இறந்த நகரத்தைப் பார்க்க வந்தவன் (Irantha Nagarathai Parkka Vanthavan) மேகவண்ணன்

சமூகத்தை சீரழிக்கும் சமகால ஆதிக்க அரசியல்

அயல் மொழி இலக்கியங்களைக் காட்டிலும் தமிழ் வழி கவிதைகளுக்கென்று பிரத்யேக வசீகரம் உண்டு. தமிழ் கவிதைகள் தங்களை அழகுபடுத்திக் கொள்வதில்லை. கவிஞனின் கருவறையிலிருந்து பிறக்கும் போதே வடிவியலின் தொனியில் முத்துக்குளித்துக் கொண்டே பிறக்கிறது, காரணம் தமிழ்க் கவிஞனின் மனமும் குணமும் மணந்து முகிழ்வது கவிதை கலைக்குள். அவனின் புலங்கள் ஒவ்வொன்றும் புத்தாக்கம் பெறுவது கவிதையின் வடிவத்தில். உள்ளுக்குள் சுரக்கும் ஒவ்வொரு துளி நிணை நீரும் கவியூறித் தவழும். உயிரின் மொத்த உதிர விதானமும் அவனின் உள்ளச்சுவாசத்தை செமித்து வெளியேறும். அத்தனை மகோத்தமம் வாய்ந்தது கவிஞனின் மனம் . அந்த மனம் பேசும் அனுபவங்கள் உன்மத்தமானவை.சொல்லப் போனால் உத்தமமானவை.

இயற்கையை கொஞ்சும் மனங்கள் கவியுலகின் தாராளம், ஆனால் தன்னைப் பிழிந்துப் போடும் சமூக அவலங்களின் வழியாகப் பிறக்கும் எழுத்துக்கள் வாசகரை கடத்திக் கொள்ளும். அதிலும் கவிதையின் ரூபத்தில் கவிஞனிடமிருந்து வெளிவரும் சமூக பாத்திப்புகள் அதை நிகழ்த்திய சமூகத்தையே கதி கலங்கச் செய்யும் என்பதற்கு கவிஞர் மேகவண்ணன் அவர்களின் ”இறந்த நகரத்தைப் பார்க்க வந்தவன்” கவிதைத் தொகுப்பு அநீதிக்கெதிரான பௌத்திய விஹாரங்கள். கண் முன் நடக்கும் சமூகக் கேடுகள் என்பவை அனைவருக்குமான உணர்துளிர்க் கீற்றுகள். கடந்து விடும் மனோபாவமே இங்குள்ள பெரும்பகுதி மனித மனம். ஆனால் மேகவண்ணன் அவர்களின் ஈவு தோய்ந்த இருதயம் அவற்றை அத்தனை எளிதாகக் கடக்க முடியாமல் அவதிப்பட்டத்தை இந்தத் தொகுப்பு நமக்கு காட்டித் தருகிறது. நேரடியாக சமூக வன்பாவங்களுக்குள் சிக்கிச் சின்னாபின்னமான மனிதரை விட தன்னால் ஏதும் செய்ய முடியவில்லை என்கிற தவிப்பும் தளர்வும் ஆதங்கங்களாக அவதிப்படுவது பெரும் துயரம்.. மனதின் அந்த ஆற்றாமையை இறந்த நகரத்தைப் பார்க்க வந்தவன் நம்மோடு கண்ணீர் மல்க புலம்பித் தீர்க்கிறான். இலக்கியவாதி என்கிற அட்சயப் பாத்திரத்தில் ஒரு எழுத்தாளனாக சமூகத்தின் பிறிதொரு வன்முகங்களை கேல்விக்கு ஆட்படுத்தாமல் முச்சந்தியில் தரதரவென இழுத்து நிறுத்தி அம்பலப்படுத்தியுள்ளார் கவிதைகளாக. இதுவரை வாசித்திடாத அரசியலை, பெண் முகங்களின் நிஜ தரிசனங்களை, மனிதர்களை,வாதையின் பரிதாபங்களை, ஒடுக்கப்பட்டவர்களை, விளிம்பு நிலை மனிதர்களை, வரலாறுகளை, மறைக்கப்பட்ட சம்பவங்களை, வாசகர்களுக்கு கவனப் படுத்தியுள்ளார். சொல்லப்போனால் தொகுப்பின் நிகழ்வொன்றும் பெரும் பகுதி மக்கள் பார்வையில் பதிந்த பிரச்சனைகள். விசேஷம் என்னவென்றால் அவற்றையெல்லாம் நாம் டீக்கடையில் தேனீர் அருந்தும் கால விவாதமாக்கி கடந்துள்ளோம். ஆனால் மேகவண்ணன் அவ்வாறு செய்யவில்லை. அவர் வாழும் ஒவ்வொரு சமகாலத்தின் மனிதர் அவஸ்தைகளை மக்கள் பேசுபொருளாக்கும் மெனக்கிடலை மேற்கொண்டுள்ளார்.

இதுவரை நாம் கவனிக்க மறந்த பல சமூகக் கலகங்களை இந்நூல் கவனப்படுத்தியது. அரசியல் பார்வையில் புதியதொரு திருப்பத்தை கவிதை வழியாகக் கடத்திய நூலாசிரியரின் சாமர்த்தியம் மெச்சத்தக்கது. கவிஞரின் சமூக அக்கறைகளை கவிதை கைம்பெண் கண்ணாடியாகத் திறந்து காட்டியதில் வாசகருக்கும் சமகால அரசியல் குறித்த தெளிவு பிறக்கிறது.

“கவிஞர்கள் வித்யாசமான ஆடைகளை ஏன் அணிகிறார்கள்? என்று எனக்குள்ளேயே கேட்டுக் கொள்கிறேன்.” என்று தனது முன்னுரையில் கேள்வியெழுப்பும் கவிஞரின் கவித்துவ ஆடை ஆபர்ணங்கள் தொகுப்பு முழுதும் வாசகரைச் சுற்றியே அரசியல் வலம் வருகிறது.

CCTVகேமரவிலிருந்து தொடங்குகிறது தொகுப்பின் முதல் அரசியல் பார்வை.

அரசு எல்லாவற்றையும்
ஒரு கேமரா போல
பார்த்துக் கொண்டிருக்கிறது.

என்கிற கவிதை ஒன்றிய அரசின் ஒன்றிய ஆட்சியை நிறுவ மேற்கொள்ளும் அடிமை சாசனத்தின் அடையாளச் சின்னமாக கேமரா இருக்கிறது. மக்களை ஒவ்வொரு நொடியும் அங்க அசைவுகள் முதல் கண்காணித்து வரும் அரசியல் மேலாதிக்கத்தின் நிதர்சன வரிகளை முதல்பக்கங்கள் துவக்கி வைக்கின்றன.

ஒரு நிலத்தின் பாடலிலிருந்து ஈரப்பதத்தை
நீக்கும் போது அது சில உடல்களில்
நெருப்பாகிப் பற்றுகிறது.

இந்த வரிகள் மனதை பல கோணங்களில் அணுக வைக்கிறது. ஒவ்வொரு மனித மனத்திலிருந்து மனித நேய பண்புகளின் முதல் விருத்தியான அன்பு என்கிற மனிதப் பண்பை நீக்கி காழ்புணர்ச்சியை விதைக்கும் போது அது மனதின் வெறுப்பு ஆதிக்கத்திற்கு வழிவகுக்கிற்து. மனித ஆற்றல் மரபான குரூரத்தில் பற்றி எரிகிறது என்பதாகவே இந்தக் கவிதை எனக்குள் மேலும் பல புதிர்கணைகளின் திறவு கோளாகிறது.

