உலகளாவிய கோவிட் 19 நெருக்கடியானது, சீனா , இத்தாலி, அமெரிக்கா, இந்தியா மற்றும் பல பிரமாண்டமான அரசுகளின் மாபெரும் தோல்விகளின் விளைவாக உருவானது. சீனா இந்தப் பெருநோய்பரவலைப் பற்றிய தகவலை தகுந்த நேரத்தில் உலகிற்கு தெரிவித்திருந்தால், உலகம் வாழ்க்கைக்கும் வாழ்வாதாரத்திற்கும் இடையே ஏதாவது ஒன்றைத்தான் தேர்வு செய்ய வேண்டியிருந்திருக்குமோ ??
ஊஹான் நகரில் அறியப்படாத காரணங்களால் பரவி வந்த நிமோனியா நோய் பற்றிய தரவுகளை சீனா முதன்முதலில் டிசம்பர் 31, 2019 அன்றுதான் உலக சுகாதார அமைப்பிற்கு தெரிவித்தது. ஆனால், ஜனவரியின் பிற்பகுதியில்தான் சீன அதிகாரிகள் சுதாரித்துக் கொண்டு மெதுமெதுவாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் நெருக்கடியை உணர்ந்து பிரச்சினையை கையில் எடுக்க ஆரம்பித்தனர் – அவர்கள் பெருநோய்பரவலை முடக்க முயன்றது நிலைமையை இன்னும் மோசமாக்கியது – ஊஹான் நகரம் முடக்கப்பட்டது.
இதே நேரத்தில், உலக வர்த்தக அமைப்பு டாவோஸில் கூடியது. அங்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பெருநோய்பரவலை பற்றிய கேள்விகளை நிராகரித்தார். ட்ரம்ப், நோய் பரவலை தொடர்ந்து மறுத்தவாறே , அதைப் பற்றிய அச்சங்களையும் முற்றிலும் நிராகரித்தார்.
இங்கிலாந்து, அமெரிக்கா, ஸ்பெயின். இத்தாலி மற்றும் இந்திய நாடுகள் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவியிருக்குமா ? சோதனைமேற்கொள்ளுதல் , தனிமைப் படுத்துதல், பயணத் தடை போன்றவைகளில் காலம் தாழ்த்தி முடிவெடுத்ததால், இந்த பெருநோய்ப் பரவலைக் கட்டுப் படுத்துவதில் இந்த நாடுகள் தோற்று விட்டன.
குறிப்பாக அமெரிக்காவும் இங்கிலாந்தும் இந்த நோய் ஏற்படுத்தவிருக்கும் நெருக்கடியின் தீவிரத்தை பல வாரங்களாக குறைத்து மதிப்பிட்டபடி இருந்தனர். அவர்களின் கவனக் குறைவு ஒரு பூமராங் போல அவர்களை திருப்பித் தாக்கியது. நோய்த் தொற்று கை மீறிப் போகவே, சோதனைக் கருவிகள், முகக் கவசம், வெண்டிலேட்டர் போன்ற மருத்துவத் தேவைகளின் பற்றாக்குறை ஏற்பட்டது.
வலிமையான பொது சுகாதார அமைப்பு மற்றும் கணிசமான பொருளாதார வளங்கள் கைவசம் இருந்தும், ஓர் உலகலாவிய பெருநோய்ப் பரவலைத் தடுக்க, வளர்ந்த நாடுகளே போராடுவது, இந்த வல்லரசுகளின் தொடர் இயலாமையை நினைவூட்டும் வாய்ப்பாக வேண்டும். இந்த நெருக்கடியானது, ஓர் அரசின் பங்கை விரிவுபடுத்துவதற்கான தேவையையும், அதன் இயல்பிலிருந்து மாற்றுவதற்கான தேவையையும் ஏற்படுத்தி, ஒரு பழைமை வாய்ந்த விவாதத்தை தொடங்கியிருக்கிறது. அந்த விவாதம் மாபெரும் அரசுகளைப் பற்றியது.
ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மாபெரும் அரசுகள் திரும்பவும் பொறுப்பேற்றிருக்கின்றன. பொதுத்துறைக்கும் தனியார் துறைக்கும் இருக்கும் வித்தியாசங்களை போக்கும் வகையில், வலதுசாரி அரசுகள் தனியார் துறையின் ஊதியத்தையும் மானியப் படுத்துகின்றன. உலக நாடுகள் முன்னெப்போதையும் விட அதிக செலவுகள் செய்கின்றன – அரசுகளின் இப்போதிருக்கும் வானளர்ந்த பட்ஜெட்களைப் போல போர்ச் சூழலில் கூட இருந்ததில்லை. ‘தி ப்ரெட்டன் வுட்ஸ் சகோதரிகள்’ என்று அழைக்கப்படும் International Monetary Fund மற்றும் உலக வங்கி, இவ்வரசுகளைத் தூண்டிவிடுகின்றன. பட்ஜெட் பற்றாக்குறை என்ற ஒரு கருத்து அவர்கள் அகராதியில் இருந்து மறைந்து விட்டது .
என்ன வேண்டுமானாலும் ஆகட்டும்
இப்போது உலகின் கூக்குரல் இதுதான் : என்ன வேண்டுமானாலும் ஆகட்டும், நாங்கள் இதை செய்வோம்.
” ஊதியங்கள் மற்றும் தொழில்களின் வரவு செலவு கணக்குகளை தேசியமயமாக்க உள்ளோம்” என்கிறார் பிரான்சு அதிபர் இமானுவேல் மேக்ரான். ” உலகின் எல்லா நாட்டு பொருளாதாரங்களும், தாராளவாத பொருளாதார நாடுகள் உட்பட, இதைத்தான் செய்து வருகின்றன. இது முற்றிலும் வளத்திற்கு மாறான ஒன்று;ஆனால் இதுதான் இனி வழி” என்கிறார்.
கொரோனா பாத்திரங்கள் உருவாக்கி அதை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இணைந்து உத்திரவாதப் படுத்த, அதன் மூலம் திரட்டும் நிதியை, ஒரு நாட்டின் பொருளாதார அளவை கருத்தில் கொள்ளாமல், நாடுகளின் தேவைகளை கருத்தில் கொண்டு, அந்தந்த நாடுகளுக்கு நிதி வழங்க வேண்டும் என்று வாதிக்கும் ஐரோப்பிய தலைவர்களில் மேக்ரானும் ஒருவர்.
இங்கிலாந்தின் முன்னாள் பிரதமமந்திரி மார்கரெட் தாட்சர் 1987இல் “சமூகம் என்ற ஓர் அமைப்பே இல்லை” என்று ஒரு கோட்பாட்டை கூறி தனிநபர்வாதத்தை முன்னிறுத்தினார். அதில் முரண்பட்டு, இப்போதைய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், தான் கொரோனா தொற்றிலிருந்து குணமாகிய பிறகு, தன்னுடைய 11, டௌனிங் தெரு இல்லத்திலிருந்து அவர் தன்னைத் தானே வீடியோ எடுத்து அந்த நாட்டின் தேசிய சுகாதார சேவைக்கு (national helath service ) நன்றி தெரிவித்து, ” சமுதாயம் என்று ஒரு அமைப்பு உண்மையாக இருக்கிறது, அதை கொரோனா காலம் நிரூபித்துள்ளது” என்று மக்களுக்கு ஒரு செய்தி சொல்லியிருக்கிறார்.
முன்பு கூறியது போல, இந்த நெருக்கடி அரசின் தோல்வியால்தான் விளைந்தது. அது சந்தையின் தோல்வி அல்ல. முழுமுடக்கம், சந்தையை இடைநீக்கம் செய்து, ஒரு வெறுமையை உருவாக்கிவிட்டதால், அரசு வேறு வழியில்லாமல் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இது ஒரு தற்காலிக கால கட்டம்தான் என்றாலும், அரசின் குறுக்கீடு என்பது முன்னெப்போதையும் விட மிக அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது. நாடுகளின் பொருளாதார நடவடிக்கைகளை அரசே முடக்கியுள்ளதால், அதே அரசால்தான் அந்த பொருளாதார நடவடிக்கைக்கு உயிர் கொடுக்க முடியும்.
ஆக, இந்த பொது சுகாதார நெருக்கடி, அரசுகளை மக்கள் நல அரசாக மாற்றுமா ?
மக்களுக்கு வழங்கும் பொருளாதார நிவாரணம் என்பது, அரசின் தலையீட்டால்தான் வழங்கப் படுகிறது என்பதை உறுதி பட சொல்லலாம். வலது சாரி அரசுகள், தனியார் கம்பெனிகளின் ஊழியர்களுக்கு அவசர வேலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் , ஊதியம் வழங்குகின்றன. குறுதொழில்களுக்கு அரசு-ஆதரவு கடன்கள் மூலமும், முறைசாரா தொழிலாளர்களுக்கு “உலகளாவிய அடிப்படை வருமான”த்தின் தற்காலிக தரவுகளோடும், இவ்வரசுகள் உயிர் கொடுக்கின்றன.
ஆனால் இது போன்ற தற்காலிக பொருளாதார சுமை குறைக்கும் கொள்கைகளுக்கு, சொற்ப ஆயுள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸிற்கு ஒரு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை இந்த பொருளாதார கொள்கைகள் உயிரோடு இருக்கும். இந்த நெருக்கடியின் நீடித்த மரபு சார் கொள்கையாகவும் அவை இருக்காது. உண்மை என்னவென்றால், மிகப் பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள அரசுகளால்கூட, இது மாதிரியான அதிக செலவிழுக்கும் திட்டங்களை நிரந்தரமாக பின்பற்ற முடியாது.
உலக நிகழ்வு :
அமெரிக்க சபை, 2 trillion அமெரிக்க டாலர் மதிப்பிலான செலவிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. குறுவணிக நிறுவனங்கள், வாடகை, ஊதியம் மற்றும் நிறுவனம் இயங்குவதற்கான செலவை வங்கிகளிடம் இருந்து பெருகி கொள்ளலாம். அந்நிறுவனங்கள் பணியாளர்களை வேலை நீக்கம் செய்யாமல் இருந்தால் அந்த கடனை அரசே வங்கிகளுக்கு செலுத்தி விடும்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், குறு நிறுவனங்ளின் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை பாதுகாப்பதோடு மட்டும் அல்லாமல் பிற சலுகைகளையும் செய்கின்றன. ஜெர்மனியின் குறைந்த நேர வேலை திட்டம் 20 லட்சம் தனியார் தொழிலாளர்களுக்கும் ஊதியம் கொடுத்துள்ளது. ஜெர்மன் தொழில் வளர்ச்சி வங்கியான KfW வங்கி, எல்லையில்லா தொழிற்கடனுக்கு உத்திரவாதம் அளித்துள்ளது. டென்மார்க், நெதர்லாந்து மற்றும் தென்கொரியா நாடுகளின், தொழிலாளர் பாதுகாப்பு திட்டம், 75 முதல் 90% ஊதிய பணத்தை நிவாரணமாக அளித்து, குறு நிறுவனங்களின் பணி நீக்க நடவடிக்கையை தடுத்துள்ளது.
இது போன்ற பொருளாதார நிவாரண திட்டங்கள் கூட, அரசின் பலவீனங்களை சுட்டிக் காட்டும் குறியீடுகளை தாங்கியுள்ளது. மிக அதிகமாக பாதிக்கப்படக்கூடிய மக்கள், மிகக் குறைந்த உதவியையே பெறுகின்றனர். ஒரு கணிசமான மக்கள் தொகைக்கு அரசின் எந்த நிவாரண உதவியும் போய் சேருவதில்லை. பெரும்பாலான நாடுகளில் அறிவிக்கப்பட்ட நிவாரண திட்டங்கள், தொழிலாளர்கள் எவ்வித வேலை ஒப்பந்த உதவிகளின்றி தள்ளப் பட்டுள்ளனர். சுய தொழில் முனைவோரும் அவ்வாறே உதவி மறுக்கப் பட்டுள்ளனர்.
நிறைய எண்ணிக்கையிலான இத்தாலியர்கள் – முறைசாரா ஒப்பந்த தொழிலாளர்கள், பராமரிப்பு பணியாளர்கள், துப்புறவு பணியாளர்கள், கட்டுமானப் பணியாளர்கள், ஹோட்டல் உதவியாளர்கள், கூரியர் தொழிலாளர்கள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் – ஆகியோருக்கு வேலை பாதுகாப்போ, அந்த நாடு அறிவித்துள்ள தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.4% அளவு இருக்கும் நிவாரண திட்டத்தில், எந்த உதவியுமோ வழங்கப் படவில்லை.
இந்தியாவில், நரேந்திர மோடி அரசு, மாதம் ரூபாய் 15,000 வரை ஊதியம் பெறும் சுமார் 80 லட்சம் ஊழியர்களுக்கான, தொழிலாளி மற்றும் முதலாளி “தொழிலாளர் வைப்பு நிதி”க்கு செலுத்த வேண்டிய தொகையை, அரசே செலுத்தும் என்று அறிவித்துள்ளது. இந்த திட்டமானது ஏற்கனவே இருக்கும் நலத்திட்டத்தின் கீழ், பொருளாதார நலிவுற்ற மக்கள் தொகையை மனதில் கொண்டு செயல்படுத்தப் படுகிறது. ஆனால், இத்திட்டம், லட்சக் கணக்கான முறைசாரா மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களை, எந்த வித உதவியும் இல்லாமல் விட்டுவிட்டது. இந்தியாவில், எப்படி சோதனைக் கருவிகள், முகக் கவசம், மற்றும் இதர தற்காப்பு கருவிகள் ஒரு சாராருக்கு மட்டும் கிடைக்கிறதோ, அதுபோல நிவாரண உதவிகளும் ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகைக்கே கிடைக்கிறது.
பொருளாதார பார்வையில் “மக்கள் நல அரசு” என்ற பதம் , அரசியல் சூழலில் முற்றிலும் வேறுபட்டதாகப் பயன் படுத்தப் படுகிறது. “மக்கள் நல அரசு” என்பது இரட்டை வேலையை செய்யக் கூடியது : நல்ல சுகாதாரத்தையும் கல்வியையும் ( உருவாக்குவது மட்டுமல்லாமல் ) அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்; சந்தை மக்களிடையே ஏற்கனவே உருவாக்கி விட்ட வருமான பகிர்வை மாற்றி வருமானத்தை மறுவிநியோகம் செய்ய வேண்டும்.
எடுத்துக்காட்டாக, “மக்கள் நல அரசு” மக்களின் ஒரு சாராரிடமிருந்து வரி வசூலித்து, அந்த வரிப் பணத்தை வேறொரு மக்கள் பிரிவிற்கு நிதி ஆதரவு அளிக்கும். இந்த நிதி ஆதரவு என்பது, ஓய்வூதியம், குழந்தை பராமரிப்பு, வேலையில்லாதவர்களுக்கான இழப்பீடு, போன்றவற்றிற்காக இருக்கும். இப்போதிருக்கும் பொருளாதார சூழலில், தொழிலாளர் நலனை விட வேலைவாய்ப்பை உருவாக்குவதைவிட, முதலாளிகள் முதலீடு செய்த மூலதனம் வேகமாக வளர்கிறது; இதனால் வருமான சமத்துவமின்மை நிலவிவருகிறது. அடிப்படை வருமானம் என்பது, இந்த வருமான சமத்துவமின்மையை குறைக்கும் நோக்கில், நிதிக் கொள்கை மூலம் அரசு செய்யும் தலையீடு.
மக்கள் நல அரசை வரையறுப்பது :

பெரும்பான்மையான பணக்கார நாடுகள் தங்கள் மக்கள் நல அமைப்புகளை – சிறு முதலீட்டாளர்களை காப்பது, அதிக பொது செலவுக்கான நிதி ஒதுக்குவது, சக்தி வாய்ந்த தொழிற் சங்கங்கள் அமைப்பது, மகளிருக்கான ஆதரவு, இலவச அல்ல மானிய படுத்தப் பட்ட சுகாதார சலுகைகள் மற்றும் தொழிலாளர் உரிமை – போன்றவற்றை கட்டமைத்தது, இரண்டாம் உலகப் போருக்கான 1950 களில்தான். மக்கள் னால அரசின் மீதான நம்பிக்கை 1970களில்தான் குறையாத தொடங்கியது.
பிரிட்டனின் பொதுநல அரசு வரலாறானது இந்த உலகிற்கு எடுத்துரைக்கும் தன்மை கொண்டது . உண்மை என்னவென்றால், “பொது நல அரசு” என்ற சொற்பதமே , இரண்டாம் உலக போருக்கு பிறகு , பிரிட்டனின் ‘ தொழிலாளர் கட்சி 1942ல் வெளியிட்ட, பிரிட்டனின் பொதுநல அரசாங்கத்தின் கட்டுமானத்திற்கான அரிச்சுவடியாக கருதப்படும், ” தி பெவேரிட்ஜ் ரிப்போர்ட்” வெளிவந்தபிறகே பெரும் பேசுபொருள் ஆனது. இந்த மக்கள் நல அரசானது, சுமார் 40 ஆண்டுகள் – மார்க்ரெட் தாட்சர் பொறுப்பேற்கும் வரை செயல்பாட்டில் இருந்தது.
“பொதுநல அரசு” என்பது, சில நேரங்களில் தவறுதலாக இடதுசாரிகளின் உருவாக்கமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், “தி லண்டன் ஸ்கூல் ஆ ஃப் எகானாமிக்ஸின்” முன்னாள் இயக்குனரான திரு வில்லியம் பெவேரிட்ஜ், இதை தடையில்லா வர்த்தகத்தை முழுமை செய்வதற்கான நிரப்புக் கூறாகவே முன்மொழிந்தார். அவரின் அறிக்கைக்குப் பிறகு 1944ல் நடந்த அனைத்துக் கட்சி உறுதியேற்பு கூட்டம், அதிகபட்ச மற்றும் நிரந்தர வேலைவாய்ப்பை வழங்குவதும் அரசின் கடைமை என்று உணர வழிவகுத்தது.
வேலைவாய்ப்பை உருவாக்குவது அரசின் கடைமை என்ற கற்பிதம், அதுவரை வேலைவாய்ப்பை சந்தை மட்டுமே உருவாக்கும் என்ற கற்பிதத்திற்கு முற்றிலும் மாறுபட்டிருந்தது. வறுமையிலிருந்து விடுபடுதல் என்பதை, பணக்காரர்களின் சலுகையாக மட்டுமில்லாமல், அனைத்து மக்களின் உரிமையாகவும் மாற்றுவதுதான், வேலைவாய்ப்பை அரசு உருவாக்குவதற்கான நோக்கமாக இருந்தது என்று ரோட்னி லோவே என்ற சமூக கொள்கை வரலாற்று அறிஞர் கூறுகிறார்.
1948 ஆம் ஆண்டில், தொழிலாளர் சார்பு அரசாங்கம் உலகளாவிய பொதுநல அமைப்புகளான “தேசிய சுகாதார அமைப்பு” மற்றும் “தேசிய காப்பீட்டு நிறுவனத்தை”யும் அறிமுகப் படுத்தியது. எப்போதும் அரசின் செலவுகளில் இராணுவ செலவு முக்கியத்துவம் பெற்றுவந்த நிலையில் , 1960களில் சமூக பாதுகாப்புக்கான செலவு அந்த முக்கிய இடத்தை நிரப்பியது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய பிரிட்டனில், முப்பது வருடங்களில் இல்லாத அதிக வேலைவாய்ப்பும் செல்வமும் பெருகியிருந்தது.
ஆனால் 1975ஆம் ஆண்டு, வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனாகவும் பணவீக்கம் முன்னெப்போதுமில்லாத 27% மாகவும் உயர்ந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில், பொதுநல செலவு மட்டும் 57% மாக உயர்ந்தது. அரசுசார்பு கலாச்சாரம் அதிகரித்தது. பெரும் சக்திவாய்ந்த அரசாங்கத்தின் உருவாக்கம் தனி மனித சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக மாறியது. பொதுநல அரசின் நோக்கம் என்பது ஆரோக்கியமான, படித்த, எளிதில் இடம் பெயரக்கூடிய மற்றும் சிறந்த உந்துதல் உடைய தொழிலார்களை உருவாக்குவதுதான் என்றாலும் , அதனால் வறுமையை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. அதிகாரப் பூர்வ தகவலின் படி, 50 லட்சம் மக்கள் வறுமைக்கோட்டிலும் அதற்கும் கீழுமே தொடர்ந்து நீடித்திருந்தனர்.

பொதுநல அரசாங்கத்திற்கான மக்கள் ஒப்புதல் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கினாலும், அரசின் செலவானது பெரியளவில் குறையவில்லை. 1987 ஆம் ஆண்டு ஒரு அரசாங்கத்தின் பொறுப்பை, மக்கள் சேவை வழங்குவது என்றில்லாமல், வெறும் நிதிக்கான மூலம் மற்றும் ஒழுங்கு படுத்துவதற்கான ஒரு அமைப்பாக, மறுவரையறை செய்யப்பட்டது. ( தலையீட்டில்லா கொள்கைகள் திரும்பிய பின்னும் அதிகளவில் இருந்த வேலைவாய்ப்பின்மையை தடுக்க முடியவில்லை)
பெவேரிட்ஜ் முன்மொழிந்த பொதுநல அரசாங்கம் வெற்றிபெற, நிர்வாகத்திறனில் மிகப்பெரிய முன்னேற்றங்கள் தேவைப் பட்டன; அதனை பிரிட்டனின் அரசியல்வாதிகளாலோ அரசு அதிகாரிகளாலோ நடைமுறைப்படுத்த முடியவில்லை. பொதுநல அரசு தோற்றதற்கான காரணம் என்ன? வருமான விநியோகத்தில் இருந்த பாகுபாடுகள் அதிகரித்துக்கொண்டே இருந்தது; அதன் காரணமாக வரிசெலுத்துவோரின் மேலான பாரமும் அதிகரித்துக்கொண்டேயிருந்தது.
பெருமளவில் மக்கள் நலத்திட்டங்களை நடைமுறைப் படுத்தும் மற்ற நாடுகளின் பொருளாதார வரலாறானது, அந்தந்த நாடுகளின் நிதி நெருக்கடி அதிகமாகும் பட்சத்தில், அந்நாட்டின் வளர்ச்சி குறைவதை காட்டுகிறது. 1920 இருந்து 1965க்குள், ஸ்வீடெனின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.02% வளர்ச்சி பெற்றது. ஆனால் 1966லிருந்து 2010திற்குள்ளான வளர்ச்சி விகிதம் 1.93% ஆக குறைந்தது. 1970ஆம் ஆண்டில், சுவீடனின் பொதுநல அரசின் சரிவிற்கு முன், அந்நாட்டின் தனிநபர் வருமானமானது, வளர்ச்சியடைந்த OECD நாடுகளின் சராசரி தனிநபர் வருமானத்தில் 115% ஆக இருந்ததது – இது உலகளவில் நான்காம் இடத்தில் இருந்தது. 1995 ஆம் ஆண்டில், ஸ்வீடெனின் தனிநபர் வருமானம் OECD நாடுகளின் சராசரி வருமானத்தில் 95% சதவிகிதமாக குறைந்து உலகளவில் 16ஆம் இடத்திற்கு சென்றது
பொதுநல அரசாங்கம் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது; அதன் அரசியல்வாதிகள் புது புது திட்டங்களை சேர்க்கிறார்கள். அரசாங்கத்தின் உதவியால் வாழ்பவர்களின் எண்ணிக்கை, அரசாங்கத்திற்கு வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை விட அதிகமாகவே இருக்கிறது. ஒரு பிரபல நாளிதழ், இத்தகு நிலையை கேலிச் சித்திரமாக சித்தரித்தது : அதில் அரசியல் கட்சியை கப்பலாகவும், வரி செலுத்துவோரை கப்பலில் துடுப்பு போடும் கப்பல் அடிமைகள் போலவும், அரசை சார்ந்து வாழும் மக்கள் கப்பலின் மேல் பயணிப்பது போலவும் சித்தரித்திருந்தது. 1960ல் டென்மார்க்கில் மக்கள் நல திட்டங்கள் தொடங்கப்பட்ட பொது, மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் அந்த கப்பலில் பயணித்தனர்.
2014 ஆம் ஆண்டின்படி, மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர், வரிப்பணத்தில் சவாரி செய்வோராக இருந்தனர். தற்போது டென்மார்க் தனது திருத்த நடவடிக்கையின் மூலம், வியாபாரம் செய்வதற்கு அமெரிக்காவை விட சிறந்த இடமாகத் தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறது.
முடிவுரை:
ஏழை நாடுகள் கைக்கும் வாய்க்குமான தங்கள் வரவு செலவு திட்டங்களோடு ஆண்டுக்கு ஆண்டு பிழைத்திருக்கின்றன; ஆனால் பணக்கார நாடுகள் கூட பெரியளவிலான நிரந்தர பொதுநல திட்டங்களுக்கு திரும்புவதை அரிதாதாகவே காணப்படுகிறது. கோவிட் 19 க்கு பிறகு வரும் நெருக்கடி பத்தாண்டுகால சிரமங்களை கொடுக்கக்கூடியது. 2008 ஆம் ஆண்டின் பெரும் பொருளாதார சரிவிலிருந்தே இன்னும் உலகம் மீளவில்லை. உலகின் நிதி நிலைமை இன்றும் பலகீனமாகவே உள்ளது.
சீனாவின் தற்போதைய பொருளாதார எழுச்சிக்கான நிதி, 2008ஆம் ஆண்டை விட சற்று குறைவாகவே இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம், தனது உறுப்பு நாடுகளின் மத்தியில் பொருளாதார கொள்கைகள் குறித்து ஒருமித்த கருத்து இல்லாமையால், முடிவெடுக்க முடியாமல் திணறுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் 2008க்குப் பிறகு வந்த மோசமானஅரசு நிதி நெருக்கடி நிலைமை மீண்டும் வரும் ஆபத்து நிலவி வருகிறது. அமெரிக்காவிலும், தற்போது பொருளாதார எழுச்சிக்காக ஒதுக்கப் பட்ட நிதியில் 10% மட்டுமே சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப் பட்டுள்ளது.
இப்போதிருக்கும் நிதி நெருக்கடி, அரசின் பொறுப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி , அப்படி ஏற்படும் மாற்றம் மீளமுடியாத மாற்றமாக அமைந்து விடுமா? அரசின் பெரும் தலையீடுகளைப் பார்க்கும் போது, அரசின் நிதிநிலை கணக்குகளில் நிச்சயம் மறு சீரமைப்பு செய்ய வேண்டியிருக்கும். பொது நிதி சம்மந்தப் பட்ட சட்டங்களையும் பணவியல் கொள்கைகளையும் மாற்றி எழுதப் பட வேண்டும். கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, இந்த நெருக்கடி முடிந்தவுடன், அரசுகள் நிச்சயம் தன் செலவுக் கணக்குகளை இழுத்துப் பிடிக்கும். நம் முன் இருக்கும் கேள்வி என்னவென்றால் : அரசு எவ்வளவு இழுத்துப் பிடிக்கும் ?
நன்றி – https://www.livemint.com/news/india/covid-capitalism-is-flirting-with-socialism-11587484415190.html
தமிழில் ஞானபாரதி
சமகாலத்தை முழுமையாக அலசுகின்ற அவசியமான கருத்துக்களை உள்ளடக்கிய கட்டுரை.மொழிபெயர்ப்பாளருக்கு வாழ்த்துக்கள் !