இறுதி பாரம் - சிறுகதை - மணவை கார்னிகன் | (Final burden) Iruthi Bhaaram Tamil Short Story (Sirukadhai) by Manavai Karnikan | https://bookday.in/

இறுதி பாரம் – சிறுகதை

இறுதி பாரம் – சிறுகதை

பழனியம்மாளுக்கு இரவு தூக்கத்தில் பனிரெண்டு மணிமுதல் மூன்று மணிக்குள் எப்போது யேனும் விழிப்பு ஏற்பட்டு விடும்.மகன் முருகேசன் வீட்டில் ஒட்டுத் திண்ணை கூட கிடைக்கவில்லை பழனியம்மாளுக்கு.

வீட்டின் முகப்பு பகுதியில் தாவாரம் போல் இறக்கி விடப்பட்ட தார்ப்பாய்க்குள்தான் பழனியம்மாளின் வாழ்வு. சிறுவயதிலேயே முருகேசனை விட்டுச்சென்ற அப்பாவிற்குப் பிறகு. எல்லாமே அம்மா தான். நிலம், பொருள், பணம், என எல்லாமே கொடுத்த அம்மாவிற்கு தார்ப்பாய்குடில் போதுமானதாக இருந்தது. என்ன செய்ய? எண்ணற்ற ஆண் பிள்ளைகளின் கதி அதுதானே.

தெருவிளக்கு ஒளியில் தன்னால் இயன்ற மங்கிய பார்வையில் தேடி எடுத்துவிட்டாள் கைத்தடியை. மாராப்பு போடவைத்திருந்த ஒரு பாகத்து சீலையை பட்டத்து ராணிபோல் தொங்கவிட்டப்படி வீதிக்கு சென்றாள்.

இரண்டடி மட்டுமே அகலம் கொண்ட வீதியோர சாக்கடையில் தன் கால்களை அகட்டி சட சடவென சிறுநீர் கழிக்க. தேங்கியிருந்த நெகிழி பைகளின் மேல்பட்டு சப்தம் அதிகமானது. நான்கு ஐந்து வீடுகளுக்கு அப்பால். அந்த ஊரில் உள்ள ஒட்டுமொத்த நாய்களும் கூடியிருந்து குறைக்க. பழனியம்மாளுக்கு நறுக்கென்றது.

“சனியம் புடிச்ச நாய்ங்க இப்ப என்னத கண்டுருசங்களாம்? இந்த கொள கொளைக்குதுங்க”

பயத்தில் சிறுநீர் கழித்துக் கொண்டே செல்ல. தரை கூட்டிய சீலையை வேகவேகமாக மார்புக்கு கிடத்தினாள். தட்டு தடுமாறி கட்டிலில் அமர்ந்து வெற்றிலை பையை எடுத்தாள். இரண்டு வெற்றிலையின் காம்பைக்கிள்ளி தூரம் எறிந்துவிட்டு அதில் ஒரு துணுக்கு சுண்ணாம்பு, ஏற்கெனவே உடைத்து வைத்த கொட்டப்பாக்கின் நான்கில் ஒன்றை சேர்த்து உரலில் இடிக்க ஆரம்பித்துவிட்டாள். கூடவே நீண்ட நாள் கவலையையும் சேர்த்து அந்த உரலில் இடித்துக் கொண்டிருப்பாள்.

“ஏறாத மல இல்ல
வேண்டாத தெய்வமில்ல
தவமா தவமிருந்து
இந்த ஒத்த பையள பெத்தேன்”

இவளுக்கு ஒரு புழு பூச்சிய கூட இல்லையே
தாயீ பாப்பாத்தியம்மா.

என்று புலம்ப ஆரம்பித்து முப்பது ஆண்டுகள் கடந்துவிட்டது.

பழனியம்மாளுக்கு திருமணமாகி பத்து பதினைந்து வருடங்களுக்கு பிறகுதான் முருகேசன் பிறந்திருப்பான் என்று. யூகித்துக்கொள்ளுங்கள் அல்லது அதற்கு மேலும் இருக்கலாம். உரலில் இடித்த வெற்றிலை கலவையை வாயில் போட்டுக்கொண்டாள். நாய்களின் சப்தங்கள் இப்போது முருகேசன் வீட்டை நோக்கி வருகிறது.பழனியம்மாள் காதுகளை உயர்த்தி கேட்கிறாள் குறைத்தலுக்குள் ஊடுருவி வருகிறது.
ஜாம கோடங்கியின் உடுக்கை சப்தம்.

வாயில் போட்ட வெற்றிலையை துப்பிவிட்டு கட்டிலில் சரிந்தாள்.

நல்லகாலம் பொறக்குது
நல்லகாலம் பொறக்குது
தொட்டிச்சி அம்மனால
நல்ல காலம் பொறக்குது
ஜக்கம்மா காளி சொல்றேன்
நல்லகாலம் பொறக்குது
மனை ஆழ மகாராஜெ வர போரான்.

சிறிது நேரத்தில் உடுக்கை சப்தமும் நாய்களின் குறைத்தல் சப்தமும் தூரம் செல்கிறது.பழனியம்மாள் ஆழ்ந்து தூங்குகிறாள். இறுதி பாரம் இறங்க போகிறதென்று. அவன் சொன்ன குறியில் எத்தனைஉண்மைத் தன்மை உள்ளதென்பது ?????

 

எழுதியவர்:

– மணவை கார்னிகன்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *