“தரையில் விழுந்த மீனைப்போல் துடிக்க வேண்டும் சொற்கள். நான்கு வரிகளில் உச்சம் தொடவேண்டும். இல்லையெனில் சராசரித் துணுக்குகளின் தரத்துக்குத் தாழ்ந்துவிடும் குறுங்கவிதை.” தான் சொன்ன இலக்கணத்தை கவிதைக்குக் கவிதை நிரூபித்துக் காட்ட முயன்றிருப்பவர் கவிஞர் கோ.வசந்தகுமாரன்.
மனிதன் என்பது புனைபெயர் மூலம் தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஒரு கவிதை நாற்காலியை நிரந்தரமாக்கிக் கொண்டவர். வாழ்க்கையை அநாயசமாகத் தன் வரிகளில் அள்ளித் தெளிப்பவர்; அள்ளித் தெளித்ததெல்லாம் அற்புதக் கோலங்களாகிவிடும்.
நெடுங்கவிதைகளிலிருந்து குறுங்கவிதைகளை நோக்கிய இவர் பயணம், ‘சதுரப் பிரபஞ்சம்” தொகுப்பில் தொடங்கியிருக்கிறது. இவரது குறுங்கவிதைகளில் நறுக்குத் தெறித்த கூர்மை. சொல் மீன்களைக் கவ்விக் கொள்வதில் மீன்கொத்திப் பறவையின் துல்லியம், கவிதை வேட்டையில் கவித்துவத்தைக் குறிவைத்தப் புலிப் பாய்ச்சல் இவற்றை அவதானிக்க முடிகிறது. சதுரப் பிரபஞ்சம் தொகுப்பைப் பற்றி எழுதுகிறபோது இவரைத் தமிழகத்தின் குஞ்ஞுண்ணி மாஸ்டர் என்று எழுதிய எனது விமர்சனம் ஞாபகத்திற்கு வருகிறது. இவரது சமீபத்துத் தொகுப்பு “அரூப நர்த்தனம்”.
வசந்தகுமாரனின் கவிதைக் கவனம் குறுங்கவிதைகள் பக்கம் திரும்பியிருப்பதை அவருடைய சொற்களிலேயே கவனிக்க முடியும்:
“உண்மையில் சொல்லப்போனால் நீண்ட கவிதைகளை நான் வாசிப்பதில்லை. தொப்பை விழுந்த பேரிளம் பெண்களைப் போன்றவை அவை. எனக்கோ கைவளையை ஒட்டியாணமாக அணியும் பெண்களைப் போன்றிருக்கும்
குறுங்கவிதைகளைத்தான் பிடிக்கும்.”
நீலம் பாய்ந்த அத்துணை பெரிய வானத்தில் ஒரு சிறிய வானவில்தானே கவனத்தை ஈர்த்துவிடுகிறது! கண்களைக் கவ்விக் கொள்கிற விசை ஒரு சிறிய மச்சத்திற்குத்தானே இருக்கிறது!
இவரது கவிதைப் பயணத்தைப் பற்றிய அவரது சுய அறிக்கையைப் பார்க்கலாம்:
“பயணம் தொடர்கிறேன்
தாகத்திற்கு என் கண்ணீரை
நானே குடித்துக் கொண்டு
பயத்திற்கு என் கைகளை
நானே பற்றிக் கொண்டு
பசிக்கு என் புலன்களை
நானே ருசித்துக் கொண்டு
காமத்திற்கு என் குறியை
நானே புணர்ந்து கொண்டு
இடுகாட்டுக்கு என் உடலை
நானே சுமந்துகொண்டு.”
சுவாரசியமாக இந்தத் தொகுப்பின் மிக நீளமான கவிதை இதுதான். இந்தக் கவிதையிலேயே ஒரு பெருங்கவிதைக்காரனின் தத்துவார்த்தப் பார்வையை அவதானிக்க முடியும்.
ஒரு தேர்ந்த கவிஞனின் தெறிப்பைத் தொகுப்பு முழுவதும் காண முடியும். கனவுகளின் கவிதை அவதாரம அல்லர் இவர். ஆனால் வழங்குவதெல்லாம் தத்துவ வாமனர்கள். வாழ்க்கையைப் பற்றிய பார்வைதான் இவரது கவிதை வள்ளல்தன்மைக்குக் காரணம். தனது அம்பறாத் தூணியில் நிறைய அனுபவ அம்புகளைச் சேமித்து வைத்திருக்கிறார்; மறைந்திருந்து தாக்கவில்லை. மனம் என்னும் மராமரங்களைத் துளைத்துச் செல்கிறது. க்ஷணத்தில் நடந்தேறிவிடுகிறது வாழ்க்கையின் வாலிவதம்.
“இத்தினியூண்டு
நக்கக் கிடைத்த
ஊறுகாய்
இந்த வாழ்க்கை.”
இவரது ஊறுகாய் நமக்கு உணவாகிவிடுகிறது.
மனிதன் மீதான எள்ளல் ஒரு சிறந்த பகடியாக உருமாற்றமடைகிறது….
“புழுவை
வண்ணத்துப்பூச்சியாக்குகிற
காலம்தான்
மனிதனைப் புழுவாகவும்
ஆக்குகிறது.”
இதே பகடிதான் வாழ்க்கையின் சுகதுக்கங்கள் பற்றிய மதிப்பீடுகளையும் உருவாக்குகிறது…
“எனக்கு
நல்ல பெயரும் உண்டு
கெட்ட பெயரும் உண்டு.
நல்ல பெயர்
என் திறமையால் வந்தது.
கெட்ட பெயர்
பிறர் திறமையால் வந்தது.”
சொல்ல வந்ததைப் பளிச்செனச் சொல்லிவிடுகிற பட்டவர்த்தனம்தான் வசந்தகுமாரனின் கவிதை முத்திரை. சொல்லுவதில் ஒரு வித சாமர்த்தியம்; ஒரு வித சமத்காரம்!
“புத்தனை நான்
வணங்குவதில்லை.
ஆசைகள் துறந்தவன்
வரங்களையா வைத்திருக்கப்போகிறான்
வழங்க?”
“கடவுள் சிலநேரம்
ராட்சசிகளை
அழகாகப் படைத்துவிடுகிறான்
தேவதைகள்
பொறாமைப்படும் அளவுக்கு.”
தன் முதுகிலிருக்கும் அழுக்கு தனக்குத் தெரிவதில்லை என்கிற பழைய சொலவடைதான். அதை நவீனத் தொழில்நுட்பத்தால் புதிய படிமமாக மாற்றிவிடுகிறார். இயல்பில், மனிதன் சுயபரிசோதனை செய்து கொள்வதேயில்லை; தவறுகளை அறிந்துகொள்ளத் தயாரில்லை. அடுத்தவரைப் பழிசொல்லும் அற்பத்தனத்திற்குக் காரணம் அவனது அகங்காரம். வாழ்க்கை என்னும் விமானம் விபத்துக்குள்ளானது எப்படி என்று ஆராய்ச்சி செய்ய மனிதர்கள் தயாரில்லை. கறுப்புப் பெட்டி
சொல்லும் கதைகளைக் கேட்க அவர்களிடம் காதுகளில்லை.
“ஒரு கறுப்புப் பெட்டி உண்டு.
றெக்கைகள் முறிந்து
காலக் கடலில்
அவன் விழுகிறபோது
யாரும் அதைத்
தேடுவதேயில்லை.”
நாத்திகக் கொள்கையின் உச்சத்தில் பயணம் செய்த பேராசிரியர் பெரியார்தாசன் இஸ்லாம் மதத்தைத் தழுவியது அன்றைக்குத் தலைப்புச் செய்தியாக மாறியது. எப்படி நிகழ்ந்தது? அவர் சொன்ன ஒரே வாசகம்….
“கடவுள் இல்லையென்றுதான் காலமெல்லாம் சொல்லிவந்தேன். இப்போது நான் ஏன் ஆத்திகத்திற்கு மாறிவிட்டேன் தெரியுமா? கடவுள் இல்லையென்றால் பரவாயில்லை. ஒருவேளை இருந்துவிட்டால்….. என் வாழ்நாள் முழுவதும் எதைச் சொல்லிவந்தேனோ அது முற்றிலும் பொய்யாகிவிடும் அல்லவா? அந்த ஒரு விஷயம்தான் நான் ஆத்திகத்திற்கு மாறியதன் அடிப்படைக் காரணம். பணப்பெட்டி மாறியதுதான் காரணம் என்று பலர் சொல்கிறார்கள்”
கவிஞருக்குள் பெரியார்தாசன் பேசுகிறார்…
“இல்லையென்று சொல்வதை
நிறுத்திக் கொண்டேன்
கடவுள் ஒருவேளை
இருந்து தொலைத்துவிட்டால்
என்ன செய்வது?”
அவசியமே இல்லாமல் வந்து விழுந்த ‘என்ன செய்வது?’ என்ற வார்த்தைகளை வைத்துக் கொண்டு நாம் என்ன செய்வது?
நட்சத்திரங்கள் மட்டும் கவிதைகள் இல்லை. ஒரு நட்சத்திரத்திற்கும் மற்றொரு நட்சத்திரத்திற்கும் இடையிலுள்ள இருட்டுதான் எழுதாத கவிதை. எழுதாத கவிதைக்குத்தான் அடர்த்தி அதிகம். சொல்லாதவற்றைச் சொல்ல வைப்பவைச் சுடர்மிகும் கவிதைகள். அப்படியான சில கவிதைகளுக்கு உதாரணமாக ஒன்று…
“தூண்டிலின்
இரு முனைகளிலும்
இரை.”
புழுவுக்கும் மனிதனுக்கும் இடையில் பசியின் இடைவெளியா? மரணத்தின் பள்ளத்தாக்கா? பசியே மரணமா? நான்கு சொற்களுக்குள் அடைபட மறுக்கும் நானாவிதமான அர்த்தங்கள். கால காலமாகக் கவிதைத் தக்கையின் அசைவிற்காகக் காத்திருக்கும் நம் கண்கள். அப்படியும் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறோம்; “யாருக்கு யார் இரை?”
கவித்துவ அழகில் காணாமல் போய்விடுகிற சில துவைக்காத மேலோட்டமான சமூகப் பார்வை, திரும்பத் திரும்பப் பயன்படுத்தப்படும் கவியாட்சி என்று ஒன்றோ இரண்டோ இருக்கக் கூடும். உண்ட உணவுக்கு அந்தக் கருவேப்பிலைகளும் சுவையூட்டிவிடுகின்றன!
தன் சொற்களின் படகுகள் கொண்டே வாழ்க்கைக் கடலின் அலைகளை அளந்துவிடுகிற அசாதரணம், ஒரு மேகத்தையே உருமாற்றி வானத்தை வெவ்வேறு உருவங்களின் திரைச்சீலையாய் மாற்றிவிடுகிற கவித்துவம், பறவை விமானமாகிப் பறக்கிற அனுபவ பாவனை என்று விதவிதமான பயணங்களை நிகழ்த்துகிறான் இந்தக் கவிஞன்.
வாழ்க்கையின் சகலவித இடிபாடுகளுக்கிடையே நசுங்கி நசுங்கி உயிர் வாழ்கிற கரப்பான் பூச்சிகளாக மனிதர்கள் மாறிவிட்டார்கள்.
வாழ்க்கையின் தவிர்க்க முடியா முரண்களுடன் தள்ளாடித் தள்ளாடி நடக்கிறார்கள்… இதழ்கள் ஈர்க்கின்றன; முட்கள் குத்துகின்றன.
“பறிக்காதே என்று முட்களாலும்
முத்தமிடு என்று இதழ்களாலும்
இரண்டு கட்டளைகளை
இடுகிறது ரோஜா”.
எல்லோரையும் போலவும்
இருந்து பார்த்துவிட்டேன்
என்னைப் போல்தான்
இருக்க முடியவில்லை
என்ற இயலாமையின் சுயபச்சாதாபம்,
அவனைத் தெரியும்
இவனைத் தெரியும்
எல்லாம் சரிதான்
உன்னைத் தெரியுமா
உனக்கு?
என்று சொடுக்குகிற சாட்டையடி.
பின்னால் வருபவனுக்கு வழிவிட அலைகளிடம் கற்றுக்கொள்கிற இயற்கை ஞானம், பூக்களின் வாசத்தைச் செதுக்குகிற கவிதை உளிக்காக ஏங்குகிற தியானம், உயரத்திலிருந்து விழுந்தால் உடையாமலிருக்க இறகாக மாறிவிடுகிற பக்குவம், உட்கார்ந்தவன் மீதே சாய்ந்துகொள்கிற சந்தர்ப்பவாத நாற்காலிகளை அடையாளம் காணுகிற அறிவார்த்தம், இறந்தவனுக்காகக் கையில் வைத்திருக்கும் சவப்பெட்டி அளவுகோல், மீனின் நிழலுக்காகத் தூண்டில்போடும் கவிதை மெனக்கிடல், ஜனனம் மரணம் குறித்தத் தத்துவம் என்று கவிஞர் வாழ்க்கையின் சகல பகுதிகளிலும் பிரயாணம் செய்கிறார்.
“தேநீர் பருகுதல்
பழக்கமல்ல
பிரார்த்தனை”.
என்கிறார். எனக்குத் தோன்றுகிறது இவருக்குக் “கவிதை எழுதுதல் பழக்கமல்ல, தியானம்”. இன்னொன்றும் தோன்றுகிறது இவரிடம் இந்திய ‘ஜென்’தனம் இருக்கிறது போலும்!
–நா.வே.அருள்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.