பேரிரைச்சலோடு பாய்ந்துவருகிற கடலலைகள்
நொடிப் பொழுதில் தன்னை சுருட்டிக் கொண்டு
புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் மீண்டும் செல்வதைப்
போன்றே பெண்களும் வாழ்ந்தாக
வேண்டுமென ஆண்டாண்டுகாலமாய்
இந்த சமூகம்
வலியுறுத்திக்கொண்டிருக்கிறது.
மூடத்தனத்தின் முடை நாற்றம் வீசுகின்ற இந்த பழமைவாத சிந்தனைகளையும்,
கழுத்தில் மாட்டப்படுகிற நுகத்தடிகளையும், முதுகில்சுமக்க
நிர்பந்திக்கப்படுகிற கலாச்சார சிலுவைகளையும் இந்த சமூகத்தின் மனசாட்சியின் முன் நிறுத்துகிற கவிதைகள் பொங்கிவழிகிற காலமிது.
புதிய சிந்தனைகளின் வழித்தடங்களாக தங்களை தகவமைத்துக் கொண்ட பெண்களின்
கரங்கள் எழுதிக்கொண்டே இருக்கின்றன.
வாசிப்பாளர்களின் கண்வழி நுழைந்து இதயம் தொடுகிற எளிமையும், வலிமையும் மிக்க
பல கவிதைத்தொகுப்புகளும் வெளிவந்துகொண்டிருக்கிற காலமிது.
அந்தக் கவிதைகளின் வரிசையில் ஒன்றாக
கவிஞர் பா.மகாலட்சுமியின் கூழாங்கற்கள் உருண்டகாலம் என்ற கவிதைத் தொகுப்பும் இணைகிறது..
எழுவதும்,வீழ்த்தப்படுவதுமான
சமநீதியற்ற பெண்களின் வாழ்வியலை, அனுபவித்த துயரங்களை, ஆழ்மனதின் ஆசைகளை, மொழியிருந்தும் பேச இயலாமல் புதைத்து வைத்த ரகசியங்களை,
இயற்கைக்கும் பெண்ணுக்குமான தொப்புள் கொடி உறவின் பந்தத்தை, இழந்த காதலின் வலியை, மிக மிக நுட்பமாக தனது நூலில் பதிவுசெய்திருக்கிறார்
கவிஞர் பா. மகாலட்சுமி..
இருண்ட காலத்திலிருந்து வெளிச்சம் உருவி வெளி வருகிற ஒளிரும் கூழாங்கற்களாய் இவரது கவிதைகளும் இருட்டுக்கும் வெளிச்சத்திற்கும் நடுவில் அல்லாடும் பெண்களின் வாழ்வியலை
அச்சு அசலாக வெளிப்படுத்துகிறது..
“எல்லைகளையும் எண்ணங்களையும் உங்களால் ஊகிக்க இயலாத
பிரபஞ்சப் பெருவழி
பெண் .” நான்
என்ற முழக்கத்தோடும்,
” இது என் உடல் என் வாழ்வு
வேலி தேவையற்றது
உங்கள் சுடு சொற்கள்
ஒரு பொருட்டல்ல எனக்கு
நான் நெருப்பையே நெய்பவள்’
-என்ற இறுமாப்போடும் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிற கவிஞர்,
“பெண்களின் ஆழ்மனதை மட்டும் அகழாய்வு செய்து விடாதீர்கள் கிடைக்கக்கூடும்
கொலை செய்யப்பட்ட
அவர்களின் பிணங்களோடு
உங்களின் கைரேகை படிந்த
கூராயுதங்களும்”
-என்று அறச்சீற்றத்தோடு பதிவு செய்து தன் கவிதைகள் நெருப்பில் நெய்யப்பட்டவை என்பதனை உணர்த்துகிறார்.
பற்றி எரிகிற கவிதைகள் மட்டுமல்ல பனித்துளி போல் சில்லிட்டு கிடக்கிற கவிதைகளும் இந்த தொகுப்பில் இருக்கின்றன என்பதனை உணர்த்துவதற்கு,
‘நான்கு அறைகளிலும் அன்பைநிரப்புங்கள்
எடையற்று மிதக்கட்டும் இதயம்’
‘அதிகாலைகளில்
உன் நினைவுகளைப் பருகுவதைவிட
அத்தனை சுவையானதாக இல்லை
தேநீர்’
” என் பாலை
குளிர்ந்த பொழுதொன்றில் தான் உணர்ந்தேன்
உன் வார்த்தை திரவமாகிவிட்டதை”
எனக் காதலாகிக் கசிந்துருகுகிற கவிதை வரிகள் நம்
எடை குறைத்து காற்றில் மிதக்கவைத்து
கவிதைத் தொகுப்பின் தணலை புனலாக்கி நம்மை ஆற்றுப்படுத்துகிறது.
பெண்ணிற்கும் நிலத்திற்குமான தொடர்பு அவள் உயிருக்கும் உடம்பிற்குமான தொடர்பினை ஒத்தது என்பதனை மகாலட்சுமியின் கவிதைகள் அழுத்தமாக பதிவு செய்திருக்கின்றன .
விற்று விட நேர்ந்த தனது பூர்வீகத் தோட்டத்தை பார்க்கிறபோது ,
மலையடிவாரக் கட்டாந்தரையில்
அப்பாவின் குரலும்,
பருத்திச் செடியில் வெடித்துச் சிரிக்கிற அண்ணன்முகமும், தலையாட்டும் மூக்குத்தி பூக்களில் அக்காக்களின் சாயலும், தன் மீது வந்து உதிர்கிற வேப்பம் பூக்களில் அம்மாவின் நலம் விசாரிப்பும் உணரப்படுவதாக
உரைக்கிறார் கவிஞர் ..
‘நிலங்கள் கைமாறிக் கொண்டே இருந்தாலும் அழியாமல் இருக்கின்றன வாழ்ந்தவர்களின் வாசனை’
-என்ற வரிகள் நிலமெனும் நல்லாளை
இழந்தவர்களின் அகவலியை உணர்த்துகிறது..
நிலத்தை இழந்தது மட்டுமன்றி
ரசித்து ருசித்து தேநீர் பருகும் வாய்ப்புகூட உழைப்பாளி பெண்களுக்கு
கிடைப்பதில்லை என்பதனை,
“வாய்ப்பதேயில்லை
தேநீர் கோப்பையின்
கடைசிச் சொட்டு வரை
ருசித்துப் பருக
தேயிலை பறிப்பவளுக்கும்
தேநீரை தயார் செய்பவளுக்கும் ”
-என்ற வலிமிகும் வரிகளால் உணர்த்துகிறார் கவிஞர்.
எண்பத்து எட்டு பக்கங்களில்
பதியனிடப்பட்ட
அழுத்தமான கவிதைகளும்,
கவிதைத் தொகுப்பின் மொத்த உணர்வுகளையும் வாசகர்களுக்கு உணர்த்தி விடுகிற முன் அட்டைப்படமும் இந்த தொகுப்பினை
பெண்ணியம் பேசும் சிறந்த படைப்பாக வாசகர்களை உணரவைக்கிறது..வாழ்த்துகிறேன் , தொடர்ந்து எழுதுங்கள்.
– கோவை மீ.உமாமகேஸ்வரி
நூலின் பெயர் : கூழாங்கற்கள் உருண்ட காலம்
( கவிதைகள் )
ஆசிரியர் : பா.மகாலட்சுமி
விலை :120
முதல் பதிப்பு : ஆகஸ்ட் 2022
வெளியீடு : சொற்கூடு பதிப்பகம்
57, வடிவேல் நகர்
மாவுமில் எதிர்புறம்
நாகமலை புதுக்கோட்டை
மதுரை – 625019
அலைபேசி – 9578250173 , 8778647873
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.