நூல் அறிமுகம்: *இப்படிக்கு இயற்கை (ஹைகூ தொகுப்பு)* – தேனிசீருடையான்.நூல்: இப்படிக்கு இயற்கை (ஹைகூ தொகுப்பு.)
வெளியீடு: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்.
அறம் கிளை.
பக்கம்: 64.
விலை: ரூ. 60-00.

இது ஒரு மகத்தான சாதனை என்று தான் நான் சொல்வேன். ஒரு வருடம் நிறைவடைவதற்குள் மூன்று நூல்களை வெளியிட்டு இலக்கிய சதுக்கத்துக்குள் கம்பீரமாய் வலம் வந்து கொண்டிருக்கிறது தமுஎகசவின் அறம் கிளை. இரண்டு ஹைகூ கவிதைத் தொகுப்புகள் மற்றும் ஒரு சிறுகதைத் தொகுப்பு. என்ன புதுமை என்றால் அனைத்துப் படைப்புகளும் புதிய பேனாக்க்களின் புதிய விதைப்புகள். தோழர் மு. முருகேஷ் ஹைகூவுக்கான வழிகாட்டுதல் செய்திருக்கிறார். ச. தமிழ்ச்செல்வன், உதயசங்கர், அ. கரீம் ஆகிய ஆளுமைகள் சிறுகதை வகுப்பெடுத்து எழுதத் தூண்டியிருக்கின்றனர். அறம் கிளைச் செயலாளர் தோழர் அ. உமர் பாரூக் வாசிப்புப் பழக்கத்தை உண்டாக்கி, “நானும் எழுதணும்” என்ற ஆவலாதியை உறுப்பினர் மனங்களுக்குள் பதியமிட்டுத் தூண்டியிருக்கிறார். வாசிப்புத்தான் எழுதுவதற்கான அச்சாரம். அறம் கிளைச் செயலாளர் சொல்கிறார்.

“புதிய வாசகர்களைப் புதிய பங்கேற்பாளர்களாக மாற்றும் முயற்சியைத் துவங்கினோம்.” பங்கேற்பாளர்கள் என்றால் படைப்பாளிகள். வாசிப்பாளர்கள் தான் எழுதுவதைக் கைக்கொள்ள விரும்புவார்கள். எழுத்து மனசுக்குள் தானாக உருவாக வேண்டும் என்று பாண்டித்திய உபதேசப் பரப்பிலிருந்து உருவான அறுதப் பழைய சித்தாந்தத்தைத் தவிடுபொடியாக்கியிருக்கிறது இந்த இலக்கியக் குழு. “கண்ணுக்குத் தெரிந்த கடவுள்” என்ற தொகுப்பு அந்தக் கிளை வெயிட்ட முதல் ஹைகூத் நூல். 75 பேர் 250 படைப்புக்களைச் செய்திருந்தார்கள். இரண்டாவதாக வந்திருக்கும் தொகுப்பு “இப்படிக்கு இயற்கை.” 74 பேர் 254 கவிதைகளை ஆக்கியிருக்கிறார்கள். இன்னும் ஆச்சர்யம் என்னவென்றால் பெரும்பாலான படைப்பாளிகள் பெண்கள் என்பது தான். சங்க காலத்தில் பெண் கவிஞர்கள் எழுத்தாக்கத்தில் முனைப்புக்காட்டியிருந்தார்கள். இடைக்காலத்திலும், ஆங்கிலேய அடிமைக்காலத்திலும் அந்தப் பங்களிப்புக் குறைந்து போனது. இப்போது இந்த நவீன காலத்தில் அதிகரித்துகொண்டே வந்து தமுகச அறம் கிளையின் சகாப்தத்தில் உச்சம் கண்டிருக்கிறது. இரண்டு ஹைகூத் தொகுப்புகளிலும் நூற்றுக்கும் அதிகமான பெண் கவிஞர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். சிறுகதைத் தொகுப்புவில் இடம் பெற்றுள்ள பனிரெண்டு படைப்புகளில் ஒன்பது, பெண்கள் எழுதியவை.

தமுஎகச தொடங்கப்பட்ட காலத்தில் “இல்லந்தோறும் இலக்கியம் செய்வோம்” என்று பிரகடனப்படுத்தப்பட்டது. அந்த அறைகூவலின் வழியே எழுதத் தொடங்கியவர்கள் இன்று பெருநிலவாய் ஜொலிக்கிறார்கள். அப்படியான இயக்கத்தின் வளர்ச்சிகட்டத்தில் தான் அறம் கிளையின் செயல்பாடு பெருமிதம் கொள்ள வைக்கிறது. ‘இப்படிக்கு இயற்கை” தொகுப்பில் எல்லாப் படைப்புகளும் சிறப்பு. ஒன்றிரண்டை எடுத்துக்காட்டினால் பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று நினைத்துக் கொள்ளலாம். கொரோனா காலத்தில் நிறைய தொழிற்சாலைகள் இயங்கவில்லை. பூமியை உஷ்ணப்படுத்தும் நிறைய நடவடிக்கைகளை மனிதகுலம் எடுக்கத் துணியவில்லை. அதனால் நீரும் நிலமும் மாசுபடுவதிலிருந்து தப்பித்து இயற்கை ஆசுவாசப்பட்டது. அப்படியானால் கொரோனாவுக்கு நன்றி சொல்லவேண்டும் தானே? அந்த அறிவிப்பைக் கவிஞர் ம. விஜயா செய்திருக்கிறார்.

“கொரோனாவுக்கு நன்றி.
இயல்பாய் மூச்சு விடுகிறேன்.
இப்படிக்கு இயற்கை.”

மனிதகுலத்தை அழித்துக்கொண்டிருக்கும் பெருந்தொற்று நோய்க்கு நன்றி சொல்வது கொள்ளைக்காரனுக்கு வரவேற்புச் செய்வது போல் ஆகாதா என்ற கேள்வி எழக்கூடும். பழந்தமிழ் இலக்கியத்தில் “வஞ்சகப் புகழ்ச்சி அணி” என்று வகைப்படுத்துவார்கள். இப்போது அங்கதச் சுவை என்கிறார்கள. ஆகவே, இது நையாண்டிச் சுவையுடன் கூடிய படைப்பு. எல்லா தீமைகளும் ஒரு நன்மையைச் செய்தபடி தான் இருக்கின்றன. உதாரணமாக பசுமைப் புரட்சி! செயற்கை உரம், மண்ணை நஞ்சாக்கும் பூச்சிக்கொல்லி மருந்து, விதைகள் இல்லா விருட்ச சாகுபடி என்று பசுமைப்புரட்சியின் தீமைகள் அதிகம். ஆனாலும் மகசூல் பெருக்கம் உண்டாகி வறுமையை விரட்டும் நடவடிக்கையில் பெரும் பங்கு வகிக்கிறது. அதுபோல் தான் கொரோனாவையும் பார்க்க வேண்டும் என்கிறார் கவிஞர் அந்த வகையில் பெருந்தொற்றுக்காலத்தில் இயற்கை மாசுபடுவதிலிருந்து தற்காலிக விடுதலை கிடைத்தது. அண்ணல் காந்தியடிகள் ஒருமுறை சொன்னார். “இயற்கையைச் சிதைக்கும் எந்த இயந்திரப் பெருக்கத்தையும் நான விரும்பவில்லை.” சீன ஜனாதிபதி மாசேதுங் தனது ஆயுள் காலம் முழுவதும் வேளாண் உற்பத்தியை நாசமாக்கும் பெரும்பெரும் இயந்திரங்களை அனுமதிக்காமல் இருந்தார். சாலைப் போக்குவரத்துக்குப் பெரும்பாலும் சைக்கிள்களே பயன்படுத்தப்பட்டன. அமெரிக்கா போன்ற நாடுகள் பெரிய மோட்டார்களைத் தரத் தயாராய் இருந்தபோதும் “எனது மாட்டுவண்டி எனக்குப்  போதும்: உனது மோட்டார்கள் தேவையில்லை” என்றார். இப்போது நிலமை மாறிவிட்டது. யந்திரங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லையென்றாகிவிட்டது. பி டி கத்தரிக்காயும் கல்போன்ற இறுக்கமுடைய தக்காளியும் புழக்கத்துக்கு வந்து பாரம்பர்யப் பயிர்கள் அழிந்துவிட்டன. ஆனாலும் செயற்கையான உற்பத்தி முறையை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற முழக்கம் உரத்து ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. இயற்கை இயல்பாய் மூச்சுவிடக்கூடிய காலம் வரக்கூடும். இந்தத் தொகுப்பில் நிறைப் பகடிக்கவிதைகள் பதியமாகி இருக்கின்றன. மு. ஜெய்கணேஷ எழுதியுள்ள ஒரு ஹைகூ முக்கியமானது.“அழிந்தன காடுகள்.
முளைத்தன காங்கிரீட் மரங்கள்.
கூடுகளில் மனிதர்கள்.

இதுவும் இயற்கையை நேசிக்கும் கவிதைதான். கூடு என்பது சிறு பறவைகளின் வசிப்பிடம். அதில் மனிதன் வாழ முடியுமா? காங்கிரீட் கட்டிடம் மரம் என்றாகும்போது அதன் உள்ளரங்கம் கூடுதானே? இயற்கை மரங்கள் அழிந்து செயற்கை மரங்கள் கட்டுமானமாகும் போது மனிதகுலம் விபரீதமான விளைவுகளைச் சந்திக்க நேரும். பூமியின் சமன்பாடு சிதைந்து மனித குலம் அழிந்து விடும் எனக் கூறுகிறது கவிதை. “பாத்தா மெத்த: பகுந்தாக் கொஞ்சம்” என்றொரு பாமரப் பழமொழி உண்டு. (மெத்த = நிறைய) எல்லாப் பொருளும் பகிர்ந்தளிக்கும்போது குறைவது இயல்பு. குந்தித்தின்றால் குன்றும் கரையும்தானே? ஆனால் எவ்வளவு பகிர்ந்தாலும் குறையாமல் இருப்பது மட்டுமல்ல: வளர்ந்துகொண்டே இருக்கிற ஒன்றுண்டென்றால் அது அன்பு மட்டும்தான். நட்பு, காதல், காமம், உறவுமுறைப் பாசம் எல்லாமே அன்பை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன. ஆன்மீகவாதிகளும், புரட்சிக்காரர்களும் தமது இயக்க நடைமுறைகளுக்கு அன்பையை அடிப்படைத் தத்துவமாகக் கொண்டார்கள்.

“பகிரப் பகிர
குறையாமல் வளர்ந்தது
அன்பு.”

அன்பும் உணர்ச்சிதான். கோபமும் உணர்ச்சிதான். அன்பு செலுத்தச் செலுத்த மனித மனம் இறுக்கம் தளர்ந்து நளினப்படும். கோபம் கூடக்கூட மனம் மட்டுமல்லாமல் முகமும் இறுகி, ஆளண்டாக் குரங்காகத் தனிமைப்படுகிறான். எளிமையும் வலிமையும் கொண்ட இந்த ஹைகூவை எழுதியிருப்பவர் பா. யுவராஜ். அன்பு மழுங்கி வன்முறை வளர்ந்திருக்கும் இன்றைய நாளில் எந்த மனிதருக்கும் உத்திரவாதமான வாழ்க்கை அமைவதில்லை. குழந்தைகள் பெண்கள் மீதான வன்முறை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சமூக விழுமியங்கள் சிதைந்துபோன சூழலில் பய உணர்வோடுதான் வாழ வேண்டியிருக்கிறது. இதைச் சுட்டிக்காட்டும் ஒரு ஹைகூ

“மொட்டுகள் கருகுகின்றன
சருகுகளின்
வன்புணர்வில்.

இதை ம. சுரேஷ் எழுதியிருக்கிறார். உவமானம் உவமேயம் என்பது மரபுக் கவிதைக்கு மட்டும் உரித்தானதல்ல. புதுக்கவிதைக்கும் குறிப்பாக ஹைகூவுக்கும் அழகாய்ப் பொருந்தி வருகிறது. ஐம்பது வயது கடந்தவர்கள் எல்லாருமே சருகுகள்தான். அவர்களில் சிலர் செய்யும் அட்டூழியம் சட்டத்தாலும் தண்டிக்கப்பட முடியாமல் இருக்கிறது. உடலியல் உணர்ச்சியை உள்ளத்தால் முறியடிக்கத் தெரியாத பலவீனர்களின் செயல் குழந்தைகளை ஊனப்படுத்துகின்றன. வாழ்ந்து முடிந்தவர்களின் கொடூர வக்ரத்தால் வாழ்க்கைப் பாதையில் அடியெடுத்து வைக்கத் தொடங்கும் மொட்டுகள் அரும்பாமலே கருகிவிடுகின்றன. இந்தக் கொடுமை தீர என்ன வழி? சமூமாற்றம்தான். இது காமக் கவிதையா, இயற்கை வரணனையா என்று கேட்டால் இரண்டும் என்று தான் நான் சொல்வேன். சிப்பி என்பது கடல்வாழ் உயிர் ஜீவியின் உள் உடலைப் பாதுகாக்கும் மேல் ஓடு. அதற்குள் மழைத்துளி புகுந்து முதுமையடைந்தால் முத்து உண்டாகும். விலை மதிப்பில்லா பொருள் அது. ஆண், பெண் கலவியில் விலை மதிப்பில்லா ஜீவ சந்ததி உருவாகிறது. முத்துப் பரலையும் குழந்தைப் பிறப்பையும் இணைக்கும் பூடகக் கவிதை இது. ச. கிருத்திகா பிரபா எழுதியிருக்கிறார்.

“முத்தாய் மாறும் மழைத்துளி.
மலர்ந்த இதழ்களுடன்
காத்திருக்கும் சிப்பி.”

இந்தக் கவிதைக்கான பொருளை மேலும் விரித்துச் சொல்ல வாய்ப்பிருக்கிறது. சங்கப் பாடல்களில் தலைவன் வரவு நோக்கிக் காம வேட்கையுடன் காத்திருக்கும் தலைவின் மன உணர்வு இந்த வரிகளிலும் பொதிந்திருக்கிறது. பொருள் தேட வெளிநாடு சென்ற கணவனுக்காக இன்றைய பெண்கள் காத்திருக்கிறார்கள். அவர்களின் ஏக்கப் பெருமூச்சை வாசகனால் உள்வாங்க முடிகிறது. அனைத்துப் படைப்புகளும் சமகால வாழ்வியலின் உள்ளடக்கத்தையும் மனித உறவுகளின் மேன்மைய்யும் இயற்கை அழிவுக்கு எதிரான போர்க்குரலையும் வாழ்க்கை சிறப்பதற்கான வழிமுறைகளையும் அறிவுறுத்துகின்றன. உள்ளடக்கச் சிறப்போடு உருவ அழகும் மேம்பட்டிருக்கிறது. அவற்றுள் சிலவற்றை மட்டும் இங்கு அறிமுகப் படுத்துகிறேன். முழுமையான வாசிப்பு அனுபவம் கிடைக்கவ்வ்ணடும் என்றால் நூலை வங்கி வாசிப்பதுதான் தீர்வு.நீர் தெளித்துவிட்டு
நடந்தே போனாள்
கோலம் போட்டது பாதச்சுவடு.

(அ. பாலமுரளி)

“அங்கே ஆண். இங்கே பெண்.
எனக்கெங்கே கழிவறை?
திருநங்கை.”

(க. பிரேமலதா.)

“இடித்தவனுக்கே
சொந்தமாகிப் போனாள்
பாபர் மசூதி.”

(தியாகு கண்ணன்)

“துயிலெழும் குழந்தை.
அடுப்படி அம்மாவிற்கு எச்சரிக்கை.
கொலுசுச் சத்தம்.”

(செ. ஜெயஶ்ரீ)

“இயந்திரத்தின் இரைச்சலில்
கேட்காமலே போனது
அறுவடைப்பாட்டு.”

(மு. ஜெய்கணேஷ்.)

“மாறிக்கொண்டிருக்கின்றன
வீடுகளும் நாடுகளும்.
அதே வலியுடன் பெண்.

(மு. அராபத் உமர்.)

“சட்டங்களால் நிரம்புமா
வயிற்றுப் பசி?
குழந்தைத் தொழிலாளி.”

(சுரேஷ்குமார் ராமதாஸ்)

“ஏழையின் காணிக்கை
எப்போதும் கிடைக்கிறது
பணக்காரக் கடவுளுக்கு.”

(பி. டார்வின் ராஜ்)

“ஓடாத பேருந்துகள்.
தொடரும் ஊரடங்கு.
ஏறியது பெட்ரோல் விலை.”

(இ. ஜமீல் அஹ்மத்)

“ஒரு முத்தம்.
இரு இதழ்கள்.
மூவரி ஹைகூ.”

(கு. சற்குணம்)

1975ல் தோன்றிய தமுஎச என்ற இலக்கிய அமைப்பு நிறையப் படைப்பாளிகளை உருவாக்கியது. நிறைய இளம் எழுத்தாளர்கள் எழுதத் தொடங்கி தமிழ் அன்னைக்கு அணி சேர்த்தனர். ஏராளமான இளைஞர்கள் தோன்றி யதார்த்தவாத இலக்கியத்தை மேம்படுத்தினர். கடந்த பத்து ஆண்டுகளில் அந்த வளர்ச்சி குறைந்து காணப்பட்டது. அதாவது நிறைய இளைஞர்கள் எழுத்துலகத்துக்குள் நுழைய மனமின்றி இருந்தனர். அந்தத் தேக்கத்தை உடைத்திருக்கிறது அறம் கிளை. அதன் உறுப்பினர்கள் அனைவரும் ஏறத்தாழ இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் இலக்கியத்தின் யதார்த்தவாத வெற்றிடத்தை அவர்கள் நிறைத்திருக்கிறார்கள். அவர்கள் எழுத்தாளுமை மேலும் வளரவேண்டும் என வாழ்த்துகிறேன்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