நூல் : வன்முறையில்லா வகுப்பறை
ஆசிரியர் : ஆயிஷா இரா.நடராசன்
விலை : ரூ.₹110/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

இந்த நூலை வாங்கி நீண்ட நாட்கள் ஆகிவிட்டன, வாசிக்காமல் தேங்கிப் போய் இருந்தது. வாசிப்பை நேசிப்போம் முகநூல் குழும வாசிப்பு மாரத்தானில் கூட சென்ற ஆண்டு என்னுடைய இலக்கை எட்ட இயலவில்லை. இந்த நிலையில் வாசிப்பை நேசிப்போம் குழு சந்திப்புக்கு சென்ற போது பல்லவனில் அமர்ந்து வாசித்து முடிக்கவும் மாம்பலம் வரவும் சரியாக இருந்தது.

நூலின் உள்ளடக்கம் என்ன என்பதை நூலின் தலைப்பே சொல்லி விடுகிறது. மாணவர்களின் நெறிபிறழ் நடத்தைக்கு காரணம் என்ன, வன்முறை இன்றி வகுப்பறையை கையாளும் முறைகள் என்ன என்பது குறித்தெல்லாம் அறிவியல், உளவியல் மற்றும் நடைமுறைகள் ஆகிய விஷயங்களை முன்வைத்து ஆய்வு செய்து எழுதியுள்ளார் நூலாசிரியர்.
என்னைப் பொறுத்தவரை “என் சிவப்பு பால்பாய்ண்ட் பேனா“ வுக்கு பிறகு கற்றல் கற்பித்தல் குறித்த மிக முக்கியமான நூல் என்று இதனைக் கூறுவேன்.

“ஒரு மாணவன் எதையெல்லாம் செய்தால் ஒரு ஆசிரியரான உங்களுக்கு பிடிக்கும் என்பதைப் போல ஒரு ஆசிரியராக நீங்கள் எதையெல்லாம் செய்தால் தனக்கு பிடிக்கும் என்று கருத ஒரு மாணவருக்கும் உரிமை உள்ளது. – கரோலின் டிவிக், குழந்தை உளவியலாளர்.

இவ்வாறு துவங்கும் நூலில் உள்ள முதல் புள்ளிவிவரமே நமது பள்ளி அமைப்பின் தோல்வியை பறைசாற்றுகிறது. ஆமாம், 99.1 விழுக்காடு குழந்தைகள் பள்ளியைக் கண்டு அஞ்சுகிறார்களாம். மத்தியக் கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் பள்ளிக் கூட அதிகார சூழலால் பாதியில் படிப்பை துறக்கும் குழந்தைகள் 4 மடங்கு அதிகம் என்கிறார்.

Parents are the teachers in Home; where as Teachers are the parents in School என்று அலங்காரமாக சொல்லிவிடுகிறோம். “ஹலோ பாஸ் கம்பி கட்டுற கதையெல்லாம் இழுத்து போடாதீங்க, அப்படி எல்லாம் இரண்டு உறவுகளும் ஒன்றல்ல” என்கிறார் ரஷ்ய கல்வியாளர் ஆண்டன் மக்கெரென்கோ. ஆதாரமாக ஒரு வேறுபாட்டு பட்டியலையே தருகிறார்.
இவர அவ்வளவு லேசுபட்டவராக நினைத்து விடாதீர்கள். “குழந்தைகளுக்கு முதல் உரிமை” என்று முழங்கிய இவரது கல்வி முறையினால் தான் 1927 ல் விளையாட்டு பாடவேளை பள்ளியில் சேர்க்கப் பட்டுள்ளது.

ஒழுக்க நெறி என்கிற பெயரில் தங்கள் கட்டளைகளுக்கு தலையாட்டும் பிரஜைகளை உருவாக்கும் ஆங்கிலேய கல்வி முறையில் இருந்து இந்த விஷயத்தை மட்டும் உடும்பு பிடியாக கெட்டியாக பிடித்துக் கொண்டு விட மறுக்கிறோம்.
மூன்றாவது அத்தியாயத்தில் மாணவர்களை நாம் தண்டிக்கும் முறைகளைப் பற்றிய பட்டியலை தந்துள்ளார். யுனிசெஃப் அமைப்பின் பட்டியலில் உள்ள அந்த தண்டனை முறைகளை பார்த்தால் நமக்கே பதறுகிறது.
அதே வேளையில் நாங்கல்லாம் பிள்ளைகளை அடிப்பதே கிடையாது என்பவர்கள் கையாளும் நூதன தண்டனைகளையும் பட்டியலிட்டிருக்கிறார்கள். அதை வாசித்தால் “இதற்கு நீங்க அடிப்பதே பரவாயில்லை“ என்கிற அளவில் உள்ளது.

“அந்த காலத்துல எல்லாம் குருகுலத்தில்…“
“நம்மை உள்ளயே உட்ருக்க மாட்டாங்க அதானே?”
“நீங்க குருவா ஆசிரியரா? என்கிற அத்தியாயத்தில் “அந்த காலத்துல எல்லாம் …“ என்று துவங்கும் பழம் பெருமை ஃபர்னிச்சரை உடைக்கிறார். என்னதான் கட்டுப்பாடுகளை திணிக்கும் கல்விமுறை என்றாலும் பிரிட்டிஷ் கல்விமுறைகள் பாகுபாடுகளை நீக்கி சமத்துவத்தை கொண்டு வந்தன என்று உதாரணங்களோடு நிறுவியுள்ளார்.
வகுப்பறை ஜனநாயகம் பற்றி பேசும் அத்தியாயத்தில் யுனெஸ்கோ வெளியிட்டுள்ள “தண்டனைகளின் பின் விளைவுகள்“ பற்றி ஆசிரியர்கள் அனைவருமே அறிந்து கொள்ள வேண்டும். இந்த பகுதி எனக்கே பல விஷயங்களில் அறிவுக் கண்களை அகலமாக திறந்தது எனலாம்.

சென்னையில் DPI வளாகம் தான் பள்ளிக் கல்வித்துறை சார்ந்த அனைத்து அலவலகங்களும் உள்ள இடம் என்பது ஆசிரியர்கள் அனைவருக்கும் தெரியும். ஆனா, DPI என்றால் என்ன? Department of Public Instruction. இது ஆங்கிலேயர்கள் ஆதிக்க மனப்பான்மையுடன் நமது கல்வித்துறைக்கு வைத்த பெயர். இதுவே இங்கிலாந்தில் BCE- Board of control of Education இவ்வாறு செல்லும் அத்தியாயத்தில் நமது கல்விமுறையில் உள்ள ஆசிரியர்களின் தண்டனை வழங்கும் மனோபாவத்தின் நதி மூலத்தை ஆங்கிலேயர் காலம் முதலாக ஆய்வு செய்துள்ளார்.

“எனக்கு பனிரெண்டு வயது ஆகும் வரை எனது பெயர் “ஷட் அப்“ என்று நினைத்திருந்தேன்“ – சார்லி சாப்ளின்
குழந்தைகள் பெரியவர்கள் ஆகும்வரை நாம் எந்த அளவுக்கு அவர்களை சுதந்திரமாக வளர்க்கிறோம் என்பதைத் தான் சாப்ளின் நையாண்டியாக தெரிவித்துள்ளார்.

ஒரு தவறை ஏன் செய்யக்கூடாது என விளக்குவதோடு, எது சரியான செயல் என்பதையும் பதமாக எடுத்துக் கூறுவதன் மூலமும் சரியான செயலை உடனுக்குடன் அங்கீகரிப்பதன் மூலமும் தக்கவைத்தலும் தாத்தா பாட்டிகளின் பரிவும் பாசமும் தோழமையும் மிக்க நெறிபடுத்துதலின் உள்ளடக்கமாக இருப்பதை காணமுடியும் என சரியான உதாரணம் கொண்டு கூறியுள்ளார். மேலும் தற்போதைய குடும்ப அமைப்பில் இது தவிர்க்கப் பட்டு ப்ரீ-ஸ்கூல் கலாச்சாரத்தால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளையும் கூறியுள்ளார்.

மாணவர்களின் ஒழுங்கீனமான நடத்தைக்கான காரணம், அவர்களை புரிந்து கொள்வது எப்படி என்பன பற்றி இரண்டு அத்தியாயங்களில் பள்ளி அளவில் நடந்த சம்பவங்களைக் கொண்டு தெளிவாக விளக்கி கூறியுள்ளார்.
குமரப்பருவ மாணவர்களின் நடத்தை சிக்கல்களை அவர்களின் மூளை வளர்ச்சி குறித்த அறிவியல் ஆய்வுகளின்பால் நின்று ஆசிரியர் தக்க உதாரணங்களுடன் விளக்கி உள்ள இந்த அத்தியாயம் மிகவும் இன்றியமையாத ஒன்று. அறிவியல் மற்றும் உளவியல் வழி நின்று பேசும் இந்த அத்தியாயங்களில் உள்ள பொருட்கள் பி.எட் பாட வகுப்புகளில் வைக்கப் பட வேண்டும்.

மாநிலத்திற்கான புதியக் கல்விக் கொள்கை கருத்துரு உருவாக்கும் கூட்டத்தில் நான் கலந்து கொண்டு கருத்துகளை முன்வைத்த போது பி.எட் குறித்து பேசவில்லை. பிரிதொரு வேளையில் நண்பர் ஒருவர் கேட்ட போது எழுதிய அனுப்பியவற்றில் பி.எட் வகுப்புகளுக்கான பாடங்களில் செய்ய வேண்டிய சீர்திருத்தம் பற்றி கூறி இருந்தேன். முக்கியமாக பி.எட் படிப்பில் Irregular mode என்கிற ஒரு சட்டத்திற்கு புறம்பான தவறான முறை முற்றிலும் இல்லவே இல்லை என்பதை கண்காணிப்பு அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். வகுப்பறைக்கு செல்லாத ஒருவர் எவ்வாறு நல்ல ஆசிரியராக பயிற்சி எடுக்க இயலும்?

இதை வாசிக்கும் எனது மாணவர்கள் MJ sir கொடுக்காத தண்டனையா அவரா இப்போது இப்படி பேசுவது என்று நினைக்க கூடும். என்ன செய்வது தலை வழுக்கை ஆன பின்பு தான் என் கையில் சீப்பு கிடைத்தது. நிச்சயமாக வாசிப்புகள் “அடச்சே நாம இப்படி எல்லாம் தவறாக நடந்து கொண்டு இருந்திருக்கிறோமே” என்று வருந்தச் செய்து எனது செயல்பாடுகளை திருத்தி அமைத்தவண்ணம் உள்ளன.
ஆசிரியப் பெருமக்கள் தவறாமல் வாசிக்க வேண்டிய நூல்.

நன்றி: முகநூல் கட்டுரை – மு.ஜெயராஜ்,
தலைமையாசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி,
நாகமங்கலம்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *