நூல் அறிமுகம்: தூர் வாரப்படாத மனங்கள் – எஸ்.ஜெயஸ்ரீநூல்: இரண்டாவது மதகு நாவல் 
ஆசிரியர்: வளவ. துரையன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.210
புத்தகம் வாங்க:  https://thamizhbooks.com/product/irandavathu-mathaku/

        சங்க இலக்கியம், நவீன இலக்கியம், பக்தி இலக்கியம் என இலக்கியத்தின் பல வடிவங்களிலும், மரபுக்கவிதைகள், புதுக் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என அனைத்து தளங்களிலும், அனைத்து வகையிலும் துடிப்புடன் இடையறாது செயல்படுபவர் கடலூரைச் சேர்ந்த முதிய இளைஞர் வளவ. துரையன் அவர்கள். அவர்களது நாவல் வரிசையில் ”இரண்டாவது மதகு” மூன்றாவது நாவலாகும்.

      மதகு என்பது தண்ணீரைத் தேக்கி வைக்கும் இடம் போல, மனிதனின்  மனம், தன் ஆசைகளை, அபிலாஷைகளை, அன்பை, வெறுப்பை, வஞ்சத்தை எல்லாவற்றையும் தேக்கி வைக்கும் இடமாகும். தண்ணீரைத் தேக்கி வைக்க ஒரு மதகு போதாதா என்று கேட்கும்போது, இன்னொரு மதகின் அவசியத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியதாகிறது. ஒரு வெள்ளத்தின் போது மதுராந்தகம் ஏரி,  நிரம்பினால், முப்போகம் சாகுபடி செய்ய பாசனத்திற்குத் தண்ணீர் கிடைக்கும். ஆனால், அந்த வெள்ளத்தின்போது ஏரி முழுமையாக நிரம்பினாலும், அத்தண்ணீரை வைத்து ஒரு போகம் கூடசாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஏனெனில், ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதி முழுவதும் தூர்ந்துள்ளது. அதனால், அதன் முழுக் கொள்ளளவு முழுவதும் தண்ணீர் தேங்காமல், வெளியே வழிந்தோடி விடுகிறது. அந்த நேரத்தில், இரண்டாவது மதகைத் திறந்து விடக் கோரி மக்கள் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டனர். அது திறந்துவிடப்பட்டு மக்கள் பாசனம் பெற்றனர். இது ஒரு செய்திதான். ஆனால், இந்தச் செய்தி இந்த நாவலை வாசித்து முடித்தபோது, மனதில் எழுந்து மிதந்து வந்தது..  • இந்த நாவல் ஒரு குறிப்பிட்ட நிலப் பரப்புக்குள்ளேயே நடக்கிறது. திண்டிவனம், வளவனூர், திண்டிவனம் அருகே இருக்கும் ஆராம்பாளையம், மற்றும் சில கிராமங்களைச் சுற்றியே நடக்கிறது. இந்த கிராமங்களில் வசிக்கும் ஒரு மூன்று பெரிய குடும்பங்களைச் சுற்றிய கதை. கதையில் இவர்தான் நாயகன், இவள்தான் நாயகி என்று யாரையும் சொல்லி விட முடியாது. எல்லோருமே நாயக நாயகிகள். மூன்று சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும் இருக்கும் ஒரு அந்தணர் குடும்பம்.
  • இவர்கள் குடும்பங்கள் எல்லாமே வளவனூரில் ஒரே அக்ரகாரத்தில் பக்கத்துப் பக்கத்துப் பக்கத்தில் வசிக்கிறார்கள். ஒரு தம்பி மட்டும் மதுராந்தகத்தில் பள்ளிக்கூட ஆசிரியராக அங்கு வசிக்கிறார். ஒரு தங்கை தன் குடும்பத்தோடு திண்டிவனத்தில் வசிக்கிறார். அவர்க்கு ஒரு பெண்.  மூத்த சகோதரனுடைய மகன் சுந்தரம் திண்டிவனம் சென்று அத்தை வீட்டில் தங்கி படிக்கிறார். இயற்கையாகவே அத்தை மகள் விமலாவிற்கும், மாமன் மகன் சுந்தரத்திற்கும் காதல் மலர்கிறது. ஆனால், சொத்து, சுகம், பணம், வசதி இவற்றில் குறியாய் இருக்கும் சகோதரன், தன் தங்கையிடமே சொத்துக்காக தன் மகனை, அவள் மகளைக் காட்டி மயக்கி விட்டதாகப் பேசுகிறார். விமலாவின் அம்மா மீனாட்சி, தன் கணவர் அரசாங்கப் பணியிலிருந்து ஓய்வு பெற்று வரும் குடும்ப ஓய்வூதியத்தை மட்டுமே, வைத்துக் கொண்டு, சொந்த வீட்டில் காலந்தள்ளுகிறார்கள். வேறு எதுவும் சொத்து கிடையாது. ஆனால், சுந்தரம் தந்தைக்கோ, வளவனூரில் நில புலன்களூம், வீடும் இருக்கின்றன. எனவே, இவர்கள் மதிப்பீடு அதையொட்டியே இருக்கிறது. மதுராந்தகத்தில் வசிக்கும் தம்பியின் பிள்ளையில்லாச் சொத்து யார்யாருக்குக் கிடைக்கும் என்று கணக்குப் போட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். ஒரு தாயின் வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பிகளுக்குக் கூட அன்பு பாசம் எல்லாம் தாண்டி, சொத்துக் கணக்கிலேயே அவர்கள் குறி இருக்கிறது.
  • மற்றொரு பிராமணர் நரிக்கால் ஐயர். இவர் தனக்கென அதிகமான நில புலன்கள் இருந்த போதும், அடுத்தவர் நிலத்தை எப்படி ஏமாற்றி தன் வசமாக்கிக் கொள்ளலாம் என்பதிலேயே குறியாய் இருக்கிறார். இதற்காக தன் சொந்தச் சகோதரியையே அவள் மகன், மருமகளிடமிருந்து பிரிக்கிறார். மண்ணாசையோடு, அவருக்குப் பெண்ணாசையும் இருக்கிறது. செண்பகம் என்ற அப்பாவிப் பெண்ணை பலாத்காரம் செய்து விடுகிறார். பல பெண்கள் இவரிடம் இப்படி மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், அவருக்கு, மண் பித்தும், பெண் பித்தும் விடுவதேயில்லை.   • மற்றொரு குடும்பம் பாஞ்சாலியுடையது. அவள், கணவன் ரெட்டியார் குடும்பத்திற்கு பண்ணை சேவை செய்து வாழ்கிறார். இடி விழுந்து இறக்கிறார். அவரைத் தொடர்ந்து அவர் மூத்த மகன் மண்ணாங்கட்டியும் அவர் தந்தையைப் போல் அந்தக் குடும்பத்திற்கு சேவை செய்கிறார்.
  • இளைய மகன், சின்னசாமி படித்து அரசாங்க உத்தியோகத்திற்குச் செல்கிறான். இவர்கள் இருவருக்கும் அக்கா, தங்கை யை ஒரே குடும்பத்திலிருந்து திருமணம் செய்கிறார்கள். மூத்தவளுக்கு, பெண் பார்க்க வரும் அன்றே இளைய மகன் மீதே கண்ணாக இருக்கிறது. ஆனாலும், அம்மாவுக்காக மூத்தவரைத் திருமணம் செய்து கொள்கிறார். சந்தர்ப்பம் கிடைக்கும்போது இளையவரை வற்புறுத்தி உறவு கொள்கிறார்.. அதை அவள் கணவன் பார்த்து விடுகிறான். அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தன்னையே மாய்த்துக் கொள்கிறான். பாஞ்சாலி ஒரு முடிவெடுத்து இளைய மகனுக்கே மூத்த மருமகளை மறுமணம் செய்து வைக்கிறார்.
  • நரிக்கால் ஐயரால் பாழாக்கப்பட்ட செண்பகம் அவரையே கவனித்துக் கொள்ளும் தாதியாக வர வேண்டிய சூழல் வருகிறது. அப்போது அவரது இயலாமையைப் பயன்படுத்திக் கொண்டு அவள் அவரை சித்திரவதை செய்கிறார். அவர், இந்த மனப் புழுக்கத்தில் மாரடைப்பால் இறக்கிறார்.
  • தன் தம்பியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு தன் மருமகளை சித்திரவதை செய்த புஷ்கரணி அம்மாள் ஏற்கனவே இறந்து விடுகிறார். மகன், அபிராமன் தன் தந்தை மற்றவர்களை ஏமாற்றி சேர்த்த சொத்துகளை எல்லாவற்றையும் பள்ளிக் கூடம், நூலகம் என நல்ல காரியங்களூக்குச் செலவிடுகிறார்.
  • சுந்தரம் விமலா திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். மீனாட்சி அம்மாளும் மீண்டும் வளவனூருக்கு வரும்போது எல்லோருடனும் சுமுகமான உறவு வளர்ந்து விட்டது போல இருக்கிறது. அது ஒரு வேளை, வெங்கிட்டு சுந்தரத்திற்கு எழுதி வைத்த சொத்து என்பது கூடக் காரணமாயிருக்கலாம்.       .

         இந்தக் குடும்பப் பின்னல்களில், சுந்தரம், அபிராமன், ஈஸ்வரன் ஆகிய மூவரும் வெளியுலகத்தையும் சேர்த்து யோசிப்பவர்களாகவும், அடுத்தவர்ககு நன்மை பயக்க வேண்டும் என்று நினைப்ப்பவர்களாகவும், சொத்து, பணம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், மனித மனங்களுக்கும், மற்றவர்களுக்கு நன்மை செய்வதையும் தம் வாழ்நாளின் கொள்கையாகவும், அவர்தம் இயல்பான பண்பாகவும் வைத்திருக்கிறார்கள்.

சுந்தரம் பொய் நம்பிக்கைகள் இல்லாமல், வாழ்க்கையின் நிதர்சனத்தப் பார்ப்பவனாகவும், பாகுபாடின்றி அனைவரையும் நேசிப்பவனாகவும் படைக்கப்பட்டிருப்பது நல்ல பாத்திரப்படைப்பு. அவன் சாதிப்பாகுபாடின்றி மற்ற சமுதாய இளைஞர்களோடும் பழகி, அவர்களின் முன்னேற்றத்திற்கும் உதவுபவனாகவும் இருப்பது நாவலின் சிறப்பு. இவர்களது மனமென்னும் முதல் மதகு தூர் படியாமலேயே இருப்பதால், அவர்கள் நல் எண்ணங்கள் வீணே போகாமல், நல்ல விதமாகவே பயன்படுகிறது.

       சாமிநாதன், சொத்து சொத்து என்றே தன் மனத்தை மண்ணாசை எனும் தூர் சேர விட்டிருக்கிறார். அதனாலேயே, தன் சொந்த சகோதரியையே மனம் புண்படும்படி பேசவும், நடத்தவும் செய்கிறார். வார்த்தைகள் வழிந்தோடி, ம்னித உறவுகளை விலகச் செய்கிறது.

        நரிக்கால் ஐயர், வேண்டிய அளவு பொருளும், மண்ணும் இருந்தும் கூட மேலும் மேலும் சேர்க்கவுமான தூரினாலும், பெண்ணாசை எனும் தூரினாலும் தன் மனமென்னும் மதகை அடைத்து வைத்து விடுகிறார். அவை எல்லாமே, அவருடைய மோசமான இறுதிக்கும் காராணமாகிறது. புஷ்கரணி அம்மாள், தன் தம்பி சொல்லைக் கேட்டுக் கொண்டு தன் சொந்த மகன் ஈஸ்வரன் மற்றும் குடும்பத்தையே விட்டு விலக வேண்டியிருக்கிறது.

        பாஞ்சாலியின் மருமகள், காவேரி, தன் கணவனின் தம்பி மேல் கொண்ட காமம் கலந்த காதலை தன் மனதில் தூராக அடைத்து வைக்கிறாள். அது அவள் கணவன் உயிரையே பலி கொள்கிறது. 

        சாமிநாதன் சொத்தின் மீதான தன் ஆசையை மாற்றி, மனதின் இரண்டாவது மதகாக மடை மாற்றியிருந்தால், குடும்ப உறவுகளில் நெருடல்கள் இல்லாமல் தவிர்த்திருக்கலாம்.

          நரிக்கால் ஐயர், தன்னுடைய இரண்டாவது மன மதகைத் திறப்பதற்கான வாய்ப்புகளைத் தேடிக் கொள்ளவே யில்லை.

        காவேரி, தன் அதிகப்படியான ஆசையை விலக்கி இரண்டாவது மனமெனும் மதகினால் கொஞ்சம் யோசித்திருந்தால், தன் கணவனை பறிகொடுத்திருக்க வேண்டாம். சின்னசாமியே கூட அவளைத் தவிர்த்திருக்கலாம். அதில் அவனுக்கும் கூட ஆசை இருந்திருக்குமோ என்னவோ?

        இப்படி தூர்ந்து போன மனங்களாலேயே வாழ்க்கை சீர்குலையும்போது, நல்ல முடிவுகள் எல்லாம் இரண்டாவது மனங்களாலேயே எடுக்கப்படுகிறது. முதல் மதகு தூர்ந்த போது, இரண்டவாது மதகு பாசனத்திற்குப் பயன்படுவது போல, தூர் சேராத நல்ல மனங்களான வெங்கிட்டு, அபிராமன், ஈஸ்வரன், சுந்தரம் ஆகியோர் எடுக்கும் நல்ல முடிவுகள் எல்லாம் இரண்டாவது மதகில் அமர்ந்திருக்கும்போதே எடுக்கப் படுகின்றன.

        நாவல், தன் போக்கில் அது நகர்கிறது. ஆராம்பாளையம், வளவனூர் , மைலம் கோவில் ஆகியவை நல்ல சித்திரங்களாகக் கண் முன் விரிகிறது. 

சாதிப் பாகுபாடின்றி, ஒருவருக்கொருவர் உள்ளார்ந்த நட்போடும், ஆலோசனை கலப்பவர்களாகவும், உதவிக் கொள்பவர்களாகவும் இருப்பது அந்தக் கிராமங்களின் பால் நமக்கு ஈர்ப்பைத் தருகிறது. ஆனால், இந்த நாவல் நடக்கின்ற காலமாக, 1950 – 1960 களில் என்பது, அண்ணா காஞ்சிபுரத்தில் நின்ற தேர்தல் பற்றிய சித்திரங்கள் மூலமாகத் தெரிய வருகிறது. அந்தக் காலம் அப்படி இருந்தது என்று நாம் அந்தப் பண்பாட்டையும் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தப் பாகுபாடுகள் எல்லாம் இல்லாத இவர்கள் எல்லோர் மனங்களிலுமே ஒரே மாதிரியாக இருப்பது ஆசைகள், பேராசைகள்.      மண்னாங்கட்டியின் மரணத்தை(தற்கொலையை) ஒரே வரியில்,”தெரியும், “ என்று கூறியவன் காதில் ரயிலின் ஓசை கேட்டது எனச் சொன்ன விதம் அழகு. ஏற்கனவே, கிராமத்தின் சித்திரத்தைச் சொல்லும்போதே இந்த ரயில் பாதை பற்றி அதில் ஆடு, மாடுகள் சிக்கிக் கொள்வதைப் பற்றி எழுதி விடுகிறார் முன் அத்தியாங்களில். எனவே, இதில் யாருக்கும், மண்ணாங்கட்டி தற்கொலைதான் செய்து கொண்டான் என்று தோன்றாமல், அது யதேச்சையாக நடந்தது என்றே தோன்ற வைத்திருப்பது நல்ல இடம். சுமைதாங்கிக் கல், வழிப்போக்கர்களின் சுமையைத் தூக்கிக் கொண்டு செல்வதில்லை, ஆனால், சிறிது நேரத்திற்கு அவர்களுக்கு இளைப்பாறுதல் தருகிறது அவ்வளவே அது போல நட்புகளுடன் மனப் பாரத்தை இறக்கி வைப்பது என்ற இடம் அருமை. இப்படி ஆங்காங்கே சில் தெறிப்புகள் முழுக்க மனதைத் தொடுவதாக இருக்கிறது. மீன்களை வைத்து வாழ்க்கைத் தத்துவங்களை விளக்கும் இடம் நன்றாகயிருக்கிறது.

       ஆனாலும், நாவல் தட்டையான தோற்றத்தையே தருகிறது. எந்தத் திருப்பங்களுக்கும் வலுவான காரணங்கள் இல்லை. பாத்திரங்கள் தங்களுக்குள் ஆற்றாமையோ, குற்ற உணர்வோ பட வேண்டிய இடங்கள் இருந்தும் கூட நாவலாசிரியர் அவற்றைச் சித்தரிக்கவேயில்லை. சுந்தரம் வேலையை விடுவதற்கான காரணமாகச் சொல்வதில் வலுவில்லை. அவ்வளவு எளிதாக அரசாங்க வேலையை உதறும் அளவுக்கு அவனுக்கு வசதியும் இல்லை. காவேரி இளையவர் மேல் ஆசைப்படுவது அவருடைய அரசாங்க வேலை கருதியா அல்லது அவரது தோற்றத்தின் பால் கொண்ட காமக் காதலா என்பதில் தடுமாற்றம். மண்ணாங்கட்டி இறந்தது யதேச்சையான விபத்து என் ஊரார் நம்பினாலும், காவேரிக்கு அது பற்றிய குற்ற உணர்வு எப்படி இல்லமல் இருக்கும்? ஆனால், அப்படியான உணர்வை அவளுக்கு மறு மணம் பற்றிப் பேசும்போது கூட அவள் கொள்வதில்லை. அதுபோல, சின்னசாமிக்கும் அப்படி ஒரு குற்ற உணர்வு இருந்திருக்க வேண்டும். அது இல்லவே இல்லை. சுந்தரம் – விமலா காதலில் ஒரு அழுத்தமேயில்லை. இப்படி, சில இல்லைகள் இருந்தாலும் கூட நாவல் ஒரு முறை வாசிப்பிற்கு சுவாரசியம் தருவதாக இருக்கிறது.   

         வளவ.துரையன் பாராட்டுக்குரியவர். சிறப்பாக அச்சிட்டு வெளியிட்டிருக்கும் பாரதி புத்தகாலாயத்தார் பாராட்டுக்குரியவர்கள்.error: Content is protected !!