எல்லா குழந்தைகளுக்கும் பிடித்தமான கதாபாத்திரம், உடல் பலத்தின் பொருட்டு அரிய சாகசங்கள் செய்வதால் இராமாயண அனுமனும், பாரத பீமனும் ஆவர். கேரளத்தின் கிராமங்களில், பிள்ளைகளுக்கு உரியதான, பல தீய பழக்கவழக்க ஒழிப்புகளும் பீமனின் பெயரால் பயமுறுத்தப்படுவதாக, ஆசிரியர் தம் பின் குறிப்பில் பதிவு செய்துள்ளார். எல்லா திறமையும், வலிமையும், சிறப்பும் பெற்றிருந்தாலும் பீபனுக்கு எப்போதுமே இரண்டாம் இடம் தான் தரப்பட்டிருக்கிறது என்பதைப் பீமனின் பார்வையிலேயே பேசுகிறது இப்புதினம். புனைவாகயிருந்தாலும், பீமனுக்கு நேர்ந்த புறக்கணிப்பும், ஒடுக்கலும், வஞ்சித்தலும், அரசியல் சூழ்ச்சியும் நம்முள் பீமனுக்கு இதுவரையிருந்த பிம்பத்தைத் தகர்த்து புதிய பார்வையைப் பாய்ச்சுகிறது.
போக, பீமனின் பார்வையில் விரியும் தருமரின் சித்திரமும் புதியது. பயமும், சூதாட்ட ஆசையும், குழப்பமும் கொண்டவனாக, பாஞ்சாலியை ஐவர் மணங்கொண்டது, இவரின் இச்சையால் குந்தி எடுத்த முடிவுதான் என்ற கருத்தும் பாரதம் குறித்த பல புரிதல்களை வாசகனுக்குக் கடத்துகிறது.
அபிமன்யு இறந்தபோது வருந்தும் கிருஷ்ணன், பீமனின் மகன் கடோத்கஜன் இறந்தபோது கொண்டாடும் கிருஷ்ணனின் கூற்றும், குந்தி சொல்லும் பீமனின் பிறப்பையும் இணைத்துப் புரிந்து கொள்ள வாசகனுக்கு போதுமான வெளியை வழங்குகிறது. இவ்வாறு, பீமனின் மீது பாரதப் பாத்திரங்களின் வெறுப்பும், ஒவ்வொருவரின் மீதான பீமனின் பார்வையும் புதுவித வாசிப்பனுபவத்தை வழங்குவது திண்ணம். கற்பிதத்தின் மீது கேள்விகளை எழுப்புவது தானே கலையின் பணி! நன்றி!
மலையாள மொழியின் மிகச் சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான இந்நூலாசிரியர், எம். டி. வாசுதேவன் நாயர், சாகித்ய அகாதமி விருது, கேரள சாகித்ய அகாதமி விருது, ஞானபீட விருது என பல விருதுகளைப் பெற்றவர். மலையாள வார இதழின் ‘மாத்ருபூமி’யின் ஆசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர். ‘காலம்’, ‘நாலு கட்டு’, ‘அகர வித்து’ போன்ற சிறந்த நாவல்களைப் படைத்தவர். ‘பெருந்தச்சன்’, ‘ஒரு வடக்கன் வீர சுதா’ ஆகிய திரைப்படங்களுக்குத் திரைக்கதை அமைத்து இயக்கியவர்.
இந்நூலைத் தமிழில் மொழி பெயர்த்த குறிஞ்சிவேலன் சுமார் 35 ஆண்டுகளாக மொழிப்பெயர்ப்புப் பணிச் செய்து வருகிறார். எஸ். கே. பொற்றெக்காட்டின் ‘விஷ கன்னி’ நாவலை மொழியாக்கம் செய்தமைக்காக 1994ம் ஆண்டின் மொழியாக்கத்திற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
நூல் : இரண்டாம் இடம், [மொழிபெயர்ப்பு நாவல்]
ஆசிரியர் : எம். டி. வாசுதேவன் நாயர், (மலையாளம்)
குறிஞ்சி வேலன்(தமிழில்)
முதல் பதிப்பு : 2000
சாகித்திய அகாதமி
464: பக்கங்கள்,
விலை : ரூ 140/-
பா.கெஜலட்சுமி,
சென்னை-19.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.