சூரப்பாவின் நேர்மையும் வளைந்து கொடுக்காத தன்மையும் உச்சி முகரத் தக்கதா? – நா.மணி

சூரப்பாவின் நேர்மையும் வளைந்து கொடுக்காத தன்மையும் உச்சி முகரத் தக்கதா? – நா.மணி



‌ புதிய கல்விக் கொள்கையின் ஆபத்துகளை மறந்து அல்லது மறைத்து அதற்கு ஆதரவாக ஒரு சில அறிவுஜீவிகள் குரல் கொடுக்கின்றனர். அதேபோல் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விசயத்திலும் அவர் நேர்மையானவர் என்று, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஒருவர் ஓங்கி ஒலித்தார். சமூக வலைதளங்களில் அது பரவலாக வலம் வந்தது. அவற்றையெல்லாம் பார்த்து மக்கள் நீதி மையத்தின் தலைவர் சூரப்பா விசயத்தில், கமல்ஹாசன் போன்றோர் உணர்ச்சிவசப்பட்டு விட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. “அண்ணா பல்கலைக்கழகத்தை உலகத் தரத்திற்கு கொண்டு செல்ல முனைந்தார் சூரப்பா. அதிகாரத்தின் முன்பு நெளிந்து போகவில்லை. எனவே முடிப்பது தான் அவர்கள் பழக்கம். சூரப்பாவின் கொள்கைகளிலும், அரசியல் நிலைப்பாடுகளிலும் நமக்கு மாற்று கருத்து உண்டு. ஆனால் நேர்மையாக இருக்கிறார் என்பதற்காக வேட்டையாடப் படுகிறார். ஊழலுக்கும் நேர்மைக்குமான போரில் நான் நேர்மையின் பக்கம்” இதுதான் மக்கள் நீதி மையத்தின் தலைவர் அறிக்கையின் சாரம். உலகப் புகழ்வாய்ந்த ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மீது கூட ஊழல் புகார்கள் இல்லை. அந்த ஜெகதீஷ் குமாரின் கடந்த ஐந்தாண்டு பதவிக் காலத்தில், பல சீரழிவு வேலைகள் அரங்கேறி வருகிறது. பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் என்று குடியரசு தலைவருக்கு பல மனுக்கள் சென்றுள்ளது. அப்பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திலேயே, குண்டர்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டனர். உலகோர் அனைவரும் கண்டு அதிர்ச்சி அடைந்த தருணங்கள் அவை. அதனைக் கூட அவர் இன்று வரை கண்டுகொள்ளவில்லை. அங்கு ஜனநாயகத்தின் குரல் வலை, முழுப் பலம் கொண்டு நெறிக்கிறார். அவரது நேர்மைக்காக கமல் ஏற்றுக் கொள்வாரா? என்று தெரியவில்லை.

தமிழ் நாட்டில் துணைவேந்தர் பதவிகளுக்கு பணம் இன்றி மிகச் சிறந்த கல்வியாளர்கள், அறிவுஜீவிகள், விஞ்ஞானிகள் நியமிக்கப்பட்ட காலத்தில் கூட, துணை வேந்தர் நியமனங்களில் அரசியல் இருந்தது. ஆக, அரசியல் இன்றி துணை வேந்தர் நியமனங்கள் இல்லை. சூரப்பாவிற்கும் ஓர் அரசியல் இருக்கிறது. அவருக்கு ஓர் கொள்கை இருக்கிறது என்று கமல்ஹாசனே ஒத்துக் கொள்கிறார். அந்த அரசியல் எப்படிப்பட்ட அரசியல்? எப்படிப்பட்ட கொள்கை என்பது கமல்ஹாசனுக்கு நன்கு தெரியும். அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மு. அனந்தகிருஷ்ணன் ஒரு கூட்டத்தில் கூறினார், ” மாணவர்கள் ஒரு முறை என்னிடம் ஒரு கோரிக்கையை என்னிடம் வைத்தனர். காஞ்சி சங்கராச்சாரியாரை பல்கலைக்கழத்திற்கு அழைத்து வர அனுமதிக்க வேண்டும் என்பதே அக்கோரிக்கை. மிக்க மகிழ்ச்சி அழைத்து வாருங்கள். பல்கலைக்கழகத்திற்கு அல்ல. என் வீட்டிற்கு அழைத்து வாருங்கள். அங்கு இருவரும் சேர்ந்து அவரது அருளாசியை கேட்கலாம். ஆனால், பல்கலைக்கழகம் என்பது பல மத நம்பிக்கையுள்ளவர்கள் படிக்கும் இடம். ஒரு மதசார்பற்ற நிறுவனம். அங்கு அழைத்து வருவதை நான் அனுமதிக்க முடியாது” என்று கூறி அவர்களை திருப்பி அனுப்பினேன் என்றார். அப்படியான ஓர் பல்கலைக்கழகத்தில் தான், இந்துத்துவத்தை முன்னிருத்தி தனது கொள்கைகளையும் அரசியலையும் வகுத்து செயல்படுத்தி வரும் ஒரு கட்சியால் பரிந்துரை செய்யப்பட்ட‌ ஆளுநர் மூலம் நியமிக்கப்பட்டவர் வழியாக சூரப்பா தமிழ் நாட்டிற்கு வந்தார். மிகவும் ஆபத்தானது வகுப்புவாதமா? ஊழலா? என்றால், வகுப்புவாதமே! என்று இன்றைய இந்திய அரசியல் ஆபத்துகள் தெரிந்த அனைவரும் ஒத்துக் கொள்வர்.ஆனால், அவரது அரசியல் பற்றி எனக்கு கவலை இல்லை ‌ அவரது நேர்மை போதும் என்கிறார்.



இப்படிப்பட்ட வகுப்புவாத அரசியல் துணை கொண்டு பதவிக்கு வந்தவர் சூரப்பா, என்பதை நன்கு தெரிந்தும் அவரது நேர்மை கண்டு உச்சி முகர்கிறார். முதலில் சூரப்பாவின் பதவிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட எந்த நியமனங்களிலும் பணம் கை மாறவில்லை என்று வாதத்திற்கு வைத்துக் கொள்வோம். நிச்சயமாக அந்த நியமனங்களில் அரசியல் சார்புத் தன்மை இருக்கும் என்பதில் கண்ணை மூடிக்கொண்டு நம்பலாம். ஏனெனில், பாஜக வின் ஆட்சியில், உயர்கல்வி நிறுவனங்கள் பலவற்றில், அந்தப் பதவிக்கு பொருத்தம் இல்லாதவர்கள், தகுதியே இல்லாதவர்கள் என எவ்வளவு விமர்சனங்கள் வந்தபோதும், அதனை புறந்தள்ளி விட்டு நியமிக்கப்பட்டதையும் நியமிக்கப்பட்டு வருவதையும் அனைவரும் அறிவர். அப்படியான வகுப்புவாதிகள் சூரப்பாவின் நேர்மைக்காக மட்டுமே அவரை கர்நாடகாவில் இருந்து இங்கு அழைத்து வந்து துணைவேந்தர் பதவி கொடுத்தார்களா? என்ற கேள்வி அடிப்படையானது. சூரப்பாவின் பணிகளில் ஊழல் இல்லை என்று வைத்துக் கொள்வோம். கமலே சொல்கிறார். அவருக்கு அரசியல்/ கொள்கைகள் இருக்கிறது என்று. இந்த கொள்கையின் அடிப்படையில் வகுப்புவாத சார்புள்ளவர்களை பணி நியமனம் செய்திருந்தால்? அவர்கள் அனந்தகிருஷ்ணன் கட்டிக் காத்த மதசார்பற்ற தன்மை கொண்ட அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், பணி ஓய்வு பெரும் வரை வகுப்புவாத சார்புநிலைகளோடு பணிபுரிந்தால்? அது அங்கு படிக்கும் மாணவர்களுக்கு எவ்வளவு பாதிப்புகளை உருவாக்கும்? இதனைக் கண நேரம் கூட கமல் நினைத்து பார்க்கவில்லை என்று தோன்றுகின்றது.

சூரப்பாவின் வகுப்புவாத பார்வை, அந்த பார்வையின் அடிப்படையில் பல்கலைக்கழகத்தில் அவரது அணுகுமுறை, நியமனங்கள் ‌ ஆகியவற்றை நிரூபிக்க முடியாது. ஊழல் பற்றி மட்டும் பேசுங்கள் அவர் ஊழல் அற்றவர். நேர்மையானவர் என்று சான்றிதழ் வழங்குவாராயின் அந்த நேர்மைக்கான சான்றிதழை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் வழங்கினார் என்பதைக் கூட கமல் கூறி இருக்கலாம். அவருக்கு நேர்மையாளர் என்று சான்றிதழ் வழங்கும் போது சூரப்பா மீது நடவடிக்கை எடுக்க காரணமான இருந்த அந்த மொட்டைக் கடுதாசி மனிதரை கர்ண கொடூரமாக தாக்குகிறார். இதுவும் ஏன் என்று தெரியவில்லை. இன்றைய சமூக அரசியல் பொருளாதார சூழல் நிலையில், எல்லோரும் நேருக்கு நேராக உண்மையான பெயரோடு புகார் அளிக்கும் சூழ்நிலை இல்லை என்பதை கமல் நன்கு அறிவார். ஒரு மாவட்ட ஆட்சியர் மீது, அவரது ஊழல் முறைகேடுகளை நன்கு அறிந்த அவரது ஊழியர் ஒருவர் புகார் அனுப்ப இயலுமா? ஒரு அமைச்சகத்தில் இருக்கும் ஊழியர், அமைச்சர் அல்லது உயர் அதிகாரிகள் மீது ஊழல் முறைகேடுகளைப் பற்றி எழுதிவிட முடியுமா? அவ்வளவு ஏன்? எந்த பொறுப்பிலும் இல்லாத சாதாரண குடிமகன்கள், அவர்களில் எத்தனை பேர் தைரியமாக நேரிடையாக புகார் எழுத முடியும்? புகார் அளிப்பவருக்கு என்ன பாதுகாப்பு உத்திரவாதம் செய்யப்பட்டுள்ளது? ஒருவர் தன் பெயரில் புகார் எழுதாமையால், உண்மையில் நடைபெற்ற ஊழல் இல்லை என்று ஆகிவிடுமா? ஒரு ஊழல் புகார் உண்மையான பெயரில் எழுதப்பட்டதா? அல்லது மொட்டைக் கடுதாசியா என்பது பிரச்சினை அல்ல. அதில் உண்மை இருக்கிறதா? இல்லையா? என்பதுதானே பிரச்சினை. அப்படியிருக்க, அந்த மொட்டைக் கடுதாசி மனிதரை ஏன் அவ்வளவு கோபத்தோடு அணுக வேண்டும் என்பதும் புரியாத புதிராக இருக்கிறது. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருளின் மெய்ப் பொருள் காண்பது அறிவு.

அந்த மொட்டைக் கடுதாசியின் மெய்ப் பொருள் எப்போது தெரியும் ? விசாரணையில் தானே தெரியும்? ஒரு பொறுப்பில் உள்ளவர் மீது புகார்கள் எழுவது இயல்பு. அப்படி புகார் எழுந்தால் அதனை சந்திப்பதும் ” இது பொய். ஆதாரமற்றது, என்று நிரூபிக்க வேண்டியதும் அவரது கடமை. அந்த கடமையை பொறுமையாக செய்வதை விட்டுவிட்டு, விசாரணைக் குழுவிற்கு வெளியே முன்னாள் துணைவேந்தர், மக்கள் நீதி மையத்தின் தலைவர் என்று வெளியில் இருந்து ஏன் குரல் கொடுக்க வேண்டும் என்பதும் புரியவில்லை. புனைந்து உடைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரணை கமிஷன் உறுதி செய்வதாக வைத்துக் கொள்வோம். அதனை எதிர்க்கவும், நிரபராதி என்று நிரூபிக்கவும் வேறு வாய்ப்புகள் சூரப்பாவுக்கு இல்லையா?

சூரப்பாவுக்காக பொங்கி எழுந்த Kamal Haasan Latest Speech | Anna University |  Soorappa - YouTube

கமல் அவர்களின் அடுத்த குற்றச்சாட்டு, சூரப்பா அவர்கள், உலகத் தரம் வாய்ந்ததாக அண்ணா பல்கலைக்கழகத்தை மாற்ற முயற்சி செய்தார். அது பிடிக்காதவர்களின் சதிச் செயல் இந்த குற்றச்சாட்டு என்கிறார். அண்ணா பல்கலைக்கழகம், ஒரு மாநிலப் பல்கலைக்கழகம். அந்த மாநில பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், மாநில அரசின் நிர்வாகத்தின் கீழ் வருபவர் தானே! அந்த மாநில அரசுக்கே தெரியாமல் செயல்படுவதை சரியென்று கமல்ஹாசன் ஏற்றுக் கொள்கிறாரா? அவரது கட்சியின் ஒரு நிர்வாகி, அவருக்கு தெரியாமல், அவரது கட்சியின் அல்லது தமிழ் நாட்டின் ஒட்டுமொத்த நன்மைக்காக அவருக்கு தெரியாமல் செயல்பட்டால், ஒத்துக் கொள்வாரா?

இறுதியாக, தமிழ் நாட்டில் மிகச் சரியாக கூற வேண்டும் எனில், 2006 ஆம் ஆண்டு முதல் தான் துணைவேந்தர் பதவிக்கு பணம் என்ற அசிங்கம் அரங்கேறியது. அதனைத் தொடர்ந்து தற்போதைய ஆளுநர் காலத்தில் துணைவேந்தர் பதவிக்கு பணம் இல்லை என்றும், நேர்மையாக நியமனங்கள் நடைபெறுகிறது என்றும், ஓர் பார்வை இருக்கிறது. அதில் உண்மையும் இருக்கிறது. இந்த உண்மையை பாஜக நான்கு விதங்களில் அரசியலாக பார்க்கிறது. ஒன்று, தாங்கள் நேர்மையாக நியமிக்கும் துணைவேந்தர்கள் வழியாக அந்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனங்களில் தங்கள் தரப்பு ஆட்களை நியமித்துக் கொள்வது. இரண்டு, அனைத்துப் பல்கலைக்கழகங்களின் சிண்டிகேடுகளிலும் பாஜகவினராக பார்த்து பார்த்து உறுப்பினர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறது. இதன் வழியாக, ஆட்சிக் குழுவில் தங்களுக்கு வேண்டிய வேலைகளை செய்து கொள்வது. நான்காவதாக, இதோ பாருங்கள் எங்கள் நியமனங்களில் தான் லஞ்சம் இல்லை. ஊழல் இல்லை. எங்களை ஆட்சிக் கட்டிலில் அமரச் செய்யுங்கள் என்ற பரப்புரையை முன்னேடுப்பது. இந்த நேர்மையான துணைவேந்தர்கள் மூலம் பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கழகம், மத்திய கல்வி அமைச்சகம், புதிய கல்விக் கொள்கை போன்றவற்றில் நேரிடையாக, மத்திய அரசு தலையீடு செய்வது. மத்திய அரசு சுட்டிக் காட்டும் பணிகளை மாநில அரசுகளையும் மீறி முன்னெடுப்பது. இவை ஊழல் முறைகேடுகளில் வராதா? இதனை நேர்மையான மனிதர்கள் செய்யலாமா? சூரப்பாவின் நேர்மைக்காக அவரை ஆதரிக்கும் கமல் இதற்கு பதில் கூற கடமைப்பட்டுள்ளார்.

பணம் கை மாறினால் மட்டுமே ஊழலா? பணம் வாங்காத அனைவரும் என்ன தவறு செய்தாலும் அவர்கள் நேர்மையானவர்களாகவே கருதப்படுவார்களா?

இறுதியாக, தற்போதைய மாநில அரசு, மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது என்று பட்டிதொட்டி எங்கும் பேசுவதை கேட்க முடிகிறது. அப்படியிருக்க, மத்திய அரசின் பிரதிநிதி ஒருவர் செய்ததை, மாநில அரசு வலுவாக எதிர்க்க இயலுமா? நேர்மையா? ஊழலா? என்று வரும்போது, ஊழல் செய்வதற்காக, நேர்மைக்காக மத்திய அரசு நியமனம் செய்த ஒருவரை, மாநில அரசு நடவடிக்கை எடுத்தால், மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருக்குமா?
சூரப்பா அதிகாரத்திற்கு அடிபணிய வில்லை என்கிறார். மத்திய அரசின் அதிகாரத்திற்குமா? என்ற கேள்விக்கும் சேர்த்து மக்கள் பதில் எதிர்பார்க்கிறார்கள்.

கட்டுரையாளர்: பேராசிரியர், கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *