ச. தமிழ்ச்செல்வன் எழுதிய இருளும் ஒளியும் - நூல் அறிமுகம் | Irulum Oliyum - Sa.TamilSelvan - bookreview - bookday - https://bookday.in/

இருளும் ஒளியும் – நூல் அறிமுகம்

இருளும் ஒளியும் – நூல் அறிமுகம்

நூலின் தகவல்கள் : 
புத்தகத்தின் பெயர் : இருளும் ஒளியும்
ஆசிரியர் : ச. தமிழ்ச்செல்வன்
பக்கங்கள் : 158
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை: 170

ஆசிரியர் பற்றி:

ஆசிரியரின் சில நூல்களின் மதிப்புரைக்கு ஒலி வடிவம் தந்ததில் பரிச்சயமானவர் . பின்னர் தெரிய வந்தவை. அவர் ஒரு கலைப் பயண படைப்பாளி, கலைப்பயண அமைப்பாளர் , அறிவொளி ஒருங்கிணைப்பாளர் , அறிவொளிப் புத்தகங்களின் ஆசிரியர் , சுகாதாரப் பயிற்சியாளர் , நாட்டுப்புறவியல் சேகரிப்பாளர் , சமம் கருத்தாளர் , தெரு சினிமா இயக்கவாதி , ஸ்லைடு ஷோ விளக்குநர் என்பதெல்லாம்.

சிறுகதை எழுத்தாளராக இலக்கிய உலகில் பயணம் துவக்கிய இவர்..
வீதி நாடகம் , வீதி சினிமா இயக்கம் , கலை இரவுகள் , எழுத்துரிமைக்கான சட்டப் போராட்டங்கள் என இவரது களப்பணிகளும் விரிவடைந்தது . தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினராகவும் , செம்மலர் இலக்கிய இதழின் ஆசிரியராகவும் பங்காற்றி வருகிறார்.

இனி நூல் பற்றி :

அனைவருக்கும் அறிவொளி வணக்கம். இந்த நூல் 1990- களில் அறிமுகப்படுத்தப்பட்ட அறிவொளி இயக்கம் குறித்த அனுபவங்களின் தொகுப்பு. இது திருநெல்வேலி மாவட்ட அறிவொளி இயக்கம் பற்றிய விமர்சன பூர்வமான ஆய்வு அல்ல , உணர்வுப்பூர்வமான ஒரு அனுபவ பகிர்வு என்கிறார் ஆசிரியர்.

முதல் தொகுப்பிலேயே தபால் ஆபீஸ் உள்ள ஹிந்தி எழுத்தை அழிப்பதற்காக தார் சட்டியோடு வந்தவரில் ஒருவர், “ஏண்ணே… இதுல எது இந்தி எழுத்து ? “என்று கேட்ட கேள்வியே நம்மை வெகுவாக சிந்திக்க வைக்கிறது. தமிழகத்தில் தமிழ் எழுத்துக்களுக்கும் ஹிந்தி எழுத்துக்களுக்கும் அடையாளம் தெரியாதவர்கள் வாழ்ந்த காலத்தில் உருவாக்கப்பட்ட இயக்கம் தான் அறிவொளி இயக்கம்.

படிக்கத் தெரியாத பாமர மக்களிடம் இவ்வியக்கத்தை கொண்டு சென்ற போது அந்த மக்கள்..
“ இவ்வளவு அக்கறையாய் பேசுறீங்களே, இத்தனை வருஷமா எங்க போயிருந்தீக..? “ என்று கேட்ட கேள்வி உண்மையில் அந்த சூழலில் நிற்பவர்களை நிலைகுலையத்தான் செய்திருக்கும்.

தற்போது “இல்லம் தேடி கல்வி” என்னும் திட்டத்தை அறிமுகம் செய்த பொழுது அது சார்ந்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த ஒவ்வொரு கிராமத்திற்கும் கலைக்குழு சென்று விழிப்புணர்வு தந்தார்கள் . அதுபோலவே இவ்வியக்கத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்காக 15 கலை குழுக்கள் மாவட்டத்தை ஒரு மாத காலம் கலக்கியிருக்கிறார்கள்‌. இந்த குழுக்களில் அரசு ஊழியர்களும் கலந்து கொண்ட பொழுது , அவர்களை விமர்சிக்கும் விதமாக ஆசிரியர் கையாண்டிருக்கும் விதம் சம்மட்டி அடி.

இந்த திட்டத்தில் பெரிய சாதனையாக பார்க்கப்படுவது என்னவென்றால், “ அரசு எந்திரம் முழுமையாக முடுக்கி விடப்பட்டு மக்களின் மனப்பூர்வமான பங்கேற்பம் சேர்ந்தால் , இந்த நாட்டில் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு “அறிவொளி கணக்கெடுப்பு” என்பது தான் .

இவ்வியக்கத்தில் மக்களுக்கு ஆனா போடுவது கஷ்டம் இல்லை இனா போடுவது தான் கஷ்டமாக இருக்கு என்று …

“ கோலம் போடும் கைகளுக்கு
ஆனா போடுவது கஷ்டமா? “

என்ற வரிகள் கூறுகின்றன.

வாசிக்க தெரிந்ததும், எழுத தெரிந்ததும் தன் உள்ளக் கிளர்ச்சிகளை எல்லாம் யாரோ ஒருவரிடம் கொட்டி விட வேண்டும் என்று, இசக்கியம்மாள் என்ற பெண் , தான் கற்ற கல்விக்கு நன்றி நவிலுமாறு கலெக்டருக்கு எழுதிய கடிதம் ஒன்று வாசிக்கும் போதே நம்மை உருக வைத்து விடுகிறது. இப்படி உருவாக்கப்பட்ட இயக்கம் ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் கோவில் திருவிழாவில் அடியோடு மறக்கப்படும் பொழுது இயக்க உறுப்பினர்கள் , தொண்டர்கள் கொண்ட சோர்வை வாசிக்கும் போது நாமும் உணர முடிகிறது.

பல ஆட்சி அதிகாரங்களின் கைகளில் சிக்கி அதிலிருந்து மீண்டு இயங்கிய மீண்டும் சில கைகளில் சிக்கி ஒரு இயக்கத்தை கொண்டு செல்வதற்கு எத்தனை மனோதிடம் வேண்டும் என்பதை இந்த அறிவொளி இயக்க அனுபவங்கள் மக்களோடு மக்களாக களத்தில் இறங்கி களப்பணி ஆற்றுபவர்கள் எந்த துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இவ்வி வியக்க அனுபவங்கள் உதவும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

ஆண்டாண்டு கால பாவங்கள் படிந்து போன அரசாங்க கட்டிடங்களில் எல்லாம் எம் மக்களின் கால் புழுதிபட வேண்டும் . அன்றுதான் அவை புனிதமடையும் என்று ஆசிரியர் குறிப்பிடும் இடங்கள் எத்தனை நிதர்சனமானவை.

இந்த அனுபவங்களில் ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கியூபா நாட்டில் நடந்த எழுத்தறிவு இயக்கம் பற்றி உணர்ச்சி பொங்க சொன்ன கருத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தவை . அதாவது கல்லூரிகள் , பள்ளிகள் , பல்கலைக்கழகங்கள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் ஒரு மாத காலம் மூடப்பட்டு படித்தவர்கள் அனைவரும் கிராமங்களுக்கு அனுப்பப்பட்டு, நாடே பள்ளிக்கூடமாகி கல்லாதோர் அனைவரையும் முதல் வகுப்பு படிக்க வைப்பதும் , ஆண்டுக்கு ஒரு முறை இப்படி அனைவரும் ஒரு மாதம் என ஒரே வேலையாக செய்தால்…
10 ஆண்டுகளில் நாடே பத்தாம் வகுப்பை தேறி விடும் என்ற கருத்து தான். ஆனால் நடைமுறையில் இது சாத்தியமா என்பது மிகப் பெரிய வினா..???

அறிவொளி இயக்க வகுப்புக்கு கற்போர் செல்லாத வீடுகளுக்கெல்லாம் ராக்கோடங்கி என்ற பெயரில் “ இந்த வீட்டு பொம்பளை ஒரு வாரமா அறிவொளி வகுப்புக்கு வரவில்லை . அது நல்ல சகுனம் இல்ல. திருத்திக்கோ… திருத்திக்கோ…” , என்று சொல்லி உடுக்கை அடிப்பதும் தினசரி ராத்திரி உடுக்கை சத்தம் கேட்டு ஊரே சிரித்து உருண்டாலும் வகுப்புகள் புத்துயிர் பெற்றதும் அருமையான யுக்தி. இவ்வாறு ஒவ்வொரு ஊரிலும் அவ்வாறு இயக்கங்களை நடைமுறைக்கு கொண்டு வர பல பல புதிய யுக்திகளான பஜனை , கோடங்கி , சாமியாட்டம் , கோலப்போட்டி , சைக்கிள் பிரச்சாரம் , மக்கள் சந்திப்பு இயக்கம் , வார்த்தை விளையாட்டுகள் என அடிமட்டத்தில் உள்ள தொண்டர்கள் செய்து இருக்கின்றனர் என்று நினைக்கையில் அவர்களுடைய அர்பணிப்பான உணர்வு அவர்களை வாழ்த்த சொல்கிறது.

அறிவொளி இயக்கம் என்பது ஓர் ஆண்டு அல்லது 15 மாதங்களில் முடிவுக்கு வருவது. இந்த கால அவகாசத்திற்குள் மூன்று பாட நூல்களை அதாவது தீபம் 1,2,3 என்று படித்து முடிக்க வேண்டும். ஆனால் இது முழுவதும் நடந்தேறியதா என்பது அந்தந்த மாவட்டத்தை சார்ந்ததும் , அங்குள்ள தன்னார்வ தொண்டர்களை பொருத்தமாக முடிந்துள்ளது.

கற்போர் எழுதிய கடவுளுக்கு கடிதம் அவர்களுடைய துயரங்களையும் கனவுகளையும் கோரிக்கைகளையும் வெளிக்கொண்டு வந்தன. “ எத்தனை நாளைக்கு தான் இப்படி நடந்தே சாவோம் . ஒரு பஸ் அனுப்பிவையுமய்யா கடவுளே “, என்று ஒரு மாவட்டத்தில் கற்போர் எழுதிய கடிதம் நெருடலாக இருந்தது.

ஒரு எழுத்தாளர் எப்படி ஒரு நூலை எழுத வேண்டும் என்ற ஆசிரியரின் பார்வையும் , இந்த இயக்கத்தின் மூலமாக சென்னையில் விமான நிலையத்தில் அவர் குற்ற உணர்வோடு அமர்ந்திருந்த நிமிடங்களும் , பயிற்சி பட்டறை முடித்துவிட்டு தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்கச் சென்ற ஆசிரியர் அதுவரை மும்தாஜ் பற்றி கொண்டிருந்த அனுமானங்களை ஒழித்து , அந்த மனுஷிக்காக உண்மையிலேயே அங்கு நின்று கண்ணீர் விட்ட நிமிடங்களும் , புதிய வெளிச்சம் பெற்ற ஒரு அறிவொளி கற்போராக தாஜ்மஹாலை விட்டு வெளியேறிய ஆசிரியரையும் பார்க்கையில் மக்களோடு பயணிக்கும் ஒரு சக மனிதனாகவே பார்க்க தோன்றுகிறது.

யாரோடு பேச என்று காத்திருந்த மனங்களுக்கு வடிகாலாக அறிவொளி இருந்ததாக இவ்அனுபவங்கள் நமக்கு கூறுகின்றன . ஒரு விலைமாதரை அறிவொளி இயக்கம் ஒரு மனுசியாக பார்த்த விதமும் , அவள் படிப்பை மதித்து 150 ரூபாய் படியில் ஒருங்கிணைப்பாளர் ஆகியதும் , கற்பிக்கப் போன நாங்கள் நிறைய கற்றுக்கொண்டு தான் திரும்பினோம் என்பதும் இந்த அறிவொளி இயக்கத்தின் மறுபக்கமாக நான் பார்க்கின்றேன்.

அறிவொளி இயக்கம் நடந்த காலங்களில் நான் பால்ய காலத்தில் இருந்தாலும் , இப்புத்தகத்தின் அனுபவங்கள் என்னை அந்த காலத்துக்கே கூட்டி சென்ற ஒரு உணர்வை தந்தது. இந்தியா சுதந்திரம் பெற்ற கதையை நாம் இன்றும் தான் படித்துக் கொண்டிருக்கின்றோம் . வாசித்தல் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் மட்டுமே பற்றி இருத்தல் கூடாது. கடந்த காலத்தை பற்றியும் இருத்தல் வேண்டும் . என்றோ முடிந்து போன இந்த அறிவொளி இயக்கத்தின் அனுபவங்கள் இனிவரும் காலங்களில் களப்பணியாற்ற விரும்புவோருக்கு நல்ல ஒரு கற்பிதத்தைக் கொடுக்கும் என்பதை உணர்கின்றேன்.

நூல் அறிமுகம் எழுதியவர் : 

பா விமலா தேவி



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *