இரு பவன்கள் ஒரு கொலை – சிறுகதை
இரு உணவு விடுதிகள். ஒன்று கைலாச பவன் மற்றொன்று திருப்பதி பவன். இந்த இரு ஓட்டலிகளிலும் கிடைக்கும் இட்லிகளின் சிறப்பு என்னவெனில் ரோட்டுக் கடையில் ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும் இட்லி இங்கே நாற்பது ரூபாய்க்கு கிடைக்கும். பரிமாறும் ஊழியர்கள் ஒரே மாதிரியான உடை (யூனிஃபார்ம்) அணிந்திருப்பார்கள். மேலும் பவன்களில் ஜிஎஸ்டி கட்டணம் அதிகப் படியாக வசூலிக்கப்படுகிறது. எனவே செல்வந்தர்கள் நாடியது பவன்களையே.
இரு பவன்களுக்கும் முன் கார்களை நிறுத்த போதிய இடம் இருந்தது. சாப்பிட வருவோர் தங்கள் கார்களை நிறுத்த இடம் இருந்ததால் இந்த கைலாச பவனுக்கும், திருப்பதி பவனுக்கும் வந்தனர். இரு பவன்களுக்கும் முன்னே எழுபது அடி அகல இடம் இருந்தது. ஆனால் எல்லைக் கோடு இல்லை. ஆகவே சில நேரங்களில் கைலாசத்திற்கு வந்தவர்கள் திருப்பதிக்கு முன் தங்கள் காரை நிறுத்துவார்கள். அதே போல் திருப்பதிக்கு வந்தவர்கள் கைலாசத்திற்கு முன் தங்கள் காரை நிறுத்துவார்கள். இரு பவன்களுக்கும் முன் செக்யூரிட்டி எனப்படும் காவலாளிகள் இருந்தனர். இவர்கள் ஒரு எல்லையை வரையறுத்து அதை பாதுகாக்கவும் செய்தனர். இரு பவன்களுக்கும் மத்தியில் இரு இரும்பு கம்பங்களை வைத்து அதில் ரிப்பன் கட்டி எல்லையை உருவாக்கினார்கள். பவன்களுக்கு வந்த வாடிக்கையாளர்களும் எங்கே தங்கள் வண்டியை நிறுத்தினார்களோ அதற்கு நேர் எதிராக இருந்த பவனுக்கு சென்று சாப்பிட்டார்கள். இது வழக்கமாகி பின் ஒரு வருட பாரம்பரியமாகவும் மாறி விட்டது. அதாவது எழுதப்படாத சட்டம். நடைமுறையிலிருந்த சட்டம். ஒரு கார் வரும் போதே இரு காவலாளிகளும் போட்டி போட்டு அதை தங்கள் எல்லைக்குள் வரவழைத்து நிறுத்துவது, பின் அந்த வாடிக்கையாளரை தாங்கள் காவல் புரியும் பவனுக்கு அனுப்புவது என்ற கடமை உணர்வைப் பெற்றிருந்தனர். இரு காவலாளிகளின் இந்த எல்லை ஏற்பாடு இரு பவன் முதலாளிகளுக்கு பிடித்திருந்தது.
ஒரு நாள் பிரச்னை யாரும் எதிர்பாராமல் வந்தது. கைலாச பவனுக்கு முன் இடம் இல்லை. ஆனால் அதன் காவலன் சிவா, திருப்பதி பவனுக்கு முன் காரை நிறுத்த சொல்லி வாடிக்கையாளரை கைலாசத்திற்குள் அனுப்பி விட்டான். வேகமாக ஓடி வந்த திருப்பதி பவன் காவலன் வீரணன் அந்த வாடிக்கையாளரிடம் பேசி தான் காவல் காக்கும் திருப்பதிக்கு அழைத்து செல்ல ஓடோடி வந்தான், ஆனால் அதற்குள் அந்த வாடிக்கையாளர் கைபேசியில் பேசிக்கொண்டே கைலாசத்திற்குள் உணவருந்த சென்று விட்டார். வீரணன் கைலாச பவன் காவலாளியை பார்த்து கூவினான்,
‘’ டேய் சிவா எங்க கஸ்டமர ஏண்டா திருடுற, வெக்கம் இல்லையா உனக்கு, ஓ ஓட்டலுக்கு முன்னால கார் நிரம்பிருச்சுன்னா அங்க நிறைய கஸ்டம்ர் வந்துட்டாங்கடா, எங்களுக்கு வர வேண்டியவங்கள நீ இழுக்காதடா’’
’’அடேய் நிறுத்துடா அதிகமா கஸ்டமர் வந்தா உனக்கு சம்பளம் கூடாது, எனக்கு கொஞ்சமா கஸ்டமர் வந்தா சம்பளம் குறையாது, போய் அங்க நில்லுடா இங்க வராத’’’’
வீரணன் ஒரு வீரன், ஆத்திரம் அதிகரிக்க சிவாவை நெருங்கி வந்து ஒரு அறை கொடுத்தான். சிவா இதை எதிர்பார்க்கவில்லை. நேரே எல்லைகோடுகளை தீர்மனித்த ரிப்பன் கட்டி வைக்கப்பட்ட இரும்பு கம்பியை எடுத்தான் திரும்பி வந்து அந்த கம்பியை மேலே உயர்த்தி பின் கீழே இறக்கி வீரணன் தலையில் ஆழமாக பதித்தான். குருதி கொட்ட கொட்ட வீரணன் கைலாசம் சென்றான். சிவா திகைத்து நின்றான். பிறகு தன் மனதை கட்டுப்படுத்தி நேராக மிக அருகாமையில் இருந்த காவல் நிலையத்தில் சரண் அடைந்தான். இருபதுக்கும் மேற்பட்ட கைபேசிகள் சிவாவின் தாண்டவ நடையை படம் பிடித்தன அது இணையத்தில் வைரல் ஆனது.
இரு வாரங்கள் கழிந்தது. ஒரு திருமண விழாவில் கைலாச பவன் முதலாளியும் திருப்பதி பவன் முதலாளியும் சந்தித்து கொண்டனர். முதலில் கைலாச பவன் முதலாளி கேட்டர்.
‘’கொலையுண்ட உங்க காவல்காரன் குடும்பத்துக்கு ஏதாவது பண உதவி செஞ்சீங்களா ?
‘’இல்ல நான் எதுக்கு கொடுக்கனும்; அது சரி கொலை செஞ்ச உங்க காவலன வெளிய கொண்டு வர முயற்சி செஞ்சீங்களா ?’’
’’இல்லை நான் எதுக்கு அவன வெளிய கொண்டு வரனும் நானா கொலை செய்ய சொன்னேன்.’’
கதையாசிரியர்:
இராமன் முள்ளிப்பள்ளம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


இரு பவன்கள்
கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார்..
உழைத்தவர்கள்
தெருவில் நின்றார்
எனும் வாலியின் பாடல் நினைவிற்கு வருகிறது
வாழ்த்துகள் ஐயா..