இறைவி இவள் கவிதை – பாங்கைத் தமிழன்
அவள் என்ன
கற்சிலையா
உலோகத்தாலான
உருவச்சிலையா?

அரிதாரம் பூசி
அலங்கரித்து
அலங்கல் சார்த்தி….

திருவிழா என்னும் நாளில்
ஆராதிக்கப்படும்
பல்லக்குச் சிலையா?

சிற்பி செதுக்கிய
சிங்காரச் சிலையா?

அசையாத
அழகு செய்யப்பட்ட
அவயங்களால்
அம்மன் சிலையென
காட்டப்படும்
அலங்காரச் சிலையா?

நாள் குறித்து
அர்ச்சனை செய்து
திருவிழா நாளாக்கி
‘ மகளிர் நாளென’
கொண்டாடி……
விழா முடிந்து
மூலையில் முடக்கி
தாழிட்டு…..
இருட்டறையில்
இருக்கையில் அமர்த்தி
இயங்காதவளென
சொல்லாமல் சொல்கிறச்
சொப்பனக் குறியீடா?

இயக்குபவளை
இயங்குபவளை
இனிமைகளின்
இடமாக இருக்கும்
இளகும் இதயத்தவளை
இன்றொரு நாளில் மட்டும்
இமயமிவளென
இருட்டடிப்புச் செய்வதேன்?

அவள்
இன்றும் என்றும்
இயங்கும்……
இயன்றதையெல்லாம் செய்யும்
இறைவி அல்லவா?

-பாங்கைத் தமிழன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.