பி சாய்நாதின் “இறுதி நாயகர்கள்”

Bookday Avatar
iruthi nayakargal இறுதி நாயகர்கள்
அதிகாரத்தில் இருப்பவர்களால், ஆட்சியில் இருப்பவர்களால், திட்டமிட்டே இந்தியாவின் மதச்சார்பற்ற மாண்பை உலக அளவில் சீர்குலைக்கும் வேலை 22.01.2024  அன்று உத்திரப் பிரதேசத்தில் நடைபெற்றது. இந்தியாவின் பல மாநிலங்களில் அரசு அலுவலகங்களுக்கு கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டது.  பள்ளிகள் மூடப்பட்டன. மருத்துவ மனைகளின் கதவுகள் இழுத்து பூட்டப்பட்டன. பிணங்கள் கூட எரியூட்டப்படவில்லை, புதைக்கப்படவில்லை.. இறந்து போனார் என்கிற சேதி கூட அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கோ உறவுகளுக்கோ சொல்லி அனுப்பப்படவில்லை. எளிய மக்களின் கடவுள் நம்பிக்கையில் ராம நாமத்தின் போதை கரைக்கப்பட்டு  பிரதிஷ்டையன்று வட மாநிலங்களில்  இறந்த உடல்களின் அழுகிய நாற்றத்தில் அத்தர் தடவி நாட்டு மக்கள் அனைவரின் நாசிகளுக்குள் வலுக்கட்டாயமாக செலுத்தினார்கள். இட்டுக் கட்டப்பட்ட பொய்களின் மேல் நின்று, பெரும்பான்மை மதத்தின் பெயரால் கொலையான மனித எலும்புக் கூடுகளை அடுக்கி இரத்தக் கவிச்சையடிக்கும் கோபுரம் எழுப்பப் பட்டது. ஜெய் ஶ்ரீராம் உச்சரிக்கப்பட்டது.  ஏற்றுக்கொள்ளாதவர்களின் மௌனம், தொடர் நேரடி ஒளிபரப்பால் பலாத்காரத்திற்கு உள்ளாகி சம்மதம் என அறிவித்தது. பெரும்பான்மையான ஊடகங்களும் அதிகாரத்தில் இருப்பவர்களின் கால்களை பயந்து நக்கின. அதிகாரத்தின்  விஷம் மிகுந்த போதை உடலின் ரத்த  நாளங்களெங்கும்  ஊறித் தெறித்தது.
இந்தியாவின் மதச்சார்பற்ற மாண்பு, பாபர் மசூதி இடிப்பில் சூறையாடப்பட்ட நிஜங்களை நாம், நம் ஒவ்வொருவரின் குடும்பத்திலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமும் பேச வேண்டும், விவாதிக்க வேண்டும். செய்யத் தவறுவோம் என்றால் இப்பொழுது நடந்து கொண்டிருப்பதே நிஜம் என்று எழுதப்பட்டு வரலாறு முடித்து வைக்கப்படும் ஆட்சியாளர்களால்.
இதையே கல்விக்கூடங்கள் உள்ளிட்ட பார்க்கும் இடங்களெங்கும் பாடங்களாக மாற்றி இருப்பார்கள்; படங்களாக வைத்திருப்பார்கள். தேடுதலை தொலைத்த, மறந்த அல்லது மறக்கடிக்கப்பட்ட  எதிர்காலம் இதைத்தான் உண்மை என நம்பிக் கொண்டிருக்கும்.
இறுதி நாயகர்கள் (இந்திய சுதந்திரத்தின் முன்னணி வீரர்கள்) புத்தகத்தை வாசித்து அறிமுகப் படுத்த யோசிக்கும் பொழுது, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் அன்றைக்கு இருந்த காவல்துறையால் “ரவுடி கிராமம்” என்று அழைக்கப்பட்ட, பல நூறு பேரை இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு அள்ளிக் கொடுத்த ஒரிசா மாநிலத்தின் பனி மொரா கிராமம் ஞாபகத்திற்கு வருகிறது.. பூங்கா ஒன்றில்  நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிற சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் நினைவுத் தூண் ஞாபகத்திற்கு வருகிறது.. அந்தத் தூணில் எழுதி இருக்கும் பெயர்கள் ஞாபகத்திற்கு வருகின்றன..  மாநில அரசும், நிர்வாகமும் போராட்டத்தில் ஈடுபட்ட  வீரர்களின் பெயர்களை எழுத மறந்ததும், மறுத்ததும் ஞாபகத்திற்கு வருகிறது.  அந்த நினைவுத்தூண் அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த பள்ளி மாணவர் ஒருவரை “இந்த பெயர்கள் யாருடையது” என்று நூலின் ஆசிரியர் கேள்வி கேட்க அதற்கு அந்த மாணவர் “யாரோ முக்கியமானவங்க பெயர்களாக இருக்கும்” என்று பதில் சொல்வதும் ஞாபகத்திற்கு வருகிறது.  பிரிட்டிஷ் அரசை எதிர்த்த வீரம் செறிந்த போராட்டத்தையும், உள்ளூரில் ஆதிக்க சாதிகளுக்கு எதிரான தீண்டாமை கொடுமையை எதிர்த்து நடத்திய தொடர் போராட்டத்தையும் எதிர்கால இளைய தலைமுறையினருக்கு கடத்தாமல் இருந்ததன் விளைவே அந்த மாணவனின் பதிலாகும்.
இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனிக்கு எதிராக பிரிட்டிஷார் படை திரட்டிய பொழுது, இந்தியாவின் சிறைகளிலிருந்தும் ராணுவத்திற்கு ஆட்களை திரட்டினார்கள் பல பொய்யான வாக்குறுதிகளை அளித்து. பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக, தாங்கள் தங்கியிருந்த சிறையில் எதிர் பிரச்சாரம் செய்து பிரிட்டிஷ் படைக்கு ஆட்களை அனுப்ப மறுத்தவர்கள் தான் பனி மொரா என்கிற அந்த “ரவுடி கிராமத்தின்” சுதந்திரப் போராட்ட வீரர்கள், தியாகிகள்.
இந்திய நாட்டின் விடுதலையை, தலைமை தாங்கி வழிநடத்திச் சென்ற ஒரு சில தலைவர்களின் தியாகங்களோடு நாம் முடித்துக் கொள்கிறோம். ஆனால் இந்தியா முழுவதிலும் இருக்கக்கூடிய எளிய மக்களின் எழுச்சி மிகுந்த வீரம் செறிந்த, தன்னலமற்ற போராட்டத்தின் அடையாளமே சுதந்திர இந்தியா. 1947 க்கு முன் கடைசி 10 ஆண்டுகள் என்பது இந்தியா முழுவதிலும் எளிய மக்களின் ரத்தச் சூடு நிறைந்த போராட்டங்களின் மகத்துவம் நிறைந்தது. போராட்டத்தை வழி நடத்திய  தலைவர்களின் அறைகூவலை ஏற்று, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், தன்னலம் கருதாமல், தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமல், பிரிட்டிஷ் காவல் துப்பாக்கிகளுக்கு எதிராக நெஞ்சை நிமிர்த்தி வாழ்ந்து மடிந்த விவசாயிகள், தொழிலாளர்கள், பல லட்சம். அப்படி வாழ்ந்தவர்களின் வரலாறுகளை, போராட்டத்தில் ஈடுபட்டு இன்னும் உயிர் வாழ்ந்து வரும் நம் சுதந்திரத்தின் முன்னோடிகளை, தேடி அலைந்து, அவர்களின் அனுபவங்களை கேட்டு எழுத்தில் வார்த்து, நம் வருங்கால சந்ததியர்கள் தெரிந்து கொள்ளச் செய்வதே  நம் இருப்பின் கடமையாகும்.
எவரும் செய்யாத, அல்லது செய்ய மறந்த ஆகச் சிறந்த பணியினை, கடந்த 20 வருடங்களாக இந்தியா முழுவதிலும் சுற்றி அலைந்து, வாழ்ந்து வரும் நம் முன்னோடிகளின் விலாசம் பெற்று, நேரில் சென்று அவர்களோடு உரையாடி, செய்து முடித்திருக்கிறார் இந்த நூலின் ஆசிரியர்.
அவர்களின் போராட்ட அனுபவங்களையும், சுதந்திர இந்தியாவில் அந்த மாமனிதர்களின் இன்றைய நிலைகளையும், அவர்களின் கனவுகளையும் பதிவாக்கி கொடுத்திருக்கிறார் தேர்ந்த அனுபவம் மிகுந்த பத்திரிகையாளர் சாய்நாத் அவர்கள்.
புலியை முறத்தால் விரட்டியடித்த தமிழ்ப் பெண்களின் வீரத்தை நாம் கதை நூல்களில் வாசித்திருக்கிறோம்.. அப்படி நிகழ்ந்ததா இல்லையா என்பதை நாம் அறியோம். ஆனால் நிஜத்தில் துப்பாக்கி ஏந்திய பிரிட்டிஷ் காவல்துறை ஒரிசா மாநிலம் சாலிஹான் என்ற கிராமத்தில் எவரும் எதிர்பாராத நாளொன்றில் புகுகிறது.  விடுதலை நெருப்பு சுடும் அந்த கிராமத்தின் ஆண்களை வீதியில் இழுத்துப் போட்டு அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனை கேள்விப்பட்ட பெண் ஒருவர் வயல்வெளிகளை நாசப்படுத்தும் காட்டு விலங்குகளை விரட்டியடிக்க உதவும்  லத்தி ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருக்கக் கூடிய பெண்கள் அனைவரையும் திரட்டிக் கொண்டு பிரிட்டிஷ் காவல்துறை கண்மூடித்தனமாக நடந்து கொண்டிருக்கும்  இடத்திற்கு வருகிறார். அங்கே பிரிட்டிஷ் காவல்துறையிடம் அடி வாங்கிக் கொண்டு இருப்பது தன் தந்தையும் இன்னும் பிற ஆண்களும் என்பதை அறிந்து கொண்டு கைகளில் இருக்கும் லத்தியைச் சுழற்றிக்கொண்டு காவலர்களை அடிக்கத் துவங்குகிறார்.  அதைப் பார்த்த அவரோடு வந்திருந்த மற்ற பெண்களும் அவரைப் போன்றே லத்தியைச் சுழற்றி வந்திருக்கக் கூடிய காவலர்களை ஓட ஓட விரட்டி அடிக்கிறார்கள். காவல்துறையின் கைகளில் துப்பாக்கி இருக்கிறது என்பது தெரிந்தும் இப்படியான செயல்களில் அந்தப் பெண்கள் ஈடுபட்டது வெறும் கோபத்தினால் மட்டும் கிடையாது. அவர்கள் உள்ளத்திற்குள் இருந்த இந்த நாட்டின் விடுதலைக்கான வேட்கையும் ஆகும்.  இதை நிகழ்த்திக் காட்டிய அந்தப் பெண்ணின் பெயர் தெமத்தி தெய் சபர்..
அன்று அந்தப் பெண் நடத்திய மரணத்திற்கும் அஞ்சாத போராட்டம் தான் அந்தக் கிராமத்தின் அத்தனை ஆண் பெண்களையும் சுதந்திரப் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட வைத்தது.  உப்புச் சத்யாகிரகமும் வரிகொடா இயக்கமும் அந்த பகுதியில் பெரும் வீச்சில் நடைபெற்றது.
பெரும் சோகம் என்னவென்றால்  சுதந்திரப் போராட்டத்தின் வரலாறு குறித்து ஒன்றிய அரசின் எந்தப் பதிவிலேயும் சாலிஹான் கிராமத்தில், சுதந்திரப் போராட்டக் களம் கண்ட தெமத்தி தெய் சபர் பெயரும் அவரின் அப்பாவின் பெயரும் இடம் பெறாமலேயே அமைதியாக்கப்பட்டிருக்கிறது.  அந்த நினைவுத்தூணைத் திறப்பதற்கு சிறப்பு அழைப்பாளராக அவர்தான் அழைக்கப்பட்டிருந்தார் என்பதும் நிஜம். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகளின் பெயரோடு தன் பெயர் இல்லையே என்கிற ஏக்கம் ஒரு நாளும் அவருக்கு வந்தது கிடையாது. ஏனென்றால் அந்த எளிய மகள் தனக்காக அந்தப் போராட்டத்தை நடத்தவில்லை. நம் நாட்டுக்காக நடத்தினார். எப்பொழுதுமே  அந்த எளிய மக்கள் தங்களை முன்னிலைப்படுத்திக்கொண்டு போராட்டத்தை நிகழ்த்தியது கிடையாது. தம் குறித்து மற்றவர்கள் பேச வேண்டும் என்கிற எண்ணமும் அவர்களுக்கு கிடையாது. விடுதலைப் போரை விடாது தொடர்ந்து நடத்துவதைத் தங்கள் அனைவரின் கடமையாக நினைத்தார்கள்.
மனசு முழுவதும் இளமையின் வீரத்தைக் கொண்டிருந்த  அந்தப் பெண்  நூறாவது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் பொழுது சத்தம் இல்லாமல் அமைதியானார்.. அவருடைய தகப்பனாரும் தற்பொழுது உயிரோடு இல்லை. ஆனால் அவர் அந்தக் கிராமத்தைச் சுற்றி இருக்கக்கூடிய அத்தனை கிராமங்களிலும், அந்த மக்கள் மனதிலும், போராளியாக நீக்கமற வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவரை அறிந்தவர்கள் அவரின் தியாகம் குறித்து இளைய தலைமுறையினருடன் பேசாததின் விளைவை அந்த கிரிக்கெட் விளையாடும் மாணவன் வழியாக நமக்கு உணர்த்துகிறார் ஆசிரியர்.
சாலிஹானின் போராட்ட வரலாறுகளை, பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களை, இறுதி நாயகர்கள் வாசிக்கும் பொழுது நீங்களும் உணருவீர்கள். நம் உடம்பின் ரத்தம் சூடாகி கொஞ்ச நேரம் அழும்.
பஞ்சாபின் ராம்கர் கிராமம், வீட்டின் முற்றத்தில் 94 வயதான அந்த முதியவரின் உடல் கிடத்தப்பட்டிருக்கிறது.
உடலின் மேல் செங்கொடி போர்த்தப்பட்டிருக்கிறது. முற்றத்திற்கு வெளிப்புறத்தில் ராம்கர் கிராமத்தின் சுற்றுப் பக்கத்தில் இருக்கக்கூடிய அனைத்து கிராமங்களிலிருந்தும் அருகில் இருக்கும் நகரங்களில் இருந்தும் ஆயிரம் ஆயிரம் விவசாயிகளும் தொழிலாளர்களும் எளிய மக்களும் ஒன்று கூடி அவருக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்கள் முழங்கிய முழக்கத்தின் சொற்கள் இயல்பாக அடிவயிற்றின் ஆழத்திலிருந்து ஓங்கி ஒலித்தது..
“பிரித்தானியா ஒழிக.. இந்துஸ்தான் வாழ்க”.
1938 ஆம் வருடம் அந்த கிராமத்தின் பள்ளி மாணவர்கள் அனைவரையும் ஓர் இடத்தில் கூடச் செய்து இருக்கிறார்கள், பள்ளி நிர்வாகத்தினர், அதிகாரிகள்.
முன்ஷி என்கிற பெயர் கொண்ட அந்த அதிகாரி  அங்கிருக்கும் ஒரு மாணவனை அழைத்து அன்பளிப்பாக நாணயம் ஒன்றை கொடுத்து, “பிரித்தானியா வாழ்க.. ஹிட்லர் ஒழிக.!’ என முழங்கச் சொல்லி இருக்கிறார்.  நாணயத்தை வாங்கிய அந்த 11 வயது மாணவன் முன்ஷியின் முகத்தை நிமிர்ந்து அவரின் கண்களை நேர் எதிர் பார்த்து அவரிடம் இருந்து பெற்ற நாணயத்தை வீசி எறிந்து “பிரித்தானியா ஒழிக.. இந்துஸ்தான் வாழ்க.!” என்று முழக்கமிடுகிறான்.. இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத அந்த அதிகாரி மிரண்டு போய்.. கோபம் தலைக்கேற அருகில் இருந்த முசுக் கொட்டை பிரம்பு கொண்டு
அவனை வெளுத்து வாங்கி அவனின் பற்களை உடைத்திருக்கிறார். அந்த மாணவன்தான் மூன்றாவது படிக்கும் 11 வயது சிறுவன் “இளம் பகத்சிங் ஜுக்கியான்”.
இளம் வயதில் மனதில் கொழுந்துவிட்டு எரிந்த சுதந்திர வேட்கை,  எளிய மனிதர்களின் விடுதலை வேட்கையை,  2022 மார்ச் 13 , பகத்சிங் ஜுக்கியான் மரணிக்கும் தருவாய் வரை, விடுதலை இந்தியாவிற்குள் அவரின் எல்லா செயல்பாடுகளிலும் பார்க்க முடிந்தது.
சுதந்திரப் போராட்ட வரலாற்று பக்கங்கள் எதிலுமே, எல்லோரும் அறியும்படி “பகத்சிங் ஜுக்கியான்” பெயரும் பதிவாகாமல் கவனமாக பார்த்துக் கொண்டது அதிகாரத்தில் இருப்பவர்களின் சூட்சமம்.
இந்திய விடுதலை அறிவிக்கப்பட்ட அந்த 1947 .. இந்திய பாகிஸ்தான் பிரிவினை.. எல்லையில் நடைபெற்ற பெரும் துயரம்.. இந்துக்களும் முஸ்லிம்களும் மத வெறியர்களால் கொல்லப்படுகிறார்கள். பெண்கள் பாலியல் பலாத்காரங்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். குழந்தைகளின் கழுத்துகள் அறுபடுகின்றன..
அப்பகுதியில் இருக்கும் முஸ்லிம் மக்களைப் பாதுகாக்க திறமையாக செயல்பட்டு பல மனித உயிர்களுக்கு அரணாக நின்றவர்  இளம் பகத்சிங்.
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்று பக்கங்களில் தெலுங்கானா மக்களின், கம்யூனிஸ்டுகளின் போராட்டத்திற்கு என்று மிக நிறைய பக்கங்கள் இருக்கின்றன.  அந்தப் பக்கங்களை அறிய முற்படும்பொழுதெல்லாம்  நாட்டு வெடிகுண்டுகளின் வாசமும் துப்பாக்கி வெடிப்பின் புகையும்  நம் நாசித் துவாரங்களைத் தீண்டிச் செல்லும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்ததோடு, மலபார் போலீசையும் நிஜாம்களையும் அவர்களின் ராஜாக்கர்களையும்  எதிர்த்து நடத்திய போராட்டங்கள் பல.  விடுதலை பெற்ற பிறகும் சுதந்திர இந்தியாவிலும் அவைகள் தொடர்ந்ததுதான் பெரும் வீரம் மிகுந்த போராளிகளின் வரலாறு..  சோகம் நிறைந்த பக்கங்கள். பிரிட்டிஷ் ராணுவம் செய்த கொடுமைகளுக்கு இணையாக இந்திய ராணுவமும் செய்து முடித்தது பல கொடுமைகளை,  சுதந்திர இந்தியாவில். நேருவின் அதிகாரம், போராடிய மக்களுக்கு எதிராக துப்பாக்கியை நிறுத்தியது.  நில உடமையாளர்களின் வாழ்வினை பாதுகாப்பதற்காக இந்திய ராணுவத்தை அனுப்பியது தொடர்ந்தது அங்கே. அதிகாரத்தின், ஆட்சியின் முகம் மட்டுமே மாறியது ஆனால் சிந்தனைகளும்  இதயமும் ஒன்று போல் தான் இருந்தது.
ரத்தத் தகிப்பு நிறைந்த அம்மண்ணில், மல்லு ஸ்வராஜியம் என்ற மாபெரும் போராளியின் நிஜ வாழ்க்கையை போராட்ட அனுபவங்களை எழுத்தாளர், பத்திரிக்கையாளர் சாய்நாத் அவர்கள் நேரில் சென்று அவரோடு பேசி  பதிவாக்கி இருக்கிறார். உண்டிவில் என்கிற சாதாரண மக்களின் ஆயுதம் கொண்டு துப்பாக்கி ஏந்திய போலீசாரையும் ரவுடிகளையும் விரட்டியடித்த நிஜங்களைப் பேசி இருக்கிறார். சுதந்திரப் போராட்ட காலங்களில், காவல் நிலையங்களைக் கைப்பற்றி ஆயுதத் தளவாடங்களை எடுத்து வந்ததையும் காவலர்களை மிரட்டி அமைதியாக்கியத்தையும் பதிவாக்கியிருக்கிறார். துப்பாக்கியைத் தோளில் சுமந்த போராளியாக, காடுகள் மலைகள் விவசாய நிலங்கள் என அலைந்து திரிந்து மலை மக்களின் விவசாயிகளின் பாதுகாவலாளியாக வாழ்ந்து வந்த போராட்ட வரலாறுகளை பேசியிருக்கிறார்.  வைக்கோல் உருண்டைக்குள் மிளகாயை வைத்து எரித்து புகையை ஆயுதமாக்கி காவல்துறையை, ராஜாக்கர்களை செயல் இழக்கச் செய்த நிஜங்களைப் பேசியிருக்கிறார். சாராயம் காய்ச்சும் ரவுடிகளுக்கு எதிராக பெண்களைத் திரட்டி போராட்டம் நடத்தியதை பேசி இருக்கிறார்.  ஆணாதிக்கத்துக்கு எதிராக தொடர்ந்து பெண்களைத் திரட்டிப் போராட்டம் நடத்திய வரலாற்று உண்மைகளை பேசியிருக்கிறார். பாலியல் வன்கொடுமை செய்த ஆண்களின் குறி அறுத்து வழங்கிய தண்டனைகளின் அவசியம் குறித்து  பேசியிருக்கிறார். இந்திய மக்கள் அனைவரின் நலனும் மேம்பட வேண்டும் என்றால் போராட்டம் ஒன்றே அதற்கான வழி என்பதை ஓங்கி உரக்க பேசியிருக்கிறார்.  தன்னலம் கருதாமல் பொதுநலத்தோடவே தன்னுடைய வாழ்க்கையை நேர்படுத்தி  97 வயது வரை வாழ்ந்த மல்லு ஸ்வராஜ்யம் பற்றி பத்திரிகையாளர் அவர்கள் எழுதியதை வாசிக்க வாசிக்க நமக்குள்ளும் ரத்தம் சூடாகி நரம்புகள் முறுக்கேறும்.
1942 ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்குப் பிறகு,
போராட்டத்தின் இன்னொரு முகமாக மகாராஷ்டிரா சங்கிலி குண்டால் பகுதியைச்  சுற்றி இருக்கக்கூடிய 600 கிராமங்களிலும் பிரிட்டிஷ் அரசிடம் இருந்து நம்முடைய சுதந்திரம் மீட்கப்பட்டதாக அறிவித்து தனி ஆட்சி நடைபெற்றது.. பெரிய பகுதியாக இருந்த சத்ராவில் ஒரு தனித்துவமான அரசாங்கமே நடைபெற்று இருக்கிறது அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு இணையாக.
இதை நிகழ்த்திக் காட்டியது “டுபான் சேனா” (சூறாவளி ராணுவம்) என்கிற புரட்சிக் குழு.
73 வருடங்களுக்கு முன் புனே மிராஜ் ரயில் மீது தாக்குதல் நடத்திய கேப்டன் பாவு மற்றும் ராமச்சந்திரா ஸ்ரீபதி லாத் குழுவினர் பிரிட்டிஷ் அரசு தனது ஊழியர்களுக்காக கொண்டு சென்ற பணத்தை மீட்டு டுபான் சேனா அரசாங்கத்திடம் ஒப்படைத்து இருக்கிறார்கள். கற்குவியலும் அருவாளும் மட்டுமே ஆயுதமாக.. ஓடும் ரயிலை நிறுத்தி பணத்தை மீட்டு இருக்கிறார்கள் தம் அரசாங்கத்தின் கீழ் வாழும் குடிகளின் தேவைக்காக.