கடவுள் நம்பிக்கை குறித்த முற்போக்கு கவிதைகள் பல இடங்களில் நமக்கு கடவுள் பற்றிய குருட்டு மனப்பான்மையிலிருந்து விலக்கி கடவுள் குறித்த நிதர்சன புலத்தைத் திறந்து காட்டுகிறது. அறிஞர்களும் இலக்கிய ஆளுமைகளும் கடவுள் பற்றிய அறியாமைத் திரையை விலக்க கடும் பிரயத்தனங்கள் எடுத்து வந்துள்ளனர். அந்த இடத்தில் கவிஞர் மேகவண்ணன் அவர்களும் மற்றொரு மூட நம்பிக்கை மறுப்பாளராக தொகுப்பு வழியாக நமக்கு அறிமுகமாகிறார்.

எல்லா வீடுகளிலும்
கடவுளுடைய அறையை விட
சின்ன அறை எதுவுமில்லை.

மனதின் அறையில் மனிதர்களின் கடவுளுக்கும் அவரது பிரபஞ்ச தோற்றத்திற்குமான பாததூரம் மனிதன் வழங்கிய முன்னுரிமையின் அடிப்படையில் தொக்கி நிற்கிறது. மனிதனின் கடவுள் மூடவாத அபாண்டத்தை சுட்டிக் காட்டும் கவிதையாக இராமாயணம் கவிதை மற்றொரு புதிய சமூக பழமைவாதத்தை உடைத்துப் போடும் முற்போக்குத் தடம்.இராமாயணத்தின் பெண்ணடிமை கூறுகளை தகன வேள்விக்கு சாம்பலாக்குகிறது இந்தக் கவிதை.

மத விலக்கும் கடவுளர் மீது திணிக்கப்பட்ட மூடநம்பிக்கைகளைக் களையெடுக்கும் காவியமாகவே இந்தப் கவிப்புராணம் நம்மை சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கிறது.

ஸ்ரீலங்காவிலிருந்து
சிறை மீண்ட சீதைக்கு
நெய் ஊற்றிய நெருப்பில்
Virginity test முடித்த இராமன்
தன் லவகுச புத்திரர்களை
நேபாளத்திற்கு அனுப்பிவிட்டு
பிறந்த இடம் அயோத்தி விட்டு
புதுதில்லியில் வந்திறங்கினான்…

இந்த கவிதையின் சரிதம் ஒன்றிய ஆண் மேலாதிகத்தின் முகத்தை நமக்கு காட்டித் தருகிறது. ஒன்றியம் என்பது நாட்டில் மட்டுமல்ல வீட்டிலும் தலைத்தூக்கி வருகிறது காலதீகாலங்களாக. இந்த ஒரு கவிதை நமது தேசத்தின் பல புதைக் குழிகளின் வரலாறுகலைப் பேசுகிறது. மதம், புருஷாதிக்கம், மரண தாகத்தின் உச்சபட்ச ஆணவத்தில் பிரிந்த ஜீவிதங்கள் என நீளும் நமது கடந்த பத்து ஆண்டு சரித்திரத்தை வாசிக்க அணு ஆயுதங்களின் தீராப்பசியும் அடங்கும்.

ரப்பர்குண்டுகள் தீர்ந்து விட்டன கவிதையை அணு ஆயுதத்தில் மடிந்த நிலத்தின் வெற்று சடலத்தை நிர்வாணப்படுத்துகிறது.

அச்சம் பரவிய நிலத்தில்
துப்பாக்கியை வைத்துக் கொண்டு
சுடாமல் இருப்பவனுக்கு
கடவுள் என்று பெயர்.

மதுவுக்குள்ளும் ஒரு நதி தான் ஓடுகிறது..
என்று கவித்துக் கிடக்கும் இந்த ஒரு வரி நதியின் மீது போர்த்தப்பட்ட புனிதச் சீலையை நீக்கி பொதுவுடைமைப் ஆடையை அணிவிக்கிறது.
இந்தியா என்கிற மனப்பான்மையை உடைக்க மெனக்கிடும் போதே நமக்குள் ஒற்றுமை விதை உறுத்தியிருக்க வேண்டும். ஒரு தேசத்தை ஒன்பது துவாரங்கள் போட்டு துளையிடும் நரித்தன்மையை அம்பலப்படுத்தும் இந்தக் கவிதைத் தொகுப்பின் மற்றொரு புதிர்சாலை.

கனத்த தண்டுடைய மரங்களை அறுப்பதற்கான
இயந்திரங்களைக் கண்டுபிடிக்கும் போதே
நாம் கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும்.

தொகுப்பின் ஒரு சில கவிதைகள் மௌடீகவிலக்கம் செய்து நமது அசல் முகத்தை நிலைக்கண்ணாடி முன் இருத்தி வைத்து நம்மை தெளிய வைக்கிறது.

எதிரிகளுக்கும் புன்னகைத்து வேகமாய் எட்டு வைத்து
அவன் போக வேண்டும்
விடுங்கள்
அவனுக்காக பிள்ளைகள காத்திருக்கிறார்கள்..

எதிரிகளைக் கூட புன்னைகையுடன் அணுகும் நமது மரபு மேலாண்மையும் இங்கு வரவேற்கப்படுகிறது. தவறில்லை.. துரோகிகள் தான் பாதகர்கள்.எதிரிகள் அல்லர்..

”மூத்த பிள்ளை” கவிதை பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்ட பெற்றோர்களின் துயர நிலையை பேசினாலும் இறுதி வரிகள் சொந்த நிலத்தை விட்டு புலம் பெயர்ந்த மக்களின் பரிதாபமனத்தின் புலம்பலாகவே நம்மை அணுகுகிறது,

புகுந்த நகரத்துக்கு
மறுமுறை வண்டியேறும்
அவனிடம்
இப்போது
கண்ணீரில்லை.

சபிக்கபட்டவர் தானே மனிதர் என்கிற விளிம்பு அபலைகளின் ஆதங்கத்திற்கு பல இடங்களில் ஆறுதலாக இருக்கிறது கவிஞரின் கவிதைகள். நம்பிக்கை விதைக்கும் எதுவும் அதுவும் கூட அரவணைப்பே.. என்கிறது இந்த வரிகள்.
அவநம்பிக்கை ஓர் உப்புக் கடல்.

ஒக்கி புயலின் போது கடலில் மூழ்கி இறந்தவர்களுக்கான கண்ணீர் சமர்ப்பணமாக கவிஞரின் இந்தக் கவிதை நமது மீனவத் தோழர்களின் உயிருக்கும் வாழ்வுக்குமான போராட்டத்தை அறியப்படுத்துகிறது.

தொகுப்பு முழுதும் சமகால சமூகம், கலை, இலக்கியம். திரை, ஊடகம் என அனைத்து துறைகளின் காலதேவைக்கான பிரச்சனைகளை அலசி ஒவ்வொரு சம்பவகர்த்தாக்களின் பெயர் பதிவிட்டு வாசக கவனப்படுத்தியுள்ளது விசேஷம். மழைக் கவிதையில் திரைக் கலைஞர் தேங்கா சீனிவாசன் வருகிறார், வெட்டுப்புலி கவிதையில் கதாநாயகி பானுபிரியா, அருணா கவிதையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மற்றொரு கவிதையில் நாயகி ராதிகா என கலைத் திரைக் கலைஞர்கள் மேகவண்ணனின் விரல்களின் இடுக்குகளிலிருந்து தலைக்காட்ட சமீபமாக தென்னகத் திரையுலகத்தில் கொடி கட்டி பறந்த தமிழ் நாயகி சமந்தாவிற்குத் தனியாக ஒரு பக்க கவிதை வரித்து தனது கலையுலக ஆர்வத்தைப் பளிச்சென்று காட்டியுள்ளார்.

அதே போல ஜோசியன் கவிதை. அரசியலின் பெரும் கையாக ஆருடகணிப்பு இன்றைய அறிவியல் உலகத்தில் மனிதரின் உளவியலில் பெரும் சர்ச்சை ஏற்படுத்துகிறது ஆருடம். அதையும் தனது படைப்பாய்வில் அறிமுகம் செய்துள்ளார் மேகவண்ணன் அவர்கள்.. காவலாளி முதல் கலாம் வரை என சாம தண்ட பேதமின்றி களமாடியுள்ளார் கவிதைகளுடன்.

தனது நட்சத்திர குரு பெயர்ச்சிக்கு
ஷில்லாங் போவது உசிதமா என
இவனைக் கேட்காமல் தான்
கலாம் போனார்.

ஆருடத்தின் புனித மரபு வழக்கை புடம் போட்டு காட்டிய விதம் மூட நம்பிக்கைக்கான மறுவாழ்வு..

தட்சணையை வெற்றிலை பாக்கோடு
தட்டில் வைத்து வாங்குவான்
ஆயிரமெனில் அதை ஆயிரத்து ஒன்றாக்குவான்
ஒரு ரூபாய் நாணயத்தில் புனிதத்தை ஏற்றியதும் அவனே..

பிரபாகரன் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அரசியல் நெருக்கடி, ஒன்றிய அரசின் புதிய இந்தியா என்கிற பெயரில் நிகழ்ந்து வரும் அரசியல் சதிகள், நளினி பரோலில் வந்த சம்பவம், அவளுக்காக பச்சை குத்திக் கொண்ட தொண்டர் பக்தர்கள்,முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்ட நினைவுகள், பரோட்டாவைக் கொண்டு நிகழ்த்தப்பட்ட அரசியல் அடக்குமுறை சாம்ராஜியம், மதத்தை முன்னிறுத்தி ஆட்சி புரியும் சூட்சமம்,எண்பது தொண்ணூறுகளில் பெரும் திரள் மக்களின் ஜனரஞ்சக பிரியங்களான தூர்தர்ஷன் திரையும், ஆகாஷவாணி வானொலியும் ஸ்வாதி ராம்குமார் பிரச்சனை என தொகுப்பு முழுதும் பல்வேறு சமகால அரசியல் அவலங்களின் பதிவுகளை மீள் புனராக்கம் செய்கிறது. கடந்து போன மக்கள் நாவுகளில் தட்டையாய் நசிந்து கிடந்த சம்பவங்களையும் அசம்பாவிதங்களையும் நினைவுபடுத்தி நம்மை இறந்த நகரத்தைப் பார்க்க கரம் பிடித்து அழைத்துச் செல்கிறது இறந்த நகரத்தைப் பார்க்க வந்தவன்.

இத்தனையும் எழுதி முடித்த கவிஞர் பிற ஜீவராசிகளின் மீதான அன்பும் கருணையும் தொலைத்த மனித அறிவியலையும் சுட்டிக்காட்டுகிறார் தனது கவிதைகள் வழியாக.

லதா என்றொரு கவிதை. கவிஞரின் நாற்பதைத் தொட்ட காலங்களை அசைத்த நாயகப் பத்திரமாக இங்கு நமக்கு அறிமுகமாகிறது. ஒரு கவிதை பிறக்க லதா கருவாகிறாள்.

மனிதர்களின் ஆளுமை வக்கிரம் ஈவு தொலைத்து வன்மத்தைத் தன்னக்கத்தே கொண்டு தலைவிரித்தாடுகிறது. மனிதனர் நோக மனிதர் வாழும் மடமையை கொளுத்துவோம் என அறைக்கூவலிட்ட பாரதியின் அதே காத்திரம் மேகவண்ணன் அவர்களிடமும் உணர முடிகிறது.

சாதி மனிதன் மூளையில் தன்னை தோற்றுவித்துக் கொண்ட நாழிகை முதல் உயிருடன் எரிக்கும் கலாச்சாரமும் தன்னை பிரசவித்துக் கொண்டது. சாதி ஒழிந்ததோ இல்லையோ இன்றைய இருபதாம் நூற்றாண்டிலும் வேற்றுமையின் தகன வெளியில் பல மனித உடல்கள் உயிருடன் எரிக்கப்படும் அவலம் நிகழ்ந்துதான் வருகின்றன. அத்தனையையும் கவிஞர் சாட்சிப்படுத்தியுள்ளார்.

உயிரோடு எரிப்பது
உங்களுக்குத்தான்கைவந்த கலை

நந்தனை கோஸ்வாமியை
கோத்ராவில் ஓடிய ரயிலை
பெஸ்ட் பேக்கரியை
ஒரிசா பாதிரி குடும்பத்தை

எனவே
எனவே
உயிரோடு எரிவதென்று முடிவெடுத்து விட்டால்
தயை செய்து
நீங்களே
பற்ற வைத்துக் கொள்ளுங்கள்..

கவிஞரின் ஆதங்கக் குரல் மனதை நெகிழ்த்துகிறது.. மீண்டு அந்த துர் சம்பவங்களை மனதில் ஊஞ்சலாடச் செய்கிறது.

மற்றோரு கவிதையில் பால்ய மரணத்தின் மகாகனத்தைப் பேசுகிற கவிதை இன்னமும் நடுங்க வைக்கிறது.இறப்பு பற்றிய அனேகக் கவிதைகள் ஒருபுறம் நம்மை கதியாக்கினாலும் மறுபுறம் மரணத்தின் மீதான தடித்த பற்றுதலை விலக்குகிறது. காரணம் இன்றைய அதிகார வர்கத்தின் ஆணவப் பேரிரைச்சல் மனித உயிர்களுக்கு உத்திரவாதம் இல்லை என்கிற படிப்பினை நம்மை வாசித்துக் கொண்டே இருக்கிறது.

இறந்தவர்களின்
தொலைபேசி எண்ணை
யாராவது
உபயோகிக்கிறார்கள்
அழைக்கும் நீங்கள் திடுக்கிட்டாலும்
எடுப்பவரிடம்
நடுக்கம் ஏதுமில்லை.

முதல் முறை விமானமேறுபவன் கவிதை உணர்வுப்பூர்வமான அனுபவ கிளர்ச்சியை ஒவ்வொருவருக்குள்ளும் உளவியல் இரசாயனமாற்றங்களை நிகழ்த்தும். விமானத்தில் முதன் முதலில் பயணம் செய்பவன் மனோபாவத்தைப் பிரதிபலிக்கிறது இந்தக் கவிதை.

வெளியேறும் முன்னதாக விமானத்தை
திரும்பிப் பார்க்கும் அவன் முகம்
விளையாட்டு சாமானை பிரியும்
குழந்தை முகத்தை
பிரதியெடுக்கிறது..

கதவுகள் கவிதை சாதி மத வேற்றுமையில் சிக்குண்ட மனிதர்களின் கேவல்களைக் காட்சிப்படுத்துகிறது. பிரிவினை பேதத்தின் ஆற்றாமையில் சாத்திக் கிடக்கும் கதவுகளின் முன் இறைஞ்சும் மனித முழங்கால்களின் விண்ணப்பங்கள் கண்ணீர் கொண்டு வரிகளாகி எழுதப்பட்ட சாட்சியம்.

கதவுகளுக்கு அந்தப் பக்கம் ஆயுதங்கள் செய்யப் படுகின்றன. ஆனாலும் நாம் தொடர்ந்து கேட்டபடியே இருக்கிறோம்.

வீடான வீடு கவிதை தாழ்த்தப்பட்ட மீனவக் குடும்பத்தின் கல்வித் தலைமுறையின் மதிப்பெண்கள் ஏழ்மையிலும் வாழ்வாதாரத்திலும் புரிதலின்றி பாசிப்படர்ந்து நீச்சம் வீசி ஒன்றுமத்து தோய்ந்துப் போவதை காட்டி மீனப்பெண் பிள்ளைகளின் கடலுக்கும் கரைக்குமான ஊசலாட்டத்தை அறியப்படுத்துகிறது.

குடி தண்ணீருக்கு காசு கேட்கும்
கல்வித் தந்தைகள் பிறந்த நாட்டில்
அவனை கண்ணீருடன் ஆசீர்வதிக்கிறேன்.

இன்றைய சமகால கல்வியின் கடைகால் பொருள்வாதத்தில் நிலைகுத்தி நிற்பதை புடம் போடுகிறது கவிதை.

தொகுப்பு முழுதும் பேசப்படாத சமூக கசடுகள் என்று மிச்சமாக எதுவும் இல்லை. துரோகமும் வன்மமும் குழிபறித்தலும் பாசாங்கும் ஆணவ அரசியலும் அதிகார தாக்குதலும் ஆட்கொண்ட இந்தச் சமுதாயத்தில் தான் இன்னமும் அன்பு அறம் நேயம் பண்பு சத்தியம் உயர் நெறி கொஞ்சம் உலராமல் ஈரம் ஒட்டிக் கொண்டு ஆங்கங்கே இருத்திக் கொண்டு தன்னை இலக்கியமாக அடையாளப்படுத்தியுள்ளது என்பதற்கு இந்தக் கவிதைத்தொகுப்பு சாட்சி. எங்களுக்காக பேசவும் போராடவும் எங்கள் அவலங்களை கண்ணீர்கொண்டு காணவும் காட்டிக் கொடுக்கவும் எங்காவது மனித மனம் இருக்கிறதா என்கிற எத்தனை எத்தனை மனமிழப்புகளின் மெலிந்த குரலாக இந்தக் கவிதைத் தொகுப்பு நமக்கு நெருக்கமாகிறது.. காதல் காவியம் காட்சிப்பிழை என கவிதை புலம் அழகியலுடன் மட்டுமே சுருங்கி விடாமல் பிற தளங்கள் போல மனிதர் வாதைகளையும் அந்தந்த காலத்தின் பதிவேடுகளில் பொறித்து ஆவணப்படுத்துவதும் எதிர்காலத் தேவையாக இருப்பதை கருத்தில் கொண்டு நூலாசிரியர் தனது பத்திரிக்கை ஊடாக மட்டும் தீர்வு பெற முயலாமல் இலக்கியத்தையும் துணைக்கு அழைத்துள்ளார்.

போராட இப்படியான சமூக நல்லிணக்க ஒருங்கிணைப்பும் காலத் தேவையாக இருப்பத்தை உணர வைக்கிறது தொகுப்பு. சமூக பொறுப்பும் அக்கறையும் இன்றைய நெருக்கப்படும் குரல்வளைகளின் தேடலாக இருப்பதால் தொடர்ந்து தங்களின் எழுத்து இலக்கியத் தேவையாக இருக்கிறது. ஆதலால் மீண்டும் தங்களின் சிவந்த கரங்களில் இலக்கிய ரேகை பதியட்டும்.. அடுத்த படைப்புக்கான பேராவலில்..

நூலின் தகவல்கள்: 

நூல்: இறந்த நகரத்தைப் பார்க்க வந்தவன்
ஆசிரியர்: கவிஞர் மேகவண்ணன்
விலை: ₹.90
பதிப்பகம்: கருப்பு பிரதிகள்

அறிமுகம் எழுதியவர்: 

து. பா.பரமேஸ்வரி
சென்னை.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *