*இறைப் பாலங்கள்!* சிறுகதை – தேனி சீருடையான்

Irai Palangal Short Story By Writer Theni Seerudayan. *இறைப் பாலங்கள்!* சிறுகதை - தேனி சீருடையான்ஒருபோதும் அவர் தன்னை “சிவசங்கர ஐயர்” என்று சொல்லிக் கொண்டதில்லை. சிவசங்கரன் என்றோ சங்கரன் என்றோதான் கூப்பிடச் சொல்வார். யாரேனும் “என்ன ஐயரே” என்று கூப்பிட்டால் “என்ன அப்படிச் சொல்றேள்?” என்று மறுப்புத் தெரிவிப்பார். “அவாள்” இவாள்” எனப் பேசுவதை மட்டும் மாற்றிக் கொள்ள முடியாதவராய் இருந்தார். “பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே” அப்படின்னு பாரதி பாடியிருக்காரோன்னோ. நான் மனுஷன்; சாதாரண புத்தி ஜீவி. சங்கரான்னு கூப்பிட்டாப் போதும்.”

காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து நந்தவனம் நோக்கி நடந்தார். அது நாடார்களுக்குச் சொந்தமான நீரடி நிலம். பூக்களும் காய்கறிகளும் செழித்துக் கிடந்தன. நெடிதோடிக் கிடந்த நிலத்தின் ஓரக்காலில் தென்னைகள் அரண் காத்து நின்றன. அக்ரஹாரத்து மனிதர்கள் நந்தவனத்துக்குக் குளிக்க வருவதில்லை. பள்ளுப் பறை பதினெட்டு ஜாதியும் குளிக்கும் இடத்தில் தாங்களும் புழங்குவதை அவர்கள் மனம் ஏற்கவில்லை.

நந்தவனக்கிணறு ஆழமானதும் அகலமானதும் ஆகும். ஏறத்தாழ ஐம்பதடி சதுர வடிவ மேற்பரப்பைக் கொண்டது. கிணற்றின் இருமுனைகளையும் இணைக்கத் திட்டுகள் இருந்தன. அவை கல் ஸ்லாப்புகள். கிணற்றுத் திட்டுகள் இறுக்கமாக இணையும்படி பதிக்கப்பட்டிருந்தன. திட்டு மூன்றடி அகலம் கொண்டது. கிணற்றின் நடு மைய ஓரத்தில் நங்கூரம்போல பில்லர் கட்டி அதன்மேல் நெடுங்கழி ஒன்றைப் பொருத்தி இருந்தார்கள். மேல் முனையில் பெரிய வாளி தொங்கியது. கழியில் மறுமுனையில் பாராங்கல் கட்டி, இறைக்க எளிதாகவும் கனமில்லாமலும் இருக்கும்,படி ஏற்பாடு செய்திருந்தார்கள்.

சங்கிலியால் இணைக்கப்பட்ட வாளியைக் கிணற்றுக்குள் இறக்கி நீர் இரைத்தார் சங்கரன். இரைப்பது சுகமான உழைப்பு. மோந்த வாளியை மேலே தூக்கி பக்கவாட்டில் இருந்த தொட்டியில் ஊற்றினார். தொட்டி நிறைந்த பிறகு குளிக்க ஆயத்தமானார். அங்கேயே போணியும் இருந்தது. வெறுங்கையோடு வந்து குளித்துத் துவைத்துச் செல்லும் அளவுக்கு வசதி செய்யப்பட்டிருந்தது. நந்தவனத்தை உருவாக்கியவர்க்ள் கரிசனக்காரர்கள்.

பன்னண்டாப்பு படித்து முடித்ததும் ஏதாவது வேலைக்குப் போக வேண்டும் என்று விரும்பினார் சிவசங்கரன். அப்பா சந்திர மௌலி ஓர் அடுக்களை மேலாளர். அதாவது சமயல் கொத்தனார். பிராமணர்களுக்கு மட்டுமல்லாமல் சூத்திரர்கள் வீட்டு விசேஷங்களுக்கும் சென்றார். அசைவ உணவு செய்ய மட்டும் அவர் ஒப்புக் கொண்டதில்லை. “கறிவாசம் பிடிக்காதோ?” என்று யாரேனும் கேட்டால் “அப்படியில்ல ஓய்; அசைவம் கத்துக்கல; அரகொற ஞானத்தால தப்பாயிரக் கூடாதோன்னோ” என்பார்.

சங்கரன் அந்தத் தொழிலை விரும்பாதவராய் இருந்தார். அடுப்படியில் வெந்து சாகவும் அன்ன மேடையில் நடந்து களைக்கவும் முடியாது என்று அப்பாவிடம் சொல்லிவிட்டார். அப்பா வற்புறுத்தவில்லை.

அக்ரஹாரத்தைத் தாண்டிய கருப்பு நிறப் பையன்களோடு கிரிக்கெட் விளையாடவும் கண்மாய்க்குச் சென்று நண்டு பிடிக்கவும் செய்தார் சங்கரன். நண்டு பிடிப்பது அவருக்கு விளையாட்டு. அது வேகு வேகு என ஓடுவதையும் பிடிபடும் போது கொடுக்கு நீட்டிக் கொத்த வருவதையும் அதிகம் ரசித்தார். கூட்டாளிப் பையன்கள் இளக்காரம் பேசினார்கள். “நண்டுக்கறி சாப்பிடுவியா?”

