என்னிடம் அதிகமாய் முரண்பட்டுக் கிடப்பவைகளில் கவிதையும் ஒன்று.நானொன்றைச் சொல்ல அது வேறொன்றாய் நிகழும்.
ஒரு பயணத்தின் பெரும்பாடுகளில்..அடுக்களையின் சர்வாதிகாரப் போர்ப் பணியில்..உறவுகளாய் பிணைத்துக் கிடக்கும் உயிர்களுக்கான பணிவிடை பூக்கும் அவசரத்தில்.. சிலசமயம் முதலாம் தேநீர் பருகத் தோதில்லாத நீர்த்துப் போன காலத்தின் பிடியில்..
இரவு வரை உறங்காத பகலின் மீதங்களில்..விடிந்த பின்னும் எழாத கிழக்கின் கதகதப்பில்
பொசுக்கென்று மூளையின் பிசுபிசுத்த நரகத் துளை வழியே ஓர் மெல்லிய குரலொன்று நாவில் வழிந்து பூப்பெய்தும்..
கவிஞரின் வாக்குமூலம்
****************************** *******
மொழி.. உயிர்.. சொல் ஆகியவைகளால் ஆன கலவை.எனது முதல் படைப்பு.எனதறிவுக்கு எட்டிய வரை படைப்பின் பெரும்பாகங்களில் ஒரு கடலின் நிர்வாணத்தை.. அகண்ட வானப்பெருவெளியை.. மண் துகளின் ஈரக் கசிவுகளை நிச்சயிக்கப்பட்ட மரணத்தை.. நிச்சயிக்கப்படாத வாழ்க்கையை நானெனது சொற்களால் திரட்டி ஓர் இறகென தான் ஒப்புவித்திருக்கிறேன்..
‘சிவப்பின் நிறம் கருப்பு’ :
****************************** ****
” அம்மாவின் வயதை விழுங்கிய
தேகத்தின் மௌனங்களை
தாழிடாத கதவை தட்டும் சப்தங்கள்
தகர்த்துக் கொண்டேயிருக்கிறது.
நான்கைந்து தெருக்களின் முற்றத்தோடு முடிந்து போன
அம்மாவின் சேலை மணம்
பூப்படையாத தாவணியின் பூக்களில்
இன்னும் கிளை பரப்பியாக வேண்டும்.
மூன்று வேளை வயிறு நிரப்ப
நான்கைந்து வேளைகள்
ஆசைகள் நிரப்பினால் போதுமென்கிற
அம்மாவின் பாவ வேதங்கள்
எனக்கொன்றும் புதிதல்ல.
பசித்த மிருகங்களின்
எச்சில் கறைகளாலான வீட்டுச் சுவற்று
ரேகைகளில் வழக்கொழிந்து போன
எங்களிருவரின் தன்மானத் தடயங்கள்
உயிர் தோய்த்தப் படலங்களாய்.
ஏனிப்படி பசிக்கிறதென
அவர்கள் யாக்கையும்
ஏன் இன்னும் பசிக்கிறதென
எங்கள் ஏழ்மையும்
கேள்விக் கேட்டுக் கொள்ளாத வரை
முற்றத்து விளக்கும்
முதிராத கண்களும்
சிவப்பாகத் தான் எரியும்.”
தாய் செய்த தொழில் எதுவாயினும் அதை மட்டுமே அறிந்த அவளது மகளின் வயிற்றுப் பிழைப்புக்கு வழிகாட்ட வேறென்ன முரட்டுச் சிந்தனை எழும் என்ற கேள்வியோடு ஆக்கப்பட்டதே இக்கவிதை.உடலைச் சார்ந்த இருவேறு பசி பல்வேறு சமூகக் கட்டமைப்பின் பிரதானக் கோட்பாடுகளை உடைத்து பெண்ணின் அவல நிலையென்ற ஓர் புள்ளியில் நின்று விட்டதன் வெளிப்பாடே கவிதையின் உட்கரு.
மற்றுமோர் கவிதை முதுமை சந்திக்கும் யதார்த்த நிலைகளை எடுத்தியம்பும் அதே வேளையில் அதன் அடி ஆழம் வரை எவ்வித நகர்வுகள் பின்னிக் கிடக்கும் என்ற வருத்தங்களையும் உணர்தலோடு எடுத்தியம்புகிறேன்.
” முதுமையின் கரங்களைப்
பிடித்துப் பார்க்கிறேன்.
அதன் நடுக்கத்தில்
பிளவுண்டு போன
யதார்த்தக் குமிழிகள்
உடைந்து சிதறுகின்றன.
புடைத்த நரம்புகளிலும்
உடையக் காத்திருக்கும்
குருத்தெலும்புகளிலும்
உழைத்துக் களைத்த சோர்வின் ரேகைகள்.
இரத்தவணுக்களில்
மரணத்தின் பயம் ஒட்டிக் கொண்ட பிசிறுகள் அதில்..
வாழத் துடிக்கும் பேராசையில்
ஒன்றிரண்டு மூர்ச்சையாயிருக்கும் பரிதாபம்…
கேட்கும் செவிகளுக்கானக்
காத்திருப்புகளோடு இரக்கந்தேடும்
வார்த்தைகள்
கொஞ்சம் செலவழித்தது போக
தனக்காய்ச் சேமித்த ப்ரியங்களின்
மிச்சங்கள்..
வெறுங்கை விரித்த பரிதாபத்தில்
சிறகு முளைத்த பறவைகளின்
வாழ்ந்து விட்டுப் போன எச்சங்கள்.
சிறு தடியைப் பிடித்து
நம்பிக்கை வேரூன்றி
பூமி தொடும் பாதம் தவிர்த்து
அந்தக் கைகளிடம்
வேறொன்றும் சேமிப்பதற்கில்லை.
முதிர்ந்த சருகுகள் வீழ்வதற்கான
நிமிடத் துயரங்களை
எதிர்நோக்கியிருத்தலென்பது
மரணத்திற்கு முந்தைய
ஒத்திகைப் பயணம்.”
முதுமை கொடிதல்ல.அதில் தனிமையென்பது தான் வலி.முதிர்ந்த கரங்களைப் பிடித்துப் பாருங்களேன்.நிறைய பேசும்.
” ஒரு பிடி மண்ணைத் தவிர்த்து
வேறெதையும் கொண்டு
உங்களால் என்னை
ஆசீர்வதிக்கவே முடியாது.”
ஆம் தானே.எந்தச் சுமையும் சுகமுமின்றி இனிமையோடு வழியனுப்பி வையுங்களென்பது தான்
மனிதனின் பேராவலாய் இருக்கக் கூடும்.
இன்னும் அன்பு..பெண்ணியம்..சமூகச் சிக்கல்கள் வாழ்க்கையின் முரண்கள் துவங்கி மரணம் வரை எனக்கான பார்வையை படைப்புகளில் தந்திருக்கிறேன்.
” இரண்டாம் தேநீர் ” .ஓர் ஆசுவாசக் கூடம்.பரபரப்புகளற்ற நிறைவோடு நிதானமாய் பருகப்படுகிற ஒரு நாளின் இரண்டாம் தேநீர் படைப்புகளை உருவாக்கத் தோதுவாய் அமைந்தது.
மகிழ்வோடு பகிர்கிறேன்.இளைப்பாறுதலென்பது தவிர வேறொன்றும் இல்லை கேட்பதற்கு.இந்தக் களம் இன்னோர் தளத்திற்கு உங்களை நகர்த்த பிரயாசை கொண்டிருந்தால் மகிழ்வே.



அன்பு நன்றி சகோதரர்.
மிக்க மகிழ்ச்சி
எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம்
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் நட்பே