எதிர்கால உலகத்தின் கதை ஆசியாவில் தொடங்குகிறது என்றும், 2030 வாக்கில் சீனா உலகின் வலிமையான பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் என்றும் பல சர்வதேச ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த நூற்றாண்டு, சீனவின் நூற்றாண்டாகத் திகழும் என சர்வதேச உறவுகளைப் பற்றி ஆராயும் அறிஞர்கள் முன்மொழிந்திருக்கின்றனர். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரும் இதையே சமீபத்தில் வழிமொழிந்திருக்கிறார். இந்த நூற்றாண்டில் உலக நாடுகளின் தலைமைச் சக்தியாக சீனா மாறுவதற்கான வாய்ப்புகள் யாவை, அதற்கு சீனா கொண்டிருக்கும் சாதக, பாதக அம்சங்கள் என்னென்ன என்பதைப் பற்றி இக்கட்டுரை விவாதிக்கிறது.
புரட்சிக்கு பிந்தைய சீனா
ஏழுபது ஆண்டுகளுக்கு முன்பு, சீனா மிகவும் ஏழை நாடாக இருந்தது., பல ஏகாதிபத்திய நாடுகளின்கீழ் காலனியாக இருந்து, மோசமான முறையில் ஒடுக்கப்பட்டிருந்தது. மாவோவின் தலையிலான புரட்சி வெற்றிபெற்றதை அடுத்து, 1949 ஆம் ஆண்டில் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் சுயசார்பு பொருளாதாரத்தைக் கட்டமைக்கப்பட்டது. அதே நேரத்தில் சர்வதேச அளவிலிருந்து வந்த சவால்களையும் எதிர்கொண்டது. அதற்கு தக்கப்படி பின்னாளில் சீனா அரசியல் பொருளாதார கொள்கைகள் மாற்றங்களுக்கு உட்பட்டன.

திட்டமிட்ட பொருளாதாரத்திலிருந்து சந்தைப் பொருளாதாரத்திற்கு மாறியது. தொடக்க காலத்தில் மேற்கத்திய நாடுகள் சீனாவில் பெரிய அளவிலான முதலீட்டை செய்து அதிக இலாபங்களை அள்ளிச் சென்றன. அதன் விளைவாக சீனா கடுமையான பொருளாதார வீழ்ச்சியைக் கண்டது. அதன் பின்னர் சீனா தனது பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுத்து கொண்டது. சீனா தனது 800 மில்லியன் மக்களை வறுமையிலிருந்து காப்பாற்றியது. இதன் காரணமாக, உலகில் இருந்த மொத்த வறுமைக் குறியீட்டுல் மூன்றில் இரண்டு பங்காகக் குறைந்தது. மேலும் உழைப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியங்கள் அதிகரித்தன. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்தது. அவர்களின் ஆயுட்காலமும் உயர்ந்தது. பல நூற்றாண்டுகளாக மிகவும் பின்தங்கியிருந்த சீனா, புதிய ஊக்கத்தையும் எழுச்சியையும் பெற்றது.
உலகமய பொருளாதாரத்தோடு இணைந்த சீனா
சீனாவின் உழைப்புச் சக்தி அபரிமிதமானது. இதையே மூலாதாரமாக வைத்துக் கொண்டு, சீனா, உற்பத்தியைப் படிப்படியாக வளர்த்தது. பின்னர் உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் மிகப்பெரும் நுகர்வோர் சந்தையை உருவாக்கியது. சீனாவின் தேசிய வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்தது. சீனா, ஆண்டுதோறும் இதர நாடுகளோடு ஒப்பிடும்போது அதிகமான வருடாந்திர வளர்ச்சி விகிதங்களைக் கொண்டிருந்தது.
அதற்கும் மேலாக, சீனாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் ஈர்க்கக் கூடியதாகவும், நீடித்த தன்மையுடைதாகவும் இருந்தது. எனவே, அந்நிய முதலீட்டை ஈர்த்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பல நிபந்தனைகளை விதித்தது. மேலும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி மேலும் மேலும் வளர்ந்தது. மேற்கு நாடுகளில் தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்டது. நாளடைவில், மேற்கு நாடுகள் நீண்ட காலமாக சீனாவின் ஏகபோக உரிமையை ஏற்றுக் கொண்டிருந்தன. 2008 ஆம் ஆண்டில் நிதி நெருக்கடி தொடங்கியதிலிருந்து, உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 45% வருவாயை சீனா ஈட்டியது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி அபரிமிதமாகவும், அதன் அரசியல் நிலைத்தன்மை உறுதிமிக்கதாகவும் இருந்தது.

சீனாவின் இத்தகைய விரைவான வளர்ச்சி, உலகப் பொருளாதாரத்தின் முக்கியமான உந்துசக்தியாக மாறக்கூடும் என நம்பப்பட்டது. அவ்வாறே, சீனா உலகின் மிகப்பெரிய அல்லது இரண்டாவது பெரிய பொருளாதார நிலையை எட்டியது. சீனாவின் இத்தகைய வளர்ச்சி மேற்கத்திய நாடுகளுக்கு அச்சத்தை ஊட்டின. என்றாலும், மேற்கு நாடுகளும் பொருளாதார உறவுகளில் ஒன்றோடொன்று ஆழமாக இணைந்திருந்தன. இத்தகைய சர்வதேச உறவுகளைப் பயன்படுத்திக் கொண்டு, சீனா தனது பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு நிலைத்தன்மையை உருவாக்கிக் கொண்டது. உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியலில் ஸ்திரத்தன்மை கொண்டிருந்தது. சீனாவின் இந்த வளர்ச்சியை மேற்கத்திய நாடுகளால் பல ஆண்டுகளாக எந்த வகையிலும் தடுக்க முயற்சிக்க வில்லை.
சீனாவின் இத்தகைய வளர்ச்சி என்பது உலகளாவிய முதலாளித்துவ பொருளாதாரத்தின் நிறுவப்பட்ட விதிகளுக்கு உட்பட்டு வளர்ந்தது என்பது குறிப்பிடத் தக்கது. சீனாவும், சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அமெரிக்காவின் ஒற்றை ஆதிக்கத்தைக் கேள்விக் கேட்கவோ அல்லது அமெரிக்க தலைமையிலான புதிய உலக ஒழுங்கில் தலையிடவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கத்திய நாடுகளுடனான நீண்டகால நட்புறவைக் கொண்டிருந்தது அதன் முக்கியச் செயல் தந்திரமாகும். சீனாவின் எழுச்சியானது, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான விரோதத்தை அதிகரிக்க செய்தது. ஒரு கட்டத்தில் அமெரிக்கா, சீனாவை இஸ்லாமிய தீவிரவாதத்தை விட கடுமையான அச்சுறுத்தலாகப் பார்த்தது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் நலன்களுக்கு அச்சுறுத்தலாக சீனா இருப்பதாக உணர்ந்தது.
இருந்தபோதிலும், உலகமயப் பொருளாதாரக் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட சீனா, அதன் பலன்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு அபரிமிதமாக வளர்ச்சியை அடைந்தது. அதேபோல உலகலாவிய பொருளாதார மாற்றத்திற்கு உத்துசக்தியாகவும் மாறியிருக்கிறது.
இனி, சீனா எவ்வாறு உலகப் பொருளாதார அமைப்பின் ஈர்ப்புமையமாகவும், புவிசார்ந்த அரசியலின் செயலூக்கியாகவும் மாறுவதற்கான அடிப்படையைக் கொண்டிருக்கிறது என்பதையும் அதற்காக, சீனாஅரசு வகுத்துள்ள குறுகிய மற்றும் நீண்டகாலத் திட்டங்களையும், முதலில் பார்க்க இருக்கிறோம்.
மேக் இன் சைனா திட்டம்
ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு உற்பத்திதான் முதுகெலும்பாக விளங்குகிறது. இதுதான் சீனாவின் தாரக மந்திரம். சீனா எப்போதுமே உற்பத்தித் துறைக்கு முன்னுரிமை அளித்து வருகின்றது. சீனாவின் தொழில்துறையும், தொழில்நுட்பத் துறையும் ஒருங்கிணைந்த வகையில் வளர்ந்து வருகின்றன. இதனால் சீனாவின் உற்பத்தித் துறைச் சார்ந்த வளர்ச்சி பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இருந்தாலும் சீனப் பொருளாதாரம் வலுவானதாக இல்லை என்று கருதப்படுகிறது. புதிய கண்டுபிடிப்புகளின் போதாமையும், வளங்களை முழுமையாகவும் திறனுள்ள வகையில் பயன்படுத்தி கொள்ளாமையும், டிஜிட்டல் மயமாதலில் தீவிரமின்மையும் இதற்கான காரணங்கள் ஆகும். இத்தகைய பலகீனங்களை களையும் நோக்கில், புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகள் அனைத்து உற்பத்திச் சக்திகளையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என சீனா உறுதி கொண்டுள்ளது.
முதலில் உற்பத்தித் துறையை உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கொண்டு ஒரு வலுவான பொருளாதாரக் கட்டுமானத்தை உருவாக்க வேண்டும் என்று சீனா திட்டமிட்டுள்ளது. இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்கயுள்ளது. இதற்கு புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவுசார் சொத்துடைமை ஆகியவற்றை உருவாக்குவதன் மூலம் ஒரு வலுவான தேசத்தைக் கட்டமைக்க இயலும் என நம்புகிறது.
மேலும் இத்திட்டம் வணிகப் பரிவர்த்தனையை நவீனமயமாக்கி, அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் முதலீடுகளை அதிகரிப்பதையும் நோக்கமாக கொண்டிருக்கிறது. இதற்காக தொழில்நுட்பத்துறையில் சீனா, ‘சீனாநெட் அமைப்பு’ என்ற ஒரு வலைப்பின்னலைக் கட்டமைத்துள்ளது. இது செயற்கை நுண்ணறிவுத் திறங்களைக் கொண்ட ஒரு மூடுண்ட டிஜிட்டல் அமைப்பாகும். இந்த அமைப்புறை, குறைந்த செலவு, வேகத்தை அதிகரித்தல், திறமையான வணிக விரிவாக்கம் ஆகியவற்றிற்காக பணமில்லாத பரிவர்த்தனையை ஊக்குவிக்கிறது.
இவ்வாறு, புதிய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டால் மட்டுமே, சர்வதேச அளவில் போட்டியிடக்கூடிய திறனுள்ள பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கமுடியும் என்று சீனா உறுதியாக நம்புகிறது.
சீனாவின் குறுகிய கால மற்றும் நீண்டகாலத் திட்டங்கள்
மேற்குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, சீனா, 2015 ஆம் ஆண்டில் தனது குறுகிய கால மற்றும் நீண்ட காலத் திட்டங்களை வகுத்துள்ளது. முதலாவது திட்டத்தின்மூலம், 2020 களில் சீனாவை ஒரு பெரிய உற்பத்தி சக்தியாக மாற்றுவது, தொழில்மயமாக்கலை துரிதமாக்கி, உற்பத்திச் சக்திகளை ஒருங்கிணைப்பது, உற்பத்தியில் டிஜிட்டல் மயமாக்கலை அதிகரிப்பது, உலகளவிய போட்டியை வலுப்படுத்துவது, தயாரிப்பு தரத்தை பெரிதும் மேம்படுத்துவது, டிஜிட்டல்மயமாக்கல், இணையம் மற்றும் உற்பத்தியின் தகவல்மயமாக்கல் ஆகியற்றில் முன்னேறுதல் ஆகிய செயலுக்திகளை வகுத்துள்ளது.
இரண்டாவது திட்டம், 2025 ஆம் ஆண்டில் உற்பத்தியின் தரத்தை பெரியளவில் மேம்படுத்துவது, புதிய கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது, தொழிலாளர் உற்பத்தித்திறனை அதிகரிப்பது, தகவல் தொழில்நுட்பத் துறையை தொழில்துறையுடன் ஒருங்கிணைப்பது போன்ற இலக்குகளைக் கொண்டிருக்கின்றது. மேலும் சர்வதேச அளவில் சீனாவின் இத்தகைய தொழில்துறைத் தொகுதிகளை வலுவான முறையில் போட்டியிடுதல், மேலும் உலகளாவிய உழைப்பு பிரிவினை மற்றும் உலகளாவிய மதிப்பு சங்கிலியில் சீனாவின் நிலையை மேம்படுத்துதல் ஆகியவை முக்கிய இலக்குகளை முன்வைத்துள்ளது.

மூன்றாவது திட்டம், 2035 ஆம் ஆண்டுகளில் சர்வதேச உற்பத்திச் சக்திகளிடையே சீனா ஒரு இணைப்பு கண்ணியாக திகழ்வது, புதுமை திறன்களை பெரிதும் வளர்த்தெடுப்பது, உற்பத்திச் சார்ந்த முக்கிய துறைகளில் வளர்ச்சியை எட்டுவது, சர்வதேச அளவில் போட்டித்தன்மையை கணிசமாக அதிகரிப்பது, போன்றவை. அதாவது சீனா மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த தொழில்களில் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவது போன்றவற்றை முதன்மைப்படுத்துகிறது.
இறுதியாக, 2049 வாக்கில், புதிய சீனாவைப் படைப்பது. இதில் உற்பத்தித் துறையானது மேலும் ஒருங்கிணைக்கப்பட்டு, உலகத்தில் உள்ள அனைத்து உற்பத்தி சக்திகளை விடவும் சீனா முன்னிலை வகிக்கும் என்றும் இதன் மூலம் சரவதேச அளவில் மிகவும் வளர்ச்சியடைந்த தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை அமைப்புகளை உருவாக்குவது என்றும் சீனா தனது இறுதி இலக்குகளை நிர்ணயித்துள்ளது. இதன்மூலம், சீனா அதிஉயர் தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைந்த உற்பத்தித்துறையில் உலகளாவிய வல்லரசாக நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கிறது.
தொழில்நுட்பத்தில் சீனாவின் வளர்ச்சிப் போக்கு
இனிவரும் காலம், நான்காம் தொழில்புரட்சியின் காலமாக இருக்க போகிறது. தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியில் புதிய அலை வீசுகின்றது. இந்தத் துறையில் முழுமையான வளர்ச்சியை எட்டுவதும் அதன் மூலம் ஒரு வலுவான உற்பத்தி, விநியோகம் ஆகிய துறைகளை உருவாக்க சீனா திட்டமிட்டிருக்கிறது.
சீனா தனது 1.4 பில்லியன் குடிமக்களின் அனைத்து விவரங்களையும் மீப்பெரும் தரவுகளாகச் சேகரித்து வருகின்றது. இந்தத் தரவுகளை உள்ளீடுகளாகப் பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவு அமைப்பை வளர்த்தெடுக்கவும் மாற்றியமைக்கவும் திட்டமிட்டிருக்கிறது.
சீனா உள்நாட்டிலும், பிராந்திய அளவிலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை அமுல்படுத்துவத்தில் மும்முரம் காட்டிவருகின்றது. இந்த முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டால் சீனா தனது பொருளாதாரக் கட்டுமானத்தை முழுமையாக மறுநிர்மாணம் செய்துகொள்ளமுடியும் என நம்புகிறது.
சீனா அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்காக பில்லியன் கணக்கான டாலர்களை செலவிடுகிறது, மரபியல், குவாண்டம் கம்ப்யூட்டிங், ரோபாட்டிக்ஸ் போன்ற துறைகளில் ஆராய்ச்சியை உருவாக்குகிறது. நாட்டின் தொழில்நுட்ப நிறுவனங்களான ஹவாய் மற்றும் ZTE ஆகியவை உலகளாவிய நிறுவனங்களாக மாறி வருகின்றன. ஹூவாய் உலகின் ஆறாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம். இதில் 170,000 தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளது. 160 க்கும் மேற்பட்ட நாடுகளில் தொலைதொடர்பை விரிவுப்படுத்தியுள்ளது. சீனா, ஐரோப்பா, அமெரிக்கா, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய இடங்களில் 75,000 தொழிலாளர்களையும் தொழில்நுட்ப வல்லுனர்களையும் பணிக்கு அமர்த்தியுள்ளது.
எனவேதான், ‘செயற்கை நுண்ணறிவு சகாப்தத்தில் தரவு என்பது பெட்ரோலியமாக இருந்திருந்தால், சீனா சவுதி அரேபியாவாக இருக்கும்’ என்று ஒப்புவமையுடன் கை ஃபூ லி என்பவர் தனது ‘செயற்கை நுண்ணறிவு வல்லரசுகள்:- சீனா, சிலிக்கான் பள்ளதாக்கு, மற்றும் புதிய உலக ஒழுங்கு’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
பிராந்திய வர்த்தக விரிவாக்கத்திற்கான சாலைத் திட்டங்கள்
சீனா தனது அனைத்துத் திட்டங்களையும் மேற்கண்ட புதிய சீனாவினை உருவாக்குவதற்கான நோக்கத்தோடு இணைக்கப்படுகின்றன. ‘புதிய பட்டுப் பாதைத் திட்டம்’ என்ற திட்டமும் ஒரே பிராந்தியம் ஒரே சாலை என்ற திட்டமும் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள பயன்படும் திட்டங்களாகும்.
முதலில் புதிய பட்டுப்பாதை திட்டத்தைப் பற்றி பார்ப்போம். பட்டுப்பாதை என்பது பழம்பெருமை வாய்ந்த சாலையாகும். முன்பு, சீனாவிலிருந்து மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் நடைபெற்ற தரைவழியிலான வர்த்தகத்தில் முக்கியமான சாலை இதுதான். இந்த தரைவழி வர்த்தகத்தில் சீனாவின் பட்டு முக்கிய வர்த்தக பொருளாக விளங்கியதால் இதற்கு பட்டு சாலை என பெயர் வந்தது. இந்த சாலை சீனா, இந்தியா, பெர்சியா, அரேபியா, எகிப்து, ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கிடையே நீண்டு இருக்கிறது.
‘புதிய பட்டுபாதை திட்டம்’ சீன அதிபர் ஜி ஜிங்பிங்கால் தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட திட்டமாகும். இது ஒரு மாபெரும் பொருளாதார, வர்த்தக வலைப்பின்னலாகும். மேலும் சீனாவை மையப்படுத்திய மிகப்பெரிய அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.
இந்தப் புதிய திட்டம் வெற்றியடைந்தால், கிழக்கத்திய நாடுகள் மற்றும் இதர உலக நாடுகளின் மையக் கேந்திரமாக சீனா உயரும் என்று கருதப்படுகிறது. அது சீனாவிற்கு மாபெரும் வெற்றியாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இத்திட்டம், ஆசிய நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவை பெருக்குவதற்கான திட்டம் என்றும், இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் ஐரோப்பிய நாடுகளுக்கே வர்த்தகத்தில் ஆசிய நாடுகள் சவாலாக இருக்கும் என்றும் சீன அரசு அறிவித்தது. இந்த புதிய பட்டுப்பாதை திட்டத்திற்காக சீன அரசு சுமார் 214 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளது.
சீனாவின் அடுத்த பெரிய திட்டம் ‘ஒரே பிராந்தியம் – ஒரே சாலை என்ற திட்டமாகும். இது 2013 ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது. இது முக்கிய பொருளாதார மையங்களான துறைமுகங்கள், இரயில்வே பாதைகள், சாலைகள், குழாய்வழிகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றை இணைக்கிறது. மேலும் தென் கிழக்காசியா, மத்திய ஆசியா, வளைகுடாப் பகுதி ஆப்ரிக்கா, ஐரோப்பா ஆகியவறை தரை மார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும் இணைக்கும் திட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, இது அண்டார்டிக், ஆர்க்டிக், ஆப்பிரிக்கா, பசிபித் தீவுகள் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்குவதன் மூலம் மாபெரும் யூரேசிய கண்டத்தை உருவாக்கும் போர்த்தந்திரத்துடன் இணைக்கப் பட்ட மெகா திட்டமாகும்.
இதற்காக சீனா, 126 பில்லியன் டாலர்களிய ஒதுக்கியுள்ளது. இந்தத் திட்டத்துக்காக சுமார் 80 நாடுகள் மற்றும் பல பன்னாட்டு அமைப்புகள், சீனாவுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. சீனாவின் மகத்தான அரசியல் நிகழ்ச்சி நிரலான இந்த ஒரே பிராந்தியம் – ஒரே சாலை திட்ட முன்முயற்சியை ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி நோக்கங்களோடு இணைத்துள்ளது.
சர்வதேச வர்த்தகத்தில் சீனா
மேற்கண்ட திட்டங்கள் பிராந்திய அளவில் வர்த்தகத்தைப் பெருக்கும் சீனாவின் முயற்சிகளுக்கு மிகப்பெரிய அடித்தளமாக விளங்கும் என சீனா கூறுகிறது. இப்போது சீனா, உலக அளவில் முதன்மையான வர்த்தக நாடாக உள்ளது. உலகிலேயே மிகவும் அதிகமாக ஏற்றுமதி செய்யக்கூடிய நாடும் சீனாதான். உலக நாடுகளுக்கு பல்வேறு பொருட்களை சீனா ஏற்றுமதிச் செய்கிறது. அதிலும் உற்பத்தித் துறையைச் சார்ந்த பொருட்களைத்தான் மிகுதியாக ஏற்றுமதி செய்கிறது. இதில் முன்னிலை வகிப்பது டெக்ஸ்டைல் ஏற்றுமதி ஆகும். மேலும் விலையுயர்ந்த உலோகங்கள், ரப்பர் டயர்கள், ஒயர்கள், வீடியோ உபகரணங்கள், குறைந்த மின்சக்தியால் இயக்கும் உபகரணங்கள், பொம்மைகள், தேயிலை, மரங்கள், தாதுக்கள், பேப்பர், சுத்தகரிக்கப்பட்ட பெட்ரோலியம் போன்ற பொருட்களையும் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

2017-ஆம் ஆண்டு புள்ளி விபரங்களின்படி, சீனா, 2.41 டிரில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பொருட்கள் உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. ஆனால், சீனா இறக்குமதி செய்ததோ 1.54 டிரில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பொருட்களைத்தான். ஆக 873 பில்லியன் டாலரை சீனா வர்த்தக உபரியாகப் பெற்றுள்ளது. இதுபோன்ற வர்த்தக உபரி, அமெரிக்கா உட்பட, வேறு எந்த நாட்டுக்கும் இல்லை. உலகளவில் சீனா வர்த்தகத்தில் முதலாவது நாடாகவும், பொருளாதாரத்தில் இரண்டாவது பெரிய நாடாகவும் விளங்குகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை, சீனாவிடமிருந்துதான் அதிகமான பொருட்களை இறக்குமதி செய்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 69 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை இந்தியா இறக்குமதி செய்கிறது. அதே சமயத்தில் சீனாவிற்கு இந்தியா 15 பில்லியன் மதிப்புள்ள பொருட்களை மட்டும் ஏற்றுமதி செய்கிறது. ஆக, சீனாவுடன் மட்டும் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை கிட்டத்தட்ட 54 பில்லியன் டாலர்கள் ஆகும். கடந்த ஜனவரி, 2019 இல் இந்தியா 356.77 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை சீனாவிடமிருந்து இறக்குமதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல, கடந்த ஜனவரி 2020 ஆம் ஆண்டின் நிலவரப்படி இந்தியா சீனாவிடமிருந்து 429.55 பில்லியன் ரூபாய் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.
இதுபோல் உலகிலுள்ள பல நாடுகளும் பற்றாக்குறையில்தான் சீனாவுடன் வர்த்தகம் புரிந்து வருகின்றன. அதாவது ஒவ்வொரு நாட்டுக்கும் சீனாவில் இருந்து ஏற்றுமதி அதிகம். அதே சமயத்தில் அந்நாட்டில் இருந்து சீனா இறக்குமதி செய்வது குறைவு. சீனா உலகுக்கு பல பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. அதிலும் உற்பத்தித் துறை சார்ந்த பொருட்களைத்தான் அதிகமாக ஏற்றுமதி செய்கிறது.
போரில் நாட்டமில்லாத சீனா.
உலக நாடுகளில் அதிகமான இராணுவம் பலத்தைக் கொண்டிருக்கும் நாடுகளில் சீனாவும் ஒன்றாக கருதப்படுகிறது. முக்கியமாக அமெரிக்காவிற்கு அடுத்த நிலையில் சீனா இருக்கின்றது. இருந்தாலும், ‘1979 முதல், சீனா யாருடன் போரில் ஈடுபடவில்லை, ஆனால் அமெரிக்கா கடந்த 242 ஆண்டு வரலாற்றில் 16 ஆண்டுகள் மட்டுமே அமைதியாக இருந்தது. இந்த நாட்டை உலக வரலாற்றில் மிகவும் போர்க்குணமிக்க நாடு.’ இவை ஜிம்மி கார்ட்டரின் கூற்று.
‘சீனாவில் அமைதியான பொருளாதார நன்மைகள் கண்ணுக்குத் தெளிவாக தெரிகின்றன. மேலும், சீனாவில் சுமார் 18,000 மைல் அதிவேக ரயில்பாதை அமைக்கப் பட்டுள்ளது. ஆனால் இராணுவ செலவினங்களுக்காக 3 டிரில்லியன் டாலரை அமெரிக்கா வீணடித்துள்ளது; சீனா ஒரு பைசா கூட போருக்காக வீணடிக்கவில்லை, அதனால்தான் அவர்கள் கிட்டத்தட்ட எல்லாவகையிலும் அமெரிக்காவைவிட முன்னேறி இருக்கிறார்கள்’. “இந்த 3 டிரில்லியன் டாலர்களைக் கொண்டு உள்கட்டமைப்பிற்காக செலவழிக்கப்பட்டிருந்தால், அமெரிக்காவிற்கு 2 டிரில்லியன் டாலர் மிச்சமாகியிருக்கும். அமெரிக்கவிடமும் அதிவேக இரயில் பாதை இருந்திருருக்கும். இடிந்து விழாத பாலங்கள் இருக்கும், ஒழுங்காக பராமரிக்கப்படும் சாலைகள் இருக்கும். கல்வி முறையும் சிறப்பாக இருந்திருக்கும்”. இவை ஜிம்மி கார்ட்டரின் வாக்குமூலம்.

சீனா தனது இராணுவ முதலீட்டை சீராகக் குறைத்துவிட்டது – பனிப்போர் விளைவாக, 1990 முதல் உலகளாவிய பாதுகாப்பு செலவினங்களின் மொத்த அதிகரிப்பில் 60% க்கும் மேலாக மக்கள் விடுதலை இராணுவம் உள்ளது. அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது, சீனா தனது தேசிய பொருளாதாரத்தில் மிகக் குறைந்த பகுதியை மட்டுமே போர் மற்றும் இராணுவ தளவாடங்களுக்கு ஒதுக்கியது. சீனாவின் வளர்ச்சிக்கு இது ஒரு முக்கிய காரணமாகும்.
பிராந்திய நலனுக்கான வங்கி
ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி என்பது, சீனாவால் முன்மொழியப்பட்ட பன்னாட்டு நிதி நிறுவனமாகும். இது ஆசிய நாடுகளுக்கு இடையேயான, உள்கட்டமைப்பு நிதி உதவிகளை அளிக்கும் பன்முக வளர்ச்சிக்கான வங்கியாகும். இதில் சீனா மட்டுமல்லாது இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் என மொத்தம் 21 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. வளரும் நாடுகளின் கட்டமைப்புத் தேவைகளை நிறைவேற்ற இது போன்ற புதிய நிறுவனங்களை வரவேற்பதாக உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கித் தலைவர்கள் கூறியுள்ளனர்.

சீனாவின் மூலதனத்தையும் மற்றும் தொழில்நுட்பத் திறனையும் வழங்குவதன் மூலம் ஆசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஒருங்கிணைப்பை உறுதிச் செய்கிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் நாளடைவில், சீனாவின் பொருளாதார வளர்ச்சியையும் அதன் மதிப்பையும் புரிந்துகொள்ள முயற்சித்தன. அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி, ஐரோப்பிய நாடுகள் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் சேர்ந்தன.
பெய்ஜிங்கைத் தலைமையிடமாகக் கொண்ட இதன் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் 100 பில்லியன் டாலர் ஆகும். சீனாவின் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இப்போது உலக வங்கிக்கு போட்டியாக உள்ளது.
ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்கா நாடுகளுக்கு தொழில்நுட்ப உதவி
ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் பிற இடங்களில் சீனாவின் புதிய காலனித்துவ ஆதிக்கத்தை நிறுவிக் கொண்டதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் சீனாவைப் பொறுத்தவரை சீன உள்கட்டமைப்பு அறிவு சார்ந்த பொருட்கள் மற்றும் சேவைகளை உறுதி செய்வதாகக் கூறுகிறது. உள்கட்டமைப்பிற்கு அப்பால், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் சுகாதார தொழில்நுட்பங்கள், ரோபாட்டிக்ஸ், தொழில்துறை பூங்காக்கள், உற்பத்தி தொழில்நுட்பங்கள், தானியங்கி வாகனங்கள் மற்றும் மாசற்ற எரிசக்தி ஆகியவற்றை கொண்டுவர திட்டமிட்டிருக்கிறது.
ஆப்பிரிக்காவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் சீனா முக்கியமான சக்தியாக மாறி வருகிறது, இந்த நாடுகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளையும் தகவல் தொடர்பு வசதிகளையும் வழங்கிவருகிறது. வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் சீனாவின் முதலீடுகள் நிதிச் சேவைகள், காப்பீடு, சட்ட சேவைகள், கல்வி, மனித வளங்கள், துணிகர மூலதனம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றில் புதிய சந்தைகளுக்கு ஒரு விரிவான தளத்தை வழங்குகின்றன என்று உலக பொருளாதார அமைப்பு கணித்திருக்கிறது.
முற்றிலும் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்கள்
சீனாவிடமிருந்து குறைந்த கடன் வாங்குபவர்களில் பெரும்பாலோர் ஆப்பிரிக்காவில் உள்ளனர், சீனா 1960 இல் கினியாவிற்கு முதல் கடனை வழங்கியது. இன்று, ஆப்பிரிக்க கடனில் சீனாவின் பங்கு சுமார் 17 சதவீதம் ஆகும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
சீனா ஆப்பிரிக்க நாடுகளுக்கு 152 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடன்களை வழங்கியுள்ளதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இவற்றில் 2000 மற்றும் 2018 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் 49 ஆப்பிரிக்க அரசாங்கங்களுக்கும் அவற்றின் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
சீன கடன் நிவாரணம் குறித்த சமீபத்திய ஆய்வின்படி, சீனாவின் கடன் தள்ளுபடி செய்வது என்பது பொதுவான போக்காக இருக்கிறது. 2000 மற்றும் 2018 க்கும் இடைப்பட்ட காலத்தில் சீனாவிடமிருந்து கடன் பெற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் கடனை முற்றிலுமாக தள்ளுபடி செய்ததாகக் கூறப்படுகிறது. உண்மையில், 2000 ஆம் ஆண்டிலிருந்து 4 பில்லியன் டாலருக்கும் அதிகமான குறைந்த வருமான நாடுகளின் கடனை சீனா ரத்து செய்துள்ளது. கொடுத்த கடனுக்காக, ஆப்பிரிக்காவில் சொத்து பறிமுதல் செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று கூறப்படுகிறது.
ஐ.நா.வில் செல்வாக்கு செலுத்தும் சீனா
பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் சிறப்பு நிறுவனங்களில் சீனா மிகவும் ஆர்வத்துடன் பங்கெடுத்து வருகின்றது. எனவே, ஐ.நாவின் நம்பகமாக சக்தியாக சீனா வளர்ந்து வருகின்றது. தற்போது, ஐ.நா.வின் 15 சிறப்பு ஏஜென்சிகளில் நான்கு அமைப்புகளான உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO), சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU), ஐக்கிய நாடுகளின் தொழில்துறை மேம்பாட்டு அமைப்பு (UNIDP) மற்றும் சர்வதேச சிவில் விமான அமைப்பு (ICAO) ஆகியவற்றின் தலைமை பொருப்பை சீனா நிறைவேற்றி வருகின்றது குறிப்பிடத்தக்கது. ஐ.நா.வின் மொத்த வரவுசெலவுத் திட்டத்தில் சீனாவின் பங்களிப்பு 12 சதவீதமாக உயர்ந்துள்ளது. சீனா தற்போது ஐ.நா.வுக்கு அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, இரண்டாவது பெரிய பங்களிப்பாளராக இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.நா.வின் அமைப்பை தனது நலன்களுக்கு ஏற்றவாறு அமைப்புகளை மாற்றுவதற்கு சாதகமாக முயற்சிப்பதாக அமெரிக்கா சீனா மீது அப்போதே குற்றம் சுமத்தி வந்துள்ளது. அது மட்டுமல்ல ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களுக்கான நேருதவி பொதுச்செயலாளர் பதவியை, 2007 ஆம் ஆண்டு முதல், சீன தொழில் வல்லுனர்களால் வகிக்கப்பட்டு வ்ருகின்றது, ஐ.நாவின் அபிவிருத்தி திட்டங்களை அதன் நலன்களுக்கு ஏற்ப மாற்றியமைக்க சீன அரசாங்கத்திற்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளது. சீனாவின் பெருமளவு நிதியுதவியில் செயல்படு திட்டமான பெல்ட் மற்றும் சாலை திட்டத்திற்கு அந்த அமைப்பு ஒப்புதல் அளித்தது.
கொரானாவை விவகாரத்தின் சீனாவுக்கு சாதகமான நிலைபாடுகளை எடுப்பதாக கூறி, உலக சுகாதார அமைப்பின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை டிரம்ப் கூறுவருகிறார். இதற்கு ஐ.நா.செவி சாய்க்காததால், அதற்கு தரவேண்டிய 3000 கோடி நிதியை நிறுத்திவிட்டார். அதறகு பதிலடியாக சீனா தனது பங்குத் தொகையை உயர்த்திக் கொடுத்தது நினைவிருக்கலாம். கடந்த ஆண்டுகளில் ஐ.நாவிற்கு சீனா கூடுதலான பங்களிப்பை செலுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சீனா எதிர்கொள்ளும் விமரிசனங்கள்
1: சீனாவின் புதிய காலனித்துவ ஆதிக்கம், 2: வெளிநாடுகளில் உள்ள சீன நிறுவனங்கள் சீனத் தொழிலாளர்களை நியமித்தல், 3: பெரிய அளவில் நில அபகரிப்பு, 4: ஆப்பிரிக்கா போன்ற நாடுகளைக் கடன் பொறியில் சிக்க வைத்தல், 5: இயற்கை வளங்களுக்காக ஆப்பிரிக்க நாடுகளை குறிவைத்தல், 6. தைவான் மீதான் ஆதிக்கம், 7.தென்சீனக் கடல் பரப்பில் ஆதிக்கம் போன்ற விமரிசனங்களை சீனா இன்றளவும் எதிர்கொண்டு வருகின்றது.
கொரானாவிற்கு முன்பிருந்தே ஐரோப்பிய நாடுகளில் உள்ள முக்கிய கம்பெனிகளின் நிர்வாகிகளை நியமிப்பது முதற்கொண்டு அவற்றின் நிர்வாகத்தில் தலையிடுவது போன்ற விசயங்களை கச்சிதமாக செய்துவருகின்றது. உதாரணத்திற்கு ஐரோப்பிய நிறுவனமான இமேஜினேசன் என்ற கம்பெனியின் நிர்வாகத்தில் சீனா தனது நிர்வாகிகளை நியமித்து கொண்டதாக குற்றம் சுமத்தியது.
அமெரிக்காவின் தொழில்துறை அரங்கிற்கு சீன விஞ்ஞானிகளை தேர்வு செய்வதும், அமெரிக்க நிறுவனங்களை குறி வைப்பதும் முன்னெப்போது இல்லாத அளவுக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்க உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதேபோல், , சீனா சலுகைகள் அளிப்பதாலும், அறிவுசார் சொத்துக்களை அபகரித்துக் கொள்வதாலும் ஐரோப்பியச் சந்தையில் நிலையற்றத் தன்மை நிலவுவதாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் கூறுகின்றனர். சீனா அரசின் தொழிற்துறைக் கட்டமைப்பானது, சர்வதேச தொழில்நுட்ப விநியோக சங்கிலி தொடர்களை மிகவும் பாதிக்கின்றது என்றும் சீனாவின் உயர் தொழில்நுட்பங்கள், அமெரிக்கா மற்றும் பிற தொழில்மயமான நாடுகளுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது என்றும் கருதப்படுகிறது.
கொரானாவிற்கு பின்னர் சீனா உலகத்தில் முதன்நிலை வல்லரசாக மாறுவதற்கான எல்லா முயற்சிகளும் எடுத்துவருவதாக கூறி, ஐரோப்பிய நாடுகளும் ஆஸ்திரேலியாவும், மலேசியாவும், அமெரிக்காவும் கடுமையாக எதிர்ப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
தற்போதைய சூழ்நிலையில், அந்நிய நாட்டு கம்பெனிகள் சீனாவிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளன. ‘சீனாவை விட்டு வெளியேறு’ என்ற முழக்கம் இப்போது ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஜப்பான் நாட்டு கம்பெனிகள் சீனாவை விட்டு வெளியேறினால் அந்த கம்பெனிகளுக்கு நஷ்ட ஈடாக 200 பில்லியன் அமெரிக்க டாலரைக் கொடுப்பதாக ஜப்பான அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜப்பான மட்டுமல்ல மற்ற ஐரோப்பிய நாடுகளும் இதே போன்று சீனாவிலிருந்து தமது கம்பெனிகளை வெளியேற்றி அந்த முதலீடுகளை வேறு நாடுகளுக்கு கொண்டு செல்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் முதலீடு செய்து தொழில் தொடங்க நூற்றுக் கணக்கான கம்பெனிகள் விரும்பம் தெரிவித்துள்ளன.
இந்த கொரானா நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கம்பெனிகளை விலைக்கு வாங்க அனைத்து விதமான யுக்திகளையும் கையாண்டு வருகின்றது. இந்தியாவிலிருக்கும் ஹெடிஎப்சி நிறுவனத்தின் பங்குகளை விலைக்கு வாங்கியது. இதிலிருந்து விழித்துக் கொண்ட இந்தியா அந்நிய முதலீட்டு சட்டத்தில் சில கட்டுப்பாடுகளை விதித்து சட்டத் திருத்தங்கள் கொண்டுவந்துள்ளது. அதே போல எல்லா நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் அந்நிய முதலீட்டைக் கட்டுப்படுத்த சட்டரீதியான தடைகளை போட்டு ஒரு பொருளாதார யுத்தத்தை துவக்கி வைத்துள்ளன. சீனா என்ற டிராகன் உலக நாடுகளையும் விழுங்கக் காத்துக் கொண்டிருக்கின்றது என்று எல்லா நாடுகளும் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றன.
சீனாவின் புவிசார் அரசியல்
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வறுமையில் உழன்று, மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர், சீனா இப்போது உலகெங்கிலும் வளரும் நாடுகளுக்கு பெரிய அளவில் முதலீடுகளை வழங்கி வருகிறது. சர்வதேச சந்தையை வடிவமைப்பதற்கான முயற்சியில் சீனா இறங்கியுள்ளது. இது புவிசார் அரசியல் போர்த்தந்திரத்தின் தலையாயத் திட்டமாகும்.
ஆப்பிரிக்காவில், தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் உற்பத்தி ஆகியவற்றிற்கான கண்டத்தின் தேவையைப் பூர்த்திச் செய்துகொள்ள, சீனாவுடன் இணைந்து கூட்டு நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன. சீனாவின் முதலீடுகள் பயன்பாடுகள், துறைமுக கட்டுமானம் மற்றும் வேளாண்மை மட்டுமல்லாமல் தொலைத்தொடர்புகளையும் உள்ளடக்கியது. சீன தொலைத் தொடர்பு துறை, இப்போது ஆப்பிரிக்காவில் பெரும் செல்வாக்குச் செலுத்தி வருகின்றது.
தற்போது கொரானா தாக்குதலின் விளைவாக உருவான பொருளாதார சரிவை எதிர்கொள்ளும் கடனாளிகளின் கடன்களை சீனா முற்றிலும் தள்ளுபடி செய்ய திட்டமிருக்கிறது. சீனா ஏற்கனவே பல நாடுகளின் கடன் தொகையை முற்றிலும் நீக்கிட்டது. தற்போது சீனா இதர நாடுகளின் கடனை எளிதில் மறுபரிசீலனை செய்யலாம், மறுசீரமைக்கலாம் அல்லது மறு நிதியளிக்கலாம்” என்று ஒரு பொருளாதார நிபுணர் கூறினார். கடன் சம்பந்தப் பட்ட கொள்கைகளில் சீனாவின் அணுகுமுறையானது இன்றைய புவி அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
உலகப் பொருளாதார ஈர்ப்புவிசையின் மையம்
அமெரிக்கா இப்போதும் தனி வல்லரசாக இருந்தாலும், சீனா ஏற்கனவே அதை உலகளாவிய மாற்றத்திற்கான மையச் சக்தியாக கவனம் பெற்றுள்ளது. சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இன்னும் அமெரிக்காவை விட 40% குறைந்த அளவில் இருக்கிறது. எவ்வாறாயினும், பல்வேறு நாடுகளில் ஒரு குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு ஒரே மாதிரியாக இருக்கும் வகையில் நாணயங்களை சரிசெய்யும் ஒரு கொள்முதல்-சக்தி-சமநிலை அடிப்படையில், சீனப் பொருளாதாரம் 2013 ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரியதாக மாறியது. சீனாவின் செயல்திறன் தனித்துவமானது: பிபிபியில் ஒரு நபரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1990 ல் இருந்து பத்து மடங்கு உயர்ந்துள்ளது. 1990 ல் சீனாவைப் போல மோசமாக இருந்த பிற நாடுகளில், வாங்கும் திறன் இரட்டிப்பாகியுள்ளது.
மேலும் சீனா உலகப் பொருளாதார உற்பத்தியின் ஈர்ப்பு விசையாக மாறியிருக்கிறது. அமெரிக்காவின் ஆதிக்கம் உச்சத்தில் இருந்தபோது இந்த ஈர்ப்புவிசையின் மையம் வடக்கு அட்லாண்டிக்கில் இருந்தது. ஆனால் தற்போது சீனா உலக பொருளாதார ஈர்ப்பு மையத்தை கிழக்கில் உள்ள சைபீரியாவை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கிறது.
தொழில்நுட்பம் தன்னளவில் உலகப் பொருளாதாரத்தை மாற்றியுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாக, தொழில்நுட்பம் அதிகாரம் செலுத்தும் தன்மையில் ஒரு முக்கிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த “புவி தொழில்நுட்ப” மாற்றத்தை மேம்படுத்துவதுதான் சீனாவின் மகத்தான போர்தந்திரமாகும். வணிக ரீதியான ஊக்கத்தால், சீனாவின் உலகளாவிய லட்சியம் இப்போது அதன் விநியோக சங்கிலித் தொடரின் விரிவாக்கத்தில் துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் குழாய்வழிகள் ஆகியவற்றில் கட்டப்பட்டுள்ளது.
வளர்ச்சிபெற்ற சீன தொழில்நுட்பத்திற்கான புதிய சந்தைகளை உருவாக்குதுதான் சீனாவின் போர்தந்திரமாக உள்ளது. பல டிரில்லியன் டாலர் முதலீட்டில் நடந்து வரும் சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் திட்டமானது உலக வரலாற்றில் மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டமாகும். சீனப் பொருட்களுக்கான ஒரு விரிவான வர்த்தக வலையமைப்பை இது உருவாக்கித் தருகிறது. மேலும் வளர்ச்சியடைந்த தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு மாற்றத்திற்கான ஒரு தளத்தை இந்தத் திட்டம் வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் மின்சார வாகனங்கள், தொலைத்தொடர்பு, இயந்திர மனிதர்கள், செயற்கை நுண்ணறிவு, குறைக்கடத்திகள், சுத்தமான எரிசக்தி தொழில்நுட்பம், மேம்பட்ட மின் உபகரணங்கள், ரயில் உள்கட்டமைப்பு மற்றும் கடல் பொறியியல் ஆகியவை அடங்கும்.
உலகின் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும் சீனா, உலக பொருளாதார அமைப்பை மறுவார்ப்புச் செய்து கொண்டுவருகிறது. உலகச் சந்தையின் மையமாக திகழும் சீனா, அதன் சுற்றுப்பாதையில் அனைத்து நாடுகளையும் இணைத்துக் கொள்கிறது. சீனாவின் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார வளர்ச்சியும் சந்தை விரிவாக்கத்தையும் கொண்டிருக்கிறது. உலகப் பொருளாதாரத்தில் ஒரு ஈர்ப்பு விசையாக மாறிக் கொண்டிருக்கிறது.
இதுகாறும், சீனா எவ்வாறு தனது உள்நாட்டின் உற்பத்தியை நவீனமுறையில் வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறது என்பதையும், யுரேசிய பிராந்தியத்தின் ஒரு செல்வாக்கு மிக்க சக்தியாக மாறிவருவதையும், சர்வதேச அரசியல் பொருளாதாரத்தில் தவிர்க்க முடியாத ஒரு தலைமைச் சக்தியாக மாறி கொண்டிருப்பதையும் பார்த்தோம். சீனாவின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும், ஒருவேளை அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வீழ்த்தலாம் ஆனால் உலக ஏகாதிபத்தியத்தை முற்றிலும் வீழ்த்துமா என்பது நம்முன் உள்ள கேள்வியாகும்.
References:-
China passes Japan to become UN’s No. 2 contributor, Nikkei.
How China Is Remaking the UN In Its Own Image, By Tung Cheng-Chia and Alan H. Yang, The Diplomat.
Geotechnalogy and the US – China Trade War, www.theJapantimes.com
Made in China 2025, www.iotone.com