”ஏன்; கூடாதா?”

“அய்யருக கறி சாப்பிடுவாகளா?”

‘ஹ்ஹ்ஹ்ஹ்ஹா’ எனச் சிரித்தபடி “இந்த லோகத்துக்கு வறுத்த கறி சாப்பிடக் கத்துக் குடுத்ததே பிராமணாள்தான் தெரியுமோ? மத்தவா வேட்டையாடிப் பச்சையாச் சாப்பிட்டப்போ யாகம் வளத்து வேக வச்சுச் சாப்பிட்டது நாங்கதான்; அது மட்டுமா; பசுவக் கொல்லக்கூடாதுன்னு இன்னக்கித் தண்டோராப் போடுறவாளுக்கு ஒண்ணு தெரியல; வேத காலத்துல மாடுகளையும் குதிரைகளையும்தான் யாக சாலையில பலியிட்டா; மாடுன்னா பசுவும் உண்டும். பசுவக் கொல்லக் கூடாதுன்னுட்டு மனுஷாளக் கொல்றா; அபிஷ்டுகள். அதுகளுக்கு வரலாறு தெரியலை.” அவர் சிரிப்பு வானம் வரை ஒலித்தது.

இப்படியாக விளையாட்டுத்தனம் காட்டிக் கொண்டிருந்த சங்கரனுக்கு ஒரு சங்கடம் வந்தது. அது கல்யாணச் சங்கடம். அம்மா ரொம்பவும் வற்புறுத்தினார்.

“ஒனக்குன்னே ஒருத்தி நின்னுண்டிருக்கா; அவளுக்கு என்ன ஜவாப் சொல்லப் போற?”

”ஏன் நிக்யணும்? ஒக்காரச் சொல்லுங்கோ; முடியாதுன்னா இன்னொருத்தன் காலில விழச் சொல்லுங்கோ.”

”அபிஷ்டு! நம்ம கோத்திரத்துல ஆம்படையானுக்குப் பொண்ணும் பொண்ணுக்கு மாப்பிள்ளையும் கெடக்கிறது அருந்தல்; நீ வலமும் இடமும் தலையாட்டினைன்னா அடுத்தவன் கொத்திண்டு போயிடுவான்.”

“போகட்டுமே; சம்பாத்தியம் புருஷ லட்சணம்; நேக்கு இன்னும் லட்சணம் வாய்க்கலை.”

“சம்பாத்தியம் இல்லைடா; உத்தியோகம்.”

”போங்கோ; உத்தியோகம்னா சம்பாத்தியம் தானே? அது கைக்கு வந்த பெறகு கல்யாணத்தப் பத்தி யோசிக்கலாம்.”

“சீத்தா சுந்தரி காத்திண்டிருக்காளே.”

“யாரு, கோனாரு மாதிரி வலது பக்கம் பூணூல் போட்டிண்டிருப்பாரே; அந்த மாமாவோட மகளா?”

“அபச்சாரம்! அபச்சாரம்! ஒம்பேச்சை அந்த சிவாச்சாரியார் ஏத்துக்க மாட்டார்.”

“நேக்கு ஒரு உத்தியோகம் வரட்டும்; அப்புறம் அவர் கன்னிகாதானம் செய்யிறதை ஏத்துக்கிறேன்.”

“உன் பேச்சக் குப்பையில் கொட்டு.”

அம்மாவின் வார்த்தைகளை உள்வாங்கிச் சிரித்தபடி வெளியேறினார் சங்கரன். அப்பாவின் அறிவுரையும் அவரை அசைக்கவிக்ல்லை. முதலில் வேலை; அப்புறம் கல்யாணம் என்பதில் உறுதியாய் இருந்தார்.

அந்த நேரத்தில்தான் முருகன் வள்ளி. சிவன் பார்வதி சமேதராய் ஸ்தானம் பெற்றிருந்த திருக்கோயிலுக்கு பூஜை புனஸ்காரம் செய்ய சிவாச்சாரியார் தேவை என்று பத்திரிகைகளில் விளம்பரம் வந்திருந்தது. அதுவும் உள்ளூரில்! அமல்ராஜ் நாடார் அந்தக் கோயிலின் தர்மகர்த்தா. சந்திர மௌலி தர்ம கர்த்தாவை நேரில் சந்தித்து அந்த வேலையைத் தன் மகனுக்குத் தரவேண்டும் என்று கேட்டார்.சங்கரனைப் பூசாரியாய் நியமிக்க தர்மகர்த்தாவுக்கு அதிக நாட்டமில்லை என்றாலும் சந்திரமௌலியின் குணத்துக்காகச் சரிக்கொடுத்தார். உள்ளூராகவும் தெரிந்த முகமாகவும் இருந்தது என்பதோடு தன்னகங்காரமில்லாத பிராமணக் குடும்பம். தன் சொல்லை மீறமாட்டார்கள். அதோடு நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அடிபணிந்து வேலை செய்கிறான் என்ற சந்தோஷமும் சேர்ந்துகொண்டது. ஆண்டாண்டு காலமாய்ச் சகல பகுதி மக்களையும் பண்பாட்டு ரீதியாக அடக்கி ஆண்ட ஓர் இனம் இன்று மற்ற பகுதி மக்களுக்காகப் பணி செய்கிறது.

“யோவ் மௌலி; ஒம்மகன் வெளையாட்டுப் போக்குல கிறுக்குத் தனமா அலையிறானே; மந்திரமெல்லாம் நல்லாச் சொல்வானா?”

“பேஷா ஓதுவான்; மூணு வயசுலயே திருவாசகம் முற்றோதல் பண்ணியிருக்கான்; வேத மந்திரமும் நன்னாத் தெரியும்; அதனால சிவபுராணம் சொல்லி பூஜை பண்ணுவான்குறதுல சந்தேகம் வேணாம்.”

”ஒங்குணத்துக்காக ஒத்துக்கிறேன்; வெளையாட்டுத் தனத்த விட்டுட்டு வெவரமா பூஜை பண்ணட்டும்” என்று சொல்லியபடி நியமன ஆணை ஒன்றைத் தயார்ப் பண்ணும்படி கணக்குப் பிள்ளையிடம் கூறினார். அரை மணிநேரம் காத்திருந்து உத்திரவுத் தாளை வாங்கிச் சென்றார் சந்திரமௌலி.

எல்லாம் சிறப்பாகவே தொடங்கியது. தங்கநிற ஜரிகை பதித்த வெள்ளை வேட்டி கட்டி ஜெகஜோதியாய் சிவன் பார்வதி முன் நின்று தமிழ்மறை ஓதித் தனது பூசாரித் தொழிலைத் தொடங்கினார் சங்கரன். பார்வையிட வந்திருந்த அமல்ராஜ் நாடாருக்கும் அது ஏற்புடையதாய் இருந்தது. புரியாத மொழியில் ஓதுவதைவிடத் தமிழில் பூஜை செய்வது சிறப்பு.

மென்மையான இசைகலந்த மொழியில் தேவாரம் பாடினார் சங்கரன்.

மாசில் வீணயும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டரை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே.

நர்த்தனமாடும் இசை ஒலிகளை சங்கரன் வாயால் கேட்ட போது அமல்ராஜ் நாடார் அசந்து போனார். என்னமாய் ஆடுகிறது குரல்! ஓடையின் சலசலப்புப் போல, இளங்காற்றில் அசையும் தென்னங்கீற்றின் “விஷ்ஷ்” என்ற ஒலிபோல சாரல் மழையின் தெறிப்பொலி போல…. அபாரம் என்று நினைத்துக் கொண்டார். அனாயாசமாய்ப் பாடிய சங்கரனின் ரம்யமான குரல்வளம் அசத்தியது. வெறும் விளையாட்டுப் பயல் எனக் கணிக்கப்பட்டவன் இத்தனை வித்துவத்தோடு இருக்கிறானே! வியந்து பாராட்டி “நல்லா நடத்து” எனச் சொல்லிச் சென்றார்.

சிறப்பாகவே பூஜைகள் நடந்தன. சங்கரனின் சோட்டுக்காரப் பயல்களின் வீட்டாரும் வெள்ளி செவ்வாயில் கோயிலுக்கு வந்து ஆசீர்வாதம் வாங்கிச் சென்றனர். அவர்கள் தட்டில் காசு போட்ட போது “வேண்டாம்” என்று விலக்கினார். “உண்டியல்ல போடுங்கோ; மாசம் பொறந்தா நேக்கு சம்பளம் கெடக்கிதே.”

ஆனால் குறைந்த அளவே சம்பளம் தந்தார் அமல்ராஜ் நாடார். வருத்தமாய் இருந்தது. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என நினைத்துக் கொண்டார்.
சீத்தா சுந்தரி அடிக்கடி கோயிலுக்கு வந்துபோனாள். தீபம் ஏற்றியது போல முகம் ஜொலித்தது. அமாவாசைத் திதியைக் கண்ட கடல் அலைபோல சங்கரன் மனம் தவ்வியது. இத்தனை அழகா இவள்! இப்பேர்ப்பட்ட அழகியை இத்தனை நாள் அசட்டை செய்தோமே எனத் தன்னைத் தானே திட்டிக் கொண்டார். “அம்மாவுக்கு சேஷ்டமில்லை; அர்ச்சனை பண்ணிக் குடுங்கோ” என்றாள் சீத்தா சுந்தரி.

அவள் தந்த பொருட்களை வாங்கும் சாக்கில் விரல்களால் புறங்கையைச் சீண்டினார்.

சரட்டெனக் கையைப் பின் இழுத்தபடி “நாளக்கி நீங்கதானே பிடிக்யப் போறேள்; இன்னக்கேவா?” என்றாள்.

“ஓ! கையா? புஷ்பமோன்னு நெனச்சுண்டன்.”

பார்வதி தேவிமுன் வைத்து அர்ச்சனை பண்ணியதோடு அருகில் பிரதிஷ்டையாகி இருந்த லிங்கத்தின் மேல் பூவை வைத்து “அரசனும் ஆண்டியும் அதுக்குள்ளே அடக்கம்” எனப் பாடியபடி, கொண்டுவந்து அவள் கையைத் தொட்டுத் தந்தார்.

“லிங்கம் புஷ்டியா இருக்கோ?” அகன்று விரிந்த கண்களால் சங்கரனை ஆலிங்கனம் செய்தபடி கேட்டாள் சீத்தா சுந்தரி.

”கரைக்டாச் சொல்றாய்; லிங்கம் தேஜஸ்ஸோடயும் புஷ்டியாவும் இருந்தாத்தானே லோகம் சிரிக்கும்.” கடைக் கண்ணால் அவள் மேனியை அணைத்தார்.

