நூல் அறிமுகம்: தாழை இரா.உதயநேசனின் “பூவோடு பேசும் பூஞ்சிட்டு” – பாரதிசந்திரன்

நூல் அறிமுகம்: தாழை இரா.உதயநேசனின் “பூவோடு பேசும் பூஞ்சிட்டு” – பாரதிசந்திரன்



“நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு”

”தொன்மத்திற்கும் இலக்கியத்திற்கும் உள்ள உறவு ஒன்றிலிருந்து மற்றது வருவது என்ற நிலையில் மட்டுமல்ல. இந்த உறவு இலக்கியங்களில் கட்டுக்கோப்பு சம்பந்தப்பட்டது. மூலப் படிவங்கள், படிமங்கள் சம்பந்தப்பட்டவை மட்டுமல்ல. இலக்கிய வகைகள் சம்பந்தப்பட்டவையும் ஆகும்” என்பார் நார்த்ராப் ப்ரை (Northrop Frye)

பரந்து விரிந்த நிலையில், இலக்கியக்கூறுகளும் வடிவங்களும் மாறுபட்ட வளர்ச்சியினைக் கொண்டிருக்கிறது எனினும், அதன் உள்ளீடுகள் துன்பத்தின் கூறுகளாகவே அமைந்திருக்க வாய்ப்புண்டு. மானுட சமூகத்தின் கற்பனை ஓட்டத்தின் முடிவும், தொடக்கமும் தொல்மூலப்படிவங்களோடு நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கும் என்பதே உளவியல் வெளிப்பாடாகும்.

முதன் முதலாக எழுந்த நாட்டுப்புற இலக்கியங்களே, இன்றைய பல்வேறு இலக்கிய வடிவங்களின் ஆதி வடிவமாக இருந்திருக்க முடியும். சிந்திக்கவும், எண்ணத்தைப் பரிமாறவும், விளைந்த மகிழ்ச்சியும் ஏற்படுத்திய உளக்கூறுகள் தான் எக்காலமாயினும் வெளிப்படும். அதனடிப்படையில், நாட்டுபுற இலக்கியத்தின் சாயல், இலக்கியத்தின் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பட்டு நிற்கும்.

தமிழ் இலக்கிய வரலாற்றில், நாட்டுப்புற இலக்கியங்கள், பல்வேறு அறிஞர்களால் தொகுக்கப்பட்டு நூலாக்கம் செய்யப்பட்டுள்ளன. மற்றொருபுறத்தில் பல்கலைக்கழகங்களில் ஆய்வுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுக் களஆய்வில் பெறப்பட்டு மாபெரும் பதிவுகளைப் பெற்றிருக்கின்றன. கலைஞர்கள் ஒருபுறம் மீட்டெடுத்து, மக்கள் மத்தியில் கொண்டு சென்றுள்ளனர். ஆனாலும், நாட்டுப்புற இலக்கியங்கள் மக்கள் மத்தியில் இக்காலத்திலும் நிறைந்து கிடக்கின்றன.

’நாட்டுப்புறப்பாடல்கள்’ எனும் வகையில், உலக அளவில் 1831 ஆம் முதல் சேகரிக்கப்பட்டுள்ளன. 1871 இல் சார்லஸ் இ கோவர் (Charles E. Gover) எனும் ஆங்கிலேயர் “FOLK SONGS OF SOUTH INDIA” எனும் தலைப்பில், தாம் சேகரித்த நாட்டுப்புறப் பாடல்களை வெளியிட்டார். இந்நூலில் தமிழ் நாட்டுப்புற பாடல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் இப்பாடல்கள் சென்றன. இதன் தொடர்ச்சியாகப் பல்வேறு அறிஞர்கள் பல நூறு தொகுப்புகளைத் தமிழில் கொண்டு வந்தனர். தமிழகம் முழுவதுமான சேகரிப்புக்களாக நாட்டுப்புற பாடல்கள் இருந்தன.

நா.வானமாமலை, கி.வ.ஜ. க.கிருஷ்ணசாமி, ஆறு, இராமநாதன், செ.அன்னகாமு, தமிழண்ணல், சு.சண்முகசுந்தரம், த.கனகசபை, சா.சவரிமுத்து போன்றோரின் கடும் உழைப்பால் நாட்டுப்புற இலக்கியங்கள் பெருமளவு பாதுகாக்கப்பட்டு தொகுப்புகளாக நூல் வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாட்டுப்புற இலக்கியங்கள் தமிழில் பெருமளவு கிடைப்பதற்கு மேற்கண்ட அறிஞர்கள் காரணமாவார்கள்.

நாட்டுப்புறவியல் ஆய்வு எனும் நூலைத் தொகுத்தவர் சு.சக்திவேல் ஆவார். இவருக்குப் பின், தொகுத்த நூல்படைப்புகளை ஆய்வு செய்து அவைகள் வெளியிடப்பட்டன. மக்களின் வாழ்வாதார நிலைகள் எவ்வாறு பாடல்களில் ஊடுருவியுள்ளன. கற்பனை நயம் மிக்கதான முன்மாதிரிகள் இவ்வாய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இது போன்ற பல நூறு நாட்டுப்புற ஆய்வுகள் நடத்தப்பட்டு நூல்களாக வெளிவந்துள்ளன.

இவற்றின் பாதையில் தொடர்ந்து தமிழ் இலக்கிய வரலாறு நாட்டுப்புற இலக்கியங்களையும் கவனித்து தன்னில் இணைத்துக் கொண்டு தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. மக்கள் தனித்தனியாகப் பாடிய பாடல்களைத் தொகுத்து நூலாக்கம் செய்யும் பழக்கத்தில், மாறுபாடாகத் தொகுப்பு முழுவதும் தாமே இயற்றிய நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்து ஒரு நூலாக்கம் செய்வதும், 21- ஆம் நூற்றாண்டில் தொடங்க ஆரம்பித்துள்ளது.

அமெரிக்க வாழ் தமிழரான, பன்முகத் திறமை வாய்ந்த தாழை இரா உதயநேசன் அவர்கள் எழுதிய ”பூவோடு பேசும் பூஞ்சிட்டு” எனும் அரியதொரு நாட்டுப்புறப் பாடல்களின் தொகுப்பை வெளியிட்டுள்ளார். இதில் உள்ள அனைத்துப் பாடல்களும் இவரே எழுதியது. கிராமத்தில் பிறந்து வளர்ந்த இவர், மண்மனம் மாறாது, பண்பாடு மாறாது, கலாச்சாரம் மாறாது, உணர்வுகள் மாறாது இத்தொகுப்புப் பாடல்களை எழுதியுள்ளார்.

ஒவ்வொரு பாடலும், தனித்தனியாக இசையமைத்துப் பாடி, இசைத்தமிழுக்குப் பெருமை சேர்க்கக்கூடிய தொகுப்பாக இது வந்துள்ளது.

நவீன புத்தகக் கட்டமைப்பில், பழம்பெறும் உணர்வுகளைப் பேசும் அற்புதமான பாடல்களின் தொகுப்பே இந்நூலாகும். கட்டுப்பாடுகள் அற்ற சுதந்திரமான வாழ்வை வாழும் கிராமத்தாரின் வாழ்வியல் கட்டமைப்பை அப்படியே நூலின் முகப்பு ஓவியமாக வரைந்து, அதில் நவீனத்துவ அச்சுப்பதிப்பை அச்சடித்து வெளியிட்டு இருக்கிறார் தாழை இரா. உதயநேசன்.

”பூவோடு பேசும் பூஞ்சிட்டு” நூலில் உள்ள இருபாடல்கள் ”சாமக்கோழி கூவிடுச்சு” ”மாமன் மக” எனும் இரு இசை ஆல்பமாகத் தற்பொழுது வெளிவந்துள்ளன என்பது ஒரு சிறப்பாகும். இது போன்று இந்நூலில் உள்ள அனைத்துப் பாடல்களும், தனி இசை ஆல்பமாக வெளி வந்தால் தமிழிசை இன்னும் பெருமைக்குரியதாக மாறும்.

மனதை அப்படியே நாட்டுப்புற உணர்வுகளுக்கு அழைத்துச் செல்லும் பாடல் வரிகளைக் கொண்டுள்ளது இந்த இரண்டு இசை ஆல்பங்களும். தனித்துவமிக்க ரசனையும். மேலான அன்பும், காதலும், இவ்விரு பாடல்களிலும் மிகுந்திருக்கின்றன.

”பூவோடு பேசும் பூஞ்சிட்டு” நூலில் உள்ள நாட்டுப்புறப் பாடல்கள், படிப்போரின் உள்ளத்தைக் கரைத்துத் துள்ளிக் குதித்துக் கிராமத்துச் சாயலை நமக்குள் ஊட்டித் தன்னிலை மறக்கச் செய்கின்றது என்று கூறினால் அது தவறாகாது. படிப்பவர்கள் யாரும் இந்த உணர்விலிருந்து மாற முடியாது என்பதும் தவறாகாது. இலக்கியத்தின் பாதிப்பு இல்லாதவர்கள் ரசனை உடையவர்களாக இருக்க முடியாது.

இப்பாடல்களில், காதல் பாடல்கள் அதிகமாக உள்ளன. அதில் தலைவன் கூற்றாக அமையும் பாடல்கள் மிகுதியாக உள்ளன. திருமணத்திற்கு முந்தைய காதல் எதிர்பார்ப்பும், உற்சாக மனநிலையும், அழகை மெச்சும் ரசனையும், உண்மை மனப்போக்கை வெளிப்படுத்தும் வெளிப்பாடும், ஆங்காங்கு கொட்டிக் கிடக்கின்றன. அள்ள அள்ளக் குறையாத காதல் ரசம் இழையோடுகின்றன. குறிப்பாக இந்நூலில் காணலாகும் நாட்டுப்புறப் பாடல்களைக் கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம் அவையாவன:

1.காதல்
2.அம்மா
3.விவசாயி
4 கிராம அழகு
5. சமூகப் பிரச்சனை

என்பதாகும். இதில் சமூகப் பிரச்சனையில் பெண்ணுரிமை குறித்த பாடலான ’வளையல் குலுங்கக் கும்மியடி’ எனும் பாடல் மிகச் சிறப்பான பாடல் ஆகும். வெறும் வெற்று வார்த்தைகளாக அமைந்து விடாமல், எதிர்காலச் சிந்தனை, சமூகத்தீர்வுகள், காலமாற்றம், மகிழ்ச்சி இவைகளோடு கூடியவைகளாகப் பாடல்கள் அமைந்துள்ளன.

ஆத்தோர ஆலமரம், நுங்கு வண்டி, ஊர்த் திருவிழா, தென்னை மரம், காய்கறிக்காரம்மா போன்ற காட்சிகளின் வெளிப்பாடுகள் கிராம அழகைப் போற்றிப் பாடும் பாடல்களாக அமைந்துள்ளன. நவீன உலகச் சாயல் மற்றும் உவமை எண்ணப்போக்கு போன்றவை எங்கும் பயன்படுத்த ப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். கிராமத்து வார்த்தைகளான வெசனப்பட்டு, மொறச்சு, சீர்செனத்தி, வெரசா என்பன போன்ற வார்த்தைகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சங்க இலக்கிய மரபில் முழுத்தொகுப்பும் அமைந்துள்ளன. இதனைத் தனிப்பெரும் ஆய்வாக ஆய்வு செய்யலாம். சமூகப் பிரச்சனைகள் இல்லாத நாடாக நம் நாடு இருக்க வேண்டும் என்பது ஆசிரியரின் பெரும் கனவாக இருக்க வேண்டும் என்பதை உணர முடிகின்றது. அதனை,

”மேல் ஜாதி கீழ் ஜாதி
கல்யாணம் செஞ்சுப்புட்டா
ஆத்திரம் பெருகுது
ஆணவக் கொலை நடக்குது”

எனும் இவ்வரிகள் வெளிப்படுத்துகின்றன.

காதலியைப் பல்வேறு உவமைகளால் உருவகங்களால் காதலன் அழைக்கின்றான். அவை சொல்ல வரும் செய்திகளுக்கு மிகப் பொருத்தமானவைகளாக அமைந்திருக்கின்றன. அவ்வாறு எழுதும் வார்த்தைகளை மட்டும் தனியே எடுத்து அவை பொருந்துமாற்றைத் தனித்த பெரும் ஆய்வாக ஆய்வு செய்யும் அளவு பொருத்தமான தன்மைகளைப் பெற்றிருக்கின்றன. அவைகளில், தங்கரதமே, செந்தேனே, அன்னக்கொடியே, பொன்மானே, பூவிழியே, ஆவாரம்பூவே, கண்மணியே, தும்பை பூச் சித்திரமே, செங்காட்டு முந்திரியே, கோவைப்பழ உதட்டழகி, கொய்யாப்பழ நிறத்தழகி, தோகை மயிலு நடனக்காரி, செவ்வாழை சிரிப்புக்காரி, வஞ்சரம் மீனு கண்ணுக்காரி என்பன சிலவாம்.

தேர், ரத்தினம், மரிக்கொழுந்து, கொலுசு, நதி, அலை போன்ற சொல்லாடல்கள், பாடல் தொகுதி முழுவதும் மிகுதியாகக் கையாளப்பட்டுள்ளன. இவை தாழை இரா.உதயநேசன் அவர்களின் மந்திரச்சொற்களாக இனம் காணலாம். காதலர்களுக்குள் அடங்காத அன்பு இருப்பதை,

”நெஞ்சுக்குள்ள உன்னத் தானே
நெனைப்பாக வச்சேண்டி

உன் மேல தூசி பட்டா
கருவாடா காயி ரேண்டி”

சிரிப்புல சிக்கி தான்
செலந்தியா தவிக்கிறேன்டி

கட்டிவச்ச மல்லி யாட்டம்
வஞ்சிக்கொடி வாழுறேனே

உதட்டோரச் சிரிப்பால
பச்ச குத்திப் பாக்குறியே

என ஆசிரியர் பாடல்புனைந்துள்ளார். புனைவுகள் எதார்த்த புனைவுகளாக அழகூட்டி நிற்கின்றன.

“’சொல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின்

வல்வரவு வாழ்வார்க்குரை” ( குறள்-1151)

எனும் திருக்குறளுக்கு ஒப்ப காதலி காதலனைப் பார்த்து,

”ஆச மச்சானே
ஏங்க வைக்காத
ஒத்தையில தவிக்க விட்டு \
வேடிக்க பார்க்காத”

என்னும் பாடல் வரிகள் காதலின் வலியை உணர வைக்கின்றன. இதே போன்ற வேதனையை அனுபவிக்கும் காதலி,

”அத்தமக பூத்திருக்கேன்
ஆத்தோரம் காத்திருக்கேன்
சேத்துக்குள்ள மீனாட்டம்
செவ்வந்தி துடிக்கிறேனே

வெளக்க அணைச்சுப்புட்டு
விடல புள்ள உறங்கினாலும்
வளச்சுப் புடிச்சுகிட்டு
வெரலால வருடுறியே”

என்று தன்னுடன் இல்லாத தலைவனின் இல்லாமையால் தான் படும் வேதனையை அப்படியே ஆசிரியர் வார்த்தைகளால் வடித்துள்ளார்.

தனித்த நிலையில் ஒவ்வொரு பாடலும், சங்க இலக்கியப் பாடல்களின் தன்மையைப் பெற்றுள்ளன என்னும் வகையில் தனித்த ஆய்வு செய்யும் அளவு சிறந்த கட்டமைப்பை இத்தொகுப்பின் பாடல்கள் ஒவ்வொன்றும் பெற்றிருக்கின்றன.

இலக்கிய வரலாற்றில் தனித்து நாட்டுப்புறப்பாடல்களைப் பாடித் தொகுத்த நூல்களில் முதலாவதாக இந்நூல் எண்ணப்படவும் பதிவு செய்யப்படவும் வேண்டும். பாடல்கள் அனைத்தும் தனித்த தமிழிசை ஆல்பமாகவும் வெளிவந்து தமிழிசைக்குப் பெரும் வளர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டும்.

குறிச்சொற்கள்: நாட்டுப்புற இலக்கியங்கள், காதல் பாடல்கள், இசை ஆல்பம், பூவோடு பேசும் பூஞ்சிட்டு, தாழை இரா உதயநேசன்,

நூல் பெயர்: பூவோடு பேசும் பூஞ்சிட்டு
ஆசிரியர்: தாழை இரா உதயநேசன்
வெளியீடு: கலை உதயம் பதிப்பகம்,
விலை : 150/-
பக்கங்கள் : 148
10- முதல் தெரு, ஸ்ரீ ராமாபுரம்
ஆம்பூர் -635820

பாரதிசந்திரன்
(முனைவர் செ சு நா சந்திரசேக்ரன்)
தமிழ்ப்பேராசிரியர்
திருநின்றவூர்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *