இறுதி நாயகர்கள் (Iruthi Nayakargal) – நூல் அறிமுகம்
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பெரிதாக அறியப்படாத போராட்ட வீரர்கள் பற்றிய செய்திகளை எழுச்சியூட்டும் வகையில் பத்திரிக்கையாளர் பி. சாய்நாத் அவர்கள் இந்த புத்தகத்தில் கூறியுள்ளார். சாதாரண மக்களின் வீரமும் தியாகமும் தெரிந்து கொள்ள கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டிய புத்தகம் இது. நம் சுதந்திரத்திற்காக செய்யப்பட்டிருக்கும் தியாகங்களும் அவற்றின் பின் இருக்கும் வீரமும் தெரியாமல் வளர்ந்து கொண்டிருக்கும் பள்ளி குழந்தைகளுக்கு இப்புத்தகம் அவசியம்.
அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களிடம் கண்ட விரிவான நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டு இப்புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. அந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் அக்காலத்திய சூழ்நிலை, போராட்டக் களங்களில் பங்கேற்ற விதம், தோல்வி அடையும்போது அதை ஏற்றுக் கொள்கிற மனோபாவம், விடுதலை பெற்றதும் தாங்கள் வாழ்ந்து கொண்டிருக்க கூடிய இந்த சமூகம் உண்மையிலேயே சுதந்திரமாகத்தான் இருக்கிறதா என்பது குறித்து எல்லாம் அவர்கள் பார்வையில் அப்படியே பதிவு செய்து தந்திருக்கிறார் பி சாய்நாத் அவர்கள்.
மொத்தம் 16 கட்டுரைகள். ஒவ்வொன்றும் 20 பக்கத்திற்கு மேல் நீள்கின்றன.
இப்புத்தகத்தின் அறிமுகத்தை காந்தியின் ஒரு கடிதத்தில் இருந்து தொடங்குகிறது
“உலகின் புரட்சிகளுக்கு பெருமைக்குரிய மனிதர்கள் காரணமாக தோன்றலாம். உண்மையில் மக்கள் தான் அதற்கு காரணம்”.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த “ஹௌசா பாய் “என்கிற பெண்மணியின் தியாக வரலாறு.
மகாராஷ்டிரா மாநில அரசால் அதிகம் கொண்டாடப்படாத ஏறக்குறைய மறந்தே விட்ட ஒரு பெண்மணியின் சுதந்திர போராட்ட வாழ்க்கை வரலாற்றை இந்த கட்டுரை கூறுகிறது.
இந்தப் பெண்மணி தன்னுடைய சகோதரன் மூலம் ஒரு காவல் நிலையத்திற்கு முன்பாக கணவன் மனைவி போல் நடித்து (கடுமையாக சண்டையிட்டு)அங்கு இருக்கும் துப்பாக்கிகள் மற்றும் ஆயுத பொருட்களை களவாடுவதற்கு எப்படி துணை புரிந்தார் என்பதையும் பிரிட்டிஷார் தங்கும் குடில்களை எல்லாம் எரிப்பதற்கு உளவாளியாக அவர் எவ்வாறெல்லாம் திறம்பட செய்தார் என்பதையும் ரயில்களில் வரும் தபால்களை முன்கூட்டியே ரயிலில் ஏறி கடத்திக்கொண்டு செல்வதையும் படபடப்புடன் வாசிக்க முடிகிறது. 2021 இல் தனது 95 வது வயதில் காலமான ஹௌசாபா இன்னும் பல சாகசங்களை செய்திருப்பதை இந்த கட்டுரை சுட்டிக்காட்டுகிறது
ஓடிஸா மாநிலத்தைச் சேர்ந்த “தெமத்தி” என்கிற பெண்மணி. தனது தந்தை பிரிட்டிஷ் போலீஸ் அதிகாரிகளால் தாக்கப்படுவதை கேள்வியுற்று வயல்வெளியில் பணியாற்றிக் கொண்டிருந்த 40 பெண்களையும் திரட்டி கொண்டு தனது கைத்தடியால் போலீஸ் பட்டாளங்களை அடித்து நொறுக்கிய வீர பெண்மணி தெமத்தி.
இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிற (இக்கட்டுரை எழுதும்போது) அந்த தியாக பெண்மணியையும் பத்திரிக்கையாளர் நேர்காணல் செய்துள்ளார்.
ஒடிசா அரசு அவரது தந்தையின் மரணத்தை பற்றி கூறி அவருடைய தந்தையை பாதுகாத்தார் என்கிற ஒற்றை வரியில் அவருடைய தியாகத்தை மடைமாற்றம் செய்து கௌரவ சான்றிதழை மட்டுமே வழங்கி இருக்கிறது என்பதை ஒரு குறிப்பாக சுட்டி காட்டுகிறார்.
அடுத்து தெலுங்கானா போராட்டக்கள நாயகி மல்லு ஸ்வராஜ்யம். 2021 இல் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கூடிய கூட்டத்தில் தான் பயன்படுத்திய ஆயுதம் இதுதான் என்று ஒரு கவனை மேலே தூக்கி, சுழற்றி சுழற்றி காட்டி போலீசாரையும் நிஜாம்களையும் எப்படி விரட்டியடித்தோம் என்பதை செயல்முறை விளக்கம் காட்டி மக்கள் மனங்களை அதிர்வடையச் செய்தவர். போராட்டக்கள பல நினைவுகளை இந்த கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார் பத்திரிக்கையாளர் பி சாய்நாத் அவர்கள்.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் அன்றைக்கு இருந்த காவல்துறையால் “ரவுடி கிராமம்” என்று அழைக்கப்பட்ட, பல நூறு பேரை இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு அள்ளிக் கொடுத்த ஒரிசா மாநிலத்தின் பனி மொரா கிராமம் ஞாபகத்திற்கு வருகிறது.. பூங்கா ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிற சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் நினைவுத் தூண். அந்தத் தூணில் போராட்ட வீரர்களின் பெயர்கள் எழுதி வைக்கப்பட்டு இருக்கிறது. அந்த நினைவுத்தூண் அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த பள்ளி மாணவர் ஒருவரை “இந்த பெயர்கள் யாருடையது” என்று நூலின் ஆசிரியர் கேள்வி கேட்க அதற்கு அந்த மாணவர் “யாரோ முக்கியமானவங்க பெயர்களாக இருக்கும்” என்று பதில் சொல்கிறார்.
இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றை நினைவு கூற யாருமில்லாமல் அப்படியே மடியும் போல உள்ளது.
“மெட்ராஸ் நகரத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்கிற இன்ஸ்பெக்டர் என்னை சித்திரவதை செய்தார். அதிகாலை 2 மணிக்கு அவர் என்னுடைய கைகளை கட்டிப்போட்டார். அடுத்த நாள் காலை 10 மணிக்கு தான் அவற்றை சுழற்றி விட்டார். பிறகு ரொம்ப நேரத்திற்கு தடியால் என்னை அடித்துக் கொண்டே இருந்தார். அதுவும் போதாது என்று தான் புதைத்த சிகரெட்டை கொண்டு என்னுடைய மீசையை பொசிக்கினார்.”
தமிழ்நாட்டைச் சேர்ந்த தோழர் ஆர் நல்லகண்ணு அவர்களின் நேர்காணனில் சொல்லப்பட்டது இது. “ஆனாலும் எனக்கு அவர் மீது எந்த கோபமும் இல்லை. பழிவாங்கும் வஞ்சமும் இல்லை. 1948 ல் நடந்தாலும் 1947 க்கு முன்னரே தொடங்கிவிட்ட நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டத்தினுடைய தொடர்ச்சியாக ஏற்பட்ட ஒரு போராட்டத்தின் விளைவாக நடந்தது தான் இது.
சுதந்திரப் போராட்ட இயக்கம், சமூக மாற்றத்திற்கான இயக்கம் பிரபுத்துவா எதிர்ப்பு போராட்டங்கள் ஆகியவற்றை நாங்கள் ஒன்றாக்கி தான் போராடினோம். அதற்காகத்தான் இயங்கினோம். இப்போதும் இயங்கிக் கொண்டுதானிருக்கிறோம்
இப்பொழுதும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிற ஆர் நல்லகண்ணு அவர்களின் உணர்ச்சிமிகு வரிகளைப் படிக்க நாமும் மெய்சிலிர்த்து விடுகிறோம்.
என் சங்கரய்யாவும் ஆர் நல்ல கண்ணனும் இணைந்து அளித்த நேர்காணல் நம்மை வெகுவாக உணர்ச்சி வசப்பட வைக்கிறது.
கம்யூனிஸ்ட் இயக்கம் பிரிந்த போது மனம் இல்லாமல் தான் பிரிந்தோம் ஆனால் அதன் பிறகு பல போராட்டங்களில் ஒன்றாகவே இணைந்தோம். அப்பொழுதெல்லாம் நாங்கள் ஒரு கட்சியாகவே நினைத்துக் கொள்வோம். என்று தன்னுடைய கணீர் குரலில் பல்வேறு நினைவுகளை நினைவு கூர்கிறார் என். சங்கரய்யா அவர்கள்.
எல்லா கட்டுரைகளையும் வாசிக்க வாசிக்க போராட்ட வீரர்களின் தழும்புகள் தென்பட்டுக் கொண்டே இருக்கின்றன. எல்லா மாநிலங்களிலும் மறக்கடிக்கப்பட்ட போராட்ட வீரர்கள் கணிசமாகவே இருக்கிறார்கள் என்பதை இந்த கட்டுரையின் மூலம் அறிய முடிகிறது.அவற்றை வருடி வருடி மெய்சிலிரித்து தான் போகிறோம்.
பத்திரிக்கையாளர் பி சாய்நாத் எழுதிய இந்த நூல் நம் அனைவருடைய வீட்டிலும் வாங்கி பாதுகாக்கப்பட வேண்டிய நூல். எல்லோராலும் வாசிக்கப்பட வேண்டிய நூல். வாசித்ததை வெளியே பேசி கொண்டாடுவதற்கான ஒரு நூல். போராளிகளின் தியாகத்தைப் போற்றுவோம். இளைய தலைமுறையினருக்கு அதைப் பற்றி சொல்லுவோம். அதை பற்றி பேசுவோம். அவர்களுடன் நாம் களமாடுவோம்.அது மட்டுமே அந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் தியாகிகளுக்கும் நாம் செலுத்தும் மரியாதையாகும்.
இந்த நூலைச் சிறப்பான முறையில் ஆசிரியர் எத்தகைய உணர்வுகளோடு சொல்ல வந்தாரோ, அதே உணர்வை தமிழ் வாசகர்களுக்கும் கடத்தி இருக்கும் மொழிபெயர்ப்பாளர், ராஜ சங்கீதன் அவர்களுக்கும் வாழ்த்துகள்.
மிகச் சரியான நேரத்தில் இந்தப் புத்தகத்தைத் தமிழில் வெளியிட்ட பாரதி புத்தகாலயம் வெளியீட்டு நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள்
நூலின் தகவல்கள் :
நூலின் பெயர்: இறுதி நாயகர்கள்
நூல் ஆசிரியர்: பி சாய்நாத் (ஆங்கிலம்)
தமிழில்: ராஜ சங்கீதன்
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
விலை: ரூ 290/
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/iruthi-nayakargal/
நூல் அறிமுகம் எழுதியவர் :
சகுவரதன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
மிக்க நன்றி தோழரா