நூல் அறிமுகம்: அ.இலட்சுமிகாந்தன்,அ.உமர் பாரூகின் ”முற்போக்கு எழுத்தின் தடங்கள்” – து.பா.பரமேஸ்வரி
நூல் : முற்போக்கு எழுத்தின் தடங்கள்
ஆசிரியர் : அ.இலட்சுமிகாந்தன்,அ.உமர் பாரூக்
விலை : ரூ.₹250/-
பக்கங்கள் : 254
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

வணக்கம்.
இலக்கியங்கள் பல்வேறு ஆளுமைகளின் கைபக்குவத்தில் விதவிதமாக வடிவு பெறும். பலதரப்பட்ட எழுத்தாளுமைகளும் இலக்கியவாதிகளும் உலகளாவிய மொழிகளில் இன்றளவும் இலக்கியங்களைச் சிறப்பித்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழிலக்கியம் எப்போதும் பிற மொழி இலக்கியத்தளத்திலிருந்து தனித்தே நிற்கும். தமிழிலக்கியவாதிகளும் பிறமொழி ஆளுமைகளிலிருந்து தனித்திருப்பர்.

ஆக, இலக்கியம் என்பது அழகியல் அரசியல் சிந்தனைவியல் ஆகியவற்றின் கூட்டுத் தொகுப்பு. படைப்புக்கள் என்பது அவரவர் இயல்பிலிருந்து வெளிப்படும் உன்னதம். இதில் எதைத் தேர்வு செய்கின்றனர் என்பதே அவரவருக்கான அடையாளம். நமது ஒவ்வொரு செயல்பாடும் எழுத்தும் எப்போதும் அர்த்தம் கொள்ளத்தக்கதாகவே இருக்க வேண்டும். முற்போக்குச் சிந்தனைகளையும் செயல்களையும் ஒருங்கே கொண்ட ஆளுமைகள் எழுத்துலகில் மிகக் குறைவே. அதிலும் இலக்கியத்தைப் பொறுத்தமட்டில் முற்போக்கு எழுத்தாளர்களின் படைப்புகள் பல்வேறு சமூக மாற்றங்களை எப்போதும் சமகாலத் தேவையைச் சார்ந்தே இருக்கும். ஒரு தேசமோ மாநிலமோ இருள் சூழ்ந்து அள்ளாடும் ஒவ்வொரு காலகட்டத்திலும் அங்கு தேவையான வெளிச்சத்தை முற்போக்கு எழுத்துக்களால் மட்டுமே பாய்ச்சிட முடியும்,‌

முற்போக்கு எழுத்தாளனால் மட்டுமே துரித மாற்றத்தைக் கொண்டு வரவும் முடியும். நாம் எதற்கு எழுதுகிறோம் என்கின்ற கேள்வி ஒவ்வொரு எழுத்தாளனுக்குள்ளும் ஊடுருவும் கணம் முதல் முற்போக்கு சிந்தனைகளின் வீரியம் கூடிக் கொண்டே வரும். அதிலும் ஒவ்வொரு முற்போக்குச் சிந்தனையுள்ள எழுத்தாளனின் படைப்புகளை ஆராய்ந்தால் கண்முன் விரிந்த அவலங்கள் சமூகத்தை பாதித்தத் தீவிரவாதங்கள் என ஆற்றவியலா கொதிப்புகள் அவனுக்குள் கொப்பளித்துக் கிடக்கும். அதன் நீட்சியாக அவனை வெகுவாக பாதித்தவற்றைச் சீர்செய்யும் தளங்களைத் தமக்குள் தேடி அலைவான். அப்படியான தேடலில் அவனுக்குளிருந்து முளைத்த எழுச்சியே முற்போக்கு படைப்புகளின் தடங்கள்.

சமுகத்தின் அநீதிகளைத் தட்டிக் கேட்கும் எழுத்தாளர்கள் அநேகர் இருக்க ஆகப்பெரும் மாற்றங்களை ஒரு சிலரால் மட்டுமே கண்டிட முடியுமா என்றால் நிச்சயம் குறைந்த அளவில் மட்டுமே திருத்தங்கள் காண இயலும். இப்படியான சீர்திருத்தங்களைச் செய்து முடிக்க பல புரட்சி மிக்க ஆளுமைகளின் ஒன்று கூடலும் அமைப்பு இயக்கம் போன்றவற்றின் அரவணைப்பும் நிச்சயம் தேவை. அந்த இயக்கம் சமூகத்தின் விரோதங்களைத் தீவிரவாதங்களைக் களைய வல்ல மாபெரும் பேராயுதமாக இருக்க வேண்டும். அதற்கான பெரும் மெனக்கிடல்களும் முன்னெடுப்புகளும் அவசியம். இவ்வாறு முற்போக்கு சிந்தனைகள் ஒருங்கே கொண்ட ஆளுமைகளைச் சமூகத்தின் சாதி, மதம், மொழி, இனம், அரசியல், பெண் விடுதலை என பலதரப்பட்ட அவலங்களை அநீதிகளைக் களைய எதிர்த்து குரல் கொடுக்க இயங்கும் அமைப்பாகவே தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம். 32 எழுத்தாளர்களைத் தன்னகத்தே கொண்டு 1975 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த அமைப்பு இன்றுடன் தமது வெற்றியை நோக்கிய 47 ஆண்டுகளைக் கடந்து வானளாவிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்றும் நூற்றுக்கும் மேற்பட்ட எழுச்சிமிக்க ஆளுமைகளான சமூகப் போராளிகளைக் கொண்டு தமிழகத்தின் பல கிளைகளை நிறுவியுள்ளது. இந்த மாபெரும் விருட்சத்தின் ஒரு கிளையாக தமுஎகச அறம் கிளை 500க்கும் மேற்பட்ட அக்குஹீலர்களை உறுப்பினர்களாகக் கொண்டு இலக்கியம் சார்ந்த நிகழ்வுகள், சந்திப்புகள், படைப்புகள் போராட்டங்கள், பயிற்சிகள், பயிலரங்குகள் என அமைப்புடன் ஒன்றுகூடி தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவையான முன்னெடுப்புகளை அந்தந்தச் சூழலுக்கேற்ப சிறப்பாகச் செயல்பட்டு வரும் தமுஎகச அறம் கிளை கொரோனா பேரிடர் காலங்களிலும் தமது பணியை கைவிடாது செயல்படுத்தி வந்தது.இலக்கிய ஆளுமைகளுகளின் இணைய வழி சந்திப்புகள், வாசிப்பை மேம்படுத்தும் அகவிழி சந்திப்பு, சிறுகதை பயிலரங்குகள், சிறுகதை பெட்டக விமர்சனங்கள், தொல்லியல் சார்ந்த இணையவழி உரையாடல்கள், இணைய வழி தொல் தமிழ் பயிற்சி, மத ஆய்வு பேராசிரியர்களுடன் இணைய வழி கலந்துரையாடல், புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் அறம் கிளைத் தோழர்களின் நூல் வெளியீடு என தமது இலக்கியம் சார்ந்த இயக்கப் பணிகளை உறுப்பினர்களின் அறிவு சோர்வுறா வண்ணம் காலவிரயத்தைக் கருத்தில் கொண்டு செயலாற்றி வந்துள்ளது பாராட்டத்தக்கது.

குறிப்பாக, தமுஎகச தோழர்களைப் பற்றியும் அவர்களின் முற்போக்குச் சிந்தனை கொண்ட எழுத்தின் தடங்களை மக்கள் பார்வைக்குக் கொண்டு சேர்க்கும் பணியாக tamilwriters.in என்கிற இணையதளத்தை உருவாக்கி இணைய வழிப்பக்கங்களைப் பதிவேற்றி வாசகர் வாசிக்க எளிமைப்படுத்தியது.aஎழுத்தாளர்களின் முழு விவரங்களை நேர்காணலாக பதிவிட விரும்பி அதற்கான முயற்சியின் முதற்கட்டமாக 11 ஆளுமைகளின் நேர்காணல்களைத் தொகுத்துக் குறுநூலாக வெளியிட்டது. அடுத்தகட்ட பயணத்திற்காகவும் தம்மை ஆயுத்தப்படுத்தி வருகிறது. அடுத்தடுத்து சற்றும் தளர்ந்திடாது செயலாற்றி வரும் தமுஎகச அறம் கிளை இணையத்தைப் பயன்படுத்தாத மக்களும் வாசித்துப் பயனுறும் வகையில் இணையத்தில் பதிவேற்றம் செய்த ஆளுமைகளின் வாழ்க்கைக் குறிப்புகளை அச்சாகக் கொண்டு வரும் நோக்கில் இணைய பக்கத்திலிருந்து குறிப்புகளைப் பதிவிறக்கம் செய்து நூலாக அச்சிட்டு முதல் பாகமாக 54 எழுத்தாளர்களின் தொகுப்பை “முற்போக்கு எழுத்தின் தடங்கள்” என்கிற தலைப்பில் தோழர் அ. இலட்சுமி காந்தன் மற்றும் தோழர் அ. உமர் பாருக் இருவரும் இணைந்து தொகுத்து தமுஎகச வின் 15 ஆவது மாநாட்டில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகச் சிறந்த எழுத்தாளனாக அறியப்படும் ஒவ்வொருவரும் அசலில் தீவிர வாசிப்பாளர்களே என்பதை இத்தொகுப்பிலிருந்து அறிய முடிகிறது. போதிய தகவல்களுடன் பதிவிட்டிருக்கும் ஒவ்வோர் பகுதியும் வாசிப்பில்லையேல் எழுத்தும் படைப்பும் வளர்ச்சிக் காணாது என்பதை ஆளுமைகளின் வெற்றிப்பாதைகள் நமக்கு உணர்த்துகிறது .

“கடவுளின் கதை” என்கிற நூலின் வழியே கடவுளைப் பற்றிய அனைவரது மூட நம்பிக்கைகளை உடைத்தெறிந்த தமுஎகச வின் மாநில பொதுச் செயலாளர் கௌரவத் தலைவர் என பல பொறுப்புகளில் செயலாற்றி வரும் எழுத்தாளர் அருணன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பிலிருந்து தொகுப்பின் முதற் பகுதி துவங்குகிறது. தொடர்ந்து, வாசிப்பிற்கான ஆதார சுருதியாகத் தமது தந்தையை சுட்டிக்காட்டும் எழுத்தாளர் தோழர் அல்லி உதயன் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை எடுத்துரைக்கிறது. சிறுகதைகள் நாவல்கள் என பரந்த இலக்கிய வளத்தை கொண்ட தோழர் அல்லி உதயன் தமுஎகச வில் பல பொறுப்புகள் வகித்து தற்போது மாநில குழு உறுப்பினராகத் தொடர்ந்து செயலாற்றி வருகிறார்.

1979 லிருந்தே தமுஎகச வுடன் இணைந்து இன்றுவரை தொய்வின்றிய தமது செயல்பட்டும் பல பொறுப்புகள் வகித்தும் பாலின சமுத்துவத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் எடுத்துரைக்கும் பத்திரிகையாளர் தோழர் அ.குமரேசன் அவர்களின் நேர்காணலைத் தொடர்ந்து ,

பல புகழ்பெற்ற ஆளுமைகளைத் தமது பள்ளி கல்லூரி ஆசான்களாகப் பெற்று தமிழ் மொழியை கல்லூரிக் கல்வியாகப் பயின்ற இலக்கிய ஆளுமையாக தோழர் கவிஞர் அ.இலட்சுமி காந்தன் அவர்களின சரிதையும்,
இலக்கியம் மருத்துவம், ஆய்வுகள், தொல்லியல் என் பன்முக திறன் கொண்டு நலிந்தோருக்காகவும் பின்தங்கிய குடும்பத்திலிருந்து வந்த மாணாக்கர்களுக்கு உதவும் பொருட்டும் பல நற்பணிகளை அறம் என்கிற அமைப்பின் வழியே செயலாற்றி வரும் தமுஎகசவின் மாநில உறுப்பினர் மற்றும் அறம் கிளைத் தலைவருமான
தோழர் அ. உமர் பாரூக் அவர்களின் ஓய்வின்றிய செயல்பாடுகள் என நூலின் பக்கங்கள் ஒவ்வொன்றும் இலக்கியத்துடன் களப்பணியையும் இணைந்தே செயலாற்றும் தோழர்களின் குறிப்புகள் வாசிக்கக் கிடைக்கின்றன.

சமூக விழுமியங்களைத் தமது படைப்புகளின் வழியே மக்கள் வெளிக்குக் கொண்டு வந்தும், எழுத்துடன் சட்டப்பூர்வமான செயல்பாடுகளையும் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று போராடும் தன்னியல்பும், தமுஎகச வில் இருபது ஆண்டுகளாகச் செயலாற்றியும் வரும் தோழர் அ. கரீம் அவர்களின் குறிப்புகளைத் தொடர்ந்து,
“விழி” எனும் நாளேடு ஒன்றை தமது நண்பன் அ. உமர் பாரூக் அவர்களுடன் இணைந்து துவங்கி அதன் வெளியீட்டில் பல சட்டசிக்கல்களையும் அரசாங்கத்தின் பகிரங்க நடவடிக்கைகளையும் எதிர் கொண்ட களப் போராளியாக தமுஎகச வின் மாநில உறுப்பினராக செயலாற்றி வரும் தோழர் அய். தமிழ்மணி அவர்களின் களப்பணிகளை வாசித்து முடிக்க, மத்திய அரசின் தொலைத் தொடர் துறையில் பணியாற்றியும் தொழிற்சங்க போராட்டங்களில் தொழிலாளர்களுக்குப் பக்கபலமாகவும் சமகால அவலங்களை அவ்வப்போது தமது படைப்புகளின் வழியே எதிர்த்தும் அரசு முதல் ஆண்டி வரை தவறு என்று தெரிந்தால் காத்திரமாகக் குரலை உயர்த்தியே எதிர்த்து நிற்கும் தமுஎகச வின் பொதுச் செயலாளராக சமூகத்தின் அநீதிகளுக்குக் குரல் கொடுக்கும் போராளியாகத் தோழர் ஆதவன் தீட்சண்யாவின் போராட்டங்கள் என் நீண்ட தொகுப்பு,

அடுத்து, வாசிப்பைத் தமது எழுத்தற்கான கைத்தாங்கலாக எப்போதும் பற்றி நிற்கும் தோழர் கவிஞர் ஆரிசன் அவர்கள் தந்தையின் மீதான ஆத்மார்த்த அன்பின் பொருட்டு அவரின் பெயரை இணைத்து புனைப்பெயராகக் கொண்டு தமிழ்நாடு அரசின் மின்சார துறையில் செயலாற்றியும் தமுஎகச வில் இன்று வரை களப்பணியாற்றி வரும் மூத்த எழுத்தாளர் ஆரிசன் அவர்களின் வாழ்க்கை அனுபவங்களை வாசித்து முடிக்க தொடர்ந்தது பெண் ஆளுமைகளை கண் கொண்ட அடுத்தப் பயணம்..

சமூகத்தில் பெண் ஆளுமைகளுகளாக இலக்கியதாரிகளாகக் கடந்து வந்த கடின பாதைகளையும் வரலாற்று பக்கங்களையும் கொண்ட தொகுப்பு, தமுஎகச வின் துணைத் தலைவரான தோழர் ஆர். நீலா அவர்களின் வாழ்க்கையை விரியப்படுத்துகிறது. ஆவுடையார் கோவில் பொட்டல் பிரசவப் பிரச்சனையை சமூகவெளிக்குத் தமது கூரிய எழுத்தின் வழியே எடுத்துக்காட்டியும் போராடியும் தீர்வுக் கண்ட பெண்போராளியாக உயர்ந்து நிற்கிறார் தோழர்.தமது படைப்புகளின் வழியாக பெண்களுக்காக எப்போதும் குரல் கொடுக்கும் பெண்எழுத்தாளராகவே இன்றும் வாழ்ந்து வருகின்றார்.

அடுத்த மற்றுமொரு பெண் புரட்சியாளராகத் தொகுப்பு நமக்கு அடையாளங்காட்டுவது எழுத்தாளர் கவிஞர் மறைந்தும் பெண்களின் மனதில் வாழ்ந்து வரும் ஆளுமையாகக் தோழர் கலை இலக்கியா அவர்கள். பெண்களின் இன்னல்களை நுட்பமாக எழுதியும் ஆண்களின் அடக்குமுறைக்கெதிராகத் தமது தீக்கமிகு எழுத்துக்களால் குரல் எழுப்பியும் அமங்கலமாகக் கருதப்படும் ஒப்பாரிப் பாடல்களைத் தாலாட்டாக வகைப்படுத்தி இலக்கியமாகக் கொண்டாடிய ஒப்பற்ற கவிஞர். தமுஎகசவில் தமது இறுதிக்காலம் வரை பல பொறுப்புகளேற்று செயலாற்றி இன்று நிரந்தர ஓய்வைத் தேடிப் பயணித்துள்ளார்.

புரட்சியாளர்கள் மரிப்பதில்லை தொடர்ந்து உருவாகிக்கொண்டே இருப்பார்கள் என்பதற்கு சாட்சியாக வாழ்ந்த, ரஷ்ய பரட்சிநாளில் தமது இன்னுயிரை ஈந்த எழுத்தாளர் புரட்சியாளர் தோழர் இதயகீதன் அவர்களின் திரைத் துறை பயணங்களையும் எழுத்துலகலிருந்த படிக்கே தமுஎகச வில் இணைந்து முப்பது ஆண்டுகளாக அயராது செயலாற்றி வந்த திரையனுபங்களைக் காட்சிப்படுத்துகிறது நூல்.

அடுக்கடுக்கான பக்கங்கள் ‌‌கவனிக்கத்தவறிய பல ஆளுமைகளின் சரித்திரங்களைப் புடம் போட்டுக் காட்டுகிறது. சிறார் இலக்கிய வல்லுநராக எப்போதும் பிள்ளைகளின் பிரியுமுள்ள எழுத்தாளராக வாசிப்புப் பயணத்தில் பிள்ளைகளின் கரங்களைக் பற்றி அழைத்துச் செல்ல பல முன்னெடுப்புகளைச் செயலூக்கமாக்கி வெற்றி கண்ட தோழர் உதய சங்கர் அவர்கள், மத்திய இரயில்வே துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற எழுத்தாளர். தமுஎகசவில் நாற்பது ஆண்டுளைக் கடந்தும் இன்றும் அதிவேக செயல்பாட்டாளராக இயங்கி மாநில குழு உறுப்பினராக செயலாற்றுபவர். தோழர் உதயசங்கர் அவர்களைப் பற்றிய பிள்ளைத்தமிழ் மாலை வாசிக்கக் கிடைத்தப் பெரும் பேறு.,

120 படங்களை இயக்கித் திரைத்துறையில் தமது தனிப்பெரும் முத்திரையைப் பதித்து இயக்கம் கதை என் வெண்திரையில் ஒளி வீசிக் கொண்டிருக்கும் தமுஎகசவின் உறுப்பினராகவும் லயோலா மற்றும் போட்டா கல்லூரியில் வருகைத்தரு பேராசிரியாகப் பணியாற்றி கலை இலக்கியம் என இருவேறு துருவங்களிலும் தம்மை அடையாளப்படுத்தி வரும் இயக்குனர் தோழர் எம். சிவகுமார் அவர்களின் கலைத்துறைப் பயணங்களை வாசித்து முடிக்கையில் அடுத்தொரு வரலாற்று ஆளுமையை அடையாளங் காட்டுகிறது நூல்.

“மனித குல வரலாறு” எனும் நூலை உருவாக்கி மனிதகுலத்தின் தோற்றதையும் தோன்றுதலையும் ஆய்வு செய்து வரலாற்று ஆவணமாகப் பதிவுசெய்து வெளியிட்டும், அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட அவசர காலங்களில் தலைமறைவாக இருந்தும் இலக்கிய பணியைப் பத்திரிக்கை வழியாக விடாது செய்து வந்த தோழர், மக்கள் நலனுக்காக இன்று வரை தொடர்ந்துப் போராடி வருகிறார். எழுத்தாளர் எஸ். ஏ. பெருமாள் அவர்கள் எதிர்கொண்ட இரத்தச்சரித்திரம் பல சிறைச்சாலைகளைக் கண்டுள்ளது. தமுஎகவில் இணைந்து பல பொறுப்புகளேற்றுச் செயல்பட்டு வந்த தோழர் எஸ்.ஏ. பெருமாள் அவர்களின் குறிப்புகளைப் பதிவிட்டும் ஒவ்வோர் பன்முகப் பார்வையும் திறனும் கொண்ட ஆளுமைகளின் விழிவழிப்பாதைகளில் பயணிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திய தமுஎகச அறம் கிளைத் தோழர்களின் செயல் பாராட்டிற்குரியது..
தொடரும் தொகுப்புகள்,

தொடரும் தொகுப்புகள்,

ஆகச் சிறந்த கவிஞராகத்  தம்மை இலக்கிய உலகிற்குள் அறிமுகப்படுத்தி அடுத்தடுத்து பல தளங்களில் தம்மை உயர்த்திக் கொண்டும், புத்தக வாசிப்பில் எப்போதுமே தனியார்வம் இருந்த போதிலும் தமுஎகசவில் இணைந்த பின்பே வாசிப்பின் முற்போக்கு இடதுசாரி சிந்தனையை நோக்கி நகர்ந்ததாக சிலாகிக்கும் தோழர் இதய நிலவன் தம்மைச் சிறந்த செயல்பாட்டாளராக உருவாக்கிய அமைப்பில் உற்சாகமாகச் செயலாற்றி வந்தும் ஆதி திராவிட பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்ததும் வரும் கவிஞர் தோழர் இதய நிலவன் அவர்களின் கலையுலகப் பயணம் சுவாரஸ்யம்.தேனி மாவட்டத்தின் முதல் குறும்பட இயக்குனராகவும் 15 கும் மேற்பட்ட குறும்படங்களில் நடித்தும் இயக்கியும் இன்று முழு திரைப்படத்திற்கு ஒப்பந்தமாகியுள்ள தோழரின் வாழ்க்கைக்குறிப்பிற்குப் பின் முற்போக்குச் சிந்தனைக் கொண்டு போராடிய போராளியை அடையாளங்காட்டுகிறது தொகுப்பு.

40 ஆண்டுகளாகத் தமுஎகசவில் இணைந்து அனைத்து கலை இயக்க இலக்கிய செயல்பாடுகளிலும் தம்மை ஒன்றிணைத்து செயல்பட்டுக் இலங்கை தமிழ்ப் போராளிகளுக்கெதிராக இலங்கை அரசு நிகழ்த்திய குரூரங்களை எதிர்த்துப் ஆரல்வாய் மொழியில் நடந்த மாபெரும் போராட்டத்திற்குத் தலைமைத் தாங்கிய கர்மவீரர் கலைஞர் எழுத்தாளர் பட்டிமன்ற புகழ் இரா.தெ. முத்து அவர்களின் நேர்காணல் தொகுப்பின் சிறப்பு.

“ஏழுமலை ஜமா” எனும் குறும்படத்தின் வழியே தமுஎகச வில் தனித்த இடத்தை தமது விசேஷ கலை இரவுகளின் ஆர்பாட்டத்தில் வாழ்நாளின் இறுதி காலம் தொட்டு இயக்கமாகவே இயங்கி வந்தும் பறையிசையை தமது முழங்கொலியாகக் கொண்டாடிய, “பொடம்கின் கப்பலும் போக்கிரித் திருடனும்” எனும் நூல் வழியாக திரைப்பட கதைகளைத் சுவாரஸ்யம் கூட்ட சொல்லி முடித்தக் கதைச் சொல்லியாக, கல்லூரி நண்பர்களால்”கருப்பு சூரியன்” என்று செல்லமாக அழைக்கப்பட்ட, மண்ணை விட்டு மரித்தும்  நம் மனதில் நீங்காது வாழ்ந்து வரும் தோழர் கருப்பு கருணா அவர்களின் கலையுலகப் பயணத்தின் நினைவஞ்சலியாக வாசிக்க உதவிய தொகுப்பு  களமிறங்க அடுத்தொரு மூத்தப் படைப்பாளியாக எப்போதும் தாம் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்காக எதிர்த்துப் போராடி  பணியில் ஏற்பட்ட அரசாங்க எதிர்விளைவுகளைச் சந்தித்தும் அஞ்சாது தொடர்ந்து அடுத்தடுத்தக் கட்டப் போராட்டங்களில் இறுதி காலம் வரை தம்மை ஈடுபடுத்தி வந்த தமுஎகச வின் மூத்த உறுப்பினர், சமூகத்திற்காகக் குரல் கொடுத்தும் தமது காத்திரமிக்க கவிதைகளால் சமூக விரோதங்களுக்கு சவால் விடும் கவிஞர் தோழர் கந்தர்வனின் இலக்கிய சமுகத்தின் இடதுசாரி பயணம் வாசிக்கக் கிடைத்த வரங்கள்.

சிறார் இலக்கியத்திலிருந்தே தமது எழுத்துக்கள் பிறவியெடுத்ததாகப் பெருமையாகக் கூறும் தோழர் கமலாலயன் ஆகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றியும் ஆங்காங்கே தமது களப்போராட்டங்களை தொழிலாளர்களுடன் இணைந்து செயலாற்றியும்  குழந்தை பணியாளர் ஒழிப்புத் திட்டத்தில் போராடியும் இசை, வீதிநாடகம் என கலைத்துறையிலும் பிரகாசித்த தமுஎகச வின் மாநில குழு உறுப்பினரான தோழர் கமலாலயன் அவர்களின் மேத்தகு வாழ்க்கையை அறியும் கருவூலமாகவும், வாசிப்பு எழுத்து என தொடரும் இலக்கிய பணி தொழிலாளிகளுக்காக, பாட்டாளிகளின் கொள்கைகளுக்காக, சாதி மறுப்பு, தீண்டாமை ஒழிப்பு, பெண்விடுதலை என தொடரும் எதிர்ப்புகளும், போராட்டங்களும், களப்பணிகளும் முதலில் தம்மிடமிருந்தே துவங்க வேண்டும் என்று ஓயாது உழைத்து வரும் தோழர் களப்பிரன் அவர்கள் சமூக நல்லிணக்கத்திற்காகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எழுச்சிமிக்க போராளி. தமுஎகச வின் திரைப்பட ஒருங்கிணைப்பாளராக கலை, போராட்டக் களம், இலக்கியத் தளம்  என தொய்வின்றி இயங்கி வரும் தோழரின் முற்போக்குத் தடங்களைக் காட்சிப்படுத்தும் தொகுப்பைக் கொண்டு நகர்ந்து.

ஏட்டுக்கல்வியை விட அனுபவ ஞானமே ஒரு ஆளுமையை உருவாக்கும் மிகப் பெரும் சாதனம் என்பதற்கு முன்மாதிரியாக தோழர் கோவை சதாசிவம் அவர்கள் பள்ளிக்கல்வியின்றியே தமது  தமிழறிவை மேம்படுத்தி அரசு பாடதிட்டத்தில்  படைப்புகள்  இடம்பெறும் அளவிற்கு உயர்ந்து நிற்கும் இலக்கிய ஆளுமை. தோழரின் புரட்சிமிக்கப் போராட்டத்திற்குச் சான்றாக  நொய்யலாறறு சாயக்கழிவுகளால் மாசடைந்ததை எழுத்தின் வழியே எதிர்த்தும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்திய களப்போராளி. தமுஎகசவில் இணைந்து செயலாற்றி  வரும் தோழர் அவர்களின் இலக்கியப் பயணத்துடன் கரம் பற்றி அழைத்துச் செல்கிறது நூல்.

தமது வாழ்நாளின் பெரும்பகுதியை ஒடுக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைக்கும் பொருட்டும் தொழிலாளர்களின் வாழ்வை உயர்த்தும் பொருட்டும் சமூக நலனிற்காக  மட்டுமே எழுத்தையும் மொழியையும் கையாண்ட இடதுசாரி போராளியாக தமுஎகச வின் அனைத்து உறுப்பினர் நினைவில் இன்றும் நிலைத்து நிற்கும் மூத்த எழுத்தாளர் தோழர் கு. சின்னப்ப பாரதி அவர்களின் களப் பணியைக் களமாடும் பகுதியாகத் தொடரும் பக்கங்கள்.

சுதந்திரப் போராட்டத் தியாகி சுதந்திர இந்தியாவில் பல்வேறு சமூக அநீதிகளுக்கெதிராக இயக்கத்துடன் இணைந்து முழங்கிய களப் போராளி. வாழ்நாளின் பெரும் பகுதியைப் போராட்டக் களங்களிலேயே கழித்தும் ஆங்கிலேயரால்  தமது வாழ்நாளின் இளமைக்காலங்களை சிறைக் கம்பிகளுக்குப் பின் கழித்தும் இறுதிவரை புரட்சிமிகு போராளியாக தமுஎகசவின் முதல் பொதுச்செயலாளராகத் தேர்வு பெற்ற பெருமைக்குரியவர் தோழர் கே. முத்தையா அவர்கள். தொடர்ச்சியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுச் செயலாற்றி வந்த தோழர் தீக்கதிர் மற்றும் செம்மலர் ஆசிரியராகவும் பொறுப்பேற்று பல இளம் எழுத்தாளர்களை உருவாக்கிய இலக்கிய முன்னோடி. எழுத்தாளர்
கே. முத்தையா அவர்கள் கடந்துச் சென்ற பாதையை பேசும் அடுத்த பகுதி, 250 முறை மேடையேறிய புகழுக்கும், திரைப்படமாக வெண்திரையை அலங்கரித்தும் ஆங்கிலத்தில்  மொழிப்பெயர்க்கப்பட்டும் சாதனை கண்ட “தண்ணீர் தண்ணீர்” என்னும் நாடகத்தைத் தயாரித்த நாடகவியலாளர் இடதுசாரிகளின் குரல்களாகத் தமது குரல்வளையை அநீதிக்கெதிராக இடிபோல் ஒலிக்கச் செய்த தமுஎகச வின் மூத்த எழுத்தாளராகத் தோழர் கோமல் சுவாமி நாதன் அவர்களின் வாழ்வதிர்வுகளை வாசிக்க வழங்கும் பகுதிக்குப் பின்பாகத் தொடரும் பகுதிகள்,

மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான தோழர் சிகரம் ச. செந்தில்நாதன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளைக் கொண்டு நகர்கிறது. சர்வாதிகாரத்திற்கெதிராகக் குரல் கொடுக்க இலக்கியம் மட்டும் போதாது பொதுத்துறையின் பங்கும் அவசியம் என்பதை உணர்ந்து சட்டத்தை அநீதிக்கெதிராகச் சவாலாகக் களங் கண்ட வழக்கறிஞர் தோழர்
சிகரம் ச.செந்தில்நாதன் அவர்கள் தமுஎகச வின் மூத்த எழுத்தாளராகப் போற்றப்பட்டும், எழுத்தாளர் பெருமாள் முருகனின் “மாதொரு பாகன்” நூல் வெளிவந்ததில் ஏற்பட்ட சட்ட சிக்கலுக்கெதிராகப் போராடி வெற்றிப் பெற்ற வரலாறு இன்றும் இலக்கியவுலகின் மறக்கவியலா சம்பவம். போராட்டம் இலக்கியம் என தமக்கான சமூகப் பணியைச் சீராகச் செயலாற்றி வந்த தமுஎகசவின் மூத்த அமைப்பாளர்களில் தோழர் சிகரம் ச. செந்தில் நாதன் அவர்களின் குறிப்புகள், தொகுப்பு முழுதும் சமூக விரோதங்களைக் களையெடுத்தப் போராளிகளை அறிய உதவிய கல்வெட்டாகவே  திகழ்கிறது.

இலக்கியம் அநேகருக்கு பால்யபருவத்தில் பரிசாகக் கிடைக்கும். மேலும் பலருக்கு இடையில்  வந்தடையும். ஒருசிலருக்கு மட்டுமே அது இரத்தத்திலேயே ஊறிக்கிடக்கும். அப்படியான சிலரில் மூத்த எழுத்தாளரும் தமுஎகசவின் அனைத்து பொறுப்புகளிலும்  செயலாற்றிய மாநில குழு உறுப்பினர்,எழுத்தோடும் இயக்கத்தோடும் எப்போதுமே பின்னிப்பிணைந்துக் கிடக்கும் எழுத்தாளர் தோழர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் ஆகச்சிறந்த சிறுகதையாளர். தாத்தா, தந்தை, சிறிய தந்தை, சகோதரர்கள் என இலக்கிய உறவுகளுடனே எப்போதும் உறவாடிய வண்ணம் வளர்ந்தும் வாழ்ந்தும் வந்த தோழர் தற்போது மாணாக்கர் நலன் கருதி பள்ளிக்கல்வி ஆய்வொன்றை நிகழ்த்தி வருவதை வாசகப்பரப்பிற்கு வெளிச்சப்படுத்தும் தொகுப்பு அவரது வாழ்க்கைக் குறிப்பையும் உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது‌.

அடுத்த பக்கங்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வெற்றிப் பெற்று இன்று நாடாளுமன்ற உறுப்பினராக மக்கள் பணியும் இலக்கியப் பணியையும் ஒருசேர தொய்வின்றிச் செய்து வரும் தோழர் சு. வெங்கடேசன் M.P. அவர்கள் தமுஎகச வில் பல பொறுப்புகளற்று தொய்வின்றி செயல்பட்டு இன்று இயக்கத்தின் மதிப்புறு தலைவராகக் கௌரவிக்கப்பட்டுள்ளார். தீவிர  வாசிப்புடன் படைப்பில் பல சாதனைகள் கண்ட தோழர் 1000 பக்கங்கள் கொண்ட “காவல் கோட்டம்” என்கிற நூலை வரலாற்று ஆவணமாகப் பதிவிட்டுள்ளார். பல விருதுகளால் கௌரவிக்கப்பட்ட இந்நூல் தோழரின் இலக்கியச் செறிவை செவ்வனே எடுத்தியம்புகிறது. மக்களின் பிரச்சனைகளுக்குத் துரிதமாகத் தீர்வு காணும் தோழரின் செயற்கரிய  மக்கள் பணியை அறியும் வாய்ப்பாக அமைகிறது இந்நூல்.

தொகுப்பு பல  மறைந்த மூத்த எழுத்தாளர்களின் வாழ்வியல் கூறுகளை அவர்களின் போற்றத்தகு அர்பணிப்பைப் பேசும் அநேக குறிப்புகளைத் தமக்குள் சுமந்துள்ளது.ஒவ்வோர் மூத்த எழுத்தாளர்களும் தத்தம் தடங்களை இலக்கியப் பரப்பிலும் இயக்கச் சார்பிலும் பதியமிட்டுச் சென்றுள்ளனர் என்பதற்கான அடுத்த உதாரண புருஷனாகத் தோழர் சோலைசுந்தரப்பெருமாள் அவர்களின் நிரந்தர ஓய்வைத்தேடி அமைதி கண்ட காவியக் கரங்கள் வாழும் காலங்களில் பல சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணத் தமது முஷ்டியை உயர்த்திய வண்ணமிருந்தது. குறிப்பாக வெண்மணிப் படுகொலைச் சம்பவத்தின் வரலாற்று வேர்களைத் தமது படைப்பினூடே வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த தோழரின் எழுத்து அடுத்தகட்டமாக ‘வண்டல் இலக்கியம்’ என்கிற புழங்குமொழிப் படைப்பை அறிமுகப்படுத்தியது‌ இலக்கியத்தின் மாறுபட்ட திருப்புமுனை.

இயல்பிலேயே சமூக ஆர்வலராக மக்கள் நலனுக்காக  சிறுவயது முதலே செயலாற்றி வந்தும், இலக்கியம் கலை என இரு தளங்களிலும் தம்மை உயர்த்தி நிற்கும் தோழர் சோழ நாகராஜன் அவர்கள் சிறுபிள்ளையாக இருந்த காலத்திலேயே கடும் வறட்சியின் காரணமாகப் பஞ்சத்தில் தவிக்கும் மக்களுக்கு ஷுபாலிஷ் போட்டு வந்த வருமானத்தை முதலமைச்சர் உதவி நிதிக்காக வழங்கிய தோழரின் சமூகம் மீதான அக்கறை தொடர்ந்து பிளாஸ்டிக்கெதிரான மக்கள் இயக்கத்தில் ஈடுபட்டும், பார்வையிழந்தோரைக் கொண்ட கலைக்குழு ஒன்றை நடத்தியும், தமது ஆதர்ச திரைக்கலைஞரான கலைவாணர் புகழைப் பரப்பியும், தமுஎகச வில் இணைந்து செயலாற்றியும், கலை இலக்கியம்  என இரு துறையிலும் தமது  தனித்துவத்தை வெளிப்படுத்தியும் தமக்கான சமூகம் இயக்கம்  இலக்கியம் என அனைத்திலும் தமது கடமைகளில் சிறப்பான முத்திரைப் பதித்துள்ளார். தோழர் சோழ நாகராஜன் அவர்களின் வரலாற்று ஏட்டை துல்லியமாக அடுத்தப்பகுதியில் பதிவிடுகிறது நூல்.

அடுக்கடுக்கான சரித்திர புருஷர்களை அடையாளங் காட்டும் தொகுப்பு அடுத்ததாக ஆகச் சிறந்த மூத்த எழுத்தாளர் ஒருவரை விரியப்படுத்துகிறது.

தமது 81 வயதிலும் “அடுக்கு”என்கிற நாவலை எழுதி முதுமையை கூட இலக்கியத்துள் கொண்டாடி வாழ்வின் இறுதிவரை தமது எழுத்துப் பணியை தொடர்ந்து செயலாற்ற விழையும் எழுத்தாளர் தோழர் டி.செல்வராஜ் அவர்கள் தமுஎகச உருவாகக் காரணமான 32மூத்த எழுத்தாளர்களுள் ஒருவர். சமகால பிரச்சனைகளைச் சமூகவெளிக்குக் கொண்டு வருவதே தமது படைப்பின் சாதனையாகக் கருதியே இதுகாறும் படைத்து வரும் தோழரின் முக்கிய படைப்புகளாகத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் அவலத்தைப் பேசும்  “ஊமை ஜனங்கள்” என்கிற படைப்பும் மற்றும் தோல் பதனிடும் தொழிலாளர்களின் போராட்டங்களைச் சுட்டிக்காட்டும் “தோல் ” என்கிற நூலும் குறிப்பிடத்தக்கது.

வரிசையாக வசியப்படுத்தும் சொற்கோர்வைகளால் படைப்பைக் கனகச்சிதமாக மெருகேற்றிய தமுஎகச அறம் கிளைத் தோழர்கள், அடுக்கடுக்காக வெளிச்சத்திற்குப் பல ஆளுமைகளை அறிமுகத்தில் வண்ணம் உள்ளனர். அடுத்த ஆளுமையாக,”சித்தர்களின் தத்துவ மரபு” எனும் நூல் வழியே சித்தர் மரபுகளை ஒன்பதாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டு வரையிலுள்ள இலக்கியங்களை ஆய்வு செய்தும், பெண்கள் சார்ந்த படைப்பாக”பெண் உடலும் ஆளுமையும்” என்கிற நூலொன்றை  இயற்றி பெண்மையைப் போற்றியும், தொழிலாளர் நலனுக்காகக் களப் போராட்டங்கள் பல மேற்கொண்டு   இடதுசாரி கொள்கையைக் கைக்கொள்ள தமுஎகச வில் இணைந்துச் செயலாற்றி வரும் மூத்த எழுத்தாளர் தோழர் ஈரோடு தி. தங்கவேல் அவர்களின் வாழ்க்கை வரலாறு தமுஎகச வின் காலத்தின் கண்ணாடி. சிறுபிராயம் முதலே தமது வாழ்க்கையை வறுமையுடனேயே கழித்து வாழ்ந்து வந்த தோழர் தேனிசீருடையான் அவர்கள் பாடு வாழ்விலும் வாசிப்பின் கரத்தை இடைவிடாது பற்றி வந்ததற்கான விருதாக இன்று தமிழிலக்கியமும் தமுஎகச இயக்கமும் போற்றி நிற்கும் ஆகச்சிறந்த ஆளுமையாக வாழ்வில் யதார்த்தத்தைப் காணும் தோழர் தேனி சீருடையான் அவர்கள் தொடர்ந்து எழுதியும், வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தியும் வருகிறார்.

பட்டவர்தமான சொல்லாடல்களுக்கும் வட்டார மொழியின் நடையாலுக்கும் சொந்தக்காரரான சிறுகதைதாரி தேனிசீருடையான் அவர்கள் தமக்கேயுரிய தனித்துவப் பாணியில் வாசகர்க்கு எப்போதும் படைப்பின் வழியே அறுசுவை வழங்குபவர்‌. எளிமையில் இனிமை காணும் தோழரின் படைப்புகள் பல்வேறு பல்கலைக்கழக ஆய்வுகளுக்குட்பட்டு தமிழிலக்கியத்தை அலங்கரித்தவை. தோழரின் இலக்கியச் சிறப்பைப் போற்றும் வகையில்
தோழர் அய்.தமிழ்மணி அவர்கள் “தனித்தப் பறவை” என்கிற குறும்படத்தைத் தோழருக்கான அர்பணிப்பாக இயக்கியுள்ளது பாராட்டிற்குரியது.

தோழர் தேனி சீருடையான் அவர்கள் தமுஎகச வில் பல காலங்களாகப் பல்வேறு பொறுப்புகள் வகித்து இன்று மாநில உறுப்பினராகத் தமது செயற்கரிய இயக்கப் பணியை இலக்கியத்துடன் இணைந்துச் செய்து வருகிறார். தோழரின் வாழ்க்கைப் பயணம் தொய்வின்றித் தொடரவும் அவரின் இலக்கியப்பாதை அனைவருக்குமான வாழ்வின் வழிக்காட்டியாகத் திகழ்கிறது.

பள்ளிக்காலங்களில் தமது ஆழ்ந்த வாசிப்பின் ஊடாகச் சக மாணவருக்குத் தாம் வாசித்ததை விளக்கியும் விவரித்தும், தமிழ் பாடநூலில் செய்யுள் முதல் பாடம் வரை மனனமாக ஒப்புவிக்கும் கூரிய நினைவாற்றல் கொண்ட,
பள்ளி மாணவர் மன்ற  செயலாளராகத் துவங்கி பிற்காலத்தில் தொழிலாளர் சங்கத்தின் செயல்பாட்டாளராக நீண்டு அதன்பின்பாகத் தமுஎகச வரை தமது நெடிய பொறுப்புகளின் செயலூக்கங்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் செம்மையாக செய்து முடித்து சுண்டியிழுக்கும் சொற்பொழிவுகளால் அனைவரின் பாராட்டுதலைப் பெற்று”மேடை கலைவாணர்” என்று அன்புடன் அழைக்கப்படும் எழுத்தாளர்  தோழர் எஸ். நன்மாறன் அவர்கள் தமக்கு வழங்கப்படும் ஒவ்வோர் பொறுப்பின் நிமித்தத்திலும் தொழிலாளர்களின் உரிமையை மீண்டெடுக்கக் களப்போராளியாக இறங்கிச் செயல்பட்டு வந்தும், குறிப்பாக வேலையில்லா பட்டதாரிகளுக்கான அரசு உதவிக் கேட்டு போராடிச் சிறைக்குச் சென்ற அனுபவங்களை நூலில் பதிவிட்டு மக்கள் வெளிக்கு அடையாளங்காட்டி ஒவ்வோர் ஆளுமையின் ஆகச்சிறந்த வாழ்க்கைப் பாடங்களை வாசகர்களுக்கான பயணப்பாடங்களாக விரியப்படுத்திய தமுஎகச அறம் கிளை தோழர் ஒவ்வொருவருக்கும் என் உளமார்ந்த வாழ்த்துகள்.

கவிதைத் தளத்தைத் தமது முக்கிய  இலக்கியக் களமாகக் கொண்டு தமுஎகசவுடன் தம்மை இணைத்துக் கொண்டும் தமுஎகச வின் சென்னைக் கிளையில் பல பொறுப்புகளேற்று கலை இரவுகளில் புதிய கவிஞர்களை மேடையேற்றி உற்சாகப்படுத்தியும்  ஓவியர்களுக்கான முகாம்களை ஒருங்கிணைத்து நடத்தியும் புக் டே இணைய தளத்தில் புதிய கவிஞர்களை ஊக்குவித்தும் புக் டே இணையத்தின் கவிதை ஆசிரியராகத் களப் பணியை தொடர்ந்து செயலாற்றி வரும் சென்னையை சேர்ந்த தோழர் நா.வெ. அருள் அவர்கள் சாகித்ய அகாடமியின் உலகக் கவிதை தினத்தை முன்னிட்டு தென்னிந்திய கவிஞர்களின் பிரதிநிதியாக மூன்று கவிதைகளை வாசித்துத் தமிழகத்திற்குப் பெருமைச் சேர்த்த ஒப்பற்ற தமிழ் கவிஞர். அனைத்திந்திய  வானொலி நிலையத்திலும் பல தொலைக்காட்சி சேனல்களிலும் கவிதை வாசித்துச் சிறந்த கவிஞராக இலக்கியவுலகில் போற்றப்படும் தோழர் நா.வெ. அருள் அவர்களின் நேர்காணலைத் தொடர்ந்து,

‘நடமாடும் பத்திரிக்கை’ என மக்களால் அன்பாக அழைக்கப்படும் தோழர் நாறும்பூ நாதன் அவர்களின் குறிப்புகள் அடுத்தப் பக்கங்களைச் சிறப்பிக்கிறது. கொரோனா பேரிடர் காலங்களில் “நாறும்பூ” என்கிற வலைப்பூ ஒன்றைத் துவங்கி அதன் வழியாக நித்தம் ஒரு எழுத்தாளரின் கதையை வட்டார வழக்கோடு சொல்லி முடித்து சுமார் 50க்கும் மேற்பட்ட கதைகளை முகநூலில் பதிவிட்டும், மாஞ்சோலை தேயிலை தோட்டத்து அசம்பாவிதங்களைத் தமது படைப்புகளின் வழியே மக்கள் வெளிக்குக் கொண்டு வர பெரும் மெனக்கிடல் மேற்கொண்டுவரும் தோழர் நாறும்பூ நாதன் அவர்கள், நல்லாசிரியர் விருது பெற்ற தமிழ் வித்வான் இராமகிருஷ்ணன் அவர்களின் தவத்திரு புதல்வர். தாத்தாவின் வரலாற்றுக் கதைகளைக் கேட்டும் எழுத்தாளர் கி.ஜா அவர்களின் வீட்டிலேயே வளர்ந்தும் வந்த காரணத்தினால் சிறந்த கதைச் சொல்லியாகத் திகழ்ந்தவர். தமுஎகச வின் மாநில குழுவில் உயர் பொறுப்பில் இயங்கி வரும் தோழர் நாறும்பூ நாதன் அவர்களின் மேத்தகு செயல்பாடுகளைத் தொடரும் பக்கங்கள் காட்சிப்படுத்துகின்றன.

பரந்துபட்ட இலக்கிய வரப்பில் ஒவ்வோர் விதையாக இது வரை  36  விருட்சகங்கள் ஓங்கி உயர்ந்து  நிற்க அடுத்த மற்றுமொரு ஆளுமையாக ஆண்களின் உதாரண புருஷனாகத் திகழும் கவிஞர் தோழர் நிறைமதி அவர்களின் காவியப் பயணத்தை வாசிப்போம். மனைவியின் பெயரான நிறைமதி என்கிற‌ புனைப்பெயரில் தமது படைப்புகளை எழுதி வரும் தோழர் நிறைமதி தமுஎகச தோழர்களின் ஊக்கத்தில் இயக்கத்துடன் இணைந்துப் பல களப்பணிகளைச் செயலாற்றி வந்தார். தமிழ்ச்செல்வன் தோழரின் சமையல் பயிற்சியில் கலந்துக் கொண்டு சமையல் கலையில் அசத்தி வருகிறார்.  பணியாற்றி வரும் வங்கிப் பணியால் இலக்கியப்பணியில் ஏற்படும் தொய்வை உணர்ந்து  விருப்ப ஓய்வுப் பெற்று இன்று முழுநேர இயக்க இலக்கியவாதியாகத் தம்மை அர்பணித்துக் கொண்ட பெருமைக்குரியவர் தோழர் நிறைமதி.

அடுத்ததாக ஜனரஞ்சகச் செயல்பாட்டளராகக் களமிறங்கும் தோழர் சோ.முத்துமாணிக்கம் அவர்கள் மரபுக்கவிதையில் கோலோச்சம் பெற்று புதுக்கவிதையில் தமது தனித்துவத்தை நிலைநாட்டியவர். கல்லூரிப் பருவம் முதலே தமிழின் பால் கொண்ட ஆர்வம் பாவலர் மன்ற அமைப்பைத் துவங்கச் செய்து நண்பர்களுடன்  வெண்பா கலந்துரையாடலில் ஈடுபட்டுத் தமிழக அரசின் இதழ் முதற்கொண்டு பல்வேறு பத்திரிகைகளில் எழுதியும் அன்றைய முதல்வர் மறைந்த மூத்த எழுத்தாளர் மு.கருணாநிதி அவர்களால் உருவாக்கப்பட்ட வேலையில்லா பட்டதாரிகளுக்கான முதுகுளத்தூர் வட்ட அணியில் தம்மை இணைத்தும் பல களப் பணிகளைச் செய்து வந்த தோழரின் சமூக செயல்பாடுகளின் மீதான ஆர்வம் அவரை தமுஎகச வுடன்   இணைத்துக் கொண்டது.  கிளை மாவட்டம் என துவங்கி இன்று மாநில உறுப்பினராக உயர்ந்து நிற்கும் தோழர் முத்துமாணிக்கம் அவர்களின் வரலாற்றைத் தொடர்ந்து அடுத்த பாகமாக,

எப்போதும் எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகியும் செயலாற்றியும் வரும் நாடகவியலாளர்
தோழர் பிரளயன் அவர்களின் நேர்காணலின் வழியே பயணப்படுகிறது. தொடக்கக் காலம் முதலே தமுஎகச வில் இணைந்துச் செயலாற்றி வந்த ஆகச்சிறந்த ஜனரஞ்சக பன்முகத் தன்மைக் கொண்ட வித்தகராகப் போற்றப்படும்
தோழர் பிரளயன் அவர்கள் முதன்முதலில் “பறிமுதல்”எனும் வசனமில்லா  பாவனைக் கொண்ட நாடகத்தை நடத்தியும் மேற்கத்திய அரசியல் முற்போக்கு நாடிவியலாளர்களின் படைப்புகளை மேடையேற்றியும் தமிழின் தொன்மையான இலக்கிய இதிகாசங்களின் வரலாற்றுச் சிறப்புகளை மீள்வாசிப்பில் சமகால அரசியலோடு இணைத்து கலைவடிவமாக்கிச் சிறப்பித்தப் பெருமைக்குரியவர் தோழர் பிரளயன் அவர்கள்.

வீதிநாடகம் எனும் புதிய நாடக வடிவமைப்பை தோழர் சப்தாஹாஸ்மியின் மறைவிற்குப் பின் நடத்தி வந்த தோழர் பிரளயன் மக்களுக்கு அரசியல் மற்றும் அனைத்து சமூக செயல்பாடுகளின் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முக்கிய சாதனங்களில்  நாடகமும் ஒன்று என்பதைக் கருத்தில் கொண்டு சென்னை கலைக் குழு ஒன்றைத் துவக்கி மக்கள் கூடும் இடம் தேடி நடத்திவந்தார்.  தமது தமுஎகச தோழர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடல், சம்பவங்கள்,மார்க்சிஸ்ட் தோழர்களுடன் தங்கியிருந்த உறைவிட வரலாறு, நாடக அனுபவங்கள்,அறிவொளி மற்றும் அறிவியல்  இயக்கங்கள் மற்றும் இதர செயல்பாடுகள் என ஒரு முழு ஒருங்கிணைப்பான நேர்காணல் ஒன்றைத் தொகுத்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது‌. இலக்கியம் கலைத்துறை என இரண்டையும் இருகண்களாகக் கொண்டு இன்றும் தமது களப்பணிகளைத் தொடர்ந்து செயல்படுத்தி வரும் தோழரின் வாழ்க்கைச் சரிதம் நமக்கான வழித்தடங்கள்.

கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் தமுஎகச வின் மாநிலத் தலைவராகவும் ஓய்வின்றி  இயங்கி வரும் எழுத்தாளர் பட்டிமன்ற புகழ் பேச்சாளர்
தோழர் மதுக்கூர் இராமலிங்கம் அவர்கள் கல்லூரிக் காலம் முதலே கவிதை எழுதுவதில் தீவிர முனைப்புக் கொண்டவர். தோழரின் ஆர்வத்தைக் கண்டு கல்லூரி  நிர்வாகமே இவரது இரு படைப்புத் தொகுப்புகளை வெளியிட்டு கௌரவித்தது‌. சிறுவயது முதலே இசையில்  ஆர்வம் செலுத்தி வந்த தோழர் முறைப்படி இசை பயிலாமலேயே மேடையில் பாடி பரிசுகள் பல பெற்ற பெருமைக்குரியவர். மேடையும் படைப்பும் தோழருக்குப் புதிதல்ல இயல்பிலேயே கைவந்த கலை என்பதற்குச் சான்றுகளாகப் பட்டிமன்ற புகழ் லியோனி அவர்களுடன் இணைந்து பல பட்டிமன்றங்களில் உரையாற்றியும், நடுவராகாகப் பல பட்டிமன்றங்களைச் சிறப்பித்தும் தொலைக்காட்சிகளில் வலம் வந்துள்ளார். மறைந்த மூத்த எழுத்தாளர்
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் முன்பு நான்கு முறை மேடையில் உரையாற்றும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றுச் சிறப்பாக உரையாற்றியதற்காகக்  கலைஞர் அவர்களின் பாராட்டுகளைப் பெற்றதையும் நூலில் குறிப்பிட்டுள்ளது தமுஎகச வின் உறுப்பினரான எங்களைப் போன்றோருக்கு ஊக்கத்தை ஏற்படுத்துகிறது.
அடுத்த ஆளுமையாகத் தமது அழகிய மொழிவளத்திலும் செறிவான நூல் விமர்சனத்திலும் எனை வெகுவாகக் கவர்ந்த மனதிற்கு நெருக்கமான  எழுத்தாளராகத் தோழர் மணிமாறன் அவர்கள் கணித ஆசிரியராகக் கல்விக்கானத் தமது தொண்டை தொடர்ந்து நிகழ்த்தி வருகிறார். கற்றலுடன் இலக்கிய களத்திலும் தனக்கேயுரிய தனித்துவ முத்திரையைப் பதிக்கும் தோழர் பிற எழுத்தாளர்களை விட மாறுபட்ட இலக்கிய ஆளுமை. கதை சொல்வதிலும் நூல்களுக்கு ஆக்கப்பூர்வமான விமர்சனத்தை ஆழ்ந்த வாசிப்பில் பாரபட்சமின்றி  எடுத்துரைப்பதிலும், எழுத்தாளர்களின் வேண்டுகோலுக்கிணங்க அவர்களின் நூல்களுக்கு மதிப்புமிக்க அணிந்துரை வழங்குவதிலும் அவருக்கு நிகர் அவரே. பள்ளிபருவம் முதலே கவிதை எழுதி வரும் தோழர் மணிமாறன் அவர்கள் புத்தக வாசிப்பின் அவசியத்தைச் சுட்டிக்காட்டியும் புதிய வாசகர்களுக்கு நூல்களை அறிமுகப்படுத்தியும் தொடர் வாசிப்பாளர்களுக்கு சமகால நூல் வெளியீடுகளைப் பரிந்துரைத்தும் தமது செயற்கரிய இலக்கியப் பணியை வாசிப்பின் தொண்டாக நிகழ்த்தி வரும்
தோழர் மணிமாறன் அவர்கள் தமுஎகச வின் சுவாரஸ்ய மிக்க உறுப்பினர். பல பொறுப்புகளில் சிறப்பாக செயலாற்றியும் வருபவர்.களப் போராளி என்பதை செயலில் காட்டும் கர்மவீரராகத் துளியும் அச்சம் கொள்ளாது அறிவால் இலட்சியத்தில் வெற்றிக் காணும் புரட்சியாளர் தோழர் மயிலைபாலு அவர்கள்  மாணவப் பருவத்திலேயே தேர்வில் நடத்தாத பாடத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்காக எதிர்த்து நின்றுப் போராடி வெற்றிக்கண்ட தோழரின் எதிர்ப்பாற்றல் தொடர்ந்து சமூகத்தின் சமகால அநீதிகளையும் அவலங்களையும் எதிர்க்கும் வித்தாக அன்றே முளைக்கத் துவங்கியது. அவரது குரல் ஆங்காங்கே ஓங்கி ஒலித்த வண்ணம் சமூகத்தை சீர்திருத்தும் செயலில் இருந்து வருகிறது. குறிப்பிடும்படியாக திருநங்கையர் மேம்பாட்டு முகாம், ஆவின் பால் நிறுவன தற்காலிகப் பணியாளர்களுக்கான பணிநிரந்தரம் கோரி எழுந்த கரம் அடுத்தடுத்து பல போராட்டத் தளங்களைக் கண்ட வண்ணம் தமுஎகசவுடன் அவரை இணைத்தது. இன்றுவரை இயக்கத்தினூடே தமது மக்கட்சேவையைப் போராட்டக் கனவுகளைத் தொடர்ந்து செயல்படுத்த மற்றுமொரு பக்கபலமாக இயக்கம் இருந்து வருகிறது. இலக்கியதளத்தில்  வெண்மணி படுகொலை வழக்குகள் – தீர்ப்புகள் என்கிற நூலும் கோளரங்கம் திறக்கப்படாத நிலையில் தோழரின் ஊடகத்துறையில் அவர் எழுப்பிய கேள்விகளின் பக்கங்கள் அதன் விளைவாக உடன் தீர்வு கண்டதும் என தோழரின் புரட்சிகள் வாசிக்க வேண்டிய சரித்திரங்கள் யுத்த கருவூலங்கள்.
அடுத்தாக,
மக்களிடமே உலகத்தைக் புரட்டிப் போடும் நெம்புகோல் உள்ளதாக எப்போதும் பறைசாற்றி வரும் மற்றுமொரு ஆளுமையின் வாழ்வியல் ஆவணத்தைக் காட்சிப்படுத்துகிறது நூல்.  வாசகரைக் கிறங்க வைக்கும் இசைப்போன்ற எழுத்துநடையுடன் கூடிய படைப்புகளுக்குச் சொந்தக்காரரான
தோழர் மாதவ்ராஜ் அவர்கள் சிறந்த ஓவியர். வங்கியொன்றின் இதழுக்கு அழகான அட்டைப்பட ஓவியத்தை நறுக்குத் தெறிக்கும் தமது கவிதையுடன் அச்சிட்டு நித்தம்  வழங்கி வருவது பாராட்டிற்குரியது.ஓவியம் இலக்கியம் மட்டுமல்லாது தமது திறமையைத் திரைத்துறையிலும் விரியப்படுத்த வேண்டி சமகால சமூகப்பிரச்சனைகளை மையமாகக் கொண்ட மூன்று ஆவணப்படங்கள் இயக்கியும் “மண்குடம் ” என்கிற   சாத்தூர் குடிநீர் பிரச்சனையை மையமாகக் கொண்ட சிறுகதை அடிகுழாய்களை ஒப்பிட்டு படைக்கப்பட்டது. அன்றே பல ஆளுமைகளின் பாராட்டைப் பெற்ற படைப்பு. தோழர் மாதவ்ராஜ் அவர்கள் தமுஎகசவில் இணைந்துப் பல பொறுப்புகளையேற்று மேலும் தம்மை மெறுகேற்றி வருகிறார்.இலக்கியத்தை ஒரு கரத்திலும் சட்டப்புத்தகத்தை மறுகரத்திலும் சுமந்து சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எப்போதும் குரல் கொடுக்கும் எழுத்தாளர் தோழர் மு. ஆனந்தன் அவர்களின் நேர்காணல் அடுத்தடுத்த பக்கங்களை நிரப்பியுள்ளது. ஈஷா யோகா மையத்தின் சட்டவிரோத செயல்களில் தோழரின்  எதிர்ப்புகளும் சட்டரீதியான வழக்குகளும் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளது. தமுஎகச வில் இணைந்து பல வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளைச் செயல்படுத்தி வந்த பெருமைக்குரியவர் தோழர் மு. ஆனந்தன்.
அடுத்தப் பகுதியாக மதிப்பெண் அடக்குமுறையை எதிர்க்கும் படைப்புகளில் ஒன்றான “முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே” என்கிற நூல் எனை வெகுவாகச் சிந்திக்க வைத்தப் படைப்பு. மக்கள் மத்தியிலும் கல்வித் துறையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதன் ஆசிரியர் எழுத்தாளர் தோழர் முத்து நிலவன் அவர்கள் இலக்கியத்தின் அனைத்து தளங்களிலும் தமது ஒப்பற்ற செயல்திறனை உருவகப்படுத்தியும் எழுத்துக்கள் எப்போதும் அடுத்தத் தலைமுறையினர் விரும்பி வாசிக்கும் வகையில் இருந்திட வேண்டும் என்கிற முனைப்புடன் சிறார்களின் வாசிப்பு உளவியலை அறிந்து அதற்கேற்பப் படைப்புகளைப் படைத்து வரும் ஓய்வுப் பெற்ற அரசுப் பள்ளி தமிழாசிரியர்  எனது ஆதர்சன எழுத்தாளர்களில் மனதிற்கு நெருக்கமான ஒருவர். பிள்ளைகளின் மனதை அழுத்தும் மதிப்பெண் மார்ஃபியாவை ஒழிக்க மைக்கோல் ஏந்திய கர்மவீரர். தீவிர தமிழார்வம் கொண்ட தோழர் முத்துநிலவன் அவர்கள் மக்கள் மத்தியிலும் மாணாக்கர் மதியிலும் தமிழ் வளர்க்கப் பல அருஞ்செயல்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வரும் தோழர்  தமுஎகச வின் மூத்த எழுத்தாளராகப் பல பொறுப்புகளில் இயங்கி வருகிறார். கிராமப்புறப் பெண்களை ஊக்கப்படுத்தும் படைப்பாக ” சைக்கிள் ஓட்டக் கத்துக்கணும் தங்கச்சி” என்கிற பாடல் வரிகள் மக்களின் பெரும் பாராட்டுதலையும் பத்திரிக்கைத் துறையின் சிறந்த வரவேற்பையும் பெற்று தந்தது. கர்நாடக அரசு ஆங்கில பள்ளிப் பாடத்திட்டத்திலும் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இலக்கியத்தை வெறும் பொழுதுபோக்காக சுயநலப் போக்கில் கைக் கொள்ளும் இலக்கியவாதிகள் மத்தியில் ஒருபுறம் எழுத்துலகில் தம்மை உயர்த்திக் கொண்டும் மறுபுறம் எழுத்தின் மீது ஆர்வம் கொண்ட இளம் எழுத்தாளர்களை எழுத ஊக்கவித்தும் அவர்களின் படைப்புகளுக்கு முன்னுரை  அணிந்துரை எழுதித் தந்தும் சிறுகதைப் படைக்கும் வரைமுறையைத் தமது கட்டுரை நூலின் வழியே எடுத்துக்காட்டி தமுஎகச வை உருவாக்கிய 32 மூத்த எழுத்தாளுமைகளில் உடலை விட்டு மறைந்த பின்பும்  இலக்கிய உயிராக இன்றும் வாழ்ந்து வரும் தோழர் மேலாண்மை பொன்னுசாமி அவர்களும் ஒருவர். தீவிர இடதுசாரி சிந்தனையாளராகவும் புரட்சி மிக்க எழுச்சிப் படைப்புகளுக்கு உரியவரான தோழர்,ஆண்பெண் பாலின சமத்துவத்தைத் தமது படைப்புகளின் வழியே பறைசாற்றியவர்.  முற்போக்கு ஆளுமைகள் பலர் நம்மை விட்டு நீங்கிய போதிலும் ஒவ்வொருவரின் தடங்கள் நமக்குள் இலக்கியமாக உயிர்ப்புடன் இருந்து வருதற்கான சாட்சியாக இந்நூல் திகழ்கிறது.

அடுத்தொரு எழுச்சிமிகு படைப்பாளியின் சரிதத்தை வாசிக்கும் அறிய வாய்ப்பாக மகாகவியின் மீதான ஈடுபாட்டால்”பாவெல் பாரதி” எனும் புனைப்பெயரில் தமது களப்பணியை இலக்கியத் தளப்பணியுடன் தொய்வின்றி செய்து வரும் எழுத்தாளர் தோழர் மோகன் குமாரமங்கலம் தேனி மாவட்ட அரசு பள்ளி ஆசிரியர். ஒடுக்கப்பட்ட மக்கள் படும் அவலங்களுக்கு எதிராகத் தமது சகோதரருடன் இணைந்துப் போராடி வரும் தோழர் பாவெல் பாரதி அவர்கள் பள்ளிக்காலத்தில் அனைத்திந்திய பாலர் பெருமன்றத்தின் செயலாளராகவும் தமுஎகச வில் பல பொறுப்புகள் வகித்து தீவிரமாகக் களப் பணிகளைச் செய்து வந்தும் வைகை தொல்லியல் பண்பாட்டு கழக நிறுவனராகவும் பணியாற்றி வருகிறார்.தேனி மாவட்ட தொல்லியல் அருங்காட்சியகத்திற்கு முதன் முதலாகத் தமக்குக் கிடைத்த வரலாற்று ஆய்வுத் தொல்பொருட்களை வழங்கிய தோழரின் தொல்லியல் துறை மீதான ஆர்வம் குறிப்பிடத்தக்கது.

தமிழரின் தொன்மையான கலையான  ஏறுதழுவுதல் மற்றும் சல்லிக்கட்டு தொடர்பாகப் படைப்பொன்றைப் எழுதி  மறைந்து வரும் தமிழரின் பாரம்பரிய பண்பாட்டுக் கலைகளை மீட்டுருவாக்கம் செய்து வருவது பாராட்டிற்குரியது.

அடுத்ததாகக் கலைத்துறையிலும் இலக்கியத்துறையிலும் என பன்முகங் கொண்ட எழுத்தாளுமை ஒருவரைப் பற்றிப் பேசுகிறது தொடரும் பகுதி.

தமுஎகவின் செயற்குழு உறுப்பினராகவும் அமைப்பின் தட்டிப்போட்டுகளில் தமது ஓவியத்தை வரையும் வாய்ப்பைப் பெற்று  27 ஆண்டுகளாக இயக்கத்தோடு இணைந்து செயலாற்றிய கவிஞர் அழகிய ஓவியங்களுக்குச் சொந்தகாரர் தோழர் வெண்புறா அவர்களின் வாழ்க்கைப் பயணம் தொகுப்பின் உற்சவப் பக்கங்கள்.சமூகத்தைப் பின்னோக்கி இழுக்கும் எழுத்துக்கள் ஆபத்தானவை என்பதை எப்போதும் வலியுறுத்தி வரும் தோழர் வெண்புறா அவர்கள் தமுஎகசவில் உறுப்பினராகக் களப்பணிகளில் செயலாற்றி வந்த தோழர் காமாட்சியை மணம் புரிந்தது மறக்கவியலாத நிகழ்வு. பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்திலிருந்து வந்த தோழரின் பள்ளிக்கால நண்பராக நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்கள் இருந்து வந்ததும் தமுஎகச வில் இணைந்தப் பின்பு  இடையில் விட்டுப் போன நட்பு  மீண்டும் மலர்ந்ததைப் பெரிதாகத் தமது நேர்காணலில் சிலாகித்துக் கூறும் தோழர் தமது முத்தாய்ப்பான நீண்ட கவிதை வரிகளால் எப்போதும் தமுஎகச கலை இரவு மேடையை அலங்கரித்தும் மேலும் பல மேடைகளைச் சிறப்பித்தும் வந்துள்ளார்.சுனாமியில் பாதிக்கப்பட்டவர் நிலையை பேசிய கவிதையும்  கைம்பெண்ணின் மறுமணத்தால் ஏற்படும் சமூகசிக்கல்களால் பாதிக்கப்படும் குடும்ப உறவுகளின்  ஆதங்கத்தை வெளிப்படுத்திய கவிதையும் அனைவரின் வரவேற்பைப் பெற்றது.
அடுத்ததாக, மக்களை நேசிப்பதையே உயர் மாண்பாகக் கொண்டு தந்தையின்  பெயரில் எழுத ஆரம்பித்து  பின் ஜனநேசன் என்கிற புனைப் பெயரில் படைப்புலகில் வலம் வரும் தோழர் ஜனநேசன் அவர்கள் வாசிப்பை பொழுபோக்காகக் கொள்ளாமல்  தமது வாழ்வின் அங்கமாகவே கொண்டு கல்லூரிகளில் நூலகராகப் பணியாற்றி மாணவர்களுக்கு வாசிப்பிற்கான பாதையை வகுத்துத் தந்தவர். ஆகச்சிறந்த சிறுகதை எழுத்தாளரான
தோழர் ஜனநேசன் அவர்கள் தமுஎகசவில் பல பொறுப்புகளிலும்  செயலாற்றி வருகிறார்.தொடரும் இறுதிப் பகுதிகள் முற்போக்குக் தடங்களின் பலரது முகவரிகளை நமக்கு அடையாளங்காட்டுகிறது. வாசிப்பையே உயிர் மூச்சாகக் கொண்டு சிறுவயது முதல் இன்று வரை தொடர்ந்து வாசிப்பைக் கைவிடாது இறுகப் பற்றி தமது குடும்பத்தினரையும் வாசிக்க  உற்சாகப்படுத்தியும் இல்லத்தையே புத்தகாலயமாக மாற்றிய தோழர் ஜீவசிந்தன் ஒரு ஆகச்சிறந்த கதைசொல்லி.  யூடியூபில் “நான் ஒரு கதை சொல்கிறேன்” என்கிற தலைப்பில் நித்தம் ஒரு கதை சொல்லி வரும் சுவாரஸ்வரமிக்கக் கதைக்காரர். தமுஎகசவில் இணைந்துத் தமது இலக்கியத் தளத்தை மேலும் செறிவூட்டி வரும் தோழர் மாநில உறுப்பினராகச் செயலாற்றியும் வருகிறார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையில் பணியாற்றியும் தொழிலாளர்களுக்காகப் போராடியும் தமது களப்பணியில் தீவிரம் காட்டி வருகிறார். தோழர் ஜீவசிந்தன் அவர்கள் வாசிப்பின் செயலூக்க ஆசிரியர் என்று அழைப்பது சாலப் பொருந்தும்.வாசிப்பை உற்சாகமாகக் கொண்டாடி வரும் தோழர் கவிஞர் ஜீவி அவர்களின் இலக்கியப் பயணம் பள்ளியில் திருக்குறள் முதல் கம்பன் பாடல் ஒப்புத்தல் வரை பள்ளிப் பருவம் தொட்டே துவங்க தொடர்ந்து பல இதழ்கள் பத்திரிக்கைகளில் நகைச்சுவைத் துணுக்குகள் கல்லூரி காலங்களில் வெளிவந்ததும் ஆக்கம் பெற்று வந்தன. இதன் நீட்சியாக இன்றும் இலக்கியத்திற்கு அயராது பாடுபடும் தோழர் ஜீவி தமது இல்லத்தையே நூலகமாக மாற்றிக் கொண்டு தொடர்ந்து வாசித்தும் எழுதியும் வருகிறார்.தமுஎகச வில் இணைந்துச் செயலாற்றுவதை ‘தாத்தாவின் கைபிடித்துச் செல்வதுப் போல’ என்று பெருமிதத்துடன் நேர்காணலில் தெரிவித்த தோழர் தாம் இயற்றிய கவிதைகளைப் பலமுறை மேடைகளில் இலக்கிய கூட்டஙகளில் வாசித்து மக்கள் வரவேற்பைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அரசு ஊழியர்களுக்காக இன்றும் போராடி வரும் தோழர் ஜீவி  அதைப்பற்றிய நாவல் ஒன்றை எழுதியும்,  பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் அவர்களின் படைப்பு வரலாற்றைப் புதுக்கவிதை நடையில் படைப்பாக்கமாக செயல்படுத்தியும் இலக்கியத்திற்கான சிறப்பான தொண்டாற்றி வருகிறார்.
அடுத்த ஒரு முக்கிய கலைத்திரு பிரமுகர் என்கிற அடையாளத்தைக் கொண்ட ஓவியர் கலைஞர் ஸ்ரீ ரசா அவர்களது ஓவிக்கலை வடிவமே  தமுஎகச வின் சின்னமாக ஒளி வீசி வருவது குறிப்பிடத்தக்கது. கலையுடன் கவிதையிலும் சிறந்து விளங்கும் தோழர் ஒரு சுடுமண் கலைஞர். நாட்டுப்புற ஆய்வாளராகக் குதிரையெடுப்பு பற்றிய ஆய்வேடு ஒன்றை துவக்கி ஆய்வு செய்து வருகிறார்.மதுரை காமராசர் பல்கலைக் கழக கல்விப் பாடத் தயாரிப்பாளராகவும் பல்லூடக ஆய்வு மையப் பொறுப்பிலும் இயங்கி வரும் தோழர் தமுஎகச வுடன் செயலாற்றியும் எழுத்தின் மீது ஆர்வம் கொண்ட பலரையும் எழுதத் தூண்டியும் உற்சாகப்படுத்தியும் தமது இலக்கியப் பணியைச் சோர்வின்றிச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
நூலின் மதிப்பை மேலும் கூட்டும் விதத்தில் இறுதிப்பகுதியாக மதிப்புமிக்க எழுத்தாளர் இருவரின் வாழ்க்கைக் குறிப்புகளுடன் நூல் விமர்சனம் முற்றுப் பெறுகிறது.

கல்லூரி காலங்களிலேயே கவிதைகள் எழுதிப் பழகி இன்று இலக்கியத்தில் அவருக்கான தனித்த அடையாளத்தை ஏற்படுத்திய தளமாகக் கவியுலகைக் குறிப்பிட்டும், தமது வாழ்நாளைஇலக்கியத்துடனேயே இணைத்து வாழ்ந்து  மறைந்தப் பின்பும் கவிதையாய் கலையாய் உயிர்ப்புடன் நிலைத்திருக்கும் மூத்த எழுத்தாளர் தோழர் இலட்சுமணன் அவர்கள் போடி மாலன் என்கிற புனைப் பெயரில் படைப்புகள் பல படைத்து வாழ்வாங்கு வாழ்ந்து வருகிறார். 80களில் வெகுவாக இருந்து வந்த  வேலையில்லா திண்டாட்டத்தை அழுத்தமாகப் பேசும்  நாவலாக “அலையும் காலம்” என்கிற அவரது படைப்பு 1980 களில் எழுதப்பட்டு நூலாக வெளிவராமல் 2008 இல் தோழர் தமிழ்ச் செல்வன் அவர்களால் பிரசுரிக்கப்பட்டு “பாலைவனச் சோலை” என்கிற  திரைப்படமாகவம் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தோழரின் இந்த நாவல் எழுதிய காலங்களிலேயே  வெளிவந்திருந்தால் இன்று இலக்கியவெளியில் அவருக்கான தனித்த அங்கீகாரம் கிடைத்திருக்கும் என்று எப்போதும் வருத்தப்படும் தோழர் தமிழ்ச்செல்வன் அவர்களின் முன்னிலையிலேயே தோழர் போடிமாலன் தமது இறுதி மூச்சையும் பேச்சையும் இழந்தது  இன்றும் நெஞ்சை விட்டு நீங்காத சம்பவம் என்று குறிப்பிடுகிறார் தோழர் தமிழ்ச்செல்வன்.தமுஎகச வில் தமது இறுதிப் பயணம் வரை   தொடர்ந்து இயங்கி வந்த தோழர் ஒரு வீதி நாடகக் கலைஞர் என்பதும் “பாரதி கலைக் குழு” என்கிற நாடகக் குழு ஒன்றை நடத்தி வந்ததும் அவரின் கலைத்துறைப் பயணத்தையும் ஒருசேர அறியும் காலக்கருவியாக இந்நூல் திகழ்கிறது.

விளிம்பு நிலை மக்களுக்காகவே எப்போதும் தமது இலக்கியப் பரப்பை அகண்டு விரியபடுத்தி வரும் எழுத்தாளர் தோழர் ம. காமுத்துரை அவர்கள் தமது பட்டவர்த்தனமான எழுத்தாலும் வட்டார மொழிக் குடுவையின் அழகிலும் வாசகர் வரவேற்க்குரிய சிறுகதையாளர். பெருவாரியான வாழ்க்கைப் பக்கங்களை இலக்கியத்திற்காகவே அர்பணித்த தோழர் ம.காமுத்துரை அவர்களின் வெகுவான படைப்புகள் இலக்கிய ஆளுமைகளால் கௌரவிக்கப்பட்டும் திரைக்காணல்களாக வெண்திரையை அலங்கரித்தும் வந்துள்ளன. குறிப்பாக ” சௌமா” விருது பெற்ற “குதிப்பி”நாவல் அவரின் மேன்பமைப் பொருந்திய படைப்பு. தமுஎகவுடன் இணைந்து பல பொறுப்புகளைச் செயல்படுத்தி வரும் தோழர் தமுஎகச அறம் கிளை உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளுமைகள் இலக்கியப் பரப்பில் பறந்து விரிந்து சிறந்தாலும் ஒரு எழுத்தாளன் பள்ளி கல்லூரி ஆசிரியராகத் திகழ்வதும் எதிர்கால தலைமுறையினரைப் படைப்பாளர்களாக உருவாக்குவதும் எழுத்தின் மீது ஆர்வம் கொண்ட புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துவதும் என்பது செயற்கரிய பணி. இதில் தமுஎகச தோழர்கள் தமது இலக்கியப் பணியுடன் சமூகத்திற்காகவும் கல்விக்காகவும் மாணாக்கர்களுக்காகவும் அநீதிகளுக்கெதிராகவும் தமது படைப்பைத் தமிழைப் புகட்டுவதில் எள்ளளவும் குறைந்தவர் அல்லர் என்பதே இந்நூலில் வலம் வரும் எழுத்தாளுமைகளின் வாழ்க்கை வரலாறு நமக்கு திறம்பட வெளிப்படுத்துகின்றன. தமுஎகச அறம் கிளைத் தோழர்களின் தேடலின் பொக்கிஷங்களான வரப்பிரசாதங்கள்.ஒவ்வொரு வாசகரும் இந்நூலை வெறும் வாசித்து மட்டுமே கடத்தி விடாமல் ஒவ்வொரு ஆளுமைகளின் வாழ்வியல் கூறுகளைத் தனதாக்கிக் கொண்டு தமது ஒவ்வொரு தனித்துவ திறமைகளையும் செயல்பாடுகளையும் சமூக அறத்திற்கான அநீதிக்கெதிரானக் களப்பணிகளாகக் கொண்டுச் செயலாற்றி வர வேண்டும் என்பதே இந்நூல் படைத்ததற்கான முக்கிய காரணி. தொகுப்பை ஒருங்கிணைத்த தோழர்கள் இருவரும் அப்படியான பயணத்தை முன்னமே  தொடங்கி விட்டனர் இலக்கியத்தையும் இயக்கத்தைமும் கைக்கொண்ட நாமும் நூல் வாசிப்போடு மட்டுமே நின்றுவிடாமல் அடுத்தடுத்த இலக்கிய பணிகளை நம்மை வளர்த்தெடுத்த இந்த சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக செய்து நமக்கான அடையாளத்தையும் இங்கு விட்டுச் செல்வோம் என்பதே நூலின் தலைப்பு நமக்கு உணர்த்துகிறது.  ஒவ்வொரு ஆளுமையின் தொய்வற்ற இயக்கத்தை அறிய உதவிய தமுஎகச அறம் கிளைத் தோழர்களின் மெனக்கிடல்களும் இணையவழிப் பக்கங்களை பதிவிறக்கி ஒருங்கிணைத்த தொகுப்பாளர்களுக்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.தொடர்ந்து அடுத்தடுத்த நமது அமைப்புச் சார்ந்த தோழர்களின் மேத்தகு பணிகளைப் பற்றி அறியும் ஆவலில் பாகம் இரண்டை நோக்கி எதிர்பார்ப்பில்..
நன்றி.
– து.பா.பரமேஸ்வரி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.