இருபதாம் நூற்றாண்டு வரலாறும் கவிதையும் – நூல் அறிமுகம்
ஆய்வு நூல்கள் பெரும்பாலும் எழுத்து நடையில் பெரும் வறட்சி நிலவுபவை. படிப்பதற்கு சுவாரசியக் குறைவை ஏற்படுத்துபவை. ஆனாலும் சுழல் நூலகத்தில் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் பரிந்துரையில் வாசிக்க எடுத்தேன். உண்மையில் மிகச் சுவாரசியமான புத்தகம் நன்கு திட்டமிட்டு 5 தலைப்புகளின் கீழ் நின்று 100 வருட கால யுகத்தின் தடயத்தை 25 கவிஞர்களின் கவிதைகள் மூலம் ஆதாரங்களாக வைத்து தொகுத்து தந்துள்ளார். மிகப்பெரிய உழைப்பு தேவைப்பட்டிருக்கும். அந்த உழைப்பு நூலின் வெற்றியாக விளைந்திருக்கிறது.
ஒரு சம்பவம் அந்த சம்பவத்தின் கீழ் நின்று கவி பாடிய கவிஞர்களின் மிகச்சிறந்த கவிதைகளை தேர்ந்தெடுத்து இணைத்திருக்கிறார். வரலாற்றையும் ஓரளவு தெரிந்து கொள்ளும் விதமாக சுருக்கமாக எழுதியிருக்கிறார். இதை வாசிப்பவர்கள் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் தின்ற அனுபவத்தை நிச்சயம் பெறுவர். அவர் தேர்ந்தெடுத்திருக்கிற கவிஞர் பட்டியலே மனதிற்கு மிகவும் உவப்பானது. சமூகத்தை பாடாத படைப்பு என்ன படைப்பு என்பதே என் நிலைப்பாடு. 5 கட்டுரைகள் 69 வகையான நிகழ்வுகள் 197 கவிதைகள் 25 கவிஞர்கள் என தேர்ந்தெடுத்து செய்திருக்கிறார்.
முதல் கட்டுரை சமூகம் கவிதை இயங்கியல்
மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆலய நுழைவுப் பிரச்சனையை எதிர்த்து பாகீரதி யம்மாள் என்பவர் கவிதை அநீதி என்றாலும் இப்படி ஒரு எதிர்ப்புக் குரல் இருந்ததை பதிவு செய்கிறார்.
ஆறு பேர் சண்டாளர்களை
அன்புடனே அழைத்துக் கொண்டு
ஒருவருக்கும் தெரியாமல்
உள்நுழைந்தார் திருடனைப் போல
எவ்வளவு விஷமமான பாடல்
பகத்சிங் தூக்கிலிட்ட துயரத்தை தமிழன்பன் நாலே வரிகளில் நறுக்கென்று அதன் கன பரிணாமத்தை சொல்லி விடுகிறார்.
வீரன் பகத்சிங்
தூக்கிலிட்ட போது
கீறல் விழுந்தது
காந்தியின் கண்ணாடியில்
வினோபாவின் பூமிதான இயக்கத்தைப் பற்றிய கட்டுரையும் அதற்கு விமர்சனமாக வைரமுத்து எழுதிய கவிதையும் இடம் பெற்றிருப்பது சிறப்பு.
கனவுப் பயிர் வளரும்
காதல் நிலத்தை
வினோபாவைப் போல்
பிச்சை விருத்தாந்தத்தால்
பெற முடியாது
அது
மார்க்சின் தத்துவத்திற்கே
மசியும்
இன்றைய மும்மொழித் திட்டம் போலவே 1953 களில் ராஜாஜி கொண்டு வந்த குலக் கல்வி திட்டமும் மக்களிடம் கடும் எதிர்ப்பை சந்தித்தது. மக்கள் போராட்டத்தால் மட்டுமே வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடியது. அன்று பாரதிதாசன் பெருஞ்சித்திரனார் கே.சி.எஸ் அருணாச்சலம் எனப் பலரும் கவி பாடினார்கள்.
புதுக் கல்வி கோமாளி கால் சாய்ந்து போனான்
போயொழிந்தான் என்று தலை முழுகிடுவோம் வாரீர்
என்ற முழக்கம் இன்றும் உயிர் இருப்பது ஆச்சர்யமே
தீண்டாமைக் கொடுமையால் பாதிக்கப்பட்ட மீனாட்சிபுரம் மக்கள் கூண்டோடு இஸ்லாத்தை தழுவிய போது நாடே அதிர்ந்தது. அதன் விளக்கமும் தணிகைச்செல்வன் கவிதையும்.
மதங்களின் பல்லக்கு தூக்குவதே
மடங்களின் மரபாகி போனதால்
மீனாட்சி புரங்கள்
மரபுகளை மீறத் துவங்கி விட்டன
மடங்களின் கவலை
மீனாட்சிபுரமல்ல
மதுரை மீனாட்சியே
என்று மதம் மாறுவாளோ
என்பதே
தென்னிந்தியாவின் மான்செஸ்டார் என்று அழைக்கப்படும் கோவையில் ஸ்டேன்ஸ் ஆலைப் போராட்டத்தில் களத்தில் நின்று பாடப்பட்ட ஜீவாவின் இப்பாடல் பின்னாட்களில் போராட்ட கீதமாய் மாறிப்போனது.
காலுக்கு செருப்புமில்லை
கால் வயிற்றுக் கூழுமில்லை
பாழுக் குழைத்தோமடா என் தோழனே
போனோமடா
– ஜீவா
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் சட்டம் வந்தும் இன்னும் தமிழ்நாட்டில் அமுல்படுத்த முடியாத நிலையில், இதற்கான மூலக்கரு திருச்சியில் மன்னார்குடியில் 1970 இல் கருவறை நுழைவுப் போராட்டமும், அதையொட்டி நடைபெற்ற முன்னெடுப்புமே காரணமாகும். இதனை பெருஞ்சித்திரனார் அவர்கள் அழுத்தம் திருத்தமாக கேள்வி தனை கேட்டுள்ளார்.
கோவிலை சமைத்தவர் நாம்
படிம மொன்றை நட்டவர் நாம்
பொன்மணிகள் கோடிக் கோடி
மேவலுற இழைத்தவர் நாம்
ஆண்டுதோறும்
விழாப் பல எடுப்பவர் நாம்
மெய்த் தொண்டென்றே
காவல ராய் அமர்ந்தவர் நாம்
சேர்ப்பவர் நாம்
காப்பவர் நாம்
கடை கெட்ட பார்ப்பான் மட்டும்
தேவனென உட்புகுந்து தின்பதுவோ
தெறிப்பதுவோ
தமிழ்க் குலமே
தெளிவாய் இன்றே
உலகையே அதிர வைத்த
கீழ்வெண்மணி படுகொலை குறித்தான கட்டுரையும் கவிதையும்.
நீங்கள் அடுப்பங்கரையில் நின்று
அரிசி பருப்பு வேக வைப்பீர்கள்
உங்களையே வேக வைப்பதும் உண்டு
ஆம் வெண்மணியில் வெந்ததில்
பெண்மணிகளே அதிகம்
சிதம்பரம் பத்மினி பாலியல் வன்கொடுமை வழக்கும், நீதி பெற்றுத் தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மாதர் சங்கமும் குறித்தான கட்டுரையும் கவிஞர் இந்திரனின் கவிதையும் தன் எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றன.
காவல் நிலையங்களில்
கைத்தடிகள்
பாம்புகளாய் மாறி
சாத்தானின்
ஆப்பிளை சுற்றி
ஊர்ந்து செல்கின்றன
பாம்புகளின்
புராதனப் பசிக்கு
பலியாகின்றனர்
பத்மினிகளும்
சாவித்திரிகளும்
மாணவர் நாவரசு ராகிங்கால் சகமாணவனால் படுகொலை செய்யப்பட்ட கொடூரமான சம்பவமும் நடைபெற்றது. இதன் பிறகு ராகிங் செய்பவர் மீதான கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டன. இச்சம்பவம் குறித்து இரா.மீனாட்சியின் கவிதை
இந்த நூற்றாண்டிலுமா
நாவரசைக்
கல்லினில் பூட்டி
கடலினுள் பாய்ச்சுவார்கள்
இப்படி ஏராளமான சம்பவங்கள் குறித்தான கட்டுரைகளும் கவிதைகளும் இந்த நூற்றாண்டின் துயரங்களை புரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கின்றன. நன்கு திட்டமிட்டு நிகழ்வுகளை தேர்ந்தெடுத்து மிக அருமையாக ஆய்வினை செய்திருக்கிறார். சம்பவத்திற்கு பொருத்தமான ஏராளமான கவிதைகளும் மிகச் சுவாரசியமாக இருக்கிறது. ஆய்வாளர் வீரபாண்டியனின் அறிவு உழைப்பிற்கு வாழ்த்துகள்.
நூலின் விவரம்:
நூல்: இருபதாம் நூற்றாண்டு வரலாறும் கவிதையும்
ஆசிரியர்: வீரபாண்டியன்
ஆண்டு: 2022
பக்கம்: 510
விலை: ரூ.510
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
எழுதியவர் :
செ. தமிழ்ராஜ்
வண்டியூர்
மதுரை
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.