நிக்கோல் அவுனாபு மான் (Nicole Aunapu Mann) என்பவர் ஒரு அமெரிக்க கடற்படை போர் விமானி மற்றும் நாசா விண்வெளி வீரர் ஆவார். இவர் விண்வெளிக்குச் சென்ற முதல் பழங்குடி பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் விண்வெளியில் இரண்டு முறை நடைப் பயணம் மேற்கொண்டார். இதன் மூலம் விண்வெளியில் நடந்த முதல் பூர்வீக பழங்குடி அமெரிக்கப் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
கல்வி
இவர் 1977 ஆம் ஆண்டு ஜூன் 27 அன்று ஹோவர்ட் மற்றும் விக்டோரியா அவுனாபு ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவர் கலிபோர்னியாவின் பெட்டலுமாவில் வளர்ந்தார். இவரது குடும்பம் வடக்கு கலிபோர்னியாவின் ரவுண்ட் வேலி இந்தியப் பழங்குடியினரின் வைலாக்கி என்னும் பூர்வீக பழங்குடி இனத்தைச் சேர்ந்தது.

இவர் 1995 ஆம் ஆண்டு ராஞ்சோ கோட்டேட் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். அதன் பிறகு அமெரிக்க கடற்படை அகாடமியில் பயின்றார். இங்கு அவர் கால்பந்து அணியில் விளையாடினர். அந்த அணியின் அணித் தலைவராக இருந்தார்.
இவர் 1999 ஆம் ஆண்டில் இயந்திரப் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். மேலும் திரவ இயக்கவியல் நிபுணத்துவம் பெற்றார்.
இராணுவம்
இவர் பட்டப்படிப்புக்கு பின்னர் கடற்படை விமானப் படை பயிற்சியைத் தொடங்கினார். இவர் 25 வகையான விமானங்களில் 2500 க்கும் மேற்பட்ட விமான மணி நேரங்கள் பறந்தார். 200க்கும் மேற்பட்ட முறை வெற்றிகரமாக கப்பல் தளத்தில் விமானத்தைத் தரையிறக்கினார்.
இவர் 2001 ஆம் ஆண்டு விமான பயிற்சியைத் தொடங்கி ஒரு போர் விமானியானார். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் 47 போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அமெரிக்க கடற்படையில் இவருக்கு இரண்டாம் லெப்டினன்ட் பதவி வழங்கப்பட்டது. அதன் பிறகு அவர் கர்னல் பதவிக்கு உயர்ந்தார்.
விண்வெளி

நாசா விண்வெளி வீரராக விண்ணப்பித்த 6000க்கும் மேற்பட்டவர்களில் இவரும் ஒருவர். இவர் 2013 ஆம் ஆண்டு நாசா விண்வெளி வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ரோபாட்டிக்ஸ், விண்வெளி நடைபயணம், விமான பயிற்சி வனப்பகுதி, நீரில் உயிர் வாழும் பயிற்சி மற்றும் ரஷ்ய மொழிப் பயிற்சி ஆகியவற்றில் ஈடுபட்டார்.
இவரது விண்வெளிப் பயணம் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 5 அன்று தொடங்கியது. இவர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்று 157 நாட்கள் தாங்கினார். 250 அறிவியல் பரிசோதனைகளைக் குழுவுடன் இணைந்து நடத்தினார். ஜப்பானிய விண்வெளி வீரருடன் இணைந்து இரண்டு முறை விண்வெளி நடைப் பயணங்களை மேற்கொண்டார். இவர் 14 மணி நேரம் விண்வெளியில் நடந்து சாதனைப் புரிந்தார். இவர் விண்வெளியில் நடந்த 22 ஆவது பெண் ஆவார். இவர் 2023 ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று மெக்சிகோ வளைகுடாவில் தரையிறங்கினார்.
சந்திரன்
சந்திரனுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. இது சர்வதேச ஆர்ட்டெமிஸ் திட்டம் (Artemis Program) ஆகும். இந்தத் திட்டத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட 18 விண்வெளி வீரர்களில் இவரும் ஒருவராவார். எதிர்காலத்தில் சந்திரனில் கால் பதிக்கும் வாய்ப்பு இவருக்கு பிரகாசமாக உள்ளது.
எழுதியவர் :

✍️ – ஏற்காடு இளங்கோ
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
