இசையின் மீதான காதல் தீராதது. காதல் மீதான இசையோ காலம் கடந்து நிற்பது. காதல் உணர்வுகளைக் காட்டிலும் மென்மையான காதல் கீதங்கள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன காலமெல்லாம்.
சந்திக்க முடியாத போது காதலின் ஏக்கம் கூடிப் போகிறது. சந்திக்கும்போது இசையாகப் பெய்கிறது. சந்திப்பை ஒட்டிய திரை இசைப்பாடல்களில் சத்தமின்றி ஒலிக்கத் தொடங்கிக் காதலை உரத்துச் சொல்லும் பாடல்களில் ஒன்று மிகவும் இனிமையானது.
பிபி ஸ்ரீனிவாஸ் அவர்களது காதல் குரல் மென்மையின் தூய இலக்கணம். எல் ஆர் ஈஸ்வரி, உரத்த காதலைக் கூட ரகசியக் குரலில் கடத்தும் ஆற்றல் மிக்க குரல் பெற்றிருப்பவர்.
சித்தி திரைப்படத்தில் இடம் பெற்ற ‘சந்திப்போமா’ பாடல் அந்நாட்களில் மிகவும் விரும்பிக் கேட்கப்படும் பாடல்களில் ஒன்றாக இருந்தது. காதலன் செவிக்கு மட்டும் கேட்பதுபோல் தொடங்குகிறார் எல் ஆர் ஈஸ்வரி, ‘சந்திப்போமா…இன்று சந்திப்போமா…தனிமையில் நம்மைப் பற்றி சிந்திப்போமா?’ காதலர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டால், ஊரின் காதுகளுக்கு அது போய்ச் சேருமுன் இசைக்கருவிகள் காதில் பட்டுவிட்டால் அமர்க்களமான பாடலுக்கான களம் உருவாகி விடுகிறது. மெல்லிசை மன்னர், கண்ணதாசன் இருவரும் இணையும்போது அது அருமையான இசைப்பாடல் உருவெடுக்கிறது.
50 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு பாடலை 2 லட்சம் போல ரசிகர்கள் கேட்டிருப்பதை யூ டியூபில் பார்க்கையில் வியப்பாக இருந்தது. முத்துராமன், விஜய நிர்மலா தோன்றும் காட்சியும், இயற்கைச் சூழலில் சிறப்பாகப் படமாக்கப்பட்டிருக்கும் விதமும், மனத்தில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும் இந்தப் பாடலின் மெட்டும் …இன்ன பிற காரணங்களும் இருக்கக் கூடும்.
ஈஸ்வரி எடுத்துக் கொடுக்கும் பல்லவியை இசைக்கருவிகள் ஆராதித்துக் கொண்டுபோய் பிபி ஸ்ரீனிவாஸிடம் சேர்க்க, அவர் அதைக் கொண்டாடிப் பற்ற வைக்க அங்கே ஆர்ப்பாட்டமாக வந்து இணையும் எல் ஆர் ஈஸ்வரி, ‘எதிர்காலம் இன்ப மயமாக’ என்று வேகமாக எடுத்து, ‘ என்றும் இளமையும் இனிமையும் துணையாக…’ என்று தணித்து, ‘நெஞ்சம் கனிவாகக் கொஞ்சம் துணிவாக’ என்று பக்குவப்படுத்தி, ‘சந்திப்போமா…இன்று சந்திப்போமா’ என்று தொடுக்கும் இடம் அபாரமாக அமைந்து விடுகிறது.
மென் காதலையும், வன் காதலையும் ஒன்றாக வடித்து வழங்கும் பாடல் என்பதால், சரணத்தை நோக்கிய திசையில் பியானோ இசையில் கிறக்கத்தை உருவாக்கி, அதைக் குழலில் இறக்கிப் பின்னூட்டமாக வயலின்களை இறக்கி சுவாரசியத்தைக் கூட்டுகிறார் எம் எஸ் வி. முதல் சரணத்தை, ‘அதிசய சோலையில் சந்திப்போமா…’ என்று தொடங்குகிறார் ஸ்ரீனிவாஸ். குழலிசை அதை வழி மொழிகிறது. உடனே, ‘ரகசியக் காதலை சிந்திப்போமா’ என்கிறார். இத்தனை போதாதா, ஈஸ்வரி வேகமான மெட்டுக்கு மாறும் இசையில், ‘சிந்து நதியோரம் நடப்போமா…சின்னச் சிட்டு போலெ பறப்போமா’ என்று காதல் சிறகுகளை விரிக்கிறார். அதன் கற்பனையில் காதலர்கள் ஆழும் இந்த இடத்தில் இருவரது சுகமான ஹம்மிங் ஒலிக்க வைக்கிறார் மெல்லிசை மன்னன்.
பல்லவிக்குத் திரும்பும் ஈஸ்வரி, சந்திப்போமா என்ற சொல்லை இன்னும் இதமும் பதமுமாக இழைத்து உள்ளத்தை மேலும் வாட்டி எடுக்கிறார். இரண்டாம் சரணத்தை நோக்கிய பக்கம் மீண்டும் இசைக்கருவிகளின் காதல் மழை. ‘மயக்கத்தில் உலகைச் சுற்றுவோமா …மணவறையில் கை பற்றுவோமா’ என்கிற வரிகள் வரும் இடத்தில் இதயத்தோடு நெருக்கமாகப் பேசுவது போலவே இசைக்கிறார் ஸ்ரீனிவாஸ். மீண்டும் காதல் கிளர்ச்சியோடு நுழையும் ஈஸ்வரியின் குரல், ‘முல்லை மலர் மஞ்சம் விரிப்போமா….முத்துச் சிப்பி போலே சிரிப்போமா’ என்று தடம் பதிக்க. மீண்டும் அழகான ஹம்மிங் இருவரும் இசைக்க, பாடல் பல்லவியை நோக்கி நகர்ந்து நிறைவு பெறுகிறது.
இரண்டு முறையும் சரணத்தை எடுக்கையில் தாளக்கட்டு தொடங்குமிடம் காதல் வேகத்தை அறிவிப்பது போல் அமைந்திருக்கும். பாடலின் தாள கதி லயித்துக் கேட்க வைக்கும். சந்திக்கத் தான் வேண்டும் என்றாலும், சந்திப்போமா என்று கேட்கிறாள் காதலி. சுற்றுவோமா, பற்றுவோமா என்று கேட்கிறான் காதலன், உலகைச் சுற்றவும், கையைப் பற்றவும் வேண்டும் என்றாலும்! விடை தெரிந்த கேள்விகளைக் காதலர்கள் விளக்கம் கோரி முன்வைப்பது இல்லை. செயலாக்கத்திற்கான உத்தரவு அது. ‘நெஞ்சம் கனிவாகக் கொஞ்சம் துணிவாக’ என்பது தான் அந்தக் காதலின் கடவுச் சொல், கண்ணதாசன் இந்தப் பாடல் வழி கடத்தி இருப்பது, அதனால் தான் பாடல் காலம் கடந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது.
சந்திப்போமா இன்று சந்திப்போமா என்ற ரகசியக் குரலழைப்பைப் போலவே, புல்லாங்குழலில் ஒரு ரகசியக் குரல் ஒலிக்கப் புறப்படும் காதல் இசைப்பாடல், ஏ ஆர் ரஹ்மான் வழங்கி இருப்பது. அத்தனை மென்மையாகக் காதல் மொழியை உச்சரிக்கிறது புல்லாங்குழல், ‘மலர்களே…மலர்களே… இது என்ன கனவா….மலைகளே மலைகளே இது என்ன நினைவா…’ ஆஹா…. மலர் காதலின் மென்மை எனில் மலை, அந்தக் காதலின் உறுதி. புல்லாங்குழல் அங்கே நிற்பதில்லை, ‘உருகியதே எனது உள்ளம்….பெருகியதே விழி வெள்ளம்’ வரை பாய்கிறது குழலிசை. கிழக்கும் மேற்கும் சந்திக்கும் அபார இசைக்கலவை என்று வருணிக்கப்படும் தாள லயம் அங்கிருந்து தொடங்குகிறது. பெரிய கிறக்கத்திற்கு அங்கிருந்தே ரசிகர்களைத் தயார்ப்படுத்தும் ரஹ்மான், தந்திக் கருவிகள் இதய நரம்பை மீட்டவும், பொங்கித் ததும்பும் உள்ளத்தைக் குழலிசை மயிலிறகு போல் வருடிக் கொடுக்கவும், வயலின்கள் உறங்கவிடாது பார்த்துக் கொள்ளவுமாக மொத்தப் பாடலையும் வழங்கி இருப்பது போல் தோன்றியது.
https://youtu.be/UnccY-qroSk
ஹரிஹரன், மிக மெல்லிய குரலால் காதல் அழைப்பை இணைக்கு விடுக்கவும், ஊருலகத்திற்கு அதையே உரக்க அறிவிக்கவுமான குரலினிமை பெற்றிருப்பவர். காதல் மென்மையை அழுத்தமாகவும், காதல் தீர்மானத்தைக் கனிவாகவும் குரலெடுக்கும் சித்ராவும் இணைய, லவ் பேர்ட்ஸ் படத்திற்கான வைரமுத்துவின் பாடல் மலைச்சாரல் போல் வீசும் இசைக் காற்றில் அதன் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அமைந்துவிடுகிறது.
சித்ரா தான் தொடங்குகிறார் பாடலை! ‘மலர்களே, மலர்களே…’ என்பது தென்றலின் தீண்டல் போல் தொடங்குகிறது. ‘இது என்ன கனவா’ என்பதில் வியப்பு விரிகிறது. மலைகளே மலைகளே இது என்ன நினைவா என்பதில் மலைப்பு விஞ்சுகிறது. அதிலிருந்து கிளர்ந்தெழும் காதல், ‘விண்ணோடும் நீ தான், மண்ணோடும் நீ தான் கண்ணோடும் நீ தான்….’ என்று உயரத்தை எட்டி, ‘வா…..’ என்று தாழப் பறந்து வம்பு வளர்க்கிறது. இதில் ‘கண்ணோடும்’ என்ற இடத்தை பாடகர்கள் இருவருமே இரட்டைச் சொற்களாக அழுத்தம் கொடுத்து இழைப்பது ரஹ்மான் இசைக்கோவையின் சுவாரசியம். அந்தக் கடைசிச் சொல், வா…..என்பதை, காதலின் ஒரு சுருக்க ஆலாபனையாக நளினத்தோடு முன்னெடுக்க வைக்கிறார் அவர். அதை ஹரிஹரனும் சித்ராவும் அவரவர் வாய்ப்பில் அவரவர் தனித்துவத்தோடு இழைத்துக் கொடுப்பது அடுத்த சுவாரசியம்.
பல்லவியிலிருந்து சரணத்தைச் சென்றடையும் இசை வழிச் சாலை இரண்டு சரணங்களிலும் ஒன்றே போல் இருந்தாலும் உடன் அழைத்துச் செல்வோர் வேறு வேறு தோழமை உள்ளங்கள்! (முதன் முறை வயலின்கள், இரண்டாவது சரணத்திற்கு கிடார் என்று எழுதிவிடக் கை குறுகுறுக்கிறது, ஆனால், இசைக்கருவிகள் குறித்த ஞானம் இல்லையே என்று தயங்க வேண்டியிருக்கிறது). சுவையான ராக அனுபவத்தை – அதன் ஸ்வர சஞ்சாரத்தை அறியாத என்னைப் போன்ற பாமரரும் கொண்டாட என்ன தடை இருக்க முடியும்! காதல் துள்ளும் இதயச் சுவர்களில் எதிரொலிக்கும் இசையின் பெயரா முக்கியம், அதன் தாளம் ‘காதல் காதல்’ என்றல்லவா அதிர்கிறது!
முதல் சரணம், சிருங்கார மயக்கம். இரண்டாவது சரணம் காதல் கிறக்கம். ‘மேகம் திறந்து கொண்டு மண்ணில் இறங்கி வந்து…’ என்று முதல் சரணத்தைக் காற்றில் மிதப்பது போலவே தொடங்குகிறார் சித்ரா. அவர் விடுக்கும் இடத்தில் தொடரும் ஹரிஹரன், ‘மார்பில் ஒளிந்து கொண்டால் மாறன் அம்பு வரும், கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா….’ என்று காற்றை இழை இழையாகப் பிரித்துச் சொற்களைப் பறக்க விடுகிறார். ‘என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா அறையா…’ என்று காதலின் ஊடல் மொழியை சித்ரா எடுத்துத் தொடுக்கவும், ‘நினைக்காத நேரமில்லை காதல் ரதியே ரதியே’ என்று சமாதான மொழியை இழைக்கிறார் ஹரிஹரன். இந்த சரணத்தின் கூடுதல் சுவாரசியம், ‘என் சுவாசம் உன் மூச்சில் உன் வார்த்தை என் பேச்சில்’ என்று சித்ரா காதலை அறுதியிட்டு எடுக்கும் இடமும்,, ‘ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம் என் வாழ்வே வா’ என்று அதை வழி மொழிந்து ஹரிஹரன் குழைக்கும் இடமும்!
இரண்டாவது சரணத்தில் உரையாடலைப் புல்லாங்குழல் முன்னெடுக்க, கிடார் விரிவாகப் பேசும் தருணம் பாடலின் கம்பீர ஒளி வீசுமிடம். பாடல் வரிகளை இசையாக மலர வைப்பதில், காதலின் இழைகளாக அவற்றைப் பின்னுவதில் ஹரிஹரன், சித்ரா இருவரது குரல்களும் அபாரமாக ஒலிக்கும் சரணத்தின் நிறைவில், ‘உனக்காக உயிர் வாழ்வேன் வா என் வாழ்வே வா’ என்று சித்ரா நிறைவு செய்கிறார். இருவரும் பல்லவியைப் பாடி முடிக்கவும், இசைக்கருவிகளால் மீண்டும் காதல் பூக்கள் தூவி நிறைவு செய்கிறார் ரஹ்மான்.
ஹரிஹரன் குரலினிமையில் சொற்கள் அடையும் சுகமும், சித்ரா இசைக்குரலில் காந்தமாக ஈர்க்கும் இனிமையும், இசைக்கருவிகளின் அபார சங்கமுமாக மின்னும் இந்தப் பாடல் நான்கு கோடி முறை கேட்கப்பட்டுள்ளது என்கிறது யூ டியூப்.
திரையிசைப் பாடல்கள் குறிப்பிட்ட கதைக்கான களத்தில் விளைந்தாலும், கால ஓட்டத்தில் கேட்போர் நெஞ்சில் அவரவர் ரசனையின் பரிமாணத்தில் அவரவரது தனிப்பட்ட அனுபவமாக நிறைகிறது. கூட்டாகக் கேட்க நேர்கையில் அந்தப் பரிச்சயம் இன்னும் நெருக்கமாகக் கொண்டு செல்கிறது. பாடல் இன்னுமின்னும் இன்பமின்பம் என்று வளர்ந்து கொண்டே செல்கிறது.
‘கேட்பார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்’ என்கிறார் வள்ளுவர். கேளாரும் வேட்ப நிகழ்வதாம் இசை என்று சொல்லத் தோன்றுகிறது.
(இசைத்தட்டு சுழலும் ……)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: sv.venu@gmail.com


அருமையான பதிவு. இசையை எப்படி எல்லாம்ரசனையோடு விளக்குகிறார். நன்றி🙏💕