இருள்….
வெளிச்சத்தின்
எதிரியல்ல;
இணை பிரியாத் தோழன்!
இருள்
எப்போதும்
பெருந்தன்மையுடையது!
வெளிச்சம் வரும்போதெல்லாம்
இருள்
எதிர்ப்பதேயில்லை!
ஒதுங்கிக்கொள்கிறது
அல்லது
விட்டுக் கொடுக்கிறது;
நட்பென்றால்
இப்படியான
நாகரிகம் வேண்டும்!
வெளிச்சத்துக்கு
இருள்
எதிர்ப்பதமல்ல…
இணை பிரியாதது.
நாள் முழுதும்
இருளாக….
நாள் முழுதும்
வெளிச்சமாக….
நினைத்துப் பாருங்கள்!
இருள்
எதனையும்
தன்னுள் பாதுகாத்துக்கொள்ளும்
பக்குவம் உடையது!
வெளிச்சம்
எதனையும்
காட்டிக் கொடுக்கும்
காரியவாதி!
வெளிச்சம்தான்
வேற்றுமைகளைக் காட்டும்!
நிறம்,
பொருள்
ஏழை, செல்வந்தன்
விலங்கு, பறவை
இப்படியாக…..
இருள்
நிம்மதியின் குறியீடு;
பகல்
நிம்மதி நித்திரையின்
பெரும் சப்தம்!
வளர்ச்சியின்
சம பங்காளிகள்
இருளும், வெளிச்சமும்!
வெளிச்சம் உழைப்புக்கு உகந்தது என்றால்…
உழைப்புக்கான
உந்து சக்தியைத் தருவதே இருள்!
கண்கள்தான்
வெளிச்சத்தைக் காணும்
ஆயுதம்….
அது
எட்டியவரை மட்டுமே
காட்சிகளைக் காட்டும்!
வெளிச்சத்தை
மறைக்கலாம்;
இருளை
மறைப்பது சிரமம்!
இருளை
அகற்றத்தான்
சூரியன்… விண்மீன்கள்…
மின்னல்… மின்சாரம்
எல்லாமும்
முயன்று கொண்டிருக்கின்றன!
அறியாமையின்
குறியீடாக
இருளைச் சொல்லாதீர்கள்!
இருள்
ஞான வெளிச்சத்துக்கான
குறியீடு!
இல்லாமை… கல்லாமை…
அறியாமை… வறுமை…
தீண்டாமை….
வெளிச்சம் காட்டாததை
இருள் காட்டும்!
இருள்
ஞான ஒளி!
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.