதி இடிக்கப்படுவதை இந்திய ராணுவம் அமைதியுடன் நின்று வேடிக்கை பார்த்த கொடுமையையும் பதிவு செய்கிறார். ஆந்திராவில் எங்கோ குண்டு வெடிக்கிறது. அந்த குண்டு வெடிப்பில் ஈடுபட்டிருந்ததாக நவாஸ் ஹோட்டலில் டீ அடிச்சிட்டிருந்த ரவூப் பயலையும், தெருத்தெருவாகக் கோரப்பாய் வித்துக்கொண்டிருந்த ஹனிபா பயலையும் போலீஸ் பிடித்துக்கொண்டு போகிறது. பகல் முழுவதும் நாயா உழைத்த களைப்பில் கொஞ்சம் காற்று வாங்க கலுங்கில் உட்கார்ந்திருந்த அப்பாவிப் பயலுக இரண்டு பேரையும் போலீஸ் பிடிச்சிக் கொண்டு போய் குண்டு வெடிப்பு கேசில் மாட்டிவிடுகிறது. நான்கு மாதங்கள் கழித்து ”ஆந்திரா குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளான அப்துல் ரவூபும், முகம்மது ஹனிபாவும் போலீஸ் பாதுகாப்பிலிருந்து தப்பி ஓடினார்கள். பின்னால் விரட்டிச் சென்ற காவல்துறையினருடன் காட்டுப்பகுதியில் நடந்த மோதலில் தற்காப்புக்காக போலீஸ் சுட்டதில் இரு தீவிரவாதிகளும் அதே இடத்தில் மாண்டனர்” என்ற செய்தி வருகிறது.

அஞ்சுவண்ணம் தெருவைச் சேர்ந்த சாவல் எனும் இளைஞன் சவூதி அரேபியாவிலிருந்து திரும்பி வரும்போது தாடியுடன் வருகிறான். வேம்படிப் பள்ளிவாசலில் எல்லாரும் தொப்பி போட்டு தொழும் போது சாவல் மட்டும் தொப்பியில்லாமல் தொழுதது அனைவரையும் கோபமூட்டுகிறது. அபுசாலி அவனைச் சட்டையைப் பிடிச்சு நிப்பாட்டிக் கேட்கிறான். “ஏம்பிலே தொப்பி போடாம தொழ வந்த?” அதற்கு அவன் அளித்த பதில் எல்லோரையும் அதிரவைக்கிறது. “நான் இப்பம் சுத்த தவ்ஹீத் வாதி. அவுலியாக்கள் பேரை வைக்கக்கூடாது! கபர்களை உடைக்கணும்! மவ்லுது ஓதக் கூடாது! ’சீறாப்புராணம்’, ’மெஹராஜ் மாலை’, ’மஸ்தான் பாடல்’ எல்லாத்தையும் தீ வைக்கணும் மக்கா!…. இதெல்லாம் எதுக்கு?” என்கிறான். சாவலும் அவன் சேக்காளி அபூஜலீல் இருவரும் வேம்படிப் பள்ளிவாசலை இடித்து தவ்ஹீத்துகளுக்கான பள்ளிவாசலைக் கட்டும் வேலையை ஆரம்பிக்கிறார்கள். சாவல் பணம் திரட்டுகிறான். சவூதியிலிருந்து பணம் வந்து கொட்டுகிறது.  அரசியலுக்குள் மதத்தையும், சாதியையும் புகுத்தினால் அரசியல்வாதிகளுக்கு நன்மை. அதேபோல் மதத்தை அரசியலாக்கினால் போலி மதவாதிகளுக்கு நன்மை. இளைஞர்கள் மத்தியில் மதவெறியை ஊட்டி அது வழியாகப் பொருளாதார நன்மைகள் அடையலாம். மதமும், சாதியும் இன்று வியாபாரப் பொருளாக மாறிவிட்ட சூழலில் சாவல், அபூஜலீல் போன்றவர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்! தவ்ஹீத்துகள், சுன்னத்துகள் என்று ஊர் இரண்டுபட்ட பின்னர் தினமும் காலையிலும், மாலையிலும் போலீஸ் ஜீப்பும் வேனும் அஞ்சுவண்ணம் தெருவுக்கு வந்தவண்ணமாகவே இருக்கின்றன.

தைக்கா பள்ளிவாசல் கந்தூரி விழாவின் போது தவ்ஹீத்வாதிகள் இரண்டு மூணு வேன்களில் வந்திறங்குகிறார்கள். சுன்னத் ஜமா அத்தார்களுக்கும், தவ்ஹீத்வாதிகளுக்கும் வாக்குவாதம் நடக்கிறது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாகிறது. கொடிக்கம்பம் வெட்டி முறிக்கப்படுகிறது. நூற்றாண்டு காலமாக நடந்துவந்த கந்தூரி விழா நின்று போகிறது. ஊரே அல்லோகலப்படுகிறது. மைதீன் பிச்சை மோதீன் மனம் நொந்து போய் தலையில் அடித்துக்கொண்டு பள்ளிவாசலில் உட்காருகிறார். அப்போதும் மம்மதும்மா தான் மீன் வெட்டும் கத்தியைக் கையில் எடுத்துக்கொண்டு சுன்னத் ஜமாத் வாலிபர்களைப் பார்த்து “கொடிக்கம்பத்தை உயர்த்தி நாட்டிக் கொடி கட்டுங்கடா!” என்று தைரியம் கொடுக்கிறாள். அவள் கொடுத்த ஊக்கத்தில் சுன்னத் ஜமாத் வாலிபர்கள் இரண்டாகத் துண்டிக்கப்பட்ட கொடிக்கம்பத்தைத் தூக்க முயலும்போது போலீஸ் வேன் அஞ்சுவண்ணம் தெருவுக்குள் விரைந்து வருவதைப் பார்த்து ஓட்டம் பிடிக்கின்றனர். மம்மதும்மா மட்டும் “போலீஸ் வரட்டும் நான் பேசுறேன்” என்று நிற்கிறாள். இதுபோன்ற மற்றுமொரு சண்டையில் அப்பாவி இஸ்மாயில் கத்திக் குத்துப்பட்டு இறக்கிறான். கத்தியால் குத்தியவன் எந்த அணியென்று தெரியவில்லை. ஆனால் விழுந்து மடிந்தவன் எந்த இயக்கத்தையும் சேராத சுக்குக் காப்பி விற்கும் அப்பாவிப் பயல் இஸ்மாயில்.

Image

அஞ்சுவண்ணம் தெரு தைக்கா பள்ளிவாசல் அருகில் இருக்கும் ‘தாருல் சஹினா’ வீட்டில் குடியேறிய வாப்பாவின் மகள் குடும்பம் அப்படி ஒன்றும் தாழ்ந்துவிடவில்லை. வாப்பாவின் பேரப்பிள்ளைகள் அனைத்தும் படித்துப் பெரும் பதவியில் இருக்கிறார்கள். அஞ்சுவண்ணம் தெருவின் தறிகளுக்கடியில் இன்னும் எத்தனை கதைகள் இருந்தனவோ? அவற்றைச் சொல்லிட தோப்பில் முகம்மது மீரான்தான்  நம்மிடையே இல்லையே!

                                      — பெ.விஜயகுமார்.

                   —————————————————-

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *