நூல் அறிமுகம்: இருளில் மறையும் நிழல் – மு. முருகேசின் கதைகள் – சுப்ரபாரதிமணியன்

நூல் அறிமுகம்: இருளில் மறையும் நிழல் – மு. முருகேசின் கதைகள் – சுப்ரபாரதிமணியன்

 

மு.முருகேஷ் குழந்தைகளின் உலகில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பவர். அறிவொளி இயக்கப்பணி முதல்  எய்டு இந்தியா நிறுவனப்பணிவரை குழந்தைகளுக்கான கல்வி , அவர்களின் படைப்பாற்றலில் அக்கறை கொண்டு இயங்கியும் அவரின் படைப்புகளை குழந்தைகளுக்கென்று ஆக்கியும் செயல்பட்டு  வருகிறார். அதற்கான மொழி என்பது இயல்பானதும், எளிமையானதும்  நேரடியானதும் என்பதையே  இக்கதைகளும்  காட்டுகின்றன.இத்தொகுப்பின் கதைகளில் கவனத்தினை ஈர்க்கும் கதைகள் என்பவை கூட குழந்தைகள் சம்பந்தப்பட்ட உலகைச்சார்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

அப்பாக்களை இனம் கண்டுகொண்டு சொல்லும் மகன்களைக்காட்டுகிறார். அப்பா ஏன் குரூரம் ஆக்கிப்போனார் என்ற கேள்வியை முன் வைக்கும் போது அப்பாக்கள் அதிர்ந்து போகிறார்கள்.( வட்டியை வசூல் செய்யும் அப்பா ) தோள் கொடுக்க நான் இருக்கிறேன் என்று கல்வியை விட்டு விட்டு வேலைக்குப் போக தயாராகும் மகன்கள் இருக்கிறார்கள். அப்பாக்களின் கையைக்குலுக்கிக் கொள்ளும் மகன்கள் இருக்கிறார்கள். அம்மா பிள்ளைகளாக அவர்களைக்காட்டாமல் அப்பாவைச் சார்ந்து அவர்களின் பிரச்சினைகளை நோக்கும் மக்ன்கள் இருக்கிறார்கள்.

அந்த மகன்கள் வளர்ந்து இளைஞர்களாகி அப்பாக்களை முன்வைத்து எதிர்குரல் எழுப்புகிறார்கள். சவரத்தொழிலாளியான இளைஞன் மயிரு, முடி போன்ற வார்த்தைகளைக்கூட வசவின்றி சாதாரண உபயோகத்திற்கு  பயன்படுத்தாதவன் எதிர்ப்பின் உச்சத்தில் அதை வசவாக்கி கோபத்தைத் தணித்துக் கொள்கிறான். வேலையில்லாத இளைஞன் கழிப்பறை கழுவும் வேலையில் சேர்ந்து அவன் மேல் செலுத்தப்படும் வன்முறைகளை அடையாளம் கண்டு கொள்கிற போது எதிர்ப்பை சரியாகவேத் தெரிவிக்கிறான.” இருளில் மறையும் நிழல்”  என்ற அக்கதையில் கழிப்பறை அனுபவங்கள் யாரையும் குமட்டச்செய்யும் என்பதே அது நுணுக்கமாகச் சொல்லப்பட்டிருப்பதை உறுதியாக்குகிறது.. கிராமிய அனுபவம் சார்ந்த வழக்குகளை சரியாக சுட்டியிருக்கிறார். உதாரணம் அக்குளின் பிரதேசம் கவட்டி என்ற  குறிப்பு போன்ற பலதைச் சொல்லலாம். “ வரும் போகும் “ கதையில் அப்படி எதிர்ப்பு எதுவும் இல்லாமல் அல்லது மீட்சிக்கான பாதையில்லாமல் ஒரு சிறுவன் தேர்வில் தவறுவதும், அப்பாவின் மில் மூடப்படுவதுமாய் நிழல் இருட்டை அப்பிப் போகிறது.  மு.முருகேஷ் ஹைக்குவில் அமிழ்ந்தவர் என்பதாய் சிறுகதையின் பக்க அளவை கூட அதனோடே சம்பந்தப்படுத்துவது போல்  சுருக்கிவிடுகிறார். தொகுப்பின் பாதிக்கதைகள் அப்படி குறுகி நிற்கின்றன.இறுக்கமும் விஸ்தாரனமும் அற்றதாய் பல நின்று விடுகின்றன. இளைஞர்களைப் போலவே பெண்களும் எதிர்குரலும் கன்னத்தில் அறையும் தருகிறவர்களாக பலரைக்காட்டுகிறார். தொலைக்காட்சி பிம்பம் தரும் எதிர்வினைகளின் ஊடே ஆண்மனதிற்கு   எதிராகவும் பேசுகிறார்.பழைய சைக்கிளின் கெட்டித்துப்போன துருவினை துடைத்தெடுக்க நீளும் விளிம்பு நிலை மனிதர்களின் சாதாரண அனுபவங்களிலிருந்து பெறப்பட்ட பாடங்களாய் இக்கதைகள் உள்ளன.

இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது.  கவிதைகள், கல்வி, சுயமுன்னேற்றக் கட்டுரைகள் என்று மூவாயிரம் பக்கங்களுக்கு அவர் உருவாக்கியிருக்கக்கூடும் . இந்த 80 பக்க  புனைவு அதன் மறு பக்கமாய் விளங்குகிறது.புனைவு மொழியில் சில பக்கங்களைப் புரட்டியிருக்கிறார்.

( அகநி வெளியீடு , வந்தவாசி ரூ 60 மட்டும் )

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *