ஒரு நண்பரிடம் இரவல் வாங்கி இப்புத்தகத்தை வாசித்து முடித்தேன். வாசிக்க வைத்திருந்த நூல்களின் அணிவரிசையில் எல்லாப் புத்தகங்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டு வாசிப்பில் மிகுந்த சுவாரஸ்யத்தை தந்ததோடு கம்பிகளுக்கு பின்னால் நிற்கும் கைதிகளின் வாழ்வியல் துயரங்களும் குற்ற நிகழ்சம்பவங்களும் மனதில் பெரும்பாரத்தை ஏற்படுத்திவிட்டது. காக்கிசட்டைக்குள் ஒரு கம்யூனிஸ்ட் என்பதே ஒரு ஆச்சர்யமாக இருந்தது. அந்த பொது உடமை சிந்தனைதான் மற்ற காவலருக்கும் அவருக்கும் உள்ள மனிதநேய சிந்தனைகளை படம்பிடித்துகாட்டி இருக்கின்றது.
சிறைக்கொட்டடிக்குள் என்னவெல்லாம் நடக்கும் என்பது வெளியுலகம் அறியாதது. அதனை அறிந்தவர்கள் அங்கே செல்ல அச்சப்பட்டு குற்றம் செய்ய துணியமாட்டார்கள். கணநேர கோபத்தில் சந்தர்ப்ப சூழ்நிலைகளில் தவறிழைத்துவிட்டு காலமெல்லாம் கண்ணீர் வடித்து கொண்டிருக்கும் கைதிகளின் துன்ப துயரங்களை வாசர்களின் பார்வைக்கு வைக்கின்றார். இவையாவும் புனைவுகள் அல்ல என்பதால் கூடுதல் வலியேற்படுத்துகின்றது.
இவரின் முதல் புத்தகமே ஒரு தேர்ந்த எழுத்தாளனின் லாவகத்தோடு எழுதப்பட்டிருக்கின்றது மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. சிறைப்பறவைகளின் வலிகளை சொல்லும் அதே நேரத்தில் ஆங்காங்கே மெல்லிய நகைச்சுவைகளையும் தூவிச்செல்கிறார். தண்டனை கைதிகளின் காயங்களை சொல்லும் அதே நேரத்தில் சிறைக்காவலர்களின் சிரமங்களையும் பதிவு செய்கிறார். நாணயத்தின் இரண்டுபக்கமும் பதிவாகி இருப்பதால் இப்புத்தகம் மதிப்பு பெறுகிறது. வாசகர்கள் வாசிக்க செல்லத்தக்கது இனி நூலிற்குள் நுழைவோம்.
பறவைகளிடம் நட்பு கொள்ளும் நாகு கோனார் எப்படி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறைக்கூண்டிற்குள் தன்னை அடைத்துக்கொள்கிறார் விசித்திரமாக இருக்கின்றது. மனிதர்களின் உளவியலை புரிந்துகொள்ள முடியவில்லை. அடிக்கடி திருட்டு வழக்கில் வந்து போகும் ஐயப்பன் பாடகராகவும் சிகை அலங்காரக் கலைஞராகவும் தனித்திறமை காட்டுகிறார். கைதிகள் மட்டுமல்ல காவலர்களும் முடிவெட்டிக்கொள்வது அவரின் கைத்திறமைக்கு கூடுதல் சான்று. வேலைக்கு போன சிறை கண்காணிப்பாளரின் வீட்டிலேயே சைக்கிளை திருடுவதும் அதை விற்க முடியாமல் கிணற்றில் போட்டுவிட்டு தப்பிப்பதும் பின் வேறொரு வழக்கில் தண்டனை பெற்று வருவதும் அவரது தொடர்நிகழ்வுகளாக இருக்கின்றது. திருடப்பட்ட சைக்கிள் குறித்தான முன்பின் கதைகள் சுவாரசியமானவை. 100 ரூபாய் கடனை வசூலிக்க போனகந்தசாமி கொலை வழக்கில் உள்ளே வருவதும் மன்னிப்பு மறுக்கப்பட்ட நீண்டகால சிறைவாசியாக மனநோயாளியாக இருப்பதும், மருத்துவமனைக்கு வைத்தியம் பார்க்க நீண்ட வருடம் கழித்து வெளியே வருவதும், மதுரையின் புதிய மாற்றங்களை குழந்தையின் குதூகலத்தோடு வேடிக்கை பார்ப்பதும், கோரிப்பாளைத்தில் தேநீர் அருந்திகொண்டே புதிய உலகை கண்டு பரவசமாவதும், விடுதலை உத்தரவு வருகையில் உலகைவிட்டே விடுதலையாகி இருப்பதும் சோகப் பெருங்கதை.
சிறைக்கைதிகளின் பாலுணர்வு வேட்கையை தணித்துக்கொள்ள விருப்பமுள்ளோர் ஓரினச்சேர்க்கை ஏற்படுத்திக்கொள்வார்கள் என்பது ஓரளவு அறிந்ததுதான் பூமணி எனும் திருநங்கை கைதியின் வாயிலாக அவர்களின் பிரச்சனையை நாகரீகத்தோடும் ஆபாசமற்ற நகைச்சுவையோடும் காட்சிபடுத்தி இருக்கின்றார். பீடி, சிகரெட், கஞ்சா, அசைவ உணவு, பாலுணர்வு சிக்கல்கள் என எத்தனை பிரச்சனைகளை கைதிகள் சந்திக்க நேரிடுகிறது என்பதை தெளிவாக சொல்லி இருக்கின்றார். குற்ற மனப்பான்மை உள்ள மனிதர்கள் இந்த புத்தகத்தை வாசிக்க நேர்ந்தால் அவர்கள் சிந்தனையில் நிச்சயம் மாறுதல் ஏற்படும்.
குருவியும் குருசாமியும் அனுபவத்தை படிப்பவர்கள் நிச்சயம் கண்கலங்கிப் போவார்கள். இந்த சமூக அமைப்பு மனிதர்களை என்ன மாதிரியெல்லாம் வார்த்தெடுத்து வந்திருக்கின்றது. பாசம் காட்டி வளர்த்த அண்ணன் அண்ணியின் தலையை துண்டித்துவிடுமளவு மனைவியால் வெறியூட்டப்பட்ட மனிதன் தூக்குதண்டனை கைதியாய் சிறைக்கு வருவதும், தான் தூக்கி வளர்த்த அண்ணன் மகனும் தன் மச்சினனை கொலை செய்துவிட்டு சிறைக்கு வருவதும், தூக்கிலிடுவதற்கு முன் அண்ணன் மகனிடம் மன்னிப்பு கேட்பதும், அவன் மன்னித்ததும் நிம்மதியாய் தூக்குமேடைக்கு போவதும், இறந்தபின் அண்ணன் மகன் மொட்டையடித்துக்கொள்வதும் கண்கலங்க வைக்கும் சோகசித்திரங்கள்.
நம்மால் நம்பவே முடியாத ஒருவர் கொலைக்கைதியாய் உள்ளே வருவதை ஜீரணிக்கவே முடியவில்லை.எழுத்தாளர் சௌபா தனது மகன் பொறுக்கித்தனமாய் திரிவதைதாங்கமுடியாமல் ஒரு கட்டத்தில் கொலை செய்துவிடுகிறார். மனைவி மூலம் கொலைக் குற்றம் வெளியாகி சிறைக்கு வருகிறார். உடல்நலம் கெட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். மனைவியை சந்திக்க மறுத்து கோமா நிலைக்கு செல்கிறார் உயிர்துறக்கின்றார். மனதின் பாரம் அழுத்தியதாலேயே அவர் விரைவாக இவ்வுலகைவிட்டு விடைபெற்றுக்கொள்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. சீவலப்பேரி பாண்டியின் கதையை உலகிற்கு சொன்னவர் வாழ்வும் குற்றப் பின்னனியோடு முடிந்துபோன அவலத்தை என்ன சொல்ல,
இந்த உலகம் என்ன சொல்ல வருகிறது என்பதை நம்மால் மொழிபெயர்க்கவே முடிவதில்லை.
ஆட்டோ சங்கரின் கதை உலகம் அறிந்தது. அந்த குற்றவாளியின் குரலுக்குள்ளும் ஒரு குயில் கூவிக்கொண்டிருந்ததை அறியும்போது வியப்பேற்படுத்துகிறது. இனி அந்த 3 பாடலை எங்கு கேட்டாலும் நமக்கும் ஆட்டோ சங்கரின் நினைவிற்கு வரும் அளவு எழுத்தாக்கி இருக்கிறார் தோழர் மதுரை நம்பி.
பொதுவாக சிறைக்கைதிகளை இரண்டு வகையாக பிரிக்கலாம். கொலை, கொள்ளை, அடிதடி, திருட்டு என குற்ற செயல்களை வாடிக்கையாக வைத்துக்கொண்டு அடிக்கடி வந்து போவோர்க்கு இந்த சிறைத்தண்டனைகள் தரும் துயரம் என்பது ஒன்றுமேயில்லை. ஊதித்தள்ளிவிடுவார்கள். சந்தர்ப்பவசத்தால் திடீரென கோபப்பட்டு கொலை வழக்குகளில் சிக்கி கொண்டு சிறைக்கு வருபவர்கள் நிலைதான் சொல்லிமாளாதது. இளமையையும் வாழ்க்கையையும் இழந்து காலமெலாம் கண்ணீர் சிந்தகூடியவர்கள். எந்தச் செயலையும் செய்யும் முன் ஒரு நிமிடம் அமைதியாக இருந்துவிட்டாலே பெரும்பாலான பிரச்சனைகளில் இருந்து தப்பித்துவிடலாம்.
குற்றேவல் செய்கின்ற அரசியல்வாதிகளும் தேசத்தையே கொள்ளையடிக்கும் அம்பானி அதானி போன்ற பெருமுதலாளிகளும் அரசு அதிகார வர்க்கங்களும் செய்கின்ற குற்றங்கள் கணக்கிற்கு வருவதே இல்லை. நீதிதேவதை தனது துலாக்கோலை ஒழுங்காக நிறுத்தால் தேசமே சிறையாக மாறிப்போகும் அளவிற்கு குற்றவாளிகள் சிறைக்கு வெளியே கண்ணியமிக்க கனவான்களாக நடமாடித்திரிகிறார்கள்.
அப்பாவிகளை போலி குற்றவாளிகளாக உள்ளே அனுப்பும் காக்கிச் சட்டைகள் சட்டத்தை சட்டை செய்வதே இல்லை என்பது இன்றும் தெருவோர யாசகர்களை, விளிம்புநிலை மக்களை, ஆதரவற்ற பெண்களை, திருநங்கைகளை, நடத்தும் விதத்தில் இருந்தே அறியலாம். சிறைத்துறை அதிகாரி திரு.மதுரை நம்பி அவர்கள் சூரியன் உதிக்காத காரிருள் நிரம்பிவழியும் சிறைக்கொட்டடிகளில் இருந்து ஒளிர்ந்த நட்சத்திரங்களை கண்டெடுத்து நம் முன் உலவவிட்டிருக்கின்றார். அவர்கள் பேசும் வாழ்வியல் ஒளியிலிருந்து தெறிக்கும் வெளிச்சத்தில் குற்ற சிந்தனை உடைய எதிர்கால சந்ததிகள் வாழ்வில் ஒளி பரவட்டும். அனைத்து தரப்பினரும் வாசிக்க வேண்டிய அற்புத வாழ்க்கை அனுபவங்கள் இந்த சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் நூலில் உள்ளது. தோழரும் எழுத்தாளருமான மதுரை நம்பி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
செ.தமிழ்ராஜ்
வண்டியூர்
மதுரை-625020
9965802089
நூல் : சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்
(ஒரு சிறைக்காவலரின் அனுபவப் பதிவுகள்)
ஆசிரியர் : மதுரை நம்பி
விலை : ரூ.₹ 330
வெளியீடு : டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Leave a Reply
View Comments