Ippalam Yarunga Sathi Pakkuraa Poem by Adhirai ஆதிரையின் இப்பலாம் யாருங்க... சாதி பாக்குறா....? கவிதை

இப்பலாம் யாருங்க… சாதி பாக்குறா….? கவிதை – ஆதிரை




நாயர் கடை டீயில் தொடங்கி
செட்டியார் கடை
மளிகையோடு
நாடார் கடையில்
காய்கறி வாங்கி
வீட்டிற்குச் சென்றேன்!

வாசலில் கிடந்த
நாளிதழைப் புரட்ட
ராமசாமி படையாச்சி
மரண அறிவிப்பும்
சிதம்பரம் பிள்ளையின்
நினைவஞ்சலியும் நிரம்பிய பக்கங்களைப்
புரட்டினேன்!

சாதிச் சண்டையில்
மண்டை உடைந்தவர்களின்
மருத்துவமனைப் படங்களைக் கடந்தால்…

புதிதாகத் தொடங்கும்
சாதிக்கட்சி மாநாட்டு
விளம்பரம்
பல்லை இளிக்க…
ஒவ்வொரு சாதிக்கும்
வரன் தேடி அலைகிறது
இரண்டு பக்கங்கள்!

நாலாய் மடித்து
மேசையில் வைத்துவிட்டு
ரிமோட்டை எடுத்து
டீவியைப் போட்டேன்!

தமிழ்சாதி டாட் காம்
விளம்பரம் ஓட
வேறு சேனலை மாற்றினேன்!
தேவர் காலடி மண்ணே…என்று
சிவாஜி கரகரக்க
எழுந்து போய் பல்துலக்கி துப்பிவிட்டு
குளித்து முடித்து
அலுவலகம் புறப்பட்டேன்!

எதிரே வந்து நின்ற
மனைவி சொன்னாள்
மறக்காம….
செட்டிநாட்சிக்கன்
வாங்கிட்டு வாங்க!

வீட்டிலிருந்து வெளிய்யே வந்து
பைக்கை உதைத்துப்
புறப்பட்டேன்….
ரெட்டியார் சாவடியில்
உள்ள என் அலுவலகத்திற்கு!

என்ன ஓய்… என்று
சுப்ரமணிய ஐயர் கேட்க
டிராபிக் சார்னு சமாளிச்சிட்டு சிஸ்டத்தில் அமர….
புராஜக்ட் ஃபைலை
நீட்டினார் சுதாகர்ரெட்டி!

புராஜக்ட் மேனேஜர்
சிஸ்டம் சரியில்ல….
அதெல்லாம் வேற கதை!

மடமடவென பணிகளை முடிக்க……
மதிய உணவிற்கு நண்பர்கள் அழைக்க
கீழிருந்த முதலியார்மெஸ்ஸில்
சாப்பிட்டு முடித்தேன்
வழியில்லாமல்!

மீண்டும் விட்டபணி தொடர…..
ஜனனி ஐயரின் பாடல்
ஒலித்தபடி பக்கத்து சீட்டில் போன் அடிக்க
ஆபிஸ் டைம் முடிந்தது
ஒரு வழியாக!

மீண்டும்…..
பைக்கை உதைத்து
வண்டியைக் கிளப்ப…..
சீறிப்பாய்ந்து சென்றது
நாயுடு ஹாலைக் கடந்து..!

திடீரென வேகம்
செட்டிநாடு ஹோட்டல்
அருகே குறைய…..
தன்னையறியாமலேயே
பிரேக் போட்டது…
மனைவியின் ஞாபகம்!

ஒரு செட்டிநாட் சிக்கன் கிரேவி பார்சலோடு
நகர்ந்து….,
செங்குந்தர் பள்ளி வழியே செல்லும்போது….!

சாதிகள் இல்லையடி பாப்பா …. என்ற
வாசகத்தோடு பாரதி
முறைப்பதைப் பார்த்து
ஒரு நமட்டுச் சிரிப்போடு
சென்றேன்!

அம்பேத்கர் சிலையொன்று கைநீட்ட
நீட்டிய திசை சென்றேன்
பெரியார் நகர் வந்தது!
உறக்கம் கலைந்தது!

படுக்கையிலிருந்து
எழுந்தேன்….சமத்துவ
சமூகநீதி பாதையிலே
நடந்தேன்!

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 1 Comment

1 Comment

  1. தமிழ்நிலவன் குணபால்

    நடைமுறைக்கேற்ப ஒரு நல்ல கவிதை❤️
    வாழ்த்துக்கள் சொல்லாமல் இருக்க முடியவில்லை அண்ணா எனது வாழ்த்துக்கள் 💥

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *