‘லவ் ஜிஹாத்’ என்கிற வார்த்தை பிஜேபி கட்சிக்காரர்களால் அடிக்கடி உச்சரிக்கப்படுகிற ஒரு வார்த்தை. இந்து மதத்தை சேர்ந்த பெண்கள் இஸ்லாமிய ஆண்களை திருமணம் செய்து கொள்வதைத்தான் அவர்கள் அப்படி குறிப்பிடுகிறார்கள். இப்பொழுது ஒரு படி மேலே போய் பிஜேபி ஆளும் மாநிலங்களில் அதை தடை செய்யும் சட்டம் இயற்றப் போகிறார்களாம். அண்மையில் அலகாபாத் நீதிமன்றத்தில் ஒரு நபர் நீதிபதியின் தீர்ப்பிற்குப் பிறகுதான் இது ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. அந்த வழக்கு என்ன?
பிரியன்ஷி என்கிற ஷம்ரீன் பிறப்பால் இஸ்லாமியர். இந்த ஆண்டு (2020) ஜூன் 26 அன்று இந்து மதத்திற்கு மாறிநார். ஜூலை 31 அன்று இந்து மதத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். தன்னுடைய உறவினர்கள் தன திருமண வாழ்வில் குறுக்கிடுவதை தடை செய்யுமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். எதிர்மனுதாரராக யுபி அரசையும் சேர்த்திருந்தார். அதாவது பாதுகாப்பு கோரியிருந்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு நீதிமன்றங்களில் இப்படிப்பட்ட வழக்குகள் வந்திருக்கின்றன. அதிலெல்லாம் நீதிமன்றங்கள் பாதுகாப்பு கோரியவர்கள் மீது பரிவான பார்வை கொண்டு அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு ஆணை பிறப்பித்துள்ளன. அவர்களை அச்சுறுத்துபவர்களை கண்டித்தும் உள்ளன. எங்கேயுமே அவர்களின் திருமண உரிமையை கேள்விக்குள்ளாக்கவில்லை.
முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சு
அலகாபாத் நீதிபதி அவர் கோரிய பாதுகாப்பு குறித்து ஆராயாமல் அவர் மதம் மாறிய விஷயம் குறித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். ஒரு மாதம் முன்புதான் மதம் மாறியுள்ளதால் அது திருமணத்திற்காக மட்டுமே செய்யப்பட்டது என்கிறார். அதற்கு அதே நீதிமன்றம் 2014இல் ‘திருமணத்திற்காக மட்டுமே செய்யப்பட்ட மத மாற்றம் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று வழங்கிய ஒரு தீர்ப்பையும் ஆதாரமாகக் காட்டுகிறார். மேலும் உச்ச நீதிமன்றம் லில்லி தாமஸ் என்கிற வழக்கில் ‘இஸ்லாமியர் அல்லாத ஒருவர் அந்த மதத்தில் உண்மையான நம்பிக்கை இல்லாமல் திருமணத்திற்காக மட்டுமே செய்யும் மத மாற்றம் செல்லுபடியாகாது’ என்று வழங்கிய தீர்ப்பையும் மேற்கோள் காட்டுகிறார். இந்த வழக்கின் அடிப்படை என்னவென்றால் பலதார மணம் செய்வதற்காக ஒருவர் மதம் மாறுகிறார். அதை நீதிமன்றம் தடை செய்கிறது. இதை மகளிர் அமைப்புகள் வரவேற்றன.
இப்பொழுது அலஹாபாத் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு முதல் திருமணம் குறித்தும் பாதுகாப்பு குறித்ததும் ஆகும். இதற்கு தொடர்பான பொருத்தமான உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஹதியா வழக்காகும். அது மதமாற்றம் குறித்தும் மதக்கலப்பு திருமணம் குறித்தும் பேசுகிறது. தனக்கு விருப்பமான ஒருவரை திருமணம் செய்துகொள்ளும் உரிமை, அரசியல் சாசன் பிரிவு 21(வாழ்க்கை மற்றும் சுதந்திரத்திற்கான உரிமை) இலிருந்து பிரிக்கமுடியாத ஒன்றாகும் என்று கூறியதுடன், இஸ்லாமிற்கு மதம் மாறிய ஹடியாவிற்கும் ஷெபின் ஜகனிற்கும் நடந்த திருமணத்தை ரத்து செய்த கேரளா உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்தது.
‘திருமண பந்தத்திற்குள்ளோ அல்லது அதற்கு வெளியிலோ ஒரு இணையை தேர்வு செய்துகொள்ளும் உரிமை முற்றிலும் ஒரு தனிப்பட்ட நபரின் ஆளுகைக்குள் உள்ளது.அது மீற முடியாத உரிமை. அவரது மதநம்பிக்கை எந்தவிதத்திலும் இந்த உரிமையை பாதிக்காது. அரசியல் சாசனம் ஒவ்வொருவருக்கும் அவரது மதத்தைப் பின்பற்றும் மற்றும் பரப்பும் உரிமையை உறுதி செய்திருக்கிறது. மத நம்பிக்கையும் திருமண உரிமையும் தனிப்பட்ட நபரின் சுய ஆட்சியே மேலோங்கி இருக்கும் ஒரு பகுதி ஆகும். அரசோ சட்டமோ தன் துணையை தேர்ந்தெடுக்கும் ஒவ்வொருவரின் விருப்பத்தில் கட்டளையிடவோ அல்லது அவரது சுதந்திர செயல்பாட்டை கட்டுப்படுவதோ முடியாது.’ என்று நீதியரசர் சந்திரசூட் தனது தீர்ப்பில் எழுதினார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் சந்திரசூட் அவர்களின் எழுத்து பூர்வ விளக்கமும் தனிநபர் மத சுதந்திரம், திருமணம் ஆகிய உரிமைகள் குறித்து எந்த ஐயப்பாடும் இல்லாமல் செய்துவிட்டது. ஹதியாவின் வழக்கு அவளுடைய மாநிலமான கேரளாவில் மதக் கலவரத்தை தூண்டியது. கேரளா உயர் நீதிமன்றம் ஹடியாவின் மத மாற்றத்திற்கும் திருமணத்திற்கும் எதிராக கடுமையான நிலைபாட்டை எடுத்தது. ஹதியாவிற்கு நேர்ந்த தனிமைச் சிறை, ஏச்சுகள், கணவனிடமிருந்து நீண்ட காலம் பிரித்திருக்க வேண்டியது ஆகிய கொடுமைகளுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பு முடிவு கட்டியது. இந்த முக்கியமான தீர்ப்பை அலஹாபாத் நீதிமன்றம் புறக்கணித்தது வருந்தத்தக்கது. நீதியரசர் பிரியன்ஷியின் ரிட் மனுவை தள்ளுபடி செய்து, வேண்டுமானால் மாஜிஸ்டிரேட் முன்னிலையில் வாக்குமூலத்தைப் பதிவு செய்யலாம் என்று சொல்லிவிட்டார். இந்த தீர்ப்பு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
இல்லாத ஒன்று
ஒரு புறம் அந்த மணமக்களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்கள் என்னென்ன பாதகங்களில் சிக்கியிருக்கிறார்களோ தெரியவில்லை. இன்னொரு புறம் உபி முதன்மந்திரி ஆதித்யநாத் ‘லவ் ஜிஹாத்’ குறித்து உரத்து முழங்கி விஷம பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கிறார். பிஜேபி இதை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறது. முதலில் கர்நாடகா, பிறகு கேரளா, இப்பொழுது உபியிலும் மற்ற வட மாநிலங்களிலும் ‘லவ் ஜிஹாத்’ என்ற பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இஸ்லாமிய இளைஞர்கள் தங்கள் குடுமபத் தாருடன் சேர்ந்து இந்துப் பெண்களை மயக்கி திருமணம் செய்து கொள்வதாகவும் அவர்கள் கட்டாய மத மாற்றம் செய்யப்படுவதாகவும் பிறகு அவர்கள் பல்வேறு பழிப்புக்கும் சித்திரவதைக்கும் ஆளாகுவதாகவும் புகார்கள் செய்யப்படுகின்றன. இதனை விசாரித்த பல்வேறு நீதிமன்றங்கள் ‘லவ் ஜிஹாத்’ என்பது இல்லாத ஒன்று என்று தீர்ப்பு சொல்லியிருக்கின்றன.
இந்த ஆண்டு (2020)பிப்ரவரி 4ஆம் தேதி மத்திய உள்துறை துணை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி பாராளுமன்றத்திலேயே ஒரு அறிக்கை சம்ர்பித்தார்.
‘ அரசியல் சாசனத்தின் 25ஆவது பிரிவு, பொது ஒழுங்கு, ஒழுக்கம்,சுகாதாரம் ஆகியவற்றிற்கு உட்பட்டு ஒருவருக்கு தனது மதத்தை பின்பற்றவும் பரப்பவும் உரிமையை உறுதி செய்கிறது. கேரள உயர்நீதிமன்றம் உட்பட பல்வேறு நீதிமன்றங்கள் இதை நிலைநாட்டியிருக்கின்றன. இப்பொழுது இருக்கும் சட்டங்களில் ‘லவ் ஜிஹாத்’ என்பது வரையறுக்கப்படவில்லை. எந்த மத்திய அமைப்பும் இது தொடர்பான வழக்குகள் இருப்பதாகத் தெரிவிக்கவில்லை’
என்று ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போது குறிப்பிட்டிருந்தார்.
சும்மாவே ஆடிகிட்டிருந்தவன் காலில சலங்கை கட்டியது போல
இந்த தெளிவான விளக்கமும் உபி முதன்மந்திரியையும் மற்றவர்களையும் விஷமத்தனமான பிரச்சாரம் செய்வதை தடுக்கவில்லை. பல ஆண்டுகளாக அவர் இந்து பெண்களுக்கும் இஸ்லாமிய ஆண்களுக்கும் நடைபெறும் திருமணத்திற்கெதிராக சோர்வில்லாமல் பிரச்சாரம் செய்பவர். முதன்மந்தியான பிறகு அவரது பிரச்சாரம் கடுமையாகிவிட்டது. கடந்த சில மாதங்களில் அவரது மாநிலத்தில் கான்பூர், பிரெய்லி மற்றும் பல இடங்களில் இத்தகைய திருமணங்கள் நடைபெற்றுள்ளன. ஆகவே அவர் ‘லவ் ஜிஹாத்’ விஷயத்தை மீண்டும் கிளப்புகிறார். இந்த திருமணங்களிலெல்லாம் பெண்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்; அவர்கள் சுயமாகவே தங்கள் இணையை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
அலஹாபாத் நீதிமன்ற தீர்ப்பு அவருக்கு வசதியான ஒன்றாகிவிட்டது. வழக்கின் விவரங்களைஎல்லாம் புறக்கணித்துவிட்டு நீதிமன்றமே லவ் ஜிஹாத்திற்கு எதிராக தீர்ப்பு கொடுத்துவிட்டது என்கிறார். மரணம் உட்பட கடுமையான விளைவுகளை இஸ்லாமிய இளைஞர்கள் சந்திக்க வேண்டும் என்றும் தன்னுடைய அரசு இத்தகைய திருமணங்களை சட்டவிரோதமாக்கும் ஆணை பிறப்பிக்கும் என்கிறார். ஹரியானா முதன்மந்திரியும் உடனே அதை பின்பற்றுகிறார். அங்கு இஸ்லாமிய இளைஞன் ஒருவனின் காதல் கோரிக்கைகளை நிராகரித்த ஒரு இந்துப் பெண் பயங்கரமாக கொலை செய்யப்படுகிறாள். அதற்கு எதிரான கொந்தளிப்பான சூழ்நிலையில் முதன்மந்திரியின் அறிவிப்பு ஆதரவு பெறுகிறது. நான் மட்டும் என்ன சளைத்தவனா என்று எம்பி முதன்மந்திரி தானும் அதைப் போன்ற ஒரு சட்டம் இயற்றப்போவதாகக் கூறுகிறார்.
இரட்டை அடி
சரியாக ஆராய்ந்து சொல்லப்படாத ஒரு தீர்ப்பு மதம் மற்றும் மணம் குறித்து சொந்தமாக முடிவெடுக்கும் பலரின் வாழ்வை சிதைப்பதோடு அரசியல் ஆதாயங்களுக்காக பல விசயங்களை மனசாட்சி இல்லாமல் மதக் கண்ணோட்டத்தோடு இணைக்கும் அரசியல்வாதிகளுக்கு ஒரு ஆயுதமாகப் பயன்படுவது கெடுவாய்ப்பே. ‘சகோதர சகோதரிகளின் கவுரம்’ என்று சொல்லி மக்களை கூறு போடும் அவர்களின் அரசியல் பிரச்சாரம் மாபெரும் மதத் தீயை மூட்டுவதோடு, அதே சகோதர சகோதரிகளின் அடிப்படை அரசியல் உரிமைகளை பறிக்கின்றன.
இந்திய ஜனநாயக மாதர் சங்கம் இந்த தீர்ப்புக்கெதிரான தனது ஆழ்ந்த கவலையை தெரிவிகிறது. இந்த தீர்ப்பை திரித்து வகுப்புவாத உணர்வுகளை மேலும் பற்றவைக்க பயன்படுத்துவதை கண்டனம் செய்கிறது. அரசியல் சாசன உரிமைகளை பாதுகாக்க சட்டபூர்வ நடவடிக்கை குறித்தும் வல்லுனர்களுடன் விவாதிக்கப்படுகிறது.
(பீப்பிள்ஸ் டெமாக்கிரசி நவம்பர் 02-08 இதழில் தோழர் சுபாஷினி அலி அவர்கள் கட்டுரையின் தமிழாக்கம்)