சிறைக்குச் செல்லாமல், துப்பாக்கி கையாளத் தெரிந்தும், ஒரு தோட்டாவைக் கூட வெளியேற்றாமலும் சுதந்திரப் போராட்ட வீராங்கனையாக லட்சுமி பாண்டே ஒடிசா கோராபுட் ஜெய்ப்பூர் பகுதியில் இருந்து, சுபாஷ் சந்திர போஸின் இந்தியத் தேசிய ராணுவத்தில் தன்னுடைய 15 வயதினிலேயே அங்கத்தினராக இணைந்து செயல்பட்டு இருக்கிறார். காடுகள் முழுவதும் சுற்றி அலைந்திருக்கிறார்..  சிறையில் இல்லை என்கிற ஒரே காரணத்திற்காக அவரை சுதந்திரப் போராட்ட வீரர் என்று ஏற்க மறுக்கிறது ஒன்றிய அரசு.. தற்போது அவர் பல வீடுகளில் சமையல் வேலை பார்த்து, பாத்திரங்கள் கழுவி, கடை நிலை ஊழியராகப் பணியாற்றி தன்னுடைய வாழ்நாளின் இறுதி அத்தியாயத்தில் இருக்கிறார்.  துயரம் கொண்ட வாழ்வினை வாழ்ந்து வருகிறார், ஆனாலும் மனசெங்கும் சுதந்திரப் போராளி என்கிற மகிழ்வோடு.
இப்படி எண்ணற்ற சுதந்திரப் போராட்ட தியாகிகள் இந்தியா முழுவதிலும்..
ஒவ்வொரு சுதந்திர போராட்ட வீரருக்குப் பின்னாலும் ஆயிரம் ஆயிரம் தியாக நிஜங்கள் புதைந்து கிடக்கிறது இந்திய நாட்டின் விடுதலைக்காக..
பத்திரிகையாளர் சாய்நாத் அவர்கள் பார்க்கச் சென்ற அந்த முன்னோடிகள் 16 பேருமே உயிரோடு இருந்திருக்கிறார்கள்.. வாழ்வின் கடைசி காலத்தை எல்லோரும் நெருங்கிக் கொண்டு.. தமிழில் இந்த புத்தகம் வெளிவரும் பொழுது தமிழகத்தில் தோழர் சங்கரய்யா உட்பட பலர் மரணம் அடைந்திருக்கிறார்கள்..
பத்திரிகையாளர், அவர்களை சந்தித்து பேட்டி எடுக்கும் போதெல்லாம் இந்தியாவின் பல இடங்களில் இருந்தாலும் எல்லோரும் சொல்லி வைத்த மாதிரி ஒரு விஷயத்தை பேசி இருக்கிறார்கள்.. மிகவும் தன்னடக்கத்தோடு “நாங்கள் எதுவுமே செய்யவில்லை” என்று.. “எங்களின் கடமையை செய்தோம்” என்று.. “இந்திய நாடு எல்லை மண் பரப்பளவில் விடுதலையானது ஆனால் இந்திய மண்ணில் வாழும் எளிய மக்களுக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லை” என்று.. “சுதந்திர இந்தியாவில் எல்லோருக்கும் நன்மை பயக்கும் என்றிருந்தோம்.. ஆனால் இங்கு எல்லாமே தலைகீழாக இருக்கிறது” என்று..
விரல் நுனி அளவிற்குக் கூட சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொள்ளாதவர்களின் தலைமையில் இன்றைக்கு ஒன்றிய அரசு. இந்தியாவின் இறையாண்மைக்கும் மதச்சார்பின்மைக்கும் ஆபத்து தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்திய மக்கள் பெரும்பாலானோர் ஒவ்வொரு நாளும் ஏழ்மை நிலைக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  உழவுக்குடி மக்கள் நாடு எங்கும் கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்டு வருகிறார்கள். நிச்சயம் இவைகள் எல்லாம் ஒரு நாள் மாறும். அந்த ஒரு நாள் மக்கள் அனைவரும் விடுதலை நாட்டில் இன்னொரு சுதந்திரத்திற்காக ஒன்று கூடியிருப்பார்கள்.. அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.. சாதாரண மக்கள் எல்லோரின் போராட்டமும் இதைச் சாத்தியப்படுத்தும்.. இன்றைய நாளில் இந்த நாட்டின் மாறி இருக்கும் முகத்தில் உழைக்கும் மனிதர்களின் அடையாளத்தை பார்க்கலாம்.
இவைகளை உள்ளடக்கமாக்கி சுதந்திர போராளிகள் ஒவ்வொருவரும் அவரவருக்கான மொழியில் பேசி இருக்கிறார்கள்.
75 ஆம் ஆண்டில் இந்தியாவின் விடுதலையை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்..  நாம் வசிக்கும் பகுதிகளில் கிராமங்களில் சுதந்திரப் போராட்ட வீரர்களும் தியாகிகளும்
வயது முதிர்ச்சி பெற்று வாழ்ந்து கொண்டிருக்கலாம்.  நேர்மையோடும் கண்ணியத்தோடும் எவர் ஒருவரின் உதவியை நாடாமலும் தான் சுதந்திரப் போராட்ட வீரர் என்பதை சொல்லிக் கொள்ளாமலும் தன்னடக்கத்தோடு இருந்து வரலாம்.. நம்முடைய அக்கறை மிகுந்த தேடுதல் மட்டுமே அவர்களை வெளியே கொண்டு வரும்.
பத்திரிக்கையாளர் சாய்நாத் அவர்கள் எழுதிய இந்த நூல் நம் அனைவருடைய வீட்டிலும் வாங்கி பாதுகாக்கப்பட வேண்டிய நூல். எல்லோராலும் வாசிக்கப்பட வேண்டிய நூல். வாசித்ததை வெளியே பேசி கொண்டாடுவதற்கான ஒரு நூல்.
ஒன்றிய அரசு அவர்களை அங்கீகரிக்க மறுத்தாலும் நாம் அவர்களை கௌரவப்படுத்துவோம். அப்போராளிகளின் தியாகத்தைப் போற்றுவோம்.  அது மட்டுமே அந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் தியாகிகளுக்கும் நாம் செலுத்தும் மரியாதையாகும்.
இந்த நூலைச் சிறப்பான முறையில் ஆசிரியர் எத்தகைய உணர்வுகளோடு சொல்ல வந்தாரோ, அதே உணர்வை தமிழ் வாசகர்களுக்கும் கடத்தி இருக்கும் மொழிபெயர்ப்பாளர், அன்புத் தோழர், ராஜ சங்கீதன் அவர்களுக்கும் வாழ்த்துகள்.
மிகச் சரியான நேரத்தில் இந்தப் புத்தகத்தைத் தமிழில் வெளியிட்ட பாரதி புத்தகம் வெளியீட்டு நிறுவனத்திற்கும் நிறைய அன்புகள்.

                                   நூலின் தகவல் 

நூல்                         : “இறுதி நாயகர்கள்”  (இந்திய சுதந்திரத்தின் முன்னணி வீரர்கள்)
ஆசிரியர்             : பி சாய்நாத் 
தமிழில்                 : ராஜ சங்கீதன்
தொடர்புக்கு     :  44 2433 2924
பக்கங்கள்          : 296
விலை: ரூ.290/-
                                 
                       எழுதியவர் 
May be an image of 1 person and beard
              கருப்பு அன்பரசன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 2 responses to “பி சாய்நாதின் “இறுதி நாயகர்கள்””

  1. கரூர் சண்முகம் Avatar

    இன்று பாசிச அராஜக ஆட்சியை எழுச்சியோடு எதிர்க்க நம் கிராமப்புற மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய புத்தகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

article Arul Narerikkuppam Venugopal Audio ayesha era natarasan Ayesha natarasan bharathi books Bharathi Publications Bharathi puthakalayam bharathi tv BJP Book day Bookday book review bookreview books Books Catalogue books for children catalogue children children story cinema corona virus coronavirus Covid -19 delhi education Era Ramanan Farmers Farmers Protest history India internet classroom interview kavithai Life Love mother Music Music life N.V.Arul narendra modi novel Online education People's Democracy poem Poems Poetries poetry Prof.T.ChandraGuru S.V. Venugopalan science Short Stories Shortstories short story Shortstory Speaking Book story Storytelling competition Suganthi Nadar Synopsis tamil article tamil books tamizh books thamizh books thamizhbooks Translation VeeraMani video web series கவிதை

Red Book Day 2024 in Tamilnadu