நூல் அறிமுகம் : இருண்ட காலத் கதைகள் – கருப்பு அன்பரசன்

நூல் அறிமுகம் : இருண்ட காலத் கதைகள் – கருப்பு அன்பரசன்

இருண்ட காலமதில் எதைப் பேசலாம்..?
இருண்ட காலம் குறித்து பேசலாம்.!
இருண்ட காலத்தின்
துயரங்களைப் பேசலாம்.!!
இருண்ட  காலத்தில் நுழைந்து
எங்கேயோ வெகு தொலைவில்
தெரியும் சின்னச் சின்ன வெளிச்சம் குறித்துப் பேசலாம்!!!
இருண்ட காலத்தை அழித்திடப்
புகைந்து கொண்டிருக்கும்
நெருப்பின் வனப்போடு கொஞ்சிப் பேசலாம்..
இப்படி..
நிறைய..நிறைய..
இருண்ட காலத்தின் முற்காலத்தை..
இருண்ட காலத்தை
நேர் கொள்ளவரும் நற்காலத்தை.
தமிழகத்தின் ஆகச்சிறந்த தமிழ் எழுத்தாளுமைகள் 17 பேர்; தங்களின்
அனுபவங்களை.. பார்த்தவைகளை.. கேட்டவைகளை.. நடந்தவைகளை..
நடப்பவைகளை கதைகளாக்கி அரசியல் பேசி, தமிழ் வாசகர்களிடம் கொடுத்திருக்கிறார்கள்.. இவைகளை ஒருங்கிணைத்து காலத்தில் வந்ததொரு அருமையான சிறுகதைகளை தொகுப்பாக்கி இருக்கிறார் எழுத்தாளர் அ.கரீம்.. அழகான முறையில் வடிவமைத்து வெளியிட்டிருக்கிறார்கள் எதிர் வெளியீட்டு நிறுவனம்.
சிறுகதைகள் வாசகனின் இதயத்தின் சமநிலை சிதைக்க வேண்டும்..  மன நிம்மதியை கவிழ்த்துப் போட்டு இருதயத்தின் துடிப்பினை உச்ச நிலைக்கு கொண்டு சென்று அவனை உயிரோடு புதைத்து புதியவனாக முளைக்க வைக்க வேண்டும் அல்லது அவனின் சிந்தனையோட்டத்தை மடைமாற்றி நியாயத்தின்பால் நிற்கவைக்க வேண்டும். இத்தொகுப்பின் அத்தனை சிறுகதைகளும் வாசகனின் மனநிலை குலைக்கச்செய்து அவனைத் தூங்கவிடாது செய்யும் வேலையை மிகச் சரியாக.. நேர்த்தியாக.. வெடிப்புறச் செய்திருக்கிறது. இருளைப் போக்கிட ஏதேனும் செய்தாகனும் என்கிற கட்டயத்தை வாசகனுக்குள் நிகழ்த்திக் காட்டி வெளிச்சத்தின் மெல்லிய கீற்றுதனை வீசிச் செல்கிறது. வாசகனை தன் வளையத்திற்குள் கட்டிப்போட்டு மிரட்டுகிறது.. வசியப்படுத்தி அழவைக்கிறது.. கிளர்ச்சி செய்கிறது.. கலகமூட்டுகிறது.. ஆவேசப்படுத்துகிறது. படைபாளிகள் தன் படைப்பின் வழி நின்று
எழுத்தாயுதத்தை வலுவாகவும்.. நேர் கொண்டும் வல்லமையோடும் தொடுத்திருக்கிறார்கள் இருண்ட காலத்தின் மீது.
“இருண்ட காலக் கதை”  தொகுப்பில் “இங்கே சொர்கம் துவங்குகிறது” என்கிற கதையை வாசிக்கும் பொழுது அதன் ஆசிரியர் பால முருகன் வாசகனை தரதரவென இழுத்துச் செல்வார் காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் நெடுஞ்சாலைக்கு. அங்கிருக்கும் உயரம் வளர்ந்த ஓக் மரங்களின் மேல் ஏறி நிற்கவைத்து நசீமாவின் ஒற்றை மகனும், ஹாசீனாவின் காதல் கணவனுமான குலாமை தேடச் சொல்வார்.. சில்லிட்டிருக்கும் ஜீலம் நதியின் கரையோரத்தில் அழுகிய நிலையில் இருக்கும் பிணம் ஒன்றினை  நசீமாவோடு சேர்ந்து புரட்டிக் காட்டச் சொல்வார்.
ஆசைக் கணவனுக்காகவும்..பாசம் கொண்ட மகனுக்காகவும் குரலெடுத்து போராடிய இரண்டு பெண்கள் ராணுவத்தின் கொடூரம்மிகுந்த நகங்களில் சிக்கி சிதைத் தெறியப்படும் போது வாசகனின் கண்களை கோவத்தின் உச்சத்தில் ரத்தச் சிவப்பை வாரி அப்பிச் செல்வார். சொல்வதை ஏற்கத் தயங்குபவர்களை.. எதிர்ப்பவர்களை ஆள்பவர்களும்.. அதிகாரத்தில் இருப்பவர்களும் எதுவும் செய்யலாம்.. எதுவும் செய்வார்கள் என்கிற அச்ச உணர்வு காஷ்மீரத்து வீதிகளெங்கும் சட்டமாகிக் கிடக்கிறது. கணவனை இழந்தவர் விதவை.. கணவன் காணாமல் போய்; கண்டு பிடிக்க முடியாமல்,  கணவன் என்னவானான் என்று தெரியாமலே வாழ்ந்து ஒழியும் ஒரு பெரும் சமூகம் இன்று காஷ்மீரில் உருவாக்கப்படுகிறது. அவர்களுக்கு “அரை விதைவை” என்கிற புதிய சொல்லும் புழக்கத்தில் கிடக்கிறது.. அரை விதைவைகளும்.. மகனை தொலைத்த அம்மாக்களும்.. அப்பாவை அழைத்திடும் குழந்தைகளுமாக காஷ்மீரத்தின் ஜீலம் நதியின் சலசலக்கும் ஓசையின் ஊடாக குரலெழுப்பி தேடிக் கொண்டே இருக்கிறார்கள் இன்றும் கூட ராணுவத் தோட்டாக்களின் கண்காணிப்பில்.
வலிமிகுந்த உண்மைகளை கதையாக்கி இருக்கிறார் பாலமுருகன்.
ஆர்.எஸ்.எஸ். மக்களின் மனங்களை கட்டமைப்பதில் முழுக்கவணத்தையும்
எல்ல தளங்களிலும் திட்டமிட்டே நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. “தூய ரத்தம் கொண்ட பெரும்பன்மை இந்துக்ககான நாம்  வந்தேறிகளான முகலாயர்களாலும்.. பிரிட்டீஷாராலும் அடக்கியாளப்பட்டு அடிமைகளாகக் கிடந்தோம்.. இந்துக்குள் வணங்கி நிற்கக்கூடிய தெய்வமான பசுமாட்டை வெட்டிக் கூறாக்கி வேகவைத்து தின்னும்  முஸ்லீம்கள் கூட்டம் இங்கிருந்து பாகிஸ்தானுக்கு  வேலை செய்து கொண்டிருக்கும் காட்டிக் கொடுக்கும் கூட்டம்.. அவர்களுக்கு இந்தியாவிற்குள் இடமில்லை.. விரட்டியடிக்க வேண்டிய முகலாயர்களின் மிச்சங்கள்” என்று விஷத்தின் அத்தனை கூறுகளையும் எண்ணத்திலும்.. இருதயத்திலும் புகுத்தி ஆர்.எஸ் எஸ்.சால் செய்யப்பட்ட புகுத்தப்பட்ட  வானரக் கூட்டம் இந்திய ராணுவம் உட்பட அனைத்துத் துறைகளின் உயர்மட்டத்திலும் தற்போது தனது வாலில் நெருப்பைக் கட்டிக் கொண்டு வெளிப்படையாவே  எதிர்ப்பார்க்காத இடமெங்கிலும் தீ மூட்டிக் கொண்டிருக்கிறது.
எந்தப்பக்கம் எந்தக் குடிசை பற்றி எரியும் என்பதை எவரும் அறிந்திடக் கூட நேரமில்லாமல் கைகளில் வெறும் குடத்தோடு நின்று கொண்டிருக்கிறோம்.. முஸ்லீம் மக்கள் குறித்தான அவதூறுக் கருத்தை தன் ஷாகாக்களில் விதைத்து தன் ஊழியர்களை உசுப்பேற்றிய ஆர்.எஸ் எஸ். இப்போது வெளிப்படையாகவே வலுவான ஒரு அவதூறு பிரச்சாரத்தை பொதுவெளியில் தொடர்ச்சியாக விதைத்து  மக்கள் மனங்களை கட்டமைத்து வருகிறது. அரசின் ஆணைகள்.. முன் வரையரைகள் என அனைத்தையும் அதற்கு தக்கவாறு வடிவமைத்துக் கொள்கிறது.. அப்படியான ஒன்றே “இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம்” அதில் இருக்கக் கூடிய பல ஷரத்துக்கள் நேரிடையாக முஸ்லீம்களை நாடற்றவர்களாக மாற்றி சிறைச்சாலைக்குள் அடைத்து விடும்.. எதிர்க் கருத்து பேசக்கூடிய செயல்பாட்டாளர்களின் ஆவணங்கள் மறைக்கப்படும்..எரிக்கப்படும்.. கைதாவார்கள்.. கொல்லப்படுவதற்கு ஏதுவாகும்.
சட்டம் நிறைவேற்றப் படுவதற்கான மூஸ்தீபுகள் ஆழமாக பரவலாக பெரும்பான்மையோரிடம் சிறுபான்மை முஸ்லீம் மக்களுக்கு எதிரான வலுவானதொரு கருத்துருவாக்கத்தை கட்டமைத்துக் கொண்டே ஆளும் இந்துத்துவா அரசால் அறிவிக்கப் பட்டபோது.. நாடு முழுவதிலும் கடுமையானதொரு எதிர்ப்பு சிறுபான்மை முஸ்லீம் மக்களிடம் இருந்தே கிளம்பியது..
அறிவுத்தளத்திலும் எதிர்ப்பின் ஊசலாட்டத்தை பார்க்க முடிந்தது. பெரும்பான்மை இந்துக்களை வாக்குகளாக.. ஊழியர்களாக வைத்திருக்கும் பல அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் தங்களின் எதிர்ப்பு உணர்வை, போராட்டம் நிகழ்திக் கொண்டு இருக்கும் முஸ்லீம் மக்கள் திரளில் ஆதரவு உரை.. வாழ்த்துரையோடு முடித்துக் கொண்டார்கள்.. அந்தச் சட்டத்திற்கு எதிரான பெரும்பான்மை மக்களை அணிதிரட்டி வலுவான தொடர் கூட்டுப் போராட்டத்திற்கு திட்டமிடாதது இருண்ட காலத்தின் ஆகப் பெரிய சோகமே.  அந்த சோகத்தின், அச்சத்தின், பயத்தின் வெளிப்பாடே எழுத்தாளர் சம்சுதீன் ஹீரா அவர்களின் எழுத்தில் வந்திருக்கும் “மயானக்கரையின் வெளிச்சம்”..
சிறுகதையின் தலைப்பே நிகழ்காலச் சூழலின் இருட்டைக் காண்பித்திடும். இங்கேயே வாழ்ந்த அவனலும்.. அவன் மனைவி பிர்தவுசாலும்.. அரசு கேட்கும் முன்னோர்களின் ஆவணத்தை கொடுக்க முடியாததால் காவல் துறையின் தேடுதலுக்கு உள்ளாக்கப்பட்டு ஓடிக் கொண்டே இருக்கிறார்கள் தங்கள் 8 வயதுப் பெண் குழந்தையை தோளில் சுமந்தபடி.. நகரத்தின் வீதிகளெங்கும்.. பொது மக்கள் புழங்குமிடமெங்கிலும் தங்களின் முகத்தை மறைத்தபடி.. ஆவணம் இல்லாததால் சொந்த வீடும் அரசால் பிடுங்கப்பட்டு வீதிக்கு விரட்டியடிக்கப்பட்டபோது குடும்பத்தோடு அடிவயிற்றில் இருந்து எழும்பிய அழுகையைக் கூட கேட்பதற்கு ஆளில்லாமல் ” எதுவுமில்லையா.. குடும்பத்தோடு செத்தொழியுங்க” என்கிற வார்த்தைகள் மட்டும் மூளைக்குள் ஒலித்துக் கொண்டேயிருக்க பிர்தவுஸ் பாலத்தின் மீதிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள.. காவல் துறை துரத்திக் கொண்டே முபீனாவைத் துக்கிக் கொண்டு ஓடிக் கொண்டே இருக்கிறான். கூடவே வாசிக்கும் நாமும் அவனோடு.. போகப் போக அவனைப் போன்றே நூற்றுக் கணக்கான, ஆயிரக் கணக்கான குடும்பங்கள் அழுதுகொண்டே.. ஓடிக் கொண்டே.. அத்தனை வீதிகளிலும்.
அவனும்.. முபீனாவும் என்னவானார்கள்..
இருண்ட காலத்தின் கதைக்குள் நுழைந்து சம்சுதீன் ஹீராவைக் கேளுங்கள் வாஞ்சையோடு அவர் கரம் பிடித்து. “இன்று தஸ்கீர் வீடு” இந்தியா முழுவதிலும் சிறுபான்மை முஸ்லீம் மக்கள் மீது ஆதாரம் ஏதுமின்றியே சந்தேகம் என்கிற ஒற்றை வார்த்தையை வைத்தே குற்றவாளியாக்கி அவர்களைப் பொதுச் சமூகத்தில் தேசவிரோதிகள் என்றும் அன்னிய நாட்டுக் கைகூலிகள் என்றும் இந்திய மண்ணிற்கு துரோகமிழைப்பவர்களுமாக ஒரு பிம்பத்தை கட்டமைத்து காட்டி விடும்
இந்துத்துவா சக்திகள். சந்தேகத்தின் பெயரில் அழைத்துச் செல்லப் பட்ட பலர்
திருப்பு அனுப்பிவிட்டோம் என்று சொல்லப்பட்டு, காணாமல் போனவர்களின்
எண்ணிக்கை வளர்ந்து கொண்டே இருக்கிறது ஒவ்வொரு நாளும்.
காக்கிச் சட்டைக்குள் காவி கலந்திருக்கும் வஞ்சகத்தை விசாரிக்கும் போதே நுகர முடியும்.. அதிலும் இந்த  DNA அதிகாரிகளுக்கு முஸ்லீம்கள் என்றாலே காக்கி மறைந்து காவி மட்டுமே தெருப்பாக தெரியும் பச்சை ரத்த வாடையோடு.. அந்தக் கவிச்சை நாற்றம் காணாமல் போன சுல்தானின், இப்ராஹிமின், முகம்மதுவின் ரத்தத்தில் எவர் ஒருவருடையாதாக இருக்கலாம். அப்படித்தான்.. அ.கரீம் எழுதியிருக்கும்
“இன்று தஸ்கீர் வீடு” வில் வரும் டி.என்.ஏ. அதிகாரி சித்தார்த்தின் காக்கிச் சட்டையிலும் உயிரோடு இருக்கும் அன்சாரியின் ரத்த வாடை வீசும்..
தான் உண்டு தன் வேலை உண்டு.. தன் மகனின் கல்வி.. மனைவி குடும்பம் அலுவலகம் என எல்லோரையும் போல் வழ்ந்து வருகிறவன் தஸ்கீர்.. எப்போதோ முகநூலில் பதிந்த பதிவிற்காக இன்று விசாரிக்க வந்திருக்கிறது DNA. டேபிளில் இருந்த இந்திய வரைபடத்தில் கல்வி பயிலும் மகனுக்கு உதவியாக நகர்களின் பெயர்களை இடங்களை குறித்து வைத்திருக்கிறான் தஸ்கீர்.  இந்த ஒன்று போதாதா இந்திய மேப்பில் இடங்களை குறித்து வைத்திருக்கிறாய்… சந்தேகம் வலுக்கிறது எனச் சொல்லியே இழுத்துப் போகலாமே என வந்தவர்கள் கேட்க,  தஸ்கீரோ இது என் மகனுக்கு உதவி செய்தது.. பள்ளியில் அவன் வகுப்பு டீச்சரை வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள் என்று சொல்லி போன் நெம்பர் கொடுக்க.. சித்தார்த் போன் செய்து உறுதி செய்ய.. அந்த இந்திய மேப்பை கசக்கி டேபிளின் கீழ் வீசி எறிகிறார் சித்தார்த். தஸ்கீர் DNA அலுவலகம் செல்வது தற்காலிகமாக வெறும் மிரட்டலோடு ஒத்திவைக்கப் படுகிறது. முகநூலில் இனி அரசை எதிர்த்து பதிவு ஏதும் பதியக் கூடாது என்று எச்சரிக்கை செய்து போகிறார்கள் வந்தவர்கள்.
இந்த மிரட்டல் பகுதி முழுவதும் தஸ்கீரும் அவரது குடும்பமும் அன்னிய நாட்டின் கையாள் என முத்திரை குத்திட சான்றாக நிறுத்தப் படுகிறது. இப்படிப்பட்ட நிஜங்கள் நாடு முழுவதிலும் திட்டமிட்டே சிறுபான்மை முஸ்லிம் மக்களின் மேல் நிகழ்த்தப்படும்
கொடும் தாக்குதக்தல்களாய் இன்றளவும் தொடர்கிறது. நிஜத்தை அப்படியே கதையாக்கி அறைந்திருக்கிறார் பார்வையாளர்களின், வாசிப்பாளரின் மூளைக்குள் எழுத்தாள்ர் அ.கரீம்.
இப்படி இருண்டகாலத்தின் கதைகளாக பெண் குழந்தை பாலியல் படுகொலையின் வலியினை ஆதிக்கச் சாதித் திமிறோடு ஆம்பளத் தினவும் கைகோர்க்கும் கொடுரத்தை துயரத்தோடு பதிவாக்கி இருக்கிறார் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன். வாசிக்கும் ஒவ்வொருவரின் காதிலும் பூவாயின் மகள் சரோஜாவின் கேள்வி சம்மட்டியாய் விழுந்து கொண்டே இருக்கும்.
ஆதிக்க சாதி வெறியும்.. ஆணவமும் ஆசையாய் வளர்த்த மகளையும் கொலை செய்யத் தயங்காது.. தேன் தடவிய வஞ்சகத்தை நம்பி வந்த வாலிபன் கழுத்தும் அறுதெறியும் என்பதை, ஆணவக் கொலையின் வெறியாட்டத்தை எழுத்தாளர் உதய சங்கர் அவர்கள்”துண்டிக்கப் பட்ட தலையில் சூடிய ரோஜமலர்”  கதையில் துயரத்தின்
வலியோடு பதிவாக்கி இருக்கிறார். மகள் ஜெயலட்சுமியின் தலையில் இருந்த ரோஜாவின் ஐந்து இதழ்களும் கதைகளாகி  கீழே விழ.. ஆறவது இதழும்.. ஏழாவது இதழும் ஆகயத்திலேயே அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது இன்னுமும். உங்கள் ஊரில் எங்கேயாவது வந்து விழும் வானத்தைப் பார்த்திடுங்கள்.ரோஜா இதழ் கதை சொல்லும் இருண்ட காலம்தான் இது.
ஃபிர்தவ்ஸ் ராஜகுரானின் “அடையாளம்” மதவெறி சக்திகள், கிராம கோயில் திருவிழாக்களில் எப்படிப் புகுந்து ஒன்று பட்ட கிராமத்தில்  பிளவினை ஏற்படுத்தி கடவுளின் பெயரால் அரசமரத்தைத் தீக்கிரையாக்கிடும் களியாட்டத்தினை வெறி கொண்டு நிகழ்த்தி, மரத்தின் கீழ் கடைவைத்திருந்த ஹாலித் ராவுத்தரையும்
அவரின் குடும்பத்தையும் நடுவீதியில் தவிக்க விட்டு ருசிக்கும் கொடூரத்தையும்
பேசி இருப்பார்.
பொள்ளாச்சி அபியின் “புயலின் மறுபக்கம்”  வலியான சிறுகதை. காதல் கணவனோடு பிழைப்பிற்காக வந்த இடத்தில் மதவெறியர்களின் கலவரத்தால் வேலைக்குச் சென்ற கணவன் கொலையாகிட, தனியொருவளாக மருத்துவமனை பிணக்கிடங்கின் வாசலில் காத்துக் கிடக்கிறாள் ஆறுதல் படுத்த எவருமிலாது.. தேவகியின் எண்ண ஓட்டத்தை..  மதவெறி நெருப்பிற்கு   தொழில் நகரம் இரையாகி எலும்புக்கூடாக நிற்கும் கொடூரத்தை எழுத்தில் கொண்டுவந்து நிறுத்திடும் போது வாசிப்பவரின் நாசித்து வாரத்தை சதை எரியும் நாற்றம் வந்து மூர்ச்சையாக்கிப் போடும். வாருங்கள்.. புயலின் மறுபக்கத்தை பார்ப்போம்..அங்கே தேவகி காத்துக் கிடப்பாள் வார்தைகளால்  ஆறுதல் கொடுத்து செத்துக் கிடக்கும் அவள் கணவன் அப்துல் காதரை சுமந்து செல்லவாவது கரம் கொடுப்போம்.
ஆதவன் தீட்சண்யாவின் ” காமிய தேசத்தில் ஒரு நாள்” ,   இரா.முருகவேளின்
“ஒரு எழுத்தாளரின் ஒப்புதல் வாக்குமூலம்” புலியூர் முருகேசனின் “கழற்றி வைக்கப்பட்ட மகளின் தலை”  ஆகிய மூன்றையும் வாசித்தால்.. இப்படியெல்லாமுமா நடக்கும்!  என யோசித்தால்… இனி இப்படித்தான் நடக்கும் என்பதை நிகழ்கால நாட்டு நடப்புகள் நமக்கு சமிக்ஞை செய்து கொண்டிருக்கிறது தினமும். கார்பரேட்டும்.. மதவெறியும் ஒன்றொடு ஒன்று வெளிப்படையாக கலவிசெய்திடும் போது இன்னும் கூட எதிர்ப்பார்க்கலாம் இந்த நாட்டிற்குள் என எச்சரிக்கை செய்திருக்கிறார்கள் கதையாசிரியர்கள் மூவரும் வெவ்வேறு கருத்துக்களை உள்ளடக்கி.
ஷக்தியின்  “மீண்டும் திரும்புகிறேன்” கொரோனா தொற்றுக்கு ஆளானவன்
சக மனிதர்களிடம் எப்படியெல்லாம் அச்சத்தின் காரணமாக ஒதுக்கப் படுகிறான்.. விலக்கப்படுகிறான்.. ஆறுதல் படுத்தவேண்டிய சமூகம், அரசின் அச்சமூட்டும் நடவடிக்கைகளால் எப்படி அன்னியமாகிக் கிடக்கிறது என்பதை முனியனின் அவள் மனைவி சுதா வழியாகவும் பெரும் துயரத்தின் அடையாளமாக பதிவாக்கி இருக்கிறார்
ஆசிரியர்.
வே.பிரசாத்தின் “காடர் குடி” மலை மக்களின் இன்றைய வாழ்நிலை.. குடியிருப்பிற்காக அம் மக்கள் அரசு நிர்வாகத்தால் எத்தனை நயவஞ்சகமாக ஏமாற்றப் படுகிறார்கள் என்பதை.. கார்ப்பரேட்டுகளின் ஆக்கிரமிப்பு.. புலிகளின் பெயரால் மனிதர்கள் விரட்டியடிப்பு என எல்லா கதைத் தளத்தில் இருந்தும் முற்றிலும் வேறுபட்ட இன்னொரு  தளத்தில் இக்கதை பதிவாகி இருக்கிறது  இருண்ட காலக் கதைத் தொகுப்பில்.
பண மதிப்பிழைப்பை உள்வாங்கிய   “படை” கொடுத்திருக்கிறார்
இளங்கோ கிருஷ்ணன். நாட்டு மக்களின் நலன் மறந்த மன்னனின் முட்டாள்தனமான நடவடிக்கைகளால் எளியவர்கள் படும் இம்சையை கதையாக்கி இருக்கிறார்.
ஒரு சில கதைகளின் பயணத்தில் கட்டுரை போன்றும்.. கதையோட்டம், முடிவு செயற்கைத் தன்மையோடும் இருப்பதாக உணர்கிறேன். சில கதைகளில்
தொகுப்பின் அவசியமுணர்ந்த படைப்பாளிகள்.. படைப்பாக்கத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதல் அக்கறை செலுத்தி இருக்கலாமோ என்கிற எண்ணமும் எனக்குள்.
இந்த காலத்தில் அரச பயங்கரவாதத்தால் நிகழ்த்தப்பட்ட சிறுபான்மை மக்கள் மீதான வன்முறை.. அம் மக்கள் சந்திக்கக்கூடிய வாழ்வுரிமை, வாழ்வியல் பிரச்சனைகளை
சம்சுதீன் ஹீராவும்.. அ.கரீம் பேசுவதைக் காட்டிலும் பெரும்பான்மை சமூகத்தைச் சார்ந்தவர்களாக இருக்கும் இன்னும் ஒரு சிலர் கூடுதலாக எழுதி இருந்தால்  அவர்கள் முன் வைக்கும் நியாயத்திற்கு சக்தியான வலு கிடைத்திருக்கும். பெரும்பான்மையான சமூகம் அம்மக்கள் குறித்து யோசிக்க முடியாத உளவியல் பிரச்சனை என்னவென்பதை நாம் சுயமாக நம்மை பரிசீலிக்க வேண்டிய காலமாக எனக்குப் படுகிறது.
ஆனாலும் கூட “இருண்ட காலக் கதைகள்” சரியானதொரு நேரத்தில் படைப்புத் தளத்தில் படைப்பாளிகளின் மிக நேர்த்தியான அரசியல் புரிதலோடு குறுக்கீடு செய்திருக்கும் சிறுகதைத் தொகுப்பாகும். தொகுத்தளித்த அ. கரீம் அவர்களுக்கும்.. தொகுப்பில் மிகச்சரியாக பங்களித்திருக்கும் 17 தமிழ் எழுத்தாளுமைகளுக்கும் இருண்ட காலத்தில் இருக்கும் வாசகனின்
நன்றிகள்.!
கருப்பு அன்பரசன்
இருண்ட காலக் கதைகள்
17 எழுத்தாளுமைகளின் படைப்பாக
தொகுப்பு அ.கரீம்
எதிர் வெளியீடு.
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *