isai valkai 91 : paadal mudintha piragum isai ulagil payanam mudivathillaye...-s.v.venugopalan இசை வாழ்க்கை 91: பாடல் முடிந்த பிறகும் இசை உலகில் பயணம் முடிவதில்லேயே... – எஸ் வி வேணுகோபாலன்
isai valkai 91 : paadal mudintha piragum isai ulagil payanam mudivathillaye...-s.v.venugopalan இசை வாழ்க்கை 91: பாடல் முடிந்த பிறகும் இசை உலகில் பயணம் முடிவதில்லேயே... – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 91: பாடல் முடிந்த பிறகும் இசை உலகில் பயணம் முடிவதில்லேயே… – எஸ் வி வேணுகோபாலன்

 இசை வாழ்க்கை 91

கடந்த சில நாட்களில் எதிர்பாராத இரண்டு தருணங்களில் இசையில் வாழ்ந்து கண்ணீர் துளிர்த்தது மறக்க முடியாதது. முதலாவது, ஒரு புத்தக வெளியீட்டுக்குப் பின்னணியில் உழைத்த கலைஞர்களைப் பாராட்ட நிகழ்ந்த வித்தியாசமான சந்திப்பு. அதில் இசை பற்றிய ஆர்வம் பொங்கப் பேசியவர் வீதியில் மக்களுக்கான கடுமையான இயக்கங்களை முன்னெடுக்கும் போராளி. இரண்டாவது, படைப்பாற்றல் வகுப்பு எடுக்கப் போன இடத்தில், ஒரு கவிஞரை அவரது இசைப்பாடல் வரிகள் தொட்டு நினைவு கூர்ந்த கல்லூரி மாணவர்.

‘பாடணும்னு மனசுக்குள்ளே ஆச நெறைய கீது…அத்தப்

பாட சொல்ல பயம் வந்து முன்னே நிக்கீது ….’

என்ற மனோரமா வரிகள் நினைவுக்கு வந்தன, தோழர் செல்வா தனக்கு இசைப்பாடல் மீதான பித்து பற்றிக் கண்களில் மின்னல் தெறிக்கச் சொன்னபோது! அன்பிற்கு மட்டுமல்ல, இசையின் மீதான காதலுக்கும் உண்டோ அடைக்கும் தாழ்!

கடந்த ஆண்டு மறைந்த எழுத்தாளர் – மொழி பெயர்ப்பாளர் தோழர் வி என் ராகவன் நினைவில் அழகான ஒரு சிறப்பு மலர், ராகவன் அவர்களுடைய மூத்த மகன் பாலாஜியின் சீரிய உழைப்பில் ஜூலை 31 அன்று வெளியானது. வண்ண மயமான அந்த பிரதியை உருவாக்குவதில் இராப்பகலாக உழைத்த அன்பர்கள் மூவரை அந்த நிகழ்வில் சிறப்பித்தபோது, அவர்களோடு ஒரு சந்திப்பு வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தார் செல்வா. பாலாஜியின் அழைப்பில் ராமு பொன்னுசாமி மட்டுமே வர முடிந்தது. நுங்கம்பாக்கம் காஃபி ஸ்பாட்டில் எப்படியோ திடீர் என்று இசையில் இருந்து இசையில் நுழைந்து இசையில் கலந்தது உரையாடல்.

மிக எளிய உழைப்பாளி வர்க்கத்தில் குடிசை மாற்றுக் குடியிருப்பில் இருந்து படைப்புத் திறன் உந்தித் தள்ள பன்முகப் பணிகளில் இயங்கிவரும் ராமு, திரை இசையின் அம்சங்கள், வெவ்வேறு இசையமைப்பாளர்கள் பாணி என்று உற்சாகமாக எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்க, இளவயதில் மிருதங்கம் கற்றுக் கொண்டிருந்த பாலாஜி, சிறந்த பாடகியான தன்னுடைய தாய் வனஜாவின் கச்சேரிகள் சிலதில் வாசித்தது பற்றியெல்லாம் குறிப்பிட்டார். எந்த வயதிலும் பாடல்கள் கற்றுக் கொள்ளலாம்,நீங்களும் முயற்சி செய்யுங்கள் என்று செல்வாவைத் தூண்டினார் ராமு.

பொதுக் காப்பீட்டுத் துறை ஊழியர் சங்க நிர்வாகியாக இயங்கிய (மறைந்த) தோழர் சூரி அவர்கள் இசை, இலக்கியம், நாடகம், வாசிப்பு என்ற பன்முக ரசனை மிக்கவராகத் திகழ்ந்தவர். அவர் தான் டிசம்பர் மாத இசை கச்சேரிகளுக்கு என்னை விடாமல் அழைத்து, நினைவூட்டி, வற்புறுத்தி அழைத்துச் சென்று ரசிக்கப் பழக்கியவர் என்று உணர்ச்சிவசப் பட்ட குரலில் சொன்னார் செல்வா.

சூப்பர் சிங்கர் புகழ் பாடகி பிரியங்கா மௌன ராகம் படத்தின் ‘சின்னச் சின்ன வண்ணக்குயில்’ பாடலை இசைத்தது, மிகவும் கொண்டாடிக் கேட்கப்படுவது, குறிப்பாக, முதல் சரணத்தை, ‘மன்னவன் பேரைச் சொல்லி…’ என்றெடுக்கும் இடத்தில் உருகாதவர் இருக்க வாய்ப்பில்லை. அந்தக் காணொளி இதுவரை இரண்டரை கோடி பேர் பார்த்திருப்பதாகப் பதிவாகி இருக்கிறது. அந்தப் பாடலை செல்வா மிகவும் ரசிப்பவர். எஸ் பி பி சரண் வேறொரு சிறுமி பாடும்போதும் பிரியங்காவை நினைவூட்டிப் பேசி, அவையிலிருக்கும் அவரை அழைத்து அந்த வரிகளைப் பாட வைத்துக் கேட்டு ரசிப்பதும் பார்த்திருப்போம்.

 

 

திரையில் மிகவும் வண்ணமயமாகக் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் இந்தப் பாடல் கவிஞர் வாலி புனைந்தது. படத்தின் அனைத்துப் பாடல்களுமே அவர் எழுதியது, இசைஞானியின் அபார இசையமைப்பு, படத்தின் பாடல்கள் அனைத்தும், இன்றும் கேட்போர்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப அமைந்திருப்பது!

சின்னச் சின்ன வண்ணக் குயில், ஒரு காதலின் உள்மனக் கொண்டாட்டம், அதை ஒரு திருவிழாவாக ரசிகர்கள் பார்வைக்கு வைத்திருப்பார்கள். ‘புரியாத ஆனந்தம், புதிதாக ஆரம்பம்’ என்பது தான் அந்தக் காட்சியின் ஒற்றை வரி! ‘பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா?’ என்பது அவளது இதயச் சுவர்களில் எதிரொலிக்கும் பதில் தெரிந்த கேள்வி. இந்த இன்பத்தின் முழு விவரிப்பு தான் பாடல்!

 

 

உள்மனத்தின் பாடலுக்கான தொடக்க ஹம்மிங், இன்னும் ஆழத்திலிருந்து பிறக்கிறது, எஸ் ஜானகி குரலில், பல்லவியின் சங்கதிகளாக! இந்தப் பல்லவியின் சிறப்பு, பாடலின் மொத்த வரைபடச் சுருக்கமாக ராஜா அமைத்திருப்பது! அதனால் தான் ஹம்மிங் முடிந்ததும் பாடலைத் தொடங்காமல், இசைக்கருவிகளை ஊடே இழைய விடுகிறார் அவர்! தாளக்கருவியின் வாசனையும், புல்லாங்குழலின் சுவாரசிய கீற்றுகளும், கிடாரின் காதல் நரம்பு மீட்டலும் ரசிகரை ஒரு விவரிக்க முடியாத பரவசத்திற்குத் தயார்ப்படுத்துகின்றன.

அதன்பின் ஜானகி பல்லவியை எடுக்கிறார், சின்னச் சின்ன வண்ணக்குயில் என்று முதன் முறை அறிமுகப் படுத்துபவர், அதற்குப் பிறகு இந்த வரியைப் பாடும் ஒவ்வொரு முறையும், வண்ணக்குயில் என்ற சொல்லை அழுத்துகையில், நினைவு இருக்கிறது இல்லையா, அந்தக் குயில் என்று சொல்வதுபோல் ஒலிக்கிறார்! சந்தங்கள் பார்த்து இயைபு அமைய சுவையான சின்னச் சின்ன சொற்களில் பாடலை வளர்த்துச் செல்லும் கலையில் வாலி தனிச் சிறப்பு பெற்றிருப்பவர். சின்னச் சின்ன வண்ணக்குயில் என்றதும், கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா என்று இயல்பாக எழுத வருகிறது அவருக்கு. ‘புரியாத ஆனந்தம்..புதிதாக ஆரம்பம்’ என்று ஒரே மூச்சில் கொண்டுவராமல், இரண்டையும் பிரித்துப் பாட வைக்கிறார் ராஜா… புரியாத ஆனந்தம் என்று ஜானகி இசைக்கவும், கிடார் இழைக்கிறது, புதிதாக ஆரம்பம் என்றதும் மேலும் சிலிர்த்துக் கொள்கிறது. ‘பூத்தாடும் தேன்மொட்டு நானா நானா’ என்ற வரியின் சுவாரசியம் சரணத்தின் கடைசி வரிகளிலும் தொடர வைப்பது ராஜா வாலி கூட்டணியின் ருசி. ஜானகி இந்த அடியின் ஒவ்வொரு சொல்லிலும் தேனை நிரப்பியே பரிமாறுகிறார்.

பல்லவியின் நிறைவில் காதல் மனத்தின் குதூகலத்தைக் குழல் எடுத்துக் கொண்டுவிடுகிறது…. பின்னர் வயலினும் சேர, சாரைப் பாம்புகள் போல புல்லாங்குழலும் வயலினும் பின்னிக் கொண்டே போகும் இசை காதலை மேலும் வளர்த்தெடுக்கிறது. அதில் தாபத்தைக் கலக்க கோரஸ் ஹம்மிங் கூட்டாக இணைகிறது. ஓடத்தில் மிதப்பது போலவே உள்ளத்தின் அலைமோதலில் மிதக்கும் காதலின் முதல் சரணம், ‘மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன்’ என்று தொடங்குகிறது. மல்லிகையையும் மன்னனையும் பிரிக்க முடியாது வாலிக்கு (மன்னன் விரும்பும் பொன்னான மலரல்லவோ ஆயிற்றே!). மல்லிகைக்கு அடுத்தது மன்மதன், அதனால், மன்மதன் பாடல் ஒன்று நெஞ்சுக்குள் பாடிக் கொண்டேன் என்று இசைக்கிறார் ஜானகி. ‘சொல்லத்தான் எண்ணியும் இல்லையே பாஷைகள்…’ என்பதில் எத்தனை காதல் பரிமாற்றம்! ‘என்னவோ ஆசைகள்…எண்ணத்தின் ஓசைகள்..’ என்பது அதன் பிரதிபலிப்பு.

‘மாலை சூடி ….’ என்கிற இடத்தில் காதல் மிதவையின் துள்ளாட்டம் சற்று சுழித்துக் கொண்டிருக்கும் இடத்தில் நிகழ்கிறது. ஜானகி அந்த வரியில் இழைக்கும் வேட்கைக்கு அங்கே கோரஸ் ஹம்மிங் இணைக்கிறார் ராஜா. ‘மஞ்சம் தேடி …’ என்பது அடுத்த கட்டம், அங்கேயும் கோரஸ் ஹம்மிங். ‘காதல் தேவன் சந்நிதி’ என்பதை என்னமாக வழங்குகிறார் ஜானகி… அதன் அடுத்த சொற்களில் எத்தனை மாயா ஜாலம் நிகழ்கிறது, காணக் காணக்காண என்பன வெறும் மூன்று சொற்களா…. மந்திரம் போல் சொல்லின்பம் வேண்டும் என்பார் மகாகவி. உள்ளங்கைக்குள் சோழிகளை வைத்து உருட்டிப் போடுவது போல், தாயக்கட்டைகளை உரசிப் போடுவதுபோல் இந்தச் சொற்களை மந்திரித்து இறக்கிவிடுகிறார் ஜானகி. சூப்பர் சிங்கரில் பிரியங்காவை, அந்த இடத்தை மட்டும் மீண்டும் பாடச் சொல்லிக் கேட்டு சொக்கிப் போனார் நடுவராக வந்த கிருஷ்.

இரண்டாவது சரணத்தை நோக்கிய திசையிலும் புல்லாங்குழலின் இசை காதல் மழையைத் தூவியபடி இருக்கிறது. வயலின் அதைப் பற்றிப் பரவ வைக்க, ‘மேனிக்குள் காற்று வந்து மெல்லத் தான் ஆடக் கண்டேன்’ என்ற வரியும் ‘மங்கைக்குள் காதல் வெள்ளம் கங்கை போல் ஓடக் கண்டேன்’ என்ற அடுத்த வரியும் காதல் மிதவையை மேலும் ஆட வைக்கிறது. ‘இன்பத்தின் எல்லையோ’ என்று கேட்டு, ‘இல்லையே இல்லையே’ என்கிறாள் காதல் கிறக்கத்தில் அவள். ‘அந்தியும் வந்ததால் தொல்லையே தொல்லையே’ என்று விளக்கம் கொடுக்கிறார் வாலி. ‘காலம் தோறும்…’ என்ற இடத்தில் மிதவை மீண்டும் ஒரு கிளர்ச்சிச் சுழற்சியில் இயங்குகிறது. அதற்கு கோரஸ் ஹம்மிங் தூபம் போடுகிறது. ‘கேட்க வேண்டும்’ என்ற வரியில் இன்னும் போதை கூடுகிறது. ‘பருவம் என்னும் கீர்த்தனம்…’ என்ற இடத்தில் ‘பாடப் பாடப்பாட’ என்று மீண்டுமொரு மாயா ஜாலம் நடக்கிறது. பல்லவிக்குப் போய்ப் பாடல் நிறைவடைகிறது. ஜானகியின் இந்தப் பாடலின் காணொளிக்கு இதுவரை 6 கோடி பார்வைகள் கிடைத்திருக்கின்றன. பாடலுக்கு வயது கிடையாது.

லயோலா கல்லூரியில் ஆகஸ்ட் 11 அன்று பிற்பகல் இலக்கிய வகுப்புக்கு அழைக்கப்பட்டிருந்தேன். படைப்பாற்றல் என்ற பொருளில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்று எடுத்துக் கொள்கையில் கவிஞர்கள் பெயர்கள் சொல்லுமாறு கேட்டுக் கொண்டேன். பலரும் வெவ்வேறு பெயர்கள் சொல்கையில் சட்டென்று நா முத்துக்குமார் என்று குரல் கேட்டது. சொன்னவர் சுகுமார் எனும் மாணவர். அவரது கவிதைகள் ஏதேனும் நினைவில் இருந்தால் சொல்லுங்கள் என்றேன், திரைப்பாடல் வரியைச் சொல்கிறேன் என்றவர், ‘பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே…’ என்ற வரியைச் சொன்னார். அது மிகவும் பிடிக்கும் என்றார். சுகுமார் சொன்னதற்காகவும், முத்துக்குமாருக்காகவும் எல்லோரையும் கரவொலி எழுப்ப கேட்டுக் கொண்டேன்.

கவிதைகளில் மட்டுமின்றி அருமையான திரைப்பாடல் வரிகளிலும் எப்போதும் நிறைந்திருக்கிறது நா. முத்துக்குமாரின் சுடர் விடும் நினைவுகள். மதராச பட்டினம் திரைப்படத்தின் ‘பூக்கள் பூக்கும் தருணம்’ மிகவும் பேசப்படும் பாடல்களில் ஒன்று. ஜி வி பிரகாஷ் குமார் இசையமைப்பில் விளைந்த அருமையான கீதம். ரூப் குமார் ரத்தோட், ஹரிணி, ஆண்டிரியா, ஜி வி பிரகாஷ் சேர்ந்து வழங்கியிருக்கும் இசைப்பாடல் அது. வித்தியாசமான காதல் கதைக்களத்தில் விளையும் பாடல். கண்டங்கள் கடந்து வரும் காதல் அது. கடக்க முடியாத கண்டங்களுக்கு இடையே தவிப்புறும் காதலும் கூட!

 

 

 

தான….தோம் தனன தான …தோம் தனன தா னா னே தனனா….என்கிற ஆலாபனையில் புறப்படுகிறது காதல் உல்லாசம். ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே’ என்கிற வரியை எப்படி வந்தடைந்தார் முத்துக்குமார் என்று நினைக்கையில் கண்ணீர் சுரக்கிறது. சாதீய வெறி மறைந்து தன்னைத் திருத்திக் கொள்ளும் பெரியவர் ஒருவர் தன்னுள் நேரும் இந்த மாற்றத்தை எப்படி கடக்கிறார் என்பதை ‘நெருப்பு’ எனும் தனது சிறுகதையில் ஆர் சூடாமணி எழுதுகையில், ‘இரவில் யாரும் அறியாமல் மடலவிழும் பூவாக…’ என்று உவமை சேர்த்திருந்தது நினைவுக்கு வருகிறது. அடுத்த அடி, ‘புலரும் காலைப் பொழுதை முழு மதியும் பிரிந்து போவதில்லையே’ என்று வருகிறது. ‘நேற்று வரை நேரம் போகவில்லையே, உனதருகே நேரம் போதவில்லையே’ என்கிறது ஒரு குரல்….அந்த வில்லையே என்பதில் அத்தனை காதல் அழுத்தம். ‘எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே…இது எதுவோ…’ என்பது அடுத்த குரல். ‘இரவும் விடியவில்லையே விடிந்தால் பகலும் முடிவதில்லையே பூந்தளிரே’ என்பது அதற்கான பதில் குரல்…. அதற்குப் பிறகு திரும்பிப் பார்ப்பதே இல்லை, பாடல் அடுத்தடுத்த கேள்விகளில், விரியும் வியப்புகளின் விவரிப்பின் விரிப்பில் விரைந்து போய்க் கொண்டே இருக்கிறது.

சரணங்களில் காதலின் தேன் சிந்தி சிதறிக் கொண்டிருக்கிறது. ‘வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை…பாவை பார்வை மொழி போதுமே’ என்பது ஒரு சமாதானம் எனில், ‘இன்று தேவையில்லை நாளை தேவையில்லை இன்று இந்த நொடி போதுமே’ என்பது அதன் அடுத்த கட்டம். பிறகு மீண்டும் கேள்விகளுக்கும் பாய்கிறது காதல். ‘வேர் இன்றி விதை இன்றி விண் தூவும் மழை இன்றி இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே’ , ‘வாள் இன்றி போர் இன்றி வலிக்கின்ற யுத்தம் இன்றி இது என்ன இவனுக்குள் எனை வெல்லுதே’ ….அத்தோடு விடுகிறதா…. ‘இதயம் முழுதும் இருக்கும் இந்தத் தயக்கம்…இது எங்கு கொண்டு நிறுத்தும்’ ஆஹா….அதற்கான பதிலில் இன்னும் அடுத்த கட்டக் காதல்: ‘இது அறிய எங்கு கிடைக்கும் விளக்கம், கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்….’ எத்தனை ரசவாதம் செய்கிறார் நா முத்துக்குமார்! பூந்தளிரே என்று அவரைத் தான் அழைக்கின்றனரோ காதலர்கள்!

இரண்டாம் சரணத்திற்கான இடைவெளியில் காதலி தனது சொந்த மொழிக்குத் தாவுகிறாள், காதல் சிறகடிப்பைத் தெரிவிக்க! அதன் அழகான நீட்சியில் ஆலாபனையும் சிறகடிக்க, ‘எந்த மேகம் இது எந்தன் வாசல் வந்து எங்கும் ஈரமழை தூவுதே…’ என்று கேள்விகளின் அடுக்கு மீண்டும்….’எந்த உறவு இது எதுவும் புரியவில்லை என்றபோதும் இது நீளுதே’ காலகாலமாகக் காதலின் கேள்விகள் தான் இவை….ஆனால் சொற்களின் கிறக்கம் ஏறிக்கொண்டே போகிறது. ‘யார் என்று அறியாமல் பேர் கூடத் தெரியாமல் இவனோடு ஒரு சொந்தம் உருவானதே’ என்ற கேள்வியில் கர்ணன் படத்தில் வரும், ‘இனமென்ன குலமென்ன குணமென்ன அறியேன்…. குணமென்ன அறியேன்…ஈடொன்றும் கேளாமல் என்னை அங்கு கொடுத்தேன்’ எனும் கண்ணதாசன் வரிகள் நினைவுக்கு வந்தன…’ஏன் என்று கேட்காமல் தடுத்தாலும் நிற்காமல் இவன் போகும் வழியெங்கும் மனம் போகுதே’ என்ற வரி காதலின் நீட்சி.

அடுத்து வருகிறது, லயோலா மாணவர் சுகுமார் விரும்பிக் குறிப்பிட்ட வரி: ‘பாதை முடிந்தபின்னும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே…’ எத்தனை சிறுகதைகளும் கவிதைகளும் அந்த ஒற்றை வரியில் கொட்டிக் கிடக்கின்றன முத்துக்குமார்! அடுத்த வரி, கவிதையின் உச்சம்: ‘காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும் இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே…இது எதுவோ!’ அதில் உச்ச ஸ்தாயிக்குப் போகும் ஆலாபனை காதலை சிகரத்தில் ஏற்றி வைக்கிறது. பல்லவிக்குத் திரும்பும் குரல்கள் காதல் உணர்வின் தீபத்தை மேலும் தூண்டி ஒளிரச் செய்கின்றன.

காதல் முடிச்சுகளை பாடல் நெடுக தபலா போட்டுக்கொண்டே வரும் சுகம் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. காதல் உயிரைக் குழல் இழைத்துக் கொண்டே போகிறது. பாடலின் ஏற்ற இறக்கங்களின் வரைபடத்தை ஆலாபனைகளும், இசையும் ஊடாக சொல்லிக்கொண்டே நடைபோட்டு வர, மொழியைக் கடந்து நாடு முழுவதும் இந்தப் பாடல் கொண்டாடப்படுவதை யூ டியூபில் நிறையும் மறுமொழியில் பார்க்க முடிகிறது.

பறவை மறைந்த பிறகும் இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே என்கிற வரி, நா முத்துக்குமாரின் உயிர்ப்பறவை பறந்து சென்ற பிறகும், இன்னும் உயிர்த்துடிப்பு அடங்காதிருக்கும் அவரது கவித்துவ வரிகளையே சுட்டுவதாகக் கண்ணீர்த் துளிகள் சொட்டுவதைத் தடுக்க முடியவில்லை.

இசை ஒரு மயக்கம் அல்ல. அது உள்ளத்தின் உண்மைக் குரல் ஒலிக்கும் தருணம். ஜோடனைகளைக் களைந்து கரைந்து அந்தக் குரலுக்குச் செவிமடுக்கும் நேரம். இசை தன்னிலிருந்து தான் விலகித் தன்னையே தரிசிக்கும் கணம். அதிகார வர்க்கத்தின் ஈவிரக்கமற்ற ஒடுக்குமுறையை நேருக்கு நேர் நின்று எதிர்கொள்ளும் திண்மை மிக்க ஒரு போராளியை இசையால் மிக இலேசாக அசைக்க முடிவது அதனால் தான். வகுப்பில் பொருந்தி உட்காருபவர் அல்ல என்று வருணிக்கப்பட்ட மாணவரை உருகி உருகிக் கேட்டுப் பேச வைக்க முடிவது அதனால் தான். இசையின் பொழிவு நெருப்பைக் குளிர்விப்பது அல்ல, உண்மையின் சுடரை உயிர்ப்பித்துக் கொண்டே இருப்பது.

(இசைத்தட்டு சுழலும் ……)

 

Show 1 Comment

1 Comment

  1. ந மனோகரன்

    சின்ன சின்ன பாடல் மிகச்சிறந்த பாடல். அதை வரிக்கு வரிஅனுபவிக்க வைத்துவிட்டீர்கள். 1986 ல் படம் வந்து பேச்சலர்ஸ் நாங்கள் பல்கலையில் இ. இ. நி. உதவியாளராக பணியில் சேர்ந்த பின் பார்த்த படம். என்னாலும் அன்பு நண்பர் எஸ். பி ரவிக்குமார் இருவராலும் மறக்க முடியாது.
    கடந்த நாட்கள் எல்லாமே ஆனந்தமானவைதான். அன்பு ஏக்கத்துடன்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *