Is it mandatory for us to properly understand and follow the grammatical structure of Tamil today? - Prof. Deiva Sundaram Nainar. Book Day

இன்றைய தமிழின் இலக்கணக் கட்டமைப்பை நாம் முறையாக உணர்ந்துகொள்வதும் பின்பற்ற வேண்டியதும் கட்டாயமா?



எழுத்துத் தமிழை அதற்கே உரிய இலக்கணக் கட்டமைப்பின் அடிப்படையில்தான் எழுதவேண்டுமா? புணர்ச்சி விதிகளைப் பின்பற்றவேண்டுமா? அவ்வாறு பின்பற்றாவிட்டால் என்ன குறைந்துவிடும்? மக்களுக்குப் புரியாமலா போய்விடும்? தினத்தந்திபோன்ற நாளிதழ்களில் புணர்ச்சி விதிகளைப் பின்பற்றாமல் செய்திகள் வெளிவருகின்றனவே! அவற்றை மக்களால் புரிந்துகொள்ளமுடியவில்லையா? இவைபோன்ற பல வினாக்களை நண்பர்கள் சிலர் முன்வைப்பதைப் பார்க்கிறோம். இதற்கு என்ன விடை அளிப்பது?

மனிதமூளைக்கு உள்ள மொழித்திறன் வியக்கத்தக்கது. ஒரு குறிப்பிட்ட தொடரைக் கேட்கும்போதோ அல்லது வாசிக்கும்போதோ … அத்தொடருக்கு முன்பின் உள்ள தொடர்களையும், குறிப்பிட்ட கருத்தாடல் நடைபெறுகிற மொழிசாராச் சூழல்களையும் அடிப்படையாகக் கொண்டு … நம்மால் குறிப்பிட்ட தொடரின் பொருண்மையைப் புரிந்து கொள்ள முடிகிறது. குறிப்பிட்ட தொடரில் இலக்கண மீறலோ, புணர்ச்சிவிதிகள் மீறலோ இருந்தாலும்… நம்மால் அந்தத் தொடரின் பொருண்மையைப் புரிந்துகொள்ளமுடிகிறது. மீறப்பட்ட விதிகளை நாம் புரிந்துகொண்டு…. அவற்றைச் செயல்படுத்தி… குறிப்பிட்ட தொடரின் பொருண்மையைப் புரிந்துகொள்கிறோம்.

”கைப்பிடி” ”கைபிடி” என்ற இரண்டு தொடர்களும் வெவ்வேறு பொருண்மைகளை வெளிப்படுத்தினாலும்…. பேசுபவர் இந்த வேறுபாட்டைப்பற்றிக் கவலைப்படாமல் பேசினாலும்…. முன்பின் தொடர்களையும் பிற புறச் சூழல்களையும் கவனத்தில்கொண்டு, நாம் பேசுபவர் கூற விரும்புகிற கருத்தைப் புரிந்துகொள்கிறோம். பேசுபவரே தவறு இல்லாமல் பேசினால்… கேட்பவர் இந்த இரண்டாவது வேலையைச் செய்யாமலேயே… பொருண்மையைப் புரிந்துகொள்ளமுடியும். இல்லையென்றால், இந்தத் ”திருத்தல்” பணிகளை கேட்பவர் மேற்கொள்வார். அவ்வளவுதான். எனவே எப்படி வேண்டும் என்றாலும் பேசினாலும் அல்லது எழுதினாலும்… மற்றவர்கள் ”திருத்தல் பணியை” மேற்கொள்ளாமல் … முன்வைத்த கருத்துக்களைப் புரிந்துகொள்வார் என்பது உண்மை இல்லை! சந்தியோ, சாரியையோ, பிற இலக்கணக் கட்டமைப்புக் கூறுகளோ சும்மா அழகியலுக்காகப் பயன்படுத்தப்படவில்லை! ஒவ்வொரு விதியும் கருத்தாடல் வெற்றிகரமாக நடைபெறுவதற்காகவே நிலவுகின்றது என்பதை மனதில் கொள்ளவேண்டும்!

இது ஒருபுறம்… மறுபுறம் கணினி தொடர்பான ஒரு உண்மை! கணினி வாயிலாக எல்லாவிதமான மொழிவழிக் கருத்தாடல்களையும் மேற்கொள்ளத் தற்போது நாம் அனைவரும் விரும்புகிறோம். நாம் பேசுவதைக் கணினியே தவறு இல்லாமல் எழுதவேண்டும்… நாம் அதில் தட்டச்சு செய்வதை அதுவே பேச்சாக மாற்றவேண்டும்! ஒரு மொழியில் பேசினால் அல்லது எழுதினால், அதை மற்றொரு மொழியில் மொழிபெயர்த்துத் தரவேண்டும். ஒரு புத்தகத்தைப் படித்து, புரிந்துகொண்டு, அதன் சுருக்கத்தைத் தரவேண்டும்!



இதுபோன்ற வசதிகளைக் கணினிவாயிலாக நாம் பெறவேண்டும் என்றால்…. நமக்கு உள்ள மொழி அறிவை அதற்கு அளிக்கவேண்டும்! இங்கு நாம் கவனிக்கவேண்டிய மிக முக்கியமான ஒன்று… மனிதமூளைக்கு உள்ள இயற்கைமொழித்திறன் கணினிக்குக் கிடையாது. கருத்தாடல் நடைபெறுகிற புறச் சூழல், பேசப்படுகிற பொருள் ஆகியவற்றை எல்லாம் இப்போது கணினிக்கு நம்மால் கொடுக்க இயலாது.

இந்தச் சூழலில்… தனக்குக் கொடுக்கப்படுகிற விதிகளின் அடிப்படையில் அமைந்த தொடர்களைத்தான் கணினியால் புரிந்துகொள்ளமுடியும்! ! மாறாக, நாம் மேற்கூறிய (மனிதமூளையின்)”பிழைதிருத்தப் பணிகளை” கணினியும் மேற்கொண்டு, தனக்குமுன் வைக்கப்படுகிற விதிகளுக்கு அப்பாற்பட்ட தவறான தொடர்களைப் புரிந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு! விதி என்றால் விதி! முழுக்க முழுக்கக் கணித அடிப்படையில் இயங்குகிற ஒன்றே கணினி! எனவே விதிகளில் தவறுகள் இருந்தால், அவற்றை நம் மூளை திருத்திக்கொண்டு, புரிந்துகொள்வதுபோல, கணினியும் திருத்திக்கொண்டு, பொருண்மையைப் புரிந்துகொள்ளும் என்று நினைப்பது தவறானது ! இதுதான் புறவய உண்மை!

எனவே இன்றைய கணினி உலகில் முறையாக… தமிழின் கட்டமைப்பை … இலக்கண விதிகளை … முறையாகக் கணினிக்குக் கற்றுக் கொடுக்கவேண்டியது இன்று தமிழ் வளர்ச்சிக்கான ஒரு முக்கியமான பணியாகும்! எனவே இந்த இலக்கண விதிகளைச் சரியாக நாம் புரிந்துகொள்ளவில்லை என்றாலோ அல்லது தவறாகக் கணினிக்குக் கொடுத்தாலோ… கணினி தனது மொழிச்செயல்பாடுகளில் முன்னேறமுடியாது! தமிழைப் புரிந்துகொண்டு… நமக்கு உதவியாக … கணினியால் செயல்படமுடியாது!

எனவே இன்றைய எழுத்துத்தமிழின் தரப்படுத்தம் மிக மிக முக்கியமான ஒரு பணியாகும்! ”நான் எப்படி வேண்டும் என்றாலும் பேசுவேன், எழுதுவேன். இருந்தாலும் அதைக் கேட்பவர்கள் தவறுகளைத் திருத்திக்கொண்டு, பொருண்மையைச் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும்” என்று கூறுவது சரி இல்லை! இது ஒரு விதண்டாவாதமே ஆகும்!

நாமும் முறையாகத் தமிழைப் பயன்படுத்துவோம் .. (மாணவர்களுக்கும்) கணினிக்கும் முறையாகத் தமிழைக் கற்றுக்கொடுப்போம்! இதுவே தொன்மையும் தொடர்ச்சியும் வளர்ச்சியும் உடைய தமிழ்மொழியை அடுத்த உயர்கட்டத்திற்கு வளர்த்தெடுத்துச் செல்லும் பாதையாகும்!

– பேரா. தெய்வசுந்தரம் நயினார்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *