எது பாதை, எது திருப்பம், எது மேடு, எது பள்ளம் என்று எந்தத் திக்கும், திசையும் தெரியாமல்தான் தொடக்கத்தில் இந்தக் கவிதை நூலை நான் அணுகினேன்.
குண்டூசி விழுந்தாலும் துள்ளியமாய்க் கேட்கும் ஓர் அறைக்குள் அமர்ந்துகொண்டு ஒருவர் கேட்க மற்றொருவர் தன் அனுபவத்தை மென்குரலில் கூறுவதைப் போன்றதொரு அனுபவம் இக்கவிதை நூலை வாசிக்கும்போது உணரமுடிந்தது.
ஒரு அரசுப்பள்ளி ஆங்கில ஆசிரியையான உமாதேவி அரசகுமார் தனது முதல் கவிதை நூலான ”கவிதைச் சிறகுகள்” ஆங்கிலத்தில் ”POETIC FEATHERS” என்ற கவிதைத் தொகுப்பை மே மாதம் 2021ல் இவ்வுலகைவிட்டுப் பிரிந்த தன் மகளுக்கு அற்பணிக்கிறேன் என்ற அதிர்ச்சித் தகவலோடுதான் நமக்கு வாசிக்கத் தந்திருக்கிறார்.
முழுமையாக வாசித்து முடித்தபிறகு, இக்கவிதைத் தொகுப்பின் அறிமுகத்தை எந்தக் கவிதையிலிருந்து தொடங்குவது என்ற குழப்பம் கவ்விக்கொண்டது. இதுதான் முட்டுக்கட்டை போடுகிறது என்று அறுதியிட்டுச் சொல்லமுடியாததற்குக் காரணம், கரடுமுரடான பாதையில் கடந்து செல்லும் போது எதிர்கொள்ளும் சறுக்கல்கள், வலிகள், சிக்கல்கள் எல்லாமே மௌனத்தை மட்டுமே பதிலாகக் கொண்டிருப்பதைப்போல ஒவ்வொரு கவிதையை வாசிக்கும்போது வாசிப்பாளரின் உள்ளுணர்வுகளை வெளியே தெரியாமல் கீறிக்கொண்டே இருக்கின்றன.
வாழ்வில் கவனிக்கப்படாமல் தவறவிட்ட தருணங்கள் பின்னாளில் ஞாபக வெளி முழுக்க ஆக்கிரமித்துவிடுவதை எப்படித் தவிர்க்கமுடியாதோ அதுபோல,. தெரிந்தோ தெரியாமலோ நினைவடுக்குகளுக்கு அடியிலிருந்து அவ்வப்போது மேலெழுந்து மேலெழுந்து வெளிப்படும் பெருந்துயரங்கள் பெருமூச்சோடும் கண்ணீர்த்துளியோடும் கரைந்துபோவதற்குப் பதிலாகக் கெட்டிப்பட்டுவிடுகிறது என்பதற்கு உதாரணம் இந்தக் கவிதை நூல்..
உதிர்ந்த இலைகள் மற்றவர்களுக்கு வெற்றுச் சருகுகள் ஆனால் மரத்திற்கோ, தன்னைவிட்டுப் பிரிந்த தனது குழந்தைகள். அதுபோல தன் குழந்தையை இழந்த ஒரு தாய்க்கு, ”இறப்பு இல்லாத பிறப்பெதுவும் இல்லை. மறதியைப் போலொரு மாமருந்தில்லை” என்ற வெற்று வார்த்தைகளைத் தவிர வேறெதை நம்மால் ஆறுதலாகத் தந்துவிடமுடியும்!,
”உலகம் பொத்தான்களுக்கு உள்ளிருந்துதான் சுழல்கிறது. டண் கணக்கில் (கேட்ஜெட்) கருவிகள் குவிந்துகிடக்கின்றன. சமூக வலைதளங்களுக்குச் சிறகுகள் முளைத்துவிட்டன. இப்பூமிப்பந்தைச் சுற்றிச்சுற்றி வந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு மனித உயிரும் ஆப், ஆப் என்று சொல்லிக்கொண்டே சுற்றித்திரிகிறது. காலத்திற்கேற்ற வளர்ச்சி என்ற எண்ணம் சரியா? தவறா? என்று கணிக்க முடியவில்லை. உயர் மின்அழுத்தம் (வோல்டேஜ்) தாக்கிவிடாதபடி எச்சரிக்கையாக இருங்கள் குழந்தைகளே” என்று அக்கறை வழியும் சொற்களோடு எழுதப்பட்ட கவிதை . ”சமூகப் பட்டாம்பூச்சி”. இன்றைய தலைமுறை அவசியம் வாசிக்கவேண்டிய ஒன்று.
உயிரில்லாத ஒன்று இந்த உலகத்தையே ஆள்கிறது. ஏழையாகட்டும் பணக்காரன் ஆகட்டும் பசியைப் போக்குகிறது. அதுதான் பணம். என்ற கவிதை எதார்த்தத்தைச் சொல்கிறது. சில கவிதைகள் இன்றைய இளம் தலைமுறையின் மனதில் தன்னம்பிக்கையை விதைக்க முயன்றிருக்கிறது.
”ரோஸி எனது வளர்ப்பு நாய்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட கவிதை கவிஞருக்கும் வளர்ப்பு நாய்க்கும் இடையிலான பிரியத்தை முன்னிறுத்துகிறது.
சில கவிதைகள் இயற்கையை, சில வாழ்க்கைத் தத்துவத்தை, சில சிறகு முளைக்கும் குழந்தைகளை, தனக்குப் பின்னால் இருந்து செயல்படும் ஆத்மாக்களை, பணிக்குச் செல்லும் பெண்களை, அவ்வப்போது தன்னுள் எழும் அபூர்வக் கேள்விகளை, தன்னைச் சுமக்கும் செருப்பை, மறக்கவியலா பள்ளி நாட்களை, தன் கனவை, தன்னையும் தன் உணர்வையும் தட்டியெழுப்பும் நினைவுகளை கவிதை வடிவில் அழகு சொல்லாடலால் தன்பங்கிற்கு வசீகரித்துச் செல்கின்றன.
கொடுக்கப்பட்ட தலைப்பிற்கு ஏற்ப கவிதைகளை நகர்த்த முனைந்திருப்பதாலோ அல்லது இலக்கணக் கட்டுக்குள் முடிக்கவேண்டும் என்ற கட்டாயம் இருந்ததாலோ, உரைநடை கவிதையாகவும் கவிதை உரைநடையாகவும் உயிர்ப்பைத் தக்கவைக்க முடியாமல் தடுமாறுவதைக் காணமுடிகிறது.
அவசரகதியில் அடுத்தடுத்துப் பின்னப்பட்ட கவிதையின் தொடக்கமும் மையக்கருத்தும் அழுத்தம் தராமல் ஏனோதானோ என்று மின்னிக் கணநேரத்தில் மறைந்துவிடுகின்றன.
பிரியத்தின் வலிகளை, தன் அனுபவத்தின் ஆழத்தை மிக நுட்பமாக மற்றவர்கள் உணரும்விதமாகத் தருவது என்பது ஒருசிலருக்கு மட்டுமே கைவந்த கலை. அந்தவிதத்தில் இக்கவிதைத் தொகுப்பு வாசிப்பாளர்களைக் கரைந்து செல்லவைக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
ஆனாலும், இன்னும் கவிதை வசப்படக் கொஞ்சம் சிரத்தையெடுக்கவேண்டியிருக்கும் என்றே தோன்றுகிறது. இனிவரும் கவிதைகள், எல்லாவிதக் கவிதை ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் என்று நம்பிக்கைகொண்டு வாழ்த்துகிறேன். நன்றி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

