நூல் அறிமுகம்: எழில் சின்னதம்பியின் கடைசி வருகை – து.பா.பரமேஸ்வரி

நூல் அறிமுகம்: எழில் சின்னதம்பியின் கடைசி வருகை – து.பா.பரமேஸ்வரி




வணக்கம்.
எப்போதும் கதை கேட்பதும் கதை சொல்வதும் கதை வாசிப்பதும் சுவாசிப்பதும் ருசிகாரமானது சுவாரஸ்யமானதும் கூட .அதிலும் கதைக்கும் கதை பேசுவதென்பது கூடுதல் பெருமிதம். இலக்கியவுலகம் பன்மொழி இலக்கியங்கள் துவங்கித் தமிழிலக்கியம் வரையிலான மாறுபட்ட பல தளங்களைத் தமக்குள் உள்ளொடுக்கி உள்ளன. அதிலும் சிறுகதைகள் இலக்கிய வரலாற்றின் வெவ்வேறு கூறுகளில் தன் தனிப்பெரும் முத்திரையைப் பதித்துக் கொண்டு தான் வருகிறது. இதற்கு காரணம் பல்கிப் பெருகி வரும் தலைசிறந்த சிறுகதை எழுத்துதாரர்கள் உலகம் முழுதிலும் ஆங்காங்கே புத்தம் புதிதாய் முளைத்துத் தத்தம் மகத்துவப் பங்கை பாங்காக இலக்கியப்பரப்பில் சமூகத்திற்காகவும் எழுத்து இறைக்கவும் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றனர். குறிப்பாக தமிழ் சிறுகதைகள் அடைந்திருக்கும் பாய்ச்சல் வேக மாற்றங்களை விதவிதமாக எழுதத்தான் வேண்டும். போற்றிக் கொண்டாடவும் வேண்டும். அத்தனை மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது நமது தமிழ் சிறுகதைகள்.

அதிலும் குறிப்பாக மொழிபெயர்ப்புப் படைப்புகள் என்பவை தமிழில் அதிக அளவில் காணக்கிடைக்கின்றன. பல மகத்துவ மேன்மை எழுத்தாளுமைகள் உலகபிரசித்திப் பெற்ற பல்வேறு புனைவுகளைத் தம் சீர்மை மிகு எழுத்துகளில் தமிழிலக்கியத்தை அலங்கரித்துள்ளனர். உலகளாவிய புகழ் பெற்ற சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து இலக்கியவெளியிலும் வாசகப் பரப்பிலும் விரியுப்படுத்தியுள்ளனர். வங்காள மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்ந்த யாத்வஷேம், உலகமொழிகளிலிருந்து தமிழில் எழுத்தாக்கப்பட்ட இக்கிகய், மரணவீட்டின் குறிப்புகள், போரும் வாழ்வும், ரசவாதி போன்ற புனைவுகள் உலகபிரசித்தி பெற்ற படைப்புகள். ஆயிரத்தொரு இரவுகளின் ஷீராசத்தாக்கிக் கதைக்தாரர்கள் கதைகள் முன்வைக்கும் சவாலை எதிர்கொள்ள வேறு என்ன முகாந்திரம் தேவை மாய விசித்திரங்களின் புனைவுகளைப் பரிந்துரைக்க.

ஆனால் உலகளாவிய இயல்பு புனைவல்லாது மாய எதார்த்த படைப்புகள் தமிழாக்கம் செய்யப் பெற்றவை குறைவே. அந்த இடத்தைத் தமநதிந்தப் தொகுப்பால் நிறைசெய்துள்ளார் எழுத்தாளர் எழில் சின்னதம்பி அவர்கள். லத்தின் அமெரிக்க எழுத்தாளுமைகளின் உலகபிரசித்திப் பெற்ற பன்மொழிப் சிறுகதைகளைப் தம் வளமைமிகுந்த எழுத்துப் புலமையில் தேர்ந்தப் படைப்பாகத் தமிழிலக்கியத்திற்கு வழங்கியுள்ளது சிறப்பு. இப்படியான பற்பல விருதுகளும் பெரும் அங்கீகாரங்களும் உலகமக்களாலும் ஆகச்சிறந்த ஆளுமைகளாலும் இலக்கியவாதிகளாலும் பெரும் பாராட்டையும் சிறப்பையும் பெற்ற புனைவுகளைத் தேர்ந்தெடுத்து வளமான மொழியிலும் தீர்க்கமான நடையிலும் மொழிப் பெயர்த்து தமிழிலக்கியத்திலும் தமிழ் வாசிகப்பரப்பிலும் விரியுப்படுத்தி இலக்கியத்திற்கான தமது பெரும் எழுத்துக்கடமையை “கடைசி வருகை” என்கிற இந்தத் தொகுப்பின் வழியே நிறைவேற்றியுள்ளார் தொகுப்பாளர்.

ஒரு மகத்துவமிக்க எழுத்தாளனால் அதுவரைக் கண்டிராத இயல்பு மனிதர்களின் கதையுலகில் புகுத்தப்பட்ட மாய லோகத்தை இயல்பான பொதுவான அன்றாட நிகழ்வுகளிலிருந்துக் கடத்தப்பட்ட விலக்கப்பட்ட இயற்கையின் வழக்கமான வரையறைகள் விளங்கமுடியாத மாய யதார்த்த நிகழ்வுகளை ஒரு அற்புதத்தால் திருத்திக் கதைகளாகப் புனைவுகளாகப் படைத்துள்ளனர் எழுத்துதாரிகள்.

உலகளாவிய லத்தீன் அமெரிக்க எழுத்துக்கவிஞர்கள் இப்படியான கற்பனைக்கப்பாற்பட்ட மாய எதார்த்தக் கூறுகளைப் புனைவுகளாக மயக்க உலகின் பாத்திரங்களை இயல்பிற்குப் பாற்பட்ட விளிம்பில் நின்றுகொண்டு தமது புனைவுகளில் கொண்டாடியுள்ளனர்.

நம் தமிழிலக்கியமும் இதுமாதிரியான மாய. மயக்க இயல்பல்லாத மனித சிந்தனைக்கும் செயலுக்கும் அப்பாற்ப்பட்ட பல அதிசயங்களையும் விசித்திரங்களையும் புனைவுகளாக ஒளித்துள்ளது. சமகால இலக்கியவாதிகளும், தமிழறிஞர்களும்,. சங்ககாலந்தொட்டு இந்த மாதிரியான மனித சிந்தனைக்குப் பாற்பட்ட படைப்புகளைப் புனைவுகளாக இதிகாசங்களாக‌ப் படைத்து தமிழுக்கு வழங்கிச் சிறப்புச் சேர்த்துள்ளனர்.

நம் இலக்கியமல்லாத பிற மொழிப் புனைவையும் உலகபுகழ் படைப்பாளிகளின் மாய எதார்த்த கற்பனைத் திறனையும் அவர்களின் பார்வையில்‌ இப்படியான புனைவுகளையும் தமிழ்மக்கள் அறிந்திடவும் தமிழிலக்கியம் கொண்டாடவும் வேண்டி நூலாசிரியர் தேர்ந்த உலகப்புனைவுகளை நேர்த்தியாக அணிவகுத்து பெரும் மெனக்கிடல் கொண்டு தொகுத்திருப்பது இலக்கியத்திற்கான செயற்கரியத் தொண்டு என்று கூறலாம்.

பழகியப் பாதையில் பயணம் செய்பவர்கள் நிஜத்தில் பெரும் பாக்கியவான்கள். அதுவரையிலும் தமிழ்க் கதைக் கண்டிராத மனித மயக்க மாய வித்தைக்கொண்ட இயல்பற்ற கதையுலகைக் காட்சிக்குள்ளாகியுள்ளனர் இலத்தின் அமெரிக்க எழுத்தாளர்கள்‌. இந்தத் தொகுப்பு முழுதும் வரம்பு மீறிய கனவு மெய்மைகளையும் புனைவுகளையும் பேசுகின்றன. இக்கதைகளின் பாத்திரங்கள் கனவுகளையும் மாயத் தோற்றங்களையும் சேர்த்துக் கட்டிய கற்பனைக் கடலின் அதீதங்களில் அளவலாவிக் கிடக்கின்றன. தனிமையின் முகட்டில் தொங்கி உழல்பவர்களாய் இருக்கின்றனர் கதை மாந்தர்கள்.

வாழ்வில் எதிர்கொள்ளும் கசப்பான அனுபவங்களைக் கடந்தவர்கள், வலிகளும் வதைகளும் நிறைய தின்னப்பட்டு உளச்சலிப்புகளில் போராடுபவர்கள் வாழ்வின் மீதான பேரச்சத்தால் எண்ணகுலைவில் சிக்கிக்கொண்டு தோல்விகளின் தழுவலில் தம்மைத்தாமே இறுக்கிக் கொண்டு இழித்தும் பழித்தும் தனிமையின் நிழலில் தவித்துக் கொண்டு தம்மைத் தற்காத்துக்கொள்வதாய் நினைத்துத் தவிக்கும் நபர்களும், எதிலும் திருப்தியைக் காணவில்லையா பெருமூச்சிட்ட இதயத்தைச் சுமக்கும் மாந்தர்களாய் எப்போதும் ஒருவித கனவுக் கூட்டில் மயக்க அதீதத்தில் உழன்றுக்கொண்டு போலியான பிம்பத்தைத் தமக்குள் உருவாக்கிக் கொண்டு அதனுடன்பேசியும் வாழ்வைக் கழித்தும் மகிழ்ந்தும் போராடியும் பல தருணங்களில் நடுங்கியும் அவஸ்தைக்காட்பட்டும் வாழும் மனநோயாளிகள் தொகுப்பில் அதிக அளவில் நிரம்பியுள்ளனர்.
இப்படியான மனிதர்கள் பெரும்பாலும் தனிமைத் தீயில் உழன்று வாழ்பவரே. மனநிலைச் சரிவில் சிக்குண்டுக் கிடப்பவர்களைச் சுற்றிய நிகழ்வுகளைக் கதைக்கிறது இத்தொகுப்பு.

சாதாரணமாக நாம் காண்பவை கடப்பவை அதிர்ந்தவைகளைக் கருக்கொண்டு கதை உருவாகப் புனைவேற்றி வடித்து விடலாம். ஆனால் நம் பண்பாட்டிற்கும் நில சூழலுக்கும் மாந்தர் அனுபவங்களுக்கும் வாழ்வியல் கூறுகளுக்கும் முற்றிலும் மாறுபட்ட வேற்று மொழியினரின்‌ மனநிலை முற்றிலும் வேறுபட்ட கலாச்சாரம் கொண்டவர்களின் தீவிரமான பெருக்கப்பட்ட உளவியல் மனநிலையில் உழலும் பாத்திரங்கள் நிரம்பிய இந்தப் படைப்புகளை மொழிபெயர்த்து தமிழுக்கு வழங்குவதென்பது அத்துணை சாமானியம் அல்ல.பெரும் அசாத்தியத்தைச் சாத்தியமாக்கியுள்ளார் எழுத்தாளர் தொகுப்பின் மொழிப்பெயர்ப்பாளர் எழில் சின்னதம்பி.

சிறு பிசகும் கதைக் கருவைத் தொலைத்து விடும். மொழியில் நேர்த்திமை அளவளாவி இருந்தாலொழிய மொழிபெயர்ப்பு என்பது கதை வாசிப்பின் கவனத்தை ஈர்க்காது. சொந்த மொழித்திறன் முழுவதாகப் பிற மொழிப் புலமை நேர்த்தியாக இருந்தால் மட்டுமே இவ்வாறான மொழிபெயர்ப்புப் படைப்பு முழுமையின் முச்சந்தியைத் தொடும் சாத்தியம் பெறும் என்பதில் பெரும் கவனம் கொண்டு நூலைக் கையாண்டுள்ளார் தொகுப்பாளர்.

எவ்வளவு வலிமையான கதையாகவோ மொழிபெயர்ப்புப் புனைவாக இருப்பினும் அது தன்னளவில் முழுமை அல்லது பகுதியாகத் திறந்துக் கொள்வது வாசகனிடம் மட்டுமே. வாசகனை சென்றடைய முடியாத மொழிபெயர்ப்புப் படைப்புகள் நிச்சயம் விளைவுகளை நிகழ்த்துவதற்கான வாய்ப்பில்லை. ஆனால் நம் நூலின் தொகுப்பாளர் தமது நூலின் மொழிபெயர்ப்பில் அணிவகுத்திருக்கும் கதைகள் வாசகனின் முழு நிறைவைப் பெற்றுள்ளது.மொழிபெயர்ப்பு நூலிற்கான வாசிப்புச் சலிப்பை முற்றிலும் தகர்க்கிறது இந்த நூல்.வேற்று மொழிப் படைப்புகளான அதிலும் ஐரோப்பிய அமெரிக்க புனைவுகள் விளங்கிக் கொள்ளவும், ஏற்றுக் கொள்ளும்படியான மனப்பான்மையை தமிழ் வாசகர்களுக்கு வழங்கியுள்ளது. .

தொகுப்பின் அத்துணை கதைகளையும் மொழிபெயர்ப்பின் சுவாரஸ்யத்தைக் கூட்டித் தமது இலக்கிய உயிரோட்டம் கூடிய மொழிக்குடுவையில் வாசகனை வாசிப்புத் தளத்திலிருந்து துளியும் நகர விடாமல் நிறுத்தி வைத்துள்ளது என்பதே பெரும் வியப்பிற்குரியது. அதீத அசாத்தியங்களைத் தமது வளம் கூடிய மொழிப் புலமையில் சாத்தியமாக்கி உள்ளார் எழுத்தாளர் என்று விதந்துப் போற்றலாம்.

1947இல் பிரேசிலின் மாய எதார்த்த புனைவுகளின் முன்னோடி எழுத்தாளர் முரிலோ ருபய்யோ அவர்கள் மனித மனத்தின் வரம்பு மீறிய கனவு மெய்மைகளையும் மாயத் தோற்றங்களையும் ஒன்று திரட்டி மனித கற்பனைக்கப்பாற்பட்ட விளிம்பில் நின்று தனிமையின் முகட்டில் தொங்கி உழலும் மாந்தர்களின் வாழ்க்கை அபத்தங்களைப் பேசும் புனைவாக “முன்னாள் வித்தைக்காரன்.” வாழ்க்கையின் திடீர் சரிவுகளால் பெரும் மன உளைச்சலில் சிக்குண்டு வாழ்க்கையின் மீது சலித்து நிற்கும் மனநிலை, இயல்பு வாழ்க்கை வாழும் மனிதரல்லாத மாய வித்தைகளால் சூழப்பட்ட வித்தைக்காரன். அவனின் மனநிலை ஒருவித தனிமையில் முகட்டில் தனித்துவிடப்பட்ட வெறுமை. கண்ணுக்கு தெரியாமல் மறைந்து மரித்துப் போக விழையும் சோகம் குடிகொள்ள இந்த உலகம் அவனுக்கு பேரச்சம் நிறைத்து பெரும்வாதை வழங்கியது.

இவ்வித்தைகளும் மாயங்களுக்கும் அவனை முற்றிலும் ஆட்கொள்ள தன்னையே மீறி அவனைத் துரத்தின. அவனை அலைக்கழித்த வினோதங்களின் மிரட்டலில் மரணத்தின் பிடியை விரைந்துத் தேடினான். ஆனால் அனைத்தும் தோற்று நிற்க தோல்விகளெல்லாம் பன்மடங்கு மலைக்க வைத்து எண்ணக்குலைவு செய்தன. கூடப்பிறந்த ஒட்டு உறவான வினோத வித்தைகளும் கைவிடவே விழைந்து விரும்பிய ஒரு சிறு காதல் அசைத்தலும் அவனைத் தூக்கியெறிய வெற்றுத்தாரனாகிப் போனான் வித்தைக்காரன். வித்தைகள் யாவும் இப்போது வெறும் பிரமை ஆகி விட்டன. அவனுக்கு நன்றாகவே புலப்பட்டது மயக்க எண்ணம் ஒருபோதும் ஆறுதலைத் தரப்போவதில்லை என்று. இது நாள் வரை தான் வெறுத்து விட்டொழிக்க விழைந்த விசித்திர விநோதங்கள் கொண்டு மந்திர உலகை படைக்கத் தவறி விட்டோமே என்கிற பின்புத்தி பெரும் மன உளைச்சலில் வித்தைகளைக் கற்பனையில் ஆரத்தழுவி நிறைவேற்றிக் கொண்டான்.

தொகுப்பின் தொடரும் அடுத்த சிறுகதை புனாப்பகுதியில் கரீப் பழங்குடி இன மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு அவர்களின் பெரும் பூர்வகுடி நம்பிக்கைகளையும் இயற்கை சார்ந்த இறைமையைப் பற்றிய மறைக்கப்பட்ட பிரபஞ்ச இரகசியங்களைக் குறிப்பறிந்து உணரும் தீர்க அறிவையும் தொலைநோக்குப் பார்வையையும் தமது வெகுவான படைப்புகளில் பிரதிலிபியாக்கிய மெக்ஸிகோவின் ஆகச் சிறந்த எழுத்தாளுமைகளில் ஒருவரான ஃபிரான்சிஸ்கோ ரோஹாஸ் கன்ஸாலெஸ் அவர்களின் “சாமியாக்கி” சிறுகதை ஒரு மேம்பட்ட படைப்பு. இந்தச் சிறுகதை அக்டோபர் மாத சிறுகதைகள் காலாண்டில் பதில் பிரசுரமாகியுள்ளது சிறப்பு. இந்தச் சிறுகதையின் நகர்வு ஒவ்வொன்றும் திடுநிகழ்வுகளையும் பழங்குடி மக்களின் தலைவனான கைலான், படைப்பின் பேறாற்றலைத் தமது நுண்திறன் கொண்டு உணரும் பாங்கும், இயற்கையின் செயலூக்கத்தைத் தமது விரல் இடுக்குகளில் கண்டறியும் பகுத்தறிவும், நுட்ப அறிவும் நம் வேட்டையாடி மூதாதயரை நினைவுக்கூர வைக்கின்றன.பெரிய ஆச்சரிய அதிர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு படித்தான சொல் முறையிலிருந்தும் முற்றாக விலகிச் செல்லாத வகையில் புனையப்பட்டுள்ள இந்தக் கதை ஆச்சரிய ரேகையை ஏற்படுத்துகிறது.

பழங்குடியினரின் இயற்கையுடனான பிணைப்பை எழுத்தின் வழியே காட்சிப்படுத்தியுள்ள தொகுப்பாளரின் எழுத்து முயற்சி நம் குடி அல்லாது நமது பார்வைக்கப்பாற்பட்ட பகுதிகளின் பழங்குடியிருப்புகளின் பண்பாட்டு வழக்கத்தைத் தமிழிலக்கியம் அறிய வழிவகுத்துள்ளது ‌சிறப்பு. சாமானியர் அல்லாத உலகத்தின் பிற இனக்குடிகள் கூட பெண்களை ஒதுக்கியும் வழிப்பாட்டுத்தளத்தில் பெண்களைத் தீட்டுப்பொருளாகத் தள்ளி வைத்து அவர்களை வெறும் உடல் துய்ப்பிற்கான கொள்வதற்கான பொருளாக ஆண்மமதைக்கும் ஆதிக்கத்திற்கும் பயன்படுத்தி வந்தனர் என்பது இந்த கதை வழியே புலனாகிறது. சற்றே வருத்தம் மேலோங்கியது. தொகுப்பின் இந்த வரிகள் கண்ணுக்குப் புலப்படாத கடவுளின் மீதான பார்வையைப் பலகோணங்களில் திருகி நிற்கிறது.

“மனிதனின் கைகளில் சாமி மீண்டும் ஒருமுறை மாண்டுப் போனான்.”

1907இல் இத்தாலியைச் சேர்ந்த பன்முகம் திறங்கொண்ட பயனீட்டுவாதத்தை முன்னிறுத்தும் படைப்பாளியாக ஜொவானி பாப்பிளி அவர்களால் வரையப்பட்ட கதையே “கடைசி வருகை”. தொகுப்பின் தலைப்பைப் சூடிய இந்தப் புனைவு மகத்துவம் நிரம்பப் பெற்ற ஒரு படைப்பு. கனவுலகின் மாய பிரம்மாண்டத்தை அதீத அசாத்தியங்களைக் கண்டெடுத்த கதைத் தொகுதி. கனவு காணும் ஒரு மனிதனின் மாய உலகில் சிருஷ்டித்த ஒரு உருவத்தின் ஆற்றாமையை அந்த மனிதனின் நீளும் கனவுகளால் சிக்குண்டு கனவுதாரனின் கனவுகளின் சாயையைப் போர்த்தி இயலாமையின் விளிம்பில் அவனது உயிர்ப்புள்ள ஆழமான சக்திவாய்ந்த கனவுகளால் இருள் சூழப் பெற்று கொடூரமான படிமங்களால் நிரம்பி வெளி வர இயலாமல் தவிக்கும் மனித பிம்பத்தின் கதறலைப் பேசுகிறது “கடைசி வருகை”.
வாழ்க்கை என்பதே கனவுகளின் சுயம். அதில் மெய்மை என்பது மாயத் தோற்றமே அன்றி வேறில்லை என்கிற தத்துவ மேதாவிகளின் கூற்றைப் பிரதிபலிக்கிறது இந்தப் புனைவு .

கனவு காணும் மனிதனின் குரூரத் தன்மையால் இழிவான வாழ்க்கையை நீட்சியாகக் கொண்டிருக்கும் அந்த பொய்மையின் பிரதிஷ்டை யால் நொந்துபோன மாய உருவின் நிலையே மனிதர்களைச் சூழ்ந்துள்ள வன்ம வாழ்வு என்பதை உணர்த்துகிறது இந்தப் புனைவு.

நீர்க்குமிழி போன்ற மனித வாழ்க்கையில் அனைத்தும் மாயக் கனவுகளே. இவ்வுலகில் கண்களுக்கு புலப்படும் எதுவும் நிதர்சனம் அற்றது. நிஷ்சாசுவமற்றது. நிரந்தரமற்றது நாம் எதைக் கொண்டு கனவாக்குகிறோமோ நம் நனவுகளும் அவற்றைச் சூடியே நம்மை சூழ்ந்திருக்கும் என்கிற மனித வாழ்வின் எதார்த்தத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது கடைசி வருகை. கடினமான கேள்விகளையும் ஊடுருவல் பொருளையும் கொண்டுள்ள புனைவு இது. பிற கதைகளை உட்கொள்வது போல இதை அவ்வளவு எளிதில் உள்வாங்க இயலாத ஒரு ஆழத்தைத் தனக்குள் புதைக்கொண்டுள்ளது. இத்தனை கடினமான புனைவைப் பொருட்புதிர் விலக்கியப் பக்கங்களின் கதைகளை உளவியல் சிக்கல்களால் நிரம்பப்பெற்றப் புனைவை மொழிபெயர்த்து வழங்கியுள்ளது தொகுப்பாளரின் மேலாண்மை பொருந்திய மொழி மீதான பற்று கட்புலனாகிறது.

தொடரும் புனைவுகளில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற பிரபல எழுத்தாளர் ஜுனிசிரோ டானிஸகி அவர்களால் 1912ஆம் ஆண்டில் எழுத்தாக்கபட்ட சிறுகதை “சிலந்தி”. மாறுபட்ட மனித உளவியல் குரூரத்தை உள்ளார்ந்த அடர்த்திக் கூடிய வக்கரத்தை மெல்லியதாய் வெளிப்படுத்தாது, இயல்பின் ரசிகனாய் கலைஞனாய் மிளிரும் ஒரு மனிதன் உள்ளுக்குள் ரகசிய குரூர ரத்த வாடை துய்க்கும் மனிதநேயமற்றக் குரூரத்தைச் சுமந்து மனித வேதனையில் மனக்கிளர்வு உண்டு நிற்கும் ஒரு மனநோயாளி உருக்குத்துதாரியின் வாழ்நாள் பேரவாவைப் பேசுகிறது சிலந்தி. புனைவிலக்கியத்தில் மனித உளவியல் பங்கு என்பது மிகவும் அசூயையானது. மனித மன இயக்கம் சில சமயம் அறிவுப்பூர்வமாகவும் வெகுநேரம் உணர்வுகளின் அல்லாட்டத்தில் மல்லுக்கட்டிக் கொண்டுத் தமது வாழ்நாள் விழையை வன்மவதையின் விளிம்பில் நின்று பூரணத்தின் வாசலைத் தொட்ட பின்பே ஆற்றுப்படும் என்கிற மனித மனத்தின் இரக்கமற்ற இருள் கவ்விய உளவியல் பெருக்கத்தைக் கதைக்கிறது இந்தப் புனைவு.

மனித உடலில் குருதியையும் வலியால் வதைபடும் அந்த உயிர் படும் வேதனையை நிதம் உண்டு களித்து கொண்டாடி மகிழ்ந்து மனமது மறுத்துப் போய் இன்னும் வேண்டும் சித்திரவதைக் கிளர்ச்சி என்கிற வக்கிர வெறித் தலைதூக்க பச்சிளம் மேனி கொண்ட பெண்ணுடல் மீது உருகுத்த அல்லாடுகிறது. அதற்குத் தக்கன தருக்கான பெண்ணுடல் தேடித் தமது ஆன்மா முழுவதையும் அந்த உருவின் மீது ஊற்றவும் விழைகிறது வக்ரம் கொண்ட அந்த கலைஞனின் மனம். அதற்கான பெரும் மெனக்கிடல் அவனை அவன் லட்சியத்தை உச்சம் தொட செய்கிறது. தமது எண்ணத்தைப் பரிபூர்ணமாக்கும் பெண்ணைக் கண்டடைந்துத் தமது விழையை சிலந்தியின் உருக் கொண்டு அவளது பச்சைதோல் முதுகில் முடித்து வைக்கிறான். ஆத்ம திருப்தியும் அடைகிறான்.

மனித மன உணர்வுகளை அழுத்தமான தமது எழுத்ததிகாரத்தில் திண்ம மொழி வளத்தில் ஆங்காங்கே உணர்ச்சிப் பிரவாகச் சொற்களின் கோர்வையில் திடுக்கிடும் சொற்களின் பயன்பாட்டில் இறுதிவரை வாசகனை உருகுத்தலின் வேதனையை பக்கங்களின் வழியே வலிக்கச் செய்கிறது. தொகுப்பாளர் புனைவை சின்னபார் தாது நிறைந்த சொற்களின் கூர்மைக்கூடிய பயன்பாட்டில் நிரப்பி இறுதிவரை வாசகனை உணர்வுக் கிடங்கில் கிடத்தி வைக்கிறார்.

முதல் சிறுகதை காலாண்டிதழில் வெளிவந்த அமெரிக்காவைச் சேர்ந்த ஆகச் சிறந்த சிறுகதை எழுத்தாளர், கற்பனைகளின் அதீதத்தைப் புனைவாகப் படைப்பதில் வித்தகரான செலினா ஆண்டர்சன் அவர்களின் கைவண்ணம் “ஞான மாதாவின் தேனீர்” சிறுகதை 2020இல் “சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள்” எனும் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. பெற்றோருக்கு அடுத்த இடத்தில் வைத்து போற்றப்படும் ஒருவராக சமய அறிவுரைகள் சொல்லி நல்வழிப்படுத்தும் பொறுப்புமிக்கவரான ஞானமாதா அவர்களை மையமாகக் கொண்டுப் புனையப்பட்ட சிறுகதை இது.தனிமையின் ஒவ்வாமையால் உழலும் பேசும் பாத்திரமாக கதாநாயகி. தனிமையின் பொருட்டு தனது ஒதுக்கான வெறுப்பார்ந்த குணத்தால் இயல்பான வாழ்விலிருந்து விலகி மாய உருவங்களையும் கற்பனை உரையாடல்களிலும் சிக்கிக்கொள்கிறது சிந்தனை. இது ஒருவித மனப் பிராந்தி மனப்பிறழ்வும் கூட. பெரும் மன உளைச்சலின் பொருட்டு நெறிபடும் சீர்மைப் பிம்பம். அனேகர் இதுபோன்ற பிம்பங்களுடன் பேசியும் பழகியும் இயல்பு வாழ்விலிருந்துத் தனித்து விடப்படுகின்றனர். இதையே நாம் நம் மனசாட்சி என்று அழைக்கிறோம்..

தீவிரமான பெருக்கப்பட்ட மனநிலையில் குழப்பங்கள் சூழ திண்ம முடிவுகளோ அல்லது வருந்தக்கூடிய சூழலையோ கடக்க முடியாமல் இருக்கும் பட்சத்தில் தீர்வை நாடும் மனம் அது பிரதிபலிக்கும் மாயத் தோற்றமே ஞான மாதா போன்ற அருவமற்ற உருவங்கள். அவரவர் நம்பிக்கையின் நீட்சி மாயத் தோற்றத்தைத் தோற்றுவித்து உருவ பிம்பமொன்றைப் பிரதிபலிக்கும். வாழ்க்கையில் வெறுமை, விரும்பியவர் ஒதுக்குதல், சுவாரஸ்யமற்ற ருசிகரமற்ற நிலை, அபிலாஷைகளின் பூர்த்தியின்மை, வாழ்வின் மீது அயர்ச்சி, பிறரிடமிருந்து தனித்து விடப்படுதல், தேவையற்ற எதிர்பார்ப்புகள், எதிர்பார்ப்புகளின் ஏமாற்றம், விருப்பங்களை மாற்றிக்கொள்ளும் தெளிவின்மை, புறக்கணிப்புகளின் உச்சம் என மனித மனத்தின் வெகுவான உளவியல் சிக்கல்களில் உழன்று மனப்பிறழ்வில் அகப்பட்டு பெரும்பாலானோர் தம்மைச் சுற்றிய வட்டமிட்டுக் கசந்தவர்களாகக் கிடப்பர்.அப்போது மனதின் ஆற்றல் இந்த இயல்பற்ற ஆற்றாமையைக் கழுவிவிட உருவங்களை உண்டு பண்ணும். இங்கு ஞான மாதாவாக நமது கதாநாயகிக்கு மனம் என்னும் ஆழம் ஏற்படுத்திய மருட்சியின் மறு உரு.

புனைவின் தமிழாக்கம் தேர்ந்தச் சொற்களின் அபரீதக் கோர்வையாய் உள்ளத்தில் உறைந்து நிற்கின்றன. மாறுபட்ட மொழிபெயர்ப்பாக வாசகனை அடுத்தடுத்தப் பத்திகளுக்கு இமை கொட்டாமல் கடத்துகிறது. ஆங்கிலப் பதத்திற்கான தேர்ந்த ஆழமான தமிழ் பதத்தைக் கொண்டு தொகுப்பு முழுமையிலும் தவழவிட்டுள்ளார் மொழிப்பெயர்ப்பாளர் எழில்சின்னதம்பி அவர்கள்.

1951 இல் வெளிவந்த “தண்டவாள மாற்றி” சிறுகதை மெக்சிகோ எழுத்தாளர்களின் தலைசிறந்த எதார்த்த எழுத்துக்களின் சொந்தக்காரரான ஜுவான் ஹோசே அர்ரியோலா அவர்களால் எழுத்துக் காட்சியாக்கப்பட்ட புனைவு முயற்சி‌. இதுவும் மாய யதார்த்தத்திற்கும் விசித்திர வினோதங்களுக்கும் பாற்பட்டப் புனைவு. பிரபஞ்சவெளியில் மறைந்து நிற்கும் ரகசியங்களின் விளிம்பு இந்தப் புனைவு.

கதையின் நகர்வு ஒருவித திராபையான கதவுகளைக் கொண்ட அறைகளைத் திறக்க மேற்கொள்ளும் திகிலூட்டும் நொடிகளைக் கொண்டு மனத்தின் எல்லா விதமான மயக்க மருட்சிகளை ஏற்படுத்தும் வல்லமை கொண்ட புனைவாகத் ‘தண்டவாள மாற்றி’ வாசகப் பரப்பை அசத்துகிறது.

பொய் உணர்வையும் போலியான மயக்க அதீதத்தையும் துல்லியமாக்க மாயலோக தரிசனம் தந்துள்ளார் எழுத்துதாரர். வாசிக்கும் தருணங்கள் மாய உலகத் திரை காணலைப் பிரம்மாண்டமாக தோற்றுவிக்கிறது. தொகுப்பாளரின் மைக்கோல் வண்ணம் வாசகனைப் பயண அயர்ச்சியில் வினோத சுழற்சியில் ஆட்படுத்தியது.

முற்றிலும் மனமது கொள்ளவியலா பகுதிகளும் நம்பகமற்ற பாத்திரப் புனைவுகளும் எழுத்தின் சுபிக்ஷம் கைக்கொண்டு வாசகனை சிலிர்பூட்டுகிறது. பிள்ளை மனநிலையை உண்டுப்பண்ணுகிறது . மாய உலகிற்குள் புகுத்தி ஆளரவமற்ற அச்சந்தரும் அதிர்ந்தப் போக்கை உருவாக்கி அடுத்தடுத்த காட்சி எதிர்பாரப்புகளை தோற்றுவிக்கிறது. பேரச்சம் சூடி நிற்கும் எழுத்துக்களை மாயப் பிடியில் நிறுத்தி வைக்கிறது.

கரு கொண்டுக் கதைப் பதிப்பித்தக் கதைக்காரர் தம் புகழ்ச்சி மாலை சூடினாலும் வேற்று மொழியின் விஸ்தாரத்தை சுவாரஸ்யமாக அச்சு அசலாக படைப்பின் மூலத்தை சற்றும் பிசிறின்றி அலுங்காமல் குலுங்காமல் மொழியைப் பந்தாட விட்டு அதே ருசிகரத்தைச் சுவை மாறாமல் கூடுதல் நளினமேற்றிச் செரிவான படைப்பாகத் தமிழுக்கு வழங்கியுள்ளது வெகு சிறப்பு.

மனித வாழ்வின் பயணங்கள் என்பவை ரயில் பயணங்களின் யதார்த்தம். உடன் பயணிப்பவர் இறுதிவரை உடன் வருவதில்லை. நடுவில் ஏறுபவர் உறவாக ஆவதும் இல்லை. கடந்தவர் கடத்துபவர் என அனைவரும் இந்த மீச்சிறு வாழ்வின் இடைப்பட்ட காலப் பிரதிநிதிகள். வந்துக் கொண்டும் சென்று கொண்டும் இருத்தலின் அடையாளத்தை மட்டும் விட்டு சென்று விலகிச் செல்வர். இது வாழ்தலின் பொருட்டில் மட்டுமல்ல மரணத்தின் மருண்மைக்கும் பொருந்தும் என்பதை வாழ்க்கைப் பயணத்தின் உருநிழலின் ஒதுக்கத்தில் நின்று பேசுகிறது, வெனிசுவேலாவைச் சேர்ந்த இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற மகத்துவ எழுத்துதாரியான அந்தோனியா பலசியோஸ் அவர்களால் 1990 இல் சித்தரிக்கப்பட்ட சீர்மைமிகுப் புனைவான “பயணம்”.

உலகச் சிறுகதைத் தளத்தில் இதுவொரு மேம்பட்ட புனைவு. பயணத்தின் அறிதுயில் நிலைக்கு ஆட்படும் மனித மனம் பல படிநிலைகளைக் காண்கிறது .டேலியாவின் பயணமும் அப்படித்தான். உடன் வந்துப் பயணித்துப் பேசிப் பழகிய மனிதர் கண்டுகளித்த பொருட்கள் என அனைத்தும் பாரிய இயக்கமில்லாத உருவமில்லாத அரவமற்ற இருட்டில் தொலைந்து விட்டதை உணர்கிறாள் டேலியா.

இங்கு எல்லாமே மாயை எதுவுமே மெய்யற்றது. நிலையற்றது. இருள் மட்டுமே நிலையானது. அதுவே நம் வாழ்வின் இறுதிநிலை இன்று நமக்கான உறவும் சுற்றமும் வாழ்வின் முதிர்ச்சியில் நம்மை விட்டு வெகு தொலைவில் விலகிச் சென்றுவிடுவர். தனியாக இவ்வுலகிற்கு வந்த நாம் துணையாக பலர் வாழ்வில் சூழ்ந்தாலும் இறுதியில் தனியாகவே தனிமையின் துணை வழங்கிவிட்டு செல்வர் என்பதே “பயணம்”நமக்கு வழங்கும் நிலையாமையின் கற்பிதம். பிரதியேகமாக மறைக்கப்பட்ட மறுக்க முடியாத யதார்த்தம். இந்த ஆழிசூழ் உலகத்தில் மெய்மைக் கோலம்.

மனித மனம் அபிலாஷைகளின் இறுக்கங்களில் கட்டுண்டுத் தனிமை நோய் பீடித்து அவதிப்படும் வேளை உறவுக்காகவும் வாழ்த்துணைத் தேடியும் சுற்றித்திரியும் தனிமையின் பேரச்சம்,போதாமை, வாழ்க்கைப் பேதைமை, திண்மமில்லா நிலை, சுற்றியே இருண்மை, வாழ்க்கையின் அடிப்படைக்கான சிறுதுளிக் கிளர்வும் நீக்கப்பட்டு சிக்கல் உணர்வு சூழ மனித மனம் பேரிரைச்சலைச் சந்திக்கிறது. அந்த இரைச்சலின் உரையாடல்களாக உதிர்க்கும் உதிர்ந்திடும் சொல்லாடல்கள் கண்ணெதிரே நம் உணர்வுகளை உறவுகளை நாடிய ஏக்கத்தைத் தாங்கி நிற்கும் . அவ்வாறு தாங்கும் உளவியல் வெளியில் தோன்றுபவை யாவும் உருநிழல் ஏற்று பிரதிபலிக்கும்.மனம் விழையும் துணையைத் தேடி வாழ்ந்த காலங்களில் ஏங்கிய உறவுகளைப்போலவே போலி மாயத்தோற்றம் சூடி கண் முன் நிழலாடும். முன்பே பெரும் குழப்பத்திலும் தனிமையின் உருக்குத்தலில் தமக்குத்தாமே ஒன்றுமில்லை நான் இயல்பாக தான் இருக்கிறேன் என்கிற போலிப் பகட்டுப் போர்வையைத் தாங்கி நிற்கும். அசலில் மனம் தனிமையைப் போக்க ஆள் தேடி விம்மும். மெல்லமெல்ல கற்பனையின் மாயப்பார்வை ஒருவித மாயமனிதர்களையும் அவர்களின் ஒலிகளையும் உரையாடலாகப் பிரதிபலிக்கும். இவை யாவும் கனவுகளே என உணர உணர்த்த துணையின்றி மாய நிகழ்வுகளிலேயே அகப்பட்டு திக்குமுக்காடும். இந்தத் தனிமையின் பீடிகை பேரச்சத்தை அவர்களுக்கு உண்டு பண்ணும். வெகுதொலைவில் தோன்றிய மாய பிம்பங்களின் சாயை மனத்தின் பலவீனத்தால் மெல்ல நகர்ந்து அவர்கள் முழுவதுமாக ஆட்கொள்ளப்பட்டுத் திகிலூட்டும். தமக்குள் அவர்களை இழுத்துச் சென்று எப்போதும் சிக்கலான நூற்கண்டு போலச் சிக்க வைத்து விடும். அநேகர் தமது வாழ்நாள் இறுதிவரை தமைச்சுற்றிய இப்படியான மாய உறவுகளுடன் உறவாடிக் களித்திருப்பர். இறுதியில் மரித்தும் போவர்.

அமெரிக்காவின் ஆகச் சிறந்த சிறுகதைப் புனைவாளர் ட்ரூமேன் கபோட்டி அவர்களால் உயிர் ஊட்டப்பட்ட எழுத்தான “மிரியம்” சிறுகதை தனிமையில் சிக்குண்டு மனித உளவியலின் உறவுகளுடனான வாழும் அபிலாஷைகளின் புறக்கணிப்பால் ஏற்பட்ட அல்லாட்டத்தை அதன் விளைவில் தோன்றிய மிரியம் என்கின்ற மாய உருவம் ஏற்படுத்திய பேரச்சத்தில் திகிலூட்டத்தில் திடுக்கிடும் திருமதி மில்லரின் சிந்தனை சிக்கல், அமைதியின் மேல் மனம் ஒரு நூற்கண்டாகச் சுற்றி உறக்கம் போன்ற ஒருவித சிந்தனை மயக்க அதீதத்தை உண்டு பண்ணி மில்லரை அலைக்கழித்தது. வெகுகாலமாக உயிரற்ற உருப்படிகளுடன் தமது வாழ்வைக் கடத்திய மில்லர் வெறுமைச் சுமந்த அவரின் மனம் உறவு ஏக்கத்தை உள்ளுக்குள் புதைத்துக் கிடந்தது. அதன் தாக்கமே மிரியத்தின் மாயத் தோற்றத்தில் அகப்பட்டுக் கிடுகிடுத்து இறுதியில் தன் நிலை உணர்ந்து மீள்நிலைக்குத் திரும்புகிறார் திருமதி மில்லர்.

வளவளப்புக்கு இடமின்றி எழுத்தின் மையம் வாசகனும் வாசிப்பும் என்பதை கருத்தில் கொண்ட எழுத்துதாரி மனித மனத்தின் பல்வேறு கோணங்களைப் படைப்பின் வழியே நிறுவியுள்ளார். இப்படியான தேர்ந்தப் படைப்புகளைக் கைக்கொண்டுத் தொகுப்பை உரமேற்றி வளமாக்கியுள்ளார் நூற்தொகுப்பாளர். அவருடைய மொழியும் எழுத்து நடையும் கூடுதல் பலம். வாசகனை ஒருபோதும் சோதிப்பதில்லை.
அருகில் அமர்ந்து அவரே தேனூறும் தமிழில் கதை சொல்லியாக உருமாறி மாய யதார்த்தப் புனைவுகளை உணர்வுப் பெருக்கின் நீட்சி மிகுந்த சுவாரஸ்யம் கூட கதைகளைச்ச் சொல்லி முடிக்கிறார்.

பிரபஞ்சத்தின் மெய்யாளுமை நம் பிள்ளைகள்‌ அவர்களின் உணர்வுகளும் எதிர்பார்ப்புகளும் கொண்டாட்டங்களும் புரிதல்களும் பெரியவர்களின் சேகரித்த அறிவிற்கு முற்றிலும் முரண்பட்டது. குழந்தைமை மூலமாகவும் பிள்ளைப் பிராயத்தின் வழியாகவும் இயல் முரணிய புனைவின் உருவாக்கமே சிலியைச் சேர்ந்த அறிவியல் புனைவுக் கதைகளின் அரசியாகவும் சிறார் இலக்கியத்தின் தன்னிகரில்லா எழுத்துதாரியாகவும் அறியப்படும் எலினா அல்துனாட்டே‌ அவர்களால் 1977 இல் பாந்தமாகப் பிள்ளைகளின் ஏக்கங்களை எதிர்பார்ப்புகளை பெற்றோர்கள் தம் பிள்ளை மீதான ஆதிக்க வட்டத்திலிருந்து வெளிவந்து குழந்தைகளின் கற்பனை உலகிற்குள் அவர்களின் பிடித்தத்திற்குள் பிரவேசித்து அவர்களின் எதிர்பார்ப்புகளை வியனுலக விந்தைகளைத் தனதாக்கிக் கொள்ளும் முனைப்பைப் பெற்றோர் யாவரும் கையாள வேண்டும் என்கிற பிள்ளை மனதின் உளவியல் எதிர்பார்ப்புகளைப் பேசுகிறது “வண்ணத்துப்பூச்சி மனிதன்” சிறுகதை நான்கு சுவருக்குள் உள்ளொடுக்கப்பட்ட ஒரு குழந்தையின் வெளியுலக ஏக்கம். தனக்குக் காண்பிக்கப்படாதஅந்த உலகை பெற்றோர் உறவுகள் அல்லாத அந்தப் பிரபஞ்ச வெளியை காண ரசித்துத் துய்க்க வீட்டை கடந்து வெளியேறுகிறாள்.

இதுவரை அவளுக்குப் பாதுகாப்பானதாக மனமுவந்ததாக இருந்த வீடு பலமற்று படி தாண்டியதும் உலகம் மாய வித்தைகள் நிரம்பியதாகக் கட்டுப்படுத்தவியலா படிமங்களின் உருவங்களாகத் தீய விலங்காய் அச்சுறுத்துகிறது. திக்கற்று துழாவியக் குழந்தையை வண்ணத்துப்பூச்சி மனிதன் தமது மாய வித்தைகளில் அசத்துகிறான். குழந்தைமையின் பரிமாணத்தில் மினுக்கும் சுவாரஸ்யத்தில் தன்னை இழக்கிறது அந்தப் பச்சிளம் பிள்ளை.ஆரவாரம் கூட்ட திளைக்கிறாள். அந்த மாய மனிதனின் மென்மையான அன்பும் மகிழ்ச்சியூட்டும் நேசமும் அவளை ஒரு நாளும் சலிப்படைய வைக்கவில்லை. தமது ஆழ்மன ஏக்க நிறைவின்மையை அந்த வண்ணத்துப் பூச்சி மனிதன் தமது பூரண அன்பினால் பூர்த்திச் செய்கிறான். அவள் எதிர்பார்த்த அந்த பேரன்பும் சுதந்திரமும் இயல்பைத் தாண்டிய மகிழ்கூடிய திண்டாட்டங்களும் அவளுக்குள் பெரும் உளக்களிப்பை ஏற்படுத்தியது.

திடீரென மறைந்துப் போகும் அந்த மனிதனைத் தொலைத்து தேடி அழுகிறாள் பிள்ளை. குழந்தையின் பரிதவிப்பை உணர்ந்த தந்தை அவள் கண்டதும் கொண்டாடிய யாவும் மாயபிம்பங்களே. கற்பனையே என்பதைப் புரிய வைத்து குழந்தையின் எதிர்பார்ப்பை அவள் தேடித் திரிந்த வெற்றிடத்தைக் கதை சொல்லியாக தன்னை உருமாற்றி நின்று பூர்த்தி செய்கிறார் தந்தை.

குழந்தைமையின் விஸ்தார லோகத்தின் அதிசயங்களையும் ஆச்சரியங்களையும் முழுமையாக எழுத்தில் வார்த்திட முடியாது. அத்துணை வினோதங்களும் நம் கற்பனைக்கப்பாற்பட்ட அந்த உலகை அந்தக் குதூகலத்தைச் சொல்லாடிக் களிக்கிறது கதை.

மொழிபெயர்ப்பாளரும் கதைக்காரருக்குச் சற்றும் சளைத்தவர் அல்லர் என்பதைத் தமது எழுத்துப் புலனாய்வில் ஒவ்வொரு கதைகளையும் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் . கதைக்களத்தில் வாசகனைத் திருப்தியடையச் செய்து பரிபூரணத்தை நிலைநாட்டி வெற்றிவாகை சூட வழிவகுக்கிறது தொகுப்பு.

எப்போதும் புனைவிலக்கியத்தின் உளவியல் பங்கு என்பது மிக முக்கியமானது. இன்னொரு மனிதரின் வாழ்க்கையைப் புனைவின் வழியே துய்த்து அனுபவம் பெற புனைவுகள் பேருதவி செய்கின்றன. வாசிப்பனுபவம் வழியாக இது வாய்த்தும் விடுகிறது. ஒவ்வொரு கதையும் கூடுதல் உயிர்ப்பும் அசத்தலான மனிதர்களின் இயல்பின் சாயலாகவும் அமைந்து வருவதை வாசிக்கிற யாரும் உணர்ந்து விட முடியும். தொகுப்பாளர் ஒவ்வொரு கதைக்காரரின் வாழ்ந்த காலப் பதிப்புகளையும் புனைவுகளின் பதிப்புகளையும் எழுத்துக்களின் சிறப்புகளையும் தனித்துவத்தையும் அணிவகுத்துப் பதிவிட்டிருப்பது ஒவ்வொரு கதைக்கான பின்புலத்தையும் ஆய்வையும் தேடி அலைய தேவையின்றி நூலின் பக்கங்களிலேயே கண்டடைய வழிவகுத்துள்ளது சிறப்பு.

மனித மனத்தின் அபத்தமான உளவியலை பேசுகிறது ஒவ்வொரு புனைவும். மொழியின் சீர்மையுடன் வாசகனை கதைக் காட்சியகத்திற்குள் புகுத்த எழுத்தாளர் எழில் சின்னதம்பி அவர்கள் மேற்கொண்ட பெருங்மெனக்கிடல்களும் தீர்க தமிழாய்வும் தொகுப்பை உச்சம் பெற செய்கிறது.

தெறிப்பான மொழியும் கோர்வையான வரிகளும் வாசகனை வாசிப்பு வெளியிலிருந்து கடத்திடாது இருத்தி வைக்கிறது. தத்துவ உரையாடல்களோ கோட்பாட்டு இறுக்கங்களோ இன்றி உலகமொழி மாய யதார்த்த உளவியல் சார்ந்த உலகளாவிய எழுத்தாளுமைகளின் புனைவுகளைத் தமிழிலக்கிய வாசகப் பரப்பில் மொழிபெயர்ப்பின் வலிமையில் கூடுதலாக ஒளிர்ந்து நிற்கிறது நூல்.

நம் தமிழ் சிறுகதை இலக்கியம் அல்லாது உலக மொழிக் கதைகளையும் ஆகச்சிறந்த எழுத்து கவிஞர்களின் படைப்புகளைச் சராசரி அல்லாது விளிம்புநிலைப் புனைவுகளை எழில்மிகு நம் தாய்மொழியில் மீள்புனைவு செய்து வாசக வெளிக்குள் விரவ மேற்கொண்ட முயற்சிக்கு என் பாராட்டுகள். தங்களின் மேலான இந்த இலக்கியத் தொண்டு இத்துடன் ஒடுங்கி விடாமல் தங்களுக்குள் துளிர்விடும் புதிய படைப்புகளையும் உலக தத்துவ எழுத்துக்களையும் தமிழ் இலக்கிய வெளியில் படரவிட்டு நிரப்பிட வேண்டும் என்கிற வேண்டுதலை முன்னிறுத்தி உளமார்ந்த வாழ்த்துக்களையும் சேர்த்துப் பதிவிடுகிறேன்.
நன்றி.

நூலின் பெயர் : கடைசி வருகை
நூல் ஆசிரியர் : எழில் சின்னதம்பி
பக்கம்: 176
விலை : ₹ 280
வெளியீடு : நூல் வனம்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *