யூனிவேர்சல் மாஸ்க்கிங் (universal masking) என்றழைக்கப்படும் அனைவரும் முககவசம் அணிவதன் பலன்கள் குறித்து ஆய்வாளர்கள் சில கருதுகோள்களை முன்வைக்கின்றனர். இதன்படி அனைவரும் முககவசம் அணிவதனால் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் குறைகின்றன; (துணியாலான முககவசங்கள் 65%இலிருந்து 85% வரை வைரஸ் கிருமிகளை தடுக்க முடியும்.) அப்படியே தொற்றினாலும் குறைந்த அளவு கிருமிகளே உட்புகும்; அதனால் அறிகுறிகள் இல்லாத, மிதமான கொரோனா காய்ச்சலே உண்டாகும். அவர்கள் உடலில் வலுவான டி செல்கள் தோன்றி சிறிது காலத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தி (immunity) உண்டாகும். இந்த கருதுகோள்களுக்கு பல ஆதாரங்களைக் கொடுக்கிறார்கள்.
ஃபுளூ போன்ற வைரஸ் கிருமிகள் குறைந்த அளவு உட்புகும்போது மிதமான காய்ச்சலே ஏற்படுகிறது என்பதை ஐம்பது வருடங்களாக அறிந்திருக்கிறோம். கிருமியியலில் இது ஒரு அடிப்படையான கருதுகோள் என்பதால் கொரோனா வைரசிற்கும் இது பொருந்தலாம் என்கிறார் ஜான் ஹாப்கின்ஸ் நிறுவனத்தை சேர்ந்த மருத்துவர் பெய்ரேர். வெள்ளெலிகள் மத்தியில் நடத்தப்பட்ட ஒரு பரிசோதனையில், தொற்று ஏற்பட்ட ஒரு பிரிவிற்கும் ஆரோக்கியமான இன்னொரு பிரிவிற்கும் இடையில் தடுப்புபோல சர்ஜிக்கல் முககவசம் வைக்கப்பட்டிருந்தது. ஆரோக்கியமான வெள்ளெலிகளுக்கு தொற்று அபாயம் குறைவாகவே ஏற்பட்டது. மேலும் அவ்வாறு ஏற்பட்டவைகளிலும் தொற்றின் அறிகுறி மிதமாகவே இருந்தன.
மிக முக்கியமான ஆதாரம் இரண்டு கப்பல் பயணிகளிடையே ஏற்பட்ட தொற்றிலிருந்து கிடைக்கிறது. டையமன்ட் பிரின்சஸ் எனும் பிரிட்டிஷ் சொகுசு கப்பலில் இந்த ஆண்டு(2020) பிப்ரவரி மாதம் ஏற்பட்ட தொற்றில் 18% மட்டுமே அறிகுறிகள் இல்லாத தொற்றாக இருந்தது. அதே சமயம் இன்னொரு அர்ஜென்டினாக் கப்பலில் அனைவரும் முக கவசம் அணிந்திருந்ததால் தொற்று ஏற்பட்டவர்களில் 81% அறிகுறிகள் இல்லாத தொற்றாக இருந்தது.
அமெரிக்காவில் ஒரேகான் மாநிலத்தில் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையிலும் அர்கான்சாஸ் மாநிலத்தில் கோழிக்கறி தொழிற்சாலையிலும் அனைவரும் முககவசம் அணிந்ததால் முழுமையாக தொற்றை தடுக்க முடியாவிட்டாலும் தொற்று ஏற்பட்டவர்களில் 95% பேருக்கு அறிகுறிகள் இல்லாத தொற்றாக இருந்தது. பெரும்தொற்று தொடங்கிய காலத்திலிருந்தே அனைவரும் முகக் கவசம் அணியும் பழக்கத்தை பின்பற்றிய தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குறைவான தொற்றுகளும் இறப்புகளுமே ஏற்பட்டுள்ளன.
எனவே தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும்வரை யூனிவேர்சல் மாஸ்கிங் ஒரு தற்காலிக தடுப்பாக கருதலாமா என்கிறார் ஆய்வாளர்களில் ஒருவரான முனைவர் மோனிக்கா காந்தி. இந்த கருதுகோள்களை தவறாக புரிந்து கொள்ளக்கூடாது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்த ஆய்வுகள் கொரோனா தொற்றின் வீரியத்தின் மீது முககவசம் அணிவதன் தாக்கம் குறித்து அறிவதற்காக மட்டுமே நடத்தப்பட்டது அல்ல. எனவே சிறிதளவு கொரோனா கிருமிகள் உட்புகுந்தால் நல்லது என்று நினைத்து நாமாக வலிந்து அலட்சியமாக இருக்கக்கூடாது. முக கவசம் அணிந்தாலும் சிறிதளவு கிருமிகள் உட்புகும் என்பதால் முககவசமே அணிய வேண்டாம் என்றும் நினைக்கக் கூடாது. ஆய்வாளர்கள் சொல்வதெல்லாம் முககவசம் அணிவதனால் தொற்று பரவுவது குறைகிறது; காய்ச்சலின் தாக்கம் மிதமாக இருக்கிறது; தடுப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது என்பதுதான்.
(இந்து ஆங்கில நாளிதழில் 13.09.2020 அன்று வெளியான திரு பிரகாஷ் அவர்களின் கட்டுரையின் சுருக்கம்.)