“இருளை வெல்லும் ஒளி” கவிதை
ஈக்வலண்டினா என்றொரு தேசம்
தேசத்தின் தலைநகரில் ஓர் அருங்காட்சியகம்
பெயர்
“தீ நாக்குகளின் அருங்காட்சியகம்”
அப்போது
அதன் பெயர் அகண்ட் தேஷ்
உழைப்புச் சுரண்டலின் வடிவமாய்
பிளவுகளின் உருவமாய்
வெறுப்பின் முகமாய் தேசம் இருந்தது
வரலாற்றில் உண்டான சிறிய விரிசலையும் பெரிய பிளவாக்கும்
தேசத்தின் மேனாள் தலைவர்களின் நாக்குகள்
அங்கே காட்சிக்கு
நாக்குகள்
அவை உமிழ்ந்த வெறுப்பின் அளவிற்கு ஏற்றாற்போல
வகைப்படுத்தப்பட்டு இருந்தன
முதலில்
குடிசை கொளுத்தியின் நாக்கு
ஜீன்சுக்கும் கூலிங் கிளாஸுக்கும் பெண்கள் மயங்கிடுவார்கள் என்று
காதலெனும் இயல்புணர்ச்சியை
பொசுக்கிய நெருப்பு
நாக்கு உமிழ்ந்ததோ
ஜாதியெனும் விஷம்
அவர் போட்டது
பாட்டாளி எனும் வேஷம்
அடுத்து
மாட்டினை
மரத்தை
நேசிப்பான்
சக மனிதனை
வந்தேறி என வரையறுப்பான்
இனவெறி விஷத்தில் அமிழ்த்தப்பட்ட நாக்கு
நிறைவாக
இரட்டை நாக்குகள் ஒரே கூண்டிற்குள்
மேனாள் அதிபரும் துணை அதிபரும்
இவை உமிழ்ந்த வெறுப்பின் அளவை விளக்கவென
தனி அரங்கே இருந்தது
ஒரு துளி போதும்
ஒரு மாகாணம் பற்றி எரியும்
சொந்த மக்களை
சட்டவிரோத குடியேறிகள்
ஊடுருவல்காரர்கள்
பயங்கரவாதிகள் என
வரையறை செய்வார்கள்
தேர்தல்கள் வந்துவிட்டால்
மேலதிக விஷத்தை
நாவில் பூசிக் கொள்வார்கள்
வழிபாட்டுத் தளங்களை உடைக்க
பெரிய இயந்திரங்கள் தேவையில்லை
இவர்கள் நாக்கு சுழன்றால் போதும்
அவையே கடப்பாரை, கம்பாய் மாறும்
உடைபட்ட அதே இடத்தில் விரும்பும் ஆலயத்தை எழுப்புவார்கள்
அதை வெற்றியின் அடையாளம் என்பார்
கருணையின் வடிவம் என்பார்
நீதியின் கண்ணியம் காக்கப்பட்டது என்பார்
காலம் வந்தது
இவர்கள் நாவின் தீ மணத்தை மக்கள் உணரத் தொடங்கினர்
வெறுப்பின் நெருப்பை அணைக்க
அன்பெனும் ஆதி ஊற்றிலிருந்து நீர் கொணர்ந்தனர்
பிளவுகளை சரிசெய்யும் ஒற்றுமைப் பசையைக் கண்டடைந்தனர்
சுரண்டலெனும் இருளை வெல்ல
போராட்டம் எனும் ஒளியை ஏந்தினார்கள்
ஈக்வலண்டினா எனும் தேசம் பிறந்தது
இங்கே முதலாளி இல்லை
அதனால் தொழிலாளியும் இல்லை
எல்லோரும் மனிதர்கள்
லாபத்தின் பங்காளிகள்
தனியுடமை இல்லை
அதனால் சுரண்டல் இல்லை
உழைப்பு உண்டு அது
எல்லோர்க்கும் அவசியம்
ஊதியம் உண்டு
உழைப்பிற்கு அது நிச்சயம்
இருளை ஒளி வெல்லும்
எழுதியவர்:
✍🏻 – ஆதிரன் ஜீவா
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

பொசுக்கப்பட வேண்டிய நாக்குகள் இன்னும் நிறைய இருக்கின்றன; இருளை வெல்லட்டும் ஒளி
கவி வரிகள் அத்தனையும் அருமை கவிஞருக்கு வாழ்த்துகள் தொடரட்டும் தங்கள் எழுத்துப் பணி.