வணக்கம்,
“ஹைக்கூ என்றும் சொல்லலாம்” பேராசிரியர் கவிஞர் மு. தனஞ்செழியன் அவர்களின் முதல் ஹைக்கூ நூல்.
ஆங்கில பேராசிரியர் மொழிபெயர்ப்பாளர் கவிஞர் என்ற பன்முகத் தன்மை கொண்ட நபராக நண்பராக அறிமுகமான தனஞ்செழியன் தன்னுடைய முதல் நூலினை வெளியீட்டதில் மகிழ்ச்சி.
இதோ புத்தகத்தின் சில கவிதைகளை பகிர்கிறேன். மீதியை நீங்கள் வாசிக்க விட்டு விடுகிறேன்.
முதல் கவிதையே ஒரு மெல்லிய அதிர்ச்சியோடு
“சுலபமாக இறந்துவிட்டான்
சுடுகாட்டிற்குத்தான்
வழி கிடைக்கவில்லை”
இறப்பதில் இருக்கும் சுலபம் இறந்த பிறகும் போராட்டம் தொடரும் போல பேசாமல் வாழ்ந்தே விடுவோம் என்ற மெல்லிய புன்னகையுடன் அடுத்த கவிதையை வாசிக்க, அதே புன்னகையை தக்க வைத்த அடுத்த கவிதை.
“பிரசுரமாகாத
கவிதைத் தொகுப்பு
ரப் நோட்”
பள்ளிப்படிப்பு முடிந்து பல ஆண்டுகள் ஆன பின்பும் இந்த வரிகளை படிக்கையில் மீண்டும் ரப் நோட்டை ஒரு முறை பார்ப்போமா என்றே தோன்றியது. பழைய இனிமையான நினைவுகளுடன் அடுத்த கவிதை தொடர்கிறது.
“தூக்கம் தொலையச்
சாய்ந்து நிமிர்கிறது
காவலாளியிடம் பிளாஸ்க்”
வழக்கமாக காவலாளிகள் நமக்காக தலை சாய்ந்து நிமிர்வார்கள் இங்கே ஒரு பிளாஸ்க் காவலாளியிடம் சாய்ந்து நிமிர்கிறது. நல்ல கற்பனை கவிஞருக்கு.
“பந்தியில் பேரலையாகக்
கவிழும் இலைகள்
நீந்தத் திணறும் பலகாரங்கள்”
அருமை! உணவுகள் வீணாவதை பொறுக்க முடியாத ஒரு மனம் அதை இவ்வளவு மென்மையாகவும் கவித்துவத்துடனும் காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு.
“கண்ணாடி சிறையில்
வாழ்வதெல்லாம்
மீன்களுக்குத் தண்டனை”
சுதந்திரமாக பறக்க வேண்டிய பறவைகளை கூண்டில் அடைப்பதும் விரிந்து பரந்த நீர்ப்பரப்பில் நீந்த வேண்டிய மீனை தொட்டியில் அடைத்து வீட்டிற்குள் வைப்பதும் தற்கால மனிதர்களுக்கு ஒரு பெருமிதம். ஆனால் அவைகளுக்கு தண்டனை என்பது உணர்த்தும் வரிகள்.
அதிக ஆழமில்லாத எளிமையான புரிதலையும் இன்பமாக வாசிப்பு அனுபவத்தையும் ஒரு மணி நேரத்தில் தந்துவிடுகிறது நூல். அறிமுக எழுத்தாளர் என்ற அடையாளத்தை சற்றும் காட்டிக் கொள்ளாத 100 ஹைக்கூ தொகுப்பு. மேன்மேலும் எழுத வாழ்த்துகள்.
நூல் : ஹைக்கூ என்றும் சொல்லலாம்
ஆசிரியர் : மு. தனஞ்செழியன்
வெளியீடு : நோஷன் பிரசுரம்
பக்கங்கள் : 36
விலை : ரூ.100
நூல் வாங்க விரும்புவோர்:
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]
நன்றி.
ஜெயஸ்ரீ
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.