“ரெம்ப தமாஷ் பண்றேள்; அம்பாள் கால்ல வச்சுத்தானே கும்பிடணும்; லிங்கத்து மேல வச்சா என்ன அர்த்தம்?”

”நோக்கு மாங்கல்ய சுகம் கெடக்ய வேணாமா; அதான்….”

“மாங்கல்ய சுகம் இல்லே; லிங்க சுகம்” என்ற வார்த்தைகளை விட்டெறிந்து விட்டுக் குடுகுடுவென வெளியே ஓடினாள். அவள் நடை ஒரு முயல்குட்டி ஓடுவது போல் இருந்தது. இன்னொரு பெண் அர்ச்சனைக்காக வந்து நிற்கும் வரை நடந்து செல்லும் சீத்தாவின் பின்புறத்தை ரசித்தபடி இருந்தார்.

காலம் தமாஷாய்ப் போய்க் கொண்டிருந்த நிலையில் அனலில் வெந்து சுணங்கி வேலைக்குப் போக முடியாமல் வீட்டிலிருந்தார் சந்திரமௌலி, குத்தகைக்கு விட்டிருந்த ஒன்றரைக் குழி நஞ்சையிலிருந்து கொஞ்சம் நெல் வந்ததை வைத்துக் குடும்பம் நடந்தது. குத்தகைக்கு எடுத்தவர் வாழையோ கரும்போ நட்டபோது அந்த தானியமும் வராமல் போனது. அதற்குப் பதில் பணம் தந்தார் என்றாலும் தானியத்தின் இடத்தை நிரப்ப முடியவில்லை. குடும்பம் கஷ்ட திசையில் நகரத் தொடங்கியது.

சங்கரன் அமல்ராஜ் நாடாரிடம் முறையிட்டார். “ரெம்பக் கஷ்டம்; சம்பளத்தக் கொஞ்சம் கூட்டிக் குடுத்தேள்னா உபகாரமாருக்கும்.”
அவர் நையாண்டியாய்ச் சிரித்தபடி “ஐயரே! சம்பளத்தோட கிம்பளமும் கெடக்கிதுல்ல; அப்பறம் என்ன கொறச்சல்?”

“அபச்சாரம்! நேக்கு ஏதுன்னா கிம்பளம்? தட்டுல விழுகுறதையும் உண்டியல்ல போடுறன்;”

“பொழக்யத் தெரியாத ஆளாவுல்ல இருக்க; தட்டுக்காச நீயே வச்சுக்க; சம்பளம் கூட்டிக் கேக்கக் கூடாது. இது என்ன மதுர மீனாட்சியம்மங்கோயிலா; எக்குத் தப்பாக் கொட்டுறதுக்கு?”

தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு வெளியே வந்தார். தட்டுக் காசை எடுக்க மனம் ஒப்பவில்லை. அது சாமியின் காசு; திருடுவதற்குச் சமம்.

மனம் சோர்வடைந்து படுத்திருந்த ஒருநாள் சம்பாத்தியத்துக்கு வேறு வழி தேடலாமா என்று தோன்றியது. அதற்கு உடல் ஒத்துழைக்க வேண்டும்; கையுழைப்புத்தான் காசு சம்பாதிக்க இடம் தரும்; தனது சோட்டுப் பயல்கள் திருப்பூர், கோயம்பத்தூர் போன்ற பஞ்சாலை நகரங்களுக்குப் போய்க் கைநிறையச் சம்பாதிக்கிறான்கள்;அப்படிப் போனால்தான் நிம்மதியாய்ப் பிழைக்க முடியும்.

தனது நெருங்கிய நண்பன் வீரையாவிடம் விசாரித்தார் சங்கரன். “திருப்பூர்ல நேக்கு ஒரு வேல வாங்கித் தாரியா?”

வீரையா வீர்யமாய்ச் சிரித்தான். “என்ன சங்கரா இப்படி? ரசாயனக் கெடங்குல கெடக்க ஒன் ஒடம்பு சம்மதிக்குமா? குளுகுளுன்னு கோயில் நெழல அனுபவிச்ச நீ, உஷ்னச் சூட்டுல நின்னு வேல செய்வியா? பிராமணாள்னா உழைப்பு தோஷம் உள்ளவங்கன்னு பேர் இருக்கு; சேத்துக்குவாங்கன்னு தோணல.”

சங்கரனுக்கு வருத்தமாய் இருந்தது. உழைப்பு என்பது அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவானது. இதில் பிராமணர்களை மட்டும் ஒதுக்குவது என்ன நியாயம்?

அடுக்களைத் தொழிலும் உழைப்புத்தானே; அதை ஏற்கும் இந்த சமுதாயம் வேறு உடல் உழைப்புக்கு ஏன் சம்மதிப்பதில்லை?

அவராகவே சமாதானமும் சொல்லிக் கொண்டார். ராஜ பீடம் ஏறாமலே ராஜாவையும் அடிமைப்படுத்திய ஆரியப் போக்குதான் அதற்குக் காரணம். காலமாற்றம் எல்லாத் தத்துவச் சிந்தனைகளையும் மாற்றிவிடும்.

கோயிலுக்குப் போவதற்கே சலிப்பாய் இருந்தது சங்கரனுக்கு. பொருளில்லா இடத்தில் போக்கிடம் கொள்ள வேண்டாம் என்று தோன்றியது. ஆனாலும் வேறு வழியில்லை. வெறும் தீபம் ஏற்றுவது, சிவ சமேதருக்கும் முருகக் குடும்பத்துக்கும் ஆராதனை காட்டி வாடிக்கையாளர்களுக்கு விபூதி குங்குமம் தருவது என்று யந்திரகதியில் அவர் செயல்பாடுகள் இருந்தன. உயிரோட்டம் இல்லாத வெற்றுச் செயல்பாடாய் மாறிப் போனது பூசாரித்தனம். சீத்தா சுந்தரி வந்து ஏடாசி செய்து வம்பிழுத்த போதும் கசந்த புன்னகையைத்தான் உதிர்க்க முடிந்தது.ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலையில் கோயிலுக்கு வெளியில் இருந்த தாலுக்கா அலுவலகத்துக்கு அருகில் பரபரப்பான முழக்கம் கேட்டு எட்டிப் பார்த்தார். அரசியல் கொடிகளையும் ஆன்மீகக் கொடிகளையும் பிடித்தபடி ஐம்பதுக்கும் மேற்பட்ட நபர்கள் பெருமுழக்கப் போராட்டம் நட்த்தினார்கள். அனைவரும் மேல் சட்டை இல்லாமல் பூணூல் அணிந்திருந்தார்கள். பலபேர் நெற்றியில் விபூதிப் பட்டையும் ஒருசிலர் ‘u’ வடிவ நாமமும் தறித்திருந்தார்கள். அனைவரும் பூசாரித் தொழில் செய்பவர்கள் எனப் புரிந்து கொண்டார் சங்கரன்.

“கூட்டிக் குடு, கூட்டிக் குடு;
சம்பளத்தைக் கூட்டிக் குடு.

நாங்கள் செய்யும் வேலையால்
இறைவன் முகம் ஜொலிக்குது;
எங்கள் வயிறு காயிது.
மனித வாழ்க்கை உயர்வதற்கு
கடவுளிடன் கோருகிறோம்.
எங்கள் வாழ்வு உயர்வதற்கு
பரிந்துரைக்க யாருமில்லை.”

முழக்கம் முடிந்த பின் ஒரு பூசாரி வீர்யமாய்ப் பேசினார். “அல்லா இப்ரியல் மூலம் நபிகள் நாயகத்துக்கு மார்க்கக் கருத்துகளைப் போதித்தார். அசரத்துகளுக்கு நல்வாழ்வு கிடைக்கிறது. பர மண்டலத்திலிருக்கும் பிதா யேசுநாதர் மூலம் நற்செய்தி சொன்னார். பங்கு தந்தையர் கஷ்டமின்றி ஜீவனம் செய்கின்றனர். இறைச் செய்தியை மனிதருக்கும் மனித வேண்டுகோளை இறைவனுக்கும் சமர்ப்பித்து அனைவரும் சுபிட்சமாய் வாழ பூஜை செய்கிறோம்; எங்களுக்கு முழுமையான ஜீவனம் கிடைக்கவில்லை. அனைத்து மக்களும் ரசாங்கத்துக்குப் பரிந்துரைத்து எங்கள் வாழ்க்கையை மீட்டுத் தரவேண்டும்.” உரத்த குரலில் பேசியவரைத் தொடர்ந்து மற்றவர்கள் “ஆமாம், ஆமாம்” என்றனர்.

அவர்களுக்கும் சம்பளப் பிரச்சினைதான் போலும். இறைத் தொண்டு செய்யும் அனைவரையும் இறைவன் வஞ்சிக்கிறானா? இறை வருவாயைத் தனதாக்கிக் கொள்ளும் அரசுதான் வஞ்சிக்கிறது. கோயில்களுக்கு ஏராளமான நிலங்கள் சொத்துகள் இருக்கின்றன; அவற்றை அரசுக்கு வேண்டியவர்கள் தமதாக்கிக் கொண்டு இறைத் தூதர்களாகிய பூசாரிகளைப் பட்டினி போடுகிறார்கள். தனியார் கோயில்களிலும் அதுதான் நடக்கிறது.

சங்கரன் அனைத்து முகங்களையும் உற்று நோக்கினார். பிராமணப் பூசாரிகள் மட்டுமின்றி சூத்திரப் பூசாரிகளும் இருந்தனர். கோயிலுக்கு யாரும் வந்திருக்கவில்லை என்பதால் சங்கரன் அருகில் சென்று வேடிக்கை பார்த்தார். ஒரு பெண்தான் இத்தனை பேருக்கும் தலமைதாங்கி வழிநட்த்தினார். அவர் ஏதோ ஒரு தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராம்.

அன்று இரவு முழுவதும் உறக்கம் பிடிக்காமல் போராட்ட முழக்கங்களை சுவாசித்தபடி இருந்தார் சங்கரன். அப்பா தலைவலியால் அனத்தியபடியும் அம்மா அவர் அருகில் அமர்ந்து பணிவிடை செய்தபடியும் இருந்தார். குத்தகைதாரரிடம் அப்பா தம் நிலையை எடுத்துச் சொல்லிக் கொஞ்சம் பணம் வாங்கி வந்தும் பற்றாக்குறைதான். “நம்ம வீட்டுச் ச்டடிதான் நமக்கு அன்னம் பரிமாறும். அடுத்த வீட்டு அகப்பை அளவாத்தானே இருக்கும்” என்று என்று கூரினார். தான் ஏலாதவனாகிப் போனதை எண்ணி வெட்கப்பட்டார் சங்கரன்.

மறுநாள் வழக்கம்போல் கோயிலுக்க்குப் போனவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் இருக்க வேண்டிய இடத்தில் வேறொருவர் நின்றிருந்தார். “ஏங்காணும்; யார் நீ?”

”தலைவர் நேக்குப் புது உத்தரவு தந்திருக்கார்.” என்றார் புதுப் பூசாரி.

”ஏன்; எதுக்கு?”

“நேக்கு என்னன்னா தெரியும்?” குனிந்து பெருக்கி, தரையை நீரூற்றி கழுவி விட்டு நெய்த்தீபம் ஏற்றினார் புதியவர். புஷ்பக் குடலையோடு வந்த சில பெண்கள் புதியவரைக் கண்டு திகைத்து நின்றனர். “சங்கரு சாமி! யாரு அர்ச்சனை பண்ணப் போறது?”

என்ன செய்வதென்று புரியாமல் திகைத்தார் சங்கரன். சில நொடிகளுக்குப் பிறகு மலர்ச்சி மாறாத முகத்தோடு “இன்னையிலருந்து அவருதான் பூஜாரி; அங்கயே குடுங்கோ” என்றார்.

சங்கரன் கோயில் வாசலுக்கு வந்த போது சூரியன் வீர்யப் படத் தொடங்கியிருந்தான். குளிர் காய நினைப்பவருக்குச் சுகம் தரும் சூர்யன் உழைப்பவர்க்கு வேர்வை தருகிறான். லோகம் பிளவுண்டு கிடக்கிறது.

பஞ்சகச்ச வெள்ளை வேட்டியுடன் சட்டை அணியாத மேனியில் பூணூல் ஒளி தவழ அமல்ராஜ் நாடார் வீட்டுக்கு நடந்தார் சங்கரன். வரவேற்பறையில் அமர்ந்து செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தவர் சங்கரனைப் பார்த்ததும் என்னப்பா?” என்றார்.

“நமஸ்காரம் மொதலாளி.”

“சொல்லு.”

“நேக்குப் பதிலா வேறொருத்தரப் போட்டிருக்கேள்; அப்படின்னா நேக்கு?”

”நீதான் போராட்டக் கட்சியில சேந்துட்டையில்ல; இங்க ஒனக்கு என்ன வேல? அங்க போயி ஊழியம் பாரு.”

”என்னங்க மொதலாளி இப்படி நட்டாத்துல தள்ளி விடுறேள்.”

“கடவுள்னா சாந்த சொரூபி; மனுஷச் சண்டைகளத் தீத்து வக்கிற அமானுஷ்யர்; அவருக்கு மறியல் ஆர்ப்பாட்டமெல்லாம் பிடிக்காது; கடவுள் கனவுல வந்து சொன்னார், சங்கரன் போராடப் போகட்டும்னு.”

கோபமும் வருத்தமும் பொங்கிய முகத்தின் வழியே குனிந்து நின்றார் சங்கரன்.

“நேத்து நடந்த ஆர்ப்பாட்டத்துல நீயும் நின்னிருந்த; ரெண்டு கண்ணாலயும் பாத்தேன்; ஒடனே வேறொரு பிராமணன வரவச்சுட்டேன்.”

“நான் சும்மா வேடிக்கை பாக்கத்தான் போயிருந்தேன்; தயவு பண்ணுங்கோ.”

“என்னோட அகராதிய்ல தயவுங்குறதுக்கு எடமில்ல; எனக்குச் சொந்தமான நகக் கடையிலயும் எங்குடும்பத்துலயுன் கூட அதே நெலமதான்; எம்மக இன்னொருத்தனோட ஓடிப் போனா; அவளக் காணாப் பொணமாக்கிட்டேன்; அந்தக்கத ஒனக்குத் தெரியுமா? அதனால தயவு தாட்சணயமுன்னுக் கால்ல விழுகாமப் போயிரு”. போயிங்கொப்பனப் போல அடுப்படியில வெந்து சாகு; நெழல்லயே நின்னு ஒடம்பு ஊறிப் போச்சுல்ல.”

மீண்டும் ஒரு நமஸ்காரம் போட்டுவிட்டு வெளியேறினார் சங்கரன். வீட்டுக்குப் போக மனமில்லாமல் வேறு திசையில் நடந்தார். எதிரில் தன் தோழிகளோடு சீத்தா சுந்தரி வந்தாள். நின்று மௌனமாய்ச் சிரித்தாள். “எங்க நடக்குறேள்? ஒங்கள தர்சனம் பண்ணத்தான் வந்திண்டிக்கோம்.”

வான்வெளியில் பறந்து கொண்டிருந்த நினைவுகள் சீத்தாசுந்தரியின் குரலுக்குக் கட்டுப்பட்டுக் கீழ் இறங்கின. “சேஷ்டந்தானே?” என்றவர் “இன்னையிலருந்து வேறொத்தர் பூஜை பண்றார்; அவர்ட்ட போங்கோ” என்றார்.

“அச்சச்சோ! நேக்கு நீங்கதான் வேணும்.”

அவளை விலக்கி அமைதியாய்க் கடந்து சென்றார். அவர் முதுகை ரசித்தபடி கோயிலுக்குச் செல்லாமல் வீட்டுக்குத் திரும்பினாள் சீத்தா சுந்தரி.

மனம் அமைதி இல்லாமல் அலைந்தது. அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லாதது போல பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது எவ்வளவு பெரிய அனுபவ மொழி! என்ன செய்யலாம்? ஏதேனும் ஒரு வகையில் வாழ்க்கையை மீட்டெடுத்தாக வேண்டும். கூலி வேலைக்கு மனம் ஒத்துப் போனாலும் உடல் பழகவில்லை. எல்லாத்துக்கும் ஒரு பயிற்சி தேவைப்படுகிறது.

ஊரிலிருந்து விலகி அலாதியாய் அமைந்திருந்த பத்திரப் பதிவு அலுவலகம் தாண்டிக் காட்டுப் பாதையில் நடந்தார் சங்கரன். மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன. இன்னும் தார்ச்சாலை போடப்படாத சரளிக்கல் சாலை! செருப்பணியாத கால்களில் கற்கள் குத்தின. “கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை” என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வந்து நகைக்கத் தூண்டின. முள் குத்தி அனுபவமில்லாத வரிகளா, அல்லது விதந்தோதும் மிகை வரிகளா? எதுவாயினும் கல்குத்தி வலியெடுக்கும் போது பிராணன் போகிறது.

உயர்ந்தும் அகன்றும் வளர்ந்திருந்த ஆலமரத்தடியில் ஓர் இளைஞனும் இளைஞியும் உடலோடு உடல் மோதி விளையாடிக் கொண்டிருந்தனர். நல்ல அழகியாக அவளும் கருநிற தேகஸ்தனாக அவனும் இருந்தனர். மரத்தூரில் பள்ளிக் கூடப் பைகள் கிடந்தன. தயங்கி நின்று அவர்களை ஏறிட்டுப் பார்த்தார். பாவமாய் இருந்தது. உணர்ச்சி ததும்பும் வயதில் எதிர்கால விபரீதங்களை யோசிக்காமல் இப்படிக் கிடந்து அல்லாடுகிறார்களே; இது வயசுக் கோளாறு மட்டுமல்ல; தேக தோஷமும் கூட; அவர்கள் இருவரும் இவரைக் கண்டதும் நடுங்கிப் போயினர்.

”யாரு பிள்ளைகளா?”

அவர் கேள்விக்குப் பதில் சொல்லாமல் தங்கள் பைகளைத் தூக்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். காதலர்களா, காமப் பிரீதிகளா எனப் புரிந்து கொள்ள முடியவில்லை. காமம் மீதூரக் கண்ணிரண்டும் கண்ட பின் காதல் நுழைகிறது என்பது சங்கரனின் நம்பிக்கை. வள்ளுவரும் அப்படித்தான் சொல்கிறார். “வான தேவதையா, அழகிய மயிலா, மனிதப் பெண்ணா, மனம் மயங்குகிறது.” காமத்துப் பாலின் முதல் பாடல் இது. காண்பது கண்; காணப்படுவது பெண்.

அப்படியானால் அது காமம்தானே! வள்ளுவர் காலம் களவுக்கு மதிப்பளித்தது. அன்று களவு கற்பாக மாறும் இயல்பைக் கொண்டிருந்தது. இன்று? காதல் கற்பாக மாறாமல் ஸ்த்ரீகள் பாதிப்படைகிறார்கள். அதை உணர்ந்தாவது பெண்கள் மேனியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்;

அங்கு கிடந்த கல் திட்டைமேல் உட்கார்ந்தார். அதில் பழங்கால எழுத்துகள் பதியமாகி இருப்பதாகத் தோன்றியது. உளியால் செதுக்கப்பட்டிருந்தவற்றை வாசிக்க முயன்றார். பரிச்சயமில்லாததைக் கிரகிக்க முடியவில்லை. அவை தமிழி எழுத்துகளாய் இருக்கலாம். கல் திட்டை இருக்கிறது என்றால் ஒருகாலத்தில் நாகரீக மனிதர்கள் வாழ்ந்த இடமாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. திட்டின் மேல் தலை சாய்ந்து படுத்தார். சில நிமிடங்களில் கனவு கண்டது போல உலுக்கி எழுந்தார்.அமல்ராஜ் நாடார் எந்த விசாரணையுமின்றி வேலைநீக்கம் செய்துவிட்டார். மனித தர்மத்துக்கும் இறைக் கோட்பாட்டுக்கும் முரணாது இது. பூசாரிகள் கோயிலை எழுதித் தரச் சொல்லியா கேட்டார்கள்? சம்பளம் கூட்டி கொடு என்பதுதானே அவர்கள் கோரிக்கை. அதைச் செய்யாமல் அவர்களைப் போராட்டக் களத்தில் இறக்கியது யார்? கோயில் நிர்வாகந்தானே! அதை வேடிக்கை பார்த்ததற்கே தண்டனை என்றால் களத்தில் இறங்கியிருந்தால் என்னசெல்லாம் நடந்திருக்கும்; திருட்டுப் பட்டம் சாட்டிச் சிறையில் அடைத்திருப்பார்.

தாத்தனும் தாத்தியும் வாழ்ந்த இந்த இடத்தில் ஏன் ஒரு கோயிலை உருவாக்கக் கூடாது? இந்த எண்ணம் தோன்றியதும் வருத்தம் கலைந்து நிம்மதி உண்டானது.

வாழ்க்கை பயம் இல்லாத ஒரு சமுதாயம் உருவாக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த போது அந்த வழியாக சைக்கிளில் வந்த குமணக் கோனார் இறங்கி “என்ன ஐயரே” என்றார். “கோயிலுக்குப் போகலியா?”

எழுந்து இருகரம் கூப்பி வணங்கினார் சங்கரன். அவர் பெயர் மட்டுமல்ல; வாழ்க்கை நடைமுறையே குமண வள்ளலைப் போல் இரக்க சுபாவம் கொண்டதாய் இருந்தது.

குமணக் கோனார் இறங்கிவந்து கல் திட்டையில் அமர்ந்தார். நடந்தவைகளைச் சொன்னார் சங்கரன். அனுதாபத்தோடு கேட்ட குமணக் கோனார் “அடுத்து என்ன செய்யிறதா உத்தேசம்?” என்றார்.

“ஒங்களப் பாத்ததும் ஒரு யோஜனை தோணித்து; பெரியவா; கோவிச்சுக்கலைன்னா சொல்றன்.”

“சும்மா சொல்லு ஐயரே.”

இங்கு ஒரு சின்ன கோயில் நிர்மாணிக்க வேண்டும்; அது சிவன் கோயிலா, முருகன் கோயிலா? எதுவாயினும் சரிதான். சிவன் கோயில் என்றால் லிங்கம் அவசியம் இருக்க வேண்டும். ஏகன் அநேகனாகவும் அநேகன் ஏகனாகவும் மாறும் தத்துவம் படைத்தவன் சிவன் என்று வட மொழி பாஷ்யங்கள் பேசுகின்றன. அதற்கு நிறைய் மந்திர பூஜைகள் செய்து 48 நாள் விரதமிருந்து பிரதிஷ்டை செய்ய வேண்டும்; அதற்கு நிறையச் செலவாகும். முருகன் என்றால் எளிய தெய்வம்; மனிதனே தெய்வமானவன். நாற்பத்தெட்டு நாள் விரதமெல்லாம் தேவையில்லை.

“என்ன சங்கரா; என்ன யோசன?”

“இந்த மரத்தடியில சின்ன முருகன் சிலைய பிரதிஷ்டை செய்யலாமான்னு….”

”அடி சக்கை! இது நல்ல ஐடியா; இது நத்தம் பொறம்போக்குதான்; யாரும் கேள்வி கேக்க முடியாது; நல்லா செய்யி ஐயரே. தோட்டந்தொரவுக்குப் போறவுக ஆண்டவண்ட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டுப் போகட்டும்; பத்திராபீஸ் பக்கத்துல இருக்கதால பத்திரம் பதியிறதுக்கு முந்தியும் பிந்தியும் சாமி கும்பிட வருவாக; யாராச்சு வம்பு தும்புக்கு வந்தா நானிருக்கேன்.”

மனம் பொங்கிப் பொங்கி வழிந்தது. பல வருடங்களாய்க் கரை காணாமல் நடுக்கடலில் தத்தளித்த கொலம்பஸ், பறந்து வந்த காகத்தைக் கண்டு கரை வந்து விட்டது என மகிழ்ந்தது போல சிவசங்கரனும் பூரிப்படந்தார். அப்பாவிடம் கொஞ்சம் பணம் வாங்கி கோயில் நிர்மாணிக்கலாம்; ஒரு பீடம், சூலாயுதம், முருகன் சிலை ஒன்று! அது போதும். பின்னாளில் பக்தர்களிடம் இருந்து வரும் காசை வைத்துச் சின்னதாய்க் கோயில் எழுப்பிக் கொள்ளலாம். குமணக் கோனார் விடை பெற்ற போது அவர் கையை எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொண்டார் சங்கரன்.

ஒரே வாரத்தில் கையில் வேலுடன் முருகன் மரத்தடி பீடத்தில் கம்பீரமாய் நின்றிருந்தார். தேஜஸ் மிகுந்த முருகனின் பார்வை ஊரை நோக்கியதாய் இருந்தது. கோயில் கிழக்கு நோக்கியதாய் இருக்க வேண்டும் என்ற இலக்கணத்துக்கு மாறாய் வடக்குப் பார்த்து இருந்தது. வடக்கு நோக்கி ஊர் அமைந்திருந்தது.

முதல் நாளில் பஞ்ச ஸ்த்ரீகள் போல ஐந்து பெண்கள் கும்பிட வந்தார்கள். அவர்களில் சீத்தா சுந்தரியும் இருந்தாள். மற்ற பெண்டுகளை அவள்தான் அழைத்து வந்திருப்பாள் போலும். முருக நாமம் பொறிக்கப் பட்ட அகன்ற வெண்கலத் தட்டில் விபூதி குங்குமத்துடன் புஷ்பமும் நிரப்பி அவர்கள் முன் நீட்டினார். அவர்கள் கொண்டு வந்திருந்த் தேங்கா பழத்தட்டை அவரிடம் தந்தனர். வாங்கி இடது கையால் மணியை ஆட்டியபடி தேங்காய் உடைத்து முருகனுக்கு ஆராதனை செய்து தந்தார். பெண்கள் ஆளுக்கு நூறு ரூபா தட்டில் போட்டனர். அகல விரிந்த கண்களால் ஆச்சர்யம் காட்டினார் சங்கரன். பிரபஞ்ச வெளியில் அவர் பறந்து கொண்டிருந்த போது அந்தப் பெண்கள் பாதையில் நடக்கத் தொடங்கினர். மற்றவர்கள் மல்லிகை மட்டும் சூடியிருந்த போது சீத்தாவின் கூந்தலில் ரோஜாவும் இணைந்திருந்தது.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.