பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியராக பணியாற்றி மாணவர் மனங்களில் ஒளி விளக்கை ஏற்றி அவர்களின் வாழ்விலும் சிறப்பானதொரு எதிர்காலத்தை கட்டமைப்பதற்கு உதவி செய்தும் பாதை அமைத்தும் கொடுத்த ஆசிரியருடன் மாணவர்கள் பகிர்ந்து கொண்ட எண்ணங்களை கடிதங்களின் வாயிலாக வெளிப்படுத்தும் தொகுப்பு இது.

ஆசிரியர் மாணவர் உறவு எப்படி அமைய வேண்டும், ஆசிரியர் என்ற பிம்பத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு எல்லாம் தெரியும் என்ற பெருமையுடனும் கர்வத்துடனும் பாடங்களை சொல்லிக் கொடுக்கும் தன்மையுடன் மாணவர்களை விட்டு விலகி நிற்கும் ஆசிரியர் ஒருவகை என்றால் மாணவர்களுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு அண்ணனாக அப்பாவாக உற்ற தோழனாக துணை நின்று அவர்களுக்கு புத்தகத்தின் பாடங்களை மட்டும் நடத்துவது கடமை என்று நின்று விடாமல் வாழ்க்கைப் பாடத்தையும் போதித்து அதன் வழியே அவர்களை மேலும் மேலும் உயரத்திற்கு ஏற்றிச்செல்லும் ஆசிரியர்கள் மற்றொரு வகை. இந்த இரண்டிலும் அடிப்படையாக நாம் காண வேண்டிய அம்சம் ஆசிரியரின் மனநிலை. ஒரு நல்ல ஆசிரியர் பாடங்களை போதிப்பதுடன் நின்று விடாமல் அதன் வழியே மாணவர்கள் எதைக் கற்று உணர்ந்து கொள்கிறார்கள் என்பதைக் கண்டு உணர்ந்து அதன் அடிப்படையில் அவர்களுக்குப் பாடங்களை நடத்துவதன் வாயிலாக மாணவர்களின் மனதில் வெகு சுலபமாக நுழைந்து விடுகிறார்.

அத்தகு பெருமை பெற்ற ஆசிரியருக்கும் அவரது மாணவர்களுக்கும் இடையிலான கடிதங்கள் அவரது புகழை மட்டும் பாடிச் சென்று விடாமல் அன்றாட காலகட்ட நிகழ்வுகளையும் சமூகத்தின் போக்கையும் அவருடன் விவாதித்து பிரச்சினைகளுக்கு தீர்வை நோக்கி நகர வைக்கின்றன. அரசியல் சமூகம் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் இருக்கும் மாபெரும் பிரச்சனையாக நம் கண் முன் நின்று கொண்டிருப்பது மனிதம் சார்ந்தும் மனித உறவு முறைகள் சார்ந்தும் இருக்கக்கூடிய பண்பாடு. அத்தகு பண்பாடு இன்று மக்களிடையே எப்படி பராமரிக்கப்படுகிறது என்பது குறித்தான ஆசிரியர் மாணவர் விவாதங்களும் இதில் இடம் பெற்று அன்றாட நிகழ்வுகளை நமக்குள் அறியத் தருகிறது.

எழுதப்பட்டுள்ள கடிதங்கள் தன்னியல்பாக எழுதப்பட்டவையாக அல்லாமல் மாணவர்கள் சிலரின் முன் முயற்சியால் ஆர்வத்துடன் சேகரிக்கப்பட்ட கடிதங்களாக அமைந்துள்ளன. ஆனால் தனக்குப் பிடித்தமான ஆசிரியர் என்ற அடிப்படையில் மாணவர்கள் அவரைப் போற்றி புகழ்வதுடன் நிறுத்தி விடாமல் தனது மனங்களுக்குள் அலை பாய்ந்து கொண்டிருக்கும் சமூகத்தின் மீதான அவலங்களுக்கு தீர்வை நோக்கியும் சமூக பிரச்சனைகளுக்கு நல்லதொரு வழிகாட்டியாக பாதை அமைக்க வேண்டிய நிலைக்காகவும் கடிதங்களில் இயங்குகிறார்கள்.

இந்த கடிதப் போக்குவரத்தில் வாசிக்கும் நாம் தெளிவாக அறிந்து கொள்வது மாணவர்களின் மனநிலையை நன்கு புரிந்து கொண்டு அவர்களின் எதிர்காலத்திற்கு ஏற்ப அவர்களை வழி அமைத்துக் கொடுக்கும் ஆசிரியரின் இடைவிடாத முயற்சியும் உழைப்பும் மனித நேயமும் போற்றத்தக்கது.

நாடகங்கள் வழியே சமூகத்தின் பிரச்சினைகளை தெருக்கூத்து ஆகவும் தெரு நாடகங்களாகவும் பல பல மேடைகளிலும் அரங்கேற்றி வரும் நூலாசிரியர் அதன் அடிப்படையில் மாணவர்களை நாடகத்திற்கு தேர்வு செய்வது பற்றியும் பலவிதமானவர்களின் எண்ண ஓட்டங்கள் இந்த நூலின் வழியே வெளிப்படுகின்றன. இவற்றையெல்லாம் தாண்டி இவருக்குள் ஒளிந்திருக்கும் சிறந்த பண்பாக அமைந்திருப்பது மனித நேயம். வறுமைக்கு வாக்கப்பட்டு வாடி நிற்கும் கல்லூரி மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் அவர்களின் கல்வி முடியும் வரை உதவி செய்த பாங்கும் பலமுறை அவர்களை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு உணவு உட்பட பொருட்களை வழங்கி அவர்களை சிறப்பான முறையில் கவனித்துக் கொண்டதும் என்று இவரைப் பற்றி மாணவர்கள் தொடர்ச்சியாக கடிதங்களில் எழுதுவதை வாசிக்கையில் எல்லா ஆசிரியர்களும் இத்தகு மனப்பாங்கில் வாழும் போது சமூகத்தில் ஆசிரியர் மாணவர் உறவு மிகச் சிறப்பானதொரு நிலைக்கு எடுத்துச் செல்லப்படும் என்பதில் ஐயமில்லை.

அறிவியலும் தொழில்நுட்பமும் மென்மேலும் வளர்ந்து வரும் சூழலில் அதற்கேற்ப தமிழும் வளர்ச்சி பெற்று இணையத்தில் அலைபேசியில் இடம் பிடித்தாலும் தமிழர்களின் நாவில் இடம் பிடிப்பது என்று கடினமாகவே இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும்தான் தாய்மொழியில் பேசுவது அநாகரீகமாக கருதப்படுகிறது. தூய செந்தமிழில் பேசுபவர்களை வினோதமான மொழி பேசுபவர்களாகவே புறம் தள்ளி வைக்கிறது இன்றைய தமிழகம். இதன் அடுத்த கட்டமாகவே நிறைய பெற்றோர் ஆங்கில வழிக் கல்வியே சிறந்தது என்ற மோசமான புரிதலோடு தங்களது அடுத்த தலைமுறையை நகர்த்திச் செல்கின்றனர். ஆங்கிலம் என்பது மொழி மட்டுமே. அறிவு அல்ல என்று பல அறிஞர்களும் போதித்தாலும் இன்றைய பெற்றோருக்கு உள்ளே ஒளிந்து கிடக்கும் ஆங்கில மோகம் நிறைய மாணவர்களை தமிழில் இருந்து தள்ளி வைக்கிறது.

நாட்டுப்புற கலைகள் மீதான அரசின் கவனமின்மையையும் இந்த நூலில் மாணவர்கள் வினா எழுப்புகின்றனர். யாருக்கும் கிடைக்காத நல்வாய்ப்பாக இவருக்கு இவரது மாமியார் மாணவியாக வந்து அமர்ந்து பாடம் படித்து செல்கிறார். அவருக்கும் பாடம் நடத்தி அவரையும் உயர்நிலைக்கு எடுத்துச் செல்லும் ஆசிரியர் பணியை திறம்பட செயல்படுகிறார் ஆசிரியர்.

வெறுமனே ஆசிரியரை போற்றும் கடிதங்களாகவும் மாணவர்களுக்கு வழிகாட்டும் ஆசிரியராகவும் அமைந்து ஒரு சார்பு நிலையில் சென்று விடக்கூடிய ஆபத்தான நிலைக்கு இந்த நூல் நம்மை அழைத்துச் செல்லாமல் இன்றைய காலகட்ட சமூகத்தின் அவலங்களை நமக்கு எடுத்து இயம்புகின்றன. அது தொடர்பான சிந்தனைகளை நமக்குள் எழுப்புகின்றன. ஆண் பெண் பேதம் பற்றிய இன்னும் அறியப்படாத சமூகத்தையும் நமக்கு காட்சிப்படுத்துகின்றன. ஆசிரியர் மாணவர் இடையிலான பிணக்கம் எப்படி அமைந்திருந்தால் மாணவர்கள் தங்கள் வாழ்நாளில் நல்லதொரு வழியைக் கட்டமைத்துக் கொள்வார்கள் என்பதற்கான தீர்வாகவும் இந்நூல் அமைந்திருக்கிறது.

 

நூலின் தகவல்கள் 

நூல் : இப்படிக்குத் தங்கள் அன்புள்ள (கடிதம் வழியிலான கட்டுரைத் தொகுப்பு)

நூலாசிரியர் : கி பார்த்திபராஜா

முதல் பதிப்பு  : மார்ச் 2016

விலை : ரூ. 200/-

பக்கம் : 176

வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன்

எழுதியவர் 

இளையவன் சிவா 

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 One thought on “கி பார்த்திபராஜா எழுதிய “இப்படிக்குத் தங்கள் அன்புள்ள” – நூலறிமுகம்”
  1. அருமையான ஆழ்ந்த விவரிப்பு. நல்வாழ்த்து தோழர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *