ஒரு புத்தகம் படிக்கும் போது ஆங்காங்கே சில நெருப்புத் துண்டாய் கவிதைகள் உள்ளம் சுடும் இந்த ” இரவுக் கிண்ணத்தில் பகல்” என்ற புத்தகம் தொடக்கம் முதல் இறுதி வரை நம் எண்ண நெடுஞ்சாலையில் பூக்களை அல்ல கக்கும் நெருப்பையே உமிழ்கிறது. சமூக விழுமியங்களை கண்ணாடியாய் நம் முன் நிறுத்துகிறது.
ஒரே ஒரு புகைப்படம் ஒட்டுமொத்த உலகத்தையும் உலுக்கி ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்கு வித்திட்டது. ஆம் அதுதான் வியட்நாம் விடுதலை அதுபோல் சமூக விடுதலைக்கு ஒரு கவிதை கிடைத்து விடாதா என்ற ஏக்கம் கொஞ்சம் குறைந்திருக்கிறது இதுபோன்ற நூல் படிக்கும் போது.
ஒவ்வொரு மனிதரையும் சிந்திக்க வைக்கும் கவிதை
“தந்தையின்
இறுதி யாத்திரை
மறுத்த வீதியில்
விநாயகர் ஊர்வலம்”
உண்மையில் இந்தக் கவிதை ரசிப்பதற்கு அல்ல நம் குற்றத்தை எண்ணி உணர்வதற்கு மேலும்
“தோற்றுப் போனதை
மறந்து போகிறோம்
வாக்களித்துவிட்டு”
என்ற கவிதையில் எவ்வளவு நிதர்சனமான உண்மை வெளிப்படுகிறது மக்களுக்கான ஆட்சி என்கிறோம் பின்பு வாக்களித்து விட்ட பிறகு அது அதிகாரத்தின் ஆட்சியாக மாறிப் போவதை இன்னும் உணராத அடிமையாகவே மாறி இருக்கிறோம் என்பதே இந்த கவிதையின் உயிர்.
கவிஞர் அவர்கள் சமூக அவலங்களை தன் கவிதை சாட்டையால் அடித்து நொறுக்கி இருக்கிறார் சனாதனத்தின் உச்சத்தை துச்சமென மதித்து மிச்சம் இருக்கும் சனாதனத்தை தன் காலில் போட்டு மிதித்திருக்கிறார்.
அதேபோல்
“அய்யனார் கையில்
ஆயுதம்
கடந்துச்செல்கிறது
காவல்துறை”
என்ற கவிதையில் மனிதர்களால் தான் பிரச்சனை மற்றும் மனிதர்களால் தான் சரி செய்ய முடியும் என்ற எதார்த்தத்தைச் சொல்கிறது.
மேலும்
“உலர்த்தி
காய வைத்துக் கொண்டிருக்கிறான்
மீனவன் வலைகளை”
என்ற ஹைக்கூவில் பசியின் வறுமைக் கோட்டை அடிக் கோடிட்டு காட்டுகிறது மீனவனின் துயரம் இதில் துவண்டு கிடக்கிறது மீனைப் போல துள்ளாமல்.
மேலும்
“தேநீர் கோப்பையில்
உறங்குகிறது வானம்”
என்ற வரிகளில் இயற்கை ரசனை இயல்பாகவே தலை காட்டுகிறது கவிஞரின் கோபத்தில் இளவேனிற் காலமும் இசைந்திருக்கிறதை காணமுடிகிறது..
இப்படிக் கவிதைப் புத்தகம் எங்கும் கொட்டிக் கிடக்கிறது பல ரூபங்களும் மனிதர்களின் வேடங்களும் சனாதன கோபங்களும் காட்சியின் படிமங்களும்.
இந்த நூலைப் படியுங்கள் நீங்கள் புழுவாக இருந்தால் புலியாவீர்கள் கோழையாக இருந்தால்
கொதித்தெழுவீர்கள். நன்றி.
கவிஞர்.புரட்சிக்கனல்
திரைப்படப் பாடலாசிரியர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.