இறந்துபோன ஒரு சாலையை சாலையில் பார்த்தேன்
அஹ்லாம் பஸ்ஹாரத் (Ahlam Bsharat)
அரபு மொழியிலிருந்து ஆங்கிலத்தில்:
ஜெய்னா ஹாஸ்ஸன் பெக் (Zeina Hashem Beck)
ஆங்கிலம் வழி தமிழில் : எஸ்.வி.ராஜதுரை
இறந்துபோன ஒரு சாலையை
சாலையில் பார்த்தேன்
அங்கேயே அதை விட்டுவிட்டேன்
இறந்துபோன ஒரு சாலையைwar
தரையிலிருந்து எப்படித் தூக்குவது
என்பதையோ
பதினான்கு தளங்களைக் கொண்ட
ஒர் கட்டடத்தை
நடுங்கிக் கொண்டே
எப்படிக் கையில் வைத்திருப்பது
என்பதையோ
யாரும் எனக்குச் சொல்லித் தரவில்லை.
*
பீதியுற்ற என் நண்பர்களை அழைப்பதற்கு
அஞ்சுகிறேன்
ஏனெனில் அவர்களிடம்
கடசி வார்த்தையென்று
எதைச் சொல்ல வேஎண்டும்
என்பது எனக்குத் தெரியவில்லை
எப்படியிருந்தாலும்
அப்படி ஒன்றும் இருக்காது
அது உண்மை.
*
போரில் தப்பிப் பிழைத்த
ஒரு மீனைப் பற்றி
எழுதுகிறேன்
அதை எழுதுவது எளிது:
அந்த மீன் போரில் தப்பிப் பிழைத்தது
*
பீதியுற்ற பெயரில்லாத
ஒரு பூனையின் புகைப்படத்தைப் பகிர்கிறேன்
இது நல்லது:
பெயரில்லாமல் இருப்பது
எனவே சாவு உங்களை அழைக்காது
*
எனது நண்பர்கள்
பசு எனப் பெயரிடப்பட்ட
ஒரு பூனையைப் பற்றிச்
சொல்கிறார்கள்
ஆம், போரின் நடுவே
பசு என்ற சொல்லைக் கேட்பது
எனக்குத் தேவைப்பட்டது
ஏனெனில்
இந்த பயங்கரம் அனைத்துக்கும் பிறகு
பால் என் நெஞ்சை
வறண்டுபோகச் செய்துவிட்டது
*
பேட்மேன் , பாண்டா என்ற
இரு பெயர்களைக் கொண்ட
ஒரு பூனையைத் தூக்கிக் கொண்டிருக்கும்
காஸாவின் குழந்தையொன்றின்
வீடியோவைப் பார்த்தேன்
இரண்டு பெயர்களைக்
கொண்டிருப்பது நல்லது
*
அவற்றில் ஒன்றால்
சாவு உன்னை அழைக்கும்போது , நண்பனே
இன்னொன்றுடன் ஓடு
*
பூனையே சாவு உன்னை
பேட்மேன் என்று அழைக்கும்போது
வேகமாக ஓடு
ஏனெனில் உன் பெயர் பாண்டா
ஆக்கிரமிப்பினால் பாண்டா
என்ற பூனையைக் கொல்ல முடியாது.
|

