சுற்றுச்சூழலும் அயல்படர் உயிரினங்களும்
தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள முதுமலை புலிகள் சரணாலயம் நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஓரிரு மாதங்களுக்கு முன் சென்றிருந்தால் அங்கு நமக்குக் காணக் கிடைத்திருக்கும் காட்சி அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்திருக்கும்.
நிலம் வறண்டு, புற்கள் காய்ந்து, இலைகள் உதிர்த்து, வெறும் எலும்புக்கூடாய் நிற்கும் மரங்கள் நம்மை நிச்சயம் பாதித்திருக்கும். செழிப்பான தாவரங்கள் இல்லாதபோது அங்கு வாழும் உயிரினங்கள் ஆரோக்கியமாக இருக்க முடியுமா? நிச்சயம் முடியாது. இந்த வறட்சிக்கு என்ன காரணம்?
நமக்கு ஓரிரு காரணங்கள் தோன்றலாம்; மழை பொய்திருக்கலாம், வெப்பம் அதிகரித்திருக்கலாம். இவை இரண்டும் உண்மையில் முக்கியக் காரணங்கள்தான். இருப்பினும் இவை அல்லாத மற்றொரு மறைமுகக் காரணம் இருக்கிறது. அது அந்நியர்களின் ஊடுருவல்.
அந்நியர்கள் என்றவுடன் மனிதர்கள் என்று நினைத்துவிட வேண்டாம். தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் அந்நிய உயிரினங்கள். இன்னும் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் அயல் படர் உயிரினம் (Alien Invasive Species).
முதுமலையின் காடுகள் அனைத்தும் காய்ந்து கிடந்தது என்று பார்த்தோம் அல்லவா? அதே நேரத்தில் ஒரே ஒரு மரம் மட்டும் செழித்து வளர்ந்து நிலமெங்கும் பரவியிருந்தது. அந்த மரத்தின் பெயர் சீமை கொன்றை (Senna spectabilis).

மஞ்சள் நிறத்தில் ஆவாரம் பூ போன்ற அழகிய மலர்களைத் தாங்கிக்கொண்டிருக்கும் இந்தத் தாவரம் முதுமலை, சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வேகமாகப் பரவி புலிகள் காப்பகங்களுக்கு ஆபத்தை விளைவிப்பதாக வன உயிரியல் வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்தத் தாவரம் தாம் வளரும் இடங்களில் நிலத்தடி நீர் அனைத்தையும் உறிஞ்சி, மற்ற செடிகள் வளர்வதற்கு இடையூறு ஏற்படுத்துகிறது. அதேபோல எண்ணிலடங்கா இடங்களையும் ஆக்கிரமித்து மற்ற தாவரங்கள் முளைப்பதையும் தடுக்கிறது. தாவரங்கள் அருகும்போது தாவர உண்ணிகளான யானை, மான் போன்ற உயிரினங்களுக்கு உணவு கிடைப்பது தடைப்படுகிறது. இப்படியாகத் தாவர உண்ணிகளின் எண்ணிக்கை குறையும்போது புலி போன்ற வேட்டையாடிகளும் பாதிக்கப்படுகின்றன. மொத்தத்தில் ஒட்டுமொத்தக் காடும் பாதிக்கப்பட்டு அழிவின் விளிம்புக்கே செல்கிறது. இவை அனைத்தும் சீமை கொன்றை எனும் ஒற்றைத் தாவரத்தால் ஏற்படும் ஆபத்து.
ஏன் சீமை கொன்றை ஆபத்தை ஏற்படுத்த வேண்டும்? மரம் என்றால் பூமிக்கு நல்லது என்றுதானே நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். காட்டில் மரம் இருந்தால் அது பூமிக்கு நல்லதுதானே செய்ய வேண்டும். அது ஏன் காடே அழிவதற்குக் காரணமாகிறது? இதற்குக் காரணம் சீமை கொன்றை ஓர் அயல் படர் உயிரின வகையைச் சார்ந்தது. ஆங்கிலத்தில் இதனை Invasive Alien Species என்பர். சீமை கொன்றை மட்டுமல்ல இன்றைக்கு ஏகப்பட்ட அயல்படர் உயிரினங்கள் உலகமெங்கும் பரவியுள்ளன.
இன்றைக்கு உலகம் முழுவதும் தாவரங்கள், விலங்குகள் அழிவில் 60 சதவிகித பங்கு அயல்படர் உயிரினங்கள்தான் என்று தெரியவந்துள்ளது. அது என்ன அயல் படர் உயிரினங்கள்? அவை ஏன் இவ்வளவு ஆபத்தாக இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள முதலில் சுற்றுச்சூழல் குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.
அயல் படர் உயிரினங்கள்
முதன் முதலில் அயல் படர் உயிரினம் பற்றிய குறிப்பு 1958இல் சார்லஸ் எல்டன் என்பவர் எழுதிய The ecology of invasions by animals and plants நூலில் இருந்தே கிடைக்கிறது. அதன்பின் 1980களில் SCOPE அமைப்பினர் ஏற்பாடு செய்த பயிற்சிப் பட்டறைகள் மூலம் அயல் படர் உயிரினங்கள் குறித்த ஆபத்து தெரிய வந்து அதன்பின்தான் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படத் தொடங்கியது.
சரி, அயல் படர் உயிரினம் என்றால் என்ன? ஓர் உயிரினம் தான் வாழும் பகுதியிலிருந்து வேறு பகுதிக்குள் நுழைந்து செழித்து வாழத் தொடங்குவதை அயல் படர் உயிரினம் என்கிறோம். சரி, மனிதர்கள் வேறு இடத்திற்குக் குடிபெயர்ந்து வாழ முற்படுவதில்லையா? அதுபோல உயிரினங்கள் புதிய நிலங்களில் வாழ முனைவதில் நமக்கு என்ன பிரச்னை என்று தோன்றலாம். உண்மையில் இந்த அயல்படர் உயிரினங்களால் நாம் நினைத்துப் பார்க்க முடியாத சிக்கல்கள் இருக்கின்றன.
இந்தப் பூமியில் பரிணாமத்தின் வழியாகப் பல லட்சம் உயிரினங்கள் தோன்றி வாழ்ந்து வருகின்றன. இந்த உயிரினங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் அதன் சுற்றுப்புறத்தோடு ஒன்றுக்கொன்று ஒத்திசைவோடு உறவாடி வாழ்கின்றன.
உதாரணத்திற்குக் காடுகளை எடுத்துக்கொள்வோம். மிகவும் சிக்கலான சூழலியல் அமைப்பைக் கொண்டுள்ள காட்டில் பல்வேறு உயிரினங்கள் வாழ்கின்றன. அங்குள்ள மரங்கள், தாவரங்கள் விலங்குகளுக்கு உணவாகின்றன. உறைவிடமாக அமைகின்றன. மரங்களில் இருந்து பழங்களைச் சாப்பிடும் விலங்குகள் அவற்றின் விதைகளைப் பரப்ப உதவுகின்றன. விலங்குகள் உண்ட மிச்சங்கள் லட்சக்கணக்கான பூச்சிகளுக்கு உணவாகி, மக்கி, அங்குள்ள மண் வளம் செழிக்கிறது. காடுகளையொட்டி ஓடும் ஆறுகளில் மரங்களில் இலைகள் விழுவதால் அதில் உள்ள அமிலங்கள் நீரில் வாழும் பிளாங்க்டன் போன்ற நுண்ணுயிர்களுக்கு உணவாகிறது. அந்த நுண்ணுயிர்களை மீன்கள் சாப்பிடுகின்றன. பிறகு அந்த மீன்களை மிருகங்கள் வேட்டையாடியவுடன் அவற்றில் உள்ள நைட்ரஜன் உள்ளிட்ட சத்துக்கள் மீண்டும் மண்களுக்கே செல்கின்றன. இதன்மூலம் மரங்கள் செழித்து வளர்கின்றன. இப்படியாகக் காடு என்கிற சூழலியல் அமைப்பு உயிர்ப்புடன் இயங்குவதற்கு அங்குள்ள உயிர்கள் அனைத்தும் ஒத்திசைவுடன் ஒருவிதச் சமநிலையில் இயங்குகின்றன.

சூழலியல் கட்டமைப்பை லெகோ பொம்மைகளுடன் (Lego Toys) பொருத்திப் பாருங்கள். அந்தப் பொம்மைகளில் ஒரு பாகத்தை உருவினால்கூட மொத்த அமைப்பும் சிதைந்துவிடும்.
இவ்வாறு பல தரப்பட்ட உயிரினங்கள் ஒன்றை ஒன்று சார்ந்து ஓரிடத்தில் வாழ்வதைத்தான் நாம் உயிர்ப்பன்மையம் (Bio Diversity) என்கிறோம். இவை எந்த அளவுக்கு ஒன்றுக்கொன்று இணைந்து சிக்கலானதாக இருக்கிறதோ அந்த அளவுக்குப் பூமி பாதுகாப்பானதாக இருக்கும்.
இந்த உயிரினங்கள் அந்தத்தந்தச் சூழலில்களில் இருப்பதற்கு ஏற்றவாறு பரிணமிக்கப்பட்டிருக்கும். அவை மற்ற இடங்களுக்குப் பரவ முடியாதவாறு மலைகள், கடல்கள் போன்றவை அரணாக அமைந்து இயற்கையாகவே தடுக்கப்பட்டிருக்கும். உதாரணமாக ஆஸ்திரேலியாவின் கங்காருவால் இந்தியாவிற்குள் வர முடியாது. இந்தியப் புலிகளால் அண்டார்டிக்கா செல்ல முடியாது.
ஆனால் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இந்த உயிரினங்கள் புதிய சூழலுக்குள் நுழையும் வாய்ப்பு ஏற்படும்போது அவை அயல் உயிரினங்களாகின்றன. இந்த அயல் உயிரினங்கள் பெரும்பாலும் புதிய சூழலைத் தாக்குப் பிடிக்க முடியாமல் மடிந்துவிடும். ஆனால் அவற்றில் சில உயிரினங்கள் அந்தச் சூழலுக்கு ஏற்றவாறு தழைத்து வாழும் பண்புகளைப் பெறும்போது அந்தப் புதிய சூழலை ஆக்கிரமித்துப் பரவி, அங்கே ஏற்கெனவே வாழ்ந்து வரும் உயிரினங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கும். இவற்றைத்தான் நாம் அயல் படர் உயிரினம் (Invasive Alien Species) என்கிறோம்.
இங்கே ஒன்றை நாம் குறிப்பிட வேண்டும். புதிய சூழலுக்குச் செல்லும் எல்லா உயிரினங்களும் இவ்வாறு பரவாது. இந்த உயிரினங்கள் அந்நிய நிலத்திற்குச் செல்லும்போது அவற்றைக் கட்டுப்படுத்தும் வேறு உயிரினங்கள் எதுவும் அங்கு இல்லாமல்போகும்போதும், இந்த உயிரினங்கள் வேகமான இனப்பெருக்கத் தன்மையைப் பெற்றிருக்கும்போதும் அவை செழித்துப் பரவும்.
அயல் படர் உயிரினங்களுக்குப் பல உதாரணங்கள் உண்டு. தமிழ்நாட்டில் நமக்குக் காணக் கிடைக்கும் சீமைக் கருவேலம் மரம் ஓர் அயல் படர் உயிரினம். அம்மரம் தெற்கு அமெரிக்காவையும், மெக்ஸிகோவைப் பூர்வீகமாகக் கொண்டது. அதேபோல உண்ணிச் செடி (Lantana camara), தைல மரங்கள் (eucalyptus camaldulensis) போன்றவையும் அயல் படர் உயிரினங்கள்தாம். தாவரங்கள் மட்டுமல்ல இன்று நமக்குப் பரவலாகக் காணக் கிடைக்கும் ஆப்ரிக்கக் கெளுத்தி மீன், திலேப்பியா, ஆப்ரிக்க நத்தை போன்றவையும் அயல் படர் உயிரினங்கள்தான்.
இந்தியாவில் நாம் அன்றாடம் பார்க்கும் வீட்டுக் காக்கைகள் கென்யாவில் அயல்படர் உயிரினமாக இருக்கிறது.

இந்த அயல்படர் உயிரினங்கள் எவ்வாறு பரவுகின்றன?
பல்வேறு காரணிகள் அயல் படர் உயிரினங்கள் பரவுவதற்குக் காரணமாக அமைகின்றன. முதலில் உலகமயமாக்கல் இன்றைக்கு இந்த அயல் படர் உயிரினங்களின் பரவலுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. மனிதர்கள் வெவ்வேறு இடங்களுக்குப் பயணிக்கும்போது அறிந்தோ, அறியாமலோ, சரியான புரிதலின்றியே இந்த உயிரினங்கள் குடிபெயரக் காரணமாக இருக்கின்றனர்.
உதாரணமாக இந்தியாவில் தைல மரங்கள் ஆங்கிலேயர்களால் வியாபாரத்திற்காகக் கொண்டு வரப்பட்டன. ஆப்ரிக்க கெளுத்தி மீன்கள் உணவுக்காக இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டன. இதேபோலச் சில தனி மனிதர்களும் வீட்டில் வளர்ப்பதற்காக அழகு செடிகளையும், அந்நிய உயிரினங்களையும் கொண்டு வருகின்றனர். அவை ஏதோ ஒரு கட்டத்தில் செழித்துப் பரவிவிடுகிறது.
சில நேரங்களில் இயற்கையாகவும் இந்த குடிபெயர்வு நடைபெறுகிறது. உதாரணமாக திடீரென்று ஏற்படும் வெள்ளமோ, புயலோ சில உயிரினங்களை வேற்று பகுதிகளுக்குக் கொண்டு செல்கிறது. அதேபோல கனிமங்கள் போன்றவற்றுக்காக உயிரினங்களின் வாழ்விடங்களை மனிதர்கள் அழிக்கும்போது அவை வேறு இடங்களுக்குப் பயணிக்கின்றன.
காலநிலை மாற்றமும் இந்த உயிரினங்கள் பயணிப்பதற்குப் பெரும் பங்காற்றுகிறது. அதிகரிக்கும் வெப்பம், பனிப்பாறை உருகுதல் போன்றவை சுற்றுப்புறங்களின் தன்மைகளை மாற்றிவிடுகின்றன. இதனால் வெப்ப மண்டலச் சமவெளிப் பகுதிகளின் வாழும் பூச்சியினங்கள் மலைப்பாங்கான குளிர் பகுதிகளுக்குப் பரவுகின்றன.
அதேபோல சுற்றுப்புறத்தில் அதிகரிக்கும் கரிய அமில வாயுவின் அளவும் அந்நிய மரங்கள் வேகமாகவும், பெரிதாகவும் வளர வழி வகுக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. உள்நாட்டுத் தாவரங்கள் (Native Species) கரிய அமில வாயுவைக் கிரகிக்கச் சிரமப்படும்போது அந்நிய தாவரங்களோ அவற்றைப் பயன்படுத்தி வேகமாக வளர்கிறது. இவ்வாறு அயல்படர் உயிரினங்கள் வெவ்வேறு பகுதிகளில் பரவுகின்றன.

ஆபத்தை ஏற்படுத்தும் அயல்படர் உயிரினம்
சரி, இதனால் என்ன ஆபத்து? இப்போது நமது பகுதியில் இருக்கும் நூற்றுக்கணக்கான தாவரங்களோடு அயல் நாட்டிலிருந்து வந்த தாவரமும் இருந்துவிட்டுப்போகட்டுமே. அதற்கு ஏன் நாம் கவலைப்பட வேண்டும்? காரணம் இருக்கிறது. இந்த அயல் படர் உயிரினங்கள் நம் சுற்றுச்சூழலையே பாதிக்கின்றன.
ஒரு குறிப்பிட்ட சூழலியல் கட்டமைப்பில் பரிணமித்துள்ள உயிரினங்கள் ஒன்றுக்கொன்று சார்ந்திருக்கும் என்று பார்த்தோம் இல்லையா? இந்த உயிர் பன்மைய உறவுகளால்தான் அந்தத்தந்தச் சுற்றுச்சூழல் பிழைத்திருக்கிறது. இப்போது புதிதாக வந்திருக்கும் ஓர் உயிரினம் அங்கு ஏற்கெனவே உள்ள உயிரினங்களைப் பாதிக்கும்போது அது உயிரினங்களின் உணவுச் சங்கிலியைப் பாதிக்கிறது. இதனால் சூழலியலின் சமநிலையைச் சிதைக்கிறது. இப்படியாக ஒவ்வொரு உயிரினமாகப் பாதிக்கப்பட்டு ஒட்டுமொத்தச் சுற்றுச்சூழலும் பாதிப்புக்கு உள்ளாகிறது.
உதாரணமாக ஆப்ரிக்கக் கெளுத்தி மீன்கள் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் போன்ற நீர்நிலைகளை ஆக்கிரமித்து சிறிய மீன்களையும், அவற்றின் முட்டைகளையும் உண்டு விடுகின்றன. இதனால் அந்தப் பகுதியைச் சார்ந்து வாழும் பறவைகளுக்கு உணவு ஆதாரம் அழிக்கப்படுகிறது. அதேபோல தமிழ்நாட்டில் சீமைக் கருவேலம் மரத்தால் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு, நிலத்தின் ஊட்டச்சத்துகள் கிரகிக்கப்பட்டு சுற்றுப்புறம் அனைத்தும் வறட்சிக்கு ஆளாவதை நாம் பார்த்திருக்கிறோம். இந்தியக் காக்கைகள் கென்யாவிற்குச் சென்று அங்குள்ள பறவையினங்களின் முட்டைகளையும், வாழ்வாதாரங்களையும் அழிப்பதால் அந்நாட்டு அரசு கோடிகளைச் செலவழித்து 6 மாதத்திற்குள் காக்கைகளை அழிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
இவை தவிரத் தொற்று நோய்களைப் பரப்புவதிலும் அயர் படர் உயிரினங்களுக்குப் பெரும் பங்கிருக்கிறது. உயிரையே கொல்லும் டெங்கு நோய் ஏடிஎஸ் கொசுவால் பரவுகிறது என்று கேள்விப்பட்டிருப்போம் அல்லவா? அந்தக் கொசு ஓர் அயல் படர் உயிரினம். அதேபோல மலேரியா, ஜிக்கா வைரஸ் என நோய்கள் பரப்பும் கொசுக்கள் அனைத்துமே அயல்படர் உயிரின வகையைச் சார்ந்தவை. மழைக் காலத்தில் அடிக்கடி நம் வீடுகளுக்கு வருகை தரும் ஆப்ரிக்க நத்தைகள் (Giant African Snail) விளைநிலங்களில் பயிர்களை அழித்து பெரும் தொந்தரவைத் தருகின்றன. அதுமட்டுமில்லாமல் இந்த நத்தைகள் மூலம் பரவும் சில ஒட்டுண்ணிகள் (lungwarm) மனிதருக்கு கடுமையான நோய்த்தொற்றை உருவாக்குகிறது.
அதேபோல காடுகள் அழிவிற்கும் வெவ்வேறு பகுதிகளிலிருந்து புலம் பெயர்ந்த பூச்சிகளே காரணம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு அயல்படர் உயிரினங்களால் பெரிய அளவில் நமக்குப் பாதிப்பு நிலவுகிறது.
இதுபோன்று இன்றைய சுற்றுச்சூழல் சீரழிவுக்குக் காரணமாக அயல்படர் உயிரினங்களை நாம் ஏகப்பட்ட எடுத்துக்காட்டுகளில் அடையாளப்படுத்தலாம்.
அயல்படர் உயிரினம் குறித்த ஆய்வுகள்
உயிர்ப்பன்மையம் மற்றும் சூழல் அமைவுகள் வழங்கும் சேவைகள் குறித்தான அறிவியல் மற்றும் கொள்கைக்கான பன்னாட்டுக் குழு (Intergovernmental Platform on Biodiversity and Ecosystem Services) அயல்படர் உயிரினங்கள் குறித்த சீரிய ஆய்வை மேற்கொண்டு வருகிறது.
2019இல் அந்த அமைப்பு வெளியிட்ட ‘Global Assessment Report’ எனும் ஆய்வறிக்கை உலக அளவில் உயிர்ப்பன்மைய அழிவுக்குக் காரணமான 5 முக்கியக் காரணிகளில் ஒன்றாக அயல் படர் உயிரினங்களும் இருப்பதைக் கண்டறிந்துள்ளது. இதைத் தொடர்ந்து உலக நாடுகளின் வேண்டுகோளின்படி அயல்படர் உயிரினங்கள் குறித்த ஆதாரங்களையும், அவற்றால் ஏற்படும் தாக்கங்களைத் தடுப்பதற்கான கொள்கை அறிவுரைகளையும் IPBES அறிக்கையாக கடந்த ஆண்டு வழங்கியது. இதற்கான ஆய்வுகளை 49 நாடுகளைச் சேர்ந்த 86 நிபுணர்கள் இணைந்து, உலகம் முழுவதும் உள்ள பழங்குடிகள், உள்ளூர் மக்களின் பங்களிப்புடன் நடத்தினர். இதன் வழியாக உருவாக்கிய 13,000 ஆவணங்களை நான்கரை ஆண்டுகளாக ஆராய்ந்து அறிக்கையைத் தயாரித்துள்ளனர்.
இதன்படி உலகம் முழுவதும் அயல் படர் உயிரினங்களால் இயற்கை, பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு, மனித ஆரோக்கியம் ஆகியவற்றுக்குப் பெரிய அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மனித நடவடிக்கைகளால் 37,000க்கும் மேற்பட்ட அயல்படர் உயிரினங்கள் உலகெங்கிலும் உள்ள பிராந்தியங்கள், உயிர்த்தொகுதிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவற்றில் 3,500க்கும் மேற்பட்டவை கடுமையான தீங்கு விளைவிக்கக் கூடியவை என்றும் எச்சரித்துள்ளது.
இந்த அயல் படர் உயிரியல் ஊடுருவல்களின் தாக்கங்கள் 34% அமெரிக்கா, 31% ஐரோப்பா, மத்திய ஆசியா, 25% ஆசியா, பசிபிக், 7% ஆப்பிரிக்காவிலிருந்தும் பதிவாகியுள்ளன.
இவற்றில் பெரும்பான்மையாகத் தாக்கங்கள் (75%) காடுகள், பயிரிடப்பட்ட பகுதிகள் என நிலப்பகுதிகளில் பதிவாகியுள்ளது. அதேபோல 14% நன்னீர் பகுதிகளிலும், 10% கடல் வாழ்விடங்களிலும் அயல் படர் உயிரினங்களின் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. தீவுகள் பொதுவாக மூடிய தன்மையைக் கொண்டுள்ளதால் அங்கே அயல் படர் உயிரினங்கள் கடும் தீங்கை விளைவித்துள்ளன. உலகம் முழுவதும் தீவுகளின் நிலையை ஆராய்ந்தபோது அங்குள்ள உள்ளூர் தாவரங்களின் எண்ணிக்கையை விட அயல்படர் உயிரினத் தாவரங்களின் எண்ணிக்கை 25% அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது.
இவ்வாறு உலகமெங்கும் பரவும் அயல்படர் உயிரினங்களில் 22% முதுகெலும்பு அற்றவை, 14% முதுகெலும்பு கொண்டவை, 11% நுண்ணுயிர்கள், 6% தாவர வகையைச் சேர்ந்தவை என்றும் தெரியவந்துள்ளது.
இன்று அறியப்படும் 37,000 அயல் படர் இனங்களில் 37% இனங்கள் 1970 முதல் பதிவாகியுள்ளன. ஒவ்வொரு ஆண்டிற்கும் 200 புதிய அயல் படர் உயிரினங்கள் பதிவு செய்யப்படுகின்றன என்றும் ஆய்வு கூறுகிறது. பெரும்பாலும் உலகளாவிய வர்த்தகம் மற்றும் மனிதப் பயணங்களின் அதிகரிப்பால் இவை ஏற்பட்டுள்ளன என்று IPBES சுட்டிக்காட்டுகிறது.
இதேபோன்ற வழக்கமான வணிக நடவடிக்கைகள் உலகமெங்கும் தொடரும்பட்சத்தில் அயல் படர் இனங்களின் மொத்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்றும், குறிப்பாகத் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் அயல் படர் இனங்களின் எண்ணிக்கை 2005ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2030 ஆண்டில் 36% அதிகரிக்கும் எனவும் IPBES கவலை தெரிவிக்கிறது.
மேலும் கடந்த 2019இல் அயல் படர் உயிரினங்களால் ஏற்பட்ட சீரழிவால் மட்டும் 423 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்பதையும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்த அயல் படர் இனங்களைக் கண்டறிந்து, அவற்றின் பரவலைத் தடுத்து அழிப்பது என்பது மிகவும் பொருட்செலவு உடையதாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் பலநேரங்களில் அயல்படர் உயிரினங்களை அழிப்பது என்பது நடைமுறை சாத்திய அற்றது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உதாரணமாகத் தைல மரம் போன்ற சில தாவரங்கள் மனிதர்களின் மருத்துவ, பொருளாதாரப் பயன்பாட்டிற்குப் பங்கு வகிக்கிறது. இதனால் அவற்றை முற்றிலுமாக அழிப்பதற்குத் தயக்கம் ஏற்படுகிறது.
அதேபோல சில நேரங்களில் புதிய சூழல்களில் நன்கு பரவியிருக்கும் அயல் படர் வகைகளை அழிக்க முயல்வதுகூட மோசமான விளைவுகளை உருவாக்கக்கூடும் என்று சூழலியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் அயல்படர் உயிரினங்களை அழிப்பதற்குத் தொழில்நுட்ப புரிதல்கள் மட்டும் பத்தாது. அதைத் தாண்டிய மிக ஆழமான சூழல் புரிதலும், ஆய்வும் தேவைப்படும் என்கின்றனர் IPBES நிபுணர்கள்.
மேலும், அயல் படர் இனங்களால் ஏற்பட்டுள்ள சவால்களைச் சமாளிக்கப் போதுமான நடவடிக்கைகள் இல்லை என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. உலக நாடுகளில் 80% நாடுகள் தங்கள் தேசிய உயிர்ப்பன்மையத் திட்டங்களில் அயல் படர் இனங்களை நிர்வகிப்பது தொடர்பான இலக்குகளைக் கொண்டிருக்கின்றன. இருந்தாலும், அவற்றில் 17% நாடுகள் மட்டுமே இந்தச் சிக்கல்களை நிவர்த்தி செய்யும் தேசியச் சட்டங்களையும், ஒழுங்குமுறைகளையும் கொண்டு வந்துள்ளன என்கிறது ஆய்வறிக்கை.மீதமுள்ள 83% நாடுகள் அயல் படர் இனங்களின் பாதிப்பைத் தடுக்கக் குறிப்பிட்ட தேசியச் சட்டம் அல்லது ஒழுங்குமுறைகள் இல்லாத நாடுகளாக இருக்கின்றன.
ஒரு மாநிலமோ, நாடோ இவ்வாறு நடவடிக்கை எடுப்பதில் சிக்கல்களைக் கொண்டிருக்கும்போது அது அண்டை மாநிலங்களுக்கும் அயல் படர் இனங்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது என்கிறது ஆய்வறிக்கை. அதேபோல 45% நாடுகள் உயிரியல் ஊடுருவல்களை நிர்வகிப்பதில் முதலீடு செய்வதில்லை என்பதையும் அறிக்கை கண்டறிந்துள்ளது.
சர்வதேச உயிர் பன்மைய இழப்பை ஈடுகட்டும், பாதுகாக்கும் குன்மிங் மாண்ட்ரியல் சர்வதேச உயிர்ப்பன்மைய சட்டகம் (Kunming-Montreal Global Biodiversity Framework (KMGBF) 2030ஆம் ஆண்டுக்குள் 50% உயிரினப் பரவலை நாம் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஆனால் IPBES அறிக்கையோ 83% நாடுகள் அயல் படர் இனங்களின் பாதிப்பைத் தடுக்கக் குறிப்பிட்ட தேசியச் சட்டம் அல்லது ஒழுங்குமுறைகள் இல்லாத நாடுகளாக இருக்கின்றன என்று சுட்டிக்காட்டுகிறது.
தமிழ்நாட்டில் அயல் படர் உயிரினம்
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்குள்ள தாவரங்களில் 36.6% தாவரங்கள் நம் பகுதியைச் சார்ந்தவை அல்ல என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தாவரங்களில் சீமைக் கருவேலம், உண்ணிச்செடிகள், சீமை கொன்றை உள்ளிட்ட ஐந்து தாவரங்கள் மட்டுமே 2.68 லட்சம் ஹெக்டர் அளவிற்குப் பரவியுள்ளது என்றால் அவற்றின் ஆற்றலை நாம் புரிந்துகொள்ளலாம். இவற்றில் அதிகபட்சமாக உண்ணிச்செடிகள் 1.85 லட்சம் ஹெக்டர் அளவிலும், சீமைக்கருவேலம் 56000 ஹெக்டர் அளவிலும் உள்ளது. இதில் பல செடிகள் நமது தமிழ்நாட்டைச் சார்ந்தவை என வனத்துறையினரையே குழப்புவதுதான் இவற்றை அழிப்பதில் உள்ள பெரும் சிக்கல்.
உதாரணமாக, முதுமலையில் நாம் பார்த்த சீமை கொன்றை மரங்களை அழிப்பதில் உள்ள சிக்கல் என்னவென்றால் அவற்றின் மலர்கள் தூய மஞ்சள் வண்ணத்தில் ஆவாரம் பூ போன்று இருப்பதால் வனத்துறை பணியாளர்களே இதை இன்னும் களை தாவரமாக வகைப்படுத்தச் சிரமப்படுகின்றனர்.
இருப்பினும் கடந்த 2 ஆண்டுகளாகக் காடுகளில் பரவியுள்ள அயல் படர் தாவரங்களை அழிப்பதற்குத் தமிழக வனத்துறை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் விளைவாகக் கடந்த நிதி ஆண்டில் 7,337.27 ஏக்கர் பரப்பளவில் அயல்படர் மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. இந்த வெட்டப்பட்ட மரங்களைக் கொண்டு காகிதங்கள் தயாரிப்பதற்குத் தமிழகக் காகித ஆலைக்கு (TNPL) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அயல்படர் தாவரங்களை வெட்ட வெட்ட அவை வேகமாக வளர்கிறது என்றும், அதேபோல அதன் வேர் ஆழமாக ஊடுருவியுள்ளதால் அவற்றை அழிப்பதும் கடினமாகிறது என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் அவற்றைத் தொடர்ந்து அழித்து அந்தச் சூழலை 2-3 ஆண்டுகளுக்குத் தக்க வைக்கும்போது தமிழக வனப்பகுதிகள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
சீமை கொன்றைபோல உண்ணிச்செடிகளுக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் வாழும் உயிரினங்களை அச்சுறுத்துவதில் பெரும் பங்காற்றுகிறது. குறிப்பாக புலிகளின் வாழ்விடங்களில் 40% இடங்களை ஆக்கிரமித்துள்ள இந்தத் தாவரங்கள் புலிகளுக்கு இரைகள் கிடைப்பதை தடை செய்கிறது.
இந்தியாவில் புலி இனங்கள் அழிந்து வருவதாக நாம் கேள்விப்பட்டிருப்போம். அவற்றை மீட்பது என்பது புலி வேட்டையாடுபவர்களைத் தடுப்பது மட்டும் அல்ல. இதுபோன்ற கண்ணுக்குத் தெரியாத ஆபத்துக்களையும் அகற்றி நல்ல வாழ்விடங்களை உருவாக்குவதும்தான். அதுதான் இங்கு பெரும் சவாலாக இருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை தமிழகம் அயல் படர் உயிரினங்களை நீக்குவதில் முதன்மை மாநிலமாக இருக்கிறது. குறிப்பாக அயல்படர் உயிரினங்களை நீக்குவதற்கான கொள்கைகளை வகுத்த முதல் மாநிலங்களாகவும் தமிழ்நாடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் காடுகளில் நாம் செலுத்தி வரும் கவனத்தைக் கடல், ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளிலும் செலுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த அறிக்கை உணர்த்துகிறது.
ஒன்றிணைந்த முயற்சி
IPBES அறிக்கை அயல் படர் உயிரினங்கள் தொடர்பான உலகளாவிய கொள்கைகள், திட்டங்கள் போன்றவை ஏற்படவும், புதிய கட்டுப்பாடுகள் தோன்றவும் வழிவகுக்கும் புதிய சாத்தியத்தை வழங்குகிறது. குறிப்பாக உலக நாடுகள் அயல்படர் உயிரினங்களை அழிக்கும் அதே நேரத்தில், புதிதாக தங்கள் எல்லைகளுக்குள் நுழையும் உயிரினங்களைக் கண்டுபிடித்துத் தடுப்பதற்கும் வழி செய்ய வேண்டும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது. இந்தப் படிப்பினைகளைக் கருத்தில் கொண்டு உலக நாடுகள் சிறப்பான திட்டங்களை வகுக்கும்போது உயிர்பன்மையமும், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என்பதில் ஐயமில்லை.
உதவிய தரவுகள்:
Tamilnadu Policy on Invasive Alien Plant Species and Ecological Restoration of Habitats
The thematic assessment report on INVASIVE ALIEN SPECIES AND THEIR CONTROL – ipbes
FLORISTIC COMPOSITION AND STRUCTURAL ANALYSIS OF FLORA IN NILGIRIS BIOSPHERE RESERVE, WESTERN GHATS OF SOUTHERN INDIA
உயிர்ப்பன்மைய அழிவுக்குக் காரணமாகும் அயல் படர் உயிரினங்கள் – எச்சரிக்கும் IPBES
https://www.newindianexpress.com/xplore/2024/Feb/24/tamil-nadu-fighting-never-ending-battle-against-invasive-alien-species
(முற்றும்)
கட்டுரையாளர்:
நன்மாறன் திருநாவுக்கரசு
நன்மாறன் திருநாவுக்கரசு. கிழக்கு பதிப்பகத்தில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். பரிணாமம் பற்றிய ‘உயிர்’, பாலஸ்தீன வரலாறு பற்றிய ‘சிதிலங்களின் தேசம்’ உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். இந்து தமிழ் திசையின் மாயாபஜார், வெற்றிக்கொடி ஆகிய இணைப்பிதழ்களில் அறிவியல், சூழலியல் கட்டுரைகளை ‘விடை தேடும் அறிவியல்’, ‘பூ பூக்கும் ஓசை’ எனும் தொடர்கள் வாயிலாக 50 வாரங்கள் எழுதியுள்ளார்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Excellent presentation .Has explained many points new to me.Will never regret for not planting an American Kondrai in my house.Every citizen should co operate with the government in controlling alien invasive specious.
இந்த கட்டுரையில் குறிப்பிடும் முதுமலை பகுதிக்கு நான் அடிக்கடி செல்வதுண்டு.ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் தொடங்கியவுடன் முதுமைலையில் உள்ள தேக்கு மரங்களின் இலைகள் உதிரத் தொடங்கும். காடு மாரியாக இருக்காது. ஆனால் முதுமலை சாலையின் இருபக்கத்திலும் கொன்றை மரங்கள் மிக அழகாக பூத்திருக்கும். அதேபோல் உண்ணிச் செடி மிக அதிகமாக வளர்ந்திருக்கும். சாலையின் இரு பக்கங்களிலும் அவ்வப்போது வனத்துறையினர் வெட்டி சுத்தம் செய்வர். அதேபோல் பார்த்தீனியம் செடி மிக அதிகளவில் வளர்ந்திருக்கிறது. முதுமலை காட்டில் உள்ள நாகம்பள்ளி,கேம்பட்டு, புலியாளம், பனங்கொல்லி,காப்பூர்,மண்டக்கரை, பெண்ணை, கூக்காடி,நெருப்புக்குட்டெ போன்ற பகுதிகளில் எல்லாம் உண்ணிச்செடிகள் அதிகமான வளர்கிறது. இதனை ஒவ்வொரு ஆண்டும் வனத்துறையினர் அகற்றினாலும் மீண்டும் மீண்டும் வளர்கிறது. ஆனால் முதுமலை காட்டு சூழல்தான் கேரளா மாநிலத்தில் உள்ள முத்தங்கா காட்டுயிர் காப்பகம். ஆனால் மேலே குறிப்பிட்டது போல் அவ்வளவாக இல்லை. கட்டுரையாளர் குறிப்பிட்டதுபோல் தமிழ்நாடு அந்நிய தாவரங்களை விரைவாக அகற்ற முயற்சி எடுத்து வருகிறது என ஆறுதல் அளித்தாலும் முதுமலை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையின் தமிழக பகுதிகளில் அந்நிய செடிகளை அகற்றும் பணியை துரிதப்படுத்திட வேண்டும்.