தோழர் லெனின், இறந்து நூறாண்டுகளுக்குப்பின் இன்றும் தேவைப்படுகிறார்
-எம்.ஏ.பேபி,
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
தமிழில்: ச.வீரமணி
விளாடிமிர் இலியச் லெனின் 1913இல் காரல் மார்க்சின் 30ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ஒரு கட்டுரை வெளியிட்டார். இது போல்ஷ்விக்குகளின் மாதாந்திர இதழ், ‘ப்ராவெஷ்செனியே’(‘Enlightenment’) என்பதில் வெளியிடப்பட்டது. அதன் தலைப்பு: “மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும், மூன்று உள்ளடக்கக் கூறுகளும்” (“The Three Sources and Three Component Parts of Marxism”.) லெனினின் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் பொன்மொழி வடிவத்திலான அது வருமாறு: “மார்க்சின் போதனை மெய்யானது, அதனால்தான் அது எல்லாம்வல்ல தன்மை பெற்றிருக்கிறது. அது முழுமையான, உள்ளிணக்கம் கொண்ட போதனை, ஓர் ஒன்றிணைந்த உலகப் பார்வையை அது மக்களுக்கு அளிக்கிறது. எந்த வடிவத்திலுமமைந்த மூட நம்பிக்கைகளோ, பிற்போக்கோ, முதலாளித்துவ ஒடுக்குமுறைக்கு ஆதரவோ இந்த உலகப்பார்வையுடன் ஒத்துவர முடியாது.”
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். தோழர் லெனினின் நூற்றாண்டு நினைவு தினத்தைக் அனுசரித்திடும் இத்தருணத்தில், லெனினின் போதனைகள் குறித்தும் இதையே கூறுவதற்கு ஒருவர் கட்டாயப்படுத்தப்படுவார்.
தோழர் லெனின் 30 வயதாக இருந்த சமயத்தில், அவரால் வெளியிடப்பட்ட சூத்திரத்தை நாம் நினைவுகூர்தல் வேண்டும். அப்போது அவர் கூறியதாவது: “மார்க்சின் கோட்பாட்டை நாங்கள் முழுமை பெற்றதாகவோ, மீற முடியாததாகவோ கருதவில்லை; மாறாக, சோசலிஸ்டுகள் வாழ்க்கை ஓட்டத்துடன் தங்களைத் தக்கவைக்க விரும்பினால், எல்லாத் திசைகளிலும் உருவாக்க வேண்டிய அறிவியலின் அடித்தளத்தை அது மட்டுமே அமைத்துள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். மார்க்சின் கோட்பாட்டின் சுதந்திரமான விரிவாக்கம் ரஷ்ய சோசலிஸ்டுகளுக்கு மிகவும் அவசியமானது என்று நாங்கள் நினைக்கிறோம்; இந்த கோட்பாடு பொதுவான வழிகாட்டும் கொள்கைகளை மட்டுமே வழங்குகிறது, குறிப்பாக, இங்கிலாந்தில் பிரான்ஸை விட வித்தியாசமாக, பிரான்சில் ஜெர்மனியை விட வித்தியாசமாக, மற்றும் ஜெர்மனியில் ரஷ்யாவை விட வித்தியாசமாக பயன்படுத்தப்படுகிறது. எனவே, கோட்பாடு சம்பந்தமான கேள்விகள் குறித்த கட்டுரைகளுக்கு நாங்கள் இடம் கொடுப்போம், மேலும் சர்ச்சைக்குரிய விஷயங்களை விவாதிக்க அனைத்து தோழர்களையும் வெளிப்படையாக அழைக்கிறோம்.” (Collected Works of Lenin, Vol. IV, pp. 211-212)
முதல் பார்வையில், திட்டம் (Programme) தொடர்பாக 1898-99ஆம் ஆண்டில் அவர் எழுதிய கட்டுரை ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட மேற்படி மேற்கோளுக்கும், 1917இல் மகத்தான அக்டோபர் சோசலிஸ்ட் புரட்சி நடைபெறுவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு காரல் மார்க்சுக்கு அஞ்சலி செலுத்தி, 1913இல் எழுதிய கட்டுரைக்கும் முரண்பாடு இருப்பதுபோல் தோன்றக்கூடும். 1913ஆம் ஆண்டு எழுதிய கட்டுரை, பிரிக்க முடியாத விதத்தில் மார்க்சியத் தத்துவமும் நடைமுறையும் இருப்பதால், அது மிகவும் சக்தி வாய்ந்தது மற்றும் சர்வ வல்லமை வாய்ந்தது, ஏனெனில் அது உண்மையானது என்று அடிக்கோடிட்டுக் கூறுகிறது. இவ்வாறு கூறுவதானது, காரல் மார்க்சும், பிரடெரிக் ஏங்கெல்சும் கூறிய அனைத்துமே வேதவாக்கு (gospel truth) போன்றது என்ற எண்ணத்தை ஒருவருக்கு உருவாக்கக்கூடும்.
மறுபக்கத்தில், லெனின், தொகுக்கப்பட்ட படைப்புகள், நான்காவது தொகுதியில், “மார்க்சின் கோட்பாடு, முழுமை பெற்றதாகவோ அல்லது மீற முடியாததாகவோ “நாங்கள் கருதுவில்லை” என்று கூறியிருக்கிறார். இதை இரண்டையும் மேலோட்டமாகப் படிக்கக்கூடிய ஒரு வாசகர், பதினைந்து ஆண்டு கால இடைவெளியில், மார்க்சியத் தத்துவத்தின் அடிப்படைக் குணாம்சம் குறித்து முரண்பாடான சூத்திரங்களை அளித்திருக்கிறார் என்று கூறக்கூடும். ‘மார்க்சியம் குறித்து மாறுபட்ட நிலை மேற்கொண்டிருக்கிறார்’ என்றுகூட லெனின் மீது குற்றச்சாட்டுகளை ஒருவர் கூறக்கூடும்.
எனினும், ‘இயங்கியல்’ (‘dialectics’) கோட்பாடு மற்றும் நடைமுறையை நன்கறிந்த ஒருவர் இந்த விமர்சனத்துடன் ஒத்துப்போக மாட்டார். இரண்டு சூத்திரங்களும் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்தவை மற்றும் இயங்கியல் மற்றும் வரலாற்று பொருள்முதல்வாதத்தின் வளரும் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுபவையாகும்.
உண்மை என்னவென்றால், மார்க்சியத் தத்துவம் அறிவியலின் அடித்தளத்தை அமைத்துத் தந்திருக்கிறது. சோசலிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும் அந்த அடித்தளத்திலிருந்து அனைத்துத் திசைகளிலும் கட்டிடத்தைக் கட்டி எழுப்பிட வேண்டியது அவசியமாகும்.
அதே பகுதியில், லெனின் ஒவ்வொரு நாட்டின் சூழலிலும், குறிப்பாக ரஷ்ய சோசலிஸ்டுகளுக்கு, மார்க்சின் கோட்பாட்டின் சுதந்திரமான விரிவாக்கத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். கோட்பாட்டு புரிதலை கூர்மைப்படுத்துவதற்காக, லெனின், இது போன்ற முக்கியப் பிரச்சனைகள் பற்றிய வெளிப்படையான விவாதத்தை, கட்சிக் கடிதங்களில், பரிந்துரைத்தார். இது ‘சர்ச்சைகளை’ தீர்க்க உதவும்.
லெனினுடைய இத்தகைய தத்துவார்த்த துணிவும், உறுதியின் காரணமாகவும், ரஷ்யாவில் உருவாகியிருந்த புரட்சியின் புறநிலைக் காரணமாகவும், லெனினின் தலைமையின் கீழ் போல்ஷ்விக் கட்சி, ராணவ வீரர்களின் ஆதரவுடன் தொழிலாளர் வர்க்கம்-விவசாயிகள் கூட்டணியை முறையாகப்பயன்படுத்தப்பட முடிந்தது. அப்படித்தான் அக்டோபர் சோசலிசப் புரட்சி வெற்றி பெற்றது. லெனினின் ஏப்ரல் ஆய்வறிக்கை, குளிர்கால அரண்மனையைத் தாக்குவதற்கான சரியான நேரத்திற்கு வடிவம் கொடுக்கும் வகையில் வளர்ந்துவரும் புரட்சிகர சூழ்நிலையை திட்டவட்டமாக பகுப்பாய்வு செய்யும் திறனுக்கு சான்றாகும்.
இந்த செயல்பாட்டில், லெனின், ஜியார்ஜி பிளெக்கானோவின் (1856-1918) வறட்டுத்தனமான வாதங்களை தத்துவார்த்த ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது.
அதேபோன்றே, காரல், பிரெடெரிக் ஏங்கெல்சின் சீடராகக் கருதப்பட்ட காரல் காவுத்ஸ்கி (1854-1938) அக்டோபர் புரட்சி மற்றும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு எதிராக, திருத்தல்வாத வாதங்களை முன்வைத்தபோது, லெனின் தன்னுடைய ‘பாட்டாளிவர்க்க புரட்சியும் ஓடுகாலி காவுத்ஸ்கியும்’ (‘The Proletarian Revolution and the Renegade Kautsky’) என்னும் புகழ்பெற்ற படைப்பில் அவருக்கு சரியான பதிலடி கொடுத்தார்.
லெனினின் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த தத்துவார்த்த மற்றும் நடைமுறை பங்களிப்புகள் வருமாறு: தொழிலாளர் வர்க்க கட்சி அமைப்பு குறித்து விவரமான சூத்திரங்கள், ஜனநாயக மத்தியத்துவத்தின் கொள்கைகள், புரட்சியின் கட்டங்கள், ஏகாதிபத்திய சங்கிலித் தத்துவத்தின் பலவீனமான இணைப்பை உடைத்தல், ஒரு நாட்டில் சோசலிசத்தின் வளர்ச்சி மற்றும் ஸ்திரப்படுத்தல், மேலே கூறியவற்றின் ஒரு பகுதியாக புதிய பொருளாதாரக் கொள்கை, முதலாளித்துவத்தின் வளர்ச்சி ஏகாதிபத்தியமாக மாறுதல், கம்யூனிஸ்ட் அகிலம் (Comintern) மூலமாக கம்யூனிஸ்டுகளின் சர்வதேசப் பணிகளின் முக்கியத்துவம், இடது மற்றும் சீர்திருத்தவாத விலகல்களுக்கு எதிராகப் போராடுதல், கட்சித் திட்டத்தை ‘நிலம்’, ‘அமைதி’ மற்றும் ‘ரொட்டி’ என்ற வெகுஜன முழக்கங்களாக மாற்றுதல், இறுதியாக ‘அனைத்து அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே’ என்று கூறியது.
உலகக் கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் நிகழ்ந்த மிகப் பெரிய சோகங்களில் ஒன்று லெனின் 54 ஆண்டுகள் நிறைவடைவதற்கு முன்பே இறந்ததாகும்.
லெனின் மறைவுக்குப் பிறகும்கூட, சோவியத் யூனியனில், விவசாயம், தொழில், சுகாதாரம், கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பெண்கள் சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல், கலாச்சாரம், வீட்டுவசதி, எழுத்தறிவின்மையை ஒழித்துக்கட்டுதல், வறுமை முதலானவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் சாதனைகள் ஏற்பட்டுள்ளன. இது அனைவரும் அறிந்ததேயாகும்.
பாசிசத்தையும் நாசிசத்தையும் தோற்கடிப்பதில் சோவியத் செம்படை ஆற்றிய வீரச் செயல் வியக்க வைக்கும் சாதனையாகும். தேசிய விடுதலை இயக்கங்கள் மற்றும் புதிதாக விடுதலை பெற்ற நாடுகளுக்கு சோவியத் யூனியன் மற்றும் சோசலிச முகாமின் ஆதரவையும் குறிப்பாக குறிப்பிட வேண்டும். இந்த சகாப்தத்தை உருவாக்கும் கொள்கைகளுக்கு அடித்தளமிட்டவர் தோழர் லெனின். இவ்வாறு அவர், சுரண்டல் சமூக அமைப்பில் இருந்து சுரண்டலற்ற சமத்துவ சமூகத்தை சோசலிசத்தை நோக்கியும் அதற்கு அப்பாலும் நகர்வதற்கான மாற்றத்தைத் துவக்கி வைத்தார்.
எனினும், தோழர் லெனின் மரணத்திற்குப்பின், 67 ஆண்டுகள் கழித்து, சோவியத் யூனியனும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் சிதறுண்டன. லெனினால் நிறுவப்பட்ட சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏன் இந்த முட்டுக்கட்டை ஏற்பட்டது என்பது ஆய்வுக்குரிய விஷயமாகும். 1992இல் சென்னையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 14ஆவது அகில இந்திய மாநாடு, இதற்கான காரணங்களில் சிலவற்றை ஆய்வு செய்ய முயற்சித்தது. இன்றையதினம், இதற்கான விடையை வித்தியாசமான வடிவங்களில் சுருக்கமாக அளிக்கலாம். அது வருமாறு: சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி லெனினால் முன்வைக்கப்பட்ட பணிகளைத் தொடரத் தவறிவிட்டது. அதாவது, மார்க்சியத் தத்துவம் அமைத்துத் தந்துள்ள அறிவியலின் அடித்தளத்திலிருந்து அனைத்துத் திசைகளிலும் கட்டிடத்தைக் கட்டி எழுப்பிட தவறிவிட்டார்கள்.
துல்லியமான நிலைமைகளில் அறிவியல் கோட்பாட்டை பயன்படுத்தும் லெனினின் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையின் நேரடித் தாக்கத்தை இன்றைய உலகிலும் காணலாம். சீனப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம், தீவிர வறுமை ஒழிப்பு மற்றும் ஒட்டுமொத்த நெருக்கடி நிலைமையை எதிர்கொள்வதில் உள்ள ஆக்கபூர்வமான அம்சங்கள் ஆகியவற்றை சீன சூழலில் லெனினின் புதிய பொருளாதாரக் கொள்கையின் அனுபவங்களுடன் ஒப்பிடலாம். அதேபோன்றே வியட்நாம் மற்றும் கியூபா ஆகிய நாடுகளின் முன்னேற்றங்கள் குறித்தும் கூறலாம்.
இந்தியாவிற்குள் மிகச் சிறிய மாநிலமாக இருந்த, முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ அமைப்பு நிலவிய, கேரளாவில் 1957இல் கம்யூனிஸ்ட் அரசாங்கம் அமைந்தபோது நமக்கு இருந்த வரையறைக்குள் நாம் மேற்கொண்ட முயற்சிகளையும்கூட இதன் அடிப்படையில் பார்க்கலாம்.
எனினும், லெனினிசத்தின் அணுகுமுறையிலிருந்து பெறப்பட்ட உத்வேகம் மற்றும் சிந்தனைகள் சிலவற்றின் விளைவாகவே கேரளாவில் கம்யூனிஸ்ட் தலைமையிலான மாநில அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அது நிலச் சீர்திருத்தங்களில் தொடங்கி, பொதுக் கல்வி மற்றும் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துதல், மக்கள் நல நடவடிக்கைகளை கற்பனை செய்யமுடியாத அளவிற்கு மேற்கொண்டு உழைக்கும் மக்களுக்கு நிவாரணம் அளித்தல், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குதல் மற்றும் மக்கள் திட்டங்கள் என நீண்டன.
கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம், மாநிலத்தை ஒரு நவீன அறிவியல் அடிப்படையிலான சமூகமாக வடிவமைத்திடவும், உலகின் நடுத்தர வருமான வளர் நாடுகளின் பொருளாதாரத்திற்கு இணையாக பொருளாதாரத்தை மேம்படுத்திடவும், அடுத்த இரு ஆண்டுகளுக்குள் மாநிலத்திலிருந்து கடும் வறிய நிலையை ஒழித்துக்கட்டுவதை உத்தரவாதப்படுத்திடவும் முடிவு செய்திருப்பதென்பது மற்றுமொரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். நவீன தாராளமயக் கொள்கைகள் ஆதிக்கம் செலுத்திடும் ஒரு நாட்டிற்குள்ளேயே இருந்துகொண்டு இவ்வாறு திட்டமிட்டிருப்பது, ஒரு முன்னுதாரணமாக அமைந்திடும்.
இன்றையதினம் உலகம் கடுமையாக மாறியிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு உட்பட பல்வேறு தொழில்நுட்பங்கள் அடிப்படையிலான சமூகம் உருவாகியிருக்கிறது. இதனால் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள கம்யூனிஸ்ட்டுகள் இந்த மாற்றங்கள் எப்படியெல்லாம் மக்கள் பிரிவினரின் வாழ்க்கையைப் பாதித்திருக்கின்றன என்று ஆழமானமுறையில் ஆய்வு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. சரியான அணுகுமுறைகளை வடிவமைப்பதன் மூலம் மட்டுமே புரட்சிகர இயக்கத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். அந்தக் காலத்தில் லெனின் தனியொரு ஆளாக நின்று தன் சகாக்களின் உதவியுடன் சாதித்ததை, ஒட்டுமொத்தமாக தொழிலாளர் வர்க்க கட்சி/கட்சிகளாகிய நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று கூட்டாக மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கும்.
எந்தவொரு ஐரோப்பிய (வளர்ச்சியடைந்த) முதலாளித்துவ நாடும் தொடங்குவதற்கு முன்னரே, ரஷ்யாவிலிருந்த புரட்சிகர இயக்கத்தின் மூலம் உருவாகியுள்ள மிகச்சிறந்த தோழர்களைக் கொண்டு, ரஷ்யா புரட்சிகர எழுச்சியைத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக மார்க்சும் ஏங்கெல்சும் முன்கூட்டியே கண்டனர் என்பது கவனிக்கத்தக்கது.
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் 1882 ரஷ்ய பதிப்பில் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் இணைந்து எழுதிய கடைசி முன்னுரை இருந்தது (இதனை, ஜெனிவாவில் ஜார்ஜி பிளெக்கானோவ் மொழிபெயர்த்திருந்தார்). அதில், கடைசி பத்தியில், கிராமங்களில் பொதுவான நிலம் வைத்திருக்கும் முறையால், ரஷ்யா நேரடியாக ஒரு சோசலிச சமுதாயமாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி விவாதித்திருந்தனர். ஆயினும் இதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பாகவே 1872 ஜூன் மாதத்தில் ஏங்கெல்ஸ், ஜெர்மன் புரட்சியாளரான, ஜோஹன் பிலிப் பெக்கர், என்பவருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதம், மூலதனம் முதல் தொகுதியின் ரஷ்ய மொழிபெயர்ப்பு விவாதிக்கப்பட்ட பின்னர் எழுதப்பட்டது. (மூலதனத்தின் ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழிபெயர்ப்புகள் வருவதற்குமுன்பே ரஷ்ய மொழிபெயர்ப்பு வெளிவந்தது.) ரஷ்ய மக்கள் மத்தியில் அதற்கு விரிவான அளவில் வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து அவர் கீழ்க்கண்டவாறு அவதானித்திருந்தார்: “பொதுவாக ரஷ்யர்களைப் பொறுத்தவரை, ஐரோப்பாவிற்கு முன்பு வந்த உன்னதமான, பிரபுத்துவ ரஷ்யர்களுக்கும் இப்போது வருகிற ரஷ்யர்களுக்கும் இடையே மாபெரும் வித்தியாசம் இருக்கிறது. இப்போது வருகிறவர்களின் திறமை மற்றும் குணத்தைப் பொறுத்தவரை, இவர்களில் சிலர் எங்கள் கட்சியில் உள்ளவர்கள் மத்தியில் மிகச் சிறந்தவர்களாவார்கள். தத்துவப் பிடிப்பு உள்ளவர்களாக, போற்றத்தக்க விதத்தில் அவர்கள் இருக்கின்றனர்.”
இவ்வாறு மார்க்சும், ஏங்கெல்சும் பார்த்த புரட்சிகர ஆற்றலின் மினுமினுப்பு, மாமேதை லெனினின் புரட்சிகர தத்துவம் மற்றும் நடைமுறை காரணமாக பலனளிக்கத் தொடங்கியது.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.