தமிழ் இலக்கியப் படைப்பாளிகளின் குறிப்பிடத்தக்க முற்போக்குச் சிந்தனையாளர், மற்றும் களச் செயற்பாட்டாளர் எழுத்தாளர் பா. செயப்பிரகாசம்.

தமிழ் எழுத்துலகின் விளம்பர நோக்கிலான பரபரப்பு வணிக எழுத்தாளராக அறியப்படுவர் ஜெயமோகன்.

  • இருவரது எழுத்தின் வடிவத் தொனி இந்த மூலைக்கும் அந்த மூலைக்குமானது.

பெரும்பாலும் அதிகார வர்க்கச் சாடலுக்குரிய பொதுவுடமை எழுத்தையும், மண் சார்ந்த முற்போக்குப் படைப்புகளையும் முன்னெடுத்துச் செல்பவர் பா. செயப்பிரகாசம்.

ஆனால், ஜெயமோகனின் எழுத்து வேறு வகையிலானது. அடிமனதில் ஆழ்ந்து உறைந்து கிடக்கும் மனக் குழப்பங்களை.. கற்பனை வடிவங்களின் அவலக் கோட்டுச் சித்திரங்களை, படிந்து கிடக்கும் ஆன்மிகக் கருத்தியலுக்கு புனித ஜிகினாக்கள் தூவி, நவீன படைப்பாக்க வெளியில் பேசு பொருளாக்கும் எழுத்துக் கவர்ச்சியும்; பொய்மைகளின் போர்வைகளை உரித்து வீசியெறியாமல், உண்மையை வாதச் சுத்தியலால் உடைத்து நொறுக்கி; ஊடகக் கவனங்களைத் தனது மேல் குவிமையமாகத் திசை திருப்பும் நுட்ப உளவியலின் எழுத்துக் கட்டுமானர் அவர்.

உழைக்கும் மக்கள் மற்றும் தமிழ் தேசிய-பகுத்தறிவு, பொதுவுடமைக் களச் செயல்பாடுகளில் இலக்கிய ஆளுமையாய் முன் நிறபவர் பா. செயப்பிரகாசம். ‘கலை, அறிவியல் யாவும் மக்களுக்காகவே’ எனும் கோட்பாட்டு முழக்கங்களை ‘நாட்டாரியல் மொழிகளின்’ வடிவங்களில் மக்களிடம் கொண்டு சேர்த்த உழைப்பு அவரிடமிருந்தது.

இந்த இரு எழுத்தாளர்களுக்குமான மோதல், தமிழ்ப் படைப்புலகத்தில் அதிர்வை உண்டாக்கி, பரபரப்பான தீப்பொறியாய் வெடித்துக் கொண்டிருக்கிறது. கடந்த 20.5.2020 அன்று எழுத்தாளர் ஜெயமோகன் தனது ‘வலைப் பூ’ (Blok spot.com)இல் “ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்” என்றொரு பதிவை வெளியிட்டிருந்தார்.

இப்பதிவின் கீழ், ம.க.இ.க.விலிருந்து சமீபத்தில் விலகிய தோழர் மருதையன் பேசுவது போன்ற படம் இருக்கிறது. அதன்கீழ் மருதையன், வினவு, பின் தொடரும் நிழலின் நூல் என தலைப்பிட்டு ‘என் பெயர் வேண்டாம்’ என்று மொட்டைக் கடுதாசியாளர் கேட்டுக்கொள்கிறார். ஜெயமோகனும் அதனை விட்டு விடுகிறார்.

writer jeyamohan Dosa flour controversy, K Chandrakala opinion ...
எழுத்தாளர் ஜெயமோகன்

அதில், இடதுசாரிகளைப் பற்றிக் கடுமையான விமர்சனம் செய்திருந்தார். இடதுசாரிகள் நான்கு வகையினர்; அதில் நான்காவது வகையானவர் பா.செயப்பிரகாசம் போன்றவர்கள் என்று சில புகார்களைச் சுட்டி; அதிலும் குறிப்பாக பா.செ.மீது கடும் சொல்லம்புகளை ஏவியிருக்கிறார். அதாவது “இடதுசாரி முகமூடி அணிந்து செயல்படுபவர்களில் சிலர் பணக்காரர்கள். அதிலும் அதிகாரப் பதவிகளில் இருந்த பா. செயப்பிரகாசம்  சாதிவெறிகொண்ட அரசு உயர் அதிகாரி. அவர் இடதுசாரிக் குழுவின் தலைவராக ‘சூரியதீபன்’ எனும் புனைப்பெயரில் இயங்கியது பித்தலாட்டம்; இதெல்லாம் தெரியாததா உளவுத்துறை? இதுதான் இங்கே இடதுசாரி அரசியல்” என்று எழுதிவிட்டு “கடிதத்தில் பிழைகள் இருந்தால் திருத்திக் கொள்ளவும்” என்று முடிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அக்கடிதத்தை ஜெயமோகன் திருத்தாமலே வெளியிட்டிருப்பதை “இதுதான் இலக்கிய அறமா?” என விரல் நீட்டுகிறார்கள் பா. செயப்பிரகாசம் ஆதரவாளர்கள்.

ஜெயமோகனின் ‘வலைப் பூ’ உரிமைப் பதிப்பில் “Copy right@2015 jeyamohan, எழுத்தாளர் ஜெயமோகன் அச்சு ஊடகம் தொலைக்காட்சி, இ.புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது வேறொருவர் எப்படி அவரது ‘வலைப் பூ’வில் அனுமதியின்றி நுழைய முடியும்? ஆகவே அந்த ‘எழுத்தின் அவதூறுகள்’ ஜெயமோகனாலேயே எழுதப்பட்டவை என வாதிடுகின்றனர் பா. செயப்பிரகாசம் ஆதரவாளர்கள்.

தமிழகத்தின் முதுபெரும் எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் முற்போக்குப் புரட்சி ஏடான ‘மன ஓசை’யின் ஆசிரியராக  இருந்தார். இவர் கரிசல் இலக்கியத்தில் காலடி எடுத்து வைத்து பொதுமைச் சமுதாய வழியில்  தடம்பதித்தவர்.

‘மன ஓசை’ இதழ்தான் மனுஷ்ய புத்திரன், பெருமாள் முருகன், தேவி பாரதி, பாவண்ணன், இந்திரன்,, சுப்ரபாரதி மணியன் உள்ளிட்ட ஏராளமான படைப்பாளிகளை அறிமுகப்படுத்தியது. 

மாற்றுப் புரட்சி அமைப்பில் இயங்கிய கோ.கேசவன், கவிஞர் இன்குலாப், அ.மார்க்ஸ், கோவை ஞானி ஆகியோர் இவ்விதழில் தொடர்ந்து எழுதி வந்தனர்.

ஆப்பிரிக்க மூன்றாம் உலகக் கவிதைகளை இந்தியிலும், மலையாளக் கவிதைகளை சுகுமாரனும் செய்த தமிழாக்கங்களை மன ஓசை தொடர்ந்து வெளியிட்டது.

தொடர்ந்து உலக அளவிலான புரட்சி இயக்கங்கள், இந்திய பொதுவுடமை செயல்பாடுகள் தமிழர் எழுச்சிப் போராட்டங்களையும் அக்கருத்து சார்ந்த இலக்கியச் சிறுகதைகளையும் வெளியிட்டு ஒரு இடதுசாரி இதழாக வெளியானதில் பா. செயப்பிரகாசத்தின் பணி அளப்பரியது.

ஏறத்தாழ 135 சிறுகதைகள், மூன்று குறுநாவல்கள், இரு கவிதைத் தொகுப்புகள், 14 கட்டுரை நூல்கள், இலக்கிய, சமுதாய அரங்க உரைகள் என தொடர்ந்து இயங்கியவர்.

என்ன செய்யப் போகிறோம்? - பா ...
பா.செயப்பிரகாசம்

அவரது எழுத்துகளில் சாதிய உணர்வைத் தூண்டும் எந்த அடையாளமும் காண முடியாது. அவர் தனது எழுத்துகளை என்றும் வணிகமாக்கியதில்லை.

1965இல் நிகழ்ந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை தமிழகம் முழுக்க எடுத்துச் சென்ற  போராளிகளில் இவரும் ஒருவர். அதனால் இந்திய தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். ஈழம், மார்க்சியம், அம்பேத்கரியம் குறித்தான படைப்புகளில் சமரசம் இல்லா உண்மைப் போராளி. அதனால்தான் இப்படியானவர்மீது ஒரு வலதுசாரியான ஜெயமோகன் பழிதூற்றுவது வியப்பல்ல.

ஏற்கனவே, தமிழகத்தின் மாபெரும் அடையாளங்களைக் கேலி செய்து, தான் ‘மிகவும் மாறுபட்டவன்’ எனும் பரபரப்பு விளம்பர பேசுபொருளாக தன்னை உருவகப்படுத்திக் கொண்டவரின்  சில கூற்றுகள் இவை..

  • சிவாஜி கணேசனுக்கு நடிக்கத் தெரியாது.
  • அண்ணாவும் கலைஞரும் எழுத்தாளர்கள் அல்ல.
  • இன்குலாப் இதுவரை ஒரு கவிதைகூட எழுதவில்லை.
  • சுந்தர ராமசாமி ‘நாய் சாமியார்’
  • (உலகின் மிக முக்கிய செயற்பாட்டாளர்) அருந்ததி ராய் ‘குருவி மண்டை’யர்.
  • எஸ்.வி.ராஜதுரை மிஷினரிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு எழுதுபவர்.
  • இலக்கிய விமர்சகர் தி.க.சி. அவரது படைப்புக்காக அன்றி ‘கெஞ்சல் கடிதங்கள்’ மூலம் சாகித்ய அகாடமி விருது வாங்கியவர்.

இவ்வாறெல்லாம் கருத்து முத்துகள்’ உதிர்த்து தன்னைப் பரபரப்பு இலக்கிய வாதியாக காட்டிக் கொள்கிறவர் ,திரைப்படத் துறையின் ‘மார்க்கெட்’ உள்ள வணிக எழுத்தாளர் ஜெயமோகன்.

இனி; அந்த ‘வலைப் பூ’ வின் பதிவின்மீதான பின் விளைவை அறியலாம். அப்பதிவின் எதிரொலியாக அனைத்து தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் அறிஞர்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

அதன் ஒரு பகுதியாக “தொடர்ந்த தனது பேச்சுகளின் மூலம், எழுத்துகளின் மூலம் சர்ச்சைகளை உருவாக்கி தமிழ் அறிவுச் சூழலில் தான் ஒரு பேசுபொருளாக இருக்க வேண்டும் என்ற முனைப்பில் தனது பிம்பத்தைக் கட்டமைத்துக்கொண்டு வருபவர் ஜெயமோகன். தமிழ் அறிவுச் சூழலுக்கு மிகவும் அபாயகரமானது இந்தத் தொற்று நோய். இலக்கிய அறிவுச் சூழலில் கேடு பயப்பதும்கூட. ஜெயமோகனின் சமதர்மச் சிந்தனை எதிர்க்குரல், மார்க்சிய எதிர்ப்பு என்பது நாமறிந்த ஒன்று.

எந்த ஆதாரங்களுமில்லாது, ஒரு அனாமதேயம் எழுதியதாக தனி நபர் மீதான வன்மம்; அவதூறு என்பவை நாமனைவரும் ஒன்று சேர்ந்து கண்டனம் செய்யப்பட வேண்டிய ஒன்று. அது சமூக அக்கறையுள்ள கலை, இலக்கிய அறிவுச் சூழல், இடதுசாரிச் சிந்தனைகள், இயக்கங்கள், எழுத்துகள், செயற்படுகள் அனைத்தின் மீதான அவதூறு என்பதால் ஜெயமோகனுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்” என அறிவித்திருந்தனர்.

எஸ்.வி.ராஜதுரை, கோவை ஞானி, ஆ. சிவசுப்பிரமணியம், தோழர் தியாகு கவிஞர் அறிவுமதி, ரவிக்குமார் எம்.பி.,  ச. தமிழ்ச் செல்வன், ஆதவன் தீட்சண்யா, மாலதிமைத்ரி, சுகிர்தராணி, வீ. அரசு. பொதியவெற்பன், பேராசிரியர்கள் கல்விமணி, சரஸ்வதி, காலச்சுவடு கண்ணன், சுகுமாரன் உள்ளிட்ட 100க்கு மேற்பட்டோர் கையெழுத்திட்டு இந்த அறிக்கை வெளியாகி இருந்தது. 

எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் மீது ...

இதன் தொடர்ச்சியாக இந்த அவதூறை எதிர்த்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் புகார் மனுவின் நகல் ஒன்று பா. செயப்பிரகாசத்தின் வழக்குரைஞர் தோழர் அஜிதா மூலம் ஜெயமோகனுக்கு அனுப்பப்பட்டது. அவ்வழக்கின் குறிப்பில், ‘வலைப் பூ’வில் ஏற்றிய அப்பதிவை நீக்கும்படியும், நிபந்தனையற்ற மன்னிப்பை அதே ‘வலைப் பூ’வில் வெளியிட வேண்டும் எனவும் அறிவித்திருந்தது.

இந்த புகார் மனுவுக்கு எதிர்வினையாக ஜெயமோகனும் அவர் சார்பிலான அளவில் சில நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தனது இணையப் பக்கத்தில் எழுதியுள்ளார். “ஒரு கும்பல் கூடி எழுத்தாளனைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லி பத்திரிகைகளுக்கு அனுப்ப முடியும் என்பது தான் அவதூறு” என்றும், “பா.செயப்பிரகாசம் மீதும் கண்டன அறிக்கையில் கையெழுத்திட்ட அனைவர்மீதும் தனித்தனியாக அவதூறு வழக்குகள் தொடரப்படும். அதேபோல் அரசுப் பணியில் இருப்பவர்கள்மீது அவதூறு வழக்கும், துறைரீதியான புகார் அளிக்கப்பட்டு வழக்கை நடத்துவோம்” எனவும் காட்டமாக சூளுரைத்துள்ளார்.

ஜெயமோகன் இந்துத்துவா சித்தாந்தத்தை வலியுறுத்தி எழுதுபவர். சிறு தெய்வங்கள் நாட்டார் மரபுகள் தொன்மங்கள் நவீன இந்துக் கலாச்சாரத்தில், கரைந்து புது வடிவமெடுத்து விட்டன என்கிறார்.

அவரது ‘வெண் முரசு’ ‘விஷ்ணுபுரம்’ போன்ற  தடித்த புராணிய நாவல்கள் மூலம்,  பழைய தொன்மங்களின் மெய்யியலை ஆன்மிகத்தில் தேடுவதாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். இரண்டாயிரம் வருட பார்ப்பனிய ஆதிக்கக் கருத்தியலுக்கு ஆதரவான மூடு உரைகளை நுட்பமாக புதிய எழுத்து நேசிகளின் மூளைக்குள் நுழைக்கிறார்.

ஒருவகையில் சங்பரிவாரக் கருத்தியலுக்கு வக்காலத்து வாங்கும் இவருக்கு மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கங்களின் செயல்பாடுகளும், அதன் தத்துவங்களும் பிழையாகத் தெரிவதில் வியப்பில்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *