climate change / Scientist Dr.T.V.Venkateswaran \ த.வி. வெங்கடேஸ்வரன் / சுற்றுச்சூழல் கட்டுரை / Environment Article

காலநிலை மாற்ற சிக்கலுக்கு மக்கள் தொகை பெருக்கம் தான் காரணமா?

வலைதளத்தில் இந்த கட்டுரை வெளியான பின்னர் சிலர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில்

முந்தைய கட்டுரையை வாசிக்க கிளிக் செய்யவும் : உலக சுற்றுச்சூழல் தின சிறப்பு கட்டுரைகள்: காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த முடியுமா..? – த.வி. வெங்கடேஸ்வரன்

1) ஒசான் ஓட்டை அடைபட்ட்டுவிட்டது என்று இந்த கட்டுரை பெருமையாக பேசுகிறது; ஆனால் வரலாற்றில் இதுவரை நாம் சந்தித்த மிகபெரும் – ஐரோப்பிய ஒன்றியத்தின் பரப்பளவு விஸ்தீரணம் கொண்ட -ஓசான் ஓட்டை  செப்டம்பர் 2000 இல் நிகழ்ந்தது. அதவிட பெரிய ஓட்டை 2023  ஏற்பட்டது என ஆய்வுகள் கூறுகின்றன. முரணாக உள்ளதே?

ஓசான் படலத்தின் தடிமன் குறிப்பிட்ட அளவுக்கு கிழ் மெலிந்து போவதை நாம் ஓட்டை என்கிறோம்.  1979 முதல் ஓசான் படல தடிமன் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படுகிறது. 

மனித செயல்கள் மூலம் வளிமண்டல மாசு மட்டுமே ஒசான் படலம் மெலிவதற்கு கரணம் அல்ல. இயற்கை நிகழ்வுகள் ஒட்டியும் ஒசான் படல தடிமன் ஊசாலடும். ஆண்டுதோறும் பருவகால மாற்றம்; சூரியனின் பதினோரு ஆண்டு இயக்க ஊசால் சார்ந்த மாற்றம் என இயற்கை காரணங்களின் தொடர்ச்சியாகவும் தடிமன் மாறும். 

இரண்டாவதாக சுவிட்ச் போட்டால் லைட் ஒளியை உமிழ்வது போல இயற்கையில் நடைபெறுவது இல்லை. பந்தை மேலே எறிந்தால் குறிப்பிட்ட உயரம் சென்று தான் கிழே விழும். அதுபோல ஏற்கனவே உமிழ்ந்த ஓசான் படல தீங்கு விளைவிக்கும் மாசு காரணமாக இன்றும் அதன் விளைவு இருக்கும். மெல்ல மெல்ல தான் தீங்கு மறையும். இவற்றை கணக்கில் கொண்டுதான் ஓசான் படலம் மீள்கிறது என்ற முடிவுக்கு வருகிறார்கள். 

மார்க் வேப்பர் (Mark Weber) முதலியோர் சமர்ப்பித்துள்ள ஆய்வுக் கட்டுரையில் (Global total ozone recovery trends attributed to ozone-depleting substance (ODS) changes derived from five merged ozone datasets) ஓசான் படலத்துக்கு தீங்கு விளைவிக்கும் பொருள்கள் பயன்பாடு குறைப்பு காரணமாக பூமியின் வடகோளம் தென்கோளம் ஆகிய இரண்டு பகுதியிலும் ஓசான் ஓட்டை சீரடைந்து வருகிறது என சுட்டிக்கட்டுகிறார்கள். இது மாண்ட்ரீல் ஒப்பந்தத்தின் வெற்றி எனவும் கூறுவது கவனிக்கத் தக்கது. 

Figure SEQ Figure \* ARABIC 1: அண்டார்டிகா பகுதியில் ஓசான் படல குறைபாடு – தீங்கு விளைவிக்கும் பொருள்களின் செறிவு இடையே உள்ள தொடர்பு

எனவே ஓசான் ஓட்டை பிரச்னைக்கு பெருமளவு தீர்வு காணப்பட்டுள்ளது. இபோதும் சில ஓசான் படல தீங்கு விளைவுக்கும் பொருள்களின் பயன்பாட்டை கட்டுபடுத்த முயல்கிறார்கள். ஆனால் நவதாரளமய கொள்கையின் காரணமாக கட்டுபாடுகளுக்கு பதில் சந்தை தீர்வை முன்வைக்கும் போக்கு எழுந்துள்ளது. இவற்றின் காரணமாக வரும்காலத்தில் புதிய சிக்கல் ஏற்படலாம். 

2) உங்கள் கட்டுரையை படித்தால் தொழில்நுட்பம் கொண்டு மட்டுமே காலநிலை மாற்றத்துக்கு தீர்வு காணமுடியும் என்பது போன்ற தொனி தெரிகிறேதே?

இல்லை. மாற்று தொழில்நுட்பங்கள் அவசியம். குறைவான மாசு ஏற்படுத்தும் தொழில்நுட்பங்கள் முதல் கார்பன் மாசு ஏற்படுத்தாத தொழில்நுட்பம் ஆற்றல் வீண் செய்யாத தொழில்நுட்பம் என பல்வேறு தொழில்நுட்பங்கள் அவசியம். இன்றியமையாதது. ஆனால் அவை மட்டுமே போதாது.  சூழல் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் தொழில்நுட்பங்கள் தானே தோன்றாது; அப்படி உருவானாலும் அவை பயனுக்கு வராது. லாபம் என்பதை குறிக்கோளாகவும் சந்தை பொருளாதரத்தை அமைப்பாகவும் கொண்டுள்ள சமூக-பொருளாதார கட்டமைப்பில் புதிய தொழில்நுட்பங்களுக்கு மாறுவது எளிதாக இருக்காது. முதலாவதாக மாற்று தொழில்நுட்பங்களின் கூறுகளின் அறிவு சொத்துரிமை பெருநிறுவனங்களின் கையில் சிக்கி பயனுக்கு வருவது தடைபடும். இரண்டாவதாக லாபகரமானது இல்லை என்ற பெயரில் இவை கைவிடப்படும். எடுத்துக்காட்டாக ஆயுள் முடிந்த சூரிய மின்தகடுகளில் உள்ள வெள்ளி, சிலிக்கான் போன்ற பிற உயர் மதிப்பு கனிமங்கள் இன்று வீணடிக்கப்படுகிறது. குப்பை என்று வீசப்படுகிறது. இவற்றை மறுசுழற்சி செய்வதைவிட கனிமங்களை தோண்டி எடுத்து பயன் செய்வது மலிவு என்று கூறப்படுகிறது. அதாவது மறுசுழற்சியை தடுத்து நிறுத்துவது லாப நோக்கு மட்டுமே. எனவே தான் காலநிலை மாற்றத்தை தவிர்க்கும் தொழில்நுட்பத்துக்கு மாறுவதற்கு அரசு- சமூக நிர்பந்தம் அவசியம். பொதுத்துறை ஆய்வு அவசியம். மூலதனத்துக்கு கடிவாளம் போடுவது அவசியம். அதாவது மாற்று தொழில்நுட்பம் இன்றியமையாதது; ஆனால் போதுமானது இல்லை; இதுவே நான் கூற வரும் கருத்து. 

3) நுகர்வு குறைப்பு (reducing consumption)  வாழ்முறை மாற்றம் (lifestyle changes) இல்லாமல் காலநிலை மாற்றம் மட்டுமல்ல பூமியை நிலைநிறுத்துவது கூட சாத்தியம் இல்லை என்று சூழலியளாளர்கள் கூறுகிறார்கள். இது குறித்து உங்கள் கட்டுரையில் மூச்சு பேச்சே இல்லை; ஒருவித எள்ளல் தொனி தான் உள்ளது.

வாழ்முறை மாற்றம் (lifestyle changes) என்பதை முதலில் எடுத்துக்கொள்வோம். உலகளாவிய கார்பன் டை ஆக்சைடு (CO2) உமிழ்வுகளில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு போக்குவரத்து மூலம் ஏற்படும் மாசு ஆகும். 

போக்குவரத்து எனும்போது பொதுவே விமானப் போக்குவரத்து கூடுதல் கவனம் பெரும். ஆனால் உலகளாவிய கார்பன் மாசில் வெறும் 2.5% பங்கு தான் விமான போக்குவரத்து. இதன் பொருள் இந்த துறை மீது கவனம் செலுத்தவேண்டாம் என்பதல்ல.  எதன் மீது கவனம் குவிக்க முன்னுரிமை தருகிறோம் என்பது தீர்வை அடைய அவசியம். 

Figure 2: பொருளாதார துறை வாரியாக எவ்வளவு கார்பன் மாசு ஏற்படுகிறது என அறிந்து எதில் கவனம் குவிக்க வேண்டும் என நாம் முடிவுக்கு வரலாம்.

மொத்த கார்பன் மாசில் சாலை போக்குவரத்து பங்களிப்பு 15% ஆகும். போக்குவரத்து மூலம் ஏற்படும் கார்பன் மாசை மட்டும் கணக்கில் கொண்டால் அதில் 45.1% பங்களிப்பு பயணிகள் வாகனங்கள் அதாவது கார்கள் மற்றும் பேருந்துகள் வழி ஏற்படுகிறது.  சரக்கு போக்குவரத்து 29.4% பங்களிப்பு செய்கிறது.  

இன்று தனிநபர் போக்குவரத்து அமைப்பு தான் முதன்மையாக உள்ளது. கல்வி கடனை விட வாகன கடன் எளிதில் கிடைக்கிறது. நகரங்களில் நாம் வாழும் இடன் ஓரிடம்; வேலை வேறிடம் எனும்போது தினம் தினம் பயணம் செய்யவேண்டியுள்ளது.  போது போக்குவரத்து இல்லதா நிலையில் ஒவ்வொருவரும் இரு சக்கிர வாகனம் கார் என வாங்கும் நிலை உருவாகிறது. 

மெட்ரோ, போதிய பஸ் வசதி போன்றவற்றை ஏற்படுத்தினால் தனியார் வாகனங்களை கட்டுப்படுத்த முடியும். பெரும் அளவுக்கு கார்பன் மாசை குறைக்க முடியும். ஆம், மெட்ரோ போன்ற கட்டுமானத்தின் பொது கார்பன் மாசு ஏற்படும். ஆனால் நீண்ட கால நோக்கில் பார்க்கும்போது மாசு அளவு குறையும். 

இதுபோன்ற வாழ்முறை மாற்றம் (lifestyle changes) மிகமிக அவசியம். ஆனால் இவற்றை சமூக கட்டமைப்பாக தான் மேற்கொள்ள முடியும். அரசின் தலையீடு அவசியம்.  இப்படிப்பட்ட வாழ்முறை மாற்றங்களை  (lifestyle changes) இருகரம் நீட்டி வரவேற்க வேண்டும். 

வேறொரு உதாரணத்தை காண்போம். மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் (Council of Scientific and Industrial Research – CSIR) ஏற்பாடு செய்த 2024 புவி தின விழாவில் பங்கெடுத்த IIT-பம்பாய்யைச் சேர்ந்த பேராசிரியர் சேத்தன் சோலங்கி வாரம் ஒருநாள் அயார்ன் செய்யாத கசங்கிய ஆடையை அணிந்து வந்தால் சுமார் தலைக்கு சுமார் 200 கிராம் கார்பன் மாசை தவிர்க்கலாம் என்று ஆலோசனை கூறினார். இதுவும் ஒருவகை வாழ்முறை மாற்றம் (lifestyle changes) தான். (How Bad Are Bananas?- The Carbon Footprint of Everything எனும் நூலில் மைக் பெர்னர்ஸ்-லீ வாரம் ஐந்து உடையை அயார்ன் செய்தால் 25 கிராம் கார்பன் மாசு ஏற்படும் என்கிறார்; 200 கிராம் எப்படி வந்தது என்பது விளங்கவில்லை.)

அயார்ன் செய்யாத கசங்கிய ஆடையை அணிவது குற்றம் அல்ல; தவறு அல்ல. ஆனால் இதுபோன்ற வேடிக்கை நடவடிக்கைகள் மூலம் காலநிலை மாற்றத்தை தடுப்பதில் நாமும் பங்கு வகிப்போம் எனக்கூறுவது ஏமாற்று வேலை. 

Figure 3: இந்தியாவில் எந்தெந்த துறை எவ்வளவு கார்பன் மாசு செய்கிறது என்ற தகவலை உலக நிலையோடு ஒப்பிட்டு பார்த்தல் பெரும் வேறுபாடு தென்படும். எனவே அந்தந்த நிலைக்கு ஏற்ற கொள்கைகள் தேவை.

4) ஆனால் நுகர்வு குறைப்பு (reducing consumption) அவசியம் தானே? 

2020 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு படியே சராசரி அமெரிக்க மற்றும் சவுதி அரேபியாவின்  சராசரி தனிநபர்  கார்பன் உமிழ்வு ஆண்டுதோறும் 14.2 மற்றும் 13 மெட்ரிக் டன் ஆகும். பிரேசில் மற்றும் இந்தியாவில் இது முறையே வெறும் 1.94 மற்றும் 1.57 மெட்ரிக் டன்கள் மட்டுமே.

நிச்சயமாக மேலைநாடுகளில் தனிநபர் நுகர்வு குறைப்பு- குறிப்பாக வீண் செய்தலை நீக்குதல், பிளாஸ்டிக் பொதி போன்றவற்றை தவிர்ப்பது அவசியம்.  ஆனால் இவை இந்தியா போன்ற நாடுகளுக்கு பொருந்துமா? 

இந்தியாவிலும் நாம் நமது தினசரி நடவைக்கைகள் மூலம் ஆற்றல் வீண்செய்தல் போன்றவற்றை எல்லோரும் தவிர்க்கலாம். ஆனால் சாதாரண மனிதனின் நுகர்வு பாதிப்பு என்ன? உள்ளபடிய நுகர்வை யார் குறைக்க முடியும்?  இந்தியாவில் வருமான நிலை கிழே உள்ள படத்தில் காண்க. 

2012 புள்ளி விவரம் படியே இந்தியாவில் 90% பேர் மாதம் ரூபாய் 25000 க்கும் குறைவாக வருமானம் ஈட்டுகின்றனர். 95%  ரூ 65000க்கும் கிழ். வெறும் 1%  மட்டுமே மாதம் 3,70,000 ரூ வுக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள். 

சராசரி இந்தியர் நுகர்வதை போல பல மடங்கு நுகர்வு மேலை நாடுகளில் உள்ளது. இந்தியா, பிரேசில் மற்றும் பிற வளரும் நாடுகளில் உள்ள பணக்கார 10%  சதவிகித நபர்களை விட மேலும் கூடுதல் அளவு வளரும் நாடுகளின் சராசரி கார்பன் காலடித்தடம் ( carbon footprint) உள்ளது. 

எனவே ஒரளவுக்கு இந்தியவில் கூட மேல்தட்டில் உள்ள 1% மக்கள் நுகர்வை குறைக்க வேண்டும் என்று கூறுவது சரியானது தான்.  மாதம் ரூபாய் 25000 க்கும் குறைவாக வருமானம் ஈட்டும்  90% பேர் நுகர்வை குறைக்க முடியாமா? உள்ளபடியே இவர்கள் கையில் மேலும் பணம் புழங்கி கூடுதல் நுகர செய்வது தான் சமூக நீதி அல்லவா? 

5) ஜெஃப் கிப்ஸ் இயக்கிய Planet of the Humans எனும் ஆவணப்படத்தில் தொழில்நுட்பம் தீர்வை தரும் எனும் பார்வை,  மக்கள் தொகை பெருக்கம், எல்லையற்ற வளர்ச்சி முதலியவை காலநிலை மாற்றத்துக்கு காரணம் என தெளிவாக விளக்கம் தருகிறார்களே? 

ஒரு தோழர் பரிந்துரைத்தபின்னர் தான் இந்த படத்தை அதே இரவு பார்த்து முடித்தேன். மிகவும் சிறப்பாக மேலை நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் எப்படி தனியார் துறை சூழல் இயக்கத்தையும் தன்னுள் சுவீகரித்துக்கொண்டு விட்டது, அல்கோர் போன்ற புகழ்மிக்க சூழல் செயல்பட்டளர்கள் திரைமறைவில் கார்பன் மாசு செய்யும் நிறுவனங்களோடு தொடர்பு கொண்டுள்ளார்கள்,  கார்பன் தொழில்நுட்பத்துக்கு மாற்று தீர்வு என முன்வைக்கும் பையோடீசல் போன்றவை வெறும் லாப நோக்கோடு மேற்கொள்ளப்படும் மோசடி என்பதை இந்த படம் தெள்ளத்தெளிவாக எடுத்துக்கூறுகிறது. 

இந்த ஆவணப்படத்தின் முத்தாய்ப்பாக ” குறிப்பிட்ட வரையறை கொண்ட கோளில் எல்லையற்ற வளர்ச்சி வளர்ச்சி என்பது தற்கொலைக்கு சமானம் என்பதை மனிதர்களாகிய நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பூமியின் நிலைத்தன்மைக்கு கூடுதலாக நமது எண்ணிக்கை உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். காலநிலை மாற்றத்தை ஏறபடுத்தி கிரகத்தை அழிப்பது கார்பன் டை ஆக்சைடு மூலக்கூறு அல்ல, அது நாம்தான் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்”  எனக்கூறுகிறது. 

இந்த கூற்றுகளில் காணக்கிடைக்கும் மால்தூசிய பார்வை கவலையை தருகிறது. பெண் கல்வி, வளர்ச்சி ஆகியவை காரணமாக உலக மக்கள் தொகை கட்டுக்குள் வந்து கொண்டு இருக்கிறது.  ஆண்டுக்கு 2.1  என்ற வேகத்தில் 1970களில் இருந்த மக்கள் தொகை பெருக்க வீதம் தற்போது வெறும் 0.8%  என்று குறைந்து விட்டது. சீன போன்ற நாடுகளில் இது வெறும் பூச்சியத்துக்கு நிகர்.  உலகம் முழுவதும் போதிய வளர்ச்சி பெண் கல்வியை உறுதி செய்தால் மக்கள் தொகை கட்டுக்குள் வந்துவிடும். 

“மனிதர்களாகிய நாம்” எனக்கூற வரும்போது இதில் உள்ள ‘நாம்’ யார்? மாதம் ரூ 65000க்கும் கிழ் வருமானம் ஈட்டி வெறும் 0.56 டன் கார்பன் காலடித்தடம் ஏற்படுத்தும் நபர்களா? இவர்களின் எண்ணிகையா உலகை அச்சுறுத்துகிறது? இவர்களுக்கு இன்னம் கூடுதல் ‘வளர்சி’ ஏற்படுத்திக்கொடுத்தாலும் அதுவா பிரச்னை? . 

“காலநிலை மாற்றத்தை ஏற்படுத்துவது கார்பன் டைஆக்சைடு அல்ல நாம் தான்” என்றால் எதனை குறைப்பு செய்ய நாம் முயலவேண்டும்? கொள்ளை நோய் போன்றவற்றில் மனிதர்கள் மடிந்து போகட்டும் எனக்கொள்வதா? அல்லது கார்பன் மாசு செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதித்து தடை செய்வதா?

6)  சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல மக்கள் தொகை பெருக்கமும் காரணம் தானே?

குருவி தன் அலகால் நீரை எடுத்து வீராணம் ஏரியை காலி செய்துவிட முடியுமா என்ற பழமொழியும் உள்ளது தானே. சில சமயம் அளவு மிகமிக நுணுக்கமாக இருப்பதால் பெரும் எண்ணிக்கையில் இருந்தாலும் கணிசமான தொகை ஆகாது.  

2021இல் ஜெமியுங் லீ முதலியோர் நடத்திய ஆய்வின் படி  இந்தியாவின் நடுமட்ட தனிநபர் கார்பன் காலடித்தடம் ஆண்டுக்கு வெறும் 0.56 டன்  மட்டுமே. இதிலும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை எடுத்துகொண்டால் மின்சாரத்துக்காக நடுமட்ட தனிநபர் கார்பன் காலடித்தடம் ஆண்டுக்கு 0.19 டன், உணவு  0.12 டன் பல்வேறு விதமான நுகர்வு பொருள்கள் நுகர்வு  0.07 டன் மட்டுமே.   எனவே பல கோடி நபர்கள் இருந்தாலும் உலகின் கார்பன் காலடித்தடதை ஒப்பிட்டால் இவர்களின் மொத்த கார்பன் காலடித்தடம் மிக சொற்பமே ஆகும்.  உள்ளபடியே வளமான வாழ்வு கிடைக்க இந்த பகுதியினரின் நுகர்வு கூடுவது தான் சமூக நீதி, 

மக்கள் தொகை பெருக்கம் அல்ல முக்கிய காரணம்; பெருமளவு வீண் செய்யும் உற்பத்தி முறை, மாற்று இருந்தாலும் லாபகரமானது இல்லை என்று கூறி சூழல் இணக்கமான தொழில்நுட்பங்களை பயன்படுத்த தவறுவது ஆகியவை தான் முக்கிய காரணாம். 

காலநிலை சிக்கலுக்கு மக்கள் தொகையை முக்கிய காரணமாக கூறுபவர்கள் ஒன்று எளிமையான அப்பாவியாக இருக்க வேண்டும், அல்லது முதலாளித்துவத்தின் கோர முகம் அம்பலப்படுவதை தடுக்க முயலும் நபராக இருக்கவேண்டும் அல்லது மனிதர்கள் கணிசமான அளவு மடிய வேண்டும் அப்போது தான் பூமியில் எல்லா உயிரிகளுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று கருதக்கூடிய ஆழ் சூழலியல் (deep ecology) தத்துவத்தை பின்பற்றுபவராக இருக்கவேண்டும். 

கட்டுரையாளர்;

can-climate-change-be-controlled-environment-articlr-by-scientist-dr-t-v-venkateswaran

த வி வெங்கடேஸ்வரன் தற்போது மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசியராகப் பணியாற்றுகிறார். அறிவியல் எழுத்தாளர். மக்கள் அறிவியல் இயக்கச் செயல்பாட்டாளர்.

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 2 thoughts on “காலநிலை மாற்ற சிக்கலுக்கு மக்கள் தொகை பெருக்கம் தான் காரணமா?  – த.வி. வெங்கடேஸ்வரன்”
  1. காலநிலை மாற்றத்திற்கு இந்திய மக்கள் தொகை பெருக்கம் ஒரு பெரிய காரணம் இல்லை என்று தரவுகளுடன் எடுத்துச் சொல்லி உள்ளார் புரிகிறது . ஆனால் தேச முன்னேற்றத்திற்கும் தனிப்பட்ட குடும்பங்கள் ,குழந்தைகளின் முன்னேற்றத்திற்கும் மக்கள் தொகை பெருக்கம் மாபெரும் தடையாக இருப்பதை அனுபவ ரீதியில் என்னால் உணர முடிகிறது .ஒரு குழந்தை இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் குடும்பங்களில் அந்த குழந்தைகளுக்கு நல்ல சத்தான உணவு கல்வி முதலியவை கிடைப்பது சுலபமாக இருக்கிறது .குறிப்பாக விளிம்பு நிலை மக்கள் ஏழை எளிய மக்கள் ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைகளுடன் நிறுத்துவது கட்டாயமாக்கப்பட வேண்டும். அப்போதுதான் அந்த குழந்தைகளுக்கு உரிய நல்ல எதிர்காலத்தை உத்திரவாதப்படுத்த முடியும்.

  2. மேற்கண்ட விளக்கவுரையில் குறிப்பிட்டதைப் போல, பொருட்களை வீணடிப்பது, தேவையற்ற பொருட்களை வாங்கி குவிப்பது உள்ளிட்ட போன்ற அன்றாட வாழ்வியலில் மாற்றம் வேண்டும். இதனோடு நாம் பொது போக்குவரத்தை அதிகப்படுத்த வேண்டும். பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அன்றாட வாழ்க்கையின் பழக்கமாக மாற வேண்டும். நகரங்களில் பெட்ரோல் / பேட்டரி வாகனத்திற்கு பதிலாக மிதிவண்டி (bicycle) வாகனத்தை பயன்படுத்த ஊக்குவித்தால் நல்லது. மிதிவண்டியை மிதிப்பதற்கு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மிக எளிதாக செல்வதற்கு கண்டுபிடிப்புகளை கண்டறிய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *