(நாகர்களின் விடுதலை வேட்கை)
`என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்?’ என்று பாடினான் பாரதி. இந்த வரி இன்றைக்கும் நாகாலாந்து மக்களின் மனதில் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு கடந்த பல தசாப்தங்களாக அங்கு நடைபெற்று வரும் போராட்டங்களும், புரட்சிகளுமே சாட்சி ஆகும். இந்தியாவின் `ஏழு சகோதரிகள்’ என அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று நாகாலாந்து.
1832 ஆம் ஆண்டிலிருந்து 1947 வரை இந்தியாவில் இருந்த மற்ற பிரதேசங்களைப் போல நாகாலாந்தும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்தது. 1929 ஆம் ஆண்டு சைமன் கமிஷனிடம் நாகா கிளப் என்கிற அமைப்பு, `நாகாக்கள் இந்துக்களும் இல்லை, முஸ்லீம்களும் இல்லை. எனவே இந்திய ஒன்றியத்தில் சேர்க்கப்படக்கூடாது’ என கோரிக்கை வைக்கிறது. இதை சைமன் கமிஷன் ஏற்க மறுத்து விடுகிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு நாகாலாந்தை இந்தியா தன்னோடு இணைத்துக் கொண்டாலும் தனிக் கலாச்சாரம், பண்பாடு, மொழி, பழக்க வழக்கங்களைக் கொண்ட நாகர்கள் இந்தியாவோடு சேர விரும்பவில்லை. அவர்களின் சுதந்திர வேட்கை அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதை அவர்களும் தொடர்ந்து பல வழிகளில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
வடகிழக்கு மாநிலங்களை, குறிப்பாக நாகாலாந்தின் இலக்கியப் படைப்புகளை தமிழில் பார்த்ததாக நினைவில்லை. அப்படியே வெளிவந்திருந்தாலும் அவற்றை சாகித்திய அகாதெமி அல்லது நேஷனல் புக் ட்ரஸ்ட் ஆகிய அமைப்புகள் வெளியிட்டிருக்கக்கூடும்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பன்முக மேடை என்கிற பதிப்பகம் `பிட்டர் வார்ம்வுட் (Bitter Wormwood)’ என்கிற பெயரில் நாகாலாந்தைச் சேர்ந்த பிரபல கவிஞரும் எழுத்தாளருமான ஈஸ்டரைன் கைர் (Easterine Kire) எழுதிய நாவலை முனைவர் பேரா. ச வின்செண்ட் அவர்களின் மொழியாக்கத்தில் தமிழில் வெளியிட்டது. இந்த மொழியாக்க நாவல் இப்பதிப்பகத்தின் நூறாவது நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நூல் நாகாலாந்தின் விடுதலை வேண்டி போராடிய தலைவர்களைப் பற்றியோ, போராட்டங்களில் ஈடுபட்டு உயிரிழந்த வீரர்கள் பற்றியதோ இல்லை. மாறாக, இந்தப் போராட்டங்களின் ஊடே நான்கு தலைமுறையாக வாழ்ந்து வருகிற சாமான்யர்களைப் பற்றியது.
இந்த நாவல் 2007 ஆம் ஆண்டு கோஹிமா நகரின் சந்தைப் பகுதியில் பட்டப்பகலில் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியான ஓர் இளைஞனின் கொலையிலிருந்து ஆரம்பமாகிறது. துப்பாக்கியால் சுட்டவன் சாதாரணமாக அங்கிருந்து அகன்று செல்கிறான். குண்டடிபட்டு இறந்த இளைஞன் சாதாரண குடிமகனா இல்லை போராடிவரும் நாகர்களின் குழுக்களில் ஏதோவொன்றைச் சேர்ந்தவனா எனத் தெரியவில்லை. இதைப் பார்த்த 70 வயதான மோசேக்கு அவரது வாழ்க்கை ஊடான கடந்த கால சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன.
அவர் பிறந்த 1937 ஆம் ஆண்டிலிருந்து நாவல் விரிகிறது. மோசேவின் அம்மா விலாயு, அப்பா லூஓ, லூஓ-வின் அம்மா கிரியானோ. இவர்கள் தங்களுடைய வயலில் வேலை செய்து வருகின்றனர். ஒரு நாள் இவர்கள் இனம் சார்ந்த இடமொன்றுக்கு புதுக்கதவு செய்வதற்கென்று முனிவர் ஒருவரின் ஆலோசனைப்படி காட்டுக்குள் சென்று மரம் கொண்டு வரச் செல்லும் குழுவோடு லூஓ செல்கிறார். எதிர்பாராதவிதமாக, மரம் வெட்டும் போது அது அவர் மேல் விழ, அவர் இறந்து போகிறார். மோசே-க்கு இதெல்லாம் புரியாத வயது.
1942 ஆம் ஆண்டு ஜப்பானியர்கள் நாகலாந்துக்குப் படையெடுத்து வர அதற்குப் பயந்து மேசே, அவனுடைய அம்மா, பாட்டி ஆகியோர் ருக்ரோமா என்கிற கிராமத்துக்கு புலம் பெயர்கிறார்கள். இரண்டு வருடங்களில் போர் முடிவுக்கு வருகிறது. மேசேக்கு வயது 7. இவனும், பக்கத்துவீட்டைச் சேர்ந்த நெய்டோ என்கிற சிறுவனும் இணைபிரியாத நண்பர்கள் ஆகிறார்கள். இது 2007 ஆம் ஆண்டு பீகாரி ஒருவனைக் காப்பாற்ற போய் மோசே குண்டடிபட்டு சாகும்வரை தொடர்கிறது.
வளர்ந்து வரும் மோசேக்கு வானொலி மீது ஓர் இனம் புரியாத காதல். எனவே நகரத்துக்குச் சென்று 22 ரூபாய் கொடுத்து வானொலி வாங்கி வருகிறான். வீட்டிற்கு வந்தவுடன் அதை ஆன் செய்ய ஓர் ஆண் குரல், ` வெளியே போகும் பிரிட்டிஷ் அரசு இரண்டு நாடுகளை விட்டுச் செல்கிறது. ஒன்று இந்தியா, இன்னொன்று பர்மா. பிரிட்டனின் தெற்கு ஆசியப் பேரரசு உடைந்ததால் உருவான புதிய சொல் `பிரிவினை’. இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு தனி நாடுகளாகப் பிரிக்கப்படுகின்றன’ என செய்தி வாசித்தவர் கூறுகிறார். மோசேக்கு வானொலி கேட்பதின் மூலம் உலக விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்ததோடு ஆங்கிலம் கற்றுக் கொள்ளவும் உதவியது.
1948 ஜனவரி 30, வானொலியில் காந்தி சுடப்பட்ட செய்தியைக் கேட்டு அம்மாவிடமும், பாட்டியிடமும் கூற அவர்கள், `அவரைச் சுட்டவர் யார்? வெள்ளைப்படை வீரனா?” எனக் கேட்க அதற்கு மோசே, `இல்லை. அவன் ஓர் இந்து என்று சொல்கிறார்கள். வெள்ளையன் இல்லை…..’ எனக் கூறுகிறான். (அதே இந்துத்துவவாதிகள் அக்டோபர் 2 அன்று தமிழகத்தில் 50 இடங்களில் பேரணி போக இருக்கிறார்கள். என்ன ஒரு நகைமுரண்!)
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முதல்நாள், ஆகஸ்ட் 14, நாகாக்கள் விடுதலை நாள் அறிவிப்பு செய்ய அதை காந்தி வரவேற்கிறார். அப்போது அசாம் ஆளுநராக இருந்த சர் அக்பர் ஹதாரிக்கும் நாகா தேசியக் கவுன்சிலுக்கும் ஏற்பட்ட 9 அம்ச கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படாமல் நாகா பகுதிகள் அசாம் மாநிலத்தின் ஒரு மாவட்டமாக ஆக்கப்படுகின்றன.
1951 ஆம் ஆண்டு நாகா பொது வாக்கெடுப்பில் அதனுடைய இறையாண்மைக்கு அம்மக்கள் ஆதரவு தெரிவித்தாலும் அன்றைய இந்திய நாடாளுமன்றம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை
மேசேவும் நெய்டாவும் அண்டர்கிரவுண்ட் இயக்கத்தில் சேர்கிறார்கள். இந்திய ராணுவத்துக்கும் நாகா விடுதலைக் குழுக்களுக்கும் இடையே சதா சண்டை நடந்து கொண்டிருந்தது. தமிழ் ஈழம் வேண்டி ஒரு குழுவிலிருந்து பல குழுக்கள் உருவானது போல நாகர்களிடையேயும் நடைபெறுகிறது. குழுக்களுக்குள்ளான சண்டையை பொது எதிரியான இந்திய ராணுவம் பயன்படுத்திக் கொள்கிறது.
இந்திய விடுதலை நாளுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே நாகா அண்டர்கிரவுண்ட் இயக்கம் கோகிமா விளையாட்டரங்கில் நாகா கொடியை ஏற்றுவதாகத் திட்டமிடத் தொடங்கியது. குறிப்பிட்ட நாளன்று, கொடி ஒரு மணி நேரம் பறக்க, கூடியிருந்தவர்கள் `நாகாலாந்து வாழ்க!” என கோஷமிடுகின்றனர். சில நிமிடங்களில் இராணுவ ஜீப் வர, அதிலிருந்தவர்கள் கொடியைப் பார்த்து தொடர்ந்து சுட அது கிழிசல்களுடன் விகாரமாக காட்சியளித்தது, நாகர்களின் வாழ்க்கையைப் போல!
இப்படியாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இந்திய ராணுவத்துக்கும் நாகா போராளிகளுக்குமான சண்டை நடந்து வருகிறது. மேசேவும் அண்டர்கிரவுண்டிலிருந்து வெளியேறி நாகர்களின் போராட்டங்களில் பங்கேற்று ரைஃபிள் பெண் என அறியப்பட்ட நெய்ல்ஹானோவைத் திருமணம் செய்து கொண்டு ஒரு சிறிய கடையொன்றை ஆரம்பித்து வாழ்க்கையை ஓட்டி வருகிறார்.
1963 ஆம் ஆண்டு நாகாலாந்து இந்தியாவின் ஒரு மாநிலமாக ஆகப் போகிறது என்கிற சோகமான செய்தி அண்டர்கிரவுண்டுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மேசேவுக்கும் நெய்டோவுக்கும் அவர்களைச் சுற்றி என்ன நடக்கிறதென்று புரியவில்லை. இந்திய அரசு நாகர்களிடையே பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாள ஆரம்பிக்கிறது.
1964ல் நெய்ல்ஹானோவுக்கு சபுனோ என்கிற பெண்குழந்தை பிறக்க சிறிது நாளில் மேசேயின் அம்மா இறந்து விடுகிறார். போராட்டங்களுக்கு மத்தியில் அச்சத்திற்கிடையே வாழ்க்கை நடந்து கொண்டிருந்தது.
சிறிது காலத்துக்குப் பின் சபுனோவுக்கும் நெய்டோவின் மகன் விலால்ஹோவுக்கும் திருமணம் நடக்கிறது. அவ்வப்போது கொலைகள், துப்பாக்கிச்சூடுகள் நடந்தவண்ணம் இருக்கிறது. சபுனோவுக்கு ஆண்குழந்தை பிறக்கிறது அவனுக்கு நெய்போ என பெயரிடுகின்றனர்.
1990களின் மத்தியில் இந்திய அரசுக்கும் `நேஷனல் சோஷலிஸ்ட் கவுன்சில் ஆஃப் நாகாலந்து’க்கு இடையே மட்டுமே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அரசு மற்ற அமைப்புகளைக் கண்டு கொள்ளவில்லை. (இந்த பிரித்தாளும் சூழ்ச்சியைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்த பலரில் ஒருவர் அங்கு ஆளுநராக செயல்பட்டு வந்தவரும் தற்போது தமிழகத்தில் ஆளுநராக செயல்படுபவரும் ஆவார். இவரது ஆளுகையைப் பிடிக்காமால்தான் நாகர்கள் போராடி இவரை அங்கிருந்து வெளியேற்றினர்).
இதன் பின் அங்கு மணிப்பூரைப் போல ஆயுதப்படையினரின் சிறப்பு அதிகார சட்டத்தை (AFSPA) அமலுக்குக் கொண்டு வருகின்றனர். இதை நாகர்கள் எதிர்க்கின்றனர் இவர்களுக்கு மணிப்பூரைச் சேர்ந்த இளம்போராளி இரோம் ஷர்மிளாவின் நடவடிக்கைகள் உத்வேகம் அளிக்கிறது.
நெய்போவும் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு டெல்லியில் இருக்கும் ஸ்ரீராம் கல்லூரிக்கு பி.காம். படிக்கச் செல்கிறான். என்னதான் நாகாலாந்து இந்தியாவைச் சேர்ந்தது என அரசு கூறிவந்தாலும் வடகிழக்கு இந்தியர்களை (நாகர்கள் உட்பட) நகரங்களிலும், கல்லூரி வளாகங்களிலும் நடத்தப்படுவது நெய்போவுக்கு எரிச்சலூட்டுகிறது. வடகிழக்குப் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துவது அவனுள் ஒரு கோபத்தை ஏற்படுத்தி பழிக்குப் பழி வாங்க வேண்டுமென நினைக்கிறான். இவ்வளவு பிரச்சனைகளுக்கிடையே அவனோடு படிக்கும் ராகேஷ் நெருங்கிய நண்பன் ஆகிறான்.
ராகேஷின் தாத்தாவும் ஒரு காலத்தில் இந்திய ராணுவத்தின் சார்பாக நாகாலாந்து வந்து புரட்சிக் குழுக்களை எதிர்த்துப் போராடியவர். அவருக்கு நாகர்களின் மீது நன்மதிப்பு இருக்கிறது. அவர் நெய்போவின் தாத்தா மோசேயை சந்திக்க வேண்டுமென நினைக்கிறார் ஆனால் அது முடியாமலே போய்விடுகிறது.
ராகேஷும் நெய்போவும் படிப்பு முடிந்தபின் நாகாலாந்துக்கு வருகிறார்கள். அப்போது இவர்கள் வசிக்கும் இடத்தில் பீடா கடை வைத்திருக்கும் பீகாரி ஒருவனை ஏதோவொரு நாகர் குழுவைச் சேர்ந்தவர்கள் தாக்க ஆரம்பிக்க அதைப் பார்த்த மோசே அவர்களை விரட்டச் செல்லும்போது அவர் மீது குண்டு பாய அவர் இறந்து விடுகிறார். இது நெய்போவுக்குள் மேலும் கோபத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் அவனுக்கு அவன் தாத்தா எப்போதோ சொன்ன, `நம்மைப் பாதுகாப்பதற்கே சண்டை போடுகிறோம். நம்முடைய விருப்பத்தை மற்றவர்கள் மேல் சுமத்துவதற்காக அல்ல. துப்பாக்கியைக் கையிலெடுப்பவன் தான் சரியான நோக்கங்களுக்காகவே எடுக்கிறோம் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அந்தக் காரணம் அன்பாக இருக்க வேண்டும், வெறுப்பாக இருக்கக்கூடாது’ என்பது நினைவுக்கு வர அமைதியாகிறான்.
பீடா விற்கும் ஜித்துவுக்காக தாத்தா செல்லாமல் இருந்திருந்தால் தாத்தா இந்நேரம் உயிரோடு இருந்திருப்பார் என நெய்போ பாட்டியிடம் கூறுகிறான். அதற்கு அவர், `நான் அப்படி நினைக்கவில்லை. நெய்போ எல்லோருக்கும் ஒரு நேரம் குறிக்கப்பட்டிருக்கிறது என்று நம்புகிறேன். இந்த வழியில் இல்லாவிட்டால் உனது தாத்தா வேறொரு வழியில் அன்று இறந்திருப்பார். அவருக்கு நேரம் முடிந்து விட்டது’ எனக் கூறுகிறார்.
இவன் தாத்தாவின் கல்லறைக்குச் சென்றுவிட்டு வரும் வழியில் அருகில் வளர்ந்திருந்த ஒரு செடியிலிருந்து இலையைப் பறிக்கக் குனிகிறான். அப்போது அவனுடன் இருந்த ராகேஷ் அது என்ன இலை என்று கேட்க, `இதற்குப் பெயர் பிட்டர் வார்ம்வுட். காயம் பட்டாலோ, பூச்சி கடித்தாலோ இந்த மூலிகையைப் பயன்படுத்துகிறோம். நான் சிறுவனாக இருந்த போது, காட்டிற்குப் போகும் வழியில் எனது தாத்தா, `தீய சக்திகளிடமிருந்து இது உன்னைக் காக்கும். அவை உன்னை நெருங்காமல் இந்த இலை பாதுகாப்பு அளிக்கும் என்று சொல்வார்’ என்கிறான்.
இது ஒரு புதிய உருவகம். இன்றைய நாகாக்கள் இதைப் பயன்படுத்த மறந்துவிட்டார்கள் போலும். இதனால்தான் அவர்கள் ஒரு கையறு நிலையில் இந்திய அரசுக்கும், நாகர்களின் பல குழுக்களுக்கும் இடையே கிடந்து அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் போராட்டத்துக்கு முடிவுதான் என்ன? எப்போது?
பேரா. வின்செண்ட் அவர்களின் மொழியாக்கம் நெருடல் இல்லாமல் வாசிக்க நன்றாக இருக்கிறது. வாசிக்கும் போது ஆங்காங்கே சில எழுத்துப் பிழைகள் கண்ணில் பட்டன. அடுத்த பதிப்பில் சரிசெய்யப்படும் என நினைக்கிறேன். நாகாலாந்து போராட்டம் குறித்த வருட அடிப்படையில் விபரங்களைக் கடைசியில் கொடுத்திருப்பது சிறப்பு. இது போல வடகிழக்கு மாநில இலக்கியம் தமிழில் தொடர்ந்து வந்தால் வடகிழக்கு மாநிலங்களின் பண்பாடு, கலாச்சாரம், அரசியல், வாழ்வியல் முறை போன்றவற்றைப் பற்றி அறிந்து கொள்ள உதவும். இல்லையெனில், அங்கு என்ன நடக்கிறது என்பதே பெரும்பாலான இந்தியர்களுக்குத் தெரியாமல் போய்விடும்.
– சித்தார்த்தன் சுந்தரம்
புத்தகத்தின் பெயர்: பிட்டர் வார்ம்வுட்
ஆசிரியர்: ஈஸ்டரைன் கைர் (Easterine Kire)
தமிழில்: பேரா. முனைவர். ச. வின்சென்ட்
பதிப்பகம்; பன்முக மேடை
விலை ரூ 330
பக்கங்கள்: 307
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.